Monday, January 31, 2011

Kathaayee Amman

சித்தாடி காத்தாயி அம்மன்
சாந்திப்பிரியா 


பலருக்கும் சித்தாடி  காத்தாயி அம்மன் குல தெய்வம்.  அவள் முருக பெருமானின் மனைவியான  வள்ளி  தேவியாவார் .  நன்னிலத்தின் அருகில் சித்தாடி என்ற கிராமத்தில் அமர்ந்து உள்ள காத்தாயி  தன்னை வணங்கி நிற்கும் தமது குலமக்களை என்றென்றும் காத்து  நிற்கின்றாள். தன்னை வணங்கி நிற்பவர்களை கரை ஏற்றுகிறார். அவள் பெருமையைக்  நிற்காமல் கூறிக் கொண்டே இருக்கலாம் என்ற அளவுக்கு அவளால் பல குடும்பங்கள் நன்மை அடைந்து உள்ளன.   அவள் மகிமைகளை சுற்றி உள்ள  கதையை விரைவில் எழுத உள்ளேன்.  திருவாரூர் மாவட்ட குடவாசல் வட்டத்தில் உள்ள சித்தாடி கிராமத்தில் அந்தக் காத்தாயி குடி கொண்டு உள்ள ஆலயத்தில் வரும்  பிப்ருவரி மாதம் மூன்றாம் தேதி முதல் ஆறாம் தேதிவரை ( 03 .02 .2011 முதல் 06 .02 .2011 வரை ) சதா சண்டி மகாயாக ஹோமம் , மற்றும் பல பூஜைகளும் நடக்க  உள்ளன. 
 படித்த பண்டிதர்கள்  கூறுகிறார்கள்  " குலதெய்வம் இல்லையேல் பிற தெய்வமும்  இல்லை ". ஆகவே குல தெய்வத்தை வணங்காதவனை வேறெந்த தெய்வமும்  காப்பதும்   இல்லை என்பது உண்மை. சித்தாடியை குல தெய்வமாக வணங்குபவர்கள் மட்டும் அல்ல அனைத்து முருக பெருமானின் பக்தர்களும் அவருடைய மனைவியான வள்ளி என்ற கத்தாயியின் ஆலயத்தில் இந்த நேரத்தில் நடைபெறும்  அந்த ஆலய விழாவில் பங்கு கொள்ள முடியவில்லை என்றாலும்   வருடத்தில் ஒரு முறையாவது தம்மால் ஆன பொருளுதவியை ஆலய பணிக்கு என  'ஸ்ரீ காத்தாயி அம்மன் பக்தஜன டிரஸ்டிற்கு'  அனுப்பி ஆலயம் இன்னமும் நல்ல முறையில் சீரமைக்கப்பட   உதவுமாறு  காத்தாயி  குடும்பத்தினரான நான் அனைவரையும் வேண்டுகிறேன். 
ஆலய விழாவின் அழைப்பிதழ் கீழே  தரப்பட்டு  உள்ளது. பத்திரிகை மீது கிளிக் செய்து அதை பெரியதாக்கி படிக்கவும்.

Thursday, January 27, 2011

Spiritual Masters

ஆன்மீகவாதிகளின் லட்ஷணத்தை அடையாளம் காட்டும் இந்த கட்டுரை ( நன்றி : http://knowingyourself1.blogspot.com/search/label/வாழ்கை தத்துவம் ) அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று -       சாந்திப்பிரியா 
 
ஆன்மிக துறவிகளின் அடையாளம்


1. சாதி, மதம், சமயம், தேசம், மொழி, இன, வேறுபாடுகள் எதுவும் இருக்கக் கூடாது.

2 . மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கனவிலும் இருக்கக் கூடாது.

3 . எல்லா ஜீவர்களிடத்தும் தயவும், மெய்ப்பொருளின் (கடவுள்) இடத்தில் அன்பும் இருக்க வேண்டும்.

4. தம் உயிர் போல் எல்லா உயிர்களையும் ஒன்று என என்ன வேண்டும்.

