Tuesday, December 28, 2010

Patti Ponnandaal sonna kuttik kathaigal - Part- 2

சாந்திப்பிரியா 

சூரிய பகவானை நமது வலது நேத்திரம் (கண்) இன்று கூறுவார்கள். அதைப் போலவே போல சந்திர பகவான் நமது இடது நேத்திரமாம். சூரிய பகவானின் சக்தி அபாரமானது. தினமும் எவன் ஒருவன் சூரியனைப் பார்க்காமல் உணவு அருந்துகிரானோ அந்த உணவு சாணியில் உள்ள புழுவிற்கு சமம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அதாவது சாணியே  ஒரு கழிவுப் பொருள், அதை சாப்பிடும்  பூச்சிகளை பற்றிக்  கூற வேண்டுமா?  அதனால்தான் அத்தனை கேவலமான பிறவி என்பதைக் கூற சாஸ்திரத்தில் அப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம் செய்யப்பட்டு உள்ளது.  சூரியனை ஆராதித்தால்  ஆரோக்கியம் மட்டும் அல்ல ஞானமும் ஐஸ்வர்யமும்  , நன்மைகளும் கூடும் என்பதே உண்மை. அதற்கு உதாரணமே இந்தக் கதைகள் .
வைசம்பாயனர் என்பவர் ஒரு முனிவர். அவருடைய சிஷ்யரே யாக்கியவால்யகர்.  ஒரு முறை  வைசம்பாயனர் நதியில் குளித்துவிட்டு வந்தபோது கால் தவறி அங்கு அமர்ந்து இருந்த சிறுவன் மீது மோதி விட்டார் . அவர் மோதிய அந்த அதிர்ச்சியில் அந்த சிறுவனும் மடிந்து விட்டான். ஆகவே அவருக்கு பிருமஹத்தி தோஷம் ஒட்டிக் கொண்டுவிட அதைக் கண்ட  யாக்கியவால்யகர் தனது குருவிடம் அந்த பாவத்தை தன்னால் போக்க முடியும் எனக்  கூறி அதை செய்ய அவரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அகம்பாவத்தில் இருந்த வைசம்பாயனர் தன்னை விட தனது சிஷ்யன் பெரிய ஆளாக தன்னை  காட்டிக் கொள்ள விரும்புகின்றார் என்று அவரைப் பற்றி தவறாக புரிந்து  கொண்டு கோபம் கொண்டார். அந்த நாள் வரை தான் கற்றுத் தந்து இருந்த அனைத்து வேத பாடங்களையும் அங்கேயே கக்கிவிட்டு தன்னை விட்டு விலகிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளை இட்டார்.
அதைக் கேட்ட யாக்கியவால்யகர் மனம் வருந்தினாலும், குருவின் ஆணைப்படி அவரிடம் பயின்ற  அனைத்து கல்வியையும் அங்கேயே கக்கி விட்டுச் சென்று ஒரு மலை அடிவாரத்தில் அமர்ந்துகொண்டு சூரியனை ஆராதனை செய்தார். பல வருடங்கள் அவர் செய்த ஆராதனையை  ஏற்றுக் கொண்டு சூரிய பகவானும் அவருக்கு கரை கண்ட வேத சாஸ்திர ஞானத்தைக் கொடுத்தார். அதன் பின் யாக்கியவால்யகர் அவரை எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு பெறும் பாண்டித்தியம் பெற்ற  முனிவராக மாறினார்.
இன்னொரு கதையும் மகாபாரதத்தில் உண்டு. மகாபாரத நிகழ்ச்சிகள்  நடந்து கொண்டு இருந்த வேளை. பாண்டவ சகோதரர்கள் வனவாசம் செய்ய காட்டுக்குள் வந்து விட்டார்கள். அவர்களில் ஒருவனான பீமனின் பசிக்கு எங்கிருந்து உணவை பெறுவது  என அனைவருக்கும் கவலை வந்து விட்டது. அப்போது அவர்கள் கிருஷ்ணரின் ஆலோசனையை ஏற்று சூரிய பகவானை தியானம் செய்தார்கள். அதைக் கண்டு மகிழ்ந்து போன சூரிய பகவானும் அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு அட்சய பாத்திரம்  ஒன்றை தந்துவிட்டுச் சென்றாராம். அதுவே துரியோதனனால்  ஏவப்பட்ட துர்வாச முனிவரின் வஞ்சக நோக்கத்தையும் முறியடிக்க உதவியாக இருந்தது .

