Sunday, September 11, 2011

Jayalashmi Amma -Nagamma Temple

நாகம்மா நாராயணசுவாமி 
ஜெயலஷ்மி அம்மா குருஸ்தானம்
சாந்திப்பிரியா


ஆந்திரப்பிரதேசத்தின் செகந்திராபாத்தின் திருமலகிரியில் உள்ள ஸ்ரீலஸ்ரீ ஜெயலஷ்மி அம்மாள் குருஸ்தானம் என்பது நாக தேவதைக்காக அமைக்கப்பட்டு உள்ள ஆலயம். அந்த ஆலயத்தை அமைத்தவர் ஜெயலஷ்மி அம்மா என்று போற்றி வணங்கப்படும் ஒரு தெய்வீகத் தாய். அவர் கட்டி உள்ள அந்த ஆலய வரலாறு சுவையாக உள்ளது. புற்றுக்குள் நாகமாக அமர்ந்து இருந்த நாகதேவதையின் புற்றை இடித்து தரைமட்டமாக்கிய போது அதே இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடச் செய்தார் நாக தேவதை.   தனக்கு அதே இடத்தில் ஆலயத்தை அமைத்துக் கொள்ள நாகம்மா எனும் நாக தேவதை  தேர்தெடுத்த குடும்பமே ஜெயலஷ்மி அம்மாவின் குடும்பம்.

பூர்வக் கதை 
அப்போது இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது. திருச்சியில் ஆங்கிலேயப் படையினர் தங்கி இருந்தார்கள். அப்போது இந்த ஆலயம் உள்ள இடம் வெற்று இடமாக இருந்தது. அங்கு ஒரு புற்றுக்குள் வாழும் நாகம் வாழ்ந்து வந்தது. அந்தப் புற்றின் அருகில்  சிறிய ஆலயத்தைக் கட்டி அந்த நாகதேவதையை அங்கிருந்த மக்கள் தெய்வமாகப் போற்றி வணங்கி வந்தார்கள். ஆங்கிலேய அதிகாரிகள் அந்த வழியாகத்தான் குதிரை மீது ஏறிச் செல்வார்கள். அந்தப் புற்று ஆலயத்தின் அருகில் செல்லும்போது சற்று ஒதுங்கிச் செல்ல வேண்டி இருந்தது. ஆகவே தனது போக்குவரத்துக்கு அந்த புற்று ஆலயம் இடையூறாக உள்ளது எனக் கருதிய ஆங்கிலேய அதிகாரி  ஒரு நாள் அந்த ஆலயத்தை இடிக்குமாறு ஒரு  கட்டளையிட ஆலயம் இடிக்கப்பட்டது . அரைகுறையாக இடிக்கப்பட்ட அந்த ஆலயம் வழியே அடுத்த வெள்ளிக் கிழமை குதிரை மீதேறி தனது நாயுடன் சென்று கொண்டு இருந்த அதே ஆங்கிலேய அதிகாரி, அவர் குதிரை மற்றும் அவருடைய நாய் என மூவரும் அந்த ஸ்தலத்திலேயே மரணம் அடைந்து கிடந்தார்கள். அவர்கள் எப்படி இறந்தார் என்பது எவருக்கும் இன்றுவரை  விளங்கவில்லை.

அம்மாவின் பூர்வீகப் பின்னணி

 இப்படிப்பட்ட பின்னணியில்தான் திருச்சி  நகரமே ஆங்கிலேயர்களின் அட்டகாசத்தில்  இருந்தது .  திரு சின்னப்பா என்பவர் ஆச்சாரமான வைஷ்ணவக் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் குடும்பமும் திருச்சியில் இருந்தது. சின்னப்பாவின் பாட்டனார் சிறு வயதானவர். அந்த காலத்தில் யானை மீது ஆங்கிலேயர் மது வகைகளை பீப்பாய்களில் எடுத்துச் செல்வார்கள். அவற்றை சாலையில் உள்ள சிறுவர்கள் சில நேரத்தில் சீண்டுவார்கள்.  கல் எறிந்து விட்டு ஓடுவார்கள். சிப்பையளிடம் பிடிபட்டால் சரியான அடி உதை கிடைக்கும் . ஒரு நாள் சின்னப்பாவின் பாட்டனார் அப்படி பீப்பாய்களை எடுத்துக் கொண்டு சென்ற யானை மீது கற்களை வீசினார். அதைக் கண்டு கோபமுற்ற ஆங்கிலேயப் படையினர் அவரைப் பிடிக்க துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்கள் கையில் சிக்கினால் கடுமையாக தண்டனை கிடைக்கும் என்பதினால் அந்த சிறுவர்கள் ஓடினார்கள். அந்தப் பக்கமாக ஓடிக் கொண்டு இருந்த ஒரு ரயிலில் ஏறி தப்பினார்கள்.
ரயில் விஜயவாடாவை அடைந்தது. கீழே இறங்கி நகருக்குள் சென்றார்கள். ஊரும் புதிது. கையில் காசும் இல்லை. பட்டினியால் துடித்தவர்களை ஒரு வியாபாரி பார்த்து கருணைக் கொண்டார். அவர்களின் கதையைக் கேட்டு தனது நிறுவனத்தில் பணி புரிய அழைத்துச் சென்றார். பணியில் அமைந்து வேலை செய்யத் துவங்கிய  சின்னப்பாவின் பாட்டனார் தனது தலை முடியை மாற்றிக் கொண்டார். அய்யங்காராக இருந்ததினால் முதலில் குடுமி வைத்து இருந்தார். ஆசாரமான குடும்பம் ஆயிற்றே.  வேலைக்கு சேர்ந்து விட்டதினால் குடுமியை எடுத்துவிட்டு கிராப் செய்து கொண்டார். சில மாதங்கள் கழிந்தன. தனது பெற்றோர்களைப் பார்க்க ஆசை வந்து விட திருச்சிக்குச் சென்றார். அவர் வந்த கோலத்தைக் கண்ட ஆசாரக் குடும்பத்தினர் அவரை வீட்டிற்குள் விட சம்மதிக்கவில்லை. வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்து கொள்ளுமாறு கூறினார்கள். ஆனால் அவரால் அந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனி இவர்கள் உறவே தேவை இல்லை எனக் கருதியவர் மீண்டும் தான் வேலைப் பார்த்துவந்த கோத்தகூடம் என்ற ஊருக்கு சென்று விட்டார். நாளடைவில் அங்கு ஒரு தெலுங்கு பிராமணப் பெண்ணை மணந்து கொண்டு வாழ்கையை நடத்தினார்.

தெய்வீக அம்மா பிறந்தக் கதை
அவருக்கு 16 குழந்தைகள் பிறந்தன. அவர்களில் 14 குழந்தைகள் மரணம் அடைந்து விட  மிஞ்சி இருந்த இருவரில் ஒரு நாள் பத்து வயதே ஆன அவருடைய பெண் காணாமல் போய் விட்டாள். அவளுடைய சகோதரர் பல இடங்களிலும் தங்கையைத் தேடி அலைந்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பெற்றோர்களும் மரணம் அடைந்து விட அவர் ஒரு முதலியார் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழத் துவங்கினார். அவர்களுக்குப் பிறந்தவரே சின்னப்பா. சின்னப்பாவிற்கும் வயது வந்ததும் குப்பம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் மூலமே தெய்வீக அன்னையான, நாகம்மனின் சபதத்தை நிறைவற்ற ஜெயலஷ்மி அம்மாள் 1942 ஆம் ஆண்டு பிறந்தார். பிறந்த குழந்தையான ஜெயலஷ்மி அம்மாவிற்கு காலில் ஸ்ரீ சக்கர வடிவ ரேகை இருந்தது. அப்போதே அவர் தெய்வீக பிறவி என்பது தெரிந்தது.

ஜெயலஷ்மி அம்மாவின் இளம் பருவம்
சிறு குழந்தையான ஜெயலஷ்மி அம்மாள் சீரும் சிறப்புமாக வளர்ந்தார். சிறுமி சக்தி தேவதையை வணங்கித் துதிப்பார். பலமுறை அந்த சிறுவி ஆலயத்துக்குச் செல்லும்போது ராஜ நாகத்தை வழியில் காண்பது உண்டு. ஒரு நாள் அவள் பின்னால் சென்று கொண்டு இருந்த ராஜ நாகத்தை பார்த்த ஒருவன் அந்த சிறுமிக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதினால் அதை அடித்துக் கொன்று விட்டான். அதப் பார்த்த சிறுமி பயந்து விட்டாள். அது முதல் பாம்பை பார்த்து விட்டால் பயந்து ஓடி ஒளிவாள், அலறுவாள். ஆனால் அந்த சிறுமி ஏதாவது கூறினால் அது நடந்து வந்ததும் ஒரு விசித்திரமாக இருந்தது.

ஜெயலஷ்மி அம்மாவின் திருமணம்
சிறுமி ஜெயலஷ்மிக்கு வயது பதினொன்று ஆகியது. அந்த காலத்தில் சிறு வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து விடுவார்கள் என்பதினால் அவளுக்கு தேவராஜ சுப்பிரமணியம் என்பவருடன் திருமணம் செய்து வைத்தார்கள். ஜெயலஷ்மி அம்மா புகுந்த வீட்டினர் நாகம்மாவின் பக்தர்கள். நாக தேவதையை வழிபாட்டு பூஜிப்பவர்கள். ஆனால் ஜெயலஷ்மிக்கோ பாம்பு என்றால் பயம், வெறுப்பு . அவர்கள் வழக்கப்படி பூஜை செய்ய விரும்பாதவளினால் வீட்டில் சர்ச்சை ஏற்பட வேறு வழி இன்றி தேவராஜ சுப்பிரமணியன் மனைவியுடன் தனிக் குடுத்தனம் செய்யப் போய் விட்டார். ஆனாலும் ஜெயலஷ்மி அம்மா எங்கு சென்று வாழ்ந்தாலும் அவள் பாம்புகளைக் பார்க்க வேண்டி இருந்தது. நாகம்மாவே அவளை பின்தொடர்ந்து சென்று இருந்து இருக்கின்றாள் என்பது அவளுக்கு எப்படித் தெரியும் ?

தெய்வீக பிள்ளை பிறந்தது
சில மாதங்களில் ஜெயலஷ்மி அம்மாளும் 1956 ஆம் ஆண்டு கருவுற்று ஒரு அழகிய பிள்ளையைப் பெற்று எடுத்தாள். அவனுக்கு நாராயணன் எனப் பெயர் சூட்டினார்கள். பிறந்தக் குழந்தையும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருந்தது. அந்த சிறுவனும் எதைக் கூறினாலும் அது நடந்தன. தாயைப் போலவே பிள்ளையும் இருந்தான். அந்தக் குழந்தையை காரணமாக வைத்துக் கொண்டே அதன் மூலம்  நாகம்மா எனும் நாக தேவதை  தனக்கு ஆலயத்தை அமைத்துக் கொள்ள முடிவு செய்து இருந்தால் போலும். சிறுவனாக இருந்தாலும் மிகவும் பக்தி பூர்வமாகவே நாராயணன் வளர்ந்தார் . பூஜைகள் போன்றவற்றையும் செய்து வந்தார். 1965 ஆம் ஆண்டு. பள்ளியில் இருந்து வந்தப் பிள்ளை உடல் நலமின்றிப் போனான். தாயின் மடியிலேயே படுத்துக் கிடந்து பரலோகப் பிராத்தி அடைந்தான். அதுவே ஜெயலஷ்மி அம்மாவின் வாழ்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தக் கட்டம்.  நாகம்மா எனும் நாக தேவதை தனக்கு ஆலயம் கட்டிக் கொள்ள நடத்திய நாடகத்தின் முதல் கட்டம்.

