Tuesday, July 27, 2010

Sri Chakara Pooja and Sri Panjashari manthra

ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ சக்கர பூஜை மற்றும்
ஸ்ரீமத் பஞ்சதசாக்ஷரி  மந்திர மகிமை
சாந்திபிரியா
இது ஒரு புராணக் கதையில் வரும் செய்தி . பராசக்தியை 'பஞ்சதசாஷரி ' என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து அவளை பூஜிப்பதின் மூலம் உண்டாகும் நன்மையைப் பற்றி எடுத்துரைக்கும் கதை.
முன்னொரு காலத்தில் தேவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டு இருந்த திரிபுராசுரனை சிவபெருமான் வதம் செய்த பின்னரும் அவர் கோபமாகவே இருந்தார். அந்த அசுரனை வதம் செய்ய ஏற்படுத்திக் கொண்ட கோபம் மறையவே இல்லை. அது நீடித்தால் பரசுராமர் ஷத்ரியர்களை அழிக்கக் கிளம்பியது போல தமது இனத்தையே சிவபெருமான் அழித்து விடுவார் எனக் கலங்கினார்கள் அசுரர்களிலும் இருந்த பல நல்லவர்கள். ஆகவே அந்த அசுரனின் சந்ததியினர் விஷ்ணுவிடம் சென்று சிவபெருமானின் கோபம் தணிய என்ன செய்யலாம் எனக் கேட்டனர். அவருக்கும் ஒன்றும் வழி தெரியாமல் நாரதரையே அழைத்து அதற்கு ஒரு உபாயம் கூறுமாறு கேட்டார். நாரதர் யோசனை செய்தார். அவர் கூறினார் ' பிரபோ, இதற்கு ஏன் கவலைப் படவேண்டும், ஸ்ரீ தேவியின் மகா மந்திரத்தை உச்சரித்து ஸ்ரீ சக்கர பூஜையை செய்து விட்டால் நீங்கள் நினைத்த காரியத்தை நடத்திக் கொள்ள முடியுமே' என்றார். ஆகவே மகாவிஷ்ணு தனக்கு அந்த மந்திரத்தையும் பூஜையையும் உபதேசிக்க யாரைப் பிடிக்கலாம் என எண்ணியபடி தேவியை எண்ணி தியானித்தார். அடுத்த கணம் அந்த தேவியே அவர் முன்னால் வந்து அவருக்கு 'பஞ்சதசி ' என்ற மகா மந்திரோபதேசம் மற்றும் ஸ்ரீ சக்கர பூஜையின் கிரமங்களையும் உபதேசம் செய்துவிட்டுப் போனார். அதை சித்தி பண்ணி வந்ததினால்தான் மகாவிஷ்ணுவினால் தான் நினைத்த எந்த ரூபத்தையும் எடுக்கும் சக்தி கிடைத்தது.
அதை பிரயோகித்தே விஷ்ணுவானவர் தேவர்களுக்கு அமிருதம் கடைந்தபோது ஏற்பட்ட பிரச்சனைகளை மோகினி அவதாரம் எடுத்து தீர்க்க முடிந்தது. ஸ்ரீவித்யா உபாசனை செய்ததினால்தான் அப்படிப்பட்ட கலையை விஷ்ணுவினால் பிரயோகிக்க முடிந்ததாம். அவர் மட்டும்  அல்ல   தேவியை அப்படி  பூஜித்து  அப்படிப்பட்ட சக்தியை பெற்றவர்களில் மன்மதனும் ஒருவராம்.  அதனால்தான் அவர் தமது  ரூபத்தை எப்போதுமே அனைவரையும் மயக்கும் விதத்தில் வைத்து இருந்தாராம். ஆகவே ஸ்ரீமத் பஞ்சாஷரி மற்றும் ஸ்ரீ சக்கர மந்திரத்தை முறைப்படி குருவிடம் இருந்து கற்றறிந்து, உபதேசம் பெற்று அதை செய்து வந்தால் அனைத்து சித்திகளும் கைகூடும் என்பது நம்பிக்கை ஆயிற்று.  ஸ்ரீ சக்கரத்தில் நாற்பத்தி நான்கு கோணங்கள் உள்ளன. அவற்றை தேவியின் சரண கோணங்கள் என்று கூறுவார்கள்.   ஸ்ரீ சக்கரத்தைப் பற்றி விளக்கும் மந்திரம் இது.
பிந்து த்ரிகோண வஸுகோண தசாரயுக்ம 
மன்வச்ர  நாகதல சம்யுத ஷோடசாரம் I
வ்ருத்தத்ரயம் ச தரணி  சதன   த்ரயம் ச 
ஸ்ரீசக்ரமேதத்  உதிதம்  பரதேவதாயா:
ஸ்ரீதேவியானவள்  சக்கரத்தின் மத்தியில் பிந்துவாக அமர்ந்திருக்கிறாள். சக்கரத்தை சுற்றி ஒன்பது விதமான ஆவரண தேவதைகள் அமர்ந்து இருக்கிறார்கள்.  அவர்கள் சித்தி பெற்ற தேவதைகள்.  சுத்த சக்திமாலா மந்திரம் என்பது ஆவரண தேவதைகளைப் பற்றி எடுத்துரைக்கும் மந்திரம். அவர்களில் ஒன்பதாவது தேவதையான  பரமேஸ்வரியே ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் ஸ்ரீ சக்கர தேவியாக உள்ளாள். ஆகவேதான் ஸ்ரீ சக்கர பூஜையை செய்யும்போது பரமேஸ்வரியின் அனுகிரகத்தைப் பெற்றிட நடுவில் உள்ள பிந்துவில்தான் பூக்களையும், குங்குமத்தையும் போட்டு பூஜிக்க வேண்டும் என்பார்கள்.

Saturday, July 24, 2010

Karudamale Temple, Kolar - 23

ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -23

கருடமலே  விநாயகர் ஆலயம்
சாந்திப்பிரியா

பெங்களூர்- கோலார்- முல்பாகல் என்ற தடத்தில் கோலாருக்கு அருகில் உள்ளதே கருடமலே கணபதி ஆலயம். அந்த ஆலயம் பெங்களூரில் இருந்து 110 கிலோ தொலைவில் உள்ளது. பெங்களூரில் இருந்து வயிட்பீல்ட் சென்று அங்கிருந்து கோடிலிங்கேச்ஸ்வரர் என்ற இடத்தை அடைந்து அங்கிருந்து பிரியும் பாதையின் வழியே முல்பாகல் என்ற இடத்தை நோக்கிச் சென்றால் கருடமலே ஆலயம் உள்ள கிராமமான கருடமளே வரும். அது மிகச் சிறிய கிராமம். அந்த இடம் முன்னர் காடாக இருந்தது எனவும், காட்டில் பல மலைகள் ஒன்று சேர்ந்த இடம் போல அது தெரிந்ததினால் அதை காட்டு மலை என அழைக்க அதுவே பின்னர் கூட்டு மலை என ஆகி, கருடமலே என மருவி கருடமளே என ஆயிற்றாம் . இன்னொரு காரணம் அங்குதான் அடிக்கடி அனைத்து தேவர்களும் வந்து கூடினார்கள் எனவும் அதனால்தான் அந்த இதயத்தை தேவர்கள் காட்டில் கூடும் மலை என்பதைக் குறிக்க கூட்டு மலை என அழைத்தனர் எனவும் அதுவே மருவி கருடமலே என ஆயிற்று எனவும் கூறுகிறார்கள். அங்குள்ளவர்களில் பெரும்பான்மையோர் தெலுங்கு இல்லை கன்னடத்தை தாழ் மொழியாகக் கொண்டவர்கள். 
ஆலயத்தில்  உள்ள  விநாயகர் 
ஆலயத்தில் உள்ள விநாயகரின் சிலையின் அளவு பதினான்கு அடிக்கும் மேலான உயரத்தில் உள்ளது. அது மட்டும் அல்ல அந்த சிலை வளர்ந்து கொண்டே போவதாகக் கூறுகிறார்கள். ஆலயத்தில் உள்ள சாலிக்ராமக் கல்லில் ஆனா விநாயகர் சிலை மும்மூர்த்திகளினால் படைக்கப்பட்டவர் என நம்புகிறார்கள். உலகில்  வேறு    எங்குமே  சாலிக்ராமக்  கல்லில்  செய்த கடவுளின் சிலை கிடையாது.
கிரதே யுகத்தில் தாராசுரன் என்பவன் சிவ பெருமானிடம் இருந்து அறிய வரங்கள் பெற்றுக் கொண்ட பின் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவனை தேவர்களாலும் அடக்க முடியவில்லை என்பதினால் அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று வேண்டிக் கொள்ள அவர்கள் அந்த விநாயகரைப் படைத்தனராம். அதன் பின் அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு சக்தி தேவியாக மாற விநாயகர் அந்த சக்தியை மணந்து கொண்டு அவளையே தனது ஆயுதமாக மாற்றிக் கொண்டு அந்த அசுரனுடன் சென்று சண்டை இட்டு அவனை அழித்தாராம். அதன் பின் அதி சக்தி பெற்ற விநாயகர் கருடமலே ஆலயம் உள்ள இடத்தில் வந்து தங்க அவருக்கு அங்கு ஆலயம் வெகு காலத்துக்குப் பிறகு அங்கு அமைந்தது. 
 ஆலயத்தின் தோற்றம் 
அந்த சக்தி பெற்ற விநாயகரை திரிதே யுகத்தில் ராம பிரானும் , துவாரபா யுகத்தில் கிருஷ்ணரும் வந்து வழிபட்டுச் சென்றதாக வரலாற்றுக் கதையை இங்கு கூறுகிறார்கள். மேலும் சப்த ரிஷிகளில் ஒருவரான கௌண்டன்ய முனிவர் அங்கு தினமும் வந்து விநாயகரை வழிபட்டுச் சென்றாராம். அவர் இன்னமும் அந்த ஆலயத்தின் அருகில் உள்ள குகையில் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது. ஆலயம் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்துக்குச் சென்று வேண்டிக்கொண்டால் நிச்சயமாக வேண்டியது நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Tarot Devi Temple - Indo Pak Border Village

இந்திய எல்லை பகுதியில் உள்ள  
மகிமை வாய்ந்த  ஆலயங்கள்
தராட் தேவி ஆலயம்         
சாந்திப்பிரியா
 
நாம் தென்னிந்தியாவில்தான் அதிக அளவு தமது கிராமத்தைப் பாதுகாக்கும் கிராம தேவதைகள் உள்ளன. ஆனால் அது போல நமது தேசத்தில் எல்லையையே பாதுகாத்து வரும் ஒரு துர்க்கை அம்மனைப் பற்றிய செய்தியை சமீபத்தில் படித்தேன். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது அந்த செய்தி. ராஜஸ்தானில் உள்ளது ஜெய்சல்மீர் என்ற இடம். அது பாகிஸ்தான் நாட்டின் எல்லையைத் தொட்டபடி உள்ள இடம். அந்த மாவட்டத்தில் உள்ளதே தராட் என்ற ஊர். எல்லைக்கு மிக அருகில் உள்ளது அந்த இடம். அங்குதான் துர்க்கை அம்மனின் அவதாரமான தராட் தேவியின் ஆலயம் உள்ளது. அந்த இடம் சுமார் கீ. பீ 837 ஆம் ஆண்டில் பாடீ ராஜபுத்திர மன்னன் தானு ராவ் என்பவரின் ஆளுமையில் இருந்ததாம். அவர் தரோட்டை தனது தலைநகரமாக வைத்து இருந்ததினால் அங்கு தராட் தேவியின் ஆலயத்தை அமைத்து வழிபாட்டு வந்தாராம்.பின்னர் அவர் தன் தலை நகரை ஜெய்சல்மீருக்கு மாற்றிக் கொண்டார். ஆனால் ஆலயாத்தையும் அந்த தேவியின் சிலையையும் அங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டார். அதன் பின் அந்த ஆலயத்தில் உள்ள தேவியை உள்ளூரில் இருந்தவர்களும் எல்லையில் இருந்த பாதுகாப்புப் படையினரும் வணங்கி வந்துள்ளார்கள்.
ஆலய காட்சி 
படம் நன்றி:   http://raj.bsf.gov.in/_private/photo_gallery.htm

அந்த ஆலயத்தின் மகிமைக்கும் சக்திக்கும் எடுத்துக் காட்டாக இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் 1942 ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தில் போடப்பட்ட குண்டுகளும் அடுத்து பாகிஸ்தானினால் 1965 ஆம் ஆண்டு நடந்த சண்டையில் போடப்பட்ட குண்டுகளும் அந்த ஆலயத்தில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லையாம். பாகிஸ்தான் வீசிய சுமார் மூவாயிரம் குண்டுகளும் அந்த ஆலயத்தில் வந்து விழுந்தபோது அவை வெடிக்கவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமான செய்தியாக உள்ளது. பாகிஸ்தானியப் படையினரால் மூன்று பக்கமும் சூழப்பட்டு கிடந்த மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த படை வீரர் ஒருவர் கனவில் மாதா தோன்றி அவர்களை தன்னுடைய ஆலயத்தில் வந்து தங்குமாறு கூறியதாகவும், அவர்களும் அந்த ஆலயத்துக்குள் மீட்புப் படை வரும்வரை மூன்று நாட்கள் தங்கி இருக்க பாகிஸ்தான் படையினரால் வீசப்பட்ட எந்த குண்டுகளும் அவர்களை தாக்கவில்லையாம்.
ஆலயத்தில்  உள்ள தராட்  மாதா 
படம் நன்றி:   http://raj.bsf.gov.in/_private/photo_gallery.htm

