Monday, February 21, 2011

Patteeswaran Durgaa Temple

 பட்டீஸ்வரர் துர்க்கை ஆலயம் 
சாந்திப்பிரியா 

பட்டீஸ்வரம் என்ற ஊர் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டார் தொலைவிலேயே உள்ளது. பட்டீஸ்வரம் என்றாலே அங்குள்ள துர்க்கை அம்மன் ஆலயம்தான் அனைவர் மனதிலும் வரும் . காரணம் ராகு தோஷம் உள்ளவர்கள் தமது தோஷத்தை களைந்து கொள்ள அந்த ஆலயத்துக்குதான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் முக்கியமான மற்றொரு மகிமை குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. அந்த ஆலயத்தில்தான் மிகப் பெரிய பைரவர் சன்னதி உள்ளது.  சோழ மன்னர்கள் அரசாண்ட காலத்தில் அவர்கள் தமது அரண்மனைப் பாதுகாக்க நான்குபுறங்களிலும்  துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் பைரவர் என்பவர்களுக்கு சன்னதிகளை அமைத்து பூஜை செய்து வந்தனராம். அவர்களே இந்த ஆலயத்தில் தாம் வணங்கி வந்த துர்கையின் சிலையைக் கொண்டு வைத்ததாக நம்புகிறார்கள். இந்த பட்டீஸ்வரம் தோன்றியதே பட்டீஸ்வரருக்காக என்றாலும் துர்க்கை உருவில் உள்ள பார்வதியே அதிக முக்கியத்துவம் பெற்று உள்ளாள். இந்த ஐந்து கோபுரங்களை உள்ளடக்கிய மாபெரும் ஆலயம் தோன்றியது ஏழு அல்லது ஆறாம் நூற்றாண்டில் இருக்கலாம். பல காலங்களில் இந்த ஆலயம் பல்லவர்கள். சோழர்கள் மற்றும் நாயக மன்னர்களால் விரிவாக்கப்பட்டுக் கொண்டே இருந்துள்ளது.
துர்க்கை அம்மனின் சன்னதிக்குப் பின்புறமாக ஞானவாபி குளம் உள்ளது. அதன் கரைகளில் நாக தோஷத்தை நீக்கிக் கொள்ள நாகர்கள் (நாகங்களின் சிலைகள்) அமர்ந்து உள்ளனர். அதன் எதிரில்தான்  கொடிமர விநாயகரும் சன்னதியில் அமர்ந்து உள்ளார். அதன் பின்புறத்தில் உள்ள நுழை வாயில் வழியே சென்றால் ஞானாம்பிகை மற்றும் பட்டீஸ்வரர்  தனி ஆலயங்கள் உள்ளன.  ஆனால் இரண்டுமே பட்டீஸ்வரர் ஆலயத்து  நான்கு பக்க சுவர்களுக்கு உள்ளேதான் அமைந்து உள்ளன. அப்படி என்றால் அந்த ஆலயத்தின் மொத்த பரப்பளவை எண்ணிப் பாருங்கள்.

துர்க்கை  அம்மன்  வரலாறு
   
படம் நன்றி:- http://Hinduism.wall.fm/forum
வேத காலத்தில் பார்வதி தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தை விலக்கிக் கொள்ள இந்த ஆலயம் இருந்த இடத்துக்கு வந்தாள். அவள் இந்த இடத்தில் வந்து தனிமையில் தவம் இருக்கத் துவங்கியபோது அவளுக்கு உதவுவதற்காக தேவேர்கள் அந்த இடத்தில் மரம், செடிகள், கொடிகள் என அமைத்து வனபிரதேசமாக அதை ஆக்கினார்கள். பார்வதிக்கு உதவியாக இருக்க காமதேனு தனது பெண்ணான பட்டியையும் அனுப்பி வைத்தது. பார்வதி நின்று கொண்டே பரமேஸ்வரரை நினைத்து  தவம் இருந்தாள். பார்வதியின் கடுமையான தவத்தைக் கண்ட சிவனார் அவள் வேண்டுகோளை ஏற்று அவளுக்கு சடை முடியுடன் காட்சி தந்து அவளை அங்கேயே துர்கையாக இருந்து கொண்டு மக்களின் துயரங்களை துடைத்து அருளுமாறு கூறினார். '' இங்கு நீ வந்து தவம் செய்ததினால் இது தவ வலிமை பெற்ற பூமி ஆனது.  நீ செய்துள்ள தவத்தினால் உனது சக்தியை உள்ளடக்கிய பூமி ஆகிவிட்டது இது.  இந்த இடமே அனைத்து தேவர்களாலும் உனக்காக உருவாக்கப்பட்டு உள்ளதினால் இது தெய்வ பூமி ஆயிற்று.  நீயே என்னிடம் சாப விமோசனத்தை இந்த இடத்தில் பெற்றுள்ளாய். அதனால்தான் ராமரும் இங்கு  வந்து  என்னை பூஜித்து தனது தோஷங்களை விலக்கிக் கொண்டு தனுஷ்கோடி கடலுக்கு சமமான  புனித தீர்த்ததையும் ஏற்படுத்தி உள்ளார்.  இங்கு வந்து உன்னை ராகுவும் கேதுவும் வணங்குவார்கள். நீ  அவர்களால் ஏற்படும் தோஷங்களைக் களைந்து கொண்டு இருப்பாய்.  இத்தனை பெருமைகளையும் பெற்ற இந்தத் தலமே  என்னுள் பாதியாக உள்ள  உனக்கு பெருமை சேர்க்கும் தலமாக அமைந்து இருக்கும்.  '' எனக் கூறினார்.  
அது  முதல்  இங்கு உள்ள துர்க்கை மகிஷாசுரன்  தலை மீது நின்று கொண்டு, சிம்ம வாகனத்துடன் சாந்த முகத்தோடு  எட்டு கைகள் மற்றும்  நான்கு கண்களையும் கொண்டு காட்சி தருகிறாள்.  அவள் கைகளில் சங்கு, சக்கரம், கத்தி, கிளி, வில், அம்பு போன்றவை உள்ளன. ஒரு கையால் அபாய முத்திரை  மற்றொரு கையில் கேடயம் கொண்டு காட்சி தருபவள்  எப்போதுமே ஒன்பது கஜப் புடவையுடனே காட்சி அளிக்கின்றாள்.

  படம் நன்றி:- http://Hinduism.wall.fm/forum
(ஒன்பது கஜப் புடவையை மிகவும் ஆசாரமான வைதீகமான   குடும்பத்துப் பெண்கள் அல்லது வயதான தாயார்களே கட்டிக் கொள்வார்கள். முக்கியமாக அனைத்து வைபவங்களிலும் பூஜைகளிலும் ஒன்பது கஜப் புடவை அணிவதே விசேஷமானது என்பார்கள். அது போலத்தான் ஆண்களும் ஒன்பது முழ வேஷ்டிகளை உடுப்பது பழக்கம்.  இதற்கான காரணம் இரண்டு உள்ளதாக பெரும் பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
நமது நாபியில்  இருந்து வெளியாகும்  சக்தி நமது பின்புற முதுகுத் தண்டில் போய்  அங்கிருந்து மூளையை சென்றடையும்போது ஞானம் பிறக்கும் ,குண்டலினி சக்தி மேலும்பிச் செல்லும் என்ற  தாத்பர்யத்தை வெளிப்படுத்துவது ஒரு காரணம். அதனால்தான் புடவை மற்றும் வேஷ்டிகளின் ஒரு நுனி நாபிப்பகுதியிலும் மற்றொரு நுனி  இரண்டு கால்களிடையே சென்று பின்புற முதுகின் கீழ் பகுதியில் ஒரு பாதை போல அமைக்கப்பட்டு பின்னால்  வைக்கப்படுகின்றது .  இன்னொரு முக்கியக் காரணம்  இந்த துணிகளின் மடித்து மடித்து வைக்கப்பட்டு உள்ள  பகுதி இரண்டு கால்களின் இடையே புகுந்து செல்வதினால் ஆண் பெண் இருவரின்  காமத்தை  தடுத்து  நிறுத்தி விடுகின்றது என்பதே. காமத்தை தொலைத்து விட்டே நாம் இறைவனின் சன்னதிக்கு செல்ல வேண்டும்  என்பதை எப்போதுமே நினைவுறுத்திக் கொண்டு இருக்கும்  காட்சி  அது ).

துர்கையின் சன்னதியை சுற்றி வலம்  வரவும்,  தரையில் உருண்டு அங்கப் பிரதர்ஷணம் செய்ய உதவியாகவும் இருக்க  மேற்கூரை போடப்பட்ட பளிங்குக் கல்லால்  தரை போடப்பட்டு மண்டபம் உள்ளது. சன்னதியின் வலதுபுறம் ஹோம சாலையும் இடது புறம் துர்க்கைக்கு தீபம் ஏற்றும் ஒரு தனி இடமும் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆகவே இங்கு தாயாராக காட்சி அளிப்பவளுக்கு ஒன்பது கஜப் புடவையே சாத்தப்படுகின்றது. இப்படிப்பட்ட இந்த அம்மனின் சன்னதிக்கு வந்தாலே மனதில் உள்ள காமம், குரோதம் அடங்கி ஞானம் பெருகுமாம். இங்கு நமது தாயாராக காட்சி அளிப்பவள் ராகு பகவானுக்கும் தாயாராகவே காட்சி தருகிறாளாம். ஆகவே ராகு பகவான்  தினமும் இங்கு வந்து தனது அன்னையான துர்காவை பூஜிப்பதினால் ராகு பகவானின் பூஜை காலமான  அந்த ராகு காலத்தில் வந்து எவர் ஒருவர் துர்கையை பூஜிக்கின்றார்களோ அவர்களை தனது தாயாரான துர்கையின் பூசையுள் தன்னுடன் கலந்து கொள்ளும் பக்தர் எனக் கருதும் ராகு பகவான்   அவர்களுக்கு எந்தக் கெடுதல்களையும் செய்யாது நல்லதே செய்வாராம். அதனால்தான் இந்த தளத்தில் ராகு காலத்தில் வந்து பூஜைகளை செய்து துர்கை வேண்டுவது வழக்கமாக உள்ளது. அது மட்டும் அல்லாது செய்வாய் கிரகமும் இங்கு வந்து அன்னைக்கு சிவப்பு பூக்களைப் போட்டு பூஜிக்கின்றாராம். அதனால்தான் இந்த துர்க்கைக்கு சிவப்பு மாலை சாத்தி வேண்டிக் கொண்டால் செய்வாய் தோஷமும் விலகுமாம்.
இங்கு வந்து துர்கை வணங்குவதினால் கிடைக்கும் பலன்கள்:-
1. ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும்
2.  மன துக்கம் விலகும்
3. காரிய  வெற்றி கிடைக்கும்
4.  பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள்- பெண்களுக்கு- விலகும்
5.  குடும்ப வாழ்கை அமைதியாகும்
6. எழுமிச்ச மாலை அணிவித்து வேண்டிக் கொள்வதின் மூலம் தீராத நோய்களும் தீரும்.

 பட்டீஸ்வரர்   வரலாறு 

பார்வதியின் தவம் , அதனால் அவள் அடைந்த பலன் போன்றவற்றைக் கண்ட பசுவான பட்டியும் தான் ஒரு சிவலிங்கத்தை அங்கு அமைத்து, தினமும் அதன் மீது தனது மடியில் இருந்து பாலை சுரந்தும் ஞானவாவியின் நீரை கொண்டு வந்தும் அபிஷேகம் செய்தும்  சிவனை வழிபட்டது. அதன் பக்தியைக் கண்ட சிவனார் அதற்கும் காட்சி அளித்து அருள் செய்தார். அது கேட்டுக் கொண்டபடி பார்வதிக்கு துணையாக தானும் அங்கேயே இருக்க முடிவு செய்து பசுவின் பெயரைக் கொண்டு பட்டீஸ்வரராக அமர்ந்தார். இங்குள்ள  பட்டீஸ்வரர்  கேட்டவர்களுக்கு  கேட்டதை  தருவதினால்  தேனுபுறீஸ்வரர்    என்றும்  அழைக்க்கப்படுகிறார் .
விஷ்ணுவின் அவதாரமாக மனிதப் பிறவி எடுக்க வேண்டி இருந்த ராமபிரான் தனது மனிதப் பிறவியில் மூன்று தோஷங்களை பெற்றார். இராமாயண யுத்தத்தில் அவர் ராவணனைக் கொல்ல வேண்டி இருந்தது. ராவணன் அசுர குலத்தை சேர்ந்தவர் என்றாலும் பிறப்பால் அவர் ஒரு பிராமணர். மகா வித்வான். சிவ பக்தர். ஆகவே பிராமணரான ராவணனைக் கொன்றதற்காக பெற்ற பிரும்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொள்ள அவர் ராமேஸ்வரத்துக்குச் சென்று அங்குள்ள மணல்கரையில் சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை பூஜை செய்து தனது பிரும்மஹத்தி தோஷத்தைக் களைந்து கொண்டார்.
அடுத்து ராவணன் மாபெரும் வீரன், வீணை வாசிப்பதில் அபார திறமை கொண்டவன், சிவ பக்தன். ஒரு மாபெரும் வீரனைக் கொன்றதினால் ஏற்பட்ட வீரஹட்டி என்ற தோஷத்தைப் போக்கிக் கொள்ள  வேதாரண்யம் சென்று அங்கு ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை பூஜித்து அந்த தோஷத்தில் இருந்து விடுதலை அடைந்தார்.
அதுபோல வீரன், கலைஞர், சிவ பக்தர் போன்ற மிக நல்ல அம்சங்களை கொண்டவர் ராவணன் அல்லவா. அந்த நல்ல அம்ச குணங்களை சாயை என்பார்கள். சாயை என்றால் நிழல் அல்லது ஒளி என்றும் பெயர் உண்டாம்.  அந்த நல்ல அம்சங்களைக் கொண்டு அனைவர் முன்னும் வாழ்கையில் ஒரு ஒளி  வீசியபடி இருந்தவரே ராவணன். (சீதை விஷயத்தை தவிர  வேறு  எதிலுமே  களங்கம் அடையாதவர்). அப்படிப்பட்ட நல்ல அம்சத்தைக் கொண்ட வீரனைக் கொன்ற பாவத்துக்காக சாயஹத்தி தோஷம் ஏற்பட்டது. மேலும் ராவணனைக் கொல்லச் சென்ற ராமர்  வாலியை மரத்தின் பின்னால் நின்று அம்பு எய்திக் கொன்றார். ஒரு பெரிய வீரனை தனது வீரத்தைக் காட்டி நேரிலே நின்று கொல்ல முடியாமல் மர நிழலில் மறைந்து கொண்டு வாலியைக் கொன்றதினாலும் இன்னமும் அதிக  அளவில் சாயஹத்தி (நிழல்) தோஷத்தை ஏற்படுத்தியது .
ஆகா இரண்டு விதங்களில் சாயஹத்தி தோஷத்தைப் பெற்றவர் பட்டீஸ்வர ஆலயத்துக்கு வந்து அங்கு ஒரு சிவலிங்கத்தை நிறுவி சிவனை பூஜித்து சாயஹத்தி தோஷத்தை விலக்கிக் கொண்டார். அப்போது அங்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் கிடைக்காததினால் தனது வில்லின்  நுனியால் ஒரு இடத்தைக்  கீறி அங்கு தண்ணீரை  தோற்றுவித்து அபிஷேகம் செய்தாராம். ராமேஸ்வரத்தில் இருந்த தனுஷ்கோடி தீர்த்தத்தை அங்கு அவர்  வரவழைத்ததாகவே நம்பப்படுகின்றது. இப்படியாக அந்த ஆலயத்தில் ராம தீர்த்தமும் அமைந்தது.