நாராயணா...நாராயணா
மகனை இழந்தத் தாயார் பைத்தியம் பிடித்தவள் போல ஆனாள். நாராயணா,  நாராயணா என இரவும் பகலும் கதறி அழுதாள். அவளை எவராலும் தேற்ற முடியவில்லை. அதுதான் இரண்டாவது முக்கியக் கட்டம். அப்போது  ஒரு நாள் ஜெயலஷ்மி அம்மாவின் கனவில் நாகம்மா எனும் நாக தேவதை தோன்றினாள். ஆனால் நாகம்மாவாக தோற்றம் தரவில்லை. காரணம் அதை ஜெயலஷ்மி அம்மாள் விரும்ப மாட்டாள்.  நாகம்மா எனும் நாக தேவதை  ஒரு வயதான மூதாட்டி உருவில் வந்து அவளை தேற்றினாள். 'உனக்கு என்ன வேண்டும்' என மூதாட்டி கேட்க ஜெயலஷ்மியோ 'தனக்கு தன்னுடைய மகன் வேண்டும், அவனை தான் காண வேண்டும்' என்றாள். 'சரி, அப்படியென்றால் மறுநாள் உன் மகன் உன்னைக் காண வருவான்' எனக் கூறி விட்டு மறைந்து விட்டாள் நாகம்மா எனும் நாக தேவதை.

மகனைக் கண்டாள்
மறுநாள் காலை குளித்துவிட்டு சமையல் அறையில் இருந்தாள் ஜெயலஷ்மி அம்மாள். வாயிலில் யாரோ தன்னை அழைக்கும் குரல் கேட்டது. வாயிலில் நின்று இருந்த சிறுவனோ  மறைந்து போன நாராயணன் ஜாடையிலேயே இருந்தான் . அங்கிருந்தவர்கள் ஆச்சர்யம் அடைந்து உள்ளே சென்று ஜெயலஷ்மியிடம் அந்த சிறுவனைப் பற்றிக் கூறியும் அவள் வெளியே வர மறுத்தாள். பையனும் போகவில்லை. கையில் ஒரு சிவப்பு துண்டை பிரித்து வைத்துக் கொண்டு உணவு கேட்டுக் கொண்டே நின்று கொண்டு இருந்தான். சுமார் மூன்று மணிநேரம் கடந்தது. வந்துள்ள சிறுவன் போகவில்லை என்பதினால் மீதி இருந்த அன்னத்தை எடுத்துக் கொண்டு போய் அந்த சிறுவனின் கையில் இருந்த துணியில் போட்டப் பின் அவனை நிமிர்ந்து நோக்கியவள் திடுக்கிட்டாள். நாராயணா எனக் கதறினாள் . சிறுவன் போய் விட்டான். அவனைக் காணவில்லை. வந்தது என் நாராயணனே எனக் கதறினாள். கூடி இருந்தவர்கள் சிறுவனை இழந்து விட்டதினால் அவள் பித்து பிடித்துக் கத்துகிறாள் என நினைத்தார்கள்.

புதிய திருப்பம்
அதுவே நல்ல தருமணம் என நினைத்த நாகம்மா மீண்டும் அவள் கனவில் வந்தாள். ஆறுதல் கூறினாள். தன்னுடன்தான் நாராயணனும் இருக்கின்றான் என்று கூறிவிட்டு அவனுடன் சேர்ந்து தரிசனம் தந்தாள். மேலும் ஒரு இடத்தைக் காட்டி 'நாங்கள் ஏழுபேர் இந்த இடத்தில் உள்ளோம். நீ எங்கள் ஏழுபேர் மற்றும் நாராயனனுக்காக அங்கு தீப விளக்கு ஏற்று' எனக் கூறி விட்டு மறைந்தாள்.
மறுநாள் எழுந்த ஜெயலஷ்மி மனதில் ஒரு மாறுதல் ஏற்பட கனவில் நாகம்மா காட்டிய இடத்தை தேடிக் கண்டு பிடித்தாள். நாகம்மா கூறிய இடத்தில் இருந்த பாம்பு புற்றின் எதிரில் விளக்கை ஏற்றி வைத்தாள். என்ன அதிசயம் அந்த விளக்கை அவள் ஏற்றி வைத்தவுடன் அவள் முன்னால் அங்கு ஒரு நாகம் தோன்றியது. அவள் முன் தோன்றிய நாகம் அப்படியே திரும்பிக் கொள்ள அவள் ஏற்றி வைத்திருந்த விளக்கும் திசை திரும்பியது. வெட்ட வெளி. காற்று வேகமாக வீசிக் கொண்டு இருந்தது. விளக்கும் அணையவில்லை. அதை பார்த்துக் கொண்டே இருந்தவள் விளக்கு அணைந்ததும் வீடு திரும்பினாள். மனதில் அசாத்தியமான அமைதி இருந்தது. அன்று முதல் பாம்புகளைக் கண்டால் பயப்படுவது நின்றது. நாகம்மாவை பூஜிக்கத் துவங்கினாள். மகனின் மரண துக்கம் முற்றிலும் விலகியது.

எங்களுக்கு ஒரு ஆலயம் வேண்டும் -நாகம்மா
அடிக்கடி நாகம்மா ஜெயலஷ்மி அம்மாவின் கனவில் வந்தாள். ஒரு நாள் அவள் கனவில் வந்தவள் புற்றுக்கு பக்கத்தில் விளக்கு ஏற்றி வைத்த இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்றாள். ஆனால் அதே இடத்தில்தான் முன்னர் ஒரு காலத்தில் பாம்பு புற்று ஆலயம் இருந்ததும், அதை ஆங்கிலேய அதிகாரி இடித்து தரைமட்டம் ஆக்கியதும் அம்மாவுக்குத் தெரியாது. கனவில் தோன்றி தனக்கு ஆலயம் அமைக்குமாறு நாகம்மா மீண்டும் மீண்டும் கூறியதினால் ஆலயம் அமைக்க முடிவு செய்தாள்.  அதற்கு அவளுடைய கணவரும் ஒப்புதல் தந்தார்.

இடைஞ்சல்கள்
எந்த இடத்தில் அம்மா நாகம்மாவிற்கு ஆலயம் அமைக்க எண்ணினாரோ அந்த இடம் ராணுவத்திற்கு சொந்தமானது என்பதினால் ஆலயம் அமைகப்படத் துவங்கியதும் பெரும் தொல்லைகள் ஏற்பட்டன. அம்மா ஆலயத்துப் பணிகளைத் துவக்க அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அங்கேயே ஒரு கல்லை நட்டு பூஜைகளை செய்யத் துவங்கினார். ராணுவத்தினர் அங்கு வந்து அங்கு பூஜையும் செய்யக் கூடாது, ஆலயமும் அமைக்கக் கூடாது என தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அம்மா அது பற்றிக் கவலைப் படாமல் தனது வேலையை துவக்கினார். அவர் சுத்தம் செய்து விட்டுச் சென்றதும் லாரியில் மணலை ஏற்றி வந்து ராணுவத்தினர் அங்கு வந்து அந்த இடத்தில் மணலைக் கொட்டிவிட்டுச் செல்வார்கள். அம்மா மனம் தளரமாட்டார். அவற்றை அகற்றி விட்டு தினமும் அங்கு சென்று நாகம்மாவிற்கு பூஜை செய்தாள். தனியாகவே அவருடைய இப்படிப்பட்ட போராட்டம் தொடர்ந்தது. அவர்கள் அந்த பகுதியை சுற்றி வேலி போட்டார்கள். ஆனால் வேலியையும் தாண்டிச் சென்று ஆலய வேலையை துவக்கினார். ஆகவே அவரை உள்ளே விடக் கூடாது என்பதற்காக இரவும் பகலும் காவலாளியை நியமித்தார்கள். மறு நாள் இரவு அந்தக் காவலாளிகள் அங்கு படமெடுத்து ஆடிய பெரிய நாகம்மாவைக் கண்டு மிரண்டு போனார்கள். அதை அடிக்கவோ, சுடவோ தைரியம் வரவில்லை. மறுநாள் காலையில் எப்போதும் போல பூஜைக்கு வந்த அம்மாவிடம் அந்தக் காவலாளிகள் மன்னிப்புக் கேட்டு விட்டு இனி தாங்கள் அவளை தடுக்க மாட்டோம் என சத்தியம் செய்து விட்டுப் அங்கிருந்து சென்று விட்டார்கள்.
ஆகவே அவளும் நான்கு சுவர்களை எழுப்பி மேல் கூறையை போட ஏற்பாடும் செய்து விட்டாள். அதுவரை அந்த இடம் காவலில் உள்ளது என்று எண்ணிக் கொண்டு இருந்த ஆங்கிலேய அதிகாரி ஒரு நாள் அங்கு ஆலயம் எழுந்து உள்ளது என்பதைக் கேள்விப்பட்டு அங்கு வந்தான். 'யாரைக் கேட்டு இங்கு நாகம்மாவிற்கு ஆலயம் அமைத்தாய்' எனக் கேட்க அம்மாவும் அது 'நாகம்மாவின் கட்டளை' என்றாள். அவனும் சளைக்காமல் அப்படி என்றால் தனக்கு அந்த நாகம்மாவின் ஆலயத்தை தரைமட்டமாக உத்தரவு வந்துள்ளது என தலை கனத்துடன் கூறினான்.
அலுவலகம் திரும்பியவன் உடனே அவளை கைது செய்து நாகம்மாவிற்கு கட்டப்பட்டு வரும் ஆலயத்தை இடிக்க உத்தரவு போடும் கடிதத்தை எழுதத் துவங்கினான். பாதி கடிதம் எழுதும் முன்னரே அப்படியே மயக்கம் வந்து விழுந்தான். ஆகவே அவரை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். வீட்டில் சென்று அமர்ந்தவர் சட்டைப் பையில் இருந்து சிறிய நாகப்பாம்பு வெளியில் வந்து விழுந்தது.  அதிர்ந்து போனவர்கள் அதை அடிக்க முயல அது இங்கும் அங்கும் பாய்ந்து சென்று அமரத்  துவங்கியது.  எப்படி அதை அடிக்க முயன்றும்  அடிக்க முடியாமல் போனவர்கள் பயந்து விட்டார்கள் . அதை கண்டு பிடிக்கவும் முடியவில்லை. அதைக் கண்டு பதற்றம் அடைந்த அவரது மனைவி ஒரு நாகம் எப்படி அவர் சட்டையில் வந்தது? எங்கு போனீர்கள் எனக் கேட்டபோது அவர் நடந்த விவரத்தைக் கூற அவள் கோபம் அடைந்தாள். மறுநாள் நாக பஞ்சமி, 'நான் நாகம்மாவிற்கு பூஜை செய்ய இடம் தேடிக் கொண்டு இருக்கையில் நீங்கள் எப்படி அந்த தகாத காரியத்தை செய்யத் துணிந்தீர்கள்' எனக் கடிந்துகொண்டு உடனே பூஜை அறைக்குச் சென்று நாகம்மாவை வேண்டிக் கொண்டு மாவு தூவி விளக்கேற்றி வழிபட ஒளிந்து இருந்த நாகம் வெளியில் வந்து அனைவர் முன்னாலும் வெளியில் சென்று மறைந்தது. அது தெய்வக் குற்றமே என உணர்ந்தவள் அவளது கணவரை அழைத்துக் கொண்டு அம்மாவிடம் சென்று தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க வைத்தாள்.