5. ஆன்மநேய ஒருமைப்பாடு எக்காலத்தும் விலகாமல் இருக்க வேண்டும்.

6. ஆகாரம், மைத்துனம், நித்திரை, பயம் இவை நான்கும் இருக்கக் கூடாது.

7 . பஞ்ச பூத உணவுகள் எதுவும் புசிக்கக் கூடாது. ஏக தேசத்தில் கொள்ளலாம்.

8. அருள் என்ற அமுதம் ஆன்மாவில் சுரக்கும் அதைத்தான் சுவைக்க வேண்டும்.

9. நரை, திரை, பிணி, மூப்பு இவைகள் எதுவும் இருக்க கூடாது.

10. கடவுள் ஒருவரே! அவர் ஒளியாக இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து இருக்க வேண்டும்.

11. ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதை கடை பிடிப்பவராக இருக்க வேண்டும்.

12. தனக்கென்று வீடு, ஆசிரமம், மடம், குடில், ஆலயம் போன்ற எந்த வசதியும் இல்லாது இருத்தல் வேண்டும்.

13. யோகம், தவம், தியானம், வழிபாடு என்பவை யாவும், உடற் பயிற்சியே தவிர கடவுளை காணும் வழிபாடு அல்ல என்பதை மக்களுக்கு போதிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

14. தான் அணியும் ஆடை ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாது.

15. காவி உடை உடுத்தவே கூடாது, காவி உடை உடுத்துபவர் கடின சித்தர்களாவர். ஆதலால் வெண்ணிற ஆடையைத் தான் உடுத்த வேண்டும். வெண்ணிற ஆடை தயவின் அடையாளமாகும்.

16. தன் உடம்பில் ஆடையை தவிர வேறு எந்த அணிகலன்களும் வேறு எந்த பொருளும் அணியவோ தொடவோ கூடாது.

17. சமய, மத சின்னங்கள் எதுவும் உடம்பில் இருக்கக் கூடாது.

18. எதிலும் பொது நோக்கம் தேவை.

19. எந்த உருவத்தையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது. பாத பூசை எதுவும் செய்யக் கூடாது, ஏற்றுக்கொள்ளவும் கூடாது.

20. மரணத்தை வெல்லும் முயற்சியில் இருக்க வேண்டும்.

21. மறு பிறப்பு என்ற நிலையில் வாழ கூடாது.

22. ஒழுக்கம் முக்கிய தேவையாகும்.
      1. இந்திரிய ஒழுக்கம்
      2. கரண ஒழுக்கம்
      3. ஜீவ ஒழுக்கம்
      4. ஆன்மா ஒழுக்கம்
      இவை நான்கும் எவரிடத்தில் முழுமைப் பெற்று இருக்கிறதோ அவரையே துறவியாக ஏற்றுக்கொள்ளலாம். (இதை இன்னும் விரிக்கில் பெருகும்).

மேற் கூறிய கட்டளைகளை யார் கடைப்பிடித்து வாழ்கிறார்களோ அவர்களை துறவி (ஞானி) என்று ஏற்றுக் கொள்ளலாம். அப்படி வாழ்ந்தவர்தான் நம் தமிழ் நாட்டில் தோன்றிய அருட் பிரகாச வள்ளலார் என்பவராகும்.
 