பட்டீஸ்வரர் மகிமை

ஒரு முறை திருஞான சம்மந்தர்  திருவலஞ்சுழியில்  சிவபெருமானை வணங்கித் துதித்தப் பின் தமது பரிவாரங்களுடன் பட்டீஸ்வறரை காண இங்கு வந்து கொண்டு இருந்தார். கடுமையான வெயில். கால்கள் சுட்டுப் பொசுக்கின.  அவருடைய  பக்தியை மெச்சிய சிவபெருமான் தனது  பூத கணங்களை அனுப்பி அவர் வரும் வழியில்  அவர் தலை மீது ஆகாய மார்கத்தில் பூக்களை தூவிக்கொண்டே இருக்குமாறு ஆணையிட்டார். அந்த கணங்களும் அப்படியே செய்ய வெயில்  திருஞான சம்மந்தர் மீது படவே  இல்லை.  அனைவரும் வியந்து நின்றனர். அது மட்டுமா அவர் தனது சன்னதிக்கு வந்ததும் தன்னை நேரிலே பார்க்கட்டும் என்பதற்காக தனது நந்தியை வழியை விட்டு விலகி இருக்குமாறு சிவன் ஆணையிட நந்தியும் விலகி நின்றது.  பட்டீஸ்வரர் சன்னதிக்கு வந்த சம்மந்தர் ஈசனை நேரிலே கண்டார் , ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதனால்தான் இந்த ஆலயத்தில் மட்டும் சிவனுடைய சன்னதிலும் சரி, அதன் நுழை வாயிலிலும் சரி சிவலிங்கத்தை நந்தி மறைத்தபடி நிற்காமல்  ஒரு பக்கமாக அமர்ந்து உள்ளது.
இந்த ஆலயத்தில்தான் ஞானவாபியில் குளித்து விட்டு தமது பூர்வ ஜென்ம தோஷத்தை  நாய் உருவில் இருந்த ஒரு முனிவர் விலக்கிக்  கொண்டு அங்கேயே மீண்டும் மனித உருவை அடைந்தாராம்.
பட்டீஸ்வரர் இந்த ஆலயத்தில் தனது மனைவியான பார்வதியை ஞானாம்பிகை என்ற உருவில் இருக்க வைத்து பக்தர்களை ரட்சித்து வருகிறார். பட்டீஸ்வரரையும் இங்குள்ள ஞானாம்பிகையை வணங்குவத்தின் மூலம் அனைவருடைய பூர்வ ஜென்ம பாவங்கள் மெல்ல மெல்ல மறையுமாம். எத்தனை முறை அவரை அங்கு வந்து பூஜித்து வணங்குவோமோ அத்தனை பாவங்கள் விலகும்.

 பைரவர்  சன்னதி  பூஜை மகிமை 
ஆனாலும் சிவபெருமான் அங்கு தனது அம்சமாக விளங்கும் பைரவர் உருவில் தனி சன்னதியில் இருந்தவாறு பல நன்மைகளை பக்தர்களுக்கு செய்து வருகிறார். தமிழ்நாட்டில் பைரவருக்கு வேறு எந்த ஆலயத்திலும் அத்தனை பெரிய சிலை அமைக்கப்பட்டு வணங்கப்படுவதாகத் தெரியவில்லை. பைரவருக்கு எதிரில் நந்தியும் உள்ளது ! அந்த பைரவர் வேண்டியதைக் கொடுப்பவர். மிகவும் சக்தி வாய்ந்தவர். அற்புதமானவர் அவர் சன்னதியில் என்ன  செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை கூறி உள்ளேன். அந்த பூஜைகளை எப்படி செய்ய வேண்டும் என்பதை அங்குள்ள பண்டிதர்கள் மூலம்  அறிந்து கொள்ள வேண்டும்.
1 . தேய்பிறைகளில்   அர்ச்சனை :- குழந்தை பேறு கிட்டும்.
2 . வளர்பிறைகளில்   அர்ச்சனை :- வறுமை நீங்கும் .
3 . பதினோரு அஷ்டமிகளில் வைரவ தீபம் ஏற்றுவது    ( சிறு மிளகுகளை சிறு மூட்டையாக துணியில் கட்டி அதை திரியாக உபயோகித்து நெய் அல்லது எண்ணை விளக்கு ஏற்றுதல்)    :-  இழந்த சொத்துக்கள் கிட்டும்.
5 .  ஒன்பது சனிக்கிழமைகளில் நான்கு நான்கு பைரவ தீபம்  :- சனி தோஷம் நீங்கும் .
6 . பயம் அச்சம் விலக  :- ஒன்பது அஷ்டமிகளில் அர்ச்சனை .
7 . தீராத நோய்கள் தீர  :- பைரவர் ஹோமம் செய்து அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள வேண்டும்
 ஆலய  விலாசம் மற்றும் அமைப்பு அமைப்பு  

அருள்மிகு  தேனுபுரீஷ்வர்  திருக்கோவில் ,
ஸ்ரீ  துர்கா  ஸ்தலம் ,
பட்டேச்வரம்
கும்பகோணம் ,
தஞ்சாவூர்  மாவட்டம்
போன் :0435-2416976
e-Mail: patteeswaramdurga@gmail.com

Notice

ஒரு செய்தி

இந்த தளத்தில் மேலும் வர உள்ள ஆலய வரலாறுகள் கீழே தரப்பட்டு உள்ளன . நேரமின்மை காரணமாக அவை அடுத்த சில நாட்களுக்குப் பிறகு வெளியாகும்.
சாந்திப்பிரியா

1. சிதம்பரம் ஆலய வரலாறு
2 . திருவாரூர் ஆலய வரலாறு
3 . சரபேஸ்வரர் தல வரலாறு
4 . வைதீஸ்வரன் ஆலய வரலாறு
5 . திருநாகேஸ்வர ஆலய வரலாறு
6 . மயூரநாத சுவாமி ஆலய வரலாறு
7 . திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலய வரலாறு
8 . கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி ஆலய வரலாறு
9 .திருவிடைமருதூர் ஆலய வரலாறு

Friday, February 18, 2011

Thirukkadaiyur Temple


திருக்கடையூர் அமிருதகடேஸ்வரர் சமேத 
அன்னை அபிராமி ஆலய மகிமை
சாந்திப்பிரியா 
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர்  உள்ளது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சமேத  அபிராமி ஆலயம்.  ஆலயம் சோழர் காலத்தை சேர்ந்தது என்றாலும் அவர்கள் காலத்தில் அது காட்டப்படும் முன்பே அங்கு  சிவனாலயம் இருந்துள்ளது. அந்த காலங்களில் ஆலயம் என்ற கட்டிடங்கள் இல்லாமல் அங்கும் இங்கும் வனங்களில் இருந்த சுயம்பு மூர்த்திகளை அங்காங்கே இருந்த மக்கள் வழிபடுவது வழக்கம். அங்குள்ள ஒரு மரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் அந்த மரத்துப்  பூவை மார்க்கண்டேயர் சிவபெருமான் பூஜைக்கு பயன்படுத்தினார் என்று புராணக் கதை உள்ளதினால் ஆலயம் உள்ள இடத்தில் இருந்த அமிர்தகடேஸ்வரர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டே வழிபட்டு வந்திருக்க வேண்டும்.
அந்த ஆலயம் இரண்டு காரணங்களுக்காக விசேஷமானது. முதலாவது இங்கு வந்து கால சம்ஹார மூர்த்தியையும் அமிருதகடேஸ்வரரையும் தரிசனம் செய்பவர்கள் ஆயுள் விருத்தி அடையும். அடுத்து அவர் அருகிலேயே குடி கொண்டு உள்ள ஞான தேவியான அன்னை அபிராமியை தரிசித்து அபிராமி அந்தாதியை சொல்லி வந்தால் ஞானம் மட்டும் அல்ல செல்வத்தையும் வாரி வாரி அவள் வழங்குவாள். ஆகவே ஆயுள் விருத்திக்காகவும், செல்வம் பெருகவும் வாழ்நாளில் ஒரு முறையாவது இங்கு செல்வது அவசியம்.
இந்த ஆலயத்தை ஒன்பது அல்லது பத்தாவது நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள். சோழ மன்னர்கள் ஆண்ட காலம் அது. ஆனால் ஆலயம் எழுப்பப்படும் முன்னரே ஆலயம் இல்லாத  அந்த இடத்தில் கால சம்ஹார மூர்த்தியும் அபிராமியும், வில்வேஸ்வரரான சிவனும் பூஜிக்கப்பட்டு வந்துள்ளனர்.
ஆலயத்தில் மூன்று மண்டபங்கள் உள்ளன. உள் மண்டபத்தில் அமிருதகடேஸ்வரர் காட்சி தருகிறார். சிவலிங்க  உருவில் உள்ள அவர் சிலையில் பிளவு  போன்ற தோற்றமும், தழும்பு போன்றதும் காணப்படுவது யமராஜர் அவர் மீது வீசிய கயிற்றால் ஏற்பட்ட தழும்பு எனவும், அது மார்க்கண்டேயர் கதைக்கான ஆதாரம் எனவும் கூறுகிறார்கள். அந்த சன்னதியில் ஒரு பாதாள வழியும் காணப்படுகிறதாம். அதன் மூலம் சென்றுதான்  மார்க்கண்டேயர் கங்கை நீரை கொண்டு வந்தாராம்.
அதற்கு அடுத்த மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி நின்றவண்ணம் சிவபெருமான் கால தேவனை சம்ஹாரம் செய்யும் காட்சியில் காட்சி தருகிறார். அவருடைய இடது புறத்தில் பார்வதி தமது தேவதைகளுடன் காட்சி தர , மார்க்கண்டேயர் வலப் புறத்தில் நின்றபடி சிவபெருமானை வணங்கிக் கொண்டு நிற்க சிவனுடைய பாதத்தின் அடியில் யமராஜர் தலைகீழாக பூமியிலே கிடக்கின்றார்.           
இந்த ஆலயத்தை சுற்றி அமிருத புஷ்கரணி, கால தீர்த்தம், மார்கண்டேய தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உள்ளன. மார்கண்டேய தீர்த்தத்தில் கங்கை தீர்த்தமும் உள்ளது என்பது ஐதீகம்.
         படம் நன்றி: Holi India divine .org
அது மட்டும் அல்ல இந்த ஆலயத்தில் இரண்டாயிரம் வருடங்களாக வளர்ந்து வரும் பின்சிலம் என்ற  ஒரு மரமும் உள்ளது என்பது ஒரு அதிசயமே. அந்த மரத்தில் 365 நாட்களும் பூக்கள் பூக்கின்றது என்பது  மட்டும் அல்ல அந்தப் பூவை அந்த ஆலயத்தில் உள்ள அமிருதகடேஸ்வரர் பூஜைக்கு மட்டுமே உபயோகிக்கின்றார்கள். மற்ற எந்த பூஜைக்கோ அல்லது வேறு எவருமோ  அந்த பூவை உபயோகிப்பதில்லை  என்பது என்னும் ஒரு அதிசயமான செய்தி. இனி ஆலய மகிமையையும், வரலாற்றையும் படிப்போம்.

அமிருதகடேஸ்வரர் 

 
ஒரு முறை தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்து அம்ருதத்தை எடுத்தவுடன் அதனால் ஏற்பட்ட சச்சரவினால்  அசுரர்கள் ஏமார்ந்து போய் தேவர்கள் அம்ருதத்தை அடைந்தார்கள்.  தேவர்கள் அதை பெற்றுக் கொண்டு செல்கையில் அங்கிருந்த விநாயகரை வழிபட மறந்து விட்டார்கள். ஆகவே கோபமுற்ற விநாயகர் தேவர்களுக்குத் தெரியாமல் அமிருத கலசத்தை எடுத்து வந்து திருக்கடையூரில் தற்போது ஆலயம் உள்ள இடத்தில் மறைத்து வைத்து விட்டார். அதைக் தேடி அலைந்து அங்கு வந்த  தேவர்கள்  பூமியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த கலசத்தில் இருந்த அமிருததை எடுக்க முயன்றபோது அவர்களால் தூக்க முடியாத அளவு சிவலிங்கமே பாதாளம்வரை அங்கு பூமியில் புதைந்து இருந்ததைக் கண்டு விநாயகரிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான் அந்த இடத்தில் விநாயகரை வழிபட்டப் பின்னரே அவர்களுக்கு அமிருதத்தை தருவேன் எனக் கூறினார். அதன் பின் சிவன் அந்த அமிருததை தேவர்களுக்குக் கொடுத்தாலும் தன்னை  அங்கேயே  விநாயகர் பிரதிஷ்டை செய்து விட்டதினால் இனி தான் அங்கே இருந்தவாறு அமிருதகடேஸ்வரராக  பக்தர்களுக்கு காட்சி தருவேன் என்று கூறினார்.  அதனால்தான் அவரே அமிருதகடேஸ்வரர் என்ற பெயரில் ஆலயத்தில் உள்ளார். அங்குள்ள பிள்ளையாரை கள்ளவாரணப் பிள்ளையார்  என துதிக்கின்றனர். அமிருதத்தை உண்டால் நீண்ட ஆயுளும் இறவாமையும் கிடைக்கும் என நம்பப்பட்டதினால் அங்கிருந்த சிவலிங்கத்தை அனைவரும் வந்து அமிருதகடேஸ்வரர்  என பூஜிக்கலாயினர்.