Ponnaandaal patti sonna kuttik kathaigal - 1


சாந்திப்பிரியா 

அன்று  கிருஷ்ணபட்ச  பஞ்சமி . சிவ கைலாயத்தில் அம்மையும் அப்பனும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். அப்போது பார்வதிக்கு ஒரு விளையாட்டு ஆசை ஏற்பட்டது.  'தினமும் நாம்  அனைவருக்கும்  உணவு தருகின்றோம். ஒரு நாள் கொடுக்காவிடில் என்ன ஆகும். அவை  இன்று பட்டினியால்  கிடக்கட்டும் . நாளை பார்ப்போம்'  என எண்ணியவள் தனது அருகில் சென்று கொண்டு இருந்த சிறிய கருப்பு நிறத்தில் இருந்த எறும்புகளை பிடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டாள்.   மறுநாள்  அதைத் திறந்து பார்த்தாள். அவை அனைத்தும் அப்போதும் உயிருடன் இருந்தன. அதை விட ஆச்சர்யமாக எல்லாவற்றின் வாயிலும் சிறிது வெள்ளையாக உணவு ஒட்டிக் கொண்டு இருந்தது.   பார்வதிக்கு  ஒரே குழப்பம். அவைகளுக்கு எங்கிருந்து உணவு கிடைத்தது?  தான் தவறு செய்து விட்டோம் எனவும் அனாவசியமாக ஜீவராசிக்கு தொந்தரவு கொடுத்து விட்டோமே என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் தேட தானும் பட்டினி  இருந்து தபஸ் செய்யக் கிளம்பியபோது  எதிரில் பிள்ளையார் வந்து கொண்டு இருந்தார். அவர் வயிறு ஒட்டி உலர்ந்து வாடிப் போய் இருந்தது.  ஒரே நாளில் அவர் இளைத்து இருப்பதைக் பார்த்த பார்வதி கவலைப்பட்டு அதற்கான காரணத்தை அவரிடம் கேட்க பிள்ளையார் கூறினார் " அம்மா, நீங்கள் அந்த சிறு எறும்புகளைப் பட்டினி போட்டுவிட்டு எனக்கு மோதகமும் அப்பமும் வயிறு நிறையத் தந்தீர்கள்.  ஆனால் அந்த சிறு ஜீவராசிகள் பட்டினியினால் வாடுவதைப் பொறுக்க முடியாமல் நான் எனக்கு நீங்கள் தந்த உணவை சாப்பிடாமல் அவைகளுக்குக் கொடுத்து விட்டேன்" என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்து போன பார்வதி தனது தவறை உணர்ந்தாள். ஆனாலும் அந்த சம்பவம்  மூலம் இந்த உலகுக்கு ஒரு சேதி கிடைத்ததே என எண்ணி  தனது பிள்ளைக்கு ஒரு ஆசிர்வாதம் தந்தாள். "இன்று இந்த அறிய செயலை நீ செய்ததினால் இன்று முதல், அதாவது ஒவ்வொரு கிருஷ்ணபட்ஷ சதுர்த்தியிலும் தமது சங்கடங்களை விலக்கிக் கொள்ளும் நாளாக பக்தர்கள் உனக்கு பூஜை செய்து வழிபடுவார்கள்.  அதுவே சங்கடஹர  சதுர்த்தி என அழைக்கப்படும். அன்று உன்னை பூஜிப்பவர்களுக்கு பெறும் நன்மை உண்டாகும் " ஆகவேதான் அந்த கருப்பு எறும்புகளுக்கு பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது.