மீண்டும் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் பெரும் அளவுப் படையினருடன் ஊருக்குள் நுழைந்த பாகிஸ்தானியப் படையினர் அந்த பகுதியில் முன்னேற முடியாமல் அந்த ஆலயத்துக்குள் இருந்த மிகச் சிறிய படையினரால் தடுக்கப்பட்டனராம். அந்தப் பகுதியில் பாகிஸ்தானியப் படையினர் பெருமளவு டாங்கி எனப்படும் புகழ் பெற்ற யுத்த தடவாளங்களை இழந்தது உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக ஆயிற்று. அதற்கெல்லாம் காரணம் அந்த தேவியின் சக்தியே என பாதுகாப்புப் படையினர் நம்புவதால் அந்த ஆலயத்தை பாதுகாப்பதும் அவர்கள்தானாம்.
அந்த ஆலயத்துக்கு செல்ல நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சரியான நேரமாக இருக்குமாம். ஆனால் அது உள்ள இடம் எல்லைப் பகுதியில் உள்ளதினால் அங்கு செல்ல தராட் கமிஷனரின் அனுமதியைப் பெற வேண்டுமாம். வாடகை வாகனத்தில் செல்ல ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் செலவு ஆகுமாம். இன்னொரு செய்தியின்படி அந்த ஆலயம் உள்ள இடத்தின் கீழே தற்போது மறைந்துவிட்ட சரஸ்வதி நதி ஒரு காலத்தில் ஓடியதினால் அந்த இடம் மேலும் புனிதமாகக் கருதப்படுகின்றது.மேலும் அந்த தேவியை பாகிஸ்தானில் உள்ள பார்வதி தேவியின் உடல்  விழுந்த சக்தி ஆலயமான ஹிங்க்லாஜ் மாதா ஆலயத்து தேவியே எனவும் கருதுகிறார்கள் .

Friday, July 23, 2010

Thenkasi muththukumaraswami temple - 22

ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -22

தென்காசி முத்துக்குமாரசுவாமி எனும் பாலசுப்ரமணியன் ஆலயம்
சாந்திப்பிரியா 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் குற்றலாத்துக்கு அருகில் உள்ளதே ஆயிக்குடி என்ற கிராமம். அந்த கிராமத்தில் உள்ளது ஹனுமான் நாடி என்ற ஒரு நதி. அதன் கரையில்தான் முருகனின் ஆலயம் அமைந்து உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள மூலவரின் மூர்த்தி பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள். அது பூமியில் புதைந்து கிடந்தது எனவும் அதை வெளியில் எடுத்து ஆலயம் அமைந்ததாகவும் கூறுகிறார்கள். அந்த மூர்த்தி அந்த ஊரில் இருந்த மல்லான் என்பவருக்கு மல்லான் என்ற நதிக்கு உள்ளே கிடைத்ததாம். ஒரு காலத்தில் அந்த ஊரில் முருக பக்தர் சந்நியாசி என்பவர் நதிக்கரையில் தவம் செய்து கொண்டு இருந்ததாகவும் அவர் மரணம் அடைந்ததும் அவரது சமாதியை ஹனுமான் நதிக்கரையில் கட்டியதாகவும், அதன் பின் மல்லானுக்குக் கிடைத்த முருகனின் மூர்த்தியை அவருடைய கனவில் தோன்றி முருகப் பெருமான் கூறியபடியே முருக பக்தர் சமாதி மீது ஆலயம் அமைத்து அங்கு வைத்தனராம்.
படம் நன்றி: 
http://kumbakonam-temples.blogspot.com/2009/08/balasubramanya-swami-temple-ayikudi.html 

அந்த ஆலயத்துக்கு ஐந்து தல விருஷங்கள் இருப்பது இன்னொரு சிறப்பு. அவை ஆலமரம், வேப்ப மரம், கறிவேப்பிலை, மாதுளை மற்றும் வேம்பு மரங்கள் என்பவையாகும். அந்த இடத்தில் தோன்றிய ஹனுமான் நதியைப் பற்றிய புராணக் கதை என்ன என்றால், சீதையைத் தேடியவண்ணம் ஹனுமார் ராமருடன் அந்த வானகத்தில் வந்தபோது அனைவருக்கும் தாகம் எடுத்தது. பக்கத்தில் எங்குமே குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே ஹனுமார் தன்னுடைய கூர்மையான வாலினால் நிலத்தைத் தோண்டி அந்த இடத்தில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்த அதில் இருந்து கிடைத்த நீரைப் பருகி அனைவரும் தாகத்தை தனித்துக் கொண்டனராம். ஹனுமான் ஏற்படுத்திய அந்த நீர்தேக்கமே பின்னர் சிறு நதியாக மாறியது, அதன் பெயரும் ஹனுமான் நதி என ஆயிற்று .
ஹனுமான் நதி
படம் நன்றி: http://wapedia.mobi/en/Ayikudi_Balasubramanya_Swami_Temple

அநேகமாக 1931 ஆம் ஆண்டில் திருவாந்தக்கூர் மகராஜா அந்த ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பை தன்னுடைய அரசாங்கத்தினராலேயே ஏற்க வைத்து ஆலயத்தை சீர்படுத்தினாராம். அந்த ஆலயத்திற்கு சென்று ஹனுமான் நாடி எனப்படும் நதியில் குளித்தால் காரிய சித்தி ஏற்படும், பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு  கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆலய  விலாசம் :-
Sri Balasubrtamanya Swami Devasthanam 
Ayikudi P.O, 
Tenkasi Taluk, 
TN 627 852