கால சம்ஹார மூர்த்தி

 
அந்த காலத்தில் வசித்து வந்த  மிரிகண்டு மகரிஷியும் அவர் மனைவியும் தமக்கு மழலை செல்வம் கிடைக்கவில்லையே என ஏங்கி சிவனை ஆராதித்துத் துதித்தார்கள். நாளடைவில் அவர்களுக்கு சிவபெருமானின் அருளினால் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயர் என்ற பெயரையும் சூட்டினார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அந்தக் குழந்தை தனது 16 ஆவது வயதில் மரணம் அடைந்து விடும் என்ற விதியுடன் பிறந்து இருந்ததினால்  அந்தக் குழந்தைக்கு உயிர் பிச்சைக் கிடைக்க  அந்த முனிவரும் அவர் மனைவியும் பல இடங்களிலும் சென்று பல கடவுட்களையும் பிரார்த்தனை செய்து கொண்டே வந்தனர்.  முடிவாக திருக்கடையூருக்கு அருகில் இருந்த கிராமம் ஒன்றில் வந்து தங்கி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரை (அப்போது ஆலயம் இல்லாமல் சிவலிங்கம் திறந்த வெளியில் இருந்ததாம். ஒரு ஆறும் பக்கத்தில் ஓடிக்கொண்டு இருந்ததாம்) ஆராதித்து வந்தார்கள். அவர்களுடைய மகனான மார்க்கண்டேயனும் தினமும் அந்த சிவலிங்கம் இருந்த இடத்தின் கீழே இருந்த பாதாள மார்க்கம் மூலம் சென்று கங்கை தண்ணீரை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தாராம். தினமும் கங்கை நதியின் நீரை வாரணாசியில்  இருந்து எடுத்து வர முடியுமா என வியக்காதீர்கள்.
சில படித்தறிந்த பண்டிதர்களின் கூற்றின்படி அந்த காலத்தில் பல இடங்களிலும் கங்கை நதி அந்தராத்மியாக பூமிக்கு அடியில் ஓடிக் கொண்டு இருந்ததாகவும், அந்த ஊரின் அருகிலேயே இருந்த திலதர்பண பூமி எனப்படும் சிவஸ்தலத்தில் சிவபெருமான் தங்கி இருந்தபோது அவருடன் வந்திருந்த கங்கை நதியானவள் சிவனுக்குக் காவலாக அந்த பூமியில் ஓடிய நதியில் அமர்ந்து கொண்டு இருந்ததினால் அங்கிருந்த பல நதிகளும் கங்கை நீரை பெற்று இருந்தன.
அது போலத்தான் சிவபெருமான் அந்த இடத்திலேயே அமிருதகடேஸ்வரராக பூமியில் புதைந்து இருந்ததினால் அவர்  தலை முடி மீது இருந்த கங்கை நதியும் அங்குள்ள பூமிக்கு அடியில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது . அதனால்தான் மார்க்கண்டேயர் வாரணாசிக்கு சென்று கங்கை நீரை கொண்டு வர அவசியம் ஏற்படவில்லை.  மிரிகுண்டு முனிவரின் ஞான திருஷ்டியினால் அந்த இடத்தின் பூமிக்கு அடியில் ஓடிக் கொண்டு இருந்த கங்கை நதியின் நீரை மார்கண்டேயர் கண்டு பிடித்து நீரை எடுத்து  வந்தார்  என்றும் படித்த பண்டிதர்கள் அதன் மகத்துவத்தை விளக்கிக் கூறினார்கள்.
மார்க்கண்டேயர் சிவபெருமானுக்கு தினமும் கங்கை நீரை அபிஷேகம் செய்து பூஜை செய்து வந்தார். ஆற்றுக் கரை ஓரத்தில் கெட்டியான களி மணலினால் தான் பிடித்து வைத்து இருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார். ஆனால் அவருக்கு அப்போது தெரியாது அந்த இடத்தில்தான் அமிர்தகதேஸ்வரர் என்ற சிவலிங்கம் புதைந்து மறைந்து இருந்தப் பகுதி என்பது. அவருடைய ஆயுள் நிறைவு பெற இருந்த நாளும் வந்தது. யமராஜர் பாசக் கயிற்றை எடுத்துக் கொண்டு மார்கண்டேயரை அழைத்துச் செல்ல வந்தார். மார்க்கண்டேயர் உயிர் போக இன்னும்  சில வினாடிகளே  இருக்கும்.  மார்க்கண்டேயர் சிவபெருமானை கட்டி அணைப்பது போல அந்த சிவ லிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டு கதறினார் " சிவா... சரீர ரூபத்தில் உள்ள என்னை எதுவரை என் தாய் தந்தை காப்பாற்றினார்கள், என் அறிவை என்னுடைய குருநாதர் காப்பாற்றி வருகிறார்....ஆனால் என் உயிரைக் காக்க உன்னைத் தவிர வேறு யாருமே இல்லையே....என்னைக் காப்பாற்று " எனக் கதற  தனது பக்தனின் கதறலைக் கேட்ட சிவபெருமான் நேரிலே வந்தார் .
அங்கு நின்று கொண்டு இருந்த யமராஜரிடம் 'இவன்  என்னுடைய பக்தன். இவனை  நீ அழைத்துப் போகக் கூடாது' எனக் கட்டளை இட்டார். மார்க்கண்டேயரின் ஆயுள் முடிவுக்கு வந்தது. யமனோ ஆயுள் முடிந்துவிட்ட மார்க்கண்டேயனின் உயிரைப் பறித்துக் கொள்ளாமல் தன்னால் செல்ல  முடியாது எனக் கூறிவிட்டு பாசக் கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீச அந்தக் கயிறு சிவலிங்கத்தையும்  சேர்த்துக் கட்ட கோபமுற்றார் சிவபெருமான். தன் மீதே ஒருவன் கயிற்றை வீசுகிறானா?  நான் கூறியும் உனக்கு இத்தனை தலை கனமா என கோபமுற்று யமதர்மராஜரை தனது இடது காலால் எட்டி ஒரு உதை விட்டார். கீழே விழுந்த யமன் மீது தனது காலை வைத்து அவரை பூமியுடன் சேர்த்து அழுத்தினார். யமராஜரால் அந்த வலிமையை தாங்க முடியவில்லை. எழுந்திருக்கவும் முடியவில்லை. காலத்தை நிர்ணயிப்பவனே மரணம் அடையும் நிலை. அவ்வளவுதான் உலகம் முழுவதும் மரணம் நின்றது. பூமியால் தாங்க முடியவில்லை. பிரும்மாவோ தன்னுடைய ஜனன மரண கணக்கு தவிடு பொடியாகியதைக் கண்டு பயந்தார்.
  படம்  நன்றி    http://en.wikipedia.org/wiki/Markandeya 
பிரும்மாவுடன் எண்பதாயிரம் தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் சேர்ந்து வந்து சிவபெருமானை வணங்கித் துதித்து படைக்கப்பட்ட ஜீவன்களின் அளவு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் எனில் யம ராஜரின் கடமை அவசியம். ஆகவே தனது கடமையை ஆற்ற யமனை விட்டு விடுமாறு வேண்டிக் கொள்ள, சிவபெருமானும் தனது காலின் கீழே அமுக்கி வைத்து இருந்த யமராஜரை விட்டு விட கீழிருந்து எழுந்த யமராஜர் சிவ பெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரை வணங்கியப் பின் இனி சிவபெருமான் அனுப்பினால் ஒழிய தான் மார்க்கண்டேயரை எந்த காலத்திலும் அழைத்துச் செல்ல மாட்டேன் என உறுதி கூறி விட்டுச் சென்றார். அதனால்தான் மார்க்கண்டேயர் மரணம் என்பதையே அடையவில்லை.  இன்னமும் சிரஞ்சீவியாகவே தேவலோகத்தில் சிவகணமாக உள்ளார் என்று நம்புகிறார்கள். அங்கு வந்த அனைவரிடமும் சிவபெருமான் " இனி இந்த தலத்தில் எவர் ஒருவர் வந்து என்னை வணங்குவார்களோ அவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள், அவர்களது ஆயுள் கூடும் " எனக் கூறி ஆசிர்வதித்தார்.
முழுவதுமாக மனக் கலக்கத்தில் இருந்த மார்கண்டேயர் உயிர் பிச்சை பெற்றதும்  தன்னை மறந்து, தான் உயிருடன்தான் இருக்கின்றேனா எனத் தெரியாமல் சிவ பெருமானை சுற்றி சுற்றி ஓடி பிரதர்ஷணம் செய்து வணங்கினார். வலமிருந்து இடமாக சுற்றியபோது முதலில் ஆறைக் கடந்து ஒன்றை கடக்க வேண்டி இருந்ததினால் (16 என்ற எண் ) 16 என்ற எண்  61 என அவருக்கு தோன்றியது.  என் வயது பதினாறா இல்லை அறுபத்தி ஒன்றா என்ற குழப்பம் அவருக்கே ஏற்பட்டது. பதினாறாக இருந்தாலும் அறுபத்தி ஒன்றாக  இருந்தாலும் இரண்டும் உனக்கு ஒன்றே என்றார் அங்கிருந்த பிரும்மா.  அதனால்தான் அறுபதைக் கடந்து அறுபத்தி ஒன்றாம் வயதை எட்டும் போது அங்கு வந்து சதாபிஷேகம் செய்து கொள்வது வழக்கம் ஆயிற்று.
 சதாபிஷேக வைபவத்தில் ஆசி பெரும் குடும்பத்தினர்
அதாவது மார்கண்டேயர்  பிரதர்ஷனம் செய்து வணங்கியபோது தோன்றிய வயதைக் கடந்ததும் 'எனக்கு ஆரோக்கியமும் ஆயுள் விருத்தியும் கொடு' என சிவனை அங்கு வந்து வேண்டிக் கொண்டு பூஜை செய்வது வழக்கம் ஆயிற்று. அது போலவே அங்கு வந்திருந்த எண்பது கோடி தேவ, முனி, ரிஷிகளின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டு சிவனிடம் தனது ஆயுள் விருத்தி அடைய வேண்டிக் கொள்ள ஒவ்வொருவரும் தமது எண்பதாவது வயதில் அங்கு வந்து சதாபிஷேகம் செய்து கொள்வது சிறந்ததாம்.

பிரும்மா பெற்ற ஞானோபதேசம் 

 
படம் நன்றி: Holi India divine .org
அப்போது அங்கு கூடி இருந்த அனைவரிடமும் ஒரு நிகழ்ச்சியை பிரும்மா கூறினார் . ஒரு முறை பிரும்மா சிவபெருமானிடம் சென்று தனக்கு ஞானோபதேசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது சிவபெருமான் அவரிடம் சிறிது வில்வ மரத்து விதைகளைக் கொடுத்து அந்த விதையை அவர் செல்லும் இடத்து மண்ணில் விதைத்தப் பின் ஒரு நாழி முகூர்தத்துக்குள் அந்த இடத்தில் வில்வ மரம் தோன்றினால் அந்த இடத்தில் வந்து தான்  ஞானோபதேசம் செய்வேன் எனக் கூறி இருந்தார். பிருமாவும் பல இடங்களிலும் சுற்றித் திரிந்து  அதில் இருந்து விதைகளை விதைத்து வந்தார். ஆனால் ஒரு நாழி முகூர்தத்துக்குள் எங்குமே விலவ மரம் வெளிவரவில்லை. கடைசியாக திருக்கடையூருக்கு வந்தவர் அந்த வில்வ விதையை அங்கு புதைக்க அங்கு வில்வ மரம் வனமே தோன்றியது. உடனே சிவன் வில்வவனேஸ்வரராக அவர் முன்னால் தோன்றி தான் வாக்கு தந்தபடி பிர்ரும்மாவுக்கு ஞானோபதேசம் செய்தார். பிருமாவும் வில்வமர வனப்பிரதேசத்தில் தோன்றிய சிவனை  வில்வவனேஸ்வரரை அங்கேயே வணங்கித் துதித்தார். இப்படியான செய்தியை பிரும்மா அங்கு கூடி இருந்த அனைத்து தேவ முனிவர்களிடமும் கூறிவிட்டு  அந்த மண்ணின் மகிமை அத்தனை புகழ் மிக்கதாக இருந்ததினால்  இனி அங்கு சிவபெருமான் கால சம்ஹாரனாக மட்டும் அல்ல ஞானம் தரும் வில்வேஸ்வரராகவும் இருப்பார் என்று கூறினார்.