Wednesday, January 26, 2011

Nilal sevai amaippu

நிழல் சேவை அமைப்பு 
நல்ல காரியங்கள் போற்றப்பட வேண்டும் 
சாந்திப்பிரியா   

திரு மோகன் சுரேஷ் என்பவர் எனக்கு தவறாமல் சில கடிதங்களை அனுப்பி வருகிறார். அவற்றில் வள்ளலார் பற்றிய செய்திகள் அதிகம். ஆனால் அவை அனைத்தும் முத்தானவை...சத்தானவை.  அவர் யார்?  2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிழல் சேவை என்ற அமைப்பை  பாட்மிண்டன் விளையாட்டு வீரர்கள்,  வேளாண்மை துறை நண்பர்கள், சேலம் மற்றும் தென் இந்திய  வங்கியில் பணி புரிபவர்கள் போன்ற நண்பர்களுடன் சேர்ந்து இரத்த தான சேவை, அதை ஊக்குவிப்பது,  முதியோர் இல்லம் மற்றும் அனாதைகளின் இல்லங்களுக்கு உதவுவது,  உபயோகித்த துணிமணிகளை நண்பர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு ஏழை எளியவர்களுக்குத் தருவது போன்ற நல்ல காரியங்களை செய்து வருகிறார். அவர்களுடைய இந்த சேவை பாராட்டப் படவேண்டியது. 
நீங்களும் உங்கள் பிறந்தநாள், மற்றும் பண்டிகை தினங்களில் அவர்கள் மூலம் ஏதாவது ஒரு இல்லத்திற்கு தானம் தரலாமே! அவர்களின் விலாசம்:
Reg.No.997/24.09.2010 
நிழல் சேவை அமைப்பு
No.4/42. குருக்கள் காலனி    ,
சின்னத்திருப்பதி  , சேலம்  – 636 008.
Web :http://www.nilal.in/,http://nilalteam.blogspot.com/ Email :nilalsevaiamaippu@yahoo.com
Cell : 09779556243, 9944022441, 9894494959
 
திரு மோகன் சுரேஷ்  இணையதளத்தில் (http://knowingyourself1.blogspot.com/2011/01/blog-post_18.html) இருந்து எடுத்த அற்புதமான ஒரு கட்டுரையை கீழே வெளியிட்டு உள்ளேன். இதன் கருத்து ஆழமானது . படித்து மகிழுங்கள்.

யார் பெரிய துறவி?

ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சருடன் செல்வந்தர் ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர், “சுவாமி, கடவுளுக்காகத் தங்களுடைய வாழ்க்கையையே துறந்து விட்டீர்களே?!” என்று நக்கலாகக் கேட்டார்.
அதற்கு ராமகிருஷ்ணர் புன்னகையுடன், “நான் ஒரு துறவியாக இருக்கலாம். ஆனால் என்னைவிட பெரிய துறவி நீங்கள்தான்!” என்று கூறினார்.
இதைக் கேட்ட செல்வந்தருக்கு தூக்கிவாரிப் போட்டது. “உங்களை விட நான் பெரிய துறவியா? எப்படி?!” என்று திகைப்புடன் கேட்டார்.
ராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, “ஐயா, நானோ கடவுளுக்காக என்னுடைய வாழ்க்கையைத்தான் துறந்தேன். ஆனால் நீங்களோ, சுகபோக வாழ்க்கைக்காக கடவுளையே துறந்து விட்டீர்களே…. எனவே, என்னைவிட நீங்கள்தான் பெரிய துறவி!” என்றார்.
இதைக் கேட்டதும் செல்வந்தர் வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டார்.