Tuesday, July 20, 2010

Sri Sri Jeyendrapuri Swaami

நான் சந்தித்த ஸ்வாமிகள் 
 
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலய பீடாதிபதி
 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர புரி ஸ்வாமிகள்
சாந்திப்பிரியா
பல வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு முறை பெங்களூரில் ராஜராஜேஸ்வரி ஆலயத்துக்குக் சென்று தரிசனம் செய்தப் பின் ஸ்வாமிகள் தங்கி இருந்த மடத்தில் சென்று அவரை சந்திக்கச் சென்றோம் . அப்போது ஸ்ரீ திருச்சி மகா ஸ்வாமிகள் உயிருடன் இருந்த காலம். மதியம் இரண்டரை மணி ஆகிவிட்டது. சுவாமிகளை அப்போது சந்திக்க முடியாது என காவலாளி தடுத்து நிறுத்தி விட்டார். ஆகவே திருச்சி மகா ஸ்வாமிகள் சரித்திரம் என்ற புத்தகத்தை அங்கிருந்த கடையில் இருந்து வாங்கிக் கொண்டு திரும்பினோம். அதன் பின் பல ஆண்டுகள் நான் அங்கு செல்லவே இல்லை. காரணம் நான் இருந்தது மத்தியப் பிரதேசத்தில். என்ன காரணத்தினாலோ அந்த புத்தகம் என்னை கவர்ந்தது , இரண்டு அல்லது மூன்று முறை அதைப் படித்தேன். அதை பத்திரமாக வைத்துக் கொண்டேன்.
2005 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஒய்வு பெற்றப் பின் 2006 ஆண்டில் பெங்களூரில் வந்து வசிக்கத் துவங்கினேன். அநேகமாக 2006 ஆண்டு இறுதியில் என நினைக்கின்றேன். மீண்டும் ஒரு நாள்காலை ராஜராஜேஸ்வரி ஆலயத்துக்கு செல்ல சந்தர்பம் கிடைத்தது. ஆலய ஹரிசனம் முடித்ததும் சுவாமிகளை சந்திக்கச் சென்றேன். அப்போது ஸ்ரீ திருச்சி மகா ஸ்வாமிகள் இல்லை என்ற விவரம் எனக்குத் தெரியாது. உள்ளே சென்று ஸ்ரீ திருச்சி மகா சுவாமிகளை சந்திக்க காத்திருந்தபோதுதான் தெரிந்தது, ஸ்வாமிகள் சமாதி ஆகிவிட்டார், அவர் ஸ்தானத்தில் ஸ்ரீ ஜெயேந்திர புரி ஸ்வாமிகள் உள்ளார் என்பது.
நானும் என் மனைவியும் உள்ளே சென்று சுவாமிகளை தரிசித்தோம். முதல் சந்திப்பிலேயே எனக்கு அவர் மீதான அபிமானத்தை ஏற்படுத்தியது. அவர் கண்களில் கருணையும் சாந்தமான ஒளியும் இருந்தது. அதிகம் பேசவில்லை. நான் யார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். என்னைப் பற்றி கூறினேன். அடிக்கடி வந்து கொண்டு இரு என்றவர், யாரோ ஒருவரை அழைத்தார் , எனக்கும் என் மனைவிக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்புமாறு கூறினார். நாங்கள் அவருடன் சென்றோம். அவர் எங்களை அழைத்துப் போய் காலை சிற்றுண்டிசாலைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அங்கு மேலும் சிலர் அமர்ந்து இருந்தனர். அங்கு அமர்ந்து இருந்த வேத பாடசாலை சிறுவர்கள் பலர் பேசிக் கொண்டு இருந்தனர். திடீரென அவர்கள் உரத்த உரலில் காலபைரவர் ஸ்தோத்திரத்தை உச்சரிக்கத் துவங்கினார்கள். அப்போது ஸ்வாமிகள் உள்ளே நுழைந்தார். அவருக்கு நாங்கள் அமர்ந்து இருந்த அறையிலேயே எங்களுக்கு எதிராக போடப்பட்டு இருந்த தனி இலையில் அமர்ந்து கொண்டு தானும் அதை பாடத் துவங்கி அது முடிந்ததும் சிற்றுண்டியை சாப்பிட்டார். நாங்களும் சாப்பிட்டோம் அதன் பின் வீடு திரும்பினோம்.
அதன்பின் அவரைக் காண எப்போது மனம் அப்போது நாங்கள் பல முறை சென்றோம். ஒவ்வொரு முறையும் அவர் எங்களை காலை பிரசாதமான சிற்றுண்டியை சாப்பிடாமல் செல்ல அனுமதிக்கவில்லை. அப்போதுதான் நினைத்தோம், எங்களிடம் அவர் தனி அன்பு காட்டி வருகின்றார். இத்தனைக்கும் நாங்கள் ஆலயத்துக்கு எதுவும் செய்யவில்லை. நாங்கள் செல்வந்தர்கள் இல்லை. சாதாரண நடுத்தர பிரிவினை சேர்ந்தவர்கள். ஒருமுறை அவர் உத்தரவு தந்ததற்கு ஏற்ப ராஜராஜேஸ்வரி ஆலயத்தைப் பற்றிய தமிழ் கட்டுரையை திருத்தி அமைத்துக் கொடுத்தேன். அது சீடியாக வெளியாயிற்று. அதை எனக்கும் தந்தார். அது எதோ மிகப் பெரிய காரியம் செய்தது போல எனக்கு மன நிறைவாக இருந்தது. அவரைக் தரிசனம் பெற பெரிய பெரிய பணக்காரர்கள், செல்வம் படைத்தவர்கள், மிட்டா மிராசுதார்கள் என பலரும் வருவதைக் கண்டுள்ளோம். ஆனால் அவர் அனைவரையும் ஒன்றுபோலவே கருதி அனைவரையும் ஒரே இடத்தில் அமரச் சொல்லி அனைவர் முன்னால் மட்டுமே பார்பதைக் கண்டோம். அவர்களை தனி மரியாதை கொடுத்து நடத்தியதாகத் தெரியவில்லை. தனிமையில் அழைத்துப் பேசவில்லை. அதிகபட்சம் அனைவரும் போகும்வரை அவர்களை அமர்ந்து இருக்க சொல்லிய பின் அவர்களுடன் பேசி அனுப்புவார். அதற்குக் காரணம் அவர்கள் அவரிடம் இருந்து முன் அனுமதி பெற்று தம்முடைய அந்தரங்கக் குறைகளைக் கூறி பரிகாரம் கேட்க எங்கிருந்தோ வந்திருக்க வேண்டும்.
இன்னுமொரு காட்சியையும் கண்டோம். வந்தவர்கள் எவருக்குமே அது நடக்கும், இது நடக்கும் என்றோ, கூறாமல். எந்த பிரச்சனையைக் கூறினாலும் அம்பாளை தரிசனம் செய்துவிட்டுப் போ, அனைத்தும் நல்லபடி நடக்கும் என்பார். இல்லை அம்பாள் சன்னதிக்குச் சென்று ஏதாவது ஒரு பூஜையை கூறி அந்த பூஜையை செய்துவிட்டுப் போ, அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும் என்பாரே தவிர தன்னை வந்து பார்ப்பதின் முக்கியத்துவத்தைத் தவிர்தார். எவரிடமும் தனிப்பட்ட முறையில் எந்த குடும்ப விவகாரத்தையும் பேசியது இல்லை. அது தனக்கு தேவையட்ட்றது எனநினைப்பவர்.
அது மட்டும் அல்ல அவர் முன் வைக்கப்பட்டு இருக்கும் எந்த பொருளையுமே அவர் தன்னிடம் தனியாக வைத்துக் கொள்ளவில்லை. அங்கு வை என திருச்சி ஸ்வாமிகள் படத்தின் முன்னால் வைக்கப்பட்டு உள்ள தட்டைக் காட்டுவார். அவருக்கு தரப்படும் அனைத்தும் எல்லோர் முன்னாலும் ஸ்ரீ .திருச்சி சுவாமிகளின் படத்தின் முன்னால் வைக்கப்படும். அதை மடத்தினர் எடுத்துப் போய் உள்ளே வைத்து கணக்கில் வைப்பார்கள். பழங்கள் அனைத்தும் வேத பாடசாலையில் உள்ள சாப்பாடு கூடத்துக்குச் சென்று விடும். சுவாமிகளுக்கு என தனியாக எதையும் எடுத்து வைப்பதை நாங்கள் பார்க்கவில்லை. கேட்டதும் இல்லை. அந்த காட்சிகள்தான் எங்கள் மனதில் அவர் மீது ஒரு உயர்வை ஏற்படுத்தி உள்ளது. அவர் லௌகீக ஆசைகளில் பற்று வைத்து இருக்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது .
அவ்வபோது போனால் எத்தனைக் கூட்டம் இருந்தாலும் எங்களை பார்த்து அருகில் அழைத்து ' சௌக்கியமாக இருக்கிறீர்களா, குழந்தைகள் நலமா? அனைவரும் ஷேமமாக இருக்கட்டும்' என்று மட்டுமே கூறுவார். அதற்கு மேல் குடும்ப விவகாரம் பற்றிய எந்த கேள்வியும் எழுந்தது இல்லை. அவருக்கு நமஸ்காரம் செய்தப்பின் எங்களை ஆசிர்வதித்து அனுப்புவார். அவ்வளவுதான் எங்கள் பந்தம். ஆனால் அதையும் மீறி எங்களுக்கு பந்தம் பூர்வ ஜென்மத்தில் இருந்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன். ஸ்வாமிகள் ஒருமுறை எதோ பேச்சில் எங்களிடம் கூறினார் 'உங்களை நான் இந்த ஆலயக் குடும்பத்தில் ஒருவராகவேதான் நினைக்கின்றேன்'. அதனால்தான் என்றைக்கும் அவர் எங்களிடம் காட்டும் அன்பில் மாறுதலே இல்லை. என் வாழ்க்கையில் நான் எத்தனையோ மகான்களை சந்தித்து உள்ளேன், சுவாமிகளை சந்தித்து உள்ளேன், சன்யாசிகளை, யோகிகளை சந்தித்து உள்ளேன். ஆனால் அவர்களில் ஒன்று அல்லது இருவரே இவரைப் போல இருந்தனர் என்பதே உண்மை.
ஸ்வாமிகள் வரலாறு
ஸ்ரீ  ஸ்ரீ ஜெயேந்திர புரி ஸ்வாமிகள்
2005 ஆம் ஆண்டு ராஜராஜேஸ்வரி ஆலயத்தை நிறுவிய ஸ்ரீ திருச்சி மகா ஸ்வாமிகள் சமாதி அடைந்தப் பின் ஸ்ரீ கைலாச ஆஸ்ரம மகா சமஸ்தானத்தின் பீடாதிபதியானவரே ஸ்ரீ ஜெயேந்திர புரி ஸ்வாமிகள். 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் தேதியன்று நல்ல வசதியானவர்கள் குடும்பத்தில் பிறந்தவர், படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். அவருக்கு இருபத்தி ஏழு ஆனபோது இந்து புராண இலக்கியங்களைப் படித்தவருக்கு அவற்றை தான் முன்னரே படித்திருந்தது போல உணர்வு இருந்ததாம். அப்போதுதான் அவர் கைலாச ஆசரமத்துக்கு வந்து ஸ்ரீ திருச்சி சுவாமிகளிடம் அடைக்கலமாகி அவரை தன் குருவாக ஏற்றுக் கொண்டாராம். 1987 ஆம் ஆண்டு அது. ஸ்ரீ திருச்சி சுவாமிகளிடம் வந்தவர் தனக்கு சன்யாச தீட்ஷை தருமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் அவர் சிறிது காலம் பொறுத்து இருக்குமாறுக் கூறியப் பின் அவரை ஹரித்துவாரில் இருந்த ஒரு குருவிடம் அனுப்பினார். போகும் முன் அவருக்கு சன்யாச உடைகளை கொடுத்து அனுப்பினார். ஹரித்துவாருக்குச் சென்றவர் ஏழரை ஆண்டுகாலம் அங்கிருந்த குருவுக்கு பணிவிடை செய்தவண்ணம் இருந்தவாறு புராண இதிகாசங்களை படித்தார் . அங்கிருந்தவாறே மீண்டும் தனக்கு சன்யாச தீட்ஷை தருமாறு ஸ்ரீ திருச்சி சுவாமிகளுக்கு கடிதம் எழுதினர். ஆனால் அவரோ ஹரித்துவாரில் இருந்த குருவிடம் தனது சார்பில் அந்த தீட்ஷையை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதைப் பெற்றுக் கொண்டப் பின் ஏழரை ஆண்டு காலம் அங்கு இருந்தவர் அவர் மீண்டும் பெங்களூருக்கு வந்து ஸ்ரீ திருச்சி சுவாமிகளிடம் சிஷ்யரானார்.
ஸ்ரீ ஸ்ரீ திருச்சி ஸ்வாமிகள்
ஸ்ரீ ஜெயேந்திர புரி ஸ்வாமிகள் தென் இந்தியாவின் அனைத்து மொழிகளைத் தவிர ஜேர்மன், இத்தாலியன், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளையும் நன்கு பேசுவார். அவர் ஸ்ரீ திருச்சி ஸ்வாமிகள் உயிருடன் இருந்த காலத்தில் அவருடன் பல இடங்களுக்கும் சென்று பிரசங்கங்கள் செய்து உள்ளார். அவரை தன்னுடைய சிஷ்யராக ஏன் ஏற்றுக் கொண்டீர்கள் என ஸ்ரீ திருச்சி சுவாமிகளிடம் அனைவரும் கேட்டபோது அவர் கூறினாராம் 'ஸ்ரீ ஜெயேந்திர புரி ஸ்வாமிகள் ' அவர் உண்மையானவர். சுயக் கட்டுப்பாடு கொண்டவர் எளிமையானவர், மேலும் நல்ல திறமைசாலி, அவர் எனக்கு கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன்'. ஆகவேதான் அவரை தன்னுடைய அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதன்மைப் படுத்தியே வந்திருந்தார். தான் உயிருடன் இருந்தவரை ஸ்ரீ திருச்சி ஸ்வாமிகள் மேரு ஆலயத்தில் பிரதான நவ வர்ண பூஜையை ஸ்ரீ சக்கர மேருவிற்கு செய்ய ஸ்ரீ ஜெயேந்திர புரி ஸ்வாமிக்கு அதிகாரம் தந்து இருந்தார். பல நேரங்களில் மகா ஸ்வாமிகள் சார்பாக ஸ்ரீ ஜெயேந்திர புரி சுவாமிகளே பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். 
 
சுவாமிகளின் பட்டமேற்பு  வைபவ காட்சிகள்
2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் மகா சர்வோஷனம் என்ற கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அந்த விழாவின்போது யாருமே எதிர்பாராத வகையில் ஸ்ரீ திருச்சி மகா ஸ்வாமிகள் தனது வாரிசாக ஸ்ரீ ஜெயேந்திர புரி சுவாமிகளை அறிவித்ததும் அல்லாமல் அவருக்கு பட்டாபிஷேகமும் செய்து வைத்தார். 
 வேத பாடசாலையில் மாணவர்கள் 
அதன் பின் மடங்களின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட ஸ்ரீ ஜெயேந்திர புரி சுவாமிகளே கைலாச ஆசிரம மடத்தையும் வேறு பல ஊர்களிலும் உள்ள அதன் கிளை மடங்களையும் திறமையாக நிர்வாகித்து வருகின்றார்.  வேத பாடசாலையில் மாணவர்களை நேரடியாக கவனம் செலுத்தி கண்காணிக்கின்றார். அவரை ஒரு முறை சென்று தரிசித்தாலே மனம் அமைதி அடைகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

Monday, July 19, 2010

Kashmir Suth Magadev Temple - 21

ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -21

காஷ்மீரத்து மலையில் சுத் மகாதேவ் சிவனாலயம்
சாந்திப்பிரியா
 
காஷ்மீரத்தில்  ஜம்மூவில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்தானி என்ற ஊரில் உள்ள மலையில் சுத் மகாதேவ் என்ற சிவ பெருமான் ஆலயம் உள்ளதாம். பட்னிடோப் என்ற மழைப் பகுதியில் ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு மேல்  மலை உச்சியில்  உள்ள பதினாறு  அல்லது  பதினைந்தாம்  நூற்றாண்டை  சேர்ந்ததாக  கூறப்படும்   அந்த ஆலயம் குறித்து கூறப்படும் சுவையான கதை இது.
ஆலயம் சுமார் 2800 ஆண்டுகளுக்கு முற்பட்டது.  அப்போது அந்த இடத்தில்   சுத் என்ற அசுரனும் வாழ்ந்து வந்தானாம். அவன் சிவ பக்தன். அவரிடம் இருந்து அறிய வரங்களைப் பெற்றவன். மாபெரும் உடலைப் பெற்றவன். அவன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி  வந்தான். அந்த நேரத்தில் ஒரு சமயம் சிவபெருமான் அந்த மலையில் தவத்தில் அமர்ந்து இருந்தார்.  அப்போது அவனால் பாதிக்கப்பட்ட தேவர்கள் வந்து சிவபெருமானிடம் அந்த அசுரன் செய்த கொடுமைகளைக் கூறி தம்மை அவன் கொடுமைகளில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினார்கள். ஆகவே கோபம் அடைந்த சிவன் தனது கையில் இருந்த திரிசூலத்தை அவன் வந்து கொண்டு இருந்த திசையை நோக்கி எரிய அது அவன் மீது பாய்ந்து அவனைக் கொன்றது. அவன் உடலில் புகுந்த அந்த திரிசூலம் பாதாளம்வரை பாய்ந்து  நின்றதாம். சுமார் அரை அடி அகலமான அந்த சூலம் இன்றும் அந்த இடத்தில் பூமிக்கு மேலே ஆறு அடி உயரத்தில் தெரியுமாறு பூமியில் புதைந்து உள்ளதாம். அந்த இடத்தில் சிறிய ஆலயம் அமைத்து சிவனை வழிபட்டு வந்தனர். என்ன இருந்தாலும் தன் உண்மையான பக்தனாக இருந்தவன் என்பதினால்   சுத்திற்கு அருள் பாலிக்க சிவ பெருமான் அந்தஆலயத்தில் தன் பெயரை சுத் மகாதேவ் என வைக்குமாறு கூறினாராம்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆலயம் உள்ள பகுதியையும் உள்ளடக்கிய சநேனி என்ற  நாட்டை (அன்றைய பஞ்சாப் மாநிலம்) ஆண்டு வந்த ராம்சந்த் என்ற மன்னன் அந்தக் கதையைக் கேட்டான். அந்த கதை உண்மையானதுதானா, அது நடந்து இருக்குமா,   அந்த சூலம் உண்மையிலேயே அத்தனை ஆழமாக புதைந்து உள்ளதா என்பதை சோதனை செய்து பார்க்கலாம் என எண்ணி அந்த சூலத்தை தோண்டி எடுக்குமாறு உத்தரவு இட்டான். ஆனால் தோண்டத் தோண்ட அதன் அடியே தெரியவில்லையாம்.  மூன்றாம் நாள் அந்த மன்னானின் கனவில் சிவபெருமான் தோன்றி மறுநாள் அந்த சூலத்தில் இருந்து ஒரு பகுதி உடைந்து விழும் எனவும், அதை எடுத்து ஒரு வாளாக செய்து கொண்டால் அது அவனுக்கு போர்களில் வெற்றித் தோல்விகளை முன் கூட்டியே ஜோதிடரைப் போலவே காட்டும் என்றார். அது மட்டும் அல்ல அந்த இடத்தில் ஒரு சிலை கிடைக்கும் எனவும், அதையும் எடுத்து  தமக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் எனவும் கூறினார்.
 ஆலயத்தில் வைக்கப்பட்டு உள்ள பூமியில் கிடைத்த சிலை 
கனவில் வந்தது போலவே அடுத்த நாள் அந்த சூலத்தின் மேல் பகுதியில் இருந்து ஒரு துண்டு கீழே விழுந்தது.  அங்கு பூமியை தோண்டிக் கொண்டு இருந்த ஒருவனுக்கு ஒரு சிலை கிடைத்தது.  சூலத்தில் இருந்து விழுந்த துண்டை வாளாக மாற்றிக் கொண்டான் மன்னன். அந்த சிலையை அங்கேயே வைத்து சிவனுக்கு ஆலயம் அமைத்தார்.
ஆலயத்தில் நல்ல கருப்பு நிற கருங்கல்லில் சிவ லிங்கமும், இயற்கையாகவே இருந்த திரிசூலமும், பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமனின் கதை ஒன்றும் உள்ளதாம். ஆலயத்தின் அருகில் பார்வதி தங்கி இருந்த குகை ஒன்றும் உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள குளத்தில் நிராடினால் அனைத்து பாபங்களும் விலகும் என்ற நம்பிக்கை உள்ளதாம்.