அன்னை அபிராமி
அதைக் கேட்ட பிருமாவின் மனைவியான சரஸ்வதி தனக்கும் ஞானோபதேசம் கிடைக்க வேண்டும் என சிவபெருமானை வேண்டிக் கொள்ள அவர் தன்னுடைய மனைவியான பார்வதியும் அதே ஷேத்திரத்தில் அபிராமியாக அவளுக்கு அருளுவாள் எனவும் கூறினார். அதற்கேற்ப சரஸ்வதியும் பார்வதியிடம்  தனக்கு ஞானம் தருமாறு வேண்டுக் கொள்ள பார்வதி அவளுக்கு சில காலத்துக்குப் பின்னர் இந்த ஞானஸ்தலத்துக்கே வந்தால் ஞானோபதேசம் செய்வதாக வாக்கு தந்தாள். அதை ஏற்றுக் கொண்ட  சரஸ்வதியும் சில காலம் அங்கேயே தவம் இருந்து   பார்வதியிடம் ஞானம் பெற்றாள். அதனால்தான் அங்கு ஞானம் பெற்றுக் கொண்ட சரஸ்வதி  அந்த பூமியையே சேர்ந்த பூந்தோட்டம் என்ற இடத்திற்குச் சென்று அங்கு ஞானம் தரும் தேவியாக அமர்ந்தால்.அவளுக்கு ஞானம் தந்த பார்வதி தான் அங்கேயே அபிராமி என்ற பெயரில் தங்கி இருந்து  கொண்டு அங்கு வந்து தன்னை துதிப்பவர்களுக்கு அளவில்லா செல்வம் தருவேன் எனக் கூறினாள்.
வெகு காலத்துக்கு முன்னால் ஒரு அந்தணர் அந்த இடத்துக்கு வந்து தினமும் அபிராமியை தரிசித்து வந்தார். அவர் அங்கு வந்து சந்திரனைப் போல ஒளி தரும் அபிராமிக்கு முன்னால் அமர்ந்து கொண்டு தியானத்தில் இருப்பார். அப்படி அவர் வணங்கிக் கொண்டு வந்த பொது ஒரு நாள்  அம்மாவாசை. அந்த  தினத்தன்று அந்த நாட்டு மன்னனும் அங்கு வந்தார். அவர் வந்து நின்றதையும் கவனிக்காமல் தனது முழு மனதையும் இறைவியின்பால் செலுத்தி அமர்ந்து இருந்த அந்தணரை கண்டதும் தன்னை மன்னன் என்றும் மதிக்காமல் அமர்ந்து உள்ளார் என அவமானமாகக் கருதிய மன்னன் அவரிடம் ' ஐயா இன்று என்ன நாள்?' எனக் கேட்க அந்தணர் முழுப் பொலிவுடன் காட்சி தந்து கொண்டு இருந்த அபிராமியை மனதில் நினைத்துக் கொண்டு அந்த சந்தோஷத்தை பிரதிபலிக்கும் விதமாக 'பூரண சந்திரன்' என்றார். அது போதுமே மன்னனுக்கு , உடனேயே தனது படையினரை அனுப்பி அந்த அந்தணரை எழுப்பி தன்னிடம் அழைத்து வருமாறு கூறினார். அந்தணர் வந்ததும் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து தான் பூரண சந்திரனை அன்று மாலை தரிசிக்க விரும்புவதாகவும் அப்படி அன்று பூரண சந்திரன் வரவில்லை எனில் அவரை தீயில் போட்டு பொசுக்கி விடுவதாகவும் கூறினார்.
காலை கழிந்து மாலை நேரம் வந்தது. சந்திரன் தோன்றவில்லை. அந்தணரை கயிற்றிலே கட்டி தீக் குண்டத்தின் அருகில் அழைத்துச் செல்லலாயினர்.  அம்மாவாசை அன்று சந்திரன் எப்படிக் காட்சி அளிப்பார். தீக்க குழுயின் அருகில் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டு இருந்த அந்தணர் தேவியை பார்த்தவண்ணமே கதறிய அழுதார். மனமுருகி அன்னை அபிராமியை தோற்றி தனது மனதில் எழுந்த வார்த்தைகளைக் கொண்டு பாடத் துவங்கினார்.  ஒன்றன் பின் ஒன்றாக எழுபத்தி எட்டு பாடல்களை பாடி முடித்தும் சந்திரன் தோன்றவில்லை. மன்னன் அந்த அந்தணரை தீக்குண்டத்தில் தள்ளுமாறு படையினருக்கு ஆணையிட்டபோது தனது பரிபூரண பக்தரான அந்த அந்தணரின் துயரம் தேவியை உலுக்கியது. சந்திரன் தோன்றா விட்டால் என்ன, நான் சந்திர ஒளியைக் காட்டுகிறேன் என்று நினைத்தவள் தனது காதணியை எடுத்து ஆகாயத்தில் வீசினாள். அது பூரண சந்திர பிம்பம் போல ஒளி வீசியபடி உலகெங்கும் ஒளியைத் தர அதிர்ந்தான் மன்னன். ஓடோடிச் சென்று அந்தணரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். தேவியின் கருணையை கண்டு மனம் நெகிழ்ந்த அந்தணர் அந்த பாடல்களை தொடர்ந்து பாடி முடித்தார். தேவி அங்கு பிரசன்னமாகி  இனி அந்த தன்னைப் போற்றி அந்த அந்தணர் பாடிய  பாடல்களை அங்கே வந்து பாடி துதிப்பவர்களுக்கு தான் பூரண ஆசிகளை வழங்கி ஞானம் மட்டும் அல்ல வறுமையை ஒழிந்து பெரும் செல்வத்தையும் தருவேன் எனக் கூறி விட்டு மறைந்தாள். அந்த அந்தணரும் அபிராமி பக்தர் என்ற பெயரைக் கொண்டு அந்த பாடல்களை அபிராமி அந்தாதி என அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார். கால ஓட்டத்தில் அவர் பெயர் அபிராமி பட்டர் என ஆயிற்று.

ஆலய விலாசம்

அருள்மிகு  அமிர்தகடேஸ்வரர்   தேவஸ்தானம்

திருக்கடையூர்- 609 311  

Phone: 04364-287429

   பூஜைகளுக்கு மற்றும் சதாபிஷேக வைபவங்களுக்கு 
தொடர்பு கொள்ள எனக்கு கிடைத்த சில விலாசங்கள்.
கீழே குறிப்பிட்டு உள்ளவர்களை தொடர்பு கொண்டு ஆவன செய்து கொள்வது அவரவர்கள் பொறுப்பே  .

திரு R. சுவாமிநாத குருக்கள், திரு  R. சுப்ரமணிய குருக்கள் மற்றும் 
திரு R.அமிர்தகடேச  குருக்கள் -  போன்  04364-287516, 287646  
----------
திரு .நாகராஜ்  குருக்கள்  -  போன்  04364 - 287349 
 ------------
திரு ரவிச்சந்திர குருக்கள் 04364 - 287784 
-----------
திரு G.S. ரவி   04964-287821

Wednesday, February 16, 2011

Aiyavaadi Maha Prathyanga Devi Temple

மஹா பிரத்யங்கரா  தேவி ஆலயம் 
அய்யாவாடி 
சாந்திப்பிரியா   
 
ஆதிகாலம்  முதற்கொண்டே  தேவி பிரத்யங்கரா  தான் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ள பக்தர்களுக்கே தன்னை வெளிக் காட்டிக் கொண்டு வந்துள்ளார். மிகவும் உக்ரஹமான முகத்துடன் காட்சி தரும் அவர் உருவம் எத்தனைக்கு எத்தனை பயங்கரமாக உள்ளதோ அதனை கருணை உள்ளம்  கொண்டவள் அந்த தேவி. அவரை அனைவராலும் ஆராதிக்க முடியாது.  அவள் படத்தை தனி நபர்களின் வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளவும் கூடாது என்பது ஒரு விதியாம் . அப்படிப்பட்ட அந்த தேவியின்  ஆலயம் பல இடங்களிலும் உள்ளது என்றாலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீடர் தொலைவில் உள்ள ஐயாவாடியில் உள்ள பழமையான ஆலயமே பிரசித்தி பெற்றது. திரு நாகேஸ்வரம் ஆலயத்தில் இருந்து  இது வெகு சமீபத்தில் உள்ளது. உப்பிலியப்பன் ஆலயத்தில் இருந்தும் போக முடியும். அங்கிருந்து இந்த ஆலயம் ஆறு கிலோ மீடர் தொலைவில்  உள்ளது. 
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாத அம்மாவாசை தினத்தன்றும் காலை பத்து மணி முதல் பகல் ஒரு மணிவரை அந்த தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் யாகத்தில் மூட்டை மூடையாக சிவப்பு மிளகாயை யாகத் தீயில் கொட்டி யாகம் நடைபெறுகின்றது.  அதில்  தேவியின் சக்தியை காட்டும் அதிசயம் என்ன என்றால் அந்த தீயில் போடப்படும்  மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவதும் இல்லை, எவருடைய கண்களும்  எரிவதும்  இல்லை. இந்த அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காண முடியாது. அந்த பிரத்யங்கரா  தேவி யார்? எதற்காக அவதாரம் எடுத்தாள்.  இனி அவள் வரலாற்றுக் கதையை படியுங்கள்.
முன்னொரு காலத்தில் தனது பக்தன் பிரகலாதனை கொடுமைப் படுத்திக் கொண்டு இருந்த ஹிரண்யகசிபு  என்ற அசுரனை அழிக்க மகா விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டி இருந்தது. அந்த அசுரன் பெற்று இருந்த வரத்தின்படி அவனை மனிதர்களோ, மிருகங்களோ அல்லது வேறு ஆயுதங்களினாலோ  கொல்ல முடியாது.  அவன் ரத்தம் கீழே சிந்தினால் அதில் இருந்து மீண்டும் மீண்டும் அவன் வெளிவருவான். ஆகவே மனிதரும் அல்லாமல், மிருகமும் அல்லாத மிருகத் தலைக் கொண்ட ஒரு பயங்கர உருவைக் கொண்ட  ஜீவனாக அவதாரம் எடுத்த  நரசிம்மர்  அந்த அசுரன் பிரகலாதனுடன் நின்று கொண்டு இருந்த இடத்தில் இருந்த ஒரு தூணில் இருந்து அதை உடைத்துக் கொண்டு வெளிவந்து அந்த அசுரனை தன் தொடை மீது  பிடித்து வைத்துக் கொண்டு அவன் உடலை தன் விரல் நகத்தினால் கீறி அவன் உடலில் இருந்து வெளி வந்த ரத்தத்தைக் குடித்து அவனை கொன்றார்.
அப்போது அவன் ரத்தம்  பூமியில் சிந்தினால் மீண்டும் அவன் உயிர் பிழைப்பான் என்பதற்காக சிவபெருமான் சரபேஸ்வரர் என்ற உருவத்தை அதாவது சிங்கத்தின்  முகம், உடலோ பாதி மனிதர், பாதி சரபு என்ற பறவை. அந்த பறவையின் ரக்கைகளாக காளி மற்றும் துர்க்கை இருந்தனர்.  அந்த உருவை எடுத்த சிவன் அசுரனைக் கொண்டு கொண்டு இருந்த நரசிம்மரை அசுரனுடன் சேர்த்து ஆகாயத்தில் தூக்கி  வைத்துக் கொண்டார். அந்த அரக்கன் சிந்திய ரத்தத்தை பறவை கீழே விழாமல் குடித்தது.  அசுரனின் ரத்தம் கீழே சிந்தாமல் அவன் உயிர் பிழைக்க வழி இல்லாமல் மரணம் அடைந்தான்.
ஆனால் அவனைக்  கொன்றப் பின்னும் நரசிம்மரின் இரத்த வெறி அடங்கவில்லை. உலகம் முழுவதையும் அவர் அழிக்கத் துவங்க தேவர்கள்  சரபேஸ்வரர் உருவில் இருந்த சிவபெருமானிடம் அடைக்கலம் ஆயினர். சிவபெருமானும் தனது மூன்றாவது கண்ணில் (சரபேஸ்வரர் நெற்றியில் இருந்து) இருந்து ஒரு பயங்கர தேவதையை வெளிப்படுத்தினார். அவள் ஆயிரத்தி எட்டு சிங்கத்தின் , இரண்டாயிரத்து  பதினாறு  கண்கள், அதைத் தவிர மூன்றாவது கண், இரண்டாயிரம் கைகள், அந்தக் கைகளில் இருந்த விரல்களில்  புலியின் நகங்கள், யமனைப் போன்ற கரிய நிறம், நீல ஆடை,  சரீரமோ யானயை  விட  பத்து மடங்கு பெரியது  என்ற விஸ்வரூப தோற்றத்துடன்  வெளி வந்தாள்.
 
இன்னொரு புராணக் கதை முமூர்த்திகளின் மனைவிகளான பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி போன்ற மூவருமே சிவ பெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி ஒன்று சேர்ந்து தமது சக்திகளை உள்ளடக்கிய பிரத்தியங்கரா தேவியை உருவாக்கினார்கள்  எனக் கூறுகின்றது.  அப்படி வெளிவந்த உடனேயே அவள்  நரசிம்மரை நோக்கி ஓடினாள். தன்னை விட அதி பயங்கர ரூபத்துடன் வந்துள்ள ஜீவனைக் கண்ட நரசிம்மர் ஓடத் துவங்க  அவரை துரத்திப் பிடித்த பிரத்தியங்கர தேவி அவரை தனது வாய்க்குள்  போட்டுக் கொண்டு  அப்படியே முழுங்கி விட்டாள். அவரை முழுங்கியதும் அவள் கோபம் தணிந்தது. சாந்தம்  அடைந்தவள் தனது விஸ்வரூப தரிசனத்தைக் களைந்து மகா பிரத்தியங்கர தேவியாகி நின்றாள்.
 
பின்னர் அவளுக்கு இந்த இடத்தில் ஆலயம் எழும்பியது. ஆனால் அதன் கால விவரம் தெரியவில்லை.  இங்கு ஏன் அவளுக்கு ஆலயம் எழுந்தது என்பதற்கான விசேஷ காரணம் தெரியவில்லை என்றாலும், ஒரு முறை இந்திரஜித் ஸ்ரீ ராமபிரானுடன் போரிட்ட போது அவரை வெல்ல வேண்டும் என்பதற்காக இங்கு வந்து எட்டு திக்குகளிலும் பிரேதங்களை வைத்து நிகும்பலா என்ற  யாகத்தை துவக்கி, பிரத்தியங்கரா தேவியை ஆராதித்தான். அந்த யாகம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் பிறகு அவன் ராமரை அழித்து விடுவான் என்பதினால் லஷ்மணர் தனது சகோதரரான ராமனுக்காக இங்கு ஹனுமாருடன் வந்து  எந்த காரணத்தைக் கொண்டும் அக்கிரமத்தை வெல்ல விடக்கூடாது என அந்த தேவியை வேண்டினார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த தேவியும் தர்மமே வெல்லும் எனக் கூறி இந்திரஜித்துக்கு அவன் வேண்டிய வரத்தை  தர மறுத்து விட்டாள்.
மேலும் இந்த பூமியில்தான் பஞ்ச பாண்டவர்களும் கூட வந்து பூஜைகளை செய்தனராம்.  அகத்திய முனிவரும் தன்னுடன் பதினெட்டு சித்தர்களை அழைத்து வந்து இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு பிரத்தியுங்கரா தேவியை பூஜித்ததாகவும் ஆகவே அவள் அகத்தியருக்கு மட்டும் காட்சி தந்ததாகவும் வாய் மொழிக் கதை உள்ளது.
ஆலயத்துக்குள் அமர்ந்து உள்ள பிரத்தியங்கா தேவி  நான்கு சிங்கங்கள் பூட்டப்பட்ட ரதத்தில் அமர்ந்தவாறு எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள்.  முகம் சிங்கத்தினுடயது . கழுத்திலோ மனித கபாலத்தில் கோர்த்த  மாலைகள். தலை  மீது படம் எடுத்து ஆடும் எழு தலை நாகம். பயங்கரமான தோற்றம். பிரத்தியுங்கரா தேவி அதர்வண வேதத்தின் அதிபதியாம்.
அவள் சன்னதியின் நுழை வாயிலில் அவளுக்கு வலதுபுறம் மிகப் பெரிய சரபேஸ்வரர் மற்றும் அகஸ்தியர், இடது புறம் இரண்டு ரிஷிகளான  பிரத்தியங்கரா மற்றும் அங்கீரசா போன்றவர்கள் என அவர்களின் உருவம் அந்த சுவற்றில் பதிக்கப்பட்டு உள்ள தாமிரத் தட்டில் காணப்படுகின்றது. சன்னதிக்கு உள்ளே அனைத்து பக்க சுவர்களிலும் பல கதைகளை ஓவியமாக வரைந்து உள்ளார்கள். அங்கு பிரத்யங்கரா  தேவிக்கு துணையாக அறுபத்தி நான்கு பைரவர்கள் உள்ளனராம். அவர்களை எட்டு  பிரிவாக வகுத்து உள்ளார்கள்.  அவற்றில்  முக்கியமானது எட்டு பைரவர்களின் தோற்றமே. அந்த ஓவியங்களில் பைரவர் அன்னம், மாடு, மயில், இரண்டு விதமான நாய்கள், கழுகு, குதிரை, யானை மற்றும் கழுதை போன்ற வாகனங்களுடன் காட்சி தருகிறார்.