Sunday, December 5, 2010

Arthanareeswarar

அர்த்தநாரீஸ்வரர்
சாந்திப்பிரியா 
அர்த்தநாரீஸ்வரர் என்றால் பாதி  ஆண் மற்றும் பாதி பெண் உருவில் உள்ள ஈஸ்வரர் என்று அர்த்தம்.  ஒரு முறை சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையே கருத்து வேற்றுமை தோன்றியது. பார்வதிக்கு ஏற்பட்ட கோபம் என்ன என்றால் சிவனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் தம்மையும் வணங்குகையில் முனிவர்கள் மட்டும் சிவபெருமானை வணங்கிவிட்டுச் செல்கிறார்களே, அது தன்னை அவமதிப்பது போல உள்ளது. ஆனாலும் அதைப் பற்றி சிவபெருமான் கவலைப்படுவது இல்லையே என்பதே. அவளுடைய கருத்து என்ன என்றால் உலகில் உள்ள அனைத்து ஜீவா ராசிகளுமே ஆண் -பெண் உறவில் ஏற்பட்டவையே.  பெண்  இன்றி   ஆணால்  மட்டுமா ஜீவராசிகளை படைக்க முடியும்?  ஆக ஆணும் பெண்ணும் சமம் அல்லவா என்பதினால்  ஆணாக உள்ள சிவனை வணங்குபவர்கள், அவருடைய பத்தினியான தன்னையும் வணங்க வேண்டும். அப்படி செய்தால்தான் அவர் வருபவர்களுக்கு வரம் தர வேண்டும் என கூறினாள்.  அந்தக் கூற்றை ஏற்காத சிவனோ  உலகப் பற்றுதல் இல்லாத முனிவர்கள் மட்டுமே அப்படி செய்கிறார்கள், அவர்கள் கண்களில் சிவத்தை தவிற வேறு எதுவும் தெரிவதில்லை, உலக சக்தியே தான் மட்டுமே என அவர்கள் எண்ணுகையில் தாம் என்ன செய்ய முடியும் எனக் கூறிவிட்டார். அப்போது அங்கு வந்த பிருகு முனிவரும் சிவனை மட்டுமே வணங்கிச் சென்றுவிட அதைக் கண்டு கோபமுற்ற பார்வதி தன்னுடைய  சக்தியை சிவனுக்குக் காட்ட அந்த முனிவரை சதை இல்லாத பிண்டமாக ஆகுமாறு சபித்து விட தன சக்தியைக் காட்ட எண்ணிய சிவன் அந்த முனிவருக்கு தன்  கையில் இருந்த தடியைத் தூக்கிப் போட்டார். அந்த சதை இல்லாத பிண்டமும் அந்தக் கழியை பிடித்துக் கொண்டு நடந்தே சென்றது.
அதைக் கண்டு பார்வதி அவமானம் அடைந்தாள். தானும் சிவனுக்கு நிகராக சக்தி பெற்றவளே,  உலகமே ஆண் பெண்ண உருவரின் அங்கமாக இருக்கையில் சிவன் மட்டும் அதை ஏற்க மறுப்பது ஏன்  என எண்ணி அது குறித்து பிரும்மாவிடம் யோசனைக் கேட்க அவரோ அவளை சதுரகிரி மலைக்குச் சென்று சிவபெருமானையே துதித்து தவம் இருந்து அவரின் உடலில் தானும் பாதியாக வேண்டும் என வரம் கேட்குமாறு யோசனைக் கூறினார். அப்படி அவள் சிவனின் பாதியாகி விட்டால்  அவர் உண்மையை புரிந்து கொள்வார் எனக் கூற பார்வதியும் அது போலவே சதுரகிரிக்குச் சென்று சிவபெருமானை துதித்து தவம் இருக்க அவர் முன் தோன்றிய சிவனிடம் அவர் உடலில் தானும் பாதியாக வேண்டும் என வேண்டிக்கொள்ள வேறு வழி இன்றி சிவபெருமானும் அவளை தன்  உடலில் பாதியாக ஏற்றுக் கொண்டு அங்கேயே சிவ லிங்க வடிவில் அர்த்தநாரீஸ்வரராக அமர்ந்தாராம். அதன் பிறகே அவர் சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டாராம்.  இப்படி ஒரு கதை உள்ளது.
அர்த்தநாரீஸ்வரர் குறித்து கூறப்படும் இன்னொரு கதை என்ன என்றால் ஒரு முறை தேவலோகத்தில் சிவனும் பார்வதியும் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு இருக்கையில் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பார்வதி மூடி விட்டாள். அதனால் அந்த நேரத்தில் உலகம் இருண்டது. பூமி உலர்ந்தது, ஜீவராசிகள் அழியத் துவங்கின. ஆகவே கோபமுற்ற சிவ பெருமான் பார்வதியை விட்டுப் பிரிந்தார். மீண்டும் தன்னுடன் அவள் இணைய வேண்டும் எனில் அவளை இமயமலையில் சென்று தவம் இருக்குமாறு கூறிவிட்டார். அங்கு பல காலம் தவம் இருந்த பார்வதிக்கு காட்சி தந்த சிவபெருமான் அவளை மீண்டும் காசி நகருக்குச் சென்று அங்கு விஸ்வனாதராக உள்ள தன்னை வேண்டிக் கொண்டு தவம் இருக்குமாறு கூறிவிட்டு மறைந்து விட்டார். பார்வதியும் காசிக்குச் சென்று சிவனை வேண்டி தவம் இருக்க அவளுக்குக் காட்சி தந்த  