சிறு துளி பெறு வெள்ளம்
 ஜெயலஷ்மி அம்மாவின் கணவர் தன்னுடைய வியாபாரத்தில் கிடைத்த லாபத்தில் ஆலயம் அமைக்க அவளுக்கு பணம் தந்தார். அம்மாவும் பல வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கத் துவங்கினாள். புடவைகளை மொத்தமாக வாங்கி அதை விற்று பணம்  சம்பாதித்தாள். மளிகைக் கடை நடத்தி பணம் சேர்த்தார். சீட்டு வியாபாரம் ஆரம்பித்து அதன் மூலம் பணம் சேர்த்தார். தன்னிடம் இருந்த அனைத்து நகைகளையும் விற்று விட்டார். ஆலயம் அமைக்க இப்படியெல்லாம் பணம் சேர்க்கத் துவங்கியவள் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. அவளுடைய உறவினர்கள் அவளுக்கு உதவ முன்வரவில்லை. அனாவசியமாக பணத்தை பாழடைக்கின்றாய் என ஏசினார்கள். அம்மாவிற்கு மேலும் மூன்று குழந்தைகள் பிறந்திருந்தன. அவர்களையும் கவனிக்க நேரம் இன்றி இருந்தார். தனது முழு நேரத்தையும் ஆலயம் அமைக்கவே செலவிட்டபடி இருந்தார். வேலையாட்கள் கிடப்பதே பெரும்பாடாக இருந்தது. ஆனாலும் தானே அவர்களை தேடிப் போய் அழைத்து வந்தார். அவர்களுடன் தானும் ஒரு கட்டிட வேலைக்காரியாகவே இருந்து கொண்டு வேலைகளை செய்தார். ஆலயம் கட்டப்பட்டு வந்தாலும் அம்மா அங்கு பூஜைகளையும் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார். பலமுறை நாகம்மா அவர் கனவில் வந்தும் நேரில் காட்சி தந்தும் அவளுக்கு தைரியம் ஊட்டினார். தான் அவளுடன் துணையாக இருப்பதை எடுத்துக் காட்டிய வண்ணமே இருந்தாள். சிறிய அளவில் ஆலயம் கட்டும் பணி 1967 ஆம் ஆண்டு துவங்கியது.

நாத்திக பஜ்ரங்பாய் சிஷ்யர் ஆன கதை 
அம்மா ஆலயம் கட்ட பல பொருட்களையும் வாங்கி வர வேண்டி இருந்தது. அப்போதுதான் பெரும் நாத்தீகராக இருந்த பஜ்ராங்க்பாய் என்பவர் கடையில் அம்மா ஆலயத்திற்கான சாமான்கள் வாங்கும்போது அவருடன் நல்ல தொடர்ப்பு ஏற்பட்டது. அவருக்கு பல பிரச்சனைகள் இருந்தன. ஆலயத்துக்கான சாமான்களை வாங்கினாலும் அவர் பணத்தைக் குறைக்க மாட்டார். காரணம் அவர் தெய்வ நம்பிக்கை இல்லாதவர் . ஆனால் அவள் கட்டும் ஆலயத்தைப் பற்றி அவளிடம் கேட்டு அறிந்து கொண்டவர் ஒரு நாள் எதோ மனதில் தோன்றி பதினோரு ரூபாய் தானம் செய்து தனக்காக பூஜை செய்து தொழிலில் உள்ள எதிரிகளின் தொல்லையை ஒழிக்க முடியுமா எனக் கேட்டார். அம்மாவும் அவர் கொடுத்த பணத்தில் பூசைப் பொருட்களை வாங்கி நாகம்மாவிடம் அவருக்காக வேண்டிக் கொண்டு பூஜைகளை செய்து விட்டு பிரசாதத்தை அவருக்குக் கொடுத்தாள். அன்று முதல் அவர் தொல்லைகள் மாயம் போல மறைந்தன. ஆஹா...அம்மா கட்டும் ஆலயம் சாதாரண ஆலயம் அல்ல, மிக சக்தி வாய்ந்த ஆலயம் என்பதை உணர்ந்து அம்மாவின் பரம பக்தரும் சிஷ்யருமாக மாறினார். அவர் அந்த கடை வீதியின் தலைவராக இருந்ததினால் அவர் சொல்லைக் கேட்டு பலரும் ஆலயம் அமைக்க பண உதவிகள் செய்தார்கள். ஆலயம் வேகமாக வளர்ந்தது. அவரவர் அவரவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை அம்மாவிடம் கூறி பரிகாரம் பெற்றுச் சென்றார்கள். இப்படியாக அம்மாவின் தெய்வீகத் தன்மை வெளியில் தெரியத் துவங்கி அம்மா புகழ் பெறலானார்.

ஆலயப் பணி
ஆலயம் கட்டத் துவங்கினாலும் அம்மா தனது குடும்பத்தையும் கவனிக்க வேண்டி இருந்தது. வீட்டில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ஆலயப் பணிகளை செய்து வந்தார். தனது குழந்தைகளை படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்தார். ஆண்டுகள் கடந்தன. 1981 ஆம் ஆண்டு முதல் அம்மா ஆலயத்தின் வளாகத்துக்குள்ளேயே தங்கி ஆலய வேலைகளையும் பூஜைகளையும் செய்து வந்தார். அவரைத் தேடி வந்த பக்தர்களின் குறைகளையும் நாகம்மாவின் துணையுடன் நீக்கி வந்தார். அது மட்டும் அல்ல அவர் சாதிபேதமும் பார்க்கவில்லை. வந்தவர் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் குறைகளை தீர்த்து வந்தார். நாகம்மாவே மனிதப் பிறவி எடுத்து ஜெயலஷ்மி அம்மா உருவில் வந்து இருந்தாள்.

பஜ்ரங்பாயின் மறைவு
பஜ்ராங்பாய் அம்மாவின் ஆலயப் பணிக்கு பெரும் துணையாக இருந்து அம்மாவிற்குப் பல விதத்திலும் உதவி வந்தார். ஆலயம் பெரியதாக கட்டப்படத் துவங்கியது. இப்படியாக அனைத்தும் நல்ல முறையில் சென்று கொண்டு இருந்தபோது அம்மாவிற்கு பெருத்த இடி போல 1992 ஆம் ஆண்டு பஜ்ராங்பாய் மறைந்தார். தனது ஒரு கையையே இழந்து விட்டதாக அம்மா கூறினார்.

அன்னமிட்ட கை ஓயவில்லை
ஆலயத்துக்கு வருபவர்கள் காலி வயிற்றுடன் செல்லக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார் அம்மா. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமிடத் துவங்கினார். அப்படி அன்னபூர்ணியாக  செயல்படத் துவங்கியர் ஆலயத்தில் இன்றும் தொடர்ந்து அன்னதானம் தினமும் நடைபெறுகின்றது என்பது வியப்பு இல்லை. காரணம் பக்தர்கள் எண்ணிக்கை உயர உயர ஆலய வருமானமும் பெருகியது. அனைத்தையுமே ஆலயத்துக்காகவே செலவு செய்தார்கள். நாகம்மா கருணை மிக்கவள் அல்லவா.

அம்மா சமாதி அடைந்தக் கதை
காலம் ஓடிக் கொண்டே இருந்தது. ஆலயப் பணியும், பூஜைகளும் அன்னதானமும் தொடர்ந்து கொண்டே இருக்க 1992 ஆம் ஆண்டு அம்மா ஜீவ சமாதி அடைய முடிவு செய்தார். ஆனால் அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். பஜ்ரான்பாயுடன் அம்மாவிடம் பர சீடராக ஆனவர் காளிசரண் என்பவர். தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து கஷ்ட திசையில் இருந்தவர் அம்மாவின் அருளினால் வியாபாரம் செய்யத் துவங்கி பெரும் செல்வந்தர் ஆனார். அவர் அம்மாவை சமாதி அடைய விரும்பவில்லை. சமாதி அடைய வேண்டும் என்றால் தன்னுடைய தலையை வெட்டி வைத்தப் பின் அதன் மீது சமாதி அடையுமாறு  அம்மாவை நிர்பந்தத்தினால் அம்மாவினால் அவர் அன்புக்குக் கட்டுப்பட வேண்டியதாயிற்று. சிலர் வாழ்கையில் சிலர் தடையாக இருப்பார்கள். ஆகவே எப்போதும் தன்னை சுற்றி சுற்றியே வந்து கொண்டு இருந்த காளிசரண் தன்னுடன் இருக்கும்வரை தன்னால் சமாதி அடைய முடியாது என்பதை உணர்ந்த அம்மா அவர் தன்னை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தாள். வேண்டும் என்றே ஒரு கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி அவரை கோவிலுக்கு வர விடாமல் செய்து விட்டார்.
1996 ஆம் ஆண்டு அம்மா யாருக்கும் தெரியாமல் சத்தியத்தை பெற்றுக் கொண்டு ஆலயப் பணிகளை கவனித்து வரும் கண்ணாயிரம் என்பவரை அழைத்து தியான மண்டபத்தில் சமாதிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டார். உணவு உண்பதை மெல்ல மெல்லக் குறைத்துக் கொண்டார். உடல் நலிவுற்றது. எந்த சிகிச்சையும் பலன் தரவில்லை. தனது பெரும்பாலான பகுதியை ஆலய தியான மண்டபத்திலேயே கழித்தார். தன்னுடைய பெரிய மகளை அழைத்து தனக்கு அடுத்த வாரிசாக மெல்ல மெல்ல உருவாக்கி வந்தார். 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று தியான மண்டபத்தில் அமர்ந்து இருந்தவர் மூச்சு மெல்ல மெல்ல பிரிந்தது. பெரும் திரளாக கூடி இருந்த பக்தர்கள் கண்ணீர் விட்டுக் கதறினார்கள். அம்மாவை பக்தர்கள் தரிசனத்துக்காக மூன்று நாட்கள் அங்கேயே அமர வைத்த நிலையில் வைத்து இருந்தார்கள். அப்போது அந்த மூன்று நாட்களிலும் அவர் சிலருக்கு விழிகளை அசைத்தும், அவ்வப்போது புன்முறுவல் காட்டியும் , கைகளை அசைத்து ஆசி கூறியும் காட்சி தந்துள்ளார். அதன் பின் அவரை அங்கேயே அடக்கம் செய்தார்கள்.