கால பைரவரின்  பலவிதத் தோற்றங்கள்  
( இவை  போன்ற  வேறு  வண்ண  உருவங்களே  ஆலயத்துக்குள் உள்ளன  )
இந்த ஆலயத்தில் அர்ச்சனைகள் செய்யப்படுவது இல்லை. தேவிக்கு பூஜை மட்டுமே செய்யப்படுகின்றது. ஆலய சன்னதிகள் முழுவதும் மேல் கூரையில் உத்ராக்ஷ  மணிகளினால் ஆன மாலைகள் பந்தல் போடப்பட்டு உள்ளதைப் போல தொங்க விடப்பட்டு உள்ளன என்பதினால் அங்கு யாரும் தீபம் எற்றுவதையோ, கற்பூரம் கொளுத்துவதையோ அனுமதிப்பதும் இல்லை. ஆலய தல விருஷத்தில் ஐந்து விதமான இலைகளைக் கொண்ட அரச மரம் உள்ளது.  ஆலயத்தின் எட்டு திக்குகளிலும் மயானம் உள்ளது. இரவில் ஆலயத்துக்குள் எவருமே தங்க அனுமதிப்பது இல்லை.
இங்கு வந்து இந்த தேவியை வணகுவதின் மூலம் 
- ஏவல், பில்லி, சூனிய வைப்புக்கள் போன்றவை விலகுகின்றன
-எதிரிகள் நாசம் அடைவார்கள்
-நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுகின்றன
-பூர்வ ஜென்ம பாபங்கள் விலகுகின்றன
- நமக்கு தொல்லை தருபவர்களின் எண்ணம் நிறைவேறாது .

ஆலய விலாசம்
மஹா பிரதியுங்கரா தேவி ஆலயம்
அய்யாவாடி, 
திருநாகேஸ்வரபுரம்,
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்,
பின் 612 204

Monday, February 14, 2011

Kathiraamangala Vana Durgai

கதிராமங்கல வன துர்க்கை
சாந்திப்பிரியா
 வன துர்கை
மாயவரம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் தல வழிபாட்டுக்குச் செல்பவர்கள் காண வேண்டிய மிகவும் முக்கியமான இடங்களில் வன துர்க்கை ஆலயமும் ஒன்று. மாயவரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமமான கதிராமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம். சுமார்  2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம் என்று அதைப் பற்றிக் கூறுகிறார்கள்.   மேலும் ராகு தோஷ பரிகாரத்துக்கு வன துர்க்கை ஆலயத்தை விட வேறு சிறந்த ஆலயமே  இல்லை என்றும்  கூறுகிறார்கள்.  மற்றும் ஒரு விசேஷம். எவர் ஒருவருக்கு தனது குல தெய்வம் யார் என்பது தெரியவில்லையோ அவர்கள் இந்த ஆலயத்தில் வந்து  தமது குல தெய்வமாகவே வன துர்காவை வணங்கினால் அவர்களின் குல தெய்வத்திடம் அதை அவள் சமர்பித்து விடுவதாக ஒரு ஐதீகம் உள்ளதாம். இதை அங்குள்ள பண்டிதர் விளக்கினார்.  திருக்கடையூருக்கு அறுபதாவது வயது திருமணம் செய்து கொள்ளப் போகின்றவர்கள், அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மார்க்கண்டேயர் ஆலயம் மற்றும் அங்கிருந்து சிறிது தூரம்  தள்ளி உள்ள இந்த வன துர்க்கை ஆலயமும் சென்றுவிட்டு திரும்பினால்  மட்டுமே   அந்த வைபவம் நிறைவு பெற்றதற்கான பூரணப் பலன் கிடைக்கும் என்றும் படித்தப் பண்டிதர்கள்  கூறுகிறார்கள். கதிராமங்கல வனத்தில் வந்து குடியேறிய வன துர்க்கை யார்?
 மகிஷாசுரமர்த்தினியின் ஒரு காட்சி 
வேத  காலத்தில் மகிஷாசுரன் என்ற அசுரன் அனைவரையும் துன்புறுத்திக் கொண்டு இருந்தான். அவன் பெற்று இருந்த வரங்களினால் அவனை தேவ லோகத்திலும் பிற லோகத்திலும் இருந்தவர்களால் அழிக்க  முடியவில்லை.  அவனை இந்த லோகத்தில் பிறந்த எவராலும் அழிக்க  முடியாது என்ற வரத்தைப் பெற்று இருந்தான். அவனுடன் சும்பன், நிசும்பன் போன்ற அசுரர்களும் இருந்தார்கள். அந்த அசுரர்கள் அனைவரும் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தார்கள். அந்த அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் போன தேவர்கள் பிரும்மாவுடன் சேர்ந்து மகாவிஷ்ணுவை சந்திக்கச் சென்றார்கள். அப்போது அவர் ஆனந்தசயனத்தின் மீது அமர்ந்தவாறு அங்கு இருந்த சிவபெருமானுடன் பேசிக்கொண்டு இருந்தார். அங்கு தேவர்களுடன் சென்ற பிரும்மா மகிஷாசுரனினால் ஏற்பட்டுள்ள தொல்லைகளை விலாவாரியாக எடுத்துக் கூற அதைக் கேட்ட மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் கோபமுற்றனர். அவர்களுடைய உடம்பில் இருந்து வெளிவந்த கோபக் கனல் இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய ஒளியை தோற்றுவித்தது. சிறிது நேரத்தில் அந்த ஒளியில் இருந்து பல ஆயுதங்களையும் கையில் ஏந்திய சாந்தமான முகத்தைக் கொண்ட பெண் ஒருவள் வெளி வந்தாள். வெளி வந்தவள் ரிக்வேதத்தின் மொழியில் தன்னை காத்தாயி எனும் துர்க்கை என்று கூறிக் கொண்டு தான் அனைத்து கடவுட்களையும் படைத்த பரப்பிரும்மனின் உருவம் எனவும், தான் எவராலும் படைக்கப்படவில்லை எனவும், அனைவரது சக்தியினாலேயே தான் இயற்கையாக உருவானவள் எனவும் எனவேதான் இந்த பூமியில் பிறந்தவர்களால் அழிக்க முடியாத அந்த மகிஷாசுரனை அழிக்க இயற்கையாக தோன்றியவளான  தான் வந்துள்ளேன்  எனவும் கூற தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவளுக்கு அனைத்து கடவுட்களும் தம்மிடம் இருந்த ஆயுதங்களை அவளிடம் கொடுத்து அந்த அசுரனை அழிக்க வேண்டினார்கள். அவளும் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அவர்களை அழிக்க  கிளம்பினாள்.
மகிஷாசுரமர்த்தினியின்  இன்னொரு  காட்சி
தன்னை வேண்டும் என்றே ஒரு அழகிய பெண்ணாக மாற்றிக் கொண்டு மலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்தாள். அவளைக் கண்ட அசுரர்கள்  அவள் அழகில் மயங்கி அவளை அடைய அவளை துரத்திக் கொண்டு சென்றபோது அவள்  தனது சக்தியினால் ஒரு பெரிய சேனையே உருவாக்கிக் கொண்டு அவர்களுடன் யுத்தம் செய்யத் துவங்கினாள்.  சண்டை ஆரம்பித்தது. ஒன்பது தினங்கள் நடந்த சண்டையில் ஒன்பது அவதாரங்களை எடுத்து சண்டை போட்டவள்,  ஒவ்வொரு நாளிலும் பல்வேறு உருவங்களில் மாறி மாறி வந்து சண்டையிட்ட அந்த மகிஷாசுரனை  ,  ஒன்பதாம் நாள்  சிங்க உருவில் வந்த வந்த அவனை   தனது வாளால்  வெட்டிக் கொன்றாள்.  துன்பங்களை துடைக்க வந்தவள்  என்று பொருள் தரும் துர்கா என்ற சொல்லினால் அவள் பெயர் துர்கா என்ற மகிஷாசுரமர்தினி என ஆயிற்று. இன்னொரு கதையின்படி  துர்க்கை என்பவள் சிவபெருமானின் மனைவியான பார்வதியே எனவும் அவளே சிவனுடைய கோபக் கனலில் இருந்து அந்த அசுரனை வதம் செய்யத்  தோன்றினாள் என்று தெரிகின்றது. எது எப்படியோ, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி போன்றவர்கள் பார்வதியின் அவதாரங்களே என்பதே உண்மை.
மகிஷாசுரமர்த்தினியின் இன்னொரு  காட்சி
அதன் பின் பல இடங்களிலும் அவள் கோபமான முகத்தையும் பல கைகளையும் கொண்டு  தனது காலடியில் தான் வதம் செய்த அசுரனின் உடல் மீது நின்ற நிலையில்  மகிஷாசுரமர்தினியாகவும்   , மேலும் நவ துர்க்கை ரூபங்களிலும் காட்சி தந்து கொண்டு  இருந்தவள்  அனைவராலும் பூஜிக்கப்படத் துவங்கினாள்.  ஒரு கால கட்டத்தில் யுத்தத்தினால் சலிப்பு அடைந்தவள் சிறிது காலம் ஏகாந்தமாக இருக்க நினைத்து  அந்த காலத்தில் சிவ மல்லிகை  என்று அழைக்கப்பட்ட கதிராமங்கலத்தில் வந்து அங்கிருந்த ஒரு வனத்தில் தங்கினாள்.  அங்கு வந்தவள் தனது கோலத்தை மாற்றிக் கொண்டாள். சாந்தமான முகம், நான்கு கைகள், தான் கொன்ற அசுரன் மீது நின்ற காட்சி  மற்றும் யுத்தவெறி இல்லாத தோற்றம் போன்றவற்றைக் கொண்டு அங்கு  வனத்தில் அமர்ந்து கொண்டு இளைப்பாறி சிவபெருமானுடன் மீண்டும் இணைய வேண்டும் என தவம் செய்து வந்தாள். தினமும்  ஆகாயமார்கமாக வாரணாசிக்குச்   சென்று அங்குள்ள கங்கையில் நீராடிவிட்டு இங்கு வந்து தவம் இருப்பாளாம்.  அனைவரது துயரங்களையும் தூளாக்கி இன்பத்தை தருபவள் என்ற அர்த்தத்தை தரும் துர்கா என்ற பெயரை ஏந்தி  வனத்தில் வந்து அமர்ந்ததினால் வன துர்காவாக மாறினாள்.  அப்போதெல்லாம் அந்த வனத்தில் சிவ பூஜைக்காக தினமும் மலர்களை பறிக்க வந்து கொண்டு இருந்த  ராகு பகவான் அங்கு வந்து தங்கி இருந்த வன துர்காவை அடையாளம் கண்டு கொண்டு  தினமும் அவளை அங்கேயே வந்து வணங்கி பூஜிக்கலானார் .  அவர் வேண்டுகோளை ஏற்ற அவளும் அங்கேயே  ஒரு சிலையாக அமர்ந்தாள். இப்படியாக அந்த வனத்தின் தோன்றியவளே வன துர்க்கை.