Wednesday, January 12, 2011

Nellitheertham - Somanatheeswarar

சாந்திப்பிரியா 


கர்நாடகத்தில் தெற்கு கானரா  மாவட்டத்தில் உள்ள மிகவும் பழைமையான குகை ஆலயமே நெல்லி தீர்த்தம்.  ஆன்மீகவாதிகளுக்கு மட்டும் அல்ல இயற்கை அழகை ரசிக்க விரும்புபவர்களுக்கும் அந்த இடம் ரம்யமானது. 
இந்த ஆலயத்தில் உள்ள மூல தெய்வம் சோமனதீஸ்வரா என்ற சிவன் அவரைத் தவிர  மஹா கணபதி மற்றும் ஜாபாலி முனிவரின் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் துளு நாட்டு வழக்கப்படி அந்த ஆலயத்தில் சில பூத கணங்களும் வைக்கப்பட்டு உள்ளன. அந்த ஆலயத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரராக கருதப்படும் சிவபெருமானின் சிலை சாலிகிராமக்கல் என்கிறார்கள். . ஆலயம் அமைந்து உள்ள இடம் ஒரு குகை ஆகும். ஆலயம் கி.பீ. 1487 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது என்கிறார்கள்.  காட்டுப் பகுதியில் கவனிப்பார் அற்று அமைந்து இருந்த அந்த குகை ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல அழியத் துவங்க  பின்னர் அந்த ஆலய மகிமையை கேள்விப்பட்ட பக்தர்களின் முயற்சிகளினால்  மீண்டும் அது  புதுபிக்கப்பட்டுள்ளது. 
ஆலயத்தின் வடக்குப் பகுதியில் நாகப்பா கரே அதாவது பாம்புக் குளம் என்ற ஒன்று உள்ளது. அதில் குளித்தப் பின்னர்தான் பக்தர்கள் அந்த குகைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.  நெல்லிதீர்தத்தைப் பொறுத்தவரை அது அனைவருக்கும் பொதுவான ஆலயம். ஜாதி பேதம் இன்றி அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர்.  எவராக இருந்தாலும் அவர்களின் வயது ஐந்துக்கு மேல் இருக்க வேண்டும் என்பது விதிமுறை.
பக்தர்கள் குளித்துவிட்டுச் செல்லும் காட்சி
அந்த ஆலயத்துக்குள் செல்வது அத்தனை எளிதான காரியம்  அல்ல. சுமார் நானூறு மீடர் நீளத்திற்கு குகைக்குள் செல்ல வேண்டும். உள்ளே செல்லச் செல்ல பாதை குறுகிக் கொண்டே போகின்றது. ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் நாம் குனிந்து கொண்டும் தவழ்ந்து கொண்டும்தான் உள்ளே செல்ல முடியும். ஒருமுறை உள்ளே சென்றுவிட்டால் அந்த குகைக்குள் மணல் பரப்பு உள்ளதைக் காணலாம். அந்த மணல் இயற்கையாக ஏற்பட்டதாம். மருத்துவக் குணம் கொண்டது என்பதினால் பலரும் அதை பிரசாதமாக எடுத்து வருகிறார்கள்.  அதன் நடுவில் உள்ள ஒரு குளத்தில் சிவலிங்கம் உள்ளது. 
நெல்லிதீர்த்தம் என்று அதன் பெயர் வரக் காரணம் என்ன? ஒரு நெல்லிக்காய் அளவில் எங்கிருந்தோ சுரந்து வரும் தண்ணீர் அந்த குகைக்குள் விழுந்து கொண்டே இருப்பதினால் அதன் பெயர் நெல்லி தீர்த்தம் என ஆயிற்று. ஆலயம் அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம்வரை மட்டுமே திறந்து இருக்கும்.  மற்ற  மாதங்களில்  ஆலயத்துக்குள் ரிஷி முனிவர்கள் சென்று தவம் செய்வதினால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது , அந்த காலகட்டத்தில் அந்த குகைக்குள் உள்ள வவ்வால்கள், தேள் , பூரான்கள் போன்ற பூச்சிகள் அதிக அளவில் வெளிவருவதினால் அவற்றுக்கு மனிதர்களினால் எந்த தொந்தரவும் ஏற்படக் கூடாது போன்ற  ஐதீகத்தினால் அது மூடப்பட்டு வைக்கப்படுகின்றது.  மேலும் அந்த குகைக்குள் உள்ள குளத்து நீர் மெல்ல மெல்ல வற்றிவிடுவதினால் அதில்  மீண்டும் தண்ணீர் நிரம்ப ஆறு மாதம் தேவைபடுகிறது என்பதினாலும் அது மூடப்பட்டு உள்ளது. இவை அனைத்துமே வாய் மொழி செய்திகள்தான்.
ஆலய வரலாறு
 கலி யுகம் துவங்கியபோது உலகில் அதர்மம் தலை விரித்து ஆடியது. பரசுராமர்  ஷேத்திரத்தில் கொள்ளை, கோளை, திருட்டு, வன்முறை என அனைத்தும் மிக அதிக அளவில் நடைபெறத் துவங்க அதைக் கண்டு அஞ்சிய நாரதர் மஹா விஷ்ணுவிடம் சென்று அதைப் பற்றி முறையிட்டார். மஹா விஷ்ணுவும் அது குறித்து சிவ பெருமானிடம் பேசியப் பின் விஷ்ணுவின் வாகனமான வாசுகியின் தலைமையில் சிவ கணங்களான  ரதேஸ்வரி, ஷேதிரபாலா, வராகி, நந்திஜோனா, பார்பராகா மற்றும் பாசனமூர்த்தி என்பவர்களை அங்கு அனுப்பி மக்களின் மனதை ஆன்மீக எண்ணத்தால் மாற்றுமாறு ஆணையிட்டனர்.  அவர்கள் அனைவரும் அங்கு வந்து  நாகவனா என்ற இடத்தைத் தோற்றுவித்து  அங்கு தங்கி வரலாயினர். ஆனால் நாளடைவில் அவர்கள் தாமும் மக்களுடன் சேர்ந்து அவர்களை நல் வழியில் கொண்டு செல்வதற்குப் பதிலாக  அவர்களுடைய குணங்களை தாமும்  பெற்றனர். தலைகனம் மிகுந்து தம்மை எவராலும் ஒன்றும் செய்ய இயலாது என நினைக்கலாயினர் .மனம் போன போக்கில் நடக்கலாயினர்.