அதிசய சம்பவம்
 அம்மா உயிருடன் இருந்த காலத்தில் ஆலயத்தில் பல வேலைகளையும் ஒரு இளைஞன் செய்து வந்தார். அம்மா சித்தியடைந்த பதினோராம் நாளன்று ஆவேசம் வந்தவர் போல தியான அறைக்குள் ஓடிச் சென்றார். பதினோரு நாட்கள் அந்த அறைக்குள் இருந்தவாறு அம்மாவின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்தார். அம்மாவை நேரிலே பார்ப்பது போலவே இருந்தது அந்த சிலை.அப்படி ஒரு சிலையை அமைப்பது மிகக் கடினம் என்பதும், அதை பதினோரு நாளிலேயே செய்து உள்ளார் என்பதும் அம்மாவின் மகிமைக்கு எடுத்துக் காட்டு. அம்மா இன்று உயிருடன் இல்லை என யாரும் நினைக்கவில்லை. அந்த ஆலயத்துக்குள் ஜெயலஷ்மி அம்மாவே நாகம்மாவாக இருக்கின்றாள்.

ஆலய மகிமை
இந்த ஆலயத்தில் சென்று பிரார்த்தனை செய்தாலும், அன்னதானம் செய்தாலும் நாக தோஷங்கள் விலகுகின்றன, திருமண வாழ்வில் ஒற்றுமை இன்மை, அலுவலகப் பிரச்சனைகள் போன்றவை விலகும், வியாபாரம் விருத்தி அடையும் என்பது போன்ற அதிசயங்கள் நடக்கின்றன என்கிறார்கள். அனைத்திற்கும் நம்பிக்கையே, ஆலய மகிமையே, வாழும் நாக தேவதையே காரணம். ஒரு முறை நீங்களும் அந்த ஆலயத்துக்கு சென்றுதான் பாருங்களேன் என்கிறார்கள் பக்தர்கள். அது மட்டும் அல்ல ஐந்து வெள்ளிக் கிழமைகளில் அம்மாவின் சரித்திரத்தைப் படிப்பவர்கள் மனக் குறைகள், மனக் குழப்பங்கள் நீங்கி அமைதியான வாழ்வை பெறுவார்கள், அவர்களின் பிரச்சனைகளுக்கு நல்ல வழி கிடைக்கும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆலய விலாசம்
SREE NAGADEVATHA SREE NARAYANASWAMY
Sreela Sree Jayalakshmi Amma Gurusthanam
Thirumalagiri, Secunderabad - 500 015. AP. (INDIA)

Thursday, September 8, 2011

GORAVANAHALLI MAHALAKSHMI TEMPLE

கோரவனஹல்லி மஹாலஷ்மி ஆலயம்
சாந்திப்பிரியா  
பெங்களூரில் மகாலஷ்மி ஆலயங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. நகர மத்தியில் பனசங்கரிக்கு அருகில் சுமார் 8 அல்லது 10 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டு உள்ள மகாலஷ்மி ஆலயம் (ரிங் ரோடு சாலையில் JP நகரில் இருந்து மைசூர் செல்லும் பாதையை நோக்கி சென்றால் பெரிய Tax Payers  அலுவலகம் வரும். அதன் பக்கத்து சாலையின் கோடியில் ஆலயம் உள்ளது  ) மிக சிறப்பாக உள்ளது என்றாலும் தும்கூர் தாலுக்கா கோரவனஹல்லி  கிராமத்தில்  உள்ள மகாலஷ்மி தாயார் ஆலயம் மிகவும் பழமையானது. மகிமை வாய்ந்தது. 

அந்த ஆலய வரலாறு இது.
1880 -90 ஆம் ஆண்டு வாக்கில்  கோரவனஹல்லி கிராமத்தில் அபையா என்ற பால் வியாபாரம் செய்பவர் இருந்தாராம். அவர் தினமும் தனது பசு மாட்டை வயல்வெளிக்கு கொண்டு சென்று புல் மேயவிட்டு வருவார். அருகில் இருந்த குளத்தருகில் அமர்ந்து உணவு அருந்துவார். ஒரு நாள் அவர் உணவு அருந்திக் கொண்டு இருந்தபோது  ஆசிரியாக ஒரு குரல் கேட்டது.' என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்கிறாயா'. எதோ மனப்பிரமை என உதாசீனப் படுத்திவிட்டு வீடு சென்று விட்டார். ஆனால் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் அதே குரல் அதே இடத்தில் கேட்கவே பேயோ  பிசாசோ தன்னை துரத்துகிறது என பயந்துகொண்டு வீட்டிற்கு ஓடி வந்து விட்டார். அடுத்த  நாள் அவர் கனவில் லஷ்மி தேவி தோன்றி அவரை குரல் கொடுத்து அழைத்தது தான்தான் எனவும், தான் அங்கு மறைந்துள்ள இடத்தில்  இருந்து தன்னை எடுத்து வந்து வீட்டில் வைத்து பூஜித்தால் அவர் வாழ்வு வளம் பெரும் என்று கூறிவிட்டு, தான் இருந்த இடத்தையும் கூறினாளாம். மறுநாள் கனவில் லஷ்மி தேவி காட்டிய இடத்தில் சென்று பார்க்க அவருக்கு அங்கு மகாலஷ்மியின் சிலை ஒன்று கிடைத்ததாம். அதை வீட்டிற்கு எடுத்து வந்து வணங்கி வந்தார்.
நாளடைவில் அவர் வியாபாரம் செழித்தது. நிலபுலன்களை வாங்கி செல்வந்தர் ஆனார். ஆனால் மகாலஷ்மியை விடாமல் பூஜித்து வந்தார். ஒரு நாள் அவர் கனவில் மீண்டும் தோன்றிய மகாலஷ்மி தனக்கு ஒரு ஆலயம் அமைத்து பூஜைகளை செய்யுமாறு கட்டளையிட, தான் இந்த நல்ல நிலைக்கு ஆளானது மகாலஷ்மியின் அருளினால்தான் என்பதை உணர்ந்தவர்  சிறிய தனியார் ஆலயம் ஒன்றை அமைத்து பூஜைகளை செய்யத் துவங்கினார். கிராம ஆலயம் என்பது பெரிதாக இருக்காது. நாலு சுவற்றுக்குள் இருக்கும்.  தன்னால் முடிந்த அளவு கிராமத்தில் தான தருமங்கள் செய்து வந்தார். கிராமமோ சிறியது. அதனால் அதிக அளவு மக்கள் இல்லாத நிலையில் அந்த கிராமத்து மக்களே அங்கு வந்தார்கள். ஆலயம் பற்றி வெளியில் தெரியவில்லை. அபையா மறைந்தப் பின்னர் அவருடைய சகோதரர் அவர் விட்டப் பணிகளை தொடர்ந்தார். சில காலத்துக்குப் பின்னால் அவரும் மறைந்துவிட அந்த ஆலயத்தை நிரவாகிக்க எவரும் இல்லாமல் ஆலயம் நலிந்தது.
1925 ஆம் ஆண்டு வாக்கில் அந்த கிராமத்தை சேர்ந்தவரும் வெளியூரில் தங்கி இருந்தவருமான கமலம்மா என்பவர் சொந்த கிராமமான கோரவனஹல்லிக்கு வந்தபோது அந்த ஆலயம் தோன்றிய கேட்டறிந்தார்.  தன் கிராமத்தில் உள்ள மகாலஷ்மியை நலியவிடகூடாது என எண்ணி  உடனே தானே அங்கு மீண்டும் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார். மீண்டும் ஆலயம் அனைவரும் செல்லும் இடம் ஆயிற்று. சில ஆண்டுகளில் மீண்டும் வெளியூருக்கு அவர் சென்று விட  கவனிப்பார் இல்லாமல் மீண்டும் ஆலயம் கேட்பார் அற்றுச் கிடந்தது .  வெளியூருக்கு  சென்றுவிட்டு சுமார் 20 அல்லது 25 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தரமாக கிராமத்தில் தங்குவதற்கு கமலம்மா மீண்டும் வந்தார். மீண்டும் ஆலயம் கேட்பார் அற்றுக் கிடந்ததைக் கண்டு மனம் வருந்தினார். இனி அதை அப்படி விடக்கூடாது எனக் கருதியவர் ஆலயத்தை புனரமைத்தார். பூஜைகள் துவங்கின. அந்த ஆலயத்துக்கு வரத் துவங்கியவர்கள் அற்புத அனுபவங்களைப் பெற்றார்கள். வாய்மொழி வாய்மொழியாக ஆலய மகிமை பக்கத்து கிராமம், நகரம் எனப் பரவியது. அங்கு வந்து பிரார்த்தனைகளை செய்து கொண்டவர்களின்  வாழ்வில் வசந்தம் பெறத் துவங்கின. ஆலயத்தில் கூட்டம் பெருகியது. செய்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அலை மோதும். நீண்ட வரிசையில் நிற்க வேண்டுமாம்.  கார்த்திகை மாதங்களில் லட்ஷ தீப விழா விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இன்று அந்த ஆலயம் புகழ் பெற்று விளங்குகின்றது. அங்கு சென்று வேண்டிக் கொண்டால் செல்வத்திற்கு குறைவு வருவதில்லையாம், மகாலஷ்மியே வீட்டில் வந்து அமர்ந்து உள்ளதைப் போல வளம் பெருகுமாம். 

ஆலயத்துக்கு செல்லும் வழி
ஆலயம் பெங்களூரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜலஹல்லி, நீலமங்களா, மகிமாபுரா போன்றவை வழியே N4 பாதையில் சென்றால்  கோரவனஹல்லியை அடையலாம். கேம்பகோவ்டா பஸ் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் இங்கு செல்ல KSRTC பஸ் வசதி உள்ளது.