சிவனும்  மீண்டும் அவளை திருவண்ணாமலைக்கு சென்று தவம் இருக்குமாறுக் கூறினார். பார்வதியும் சளைக்கவில்லை. தான் அவருடன் இணைவது மட்டும் இல்லாமல் அவருடைய சக்தியின் பாதியாக வேண்டும் என்ற  திடமான  எண்ணத்தில் திருவண்ணாமலைக்கு சென்று இன்னமும் கடுமையாகத் தவம் செய்தாள். அவள் தவத்தை மெச்சிய சிவனும் அங்கேயே அவளுக்குக் காட்சி தந்து அவளை தன் உடலில் பாதியாக ஏற்றுக் கொண்டாராம். அதனால்தான் அவர் அர்த்தநாரீஸ்வரராக ஆனார் என்றும் ஒரு கதை உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் படைப்பு தோன்றியது குறித்து கூறப்படும் கதைகளில் சில  இவை. சிவன் திருவண்ணாமலையில் அல்ல கொங்கு நாட்டில்தான் தவத்தில் இருந்த பார்வதிக்கு தரிசனம் தந்து அவளை தன் உடலில் பாதியாக ஏற்றார் என்ற மூன்றாவது கதையும்  உள்ளது. 
திருச்செங்கோட் அர்த்தநாரீஸ்வரர் ஆலய செய்தி 
 அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்
அதனால்தான் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரருக்கு அம்மையப்பன் என்ற பெயரில் அற்புதமான ஒரு ஆலயம் அமைந்து உள்ளது. அர்த்தநாரீஸ்வரருக்கு உலகில் வேறு எங்குமே தனியான ஆலயம் இல்லை, இங்கு மட்டுமே உள்ளது என்பதே அந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும்.
இங்குள்ள  ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த ஆலயம் உள்ள இடமான திருச்செங்கோடு எழுந்த வரலாறும் சுவையானது.
ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரர்
இந்த ஆலயத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர்  மூலவர் திருவுருவம் கற்சிலை இல்லை என்றும் அதுவும் பழனி மலையில் செய்யப்பட்டு உள்ள நவபாஷண  முருகனைப் போன்றே இங்கு சித்தர்களால் வெண்பாஷணம் என்று அழைக்கப்படும் நச்சுத்தன்மை உடைய பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். இந்த பாஷாணமானது வெண்குஷ்டம் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையதாம் . ஆகவே இங்குள்ள மூலவருக்கு செய்யப்படும் அபிஷேக நீர் மற்றும் மூலவரின் பாதத்தில் இருந்து விழும் சுனை நீர் தீர்த்தம் போன்றவற்றை தொடர்ந்து பருகி வந்தால் மருத்துவர்களால் குணமாக்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன என்று மக்களால் முழுமையாக நம்பப்படுகிறது. மிகப் பழமையான சிலை என்பதால் தொடர்ந்து அபிஷேகம் செய்து வருவதினால் சிலையின் உருவம் சற்றே மாறி வருகிறதாம். ஆகவேதான் தற்சமயம் மதியம் ஒருவேளை மட்டுமே பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது இடது பாதி புடவையுடனும் வலது பாதி வேஷ்டியுடனும் அர்த்தநாரீஸ்வரர் உருவில் அலங்காரம் செய்யப்படுகிறது. 
 ஆலயத்தில் பிரதோஷ்ட  காலத்தில் செய்ய வேண்டிய பிரதர்ஷன முறை
அர்ச்சனையின் போது உச்சரிக்கப்படும் ஸ்தோத்திராவளி எனும் நாமம் எங்கும் இல்லாத புதுமையாய் ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் ஆராதிக்கப்பட்டு அர்ச்சிப்பது இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். சுமார் 350 ஏக்கர் நிலபரப்பில் கடல் மட்டத்திற்கு மேல் 2000 அடிகளை உடைய இத்திருமலை கோவிலானது கோவில் அடிவாரத்திலிருந்து 650 அடி உயரத்தில் 1206 படிகளை உடையது. இந்தத் தளம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார ஸ்தலமாகும்.
தனது இணையதளத்தில்  இருந்து படங்கள் அனைத்தையும் எடுத்து பிரசுரித்துக் கொள்ள அனுமதித்த    www.arthanareeswarar.com இணையதளத்துக்கு நன்றி.
ஆலயத்தில் உள்ள நாக பள்ளம்
இந்த ஆலயத்தின் மேலும் பல விவரங்களையும், புகைப்படங்கள், பிறச் செய்திகளை படித்து மகிழ கீழ் கண்ட இணையதளத்தில் சென்று பார்க்கவும். http://www.arthanareeswarar.com/Tamil