 குகைக்குள்  காட்சி 
அதே நேரத்தில் பாகிரதி நதிக் கரையில் ஜாபாலி முனிவர் தவத்தில் இருந்தார். அவரிடம் சென்ற நாரதர் அருணாசுரன்   என்ற அசுரனுக்கு அவர் காயத்திரி மந்திரோபதேசம் செய்து தந்ததினால்தான் அவனை மும்மூர்த்திகளினாலும் அழிக்க முடியாமல் இருக்கின்றது எனவும் அவனால்தான் உலகில் தீய சக்திகள் மிகுந்து அதர்மம் ஓங்கி வந்துள்ளது எனவும், அவனை அழிக்க  அவர்தான்  ஏதாவது உபாயம் செய்ய வேண்டும் என கூறினார். அதற்காக அவர் பரசுராம ஷேத்திரத்துக்குச் சென்று அங்கு தவத்தில் அமர்ந்து கொண்டு  தேவியை வேண்டி அவளிடம் இருந்தே அந்த அசுரனை அழிக்கத் தேவையான வரங்களை பெற்றுக் கொண்டு அவனை அழிக்க வேண்டும் என வேண்டினார்.
அதை ஏற்றுக் கொண்ட ஜாபாலி முனிவரும் முதலில் கங்கையை ஆராதித்து வேண்டினார். அவர் தவத்தை மெச்சி அவர் முன் தோன்றிய கங்கையிடம்  தான்  மேற்கொண்டுள்ள புனித காரியம் வெற்றி  பெற அவள் தன்னுடன் துணைக்கு வர வேண்டும் எனக் கேட்டார். அவளோ தான் முன்னர் ஒருமுறை பகீரதனின் வேண்டுகோளின்படி பூமியில் சென்றபோது  தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போக அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கட்டுப்படுத்த சிவபெருமான் தன்னை  பிடித்து தனது முடியில் முடிந்து கொள்ள வேண்டி இருந்தது  என்பதினால் அவருடன் தன்னால் நாகவனாவுக்கு   செல்ல முடியாது என்றாள். ஆகவே அதற்குப் பதிலாக ஜாபாலி முனிவர் சிவபெருமானை வேண்டி தவம் இருக்குமாறும் அவர் தோன்றியதும் தன்னை அவருக்கு துணையாக அனுப்புமாறு கேட்டால் தனது முடியில் இருந்து தன்னை அவர் அனுப்புவார் எனவும்  அப்போது அவருக்கு உதவ தான் அந்தர்யாத்மியாக பூமிக்கு அடியில் பாய்ந்து  வந்து அவருடன் இணைவதாகக் கூறினாள்.