ஆலயம் செல்லும் வழி:-
மெஜெஸ்டிக் பஸ் நிலையம் - யஷ்வந்த்பூர்- நீலமங்களா- தும்கூர் சாலை-  தும்கூர் தோல்கேட் - தப்பாஸ்பெட்  - ஷெட்டார் பாலா -கோரவனஹல்லி
இங்கு செல்லும் பாதையைக் காண கீழே உள்ள 
படத்தின் மீது  கிளிக் செய்யவும் 


ஆலய விலாசம் :
Sri Mahalakshmi Temple
Goravanahalli
Theeta Post
Koratagere(T)
Tumkur(D)
Karnataka
India.
Ph No: 
+91 8138-237509

Wednesday, September 7, 2011

Temples built by Pandavas

பஞ்ச பாண்டவர்கள் 
கட்டிய ஆலயங்கள்
சாந்திப்பிரியா
 படத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது  கிளிக் செய்யவும்
மகாபாரத யுத்தம் முடிந்தது. பாண்டவர்கள் மனதில் அமைதி இல்லை. நமது சந்ததியினரை அனியாயமாக கொன்று விட்டோமோ என்ற எண்ணம் தலைத் தூக்க மனதில் அமைதி இல்லாமல் தவித்தார்கள். அதனால் ராஜ்யத்தை தம்மால் திறமையாக ஆள முடியாது என்பதினால் தமது சந்ததியினரான பரிஷித் மன்னரிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு குருஷேத்திரத்தில் நடைபெற்ற யுத்தத்தில் தமது சந்ததியினரை கொன்ற பிரும்மஹத்தி தோஷம் என்ற பாபத்தைக் களைய சிவபெருமானையும் விஷ்ணுவையும் துதித்து பாப விமோசனம் பெற பாண்டவ சகோதரர்கள் ஐந்து  பேரும் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார்கள்.

பஞ்ச பாண்டவர்களும் சேர்ந்து அமைத்த ஆலயம் 

முதலில் அவர்கள் இன்றைய உத்திராஞ்சல் என்ற மாநிலத்தில் உள்ள கர்வால் என்ற இமயமலைப் பகுதியை அடைந்தார்கள். அங்கு அவர்கள் சென்று இமயமலை அடிவாரத்தில் சிவபெருமானை காணச் சென்றார்கள்.  ஆனால் அவர்களை சந்திக்க விரும்பாத சிவபெருமானோ தன்னை ஒரு மாடு உருவில் மாற்றிக் கொண்டு அங்கிருந்த மாடுகள் கூட்டத்தில் தன்னை மறைத்துக் கொண்டார். ஆனால் சிவபெருமானினால்  தனது பக்தர்களை ஏமாற்ற முடியவில்லை. பாண்டவர்களில் பீமன் மாடுகளுடன் மாடாக அலைந்து கொண்டு இருந்த சிவபெருமானை அடையாளம் கண்டு கொண்டு விட்டான். ஆகவே அவன் ஓடிச்சென்று அந்த  மாட்டை பிடித்துக் கொண்டு வணங்க முயன்றபோது அந்த மாடு திமிறிக் கொண்டு ஓட அதன் பின்புறப்  பகுதி மட்டுமே பீமனின் கைகளில் கிடைத்தது.  ஆனால் வலிமை மிக்க பீமனின் பிடியில் இருந்து எளிதில் தப்பிக்க முடியாமல் போக மாடு மீண்டும் மீண்டும் திமிறிக் கொண்டு ஓட  மாட்டின் உடல் பல பாகங்களாகப் பிளந்து கர்வாலின் பல பகுதிகளில் விழுந்தன. மாட்டின் கை, கால்கள் பகுதி துங்கநாத்திலும், முகம் ருத்ரநாத்திலும், பின் பகுதி கேதார்நாத்திலும் பிற பகுதி கல்பேஷ்வர் மற்றும் மத்யமகேஷ்வர் போன்ற பகுதிகளிலும் விழுந்தன. ஆகவே பாண்டவர்கள் அந்த ஐந்து இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்களை அமைத்து அவரை பூஜித்து வணங்கியப் பின் தென் பகுதிக்கு விஷ்ணுவின் ஆலயங்களை அமைக்க பயணித்தார்கள்.

யுதிஷ்டர் அமைத்த ஆலயம்  

 ஆலயத்தில் விஷ்ணுவின் சிலை 
 தென் இந்தியப் பகுதிக்கு வந்தவர்கள் பம்பா நதிக் கரையை அடைந்தார்கள். அங்கிருந்த காட்டில் தங்கி இளைப்பாறிக் கொண்டு இருந்தபோது ஒரு அசிரியின் குரல் அங்கு கேட்டது. அது மகாபாரத யுத்தத்தில் யுதிஷ்டர் அஸ்வத்தாமா இறந்து விட்டதாகப் ஒரு பொய்யைக் கூறி துரோணரை  ஏமாற்றிக் கொன்றதற்கான  பாவத்தை களைவதற்காக அந்த பகுதியில் விஷ்ணுவிற்கு ஒரு ஆலயத்தை யுதிஷ்டிரர் அமைக்க வேண்டும் எனவும் அந்த ஆலயத்தை அமைத்து அங்கு விஷ்ணுவை  வழிபடுமாறு கூறி விட்டு மறைந்தது. அதற்கான இடத்தை தேடி அலைந்தபடி  செங்கன்னூர் அருகில் இருந்த ஒரு  இடத்தைக் அடைய மீண்டும் ஆசிரி  அவர்களுக்கு எந்த இடத்தில் ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்பதைக் கூறியது.  ஆகவே  செங்கன்னூரின் அருகில் விஷ்ணுவிற்கு ஒரு ஆலயத்தை அமைத்தார்கள். அந்த ஆலயத்தை யுதிஷ்த்ரரின் பெயரான தர்மபுத்ரா ஆலயம் என்றும் கூறுகிறார்கள் .

பீமன் அமைத்த ஆலயம் 

 விஷ்ணுவை ஆராதிக்கும் சப்த ரிஷிகள் 
திருச்செங்கண்ணூர்  ஆலயத்தில் இருந்து சில மைல்கள் தள்ளி  பீமனினால்  ஒரு ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு உள்ளது.  திருபுலியூரில் உள்ள அந்த ஆலயத்தில் உள்ளவர்  மாயப்பிரான் எனும் பெயரில் விஷ்ணு பகவான். பீமன் இந்த ஆலயத்தைக் கட்டி விஷ்ணுவை வணங்கித்  துதித்து விட்டுச் சென்றப் பின்  இந்த ஆலயத்தில்  விஷ்ணுவை சப்தரிஷிகள் வணங்கித் துதித்ததாக கதை உண்டு.  சிபிச் சக்ரவர்த்தியின் மகன் ஆண்டு வந்த காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்பட அதை நீக்குவதற்காக சப்தரிஷிகளுக்கும்  தானங்கள் செய்ய வேண்டும் எனவும் அதனால் பஞ்சம் விலகும் எனவும் நம்பி அந்த மன்னன் பல வழிகளை கடைபிடித்தான். ஆனால் அந்த ரிஷிகள் அவன் கொடுத்த தானங்களை வாங்க மறுத்து விட்டார்கள். ஆகவே கோபமுற்று அவர்களை கொல்ல நினைத்த மன்னன் அவர்கள் மீது  யாகம் செய்து வரவழைத்த ஒரு பிசாசை ஏவினான். ஆனால் அந்த பிசாசை மாயப்பிரான் இந்திரனை அனுப்பிக் கொன்று விட ரிஷிகள் உயிர் தப்பினார்கள். அவர்கள் அங்கேயே விஷ்ணுவை வணங்கி முக்தி அடைந்தார்களாம். பீமன் அந்த ஆலயத்தை அமைத்தப் பின்னரே அந்த பூமியில்  பஞ்சம் வந்ததினாலும், சப்தரிஷிகளுக்கும் தொல்லை எற்பட்டதினாலும் சுமார் 200 ஆண்டுகள் அந்த ஆலயத்திற்கு எவரும் செல்லாமல் பாழடைந்து கிடந்தது. ஆனால் அதை பின்னர் மீண்டும் புனர்நிர்மாணித்தார்கள். இன்று இந்த ஆலயம் வைணவர்களின் திவ்ய தேசங்களில் புகழ் மிக்க ஒரு ஆலயமாக உள்ளது.

அர்ஜுனன்  அமைத்த அரண்முலா ஆலயம்

அரண்முலா ஆலயமும்    விசேஷக் கண்ணாடியும் 
(கண்ணாடிப் படம் நன்றி  :http ://www .aranmulametalmirror.com )
பீமன் மற்றும் யுதிஷ்டிரர் கட்டிய ஆலயங்கள் உள்ள அதே பகுதியில் அர்ஜுனன் கட்டிய அரண்முலா ஆலயமும் உள்ளது. தனக்கு கீதோபதேசம் செய்து மகாபாரத யுத்தத்தில் வழி காட்டிய விஷ்ணுவின் அவதாரமான அதே கண்ணனுக்கு - தேரோட்டிய பார்த்தசாரதிக்கு - அர்ஜுனனும் ஒரு ஆலயம் அமைத்து வழிபட்டு தனது சந்ததியினரைக் கொன்ற பாவத்தை களைந்து கொண்டாராம். இங்குள்ள ஆலயத்தில் காட்சி தரும் கண்ணனின் கையில் ஒரு சக்கரம் உள்ளது. அது குறித்து ஒரு சுவையான கதை உள்ளது. மகாபாரத யுத்தத்தின்போது பீஷ்மரைக் கொல்ல அர்ஜுனன் தயங்கி நின்றபோது கிருஷ்ணர் தனது கையில் இருந்த சக்ராயுதத்தை எடுக்க பீஷ்மரும் சரண் அடைந்தாராம். சரண் அடைந்தவரைக் கொல்வது பாவம் என்பதினால் கிருஷ்ணரை அர்ஜுனன் தடுத்து நிறுத்திய போது கிருஷ்ணர் தன்னுடைய கையில் சக்ராயுதத்தோடு நின்ற கோலத்தை மனதிலே கொண்டு அந்த சிலையை அப்படி வடிவமைத்தாராம். இந்த ஆலயத்தில் கிருஷ்ணரின் தலையில் உள்ள கிரீடமும் விசேஷமான உலோகத்தில் ஆனதாம்.
ஒரு புராணக் கதையின்படி அந்த கிரீடத்தை தயார் செய்து கொண்டு இருந்தபோது ஒரு குறிப்பிட்ட உலோகம் தனித் தன்மையுடன் முகம் பார்க்கும் கண்ணாடிப் போல பளபளத்ததாம். அந்த உலோகத்தின் தன்மை என்ன என்பதை யாராலும் கண்டு பிடிக்கவும் முடியவில்லை. அது போல அங்கு வேறு ஒன்றும் கிடைக்கவில்லையாம். ஆனால் ஒரு மூதாட்டியின் கனவில் அந்த உலோகத்தின் தன்மையை தெய்வமே வந்து கூறியதாகவும் அது ஒரு குறிப்பிட்ட வம்சத்தினரிடம் பரம ரகசியமாக இன்றுவரை வைக்கப்பட்டு உள்ளது என்றும், அந்த ஒரு குடும்பத்தினர் மட்டுமே அந்த உலோகத்தில் கண்ணாடியை செய்து வருவதாகவும் அரண்முலா கண்ணாடி என்ற அது புகழ் பெற்றது என்றும் கூறுகிறார்கள். (அது குறித்து மேலும் தகவல் பெறவும், கண்ணாடியை வாங்கவும் http ://www .aranmulametalmirror.com என்ற தளத்துக்கு செல்லவும் ) . இந்த ஆலயத்துக்கு பக்கத்தில் உள்ள நதியில் நடைபெறும் படகுப் போட்டி பிரசித்தமானது.