Saturday, December 4, 2010

Updated Version - Galli Anjineyar Temple, Bangalore

கல்லி ( காற்று ) ஆஞ்சநேய ஆலயம்
சாந்திப்பிரியா

சமீபத்தில் கல்லி ஆஞ்சநேயர ஆலயத்தைப் பற்றிய மேலும் சில விவரங்களும் ஆலய கட்டிட அமைப்பைப்  பற்றியும் கிடைத்த தகவல்கள் இதோ கீழே உள்ளது.
எந்த ஆலயத்திலுமே நுழைந்தால் ஏதாவது ஒரு ஸ்வாமியின்  சிலை கண்களில்  தெரியும் நிலையில் சன்னதி காட்சி அளிக்கும். ஆனால் இந்த ஆலயத்திலோ சாலையில் அமைந்து உள்ள நுழைவாயில் மூலம் உள்ளே நுழைந்தால் ஹனுமாரின் சன்னதி உள்ள அறையின் பின் பக்க சுவரே காணப்படுகின்றது. வேறு எந்த சுவாமியின் சன்னதியோ அல்லது சிலையோ வாயிலில் தெரிவது இல்லை. 
ஆலயத்தில் சனிக்கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றது. பலரும் தத்தம் வேண்டுதலுக்கு ஏற்ப வெற்றிலை மாலை மற்றும் குறிக்கோள்களைக் கொண்ட காகித மாலைகளையும் ஹனுமாருக்குப் படைக்கின்றார்கள்.  ஹனுமார் சுமார் பத்து அடிக்கும் மேல் உயரமாக இருக்கின்றார். ஒரு பெரிய பாறையில் அவர் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. 
ஹனுமார் சன்னதிக்கு எதிரில் இடதுபுறம் காணப்படும் சன்னதியில்  ராமர், சீதை, லஷ்மணர் என அனைவரும்  நின்று கொண்டு இருக்க எப்போதும் போல ஹனுமார் ராமரின் பாதத்தடியில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். அங்குதான் உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றன. அது போலவே ஹனுமார் சன்னத்க்கு எதிரில் வலதுபக்கம் காணப்படுவது மிகப் பெரிய அளவிலான வெங்கடாசலபதி. இவற்றை தவிர்த்து அந்த ஆலயத்தில் நுழைந்ததுமே வலதுபுறத்தில் உள்ள சன்னதியில் நவகிரகங்கள் காணப்படுகின்றன. அந்த நவக்கிரஹ  சன்னதிக்குள் ஒரு மூலையில் இருபக்க சுவர்களையும் தொட்டவாறு குறுக்காக குறுக்குவாட்டில் ராகு கேது பகவான்கள்  உள்ளனர் (நவக்கிரஹங்களைத் தவிர  ) . நவக்கிரகங்களில் உள்ள ராகு கேதுவைத் தவிர எதற்காக அந்த தனி  பீடம் அவர்களுக்கு உள்ளது என்பது தெரியவில்லை என்றாலும் பெரும்பாலான பெங்களுர் ஆலயங்களில் நவக்கிரகங்களைத் தவிர ராகு கேதுவிற்கு தனிச் சன்னதிகள் உள்ளதைப் போலவே இங்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கலாம். 
ஆலயத்தின்  வரைபடம்  இது . அதை பெரிய அளவில் காண  படத்தின் மீது கிளிக் செய்யவும்  :-