வன துர்கையின்  இன்னொரு  காட்சி
 ஒரு கால கட்டத்தில் அங்கு கம்பர்  ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் அந்த வனத்தில்  இருந்த துர்காவின் சிலையை  ஒரு தேவதையின் சிலையாகக் கருதி பூஜித்து வந்தார்.  ஒரு நாள் நல்ல மழை, காற்று. குடுசையே பறந்து விடும்போல இருந்தது.  தான் வீட்டை காப்பற்றி தன்னையும் காத்தருளுமாறு மனமுருகி கம்பர் அந்த வன தேவதையை வேண்டினார். என்ன ஆச்சர்யம் அவர் குடுசை மீது நெல் கதிரால் ஆன தடுப்பு தானாகவே தோன்றியது.  அதைக் கண்ட கம்பர் அந்த தேவதையை நெல்லால் ஆன கதிரை தடுப்பை தந்தவள் என்ற அர்த்தத்தில் 'கதிர் தேவி' என ஆராதித்தார். இப்படியாக அந்த இடத்தின் பெயர் கதிரால் ஆன இடம் என  ஆகி அது மருவி கதிராமங்கலம் ஆயிற்று.
அடுத்து இன்னொரு காட்சி நடந்தது.  அகத்திய முனிவரும் அங்கு வந்து தங்கி இருந்தார்.  அவரும் அந்த தேவியின் சிலையை யார் என்று அறியாமல் வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர் சிவபெருமான்-பார்வதியின் திருமணத்தைக் காண இமயமலையை நோக்கிச் சென்றபோது வழியில் ஒரு அசுரன் அவரை தடுத்து நிறுத்தினான்.  அகத்தியரோ உருவத்தில் சிறியவர்.  பூதாகாரமான அந்த அசுரனை எப்படி சண்டை இட்டு சமாளித்து மேலே செல்வது?  வனத்துக்குத் திரும்பினார். அங்கு இருந்த அந்த தேவியின் சிலையை மகிஷாசுரனைக் கொன்ற துர்கையாக பாவித்து மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவர் வேண்டுகோளை  ஏற்றுக் கொண்டவள் அவருக்கு சக்தி தந்தாள். அந்த சக்தியைக் கொண்டு அகத்தியர் மீண்டும் இமயமலைக்கு கிளம்பிச் சென்றார். மீண்டும் அதே அசுரன் அவரை வழிமறிக்க அவனை நொடிப்பொழுதில் அவர் துர்க்கை தந்த சக்தியால் சம்ஹாரம் செய்துவிட்டு மேலே தொடர்ந்து பயணம் செய்தார்.  அப்போதுதான் அவர் அங்குள்ள தேவதையின் சிலை பார்வதியின் அவதாரமான துர்க்கையே என்பதை புரிந்து கொண்டு வனத்தில் இருந்து கொண்டு தனக்கு வாழ்வளித்த துர்க்கை என்ற பொருளில் பாடித் துதிக்க அவள் அங்கு வன துர்க்கை என்ற பெயரைப் பெற்றாள்.
 வன துர்கையின்  இன்னொரு  காட்சி
மூன்றாவது சம்பவம். மிருகுண்டு முனிவர் தனது மகன் மார்க்கண்டேயனின் மரணம் நிகழ இருந்த சமயத்தில் அங்கு வந்தார். அங்கு பார்வதி தேவி துர்கையின் உருவில் சிவனை நோக்கி தவத்தில் இருந்த காட்சியைக் கண்டார். தனது மகனின் உயிரை காப்பாற்றுமாறு அவளிடம் மனமுருகி வேண்டிக் கொண்டார். அவளோ அவரை திருக்கடையூருக்குச் சென்று அங்குள்ள சிவனை வேண்டிக் கொண்டால் அவர் மார்க்கண்டேயனின் உயிரை காப்பாற்றுவார் எனக் கூற அந்த முனிவரும் திருக்கடையூருக்குச் சென்று சிவனை பிராத்திக்க மார்கண்டேயர் உயிர் பிழைத்த  தனிக் கதை பிறந்தது. ( அந்தக் கதை திருக்கடையூர் ஆலய கட்டுரையில்  தனியாக வெளியாகும்) . அதனால்தான் திருக்கடையூருக்கு செல்பவர்கள் மறக்காமல் மார்க்கண்டேயர் மற்றும் இந்த வன துர்க்கை ஆலயங்களுக்கும் செல்வதினால் மட்டுமே  பூரண அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
காலம் ஓடியது. அங்கிருந்த மக்கள்  ஒரு கீற்றுக் கொட்டகைப் போட்டு அந்த வன துர்கை பிரதிஷ்டை செய்து போற்றி வணங்கத் துவங்கினார்கள். மெல்ல மெல்ல சாமியாடிகள் மூலமும் அசரி வாக்கு மூலமும் அந்த ஆலய  தேவியின் மகிமைகள் வெளியில் தெரியத் துவங்கின. அந்த ஆலயத்தில்  உள்ள சிலை சுயம்புவாகத் தோன்றியது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு அந்த ஆலயம் எழுந்துள்ளது.  அந்த காலங்களில் ஆலயம் என்றால் கட்டிடம் அல்ல.  எந்த இடத்தில் எந்தக் கடவுள் பூஜிக்கப்பட்டாரோ அந்த இடத்தை ஆகாயத்தின் கீழுள்ள லயம் ( கொட்டகை என்று அர்த்தம்), அதாவது  ஆலயம் என்று அழைத்தார்கள் . அந்த வேத காலத்தில் அந்த இடத்தின் பெயர் சிவ மல்லிகை வனம்  என்றே கூறப்பட்டு வந்தது. 
ஆகவேதான் அந்த ஆலயத்தில்  ராகு  பகவான் வந்து அவளை பூஜிப்பதினால்  ராகு தோஷம் உள்ளவர்கள் வன துர்கையான அவளை அந்த ஆலயத்துக்கு வந்து பூஜித்தால், அங்கே வந்து அவளை பூஜிக்கும் ராகு தேவர்  அந்த பக்தர்களின் தோஷங்களை களைவார் என்ற நம்பிக்கை தோன்றியது .  அதற்கு ஆதாரமாகவோ என்னவோ அந்த தேவியின் சிலையின்  முன்புறப் பகுதியில் சாந்த முகம் கொண்ட அம்பாளின் தோற்றமும், பின்புறப் பகுதி  படமெடுத்து நிற்கும் நாகத்தின் உருவாகவும்  அமைந்து உள்ளது என்பது அதிசயம்.  அந்த அழகை அந்த ஆலயத்தில் தேவியின் சிலைக்கு  மேல் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி மூலம் காணலாம்.  அங்குள்ள வன துர்க்கை அற்புதமான சாந்த முகத்தோடு ஒரு தாமரை மலரில் நின்று கொண்டு தனது நான்கு கைகளில் இரண்டில்  சங்கு, சக்கரம் ஏந்தியும்  மூன்றாவதில் அபய முத்திரைக் காட்டி, நான்காவதை தனது இடுப்பில் வைத்தவாறு கிழக்கு நோக்கி  காட்சி தருகிறாள்.  இதுவும் இந்த வன துர்க்கை ஆலயத்தின் ஒரு தனிச் சிறப்பே. ஏன் எனில் மற்ற அனைத்து ஆலயங்களில் அவள் வடக்கு அல்லது தெற்கு நோக்கியை  காட்சி தருபவள். ஆகவேதான் ராகு நாயகர் பூஜிக்கும் அந்த  நேரமான ராகு காலத்தின் போது  அங்கு வந்து எலுமிச்சை  பழத்தில் நெய் விளக்கு ஏற்றி  அந்த துர்கையை வழிபட ராகு தோஷம் விலகும் என்ற ஐதீகம் தோன்றியது.  வன துர்கையின் முன்னிலையில் ராகு பகவானிடம் தனது தோஷங்களை களையுமாறு பக்தர்கள் வேண்டிக் கொள்ளும்போது அவள் ராகுவிடம் தன்னை பூஜிக்கும் அந்த பக்தர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு  அவர்களுக்கு அருளுமாறு ஆணையிடுவதாகவும்,  அதனால்தான் ராகு பகவான் பூஜிக்கும் நேரத்தில் சென்று வழிபடும்போது  ராகு தோஷம் விலகுவதாகவும் நம்புகிறார்கள்.
அந்த ஆலயத்தின் மற்றும் ஒரு விசேஷம்  என்ன என்றால் அனைத்து ஆலயங்களிலும் உள்ளதைப் போல அங்கு விநாயகரின் சன்னதி இல்லை. விநாயகரை வணங்கியப் பின்னரே ஆலயங்களில் உள்ள மற்ற மூர்த்திகளை வணங்க வேண்டும் என்ற விதிக்கு மாறாக இங்கு அந்த துர்கையுடனே  அவர் கலந்து இருப்பதான ஐதீகம் உள்ளதினால் (பார்வதியின் மகனானவர் அல்லவா) அவருக்கு தனி சன்னதி எழுப்பப்படவில்லை.  ஆலயத்தின் மீது மேல் கூரையில் ஒரு பெரிய துவாரம் அமைந்து உள்ளது  என்பது மற்றும் ஒரு சிறப்பு அம்சம் . அந்த  ஐதீகத்தின் பின்னணி காரணம் என்ன என்றால்  முன்னர் அந்த துர்க்கை தினமும்  வாரணாசிக்குச்   சென்று அங்குள்ள கங்கையில் நீராடிவிட்டு இங்கு வந்து தவம் இருந்து வந்ததினால் இன்றும் தினமும் அவள் விடியற்காலை ஆகாயமார்கமாக  வாரணாசிக்குச் சென்று கங்கையில் நீராடிவிட்டு  வருகிறாள் என்பதற்காகவே அந்த துவாரம் அமைக்கப்பட்டு உள்ளதாம் .  ஆலயத்தின் எதிரில் ஒரு தாமரைக் குளம் உள்ளது. அதில் வெள்ளைநிற மீன்களும், தாமரை மலர்களும் உள்ளன.
இந்த ஆலயத்தில் வந்து  நெய்விளக்கேற்றி பூஜிப்பதினால்:-
- ஆயுள் பெருகும்
-ராகு தோஷம் விலகும்
-செல்வம் கொழிக்கும்
-சத்ருக்கள் நாசம் அடைவார்கள்
-திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும்
மனம் அமைதி பெரும் மற்றும் 
நோய் நொடி தீரும்.
பூஜை விவரங்களை அறிந்து கொள்ள  வசதியாக  சில பண்டிதர்களின் தொலைபேசி எண் கிடைத்தது.  அவை கீழே  தரப்பட்டு உள்ளது. அவர்களை தொடர்ப்பு கொள்வது அவரவர்களின் பொறுப்பே.
B.ராமானந்த குருக்கள்   04364 232555 / 232999
R.சுரேஷ் குருக்கள்   094432 61999
B. கும்பேஸ்வர குருக்கள்  094867 67735
R . சந்த்ரு குருக்கள்  094430 71765
S .பாலாஜி குருக்கள்  094422 11122
ஆலய விலாசம்
ஸ்ரீ வன துர்க்கை ஆலயம்
கதிராமங்கலம்
தஞ்சாவூர் மாவட்டம்
பின் : 612 106
தொலைபேசி எண் : 04364 232555