 குகைக்குள் சிவ லிங்க வடிவில் சோமனதீஸ்வரர் 
கங்கை மாதாவின் அறிவுரையை ஏற்று ஜாபாலி முனிவர் சிவபெருமானை துதித்து தவம் இருக்க அவர் முன் தோன்றிய சிவபெருமான் அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்டார்.  ஜாபாலி முனிவரும் நாரதர்  தன்னிடம் வந்து கூறிய செய்திகளைக் கூறி பரசுராமர் ஷேத்திரத்துக்கு சென்று அதர்மத்தை அழிக்க அவரே தனக்கு அருள் புரிய வேண்டும் எனவும் தனக்கு துணையாக கங்கையும் அனுப்ப வேண்டும் எனவும்  கேட்டார். ஆனால்  சிவபெருமானோ தான் அந்த அசுரனுக்கு சில வரங்களை  தந்து விட்டதினால் தன்னால் அவனை அழிக்க முடியாது  என்றும் அவனை சில உபாயங்களைக் கொண்டே அழிக்க முடியும் எனவும் அதை  தேவியினால் மட்டுமே செய்ய முடியும் என்பதினால்   அவருக்கு துணையாக சில பூத கணங்களை அனுப்புவதாகவும், ஜாபாலி முனிவர்  அந்த ஷேத்திரத்துக்கு சென்று  அங்குள்ள குகையில் அமர்ந்து கொண்டு  தேவியை வேண்டி தவம் இருக்குமாறும், அவள் அருளுடன் அருணாசுரனை  அழிக்க தேவையானதை செய்யுமாறு கூறினார்.