 நகுலன் அமைத்த திருவாமுன்தூர் ஆலயம் 
திருவாமுன்தூர் ஆலயம்  கோட்டயத்தின் அருகில் உள்ள செங்கநூறில்  பாண்டவ சகோதர்களில்  ஒருவரான நகுலன் அமைத்த ஆலயம் உள்ளது.  இங்குள்ள ஆலய மூர்த்தியை பாம்பனையப்பன் என்று கூறுகிறார்கள்.  அதற்குக் காரணம் இந்த ஆலயத்தை சுற்றி பாம்பன் நதி ஓடுவதினால் பம்பா நதியில் குடிகொண்டு உள்ளவர் என்ற அர்த்தத்தில் அப்படியாகக் கூறுகிறார்கள். இங்குள்ள மூலவர் விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கமலநாதன் என்று அழைக்கப்படுகின்றார். அவர் நின்ற நிலையில் காட்சி தருகின்றார்.  இந்த ஆலயம் திருவாங்கூர் மகரஜாக்களின் காலத்தில் மீண்டும் புனரமைகப்பட்டுள்ளது.  ஒரு கதையின்படி ஏதோ ஒரு காரணத்தினால் நாரத முனிவர் சாபத்துக்கு உள்ளாகி, அந்த பாவத்தை தொலைத்து சாப விமோசனம் பெறுவதற்காக இங்கு வந்து கமலனாதரான ஸ்ரீமான் நாராயணனை வழிபட்டார். அப்போது நாரத முனிவருக்கு ஞானோபதேசம் செய்த ஸ்ரீமான் நாராயணன், சிவனும் ஹரியும் ஒன்றே என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டி தன்னை வணங்குபவர்கள் என்ன விதி முறையைக் கையாள வேண்டும் என்ற  விளக்கத்தையும் தந்தாராம். 


சகாதேவன்  அமைத்த திருக்கோட்டித்தானம் ஆலயம் 

 ஆலயத்தின் முன்னால் காணப்படும் 
விசித்திரமான சிலை. ஒரு கல் தூணின் மீது  
 படுத்த நிலையில்  மனிதனின் சிலை உள்ளது  **
படம்  நன்றி : http://www.thrikodithanam.org/complex.htm
கோட்டயம் மற்றும் சென்கனூருக்கு இடையில் உள்ளது சகாதேவன் அமைத்த திருக்கோட்டித்தானம் ஆலயம். இந்த ஆலயம் மகவிஷ்ணுவிற்காக அமைக்கப்பட்டது. இந்த ஆலயத்தைப் பற்றி கூறப்படும் ஒரு கதை என்ன என்றால், கோட்டை மதிலைப் போல இந்த ஆலயத்தை சுற்றிக் கட்டப்பட்டு உள்ள சுவர்களை பூதங்கள் ஒரே நாளில் சகாதேவனுக்காக கட்டிக் கொடுத்தன. என்பதே. மேலும் சன்னதிக்கு உள்ளே உள்ள சுவர்களில் சிவ தாண்டவ சித்திரங்கள்  காணப்படுகின்றன.  இந்த ஆலயம் பற்றி மேலும் ஒரு விசேஷம் என்ன என்றால் ஆலயம் அமைக்கப்பட்டவுடன் சிவபெருமான்  அந்த ஆலயத்தின் வடகிழக்கில்  ஜோதி  சொரூபமாய் வந்து நின்றார். அப்போது அவரை சுற்றி இருந்த  ஒளி வெள்ளத்தினால் அங்கிருந்த ஆலயத்து வளாகத்தை   கண்களால் பார்க்கவே முடியாமல் போக தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று அது குறித்துக் கூற விஷ்ணுவும், பிரும்மாவும் சிவபெருமானிடம் சென்று அவரிடம் ஒளி வெள்ளத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ள தன்னை சுற்றி இருந்த  ஜோதியை  சிவன் குறைத்துக் கொண்டாராம். அதனால்தான் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் தீப விழாவில் சிவனைப் போற்றி விளக்குகள் ஏற்றப்படுகின்றதாம். இந்த ஆலயம் பற்றிய முழுக் கட்டுரை ** தனியாக வெளிவர உள்ளது.

Tuesday, September 6, 2011

Kenopashad- Gajanan Magaraj Satsang

பரம் சத்குரு ஸ்ரீ கஜானன் மகராஜ் 
கூறியவை
21 .08 .2011 அன்று ஸ்ரீ மோகன் ஜாதவ் 
அவர்கள் ஆற்றிய
சொற்பொழிவில் இருந்து..........
(Read original Version in English 
 ஸ்ரீ பரம் சத்குரு கஜானன் மகராஜ்  
நாம் உண்மை எனும் ஆத்மாவை  தேடும்போது அது குறித்து நமது புத்தியும் மனமும் ஒரு  விளக்கத்தை நமக்கு தற்காலிகமாக  அளித்தாலும்   மெல்ல மெல்ல  ஆத்மா என்பது உண்மையில் என்ன என்ற உண்மை விளங்கத் துவங்கும்போது  நம்முடைய அறியாமை விலகத் துவங்குவதை உணரலாம்.
 உதாரணமாக சுற்றிக் கிடக்கும் கயிற்றையும், பாம்பையும் தூரத்தில் இருந்து பார்க்கும்போது சிலர் அதை பாம்பு என பயந்து கொண்டு அதன் அருகில் செல்லாமல் அந்த பயத்திலேயே இருந்து விடுகிறார்கள்.  உண்மை என்பது என்ன என்று தெரியாத அப்பாவி மக்கள் பல பயங்களை மனதில் சுமந்து கொண்டு  வாழ்கிறார்கள். தான் பார்த்தது கயிரேதான், பாம்பு அல்ல என்ற உண்மை அவர்களுக்கு தெரிய வரும்போது அவர்களை பிடித்து இருந்த  பயமும் மெல்ல மெல்ல முழுமையாக விலகி விடுகின்றது.
இப்படியாகவே நமது வாழ்கையிலும் உள்ள  துயரங்கள்  மற்றும் துன்பங்களின் உண்மையான காரணம் புரிய வரத் துவங்கியவுடன்  நமது மனத் துயரம் விலகும் . இறப்பும் பிறப்பும் என்ன என்பதின் உண்மையான அர்த்தமும் தெரிய வரும். அப்போதே நாமும் இறைவனிடம்  ஐக்கியமாகத் துவங்கி விடுவோம். அப்படி ஒரு நிலையை நாம் அடைவதையே '' அஹம் பிரும்மஸ்மீ'' அதாவது பைபிளில் கூறி உள்ளதைப் போன்ற  'நானும், என் தந்தையும் ஒருவரே',  உபநிஷத்தில் கூறி உள்ளதைப் போல 'த்ம் தத்வம் அஸி'  அதாவது உண்மை எனும் ஆத்மாவின்  உண்மை நிலையை அறிந்து கொள்வது என்பது. 
 ஆத்மாவின் உண்மையான உருவம் என்பது என்ன? அதற்கு தனி உருவம் இல்லை, உணர்வும் இல்லை,  அது என்றுமே மாறாத ஒன்று.  அது உரு மாறிக் கொண்டே,  இடத்தை விட்டு இடமாக நகர்ந்து கொண்டே இருக்கும்  பொருளும் அல்ல.  ஸ்திரமாக உள்ள அது நேற்று, இன்று, நாளை என்ற மாறிவரும் நிலையைப் போன்றது அல்ல, மனித மனங்களுக்கும், காலத்திற்கும் அப்பாற்பட்டது . நாம் அதற்கு ஒரு பெயரைக் கொடுக்க வேண்டும் என்றால் அந்த  நிலையை   பிரும்மன்  என்று வேண்டுமானால் என்று கூறிக் கொள்ளலாம்...ஆனால் அந்த பிரும்மனுக்கும் கூட  நிறம் இல்லை, வெவேறு ரூபங்கள் இல்லை, அ��ு உருவை��ும், பெயரையும் தாண்டி நிற்பது.   
இவற்றை நம்மால்  புரிந்து கொள்வது கடினம் என்றாலும்  மனிதனுக்குள் இயற்கையாகவே  அமைந்து உள்ள  மனோதத்துவார்த்தமான மன அலைகள் மூலம்  அதை நாமும் புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றோம். அந்த புரிந்து கொள்ள முயற்சிக்கும் நிலையின் உண்மையானக் காரணம் இந்த மனிதனின் உடல் என நினைத்தபடி அந்த ஜடமான உடலில் வாசம் செய்யும்  ஆத்மாவினால்தான்.  ஆகவே ஒரு மனிதனின் மனதும் புரிந்து கொள்ளும் சக்தியும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை.  இந்த சக்தியைக் கொண்டு மட்டுமே  எல்லையற்ற உண்மை என்ற தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது.  ஆனால் இவற்றை ஒரு கருவியாக உபயோகப்படுத்தி   'தபசரண்' என்ற ஆறு வழி ரிஷி  மார்க்கத்தின் மூலம் நமது அறிந்து கொள்ளும் சக்தியையும் மனதையும் தூய்மைப்படுத்தி,  பக்குவப்படுத்தி உண்மையென்ற நிலையை அறிந்து கொள்ளும் பாதைக்கு செல்ல முடியும்.
நமக்கு வெளியில் தெரியுமாறு இரண்டு காதுகள் உள்ளன. ஆனால் நாம் கேட்பது அனைத்தையும் மூன்றாவது காதாக நமது உடலுக்குள் இருந்து வரும் ஆத்மா  கிரகித்துக் கொள்கின்றது. அது போல நமக்கு இரண்டு கண்கள் இருந்தாலும் நாம் என்ற மூன்றாவது கண்ணாக இருந்தவாறு  நமது ஆத்மாவே அதைக் கட்டுப்படுத்துகின்றது. அது போலத்தான் நமது பேச்சு, உணர்வு, வாசனை, எண்ணம் போன்ற அனைத்தையுமே ஆத்மா  கட்டுப்படுத்துகின்றது .

இங்குள்ள மந்திரத்தைப் பாருங்கள்

ந தாத்ரா சக்க்ஷுனு ந  கச்சட்டி வாக் ந கச்சட்டி மனஹா ந கச்சட்டி  யதா யதத் அனுஷிஷ்யத ந விஜனிம் தட் விதிதட் ந அன்யத் யிவ அதோ அவிதிதட் ஆதியிதட் ந வ்யாச் சக்க்ஷரே   யிஷாம் பூர்வேஷம் இதி சூஷ்ரூமா 

 இதன் அர்த்தம் என்ன என்றால் நமது கண்களால் பார்க்க முடியாதது, நமது பேச்சும் இந்திரியங்களும் உணர முடியாதது, ரிஷிகள் கூறுவது போல  நமது மனத்திறனுக்கு அப்பாற்பட்டதே ஆத்மா அல்லது உண்மை என்ற நிலை . இதை புரிய வைப்பதும் கடினம். ஆகவே நமது மூக்கு, வாய், காது, கண்கள் என உடலில் உள்ள பாகங்கள் பார்க்க முடியாத  ஆனால் அவை அனைத்தையுமே  இயக்கும் அந்த ஆத்மா எனும் இயக்கத்தின் உருவை  நம்மால் எழுத்து மூலம் காட்ட முடியாது.