Sunday, February 13, 2011

Thillai Kaali Amman Temple

 தில்லை காளியம்மன் ஆலயம் 
- சாந்த சொரூபம்  மற்றும் உக்ரஹ சொரூபமாக 
உள்ள இரண்டு  தேவிகள் - 
சாந்திப்பிரியா 
சிதம்பரத்தில் இரண்டு முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அனைவரும் அறிந்தது சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயமே. ஆனால் அந்த தில்லை நடராஜர் ஆலயத்துக்குச் செல்பவர்கள் அந்த ஆலயத்தில் இருந்து அரை கிலோ தொலைவில் உள்ள தில்லை காளியம்மனையும் தரிசிக்காமல் வந்தால் தில்லை நடராஜரை தரிசித்தப் பலன் கிடைக்காது  என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிதம்பர ஆலயத்தில் இருந்து இடதுபுறமாகச் சென்று முதலில் வரும் இடது திருப்பத்தில் திரும்பி நேராகச்  சென்றால் அந்த சாலையின் இறுதியில் தில்லை காளியம்மன் ஆலயம் உள்ளது. அது மட்டும் அல்ல அந்த தில்லை காளியம்மன் வரக் காரணமாக இருந்த   இரண்டு முனிவர்களான 'ஆனந்தீஸ்வரர்'  மற்றும் 'இளமையாக்கினார்'  போன்றவர்களின் சமாதிகளும் அந்த ஊரில் எங்கோ உள்ளது என்றும், அங்கும் போய் அவர்களை தரிசிப்பது இன்னும் விசேஷம் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த முனிவர்களின்  சமாதி உள்ள இடம் எனக்கு கிடைக்கவில்லை. தில்லை காளியம்மன்  ஆலயத்தின்  வரலாறு மற்றும் மகிமைகள்  என்ன ?  இனி படியுங்கள்.
சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு சம்பவத்தில் பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு அரக்கனை அழிக்க வேண்டும். அந்த அரக்கனை பார்வதியால் மட்டுமே அழிக்க முடியும் என்பது தேவ விதியாக இருந்தது. ஆகவே பார்வதி சிவபெருமானை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் பார்வதி உக்ரக குணத்தைக் கொண்டு அந்த அவதாரத்தை எடுக்க முடியாது. மேலும் பார்வதி முன்னர் ஒரு கட்டத்தில் பெற்று இருந்த சாபத்தினால் சிவபெருமானை பிரிந்து சில காலம் வாழ வேண்டும்.  இவை அனைத்தையும் அந்த ஈசன் அறிந்து இருந்தார். ஆகவே அதற்காக அவர் ஒரு நாடகத்தை நடத்தத் துவங்கினார். 
அதற்கேற்ப ஒரு முறை தேவ  லோகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகின்றது.  அது நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை  சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக  கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சாபம் தந்து விடுகிறார்.  சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத  பார்வதி அழுது புலம்பி தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொண்டப் பின் சாப விமோசனம் பெற்று மீண்டும் அவரை எப்படி அடைவது எனக் கேட்க அதற்கு சிவபெருமான் கூறினார் "இன்னும் சிறிது காலத்தில்  அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ  இதே காளி உருவில் தேவர்களுக்காக போரிட்டு அசுரர்களை அழிப்பாய். அப்போது நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். அப்போது ஒரு கட்டத்தில்  உன்னுடன் சேர்ந்து நடனமாடி உன்னை என்னுடன் மீண்டும் அழைத்துக் கொள்வேன்".
காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களை துன்புறுத்தி  வரலானான். தேவர்களும் ரிஷி முனிவர்களும் மும்மூர்த்திகளிடம்  சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர்.  அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க அவர் காளி உருவில் இருந்த பார்வதியை  அதற்கு அனுப்பினார். காளி உருவில் இருந்த பார்வதி யுத்தகளத்துக்குச் சென்றாள். தாரகாசூரனையும் அவன் சேனையும் அழித்தப் பின் வெற்றி அடைந்தாள். ஆனால்  அவனை வெற்றி கொண்டபின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. வெறியாட்டம் போல ஊழித்தாண்டவம் ஆடத் துவங்கினாள்.
தாரகாசுரன் அழிந்தாலும் முனிவர்களின் தொல்லை தொடர்ந்தது. அவர்கள் சிவபெருமானிடம் மீண்டும் சென்று வேண்டினார்கள். அனைவரும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைவது காளிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளுக்கு சிவபெருமான் மீது கோபம் ஏற்பட்டது. அவரை  விட தானே பெரியவள் என முன்னர் கொண்டு இருந்த எண்ணம் இன்னமும் குறையவில்லை.  வெறியும் அடங்கவில்லை. அவளுடைய உக்ரஹத்தினால்  அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் சொல்லொண்ணத் துயருக்கு  ஆளாகினார்கள்.
அந்த நேரத்தில் அங்கு இருந்த வியாக்கிரபாதர்  மற்றும் பதஞ்சலி முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் அவர்களுக்கு தில்லையில் திருநடனக் காட்சி தந்தார். அதை மெச்சி அனைவரும் அமர்ந்து இருந்த வேலையில் காளி சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். போட்டியில் யார் தோற்றாலும்  அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும் என்பது நிபந்தனை. நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் கடவுட்களும் இசை ஒலிகளை எழுப்ப காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி  தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான்  ஊர்த்துவத் தாண்டவம்  என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர் தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து காலை மேலே தூக்கி தனது காதில் அணிந்து கொள்ள அதே  ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது.  பெண்ணினால் எப்படி காலை மேலே தூக்கிக்  காட்டுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள்.
   சிவபெருமான் காலை  மேலே  தூக்கி  ஆடிய  ஊர்த்துவத் தாண்டவம்
போட்டியில் தோற்று போனதும் அவமானம் அடைந்தவள் ஊர் எல்லைக்குச் சென்று உக்ரஹமாக வட எல்லைக் காளியாக அமர்ந்தாள். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். சக்தி இல்லையேல் சிவனும் இல்லை.  இருவரும் இணைந்து இல்லாதவரை  பிரபஞ்சம் எப்படி இயங்கும் என கவலைப்பட அனைத்து தேவர்களும், மகாவிஷ்ணுவும் பிரும்மாவும் ஒன்று சேர்ந்து  காளியிடம் சென்று அவளை சாந்தமடையுமாறு  வேண்டிக் கொண்டனர்.  பிரும்மா அங்கேயே அமர்ந்து கொண்டு காளியை புகழ்ந்து வேதங்களை ஊதி அவளை பூஜிக்க    அவர் பூஜையை ஏற்றுக் கொண்ட காளி  பிரும்மசாமுண்டேஸ்வரி  என்ற பெயரால் நான்கு முகம் கொண்ட சாந்தநாயகி  ஆகி  அதே இடத்தில் இன்னொரு  சன்னதியில் சென்று அமர்ந்தாள்.
ஆக அந்த ஆலயத்தில் ஒரு சன்னதியில் உக்ரஹ காளி தேவியாக பல ஆயுதங்களையும் ஏந்திய  எட்டுக் கைகளைக் கொண்ட தில்லைகாளியாகவும்  இன்னொரு சன்னதியில் சாந்தமான  நான்கு முக பிரும்மசாமுண்டேஸ்வரி அம்மனாகவும் காட்சி தந்தவாறு பக்தர்களை ரட்சித்து வருகிறாள்.  காளி சொரூபத்தில் உள்ளவள் பில்லி சூனியப் பேய்கள், சினம், பகை, கொடிய வியாதிகள், ஆணவம், அகம்பாவம் போன்றவற்றை அழித்து வருகிறாள். சாந்தமான  பிரும்மசாமுண்டேஸ்வரி கல்வி, ஐஸ்வர்யம் , வீரம் போன்ற அனைத்தையும் அளித்து வருகிறாள்.
  தில்லை காளியம்மன்   
இந்த ஆலயத்தை பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அதாவது  1229 AD மற்றும் 1278 AD ஆண்டுகளில் கோபெருங்ஜிங்கன்    என்ற மன்னன் கட்டினான் என்று தெரிகின்றது. அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த பழக்கத்தின்படி போரில் வெற்றி அடைவதற்காக தமது தலையையே தருவதாக வேண்டிக் கொண்ட படையினர் சிலர் போர்களில் வெற்றிப் பெற்றப் பின் அங்கு வந்து தமது தலைகளையே வெட்டிக் கொண்டு மரணம் அடைந்ததாக வாய்மொழிக் கதைகளும் உள்ளதாம்.
ஆலயம் மிகப் பெரியது அல்ல ஆனால் மிகப் பழமையானது.  உள்ளே நுழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள தனி சன்னதியில் ஆனந்த நர்த்தனமாடும் விநாயகரும், இடதுபுற தனிச் சன்னதியில்  முருகனும் கிழக்கு திசையை நோக்கிப் பார்த்தவாறு இருந்து கொண்டு பக்தர்களை காத்து அருளுகிறார்கள்.  முதல் மண்டபமான தியான மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும்  அலுவலக அறைகள் உள்ளன. தியான மண்டபத்தில்  பக்தர்கள் நெய் விளக்குகளை ஏற்றி தேவிகளை ஆராதிக்க விளக்கு  பீடமும் வைக்கப்பட்டு உள்ளது.  அடுத்த மண்டபத்தில் உள்ள   சன்னதிகளில்   நாம்  காணுவது  கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அமர்ந்து உள்ள தில்லைக் காளி அம்மனும்  மேற்கு நோக்கி அமர்ந்து உள்ள பிரும்ம சாமுண்டியும் ஆவர்கள். அவர்கள் அங்கு அமர்ந்தவாறு பக்தர்களை ரட்சித்து  கொண்டு உள்ளனர். அந்த மண்டப  நுழை வாயிலில்  இருபுறமும்  பிரும்மாண்டமான காவல் தேவதைகள்  நின்று கொண்டு உள்ளார்கள். சுவறுகளில் சில கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
பிரும்ம சாமுண்டி
தில்லை காளியம்மனுக்கு வெள்ளைப் புடவையை மட்டுமே சாத்துகிறார்கள்.  தினமும் அவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டுமே நடைபெறுகின்றது. காளி சாந்தம் அடையக்கூடாது என்பதற்காக உஷ்ணம் தரும் எண்ணையான நல்லெண்ணை மட்டுமே உபயோகிக்கின்றார்களாம்.  உடம்பு முழுவதும்  மஞ்சளினால் ஆன குங்குமம் கொட்டப்பட்டு ( அதைக் காப்பிடுதல் என்று கூறுகிறார்கள்)  வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு உள்ளது. கண்கள் மட்டும் ஜொலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தில் காட்சி தருகின்றது.  தில்லை காளியை    அந்த கோலத்தில்  மட்டுமே தரிசிக்க முடிந்தது. (படத்தைப் பார்க்கவும்). அவள் சன்னதிக்கு பக்கத்திலேயே அவளை ஆராதித்து  தீபம் ஏற்றி  வேண்டிக்  கொள்ள   விளக்கு  பீடமும் வைக்கப்பட்டு உள்ளது.  அந்த சன்னதியில் தில்லை காளியை தரிசிப்பவர்கள் கண்டிப்பாக அவள் உக்ரஹமான கண்களை உற்று நோக்கி அவளை வேண்டிக் கொண்டால்தான் பலன் உண்டு. ஆனால்  அதற்கு மாறாக  பிரும்ம சாமுண்டிக்கோ அனைத்து விதமான அலங்காரங்களும் செய்யப்பட்டு தேன், பால், போன்ற அபிஷேகங்களும் செய்யப் படுகின்றனவாம்.
வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு,  
உடம்பு முழுவது குங்குமத்தினால் காப்பிடப்பட்டு (மூடப்பட்டு ), கண்கள்  
வெள்ளை பொட்டினால் பளபளத்த நிலையில் 
காட்சி தந்து கொண்டு இருந்த தில்லைக் காளி அம்மன்
அவள் சன்னதிக்கு பக்கத்தில் சுமார் ஆறு அல்லது ஐந்து அடி  உயரமும்    நான்கு அல்லது ஐந்து அடி சுற்றளவும் கொண்ட  மிகப் பெரிய நாகதேவர் சிலை உள்ளது. காளியை வணங்கியப் பின் அவரையும் வணங்க வேண்டுமாம். அதன் பக்கத்திலேயே போர் வீரர்கள் தமது தலைகளை வெட்டிக் கொண்டு பலி தந்தக் காட்சியைக் காணலாம்.
 நாக தேவர் 
 மேலும் அந்த சன்னதிக்குள் அனைத்து பகுதிகளிலும் பைரவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர்  போன்றவர்களும் காட்சி தருகிறார்கள்.

ஆலய  சன்னதிகளின்  வரைபடம் 
ஆலய விலாசம் 
ஆலய நிர்வாக அதிகாரி, 
அருள்மிகு தில்லை  காளியம்மன் ஆலயம் ,
சிதம்பரம், கடலூர் மாவட்டம், 
தமிழ்நாடு,
தொலைபேசி எண்:- 04144-230251
தொடர்ப்பு கொள்ள இ மெயில் முகவரி: info@thillaikali.com

Saturday, February 12, 2011

Vengalamudi aiyanaar temple

வெங்கலமுடி ஐயனார் கோயில் 
-  ஒரு செய்தி -

 நான் தமிழாக்கம் செய்துள்ள  "Village Gods of Tamilnadu" என்ற பகுதியை பாராட்டி வாழ்த்து அனுப்பி உள்ள முதியவர் திரு சுப்பிரமணியம் அவர்கள் அதில் கூறி உள்ள ஒரு அற்புதமான செய்தியை வாசகர்களுக்கு அளிக்கிறேன். திரு சுப்பிரமணியன் அவர்களுக்கு  எனது மனமார்ந்த நன்றி. 
சாந்திப்பிரியா 

திரு சுப்பிரமணியம் 

திரு சுப்பிரமணியம் அவர்கள்எழுதி உள்ள கடிதம் இது :-
'' ஓம்
அன்புடையீர் திரு ராமசந்திரன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
உங்களுடைய முயற்சிக்கு இந்நாட்டு மக்கள் குறிப்பாக ஆன்மீகவாதிகள் மிகவும் கடமைப் பட்டிருக்கின்றனர்.
மிகுந்த கவனமும் எளிய ஆங்கில நடையும் அருமை. அவற்றை சாந்திப்பிரியா மொழிபெயர்த்துத் தந்துள்ளார்கள். அவர்களுக்கும் இந்த முதியவனின் ஆசிகளும் வாழ்த்துக்களும்.
திண்டுக்கல் அருகில் நத்தம் போகும் சாலையில் சாணார்பட்டியிலிருந்து சென்று அய்யாப்பட்டியை அடையலாம்.
அங்கு வெங்கலமுடி ஐயனார் என்று ஒரு கோயில் உள்ளது. கோயிலின் அருகே தல விருட்சமாக ஒரு காட்டுமரம் உள்ளது. அதில் பக்தர்கள் நேர்ந்துகொண்டு வெண்கலத்தினால் செய்யப்பட்ட மணிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து அந்த மரத்தின் அடித்தண்டில் ஆணிகளினால் பொருத்துகின்றனர். அந்த மரம் நாளடைவில் அந்த மணிகளைத் தன் சதையால் மூடி உள்ளே இழுத்து மூடிவிடுகிறது. ஆணிகளும் மரத்தினுள் மறைந்துவிடுகின்றன. மரத்தின் மீது புடைப்பாக மூடிக்கொள்ளப்பட்ட மணிகளின் உருவம் தெரிகின்றது.
அதே வகையினைச் சேர்ந்த மற்றுமொரு மரம் அதே உயரத்திலும் பருமனிலும் இருக்கின்றது. அந்த மரத்திற்கு இந்த உள்ளே இழுத்துக் கொள்ளும் தன்மையில்லை.
இந்தக் கட்டுரைகளுக்கு அணி சேர்க்க அந்தப் புத்தகங்களிலிருந்து படங்களையும் இணைத்தால் நன்று.
அன்புடன் வெ.சுப்பிரமணியன்
ஓம்"

Friday, February 11, 2011

Trinetra Thasabuja Veera Anjaneya Temple

ஆனந்தமங்கல எனும் அனந்தமங்கல    
ஸ்ரீ த்ரினேத்ர  சதுர்புஜ  மற்றும்  
ஸ்ரீ த்ரினேத்ர தசபுஜ 
வீர ஆஞ்சனேய ஆலயங்கள் 
 
சாந்திப்பிரியா  ஹனுமான் காயத்ரி மந்திரம்
ஓம் ஆஞ்சனேய  வித்மஹே
மஹா பாலயே தீமஹீ 
தன் நோ ஹனுமான் ப்ரசோதயாத் 
ஓம்