Harsha matha Temple 16

தெரிந்த ஆலயம், பலரும் அறிந்திடாத செய்திகள் -16
ஹர்ஷா மாதா ஆலயம், குஜராத் 
 
குஜராத் மற்றும் உஜ்ஜயினில் 
ஹர்சித்தி அல்லது ஹர்ஷா மாதா ஆலயம்
சாந்திப்பிரியா 

முன்னொரு களத்தில் சிவபெருமானின் மனைவியான பார்வதி தட்ஷா யாகத்தின்போது தற்கொலை செய்து கொள்ள அவளை தூக்கிக் கொண்டு அனைத்து இடங்களிலும் சென்ற சிவபெருமானின் தோளில் இருந்தவளை விஷ்ணு துண்டு துண்டமாக வெட்டித் தள்ளி சிவனின் கோபத்தை அழித்தாராம். அப்போது அவள் உடல் விழுந்த இடங்களில் எல்லாம் ஒரு சக்தி ஆலயம் எழுந்ததாம். அதில் அவளுடைய முட்டி எலும்பு விழுந்த இடமே உஜ்ஜயினியில் ஹர்சித்தி மாதா ஆலயம் ஆயிற்றாம். இரண்டு ஆலயங்களுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம்.
இன்னொரு கதை என்ன எனில் சாந்த் மற்றும் பிரசாந்த் என்ற இரு அசுரர்கள் தேவலோகத்தில் அட்டகாசம் செய்து கொண்டு அனைவரையும் துன்புறுத்தியபடி இருந்தனர். சிவனும் பார்வதியும் தாயக்கட்டை ஆடிக்கொண்டு இருந்த இடத்துக்குப் போய் அவர்களையும் தொந்தரவு செய்ய அவனுக்கு தானே கொடுத்த வரத்தினால் அவளை அடக்க முடியாமல் போன சிவன் பார்வதியிடம் அவனை அழிக்குமாறு வேண்டிக்கொள்ள அவள் விஷ்ணுவும் காளியும் சேர்ந்த உருவை எடுத்து அவர்களை அழிக்க, அவள் அனைத்து தீமைகளை அழிக்கும் சக்தி வாய்ந்த தேவி ( ஹர்சித்தி) என்ற பெயர் பெற்று உஜ்ஜயினியில் ஹர்சித்தி மாதாவாக அமர்ந்தாளாம்.அப்படிப்பட்ட அவள் குஜராத்திலும் ஒரு ஆலயத்தில் ஹர்ஷ  மாதாவாக உள்ளாள். குஜராத்தில் போர்பந்தர் அருகில் உள்ள காலா என்ற மலையில் உள்ள அந்த ஆலயத்துக்கு ஜாம் நகரில் இருந்து செல்லலாம். ஆலயத்துக்கு செல்ல 2000 படிகளை ஏற வேண்டும். 
 உஜ்ஜயினியில் ஹர்சித்தி அம்மன், ஆலயம்
அங்கு அவளுடைய ஆலயம் வந்த கதை என்ன எனில் அந்த ஆலயம் உள்ள இடத்தில் முன்னர் ஒரு சிறு கல்லையே ஒரு சக்தியாக வணங்கி வந்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி தினமும் அங்கு சென்று தன் ஆடு மாடுகளை மேய்த்துவிட்டு அந்த தேவியை (கல்லை) வணங்கிவிட்டு வருவாராம். ஒரு முறை மழை இல்லை. பயிர்கள் வாடின. மக்கள் பஞ்சத்தினால் மடிந்தனர். அந்த கிராமவாசி தேவியிடம் சென்று தம்மை அவள் ஏன் காப்பாற்றக் கூடாது என தனக்குத் தானே கேட்டுக் கொண்டானாம். அப்போது ஒரு ஆசிரி கூறியதாம் ' எனக்கு ஒவ்வொரு படியிலும் ஒன்றாக, 2000 பலி தந்தால் அனைத்தும் சரியாகிவிடும்'. அதைக் கேட்டவன் என்ன செய்வது என புரியாமல் முழித்தான். அடுத்த நாள் முதல் தன்னிடம் இருந்த ஆடுகள், மாடுகள், மற்ற பறவைகள், வழியில் கிடைத்த பிராணிகள், சிறு மிருகங்கள் என தினமும் ஒரு பலி தந்தான். கடைசியாக தன்னுடைய மனைவி, குடும்பத்தையும் பலி தந்த பின் கடைசி படிக்கு தன்னையே பலி தந்தான். அவ்வளவுதான், அடுத்தகணம் அந்த தேவி அங்கு தோன்றி ஒவ்வொரு படியாக இறங்கத் துவங்க இறந்து கிடந்த அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். அங்கு அவளுக்கு ஆலயம் எழுந்தது.
 குஜராத்தில் உள்ள ஹர்ஷா மாதா ஆலய தேவி 
இன்னொரு கதை என்ன எனில் அந்த ஆலயம் இருந்த இடத்தில் ஒரு அரசன் இருந்தான். ஒரு முறை நவராத்திரி பண்டிகையின்போது அவன் தன் ஏழு மனைவிகளுடனும் அங்கு நடனம் (கர்பா) ஆடிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த மலையில் இருந்த ஜகதாம்பா தேவியும் மறு உருவில் வந்து அதில் கலந்து கொள்ள அவள் அழகில் மயங்கிய அரசன் அவளை பின் தொடர்ந்து செல்ல கோபம் அடைந்த அவள் அவனை தான் தினமும் அந்த இடத்தில் வரவழைத்து வறுத்துத் தின்பேன் எனக் கூறினாள். அதைக் கேட்டவன் அவளிடம் மன்னிப்புக் கேட்க அவளும் அவனை வரவழைத்து வறுத்து சிறிது சதையை தின்றுடன் மீண்டும் உயிர் தருவேன் என உறுதி கூறினாள். அதற்கேற்ப தினமும் அவன் அந்த மலைக்கு செல்ல வேண்டியதாயிற்று. அவள் அவனை கதறக் கதற வறுத்து சிறிது சதையை தின்றதும் உயிர் பிழைக்க வைத்து அனுப்புவாள். அதனால் அவன் உடல் நலம் குன்றியது. அதைக் கேட்ட அவன் உறவினரான விக்ரமாதித்ய மன்னன் உஜ்ஜயினியில் இருந்து வந்தான். அங்கு வந்து அவளை துதித்து இரண்டு வரங்களைப் பெற்றான். அதன்படி அவள் விக்ரமாதித்ய மன்னனுடன் உஜ்ஜயினிக்கு சென்று சிலகாலம் தங்குவாள். ஆனால் அவன் அவன் பின்னால் நடக்கும் தன்னை திரும்பிப் பார்த்து விட்டால் எந்த இடத்தில் அவன் பார்த்தானோ அங்கேயே தங்கி விடுவாள். அவன் அங்கு அவளுக்கு ஆலயம் எழுப்பி வழிபட வேண்டும். அது போலவே உஜ்ஜயினி சென்றதும் மன்னன் அவளை திருபிப் பார்க்க அவள் அங்கேயே தங்கிவிட அவளுக்கு ஹர்சித்தி ஆலயத்தை அங்கு அமைத்தான்.
ஹர்சித்தி ஆலயங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவை மந்திர தந்திர சக்திகளை உள் அடக்கி கட்டப்பட்டு உள்ளன. ஆகவே அங்கு சென்று முறைப்படி வேண்டிகொண்டால் நினைத்த காரியங்கள் நடை பெறுமாம். ஆகவேதான் உஜ்ஜயினி மற்றும் குஜராத்தில்உள்ள ஹர்ஷா மாதா அல்லது ஹர்சித்தி மாதாவின் ஆலயங்கள் புகழ் பெற்று விளங்குகின்றன.

Saturday, July 17, 2010

Baala Parameswari- Bheema nagari Temple

நமக்கெல்லாம் தெரியாத ஆலய செய்திகள் /விவரங்கள் 
பீமாநாகரி அம்மன் அல்லது 
பாலபரமேஸ்வரி ஆலயம்
சாந்திப்பிரியா
 
நான் சமீபத்தில் ஒரு நண்பர் மூலம்  நாகர்கோவிலுக்கு  அருகில் உள்ள ஒரு ஆலயத்தைப் பற்றிய  சுவையான கதையைக்  கேள்விப்பட்டேன். அந்த செய்தியின் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டதே  இந்த கட்டுரை.  
 
 படம் நன்றி: http://en.wikipedia.org/wiki/BheemaNagari_Amman
 
நாகர்கோவில் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து நான்கு கிலோ தொலைவில் உள்ளதே பீமாநாகரி என்ற சிறிய கிராமம். நாகர்கோவிலில் இருந்து அந்த கிராமத்துக்கு எளிதில் செல்ல முடியுமாம். அந்த கிராமத்தின் உள்ளே, வயல்வெளிகள் சூழ்ந்த பகுதியில் ஒரு அக்கிரஹாரத்தில் உள்ளதே பால பரமேஸ்வரி ஆலயம். அந்த அம்மனை கோமதி அம்மனின் அவதாரம் என்கிறார்கள். கோமதி அம்மன் பார்வதியின் அவதாரம். அந்த ஆலயம் வந்த கதை சுவையானது.
சுமார் நானூறு அல்லது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் களக்காடு என்ற ஊரில் ஒரு வைதீக பிராமணக்  குடும்பம் வாழ்ந்து வந்தது. விவசாயம் அவர்கள் தொழில். அவர்கள் கோமதி அம்மனை குல தெய்வமாக வணங்கி வந்தனராம். அப்போது அனைத்து இடங்களிலும் ஆங்கிலேய அரசின் ஆதிக்கமே இருந்தது. நாளடைவில் ஆங்கிலேயரின் அரசாங்கம்  அவர்கள் அனைவருக்கும் தொல்லை தரத் துவங்கினார்கள். அளவுக்கு மேல் வரி விதித்தனர். ஆகவே அவர்கள் அங்கிருந்து வேறு எங்காவது போய்விட முடிவு செய்தனர். அப்போது ஒரு நாள் கோமதி அம்மன் ஒரு சிறுமி வடிவில் ஒருவரின் கனவில் தோன்றி அவர்களை அந்த இடத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சென்று கொண்டே இருக்குமாறும் அவர்களுக்கு எந்த இடத்தில் ஒரு இலுப்பை மரத்தடியில் இரண்டு மஞ்சளும், செவ்வரளியும் கிடைக்கின்றதோ அங்கேயே தங்குமாறு கூறினாள். 
அந்த அம்மன் கூறியது போலவே அவர்களும் கிழக்கு நோக்கி பயணமானார்கள். பீமானாகரி என்ற இடத்தில் அவர்கள் இல்லுப்பை மரத்தடியில் இரண்டு மஞ்சளையும் செவ்வரளிப் பூவையும் கண்டு அங்கேயே தங்கினார்கள். அது முதல் அவர்கள்  அங்கேயே தங்கி தமது குல தெய்வமான கோமதி அம்மனை வழிபடத் துவங்கினார்கள். அவர்களுக்கு மீண்டும் வந்த கனவின்படி கோமதி அம்மன் எட்டு வயது சிறுமி தோற்றத்தில்  இருப்பேன் எனவும், தன்னை பாதுகாக்க தனது சகோதரர் ஆதி கேசவரையும் துணைக்கு வைத்து இருப்பேன் எனக் கூறினாள். ஆகவே அந்த ஆலயத்துக்கு ஆதி கேசவ பால பரமேஸ்வரி என்ற பெயர் ஏற்பட்டது. பீமா நாகரி பிராமணர்கள் வசிக்கும் அக்கிரஹாரமாக மாறியது.
முதலில் பல காலமாக மஞ்சளையும் வீபுதியையுமே ஒரு பாத்திரத்தில் வைத்து அதையே பால பரமேஸ்வரி சமேத அதி கேசவராக தம்முடைய இல்லத்தில் சமையல் அறையில் வைத்து அதையே ஆலயமாகக் கருதி வணங்கியவர்கள் பின்னர் அம்மனை அடையாளம் காட்டுவதற்காக ஆலயமாக அதை அமைத்து ஒரு அம்மனின் முகத்தை வெள்ளியில் செய்து வைத்தனர். பின்னர் ஆலயத்தின் எதிரில் அன்றைய  திருவாங்கூர் திவான் ஒரு குளத்தை ஆலயத்துக்காக அமைத்துக் கொடுத்தாராம். முதலில் அந்த ஆலயத்தை நிறுவியவர்களின் வம்சாவளியினரே என்று அதை  இன்றும் தொடர்ந்து பராமரித்து  பூஜைகள் செய்து வருகிறார்களாம். அந்த வம்சாவளியில் பிறக்கும் ஒவ்வொருவரது குடும்பத்திலும் ஒருவருக்காவது பார்வதி என்ற அடைமொழிப் பெயர் வைக்கப்படுமாம்.  ஆலயத்தில்  நவராத்தரி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்களாம்  .