தேவி அதர்வாஷிர்ஷ உபநிஷத்தில் கூறப்பட்டு உள்ள இந்த மந்திரத்தைப் பாருங்கள்:

யஷ்யாஹா ஸ்வரூபம் ப்ரும்மதயோ ந ஜானன்தி தஸ்மாதுச்யதே அஜ்யேய  யஸ்ய அந்தோ ந லபியதே தஸ்மாதுச்யதே அவன்தா யஸ்ய லஷ்யம் னோபலாஷ்யதே தஸ்மாதுச்யதே அலாக்ஷ்யா யஸ்ய ஜனனம் னோபலாஷ்யதே தஸ்மாதுச்யதே அஜ எகைவ சர்வத்ர வர்த்ததே தஸ்மாதுச்யதே ஏக 

இதன் அர்த்தம் என்ன என்றால் இந்த ஆத்மா எனும் உண்மையை எவராலும் விளக்கிக் கூற முடியாது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அதை கூற முயன்றாலும் அதை மனிதர்களால் கிரகித்துக் கொள்ளவும் முடியாது. எல்லை கடந்து நிற்கும் அந்த உண்மையை  வார்த்தைகளில் அடக்கவும் முடியாது. மேலும் அது அமர்ந்து உள்ள இடத்தைக் காணவும் முடியாது.
சார்லி எங்கே உள்ளளர் என்று கேட்டால் அவர் உள்ள இடத்தைக் காட்ட முடியும்.   ஆனால் அவருக்குள் உண்மை எனும் ஆத்மா அமர்ந்து கொண்டுள்ள இருப்பிடத்தை யாராலும் காட்ட முடியாது.  நான் முன்னர் கூறியது போல உருவமற்ற, வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆத்மா  எனும் உண்மையே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது, அதை மீறி எதுவுமே கிடையாது. ஒரு  இயக்கத்தின் மூலமே அதன் சக்தியைக் உணர முடியும், ஒரு கன்னியைப் போன்ற அது பரப்பிரும்மனிடம் மட்டுமே ஒன்றாகக் கலந்து இருக்கும். அப்படி பரப்பிரும்மனிடம் கலந்து இருந்தாலும் தனித்தன்மை கொண்ட உண்மை என்ற ஆத்மாவாகவே இருக்கும். அப்படி என்றால் ஒவ்வொருவரும் தான் காண விரும்பும் பல வித கடவுட்களான  ஸ்ரீ ராமர், கிருஷ்ணர், ஹனுமார், கணேஷா போன்றவர்கள் யார்?  அவர்களை ஒரு உடலிலான ரூபத்தில்தான் நாம்  பார்க்கின்றோம் . 
ஆனால் அந்த ரூபங்கள்  நாம் காண விரும்பும் உண்மை எனும் ஆத்மா அல்ல. அது அந்த ரூபன்களுக்கும் அப்பாற்பட்டது.  இனி அடுத்த மந்திரத்தைப் பார்க்கலாம்:-

யாத வச்ச அனுப்யிதிதம் யேன வாக் அபியுத்யதே தட் எவ பிருமா த்வம் வித்தி  இந்த்ரியாணி யட்  இதம்  உபாசதே

இதன் அர்த்தம் என்ன என்றால் எந்த ஒன்றை  நமது வாய் பேச்சினால் விளக்க முடியாதோ அந்த பேச்சை தருவதே உண்மை என்ற அந்த ஆத்மாதான். பல யாகங்களிலும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சாதனாவை அனுஷ்டிக்கின்றார்கள்.  அவை பல ஆத்மாக்களை குறித்தே இருந்தாலும் அது சாதானாக்களுக்கும் அப்பாற்பட்டது.
ஒரு உதாரணத்துக்காக சொல்வோம். இரவு வந்தது. அனைத்து இடங்களும்  இருட்டாக உள்ளது. காலை வந்தது,  சூரியன் எழுந்தான். வெளிச்சம் பரவ அனைத்துமே தெரியத் துவங்குகின்றது.  ஆகவே அனைத்தையும் காட்டும் அந்த சூரிய ஒளி சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த சூரிய ஒளியை விட அந்த சூரிய ஒளியை உள்ளடக்கி உள்ள சூரியனைக் கூட  காண முடிந்த வகையில் நம்முள் மறைந்து உள்ள ஆத்மாவின் வெளிச்சத்தை நம்மால் காண முடிந்தால் எதன்  ஒளி பெரிது  என்பதை எண்ணிப் பாருங்கள்?  
 சார்லி என்ற மனிதன் மிக ஆஜானுபாகுவானவன். அவன் தன முகத்தை மழித்துக் கொள்ள (ஷேவிங் செய்து கொள்ள ) கண்ணாடியைப் பார்க்கின்றான். அந்த முகம் பார்க்கும் கண்ணாடி எத்தனை சிறியதாக இருந்தாலும் அவன் முழு உருவையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அவன் உருவை அது காட்டும். அது போல சார்லியினாலும் அவன் முகத்தில் உள்ள சிறு கண்களின் சிறு பூதக் கண்ணாடி மூலம் உலகின் அனைத்தையுமே பார்க்க முடியும். அது மட்டும் அல்ல பார்த்த அனைத்தையுமே தன் மனதில் புதைத்து வைத்துக் கொள்ளவும் முடியும். ஆக பார்க்கும் கருவியான கண்களை விட அதை இயக்கி வெளியில் பார்த்ததை தன்னுள் அடக்கிக் கொள்ளும்  ஆத்மா  பெரியது அல்லவா?
 இன்னொரு உதாரணம். தேவதத்தா என்பவன் ஆடிப்பாடிக் கொண்டு நடனமாடிக் கொண்டு இருந்தான். திடீரென  கீழே  இறந்து விழுந்தான். அவன் உடலில்  இருந்த கண்கள், காதுகள், வாய் என எதுவுமே இயங்கவில்லை. ஆக அவன் உயிருடன் இருந்தபோது அவை அனைத்தையுமே எது இயக்கியது?  இப்போது ஏன் அது இயக்க மறுத்தது?  நம்முள் இருக்கும் ஒரு சிறு பொறி, அது இல்லை என்றால் அது ஒருமுறை அது உடலை விட்டு   தெறித்து வெளியில் விழுந்து விட்டால் இயக்கமே இல்லை. இது நாலு கால்களைக்  கொண்ட  மிருகங்களுக்கும் கூடப் பொருந்தும்.
ஞாயிறு என்ற தினம் முன்னும் பின்னும் உள்ள திங்கள் அல்லது செய்வாய் கிழமைகளுக்கு இடையே வரும். அந்தக் கிழமைகள் இல்லை என்றால் ஞாயிறு என்பது வராதா ? வரும், ஆனால் திங்கள் அல்லது செய்வாய் கிழமை போன்றவை ஞாயிற்றுக் கிழமையை அடையாளம் காட்டும் தினங்களே. அது போலத்தான் சார்லி என்பவன் இருந்தால் அவனுக்கும்  தான் யார் என்பது தெரியும். அவன் மற்றவர்களின் தயவினால் மட்டுமே வாழ  வேண்டும் என்பது இல்லை.  அவனுக்கு என தனித்  தன்மை உள்ளது. அவனுக்கு தான் யார் என்பதை யார் உணர்த்துகிறார்கள்? அவனுகள் உள்ள உண்மை எனும் பரமாத்மாவே அவனுக்கு அவனை யார் என உணர்த்துகின்றது. இப்படியாகத்தான் கிருஷ்ணன், வள்ளி, சாரதா என அனைவரும் தன்னைத் தானே உணருகிறார்கள்.

யாத் வாச்சா  ந அபியுதிதம் யேன வாக் அபியுத்யதே தத் யேவ பிரும்ம த்வம் விதாதி ந இதம் யதி இதம் உபாசதே 
 