முன்னர் நான் தந்திருந்த செய்தியின் சாரம் இது.
செப்டம்பர் மாதம் இருபத்தி ஐந்தாம் தேதியன்று மாலை சுமார் இரண்டு மணி நேரம் திடீரென பெய்த பெரு மழையினால் பெங்களுர் நகரில் பல இடங்களில் தண்ணீர் புகுந்தது. அதில்  மைசூர் செல்லும் சாலையில் உள்ள கல்லி ஆஞ்சேநேயர் ஆலயமும் ஒன்று. கல்லி என்றால் கன்னடத்தில் காற்று எனப் பொருள். அவர் காற்றுப் போல பறந்து வந்து துயர் தீர்ப்பவர்  என்பதினால் கல்லி ஆஞ்சினேயர் என்றும், வாயுவின் புதல்வர் என்பதினாலும் காற்று ஆஞ்சேநேயர் என்கிறார்கள். பெங்களுர் மற்றும் மைசூர் சாலையில் யஸ்வந்தபுரம் நோக்கிச் செல்லும் நெடும் சாலையில் அந்த ஆலயம் உள்ளது.
விஜயநகர மன்னர்கள் கர்நாடகத்தில் உள்ள பகுதிகளை ஆண்டு வந்தபோது மைசூர் செல்லும் பாதையில் உள்ள சென்னப்பட்டினா என்ற ஊரில் பிறந்த யதிராஜா என்பவர் சன்யாசத்தை ஏற்று வியாசராய என்ற பெயர் பெற்று பெரும் முனிவராக வாழ்ந்து வந்தாராம். அவர் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர மன்னனின் ராஜ குருவாக இருந்தவர். அவர் ஹனுமான் உபாசகர்.  அதனால் அவர் கர்நாடகத்தில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஆஞ்சேநேயர் ஆலயங்களை பல இடங்களிலும் நிறுவி உள்ளார். அவர் மலைப் பகுதிகளிலும், பாறைகளிலும்  ஹனுமானின் சிலைகளை செதுக்கச் சொல்லி அவற்றை அங்காங்கே பிரதிஷ்டை செய்து இருக்கின்றார் என்கிறார்கள் . அவர் நிறுவி உள்ள ஆலயங்களில் உள்ள அனைத்து ஹனுமாரின் சிலைகளிலும் ஹனுமாரின் கை ஒன்று தூக்கி உள்ளபடியும், வால் வளைந்து வளைந்து தலைக்கு மேல் சென்று சற்று சுருண்டு இருக்கும்.  வாலின் நுனியில் ஒரு மணியும் கட்டப்பட்டு இருக்கும். அதுவே அவர் நிறுவிய ஹனுமான் என்று புரியும் என்று நம்புகிறார்கள். கிருஷ்ணகிரியில் உள்ள  காட்டு வீர ஆஞ்சினேயர் ஆலயத்தில் உள்ள சிலையும் அது போலவே  அமைந்து உள்ளது.
 அதே ஹனுமானின் இன்னொரு பக்கத் தோற்றம் 
முன்னர் இப்போது ஆலயம் உள்ள இடத்தில் ஓடிக்கொண்டு இருந்த   யதுர்முக்தி மற்றும் பஷ்சிமவாகினி என்ற இரண்டு நதிகள் கலந்த இடத்தில் ஆலயத்தை அவர் நிறுவினாராம். ஆலயத்தை அவர் கட்டியது இல்லை, ஹனுமான் சிலைகளை கண்டறிந்து அல்லது சிலை வடிவமைக்கச் சொல்லி அவற்றை பிரதிஷ்டை செய்து அங்காங்கே வழிபாடுகளைத் துவக்கினார் என்கிறார்கள்.
 