Friday, July 16, 2010

Stories from Purana- 5

இது ஒரு புராணக் கதை-5பசு எதனால் புனிதமாகக் கருதப்படுகின்றது?
சாந்திப்பிரியா

பசுவின் உடலில் லஷ்மி தேவி குடியிருக்கிறாள் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் அது எப்படி உலகிற்குத் தெரிய வந்தது என்பதற்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் தான் குபேரனுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக குபேரரைப் போலவே பல வருடங்கள் தண்ணீரில் முழுகி இருந்து தவம் செய்தார். அவர் தண்ணீரில் இருந்தது எவருக்கும் தெரியாது. ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் தம் வலையை அந்த ஏரியில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது அந்த முனிவர் அந்த வலையில் மீன்களுடன் மாட்டிக் கொண்டார். வெளியே வலையை இழுத்த மீனவர்கள் அதில் இருந்த முனிவரைக் கண்டு அதிசயித்தனர்.
ஆனால் தன் தவத்தைக் அவர்கள் கலைத்து விட்ட கோபத்தினால் அவர் அவர்களை சபிக்கப் போனபோது அவர்கள் தம்முடைய அறியாமையினால் செய்து விட்ட காரியத்துக்கு மன்னிப்புக் கேட்டார்கள். அவரும் அவர்களை மன்னிக்க ஒரு நிபந்தனை விதித்தார். அந்த ஊர் அரசனிடம் சென்று நடந்ததைக் கூறி தன் தகுதிக்கு சமமான அன்பளிப்பை கொண்டு வந்து தந்தால் அவர்களுக்கு சாபம் தர மாட்டேன் எனக் கூற அவர்கள் மன்னனிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள். மன்னனும், முனிவர்தானே அவர்களை சோதிக்கிறார் என எண்ணி ஆயிரம் போர் காசுகளை தந்து அனுப்பினார். அனால் அதைக் கண்ட முனிவர் அதை தொடவில்லை. அது தனக்கு ஈடல்ல என திருப்பி அனுப்ப மன்னனும் அதையும் இதையும் என ஒவ்வொன்றாக தனது ராஜ்யத்தையே அனைத்து செல்வங்களுடன் தந்தும் கூட முனிவர் திருப்தி அடையவில்லை. அனைத்தையும் திருப்பி அனுப்பி விட்டார். ஆகவே என்ன செய்யலாம் என குழம்பித் தவித்தபோது அவர் அரசவையில் இருந்த மிகவும் அதிகமான கடவுள் பக்தி கொண்ட பண்டிதர் முனிவரின் எண்ணத்தை புரிந்து கொண்டார். அவருக்கு கிருஷ்ணருக்கு துளசி இலையை போட்டு அவர் எடைக்கு சமனாக்கிய கதை நினைவுக்கு வர மன்னனிடம் அந்த முனிவருக்கு ஒரு பசுவை மட்டும் தானமாகத் தரும்படிக் கூறினார்.
 அரசன் பயந்தார். அத்தனை செல்வங்களுடன் கூடிய ராஜ்யத்தை தந்தும் திருப்தி அடையாத முனிவரா பசுவை எடுத்துக் கொள்வார் என அமைச்சரிடம் கேட்க, அவரோ பயப்படாமல் சென்று அதை செய்யுமாறு கூறினார். பசுவை அந்த முனிவர் முன்னால் கொண்டு நிறுத்தி அதை தானமாகத் தந்ததும் முனிவர் அதை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு கூறினார் 'மன்னா இதனுடன் என்னை ஒப்பிடவே முடியாது. ஹிமயமலைப் போல உள்ள அதனுடன் என்னை ஒப்பிட்டால் அதன் ஒரு கடுகு அளவுக்குக் கூட நான் சமமல்ல. அதை தந்து என் கண்களைத் திறந்து விட்டீர்கள். நான் லஷ்மி தேவி தரும் அனைத்து செல்வத்தையும் அடைய நினைத்தேன். நீங்கள் லஷ்மி தேவியையே எனக்கு தந்து என்னை தலை குனிய வைத்து விட்டீர்கள் ' எனக் கூறி மீனவர்களை மன்னித்தார்.
அப்போது அவரிடம் அரசன் ஒரு சந்தேகம் கேட்டார் 'முனிவரே நான் அத்தனை ராஜ்யத்தை தந்தும் திருப்பதி அடையாத நீங்கள் எப்படி பசுவைத் தந்ததும் ,லஷ்மி தேவியையே தந்து விட்டீர்கள் அது போதும் எனக் கூறுகின்றீர்கள்' எனக் கேட்டார். முனிவர் கூறினார் ' மன்னா ஒரு முறை விஷ்ணு காமதேனுவை படைக்க எண்ணினார். ஒரு பசுவை வரவழைத்து அதை காமதேனுவாக மாற்ற எண்ணி அனைத்து தேவர்களையும் அழைத்து அதன் உடலில் சென்று அமருமாறு கூறினார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அனைத்து தேவர்களும் ஒரு பசுவின் உடலில் சென்று தங்கினர். தாமதமாக வந்த லஷ்மி தேவிக்கு பசுவின் எந்த இடத்திலும் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் பசுவின் உடலில் தான் அமர வேண்டும் என தீர்மானித்து விட்டதினால் காலியாக இருந்த அதன் ஆசன வாயில் சென்று அமர்ந்து கொண்டாள். அந்தப் பசு காமதேனுவாக மாறியது. அந்த பசு மூத்திரம் பெய்ய அது லஷ்மி தேவியின் உடலை தழுவிக் கொண்டு வந்தது. ஆகவேதான் பசுவின் பின் புரத்தை தொட்டு வணங்கினால் லஷ்மி கடாஷம் கிடைக்கும் என்ற ஐதீகம் வந்தது' எனக் கூறினார்.

Stories from Purana- 4

இது ஒரு புராணக் கதை- 4
குபேரன் செல்வத்தின் அதிபதியான கதை
சாந்திப்பிரியா

புலஸ்திய பிரஜாபதியின் மகன் விஸ்ரவஸ் என்பவர். பல காலம் குழந்தை இல்லாமல் இருந்தவருக்கு வெகு காலத்துக்குப் பிறகு பிருமாவின் அருளினால் நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் ஒருவர் ராவணன், மற்றவர் குபேரன். அசுரரானாலும் குபேரனுக்கு இருந்த நல்ல குணத்தைக் கண்ட தேவர்கள் அவரை தம்முள் ஒருவராக இருக்க கடலில் வந்து வாசிக்குமாறும், அனைத்து நதிகளும், நீர் நிலைகளும் அவரை வணங்கி வழிபடும் எனவும் கூற அவரும் அங்கு சென்றார். ஆகவே அந்த கடலுக்குள் இருந்த செல்வத்தினால் அவர் பல செல்வங்களைப் பெற்றார். 
 ஆனால் நதிகளும் கடலும் மட்டுமே அவரை தலைவராக ஏற்றுக் கொண்டன.  ஆகவே அதை மாற்றி அனைவரும் தம்மை வணங்க வேண்டும் என விரும்பிய  குபேரன் சுமார் பத்தாயிரம் வருடங்கள்  கடலுக்குள் தனது தலையை மட்டும் முழுக வைத்துக் கொண்டு  தலைகீழாக  நின்று கொண்டு பிருமாவை வேண்டி தவம் இருந்தார். அத்தனை கடுமையான தவம் செய்தும் பிரும்மா அவருக்கு அருள் புரியவில்லை. ஆகவே ஒற்றைக் காலில் நின்றுகொண்டு பல நூற்றாண்டுகள் தவம் இருக்க அவருடைய கடுமையான தவத்தை மெச்சிய  பிரும்மா அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்க குபேரனும் தான் செல்வங்களுக்கு அதிபதியாக வேண்டும் என்றார். அதைக் கேட்ட பிரும்மாவும் அனைத்து லோகங்களிலும்  உள்ள அனைத்து செல்வங்களையும் கண்காணித்து  அதை கேட்பவர்களுக்கு வழங்கும் அதிபதியாக அருள் புரிந்தார். 
சில நாடுகளில் குபேரனை சிரிக்கும்  புத்தர் 
என  வணங்குகிறார்கள் 
எவருக்கு செல்வம் தேவையோ அவர்கள அவரை வழிபட வேண்டும் என நியதியை வைத்தார் . அது முதல் குபேரன் செல்வங்களின் அதிபதியானார்.  
வெளிநாட்டு  குபேரன்  சிரித்தபடி  தன் 
பரிவாரங்களுடன் காட்சி அளிக்கிறார்
அவர் ஒருமுறை சிவனின் மடியில் அமர்ந்து இருந்த பார்வதியின் அழகைக் கண்டு பொறாமை கொண்டார். அதனால்  கோபமுட்ற  பார்வதி அவருடைய ஒரு கண்ணை குருடாக்கினாள் . ஆனால் அவர் தவறை உணர்ந்து அவளிடம் சென்று மன்னிப்புக் கேட்டதினால் மீண்டும் கண் பார்வை தந்தாலும் அவருடைய கண்கள் எப்போதும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் எனவும், அது அவர் செய்த தவறை அவருக்கு சுட்டிக் கட்டிக் கொண்டே இருக்கும் வகையில் அமைந்து இருக்கும் என்றாள். ஆகவே குபேரனுடைய கண்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறுவார்கள்.