 குகைக்குள் சிவ லிங்க வடிவில் சோமனதீஸ்வரர் 
அதைக் கேட்டு மனம் மகிழ்ந்துபோன ஜாபாலி முனிவரும் சிவபெருமான் அனுப்பிய இரண்டு பூத கணங்களுடன் பரசுராமர் ஷேத்திரத்துக்கு கிளம்பிச் சென்றார். அப்போது அங்கிருந்த வாசுகியும் மற்ற பூத கணங்களும் தம்மை அழிக்க எவரோ அங்கு படையெடுத்து வருகிறார்கள் என தவறாக நினைத்து அவருடன் சண்டை செய்யக் கிளம்பினார்கள். உக்ரஹமாக நடந்த அந்த சண்டையின் இடையே  முனிவர் வாசுகிக்கு சாபம் தந்து அதன் வலிமையைக் குறைக்க வாசுகிக்கும்   மற்ற கணங்களுக்கும் தாம் எதற்காக  அங்கு வந்தோம் என்ற நினைவு வந்தது. தாம் வந்த நோக்கத்தை நினைத்துப் பார்த்த அவர்கள் தமது தவறை உணர்ந்து முனிவரிடம் சரண் அடைந்தனர். ஜபாலியும் அவர்களிடம் தாம் அனைவருமே  இறைவனின் ஆணைப்படி அசுரர்களையும்  அதர்மத்தையும்  அழித்து மக்களை நல்வழிப்படுத்தவே வந்துள்ளதை நினைவுப்படுத்த  இனி அனைவரும் ஒன்று சேர்ந்து  அதற்கான வேலைகளை செய்ய முடிவு செய்தனர்.
ஜாபாலி முனிவர் குகைக்குள் சென்று அமர்ந்து கொண்டு தவத்தில் இருந்தார். அதே சமயம் சிவ பெருமானும் ஒரு லிங்க உருவில் அங்கு வந்து குகைக்குள் அமர்ந்து கொள்ள, முன்னர் வாக்கு தந்தபடி  கங்கையும் பூமிக்குள் இருந்து வெளிவந்து அங்கு ஓடியது.
அடுத்து நாரதர் அருணாசுரனிடம்  சென்று  வேண்டும் என்றே அவன் கோபத்தை தூண்டி விட்டார். அவனை அழிக்க ஜாபாலி முனிவர் வந்ததைக் கூற அவன் வெகுண்டு எழுந்து அவரைக் கொள்ள தனது படையை அனுப்பினான்.  ஆனால் அவர்களை குகையைக்  காத்து நின்ற தேவ கணங்கள் அழித்தன. ஆகவே அசுரனே அவரை அழிக்கக் கிளம்பியபோது அந்த முனிவர் அங்கிருந்து தப்பி ஓடி  மல்லிகை வனம் என்ற இடத்தில் அமர்ந்து கொண்டு தேவியை துதித்தபடி ஒரு யாகத்தை செய்தார். அப்போடி ஒரு யாகம் முன்னர் நடந்ததே இல்லை என்ற அளவு நடைபெற அவர் தவத்தை மெச்சி அந்த யாக குண்டத்தில் தோன்றிய தேவி அவரிடம் தான் இனி அந்த அசுரனை அழித்து விடுவதாக வாக்கு தந்தாள்.
வெளியில் வந்த அவள் அந்த அசுரனை மயக்கி அவனை தன்னை துரத்தி வருமாறு செய்தாள்.  அவள் ஓடுகையில் தன்னை ஒரு தேனியாக உருமாற்றிக் கொண்டு ஒரு  தேனிப் பொந்தில் சென்று ஒளிந்து கொள்ள அவளை துரத்தி வந்த அசுரன் அந்த தேனியின் உருவில் இருந்த  தேவியை பிடிக்க அந்த பொந்தில் கை விட்டான். அவ்வளவுதான் அந்த பொந்துக்குள் இருந்த பெரிய தேனிக் கூட்டம் வெளியில் பறந்து வந்து அவனை கொட்டித் தீர்த்தன. அவற்றில் ஒரு தேனியாக இருந்த தேவியும் அவனை கொட்டியே கொன்றாள். இப்படியாக  ஆயுதம் மற்றும் மனிதர்கள், விளங்குகளினால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரம் பெற்று இருந்தவன் ஒரு பூச்சியின் கடியினால் கொல்லப்பட  அங்கு வந்த ஜாபாலி முனிவர் தேவியை வணங்கி  நின்றார்.
தேவியின் உக்ரகாம் தனிய அவர் வேண்டியதை ஏற்று அவள் சாந்தமாகி,   இனி அதர்மம் மெல்ல மெல்ல அழியத் துவங்கும் என உறுதி கூறினாள்.  மேலும் இனி அவர் தவம் இருந்த இடத்தில் சிவபெருமான் ஒரு லிங்க உருவில் இருப்பார் என்றும், அங்கு வருடத்தில் ஆறு மாதம் கங்கை ஓடுவாள் எனவும், அது காசிக்கு இணையான ஷேத்திரமாக இருக்கும் எனவும், இனி ஜாபாலி முனிவரும் அந்த இடத்தில் வணங்கப் படுவார் எனவும் அருள் புரிந்தாள். அது மட்டும் இல்லாமல் நெல்லி தீர்தா அருகில்  கொம்பாடவு என்ற இடத்தில் விஷ்ணு தங்கி பக்தர்களுக்கு அருள் புரிவார், முனிவர் யாகம் செய்த மல்லிகாவனத்தில் தான் காளி, இலஷ்மி, மற்றும் சரஸ்வதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தபடி அருள் புரிவேன் எனவும் கூறி மறைந்தாள். அவை அனைத்தும் உள்ள அந்த நாகவனமே இன்று நெல்லிதீர்தம் என்பது. அங்குள்ள குகையில் சிவபெருமான் சோமனதீஸ்வராவாக இருந்தவாறு  பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகின்றார்.
அந்த ஆலயத்துக்கு செல்ல மங்களூருக்கு சென்று அங்கிருந்து பஸ்ஸில் செல்லலாம். இல்லை என்றால் ஒரு டாக்சியை பிடித்துச் செல்லலாம். 
நன்றி: படங்கள் உதவி: .nellitheertha.com

ஆலய விலாசம்
Sri Somanatheshwara Cave Temple
Sri Kshetra Nellitheertha
Neerude Post, Kompadavu Village
Mangalore Taluk, South Kanara District
Karnataka, India – 570063
Phone : 
91-824-2299142 and 91-824-2016142
  Email முகவரி    :- contact@nellitheertha.com