நாங்கள் சமீபத்தில் மாயவரத்தை சுற்றி உள்ள ஊர்களில் இருந்த பழைய காலத்து ஆலயங்களை சுற்றிப் பார்க்க சென்று இருந்தோம்.  அப்போது நாங்கள் திருக்கடவூர் ஆலயத்தில் இருந்து மாயவரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் வரும் நாகை மாவட்டத்தில் உள்ள  சிற்றூரான  அனந்தமங்கலம் என்ற இடத்தில் இருந்த  இரண்டு ஆஞ்சனேய ஆலயங்கள் சென்று இருந்தோம். இரண்டு ஆலயங்களுமே ஒன்றுடன் ஒன்று சம்மந்தப்பட்டது. அந்த இரண்டிலுமே உள்ள மூல தெய்வங்கள் ஆஞ்சநேயர் ஆவார்.  ஒன்றில் சதுர்புஜ ஆஞ்சநேயராகவும் மற்றதில் தசபுஜ ஆஞ்சநேயராகவும் அவர் காட்சி தருகிறார்.
அந்த இரண்டில் உள்ள மூலவர் ஆலயத்து ஆஞ்சநேயர் இராமாயண காலத்தை சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள். மூலவர் ஆலயத்தில் ஆஞ்சநேயர்  வடக்கு நோக்கி பார்த்தபடி நின்று கொண்டு உள்ளார். மேலும் அந்த ஆலயத்தில் சுவற்றோடு ஒட்டி உள்ள குகை போன்ற பகுதியில் ஒரு பாறையில் காணப்படும் சிலை சுயம்புவாகத்  தோன்றியது என்கிறார்கள். அந்த ஆஞ்சநேயருக்கு மூன்று கண்கள் மற்றும்  நான்கு கைகளே தெரிகின்றன.  அந்த ஆலயத்தில் ஒரே ஒரு பிராகாரம் மட்டுமே உள்ளது. அதற்குள் உள்ள குகைப் பகுதியில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.  அந்த ஆலயம் தோன்றிய வரலாறு பற்றி அங்குள்ள பண்டிதர் கூறிய கதை  இது.
" சீதையை மீட்க ஸ்ரீலங்காவுக்குச் சென்றுவிட்டு வெற்றியுடன் ஸ்ரீ ராமபிரான் தனது பரிவாரங்களுடன்  அயோத்தியாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அவர்கள் வரும்  வழியில் இருந்த பாரத்துவாஜ முனிவரின் ஆசிரமத்தில்  தங்கி இளைப்பாறினார்கள்  . அந்த நேரத்தில் அங்கு வந்த நாரத முனிவர் நடந்து முடிந்துவிட்ட யுத்தத்தில் பல அரக்கர்களும் மடிந்துவிட்டாலும், இன்னமும் சில அரக்கர்கள் தப்பி வந்து கடலுக்கு அடியில் அமர்ந்து கொண்டு தேவர்களை  துன்புறுத்தி  வந்தவாறு தமக்கு மேலும்  அரிய சக்தியைப் பெற தவத்தில் இருக்கிறார்கள். அவர்கள்  மீண்டும் சக்தியைப் பெற்றுவிட்டால் அவர்களை அடக்க முடியாமல் போய்விடும் என்பதினால் கடலுக்கு அடியில் அமர்ந்துகொண்டு தவம் செய்பவர்கள்  தவ வலிமை பெறு முன் அவர்களை அழித்து விட வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார் . ஆனால் ராமபிரானோ அந்த நேரத்தில் முக்கியமானது பரதனுக்கு வாக்கு கொடுத்ததே எனவும் அந்த வாக்கின்படி யுத்தம் முடிந்த கையோடு அயோத்தியாவுக்கே முதலில் சென்று அரசை ஏற்கின்றேன் என்று  தான் கொடுத்த வாக்கை மீறுவது குற்றம் என்பதினால் அந்த அரக்கர்களை அழிக்க தான் வேறு உபாயம் செய்வதாக உறுதி அளித்தார். அதன் பின் அனைவருடனும் ஆலோசனை செய்தப் பின் அந்த அரக்கர்களை அழிக்க  ஹனுமாரை அனுப்புவது எனவும் முடிவு  செய்தனர்.
ஏற்கனவே  செய்து இருந்த தவத்தினால் பல வலிமைகளை பெற்று இருந்தவர்களை அழிப்பது சுலபம் அல்ல என்பதினால் அனைத்து தெய்வங்களின் சக்தியை ஒருமித்துக்  கொண்டே  அவர்களை அழிக்க வேண்டும் என்பதினால் பிரும்ம பிரும்ம கபாலத்தையும், ருத்த்ரர் மழுவையும், ராமர் தனது வில் அம்புகளையும், விஷ்ணு சங்கு மற்றும் சக்கரத்தையும், இந்திரன் வஜ்ராயுதம் போன்றவற்றை  அளிக்க முடிவாக வந்த சிவ பெருமான் தனது மூன்றாவது கண்ணையே அவருக்குக் கொடுத்தார்.  வானேறிச் செல்ல அங்கு இருந்த  கருடாழ்வாரோ தனது சிறகுகளையே ஹனுமாருக்குக் கொடுக்க விண்ணிலே பறந்து சென்ற ஹனுமார் கடலில் முழுகி அங்கு இருந்த அரக்கர்களை வெளியே இழுத்து வந்து அவர்களுடன் யுத்தம் செய்து அழித்தார்.  நவகிரகங்களும் அவருக்கு துணை புரிந்தனராம். அந்த யுத்தம் முடிந்ததும் கடலில் குளித்துவிட்டு மீண்டும் ராமபிரானை  காண ஆனந்தத்துடன் வந்து அருகில் இருந்த வனப் பிரதேசத்தில் தங்கி சற்று நேரம் கண் அயர்ந்தார். அந்த இடமே ஆனந்த மங்கலமாயிற்று."
சதுர் புஜ ஆஞ்சநேயர்

அவர் கண் அயர்ந்த இடத்தில் அவர்  சோழர்கள் காலத்தில் ஒரு ஆலயம் எழுந்தது.  அது ஆழ்வார்கள் காலத்துக்கு  பின்னர் தோன்றியதாம்.  சோழர்கள் காலத்தில் அந்த மூலவர் ஆலயத்தின் எதிரிலேயே  இன்னொரு   ஆலயம் அமைக்கப்பட்டது.  அதில் மூலவராக வாசுதேவப் பெருமான் தனது மனைவிகளுடன் அற்புதமாகக் காட்சி தந்து கொண்டு இருக்கின்றார்.  அருகில் உள்ள கருவறையில் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி  தனது மனைவிகளான ருக்மணி மற்றும் சத்தியபாமாவுடன் காட்சி தருகிறார். அதே ஆலயத்தில் த்ரினேத்ர  தசபுஜ ஆஞ்சநேயர் எனும் பத்து கைகளைக் கொண்ட ஹனுமானும் தெற்கு நோக்கி பார்த்தவாறு எழுந்து அருளி உள்ளார். அவரை முதல் ஆலயத்தின் உற்சவ மூர்த்தி என்கிறார்கள்.   அங்குள்ள  ஹனுமார் தனது பத்து கைகளிலும் அனைத்து கடவுட்களும் கொடுத்த ஆயுதங்களுடனும் கருடாழ்வார் தந்த சிறகுடனும் காட்சி தருகிறார்.  ஆலயத்தில் பூதேவியார் மற்றும் கருடாழ்வாருக்கும் சன்னதிகள் உள்ளன.

 தசபுஜ புஜ ஆஞ்சநேயர் 

அனந்தமங்கலத்துக்கு செல்பவர்கள் முதலில் மூலவர் ஆலயத்தில்  உள்ள  த்ரினேத்ர  சதுர்புஜ  புஜ ஆஞ்சநேயரை வணங்கியப்  பிறகு ,  அதன் எதிரில் அமைந்து உள்ள ஸ்ரீ ராஜகோபாலப் பெருமாள் ஆலயத்தில் அமர்ந்துள்ள த்ரினேத்ர  தசபுஜ புஜ ஆஞ்சநேயரையும்  சென்று வணங்க வேண்டும்.  அமாவாசைகளில் ஆஞ்சநேயருக்கு  திருமஞ்சனம் சாற்றி விசேஷ பூஜைகள் செய்கிறார்கள்.  இந்த ஆலயங்களில் வந்து  ஹனுமானை வழிபட்டால்  அவருக்கு ஆயுதங்களையும் தனது கண்ணையும் தந்த சிவன், விஷ்ணு, பிரும்மா, ராமர், இந்திரன், ருத்திரன், கருடாழ்வார் போன்ற அனைவரையும்  ஒரு சேர வழிபட்ட பலன் கிடைக்குமாம்.  மேலும் உடல் வலிமை, நீண்ட  ஆயுள், எதிரிகள் நாசம், நோய் நொடிகள் விலகி மனத் தெளிவு ஏற்படுவது திண்ணம் என்கிறார்கள். முக்கியமாக மூல நட்ஷத்திரத்துடன் வரும் அம்மாவாசையில் அல்லது கேட்டை நட்சத்திர காலத்திலும் இங்கு வந்து அவருக்கு துளசி இலை மாலை, அல்லது வடை மாலை சாற்றி வழிபட்டால் அனைத்து தீமைகளும் விலகுமாம்.  அதற்கும் மேலாக அவர் வாலில் அனைத்து நவகிரகங்களும் அமர்ந்து உள்ளன எனவும்  நவகிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடுவது சிறந்ததாம்.
ஆலய விலாசம்
த்ரினேத்ர  சதுர்புஜ ஆஞ்சநேயசுவாமி ஆலயம் மற்றும் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி ஆலயம்,
அனந்தமங்கலம்- 609 307 ,
தரங்கம்பாடி வட்டம்,
நாகப்பட்டினம்  மாவட்டம்,
தமிழ்நாடு
போன்: 04364 -289888 

Siththaadi Kaaththaayi Amman Satha Chandi Homam

சித்தாடி காத்தாயி அம்மன் சத சண்டி மஹா யாகம்
சாந்திப்பிரியா 
போன வருடம் போல இந்த முறையும் காத்தாயி அம்மனின் சத சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடந்தது.  சாத் பேதம் இன்றி நகர மற்றும் சித்தாடி அக்கம்பக்கத்து கிராமத்தினரும் பக்திபூர்வமாக திரண்டு இருந்தது ஒரு அற்புதமான நிகழ்ச்சியாக இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர் குமுழி இருந்த மண்டபத்தில் காலை ஆறு மணி முப்பது நிமிடத்துக்கு விழா துவங்க சிவாச்சாரியர்கள் கலச பூஜையை செய்து முடித்தனர்.  அடுத்து சதசண்டி மகா ஹோமம் துவங்கியது. ஆறு ஹோம குண்டங்களில் ஆறு சிவாச்சாரியார்கள் அமர்ந்து இருக்க தலைமை சிவாசாரியார் மந்திரங்களை ஓதத் துவந்த ஹோம குண்டத்தில் அமர்ந்து இருந்த சிவாச்சாரியார்களும் அதை உச்சரித்தவண்ணம் ஹோம குண்டத்தில் யாகப் பொருட்களை  போடத் துவங்கினார்கள்.
முப்பத்தாறு கோடி தேவர்களும் அங்கு கூடி இருந்ததாக நம்பப்பட்ட அங்கு அவர்களை பூஜிக்கும் விதமாக வண்ணமயமான 3600 ரவிக்கை துணிகள்- அதில் முடித்து வைக்கப்பட்டு இருந்த சில யாகப் பொருட்களுடன் - ஹோம குண்டங்களில் போடப்பட்டன. சங்கல்பம் செய்து அமர்ந்து இருந்த ராமகிருஷ்ணன், ராமதாஸன், விஸ்வநாதன் மற்றும் ராமகிருஷ்ணன் போன்ற பக்தஜன டிரஸ்ட்  அங்கத்தினர்கள் மற்றும் பக்தர்கள் பக்திபூர்வமாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் அங்கு வந்திருந்த அனைத்து பக்தர்களும் பசியின்றி யாகம் முடியும்வரை அங்கு நிகழ்சிகளில் கலந்து கொண்டவாறு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காப்பி மற்றும் மோர் போன்ற பானங்களும் தொடர்ச்சியாக தரப்பட்டு வந்தன. சதசண்டி யாக பூஜை சுமார் மூன்று மணி நேரம் நடந்து முடிந்ததும், கன்யா சுகாசினி பூஜை மற்றும் வடுக பிரும்மச்சாரி பூஜை  தொடர்ந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காத்தாய் காட்சி  அளித்தாள்  . நான்காம்  தேதியன்று நாங்கள்   சென்று இருந்தபோது குழந்தை  வடிவில் காட்சி தந்தாள். சந்தனக் கலரில் அவள் உருவம். கண்களில் மை தீட்டி இருந்தது போல கருப்பு விழிகள் , அதன் மீது புருவங்கள். முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பது போல இருந்தது.  அந்த காட்சியும் கண்களை விட்டு அகல மறுக்கின்றது.

அதைத் தொடர்ந்து மஹா பூரணார்த்தியும்  கலச மகாபிஷேகமும் நடைபெற்றது. தீபாராதனை முடிந்ததும், உள்ளே பச்சையம்மன் மற்றும் காத்தாயி கருவறைக்கு வெளியே பச்சைப் போடுதல் நடைபெற்றது. அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு, சில பெண்மணிகள் அதை செய்து முடித்ததும் அனைத்து பக்தர்களும் வரிசையாக உள்ளே சென்று ஒரு கைப்பிடி அளவு பச்சை போடும் நிகழ்ச்சியில் அரிசியை  போட்டு வணங்கினார்கள்.  என வாழ்கையில் எனக்கும்  என்னுடைய மனைவிக்கும் அந்த வாய்ப்பு  கிடைத்தது.  என் குடும்பத்தில் என்னுடைய மகன், மருமகள், பேரன் மற்றும் பேத்தி உடல் நலத்தோடு வாழ்கையில் உயர்வோடு இருக்க வேண்டும் என  வேண்டிக் கொண்டு வந்தோம்.  அதன் பின் முடிவாக மகா ஆராதனை நடைபெற்று  முடிந்தது.

இதில் கூற வேண்டிய விஷயம் என்ன என்றால் அனைத்து நிகழ்ச்சிகளும் முறையாக ஏற்பாடு செய்து இருந்தது போல ஒன்றன் பின் ஒன்றாக தடங்கல் இன்றி தொடர்ந்து நடந்தது. அங்கு பந்தா இல்லை. நான் பெரியவன், நீ பெரியவன், எனக்கே இந்த சாமி சொந்தம் என்ற பாகுபாடுகளோ பேதங்களோ இல்லாமல் அமைதியாக நடைபெற்று முடிந்தது.  அந்த ஆலயத்தை, இதை நான் செய்தேன், அதை நான் செய்தேன் என  ஒரு குறிப்பிட்ட மனிதர்களே ஆக்ரமித்துக் கொண்டு அதிகாரம் செய்யாமல் அனைத்துமே மாடு பூட்டப்பட்ட வண்டி ஓடுவது போல சென்று கொண்டே இருந்தது.

காவல் தெய்வங்களும் நன்றாகவே  ஆராதிக்கப்பட்டு இருந்தன.  சடா முனிக்கு மிகப் பெரிய - சுமார் ஐநூறு அல்லது ஆயிரம் இருக்கும் என நினைக்கின்றேன் - எலுமிச்சை பழம் தொடுத்த  மாலை போடப்பட்டு இருந்தது.


அது மட்டும் அல்ல காலை முதலிலேயே விழா முடியும்வரை தொடர்ந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் - ஏழை எளியவர் என்ற பேதம் இன்றி நூறு ரூபாய், ஐம்பது  ரூபாய் என கொடுக்க திரு விஸ்வநாதன் கை வலியையும் பொருட்படுத்தாமல்   தொடர்ந்து ரசீதுகளை கொடுக்கக் கொடுக்க அதைக் காட்டி  அனைவரும் ஒரே மாதிரியான பிரசாத பையை  பெற்றுக் கொண்டனர். இது மிகவும் வியப்பான  விஷயமாக இருந்தது.  தெய்வத்தின் முன் அனைவரும் சமமே என்ற கருத்தை பிரதிபலித்தது.  ஆலயத்துக்கு ஏழை எளியவர்கள்  தந்த அந்த நூறு அல்லது ஐம்பது ரூபாய் அவரவர் இதயத்தில் இருந்து கொடுக்கப்பட்டது.  நூறு ரூபாய் தந்தவனுக்கும் அதே நடைமுறை, பத்தாயிரம் ரூபாய் தந்தவனுக்கும் அதை நடைமுறை என பேதம் இன்றி நடந்து முடிந்த காட்சி கண்களை  விட்டு நகர மறுக்கின்றது.

விழா நிறைவு பெற்றதும் வந்திருந்த அனைவரும் உணவு அருந்தி விட்டுச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்றவர்களின் மனமும் வயிறும் நிறைந்தே வெளியேறினார்கள். நடந்து முடிந்த அது அதி அற்புதமான விழா . எங்களின் குல தெய்வம்  எங்களைக் கைவிடாது. எங்களை காத்து ரட்ஷிப்பாள்  என்பது திண்ணம்.