Soorakkudi Agni Veerabathirar Temple -15

தெரிந்த ஆலயம்,  பலரும் அறிந்திடாத வரலாறு -15

சூரக்குடி அக்னி வீரபத்திரர் ஆலயம்
சாந்திப்பிரியா
ஆலயங்களில் உள்ள அக்னி வீரபத்திரர் தோற்றம்.
அக்னி வீரபத்திரருக்கு மதுரை சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற கிராமத்தின் அருகில் உள்ள சூரக்குடி என்ற சிறு ஊரில் பிரபலமான ஆலயம் உள்ளது. அங்கு உள்ள ஒரு அரச மரத்தடியில்தான் வீரபத்திரர் வந்து தங்கி இருந்து தவம் இருந்து தோஷத்தைக் களைந்து கொண்டாராம். அது மட்டும் அல்ல அந்த நேரத்தில் அவர் அந்த கிராமத்தின் தேவதையாக இருந்து ஊரைக் காத்து வந்தாராம். ஆகவே  ஊர்  மக்கள் அவருக்கு  ஒரு ஆலயம் எழுப்ப முயன்றனர். ஆனால் பல காலம் எத்தனை முயன்றும் கோவில் எழுப்ப முடியாமல் இருந்தது எனவும், ஆனால் ஒரு நாத்தீகருடைய கனவில் ஒரு நாள் வீரபத்திரர் தோன்றி தனக்கு அந்த இடத்தில் ஆலயம் அமைத்து வழிபடுமாறு கூற அவரும் ஊர் பஞ்சாயத்தில் அந்த செய்தியைக் கூறி ஆலயம் அமைத்ததாகவும் ஆலயத்தின் கதை உள்ளது. ஆலயத்தைப் பற்றியக்  கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆலயம் எந்த காலத்தில் முதலில் தோன்றியது என்பதும் தெரியவில்லை அக்னி வீரபத்திரர் அங்கு வந்த கதை இது.
அக்னி வீரபத்ரர் சிவ பெருமானால் படைக்கப்பட்டவர். சிவனுடைய மாமனார் தக்ஷ்யன் நடத்திய யாகத்தில் அவரை அவமதித்ததை கண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு பார்வதியின் நிலைக் கண்டு கோபமடைந்த சிவன் தன்னை மறந்தார், அனைவரையும்  மறந்தார். தன்  தலை முடியில் இருந்து ஒரு அகோர உருவைப் படைத்து அனைவரையும் அழிக்க உத்தரவு தர அக்னி வீரபத்திரர் அனைத்து தேவர்களையும் சிவ பெருமான் அப்போது படைத்து இருந்த இன்னொரு காளி தேவியுடன் சேர்ந்து கொண்டு அழிக்கத் துவங்கினார். கன்னங்கரேர் எனக் காட்சி அளித்த  அக்னி வீரபத்திரர் உடம்பெல்லாம் முடி இருக்க  தலையில்  முடி நேராக நின்று இருந்தது, கண்களில் கனல் பறந்தது. அவருடைய ஆக்ரோஷத்தைக் கண்ட அக்னி, இந்திரன், சந்திரன், சூரியன் என அனைவரும் பயந்து ஓடினார்கள். அதைக் கண்டு பயந்த தேவர்கள்  ஓடிச் சென்று  விஷ்ணுவை வேண்ட அவர் சிவன் தொழில் இருந்த பார்வதயின் உடலை தனது சக்கிராயுதத்தினால் வெட்டி வீழ்த்த சிவ பெருமானின் கோபம் தணிந்தது. அவர் சிவ பெருமானிடம் சென்று அக்னி வீரபத்திரரின் கோபத்தை அடக்குமாறுக் கேட்க அதன்பின்  மற்ற தேவர்களும்  கேட்டுக் கொண்டதற்கு இணங்கி  கோபம் தணிந்த  சிவ பெருமான் அக்னி தேவரின்  உடலை பல  பிரிவுகளாகப் பிரித்தார்.  அக்னி வீரபத்ரரும் சிவ பெருமான் கேட்டதற்கு  இணங்கி தக்ஷ்யனின் வெட்டப்பட்ட தலையில்  ஒரு ஆட்டின் தலையை வைத்து அவருக்கு உயிர் தந்தார். அதன் பின் அவர் வலப்புறத்தில் தக்ஷயனுடனும், இடப்புறத்தில் காளியுடன் காட்சி தந்தாராம்.
 சிவ பெருமானின் கோபத்தினால்  அவரிடம் இருந்து  வெளிவந்த அக்னி வீரபத்ரர் யாகத்தில் வந்தவர்கள் பலரைக் கொன்றதினால் ஏற்பட்ட பிருமஹத்தி  தோஷத்தைக் களைய சிவ பெருமான் பூலோகத்தில்  வீர பத்திரராகச் பிறவி எடுக்க வேண்டும்.  வானத்தில் இருந்து தம் உடலில் உள்ள அனைத்து ஆபரணங்களையும் கீழே வீச வேண்டும். அவை எந்த நதியில் வீழுகின்றதோ அந்த நதிக் கரையில் சென்று தங்கி நதியில் குளித்து தவம் இருந்து பிருமஹத்தி தோஷத்தை களைந்து கொண்டு, தன்னுடைய அவதாரமாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என  சாபம் ஏற்பட்டது  . அதனால் சிவபெருமான் வீசிய ஆபரணங்கள் எப்போது ஆலயம் உள்ள இடத்தில் வந்து விழுந்ததாகவும்  அங்கு வந்து தவம் இருந்து பிருமஹத்தி தோஷத்தை களைந்து கொண்டு, தன்னுடைய அவதாரமாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் எனவும்  அந்த கிராமத்தினர் காலம் காலமாக கூறப்பட்டு வரும் கதையை ஆதாரமாகக் கூறுகின்றார்கள் . சிவபெருமானே அக்கோர வீர பத்திரர், அக்னி வீர பத்திரர், குபேர வீரபத்திரர் என அறுபத்தி நான்கு விதமான ரூபங்களை எடுத்தாராம்.
ஆலயங்களில் உள்ள அக்னி வீரபத்திரர் தோற்றம்.
 படம்  நன்றி :  http://chinthamani-griha.blogspot.com 
சூரக்குடி  அக்னி  வீரபத்திரர்   ஆலயத்தில் விளக்குகளை ஏற்றிய தட்டை தமது தலை மீது வைத்துக் கொண்டு பக்தர்கள் வணங்குவார்களாம். முக்கியமாக நவக்கிரகங்களினால் ஏற்படும் தீராத தொல்லைகளையும், மற்ற தீய சக்தியினால் ஏற்படும் தொல்லைகளையும் களைந்து கொள்ள   அக்னி வீரபத்திரரை வணங்குவார்களாம். சென்னை காளிகாம்பாள் ஆலயத்திலும் உள்ள அவரது சன்னதி இதற்கு மிகவும் பிரபலமானது.அவருக்கு மதுரை மீனாஷி ஆலயத்திலும் தனிச் சன்னதி உள்ளது.

Thursday, July 15, 2010

Meenkutty Meenashi amman Temple 20

ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் - 20
மீன்குளத்தி மதுரை மீனாஷி ஆலயம்
சாந்திப்பிரியா  
 
கேரளாவில் பள்ளசேனா என்ற சிறிய கிராமத்தில் உள்ளதே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டுள்ள மீன்குளத்தி மீனாஷி ஆலயம். ஆலயத்துக்கு கொடையனூர் சென்று அங்கிருந்து பள்ளசேனாவுக்கு செல்லலாம். இல்லை என்றால் பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து கோவிந்தபுரம் வழியே கொல்லன்கோட்டை அடையலாம். அல்லது பாலக்கட்டை சென்றடைந்து அங்கிருந்து எட்டிமறை என்ற ஊரின் வழியாக ஆலயத்துக்கு செல்லலாம். பாலக்காட்டில் இருந்து எவரும் ஊருக்குச் செல்லும் வழியைக் கூறுவார்கள்.
பல நூற்றாண்டுகள் முன்னர் வீர சைவ வெள்ளாளர்கள் என்ற சமூகத்தினர் கும்பகோணம், மதுரை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து கேரளாவுக்குச் சென்று வைர வியாபாரம் செய்து வந்தனர். நாளடைவில் அங்கு சென்று வருவது கடினமாக இருந்ததினால் பல குடும்பங்கள் பாலக்காட்டை உள்ளடக்கி இருந்த அன்றைய மலபாரில் சென்று தங்கினார்கள். அவர்கள் மதுரை மீனாஷி அம்மனை தமது குல தெய்வமாக கருதி வணங்கி வந்ததினால் போகும்போது தம்முடன் மீனாஷி அம்மன் ஆலயத்தில் இருந்து ஒரு கல்லையும் எடுத்துச் சென்று இருந்தனர். அதை ஒரு இடத்தில் வைத்து மீனாஷி அம்மனாக வழிபட்டனர். அதன் பின் சிலர் வருடாவருடம் மதுரைக்குச் சென்று குல தெய்வ தரிசனம் செய்துவிட்டு வருவார்கள்.
அவர்களில் ஒரு குடும்பத்தில் வயதானவர் இருந்தார். அவருக்கு அதிக வயதாகிவிட்டதினால் வருடாவருடம் மதுரைக்குச் சென்று அம்மனை வழி பட முடியவில்லை. ஒரு நாள் அவர் ஒரு குளத்தருகில் தம்முடைய ஓலைக் குடையை என்றும் போல வைத்து விட்டு குளித்து விட்டு வந்தார். ஆனால் அவரால் குடையை அந்த இடத்தில் இருந்து தூக்க முடியவில்லை. பயந்து போனவர் உள்ளூரில் இருந்தவர்களை அழைத்து வந்து அந்த அதிசயத்தைக் காட்ட வந்த எவராலும் அந்தக் குடையை தூக்க முடியவில்லை. அங்கு ஜோதிடர் (பிரசன்னம் கூறுபவர்) அழைத்து வரப்பட்டார். அவர் அந்த இடத்தில் மதுரை மீனாஷி குடுகொண்டு உள்ளாள் எனவும் ஆகவே அவர்கள் அந்த இடத்திலேயே அவளுக்கு ஆலயம் எழுப்பி வழிபடுமாறு கூறினார். அதன்படி அனைவரும் நிதி திரட்டி அங்கு ஆலயம் அமைத்தனர்.
ஆலயத்தில் சில தெய்வங்களின் சிலைகள்
ஆனால் நானூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அம்மன் மீண்டும் இன்னொருவர் கனவில் தோன்றி தனக்கு பெரிய ஆலயம் எழுப்புமாறுக் கூற அவள் கூறியபடி அந்த பழைய ஆலயத்தைத் தள்ளி இன்னொரு பெரிய ஆலயம் அமைத்தனர்.
குளத்து அருகில் ஆலயம்
படம் நன்றி: http://gansripar.blogspot.com/2008/07/meenkulathi-bhavavathi-pallassena.html  
அதுவே மீன்குளத்தி மீனாஷி ஆலயமாயிற்று. அம்மன் மீன்கள் நிறைய இருந்த குளத்தின் அருகில் கிடைத்ததினால் அவள் பெயர் மீன் குளத்தி என ஆயிற்று. அவளை அனைவரும் மதுரை மீனஷியாகவே கருதி அங்கு வழி படுகின்றனர். 
ஆலய விலாசம்
Pazhayakavu Devaswom Pallassana.
P.O. Palakkad (Dist) - 678 505

Tuesday, July 13, 2010

Wonderful Hindu Temples in Malaysia -4

வினோத வெளிநாட்டு ஆலயங்கள் -4
நாகேஸ்வரி  அம்மன்        
சாந்திப்பிரியா

முக்கிய அறிவிப்பு:-  நாம் அனைவரும் இதுவரை நம் நாட்டில்தான் பல மகிமைகள் வாய்ந்த ஆலயங்கள் உள்ளதாக நினைத்து இருப்போம் . ஆனால் பல அற்புதங்களை செய்துள்ள நம்முடைய ஆலயங்கள் மலேசிய நாட்டிலும் உள்ளன என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே அதைப் பற்றி நான் கேட்டறிந்தவுடன், அந்த ஆலயங்களைப் பற்றி இந்த தளத்தில் பிரசுரிக்க நண்பர் திரு குமரேஷ் பட்டுமலாயிடம் இருந்து ( kbatumalai@gmail.com ) அனுமதி பெற்று அவற்றை பிரசுரித்து உள்ளேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி . இவற்றை அவருடைய அனுமதி என்றி எவரும் வெளியிடக் கூடாது -  சாந்திப்பிரியா 

நாகேஸ்வரி அம்மனின் திருவிளையாடல் 
1945 ஆம் ஆண்டு பாம்பாட்டி சித்தர் வந்து கோலாலம்பூரில் இன்று ஆலயம் உள்ள இடத்தில் இருந்த புற்றை நாகேஸ்வரி அம்மன் உள்ள இடம் என அடையாளம் காட்டினார். அங்கு சிறிய ஆலயத்தை எழுப்பி பக்தர்கள் அந்த அம்மனை வழிபடத் துவங்கினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அந்த இடத்தில் ரயில்வே தடம் அமைக்க வேண்டும் என்பதற்காக ஆலயத்தை பெயர்த்து வேறு இடத்திற்கு மாற்றினார்கள். ஆனால் அது தேவிக்கு பிடிக்கவில்லை. கோபம் அடைந்தாள். அந்த இடத்தில் வேலை செய்ய வந்த தொழிலாளிகள் அடிக்கடி உடல் நலமின்றிப் போய் வேலை செய்ய முடியாமல் தவித்தனர். தினமும் பயங்கரமானக் கனவு வந்து அவர்களை வாட்டியது. பூமியைத் தோண்டும் இயந்திரம் மீண்டும் மீண்டும் பழுதடைந்து வேலை செய்ய முடியாமல் போயிற்று. ஆகவே வேறு வழி இன்றி அனைவரும் அம்மனை வேண்டிக் கொள்ள அவள் ஒரு பெண்ணின் உடலில் ஏறி (சாமியாடுதல்) தம்மை இடமாற்றம் செய்ததை கண்டித்தாள். ஆனாலும் அவர்கள் வேண்டிக் கொண்டதினால் இனி தான் அங்கேயே இருப்பேன் எனவும் புதிய ஆலயத்தில் தினமும் மாலையில் வருவேன் எனவும் கூறினாள். புதிய ஆலயத்தில் நடுவில் அமைந்து உள்ள புற்றில் இரண்டு நாகங்கள் வசிக்கின்றனவாம். 
அந்த ஆலயத்தை ஒரு வெள்ளை நிறப் பாம்பு காவல் காக்கிறதாம். ஒரு முறை அந்த ஆலயத்தில் திருட வந்தவர்கள் அந்த பாம்பைப் பார்த்து பயந்து ஓடினார்கள். அது மட்டும் அல்லாமல் அது முதல் தம் உடம்பை அசைக்க முடியாமல் அவதிப்பட, அந்த திருடர்களின் மனைவிகள் அந்த ஆலயத்துக்கே சென்று தம் கணவர்கள் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு அம்மனை வேண்டி வணங்க அவர்களுடைய கணவன்மார்கள் குணம் அடைந்தனராம். அந்த ஆலயத்தின் சக்தி மிகப் பெரியதாம். ஆலயத்தில் நாக தோஷங்களை விலக்கிக் கொள்ள ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து வேண்டுதல் செய்வது உண்டாம்.
ஆலய விலாசம்:
Jln Lengkok Abdullah, Off Jln Bangsar, 59000 Kuala Lumpur. Tel:03-22820635