அதே ஹனுமானின் இன்னொரு தோற்றம்
இந்த கல்லி ஆஞ்சேநேயர் ஆலயத்தில் உள்ள ஹனுமானின் சிலை அந்த இடத்தில் நதியில் கிடைத்ததாம். அது எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆகவே அதை தலை கூரை இல்லாத அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தாராம்.  இந்த ஆலயத்தில் உள்ள ஹனுமானின் சிலையில் அவருக்கு மீசை உள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும். ஹனுமானை எந்த இடத்திலும் இந்த கோலத்தில் பார்ப்பது அரிது. வளைந்து வளைந்து தலைக்கு மேல் செல்லும் அவருடைய  வால் நுனி சுருண்டு சக்கரம் போல உள்ளது. அதில் ஒரு மணியும் கட்டப்பட்டு உள்ளது போல காட்சி தருகின்றது. வெற்றியைக் குறிப்பது போல மேலே  ஏந்தி உள்ள ஒரு கை அபய முத்திரையைக் காட்ட,  மற்றொரு கை தாமரை மலரை ஏந்தி உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள ஆஞ்சினேயரை யதுரமுகி ஆஞ்சினேயர் என்றும் கூறுகிறார்கள். அவருடைய முகம் சிந்தூரினால் ( ஆரஞ்சு வண்ணச் சிவப்பு) பூசப்பட்டு உள்ளது. 
ஆலயத்தில் நுழைந்தாலே ஒருவரது மனதில் அமைதி கிட்டும், மனம் சாந்தி அடையும். மேலும் அவரை அந்த ஆலயத்தில் சென்று வேண்டிக் கொண்டால்  நினைத்தது நடக்கும், ஆபத்துக்கள் விலகும், காரிய சித்தி கிடைக்கும் என்கிறார்கள்.