Wonderful Hindu Temples in Malaysia - 3


வினோத வெளிநாட்டு ஆலயங்கள் -3 
மகா மாரியம்மன்       
சாந்திப்பிரியா

முக்கிய அறிவிப்பு:-  நாம் அனைவரும் இதுவரை நம் நாட்டில்தான் பல மகிமைகள் வாய்ந்த ஆலயங்கள் உள்ளதாக நினைத்து இருப்போம் . ஆனால் பல அற்புதங்களை செய்துள்ள நம்முடைய ஆலயங்கள் மலேசிய நாட்டிலும் உள்ளன என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே அதைப் பற்றி நான் கேட்டறிந்தவுடன், அந்த ஆலயங்களைப் பற்றி இந்த தளத்தில் பிரசுரிக்க நண்பர் திரு குமரேஷ் பட்டுமலாயிடம் இருந்து ( kbatumalai@gmail.com ) அனுமதி பெற்று அவற்றை பிரசுரித்து உள்ளேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி . இவற்றை அவருடைய அனுமதி என்றி எவரும் வெளியிடக் கூடாது -  சாந்திப்பிரியா 

 
மகா மாரியம்மன்  மகிமை 
சுங்கை ரெங்கம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் ஆலயம் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு குடியேறிய தோட்டத் தொழிலாளிகளினால் கட்டப்பட்டதாம். ஆலயத்தில் உள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இந்த ஆலயத்துக்கு இன்றும்  வந்து கொண்டு இருக்கும் எழுபத்தி இரண்டு வயதான மூதாட்டி தன்னுடைய ஏழாவது வயது முதலேயே இங்கு வந்து வழிபடுகிறாளாம். அவளுக்கு ஏழு வயதானபோது அம்மை நோய் வந்து படுத்தாள்.  தான் விரைவில் குணமடைய வேண்டும் என அவள் மாரியம்மனை வேண்டிக்கொள்ள அவள் கனவில் சிவப்பு உடை உடுத்தி திரிசூலத்தை கையில் ஏந்திக் கொண்டு காட்சி தந்தாள் மாரியம்மன் . அவளுடைய உடல் நிலை மூன்றே நாளில் குணமடையும் எனக் கூறி மறைய அது  போலவே அந்த சிறுமி மூன்றே நாளில் அம்மை நோயில் இருந்து குணம் அடைந்தாள் என்பது ஆச்சர்யமான விஷயமே.  எந்த அம்மை நோயும் மூன்றே நாளில் குணமாகாது. 
அந்த ஆலயத்து மாரியம்மனை நம்பி வேண்டுபவர்களின் வீட்டையும் அவள் பாதுகாத்து வருவாளாம். ஒரு முறை மாரியம்மனின் பரம பக்தரின் வீட்டில் திருடன் வந்து கொள்ளையடிக்க நுழைந்தான். ஆனால் உள்ளே சென்றவன் அங்கு சிவப்பு நிற உடை உடுத்தி, கையில் திரிசூலத்துடன் ஒளிமயமாகக் காட்சி தந்த மாரியம்மனைக் கண்டு பயந்து ஓடினான். ஆனால் மாரியம்மன் அவனை தண்டிக்காமல் விடவில்லை. அவன் கை கால்கள் முடமாகி அவதிப்பட்டான். ஆகவே தன் தவறை உணர்ந்தவன் அந்த ஆலயத்துக்கே வந்து மாரியம்மனை வேண்டிக் கொண்டு, வணங்கி துதித்து உடல் நலமடைந்தானாம்.
கங்கை அம்மன் 
ஆலயத்தின் இன்னொரு விசேஷம் என்ன என்றால்  அங்கு கங்கை அம்மனும் குடிகொண்டு உள்ளாள். அவள் சன்னதியில் எப்போதுமே எங்கிருந்தோ வரும் நீரால் சன்னதி நீரால் நிறைந்தே  இருக்குமாம். 
ஆலய விலாசம்:
Address: Jln 19/25, Section 19, 40000 Shah Alam. Tel: 012-2879970 (Selvakumaran)

Monday, July 12, 2010

Kerala Saraswathi Devi Temple - 19

ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -19
தட்சிண மூகாம்பிகை அல்லது சரஸ்வதி ஆலயம்
சாந்திப்பிரியா

நாம் அனைவரும் கல்வி அறிவு பெருக கூத்தனூரில் உள்ள சரஸ்வதி ஆலயத்துக்கு சென்று வழிபடுவது உண்டு. ஆனால் அது போல வித்யாபலம் கிடைக்க ( கல்வியறிவு பெருக) கேரளாவிலும்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சரஸ்வதி ஆலயம் உள்ளது என்பது பலருக்கும் தெரியவில்லை. அந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்த ஆலயம் உள்ள இடம்  கோட்டயத்தில் இருந்து பத்து அல்லது பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள பண்ணாசிக்காடு என்ற சிறிய கிராமம். கோட்டயத்தில் இருந்து சாங்கனச்சேரி என்ற ஊருக்குச் செல்லும் பிரதான சாலையில் சென்றால் சின்காவனம் என்ற இடம் வரும். அங்கிருந்து சுமார் நாலு அல்லது ஐந்து கிலோ தொலைவில் உள்ளது ஆலயம். பஸ் வசதிகள் நிறைய உள்ளன. அந்த இடத்தில் இறங்கி எவரைக் கேட்டாலும் ஆலயம் செல்லும் வழியைக் கூறுவார்கள். ஸ்வயம்பு தேவியாக  சரஸ்வதி  வந்த இடம். அது பற்றியக் கதை இது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த கிராமத்தில் வைதீக பிராமணர் குடும்பம் இருந்தது. அந்த குடும்பத் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்துக்குச் சென்று வழிபட்டப் பின் திரும்புவார். வயது ஏறிக் கொண்டே போனவருக்கு தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்ற ஏக்கம் வந்தது. ஆகவே கொல்லூருக்குச் சென்று மீண்டும் வழிபட்டார். ஊர் திரும்பி வந்ததும் இன்று சரஸ்வதி ஆலயம் உள்ள இடத்தில் இருந்த ஒரு குளத்தில் குளிக்கச் சென்றார். அதன் அருகில் இருந்த பனை மரத்தடியில் தனது ஓலை குடையை வைத்துவிட்டுச் சென்று குளித்தார்.  திரும்பி வந்தவரால் குடையை எடுக்க முடியவில்லை. அப்போது ஒரு ஆசிரி கூறியது, 'நான் அருகில் உள்ள காட்டில் புதைந்து உள்ளேன். என்னை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை  செய்து பூஜித்து வா. உனக்கு  நல்ல கல்வி அறிவு கொண்ட புத்திர பாக்கியம் கிடைக்கும்'.  அது மட்டும் அல்ல  தானே மூகாம்பிகை தேவியின் அவதாரமாக இங்கு சரஸ்வதி தேவி உருவில் வந்துள்ளதாகக் கூறினாளாம். அவரும் அந்த ஆசிரி சொன்ன இடத்துக்குப் போய் சிலையை தோண்டி எடுத்து வந்து அந்த குடை எங்கிருந்து எடுக்க முடியவில்லையோ அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.  அதுவே தட்சிண மூகாம்பிகை என்ற பெயரில் ஆலயமாக உள்ளது.  
  சரஸ்வதியின் சில தோற்றங்கள்
ஆலயத்தில் உள்ள  சிலை  பூமியில் கிடைத்த சரஸ்வதி தேவியின் சிலையாம். அவருக்கு புத்திர பாக்கியமும் கிடைத்தது. ஆலயத்தில் அந்த தேவிக்கு கற்பகிரகம் இல்லை. அருகில் உள்ள மலைப் பிரதேசத்தில் இருந்து ஊறி வரும்  தண்ணீரே  தானாகவே ஏற்படுத்திக்  கொண்டு உள்ள சதுரமான குளத்தில் உள்ள அந்த சிலையின் மீது வழிந்து சிலையை தண்ணீருக்குள் முழுகி இருக்குமாறு வைத்து உள்ளது. அதன் அருகில் சிறிய விஷ்ணு ஆலயம் உள்ளது. மலை பகுதியில் இருந்து வழியும் நீர் அந்த விஷ்ணுவின் பாதம் வழியாகவே சரஸ்வதி ஆலயத்துக்கு வருவதினால் அந்த சரஸ்வதி ஆலயத்துக்குச் செல்பவர்கள் முதலில் விஷ்ணுவை வணங்கிவிட்டுத்தான் சரஸ்வதியை வணங்கி கல்வி அறிவு பெற வேண்ட வேண்டும்.   அந்த சிலை நீரில் மூழ்கி உள்ளதினால் சாதாரணமாக சரஸ்வதி வடிவத்தை  பார்க்க முடிவதில்லை.  மேலும் அந்த தேவியை மறைத்துக் கொண்டு உள்ளது போல விசேஷமான ஒரு  கோடி வளருகின்றது. அது இதுவரை காய்த்தது இல்லையாம், பூத்தது இல்லையாம். அந்த கொடியின் இலையைப் போல வேறு எங்குமே காணப் படவில்லையாம். ஆகவே அதை சரஸ்வதி இலை என்றே அழைக்கிறார்கள்.  தேவி மறைக்கப்பட்டு உள்ளதினால் அதன் பக்கத்திலேயே அது போன்ற சிலையை செய்து வைத்து உள்ளனர். அதையே  மூல தேவியாகக் கருதி  பூஜைகள் செய்கின்றனர். ஆலயத்தில் உள்ள மற்ற தெய்வங்களில் சிவன், விநாயகர், மூகாம்பிகை போன்றோர் உள்ளனர். 
 சரஸ்வதியின் ஒரு தோற்றம் 
அங்கு வந்து தத்தம் குழந்தைகள் நன்கு கல்வி  அறிவு பெற வேண்டும், தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும், மேல் கல்வி பெற வேண்டும்  என வேண்டிக் கொண்டு செல்கின்றனர். விஜயதசமி அன்று ஆயிரக்கணக்கானவர்கள்  குழைந்தைகளுடன்  வருவதினால்   ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிகின்றது. 
படங்கள்  நன்றி :-   http://wapedia.mobi/en/File:Mahasaraswati.jpg  
மற்றும்
http://en.wikipedia.org/wiki/Saraswati

Vaikom Magadev Temple -- 18

ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள்- 18
பரசுராமர் நிறுவிய மகாதேவர் ஆலயம்
சாந்திப்பிரியா

கோட்டயம் மற்றும் திருவனந்தபுரத்துக்கு இடையே கோட்டயத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளதே மகாதேவர் ஆலயம். அது சிவ பெருமானின் ஆலயம். கொச்சினில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் இருக்கும். ஆலயத்தில் நான்கு பிராகாரங்கள். அனைத்தும் கறுப்புக் கல்லில் கட்டப்பட்டு உள்ளன. ஆலயத்தில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் ஐந்து அடியாம். அந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தைப் பற்றி இரண்டு விதமான கதைகள் உள்ளன.
படம் நன்றி:- http://en.wikipedia.org/wiki/Vaikom_Temple
அந்த சிவலிங்கமும் அதைப் போலவே மேலும் இரண்டு சிவ லிங்கங்களும் காரா என்ற முனிவருக்கு அவர் நதியில் குளித்துக் கொண்டு இருந்தபோது கிடைத்தன எனவும், அதை எடுத்து வந்தவர் வைகோம், காடுதுரோத்தி மற்றும் இட்டமனூர் என்ற மூன்று இடங்களில் வைத்து வழிபட்டார் எனவும் கூறுகிறார்கள். சிலர் அது அப்படி இல்லை அது காரா என்கின்ற அசுரனுக்கு சிதம்பரத்தில் சிவ பெருமானே தந்து அதில் தான் உள்ளதாகவும் அதை வணங்கினால் பெரும் நன்மை கிட்டும் எனக் கூறியதாகக் கூறுகிறார்கள். முனிவருக்கு கிடைத்ததை கொண்டு வந்து மூன்று இடங்களில் சிவன் ஆலயம் எழும்பியது எனவும் கூறினாலும், அந்த அசுரன் தன்னுடைய இரண்டு கைகளிலும் அந்த மூன்று லிங்கங்களையும் எடுத்து வந்து ஒரு இடத்தில் இளைப்பாற எண்ணி தன் தலையில் வைத்து எடுத்து வந்த லிங்கத்தை வைகோம் என்ற இடத்தில் கீழே வைக்க அதை மீண்டும் எடுக்க முடியாமல் போக அவன் அங்கேயே தங்கி அதை வழிபட்டானாம். 
அதற்கு முன்னால் தன்னுடைய இரண்டு கைகளிலும் வைத்து இருந்த மற்ற இரண்டு லிங்கங்களை காடுதுரோத்தி மற்றும் இட்டமனூர் என்ற இடங்களில் வைத்து வணங்கிய பின்னர், தான் மரணம் அடையும் தருவாயில் அந்த மூன்று லிங்கங்களுக்குமான பூஜையை தொடருமாறு ஒரு முனிவரிடம் தந்துவிட்டுச் சென்றானாம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தில் இருந்த லிங்கங்களை கண்டு பிடித்த பரசுராமர் அவற்றை வெளியில் எடுத்து ஆலயம் அமைத்தாராம். முக்கியாமாக வைகோமில் இருந்த சிவ லிங்கத்தை விசேஷமாகக் கருதி பூஜித்ததினால் அது மகிமை வாய்ந்ததாக இருந்தது என்பதின் காரணம் மற்ற இரண்டு சிவ லிங்கத்தின் சார்பாகவும் வைகோமில் உள்ள ஆலயத்தில் உள்ள சிவ பெருமான் மூன்று வேளைகளிலும் மூன்று தோற்றங்களில் தோன்றி அருள் பாலிக்கின்றாராம். இப்படியாகத்தான் சற்று தள்ளித் தள்ளி அங்கு மூன்று சிவன் ஆலயம் வந்ததாகவும் கூறுகிறார்கள். 
எது எப்படியோ அந்த ஆலயம் , ராமாயண காலத்தை சேர்ந்தது என்பதினாலும் , பரசுராமர் நிறுவியது என்பதினாலும் அதற்க்கு முன்னரேயே  அதை அங்கேயே இராமாயண காலத்தை சேர்ந்த அசுரன் காரா வைத்து வழிபட்டதாகக் கூறுவதினாலும் நிச்சயமாக ஆலயம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். 

Sunday, July 11, 2010

Stories from Purana- 4

ஒரு புராணக் கதை - 4
நாரத  முனிவர்  தேவர்களை  காத்த  கதை.
சாந்திப்பிரியா
முன்னொரு காலத்தில் ஹுண்டா என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் மிகவும் பலசாலி. அவனை தேவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. அடிக்கடி தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை எழுந்து கொண்டே இருந்தது. ஒரு முறை ஹுண்டாவுக்கும்  தேவர்களுக்கும் எழுந்த சண்டையில் யுத்தம் பல வருடங்கள்  தொடர்ந்து நடந்தது. அதில் நஹுஷா தேவர்களுக்கு தலைமை தாங்கி யுத்தத்தை நடத்தினான். ஹுண்டா யுத்தத்தில் மரணம் அடைந்தாலும் அவன் மகன் அந்த யுத்தத்தை தொடர்ந்தான்.  அவனும் தந்தையைப் போல மகா பலசாலிதான்.  அது மட்டும் அல்ல தனக்கு இன்னும் அதிக சக்தி வேண்டும் என்பதற்காக கடுமையான தவத்தில் அமர்ந்து தன்னை எவரும் அழிக்க முடியாத சக்தியைப் சிவ பெருமானிடம் இருந்து பெற்றான். அவனை அழிக்க வேண்டுமானால் சிவபெருமானின் மனைவியான பார்வதியாலேயே முடியும் எனவும், அதுவும் அவன் சிவனின் காலடியில் பூஜை செய்யும்போது மட்டுமே  நடக்க முடியும் என்றவாறு வரம் பெற்றான். சிவனின் காலடியில் பூஜை செய்யும்போது யார் எதற்காக அவனுடன் போய் சண்டை போட முடியும் ? 
அதைக் கேட்ட தேவர்கள் பயந்து போய் நாரதரை அணுகினார்கள். ஆகவே அவனை எப்படி தோற்கடிப்பது என எண்ணிய நாரதர் ஒரு தந்திரம் செய்தார். விஷ்ணுவை ஒரு பெண் உருவில் சென்று ஹுண்டாவின் மகனை  மயக்கச் செய்தார். பெண் உருவில் இருந்த விஷ்ணுவை அவன் மணக்க விரும்பினான். விஷ்ணுவோ அவனிடம் ஒரு குறிப்பிட்ட மலரின் பெயரைக் கூறி அதை எடுத்து வந்து சிவபெருமானின் காலடியில் போட்டப் பின் அதை எடுத்து வந்து தனக்கு மாலை போட்டால்தான் அவனை மணக்க முடியும் எனக் கூறினார். அவனும் அவர் கூறிய மலரைத் தேடி இடம் இடமாக அலைந்தான். மலர் கிடைக்கவில்லை. 
அப்போது அவன் சுக்ராச்சாரியாரை சந்திக்க அவரும் அது மலரல்ல, பாற்கடலில் இருந்து வெளி வந்த விஷ்ணுவின் பரம பக்தையான ஒரு தேவதை எனவும், அவள் சிரித்தால் அவள் வாயில் இருந்து  விழும் வெள்ளை மலர்களே  அவை  எனவும், அழுதால் சிவப்பு மலர்கள் விழும் எனவும் கூறினார். ஆனால் விஷ்ணு கேட்டது வெள்ளை மலரல்லவா என யோசனை செய்தான். அவர் சென்றதும் நாரதர் அங்கு வந்தார். அந்த தேவதையை எப்படி பார்ப்பது என அவன் அவரிடம் கேட்க அவரும் அவள் ஹிமயமலையின் வாயில் இருப்பதாகவும் அங்கு செல்வது கடினம் எனவும், அவள் சிரிக்கும்போது விழும் மலர்கள் கங்கை நதியில் மிதந்து வரும் எனவும் சிவப்பு மலர்கள் சில மணி நேரத்தில் வெள்ளையாக மாறிவிடும் எனவும் கூற அதை நம்பியவன் கங்கை கரைக்கு சென்று அமர்ந்தான். அதற்குள் நாரதர் அந்த தேவதையிடம் சென்று விஷ்ணுவை ஒரு அசுரன் பெண் உருவில் மாற்றி விட்டான் என பொய் கூறினார். அதைக் கேட்ட அந்த தேவதை அழுது புலம்ப அவள் வாயில் இருந்து சிவப்பு மலர்கள் விழுந்தன. அதை எடுத்துக் கொண்டு சிவபெருமானின் இருப்பிடத்துக்குப் போனான். 
சிவனுக்கு வெள்ளை மலர்களைத் தவிர வேறு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பதை பார்வதி விரும்பவில்லை. ஆகவே அவள் அந்த அசுரன் சிவப்பு மலர்களைக் கொண்டு வருவது பிடிக்காமல் வெள்ளை பூக்களைக் கொண்டு சிவனுக்கு பூஜை செய்யத் துவங்கினாள். அசுரன் வந்தான். இன்னொரு பக்கத்தில் அமர்ந்து கொண்டு சிவப்புப் பூக்களை சிவன் பாதத்தில் போட்டு பூஜிக்க ஆரம்பிக்க  பார்வதி சிவப்பு மலர்களால் அவரை அன்று பூஜிக்கக் கூடாது என்றாள். அவனோ என்னும் சில மணி நேரத்தில் சிவப்புப் பூக்கள் வெள்ளையாகிவிடும் என்றான். ஆனால் அவ்ளோ அதை ஏற்கவில்லை. வாக்குவாதம் தொடர்ந்து   சண்டையில் முடிய கோபமடைந்த பார்வதியின் ஆயுதத்தினால் அவன் அங்கேயே கொல்லப்பட்டான். தேவர்கள் நாரத முனிவருக்கு நன்றி கூறினார்கள்.

Stories from Purana -3

ஒரு புராணக் கதை -3
விஷ்ணு ஹயகிரீவர் தலை பெற்ற கதை.
சாந்திப்பிரியா

முன்னொரு காலத்தில் ஹயக்கிரீவன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பெற்றிருந்த ஒரு சாபத்தின் காரணமாக அவன் தலை மட்டும் குதிரையின் தலையாக இருந்தது. அவன் கஷ்யபிரஜாபதியின் மகன் இன்று கூறுவார்கள். அவன் அசுரனாக இருந்தாலும் நல்லவனாகவே இருந்தான். ஒரு முறை அவன் சரஸ்வதி நதிக்கரைக்குச் சென்று தேவியை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்து தன்னை எவராலும் எளிதில் அழிக்க  முடியாத வரத்தை வேண்டிப் பெற்றான். அந்த வரத்தின்படி அவனை எவராலும் அழிக்க முடியாது. ஆனால் எவர் ஒருவருடைய தலை குதிரையாக உள்ளதோ அவரால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும்.  அதுவரை நல்லவனாக இருந்தவன் அந்த வரம் கிடைத்ததும் நல்ல குணத்தைத் துறந்தான். தேவர்களை கொடுமை படுத்தலானான். அனைவரையும் கொல்லத் துவங்க தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று அவரிடம் முறையிட்டனர். அவரும் தமது படையினருடன் சென்று அவனுடன் போர் புரிந்தார். ஆனால் அவனை அழிக்க முடியவில்லை. யுத்தம் பல ஆண்டுகள் தொடர்ந்தது. களைப்படைந்த தேவர்கள் தேவியிடம் சென்று வேண்டினர். அவளும் அவர்களுக்கு ஒரு வில் அம்பை தந்து அதை விஷ்ணு உபயோகிக்க வேண்டும் எனவும் அதை அவர் தன்னுடனேயே வைத்து இருக்க வேண்டும் எனவும் அவருடன் பக்கத்தில் ஒரு குதிரையும் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் எனவும் கூறினாள். அதன் பின் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறி அனுப்பினாள். அவர்களும் அதைக் கொண்டு போய் விஷ்ணுவிடம் தர அவர் வைகுண்ட  தீர்த்தத்தில் சென்று பத்மாசனத்தில்   அமர்ந்தவாறு  வில்லை  தலையில்  வைத்துக்  கொண்டு   உறங்கினார். அதுவே சமயம் என கருதிய தேவி கரையான்களை அழைத்து அந்த வில்லின் நாணை கடிக்குமாறு கூறினாள். அந்த கரையான்களும் அப்படியே செய்ய அந்த வில்லின் நாண் அறுந்து விஷ்ணு மற்றும் அவர் பக்கத்தில் இருந்த குதிரை தலைகளை அறுத்து விட இருவர் தலையும் பூமியில் விழுந்தது.  அதை எதிர்பார்த்து காத்திருந்த தேவி, அஸ்வினி குமாரர்களை அனுப்பி அந்த விஷ்ணுவின் உடலில் குதிரையின் தலையைப் பொறுத்துமாறு கூறினாள்.
அவர்களும் அதை செய்ய விஷ்ணு குதிரை தலையுடன் ஹயக்கிரீவராக மாறி  எழுந்தார். அந்த அசுரனைக் கொன்றார். அதன் பின் அவர் சிவ பெருமானைத் துதித்து தவம் இருந்து  தன்னுடைய பழைய தலையை மீண்டும் பெற்றார். விஷ்ணுவிற்கு குதிரைத் தலை வந்ததின்  முதல் காரணம் ஒருமுறை பிரும்மா கோபத்தில் விஷ்ணுவின் தலை மிருகத்தின் தலையாக மாற வேண்டும் என தந்த சாபத்தினால்தானாம்.
 ஹயக்ரீவரின் ஒரு ஆலயத்தின் தோற்றம்
படம் : http://en.wikipedia.org/wiki/File:Hayagreevar.jpg

Saturday, July 10, 2010

Danvanthari- Deity for Ayurvetha --17

ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -17

தன்வந்தரி - ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபதி
சாந்திப்பிரியா

தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் கதை என்ன ? அவர் ஒரு தேவர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார். 
     படங்கள் நன்றி:   http://en.wikipedia.org/wiki/Dhanvanta
 அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், ''நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் " எனக் கூறியப் பின் மறைந்து போனார். 
  படங்கள் நன்றிhttp://www.salagram.net/Dhanvantari.html
வெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் வம்சத்தில் அவர்களின் மகனாகப் பிறந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். ஒருமுறை தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழி மறைத்து தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது. ஆகவே கோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி தூர எறிந்தனர். அதைக் கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது. வாசுகி விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்தரியின் அனைத்து சீடர்களையும் விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்தரி ஆயுர்வேத மருந்து தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சி அடைந்தவர்களை எழச் செய்தார். அதைக் கேட்ட வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய வைக்க அப்போதும் தன்வந்தரி தமது மருத்துவ மகிமையினால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார். ஆகவே பாம்புகளுக்கு புரிந்தது தன்வந்தரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது என்பது. மானச தேவி அவரைப் பற்றிய விவரத்தைக் கேட்டு அறிந்ததும் அவர் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர், அவர் தேவர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு அவரை கைலாயத்துக்கு தாமே அழைத்துச் சென்றனர். 
           ஆலயத்தில் தன்வந்தரி தேவதையின் சிலை         
  படங்கள் நன்றி:   http://en.wikipedia.org/wiki/Dhanvantari
அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்தரியை தம்முடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக் கொள்ள தன்வந்தரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபரானார். விஷ்ணு தந்த வரமும் பலித்தது.  தன்வந்தரி தனது கையில் அமிருதக் கலசத்தை வைத்துக் கொண்டு உள்ளவாறு காட்சி தருகின்றார். ஸ்ரீரங்கத்து ரங்கஸ்வாமி ஆலயத்தில் அவருக்கு தனி சன்னதி உள்ளது. உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்தரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபாட்டு வருகின்றனர் எனக் கூறுகிறார்கள்.