இது என்னக் கூறுகிறது என்றால் 'யாத் வாச்சா  ந அபியுதிதம்'  அதாவது எதை வார்த்தைகளினால் விளக்க முடியாதோ, ஆனால் அதுவே வாயில் இருந்து வரும் வார்த்தைகளை பேச வைக்கும் சக்தி , அதாவது அந்த உண்மையான இயக்கும் சக்தியே ஆத்மா  என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  இந்தக் கதையைப்  கேளுங்கள்.
  ஒரு குருவிற்கு நல்ல சிஷ்யன் இருந்தான். அவன் சத்குருவிடம் பல ஆண்டுகளாக இருந்து ஆன்மீகப் பாடங்களை பயின்றான். ஒரு கட்டத்தில் அந்த சிஷ்யன் ஞானம் பெற தயாராகி விட்டதை அறிந்து குரு அவனிடன் 'இனி  இங்கிருந்து நீ சென்று தனியான இடத்தில் தியானத்தில் இருந்து கொண்டு ச்வாத்யாயா என்ற  ஆத்ம உண்மையைத் தேடு' என்று கூறி அனுப்பினார். பல வருடங்கள் கடந்தன. சிஷ்யன் தன் மனதில் இருந்தே ஒரு செய்தியை குருவிற்கு அனுப்பினார். 'என்னுடைய ஆத்ம  பரிசோதனை முடிந்து விட்டது. உண்மையான ஆத்மா என்ன என்பதை உணர்ந்து விட்டேன். இனி உங்களிடம் மீண்டும் வர ஆசைப்படுகிறேன்'. சிஷ்யன் குருவிடம் நேரில் வந்து இதைக் கூறவில்லை. எங்கோ இருந்தவர் தனது மனதில் இருந்த எண்ண அலைகளை அனுப்பினார். அது குருவை வந்து அடைந்தது. அவரும் சிஷ்யரை வருமாறு கூறி செய்தி அனுப்ப சிஷ்யரும் குருவிடம் வந்தார் அவர் முன் அமர்ந்து தியானத்தில் அமர்ந்துகொள்ள இருவரும் இதயபூர்வமாக மனத்தால் பேசிக் கொண்டார்கள். இருவருடைய  வாயும் பேசவில்லை, உணர்வுகள் இல்லை, ஆனால் மனதின் வழியே சென்ற அதிர்வலைகள் இருவரின் எண்ணங்களையும் அவர்கள் உள்ளே இருந்த  ஆத்மாக்களே பேசிக் கொண்டன . அதையே அசீதத்துவா என்கிறோம்.
நீங்கள் உங்களுக்கு உண்மையான ஆத்மா என்ன என்பது தெரிந்து விட்டது என்பதினால் அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டதாக   நினைத்தால்  அது தவறு.  காரணம் கடவுளே அப்படி நினைப்பது இல்லை. உபநிஷத்தில் ஒரு கதை உள்ளது.  பிருகு முனிவர் தன தந்தையிடம் சென்று தான் பிரும்மனக் காண விரும்புவதாகக் கூறினார்.  அதற்கு அவருடைய தந்தை அவரை 12 வருட கால தாபத்தை செய்யுமாறு கூறினார். பிருகு முனிவரும் 12 வருட தவத்தில் இருந்துவிட்டு தன்  தந்தையிடம் வந்து கூறினார் 'எனக்கு உண்மை என்ன என்பது புரிந்துவிட்டது. இந்த உலகில் உள்ளவர்கள் உணவை உட்கொண்டால்தான் உயிர் வாழ முடியும். ஆகவே உண்ணும் அன்னமே மனிதர்களின் உண்மை'. அதைக் கேட்ட அவர் தந்தை அவரிடம் இன்னும் 12 வருட கால தபத்தை செய்து விட்டு வருமாறு கூறினார். மீண்டும் 12 வருட தவத்தை தனது மற்ற சிஷ்யர்களுடன் செய்து விட்டு வந்த பிருகு முனிவர் தந்தையிடம் வந்துக் கூறினார் ' எனக்கு இன்னும் ஒரு முக்கியமான உண்மை தெரிந்துவிட்டது. மனிதனை இயக்குவதில்  முக்கியமானது அவன் மனதுதான் '.. அவர் தந்தை அதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தது போலக் காட்டிக் கொண்டு 'அப்படியா...சரி, இன்னும் 12 வருடம் தபம் செய்துவிட்டு வா' என்று கூறி அவரை அனுப்பினார் . இன்னும் 12 வருடம் தவம் செய்துவிட்டு பிருகு திரும்பிய போது அவருக்கு ஒன்று புரிந்தது. உடலில் உள்ள ஐந்து இயக்கங்களில் அவற்றில் ஏதாவது ஒன்று அல்லது சில இயக்கம் நின்று விட்டாலும்  உடல் இயக்கம் தொடர்ந்து இருக்கும். ஆனால் ப்ராணா என்பது மட்டும் வெளியில் போய் விட்டால் மற்றவை இயங்க முடியாது. அதை புரிந்து கொண்டவர் தன் தந்தையிடம் சென்று அந்த உண்மையைக் கூற அவர் கூறினார்  'இன்னும் சில நாட்கள் தொடர்ந்து முயற்சித்துப் பார்... இயற்கையின் நியதி என்ன என்றால் உடல் என்ற ஒரு போர்வைக்குள்தான் ஆத்மா என்பது இருக்கும்.  அந்த உண்மை தத்துவத்தை அனுபவித்து புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிலைதான் பேரானந்தம் என்பது . நாம் இந்த உலகில் ஒரு  மனிதராகப் பிறந்துவிட்டால் 'ப்ராரப்தம்' என்ற  அனைத்தையும் அனுபவிக்க  வேண்டி உள்ளது. பல இன்னல்களையும் சந்திக்க வேண்டி உள்ளது. ஆனால் ஒருமுறை அந்த பேரானந்த நிலைக்குச் சென்று உண்மையான ஆத்மா என்ன என்பதைக் கண்டறிந்து விட்டால் எந்த 'ப்ராரப்தங்களின்' விளைவுகளும் நம் மனதை பாதிக்காது.'
உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...''காற்று எப்படி வீசுகின்றது....மழை ஏன் பொழிகின்றது....நான் எப்படி வாழ்கின்றேன்...நான் பிறந்தேன், மெல்ல மெல்ல வளர்ந்தேன்...மெல்ல மெல்ல என் மரணத்தை நோக்கி நகர்கின்றேன்.. மரணமும் வருகின்றது...இந்த உலகில் வாழ்கை என்ன என்பதை உணர்ந்தேன்...கஷ்ட நஷ்டங்கள் என்பது இல்லாமல்   வாழ்கை என்பது உண்டா? '' இப்படியாக அனைத்தையும் எண்ணிப் பாருங்கள்.  உண்மையைத் தேடுவது மந்திர மாயங்களைப்  போல உடனே நடந்து விடாது. அதைக் கண்டுபிடிக்க வாழ்கையை அனுபவிக்க வேண்டும்.   ஒரு மந்திரத்தாலோ மாயையினாலோ  உங்களுடைய கஷ்டங்களை நினைத்த மாத்திரத்தில்  போக்க முடியாது, குழந்தை பிறக்க முடியாது, கல்யாணம் ஆக முடியாது, நல்ல கணவன் மனைவிகளைப் பெற  முடியாது. ஆனால் அவற்றை அடைய நீங்கள் கடவுளின் அருளை வேண்டி அதைப் பெறலாம், ஒரு குருவின் வழிகாட்டுதலில் அவற்றை அடையலாம். இல்லை நீங்களே முயற்சித்தும் அதைப் பெறலாம். ஆனால் அவற்றைப் பெற உங்களூக்குள் உள்ள எவரோ உங்களை வழிகாட்டுகிறார்...அது யார் என்பதை ஒரு குருவின் மூலம்  காண முயலுங்கள். அந்த உண்மையை தெரிந்து கொண்டு  விட்டால் இந்த உலகின் எந்த வேதனைகளும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.

Friday, September 2, 2011

Adhi Kesava Perumaal Temple

தெரிந்த ஆலயம்....அறிந்திடாத ஆலய செய்திகள்  

மயிலை ஆதிகேசவப் 
பெருமாள் ஆலயம்
சாந்திப்பிரியா 

சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்ற மயிலையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை கபாலீஸ்வரர் ஆலயமும் ஆதிகேசவர் ஆலயமும் ஆகும்.  அந்த ஆலய தெப்பக் குளங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ஒரு காலத்தில் அந்த இரண்டு குளங்களிலும் நீர் நிரம்பி வழிந்தது. மக்கள் நீராடுவார்கள். ஆலய விழாக் காலங்களில் அங்கு நடக்கும் தெப்ப உற்சவங்கள் சிறப்பாக இருக்கும். 
தற்போது மயிலாப்பூர்  என்று அழைக்கப்படும்   பகுதியின் அந்த காலப் பெயர் மயூரபுரி  என்று இருந்தது. காரணம் இங்கு மயில்கள் நிறைய இருந்தன. அது மயூரங்கள் (மயில்கள்) நிறைந்து இருந்தப் பகுதி என்பதினால்  மயூரபுரி என்ற  பெயர் பெற்று இருந்தது. இங்கு சிவன், பார்வதி, லஷ்மி மற்றும் விஷ்ணு என்ற நான்கு பேரும் பல்வேறு காரணங்களினால் சபா விமோசனம் அடைந்து மீண்டும் ஒருவரை ஒருவர் மணந்து கொண்டு அங்கு ஆலயங்களில் குடி அமர்ந்தார்கள், பிருகு முனிவர், பேயாழ்வார் போன்றவர்கள் அனுக்கிரகம் பெற்ற இடம் போன்ற பல காரணங்களினால்  என்பதினால் இந்த மயிலை பகுதி விசேஷமானது.
அதில்  ஒரு ஆலயமே ஆதிகேசவப் பெருமாள். ஆதிகேசவர் ஆலயம் 500 முதல் 1000 வருடப் பழமையானது என்கிறார்கள். அங்கு ஆலய மூலவர்களுடன் வணங்கப்படும் ஒரு ஆழ்வாரின்  பெயர் பெரியாழ்வார் என்பது.  அவரும் மயிலையில்தான் பிறந்தவர் என்பதினால் இந்த ஆலயத்தின் சிறப்புக் கூடுகின்றது. ஒரு காலத்தில் இந்த இடத்தில் சித்ரை புஷ்கரணி என்ற நீர் நிலை இருந்தது.  அதுவே காலப் போக்கில் பெயர் மாறி சித்திரக் குளம் என ஆயிற்று.
 படம் நன்றி : www.divyadesam .com
இந்த ஆலயத்து புராணக் கதைகள்  சில உண்டு. ஒரு காலத்தில் வனமாக இருந்த இந்த இடத்தில் பிருகு முனிவர் தேவர்களையும் ரிஷி முனிவர்களையும்  துன்புறுத்தி வந்த அசுரர்களின் தொல்லையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு யாகம் ஒன்றை செய்து வந்தார். அவருடன்  வேறு பல முனிவர்களும் யாகத்தில் கலந்து கொண்டார்கள். யாகம் நடந்து முடிந்தால்தான்  பிருகு முனிவரை  ஒன்றும் செய்ய முடியாது என்பதினால்  அந்த யாகம் நடந்து கொண்டு இருந்தபோது சில அசுரர்கள் அங்கு வந்து யாகத்தை நடக்க விடாமல் தடுத்து அங்கு கூடி இருந்த முனிவர்களை விரட்டி அடித்தார்கள். பிருகு முனிவரும் தப்பி ஓட வேண்டி இருந்தது.
அங்கிருந்து தப்பி ஓடிய ரிஷி முனிவர்கள் பிருகு முனிவர் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைக் கூறி நடந்தவற்றை அவரிடம் எடுத்து உரைத்தார்கள். விஷ்ணுவும் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, அங்கு மீண்டும் சென்று யாகம் செய்யுமாறும் தானே அங்கு வந்து அவர்களைக் பாதுகாத்து அசுரர்களை அழிப்பதாக உறுதிக் கூற மீண்டும் பிருகு முனிவரும் மற்றவர்களும் இன்று சித்திரக் குளம் உள்ள அதே பகுதியில் வந்து யாகத்தை மீண்டும் துவக்கினார்கள் . மீண்டும் யாகம் துவக்கப்பட்டதை அறிந்த அசுரர்கள் கேசி என்ற அசுரனின் தலைமையில் அங்கு வந்து யாகத்தை தடுக்க முயல, யாக குண்டத்தில் இருந்து தனது மனைவியுடன் வெளிவந்த ஆதியும் அந்தமுமாக இருந்த விஷ்ணுவானவர் அந்த அசுரர்களை வதம் செய்தார்.   அந்த அசுரர்களின் தலைவனான கேசி எனும் அசுரனை கொன்று சவமாக்கியதால் (சவமாக்கியதால்) கேசி+சவம் என்ற பெயருடன் அவர் ஆதி கேசவப் பெருமாளாக அங்கேயே குடி அமர வேண்டும் என  பிருகு  முனிவர் விஷ்ணுவிடம்  வேண்டிக் கொள்ள  இன்னும் சில காலத்தில் ஒரு சாப விமோசனம் பெறுவதற்காக லக்ஷ்மி  பிருகு முனிவரின் மகளாகப் அங்கு வந்துப் பிறந்து  இருக்கும்போது  தானும் அங்கு வந்து அவளை மீண்டும் மணந்து  கொண்டு  அங்கேயே அந்த  முனிவரின் விருப்பத்தின்படி கோவில் கொள்வதாக வாக்கு தந்தார்.
படம் நன்றி : www.divyadesam .com
இப்படி இருக்கையில் ஒரு முறை ஒரு சாபத்தினால் விஷ்ணு லஷ்மியை பிரிந்து வாழ வேண்டி இருந்தது. லஷ்மி பிருகு முனிவருக்கு மகளாகப் பிறந்து அவளை மணக்க வேண்டும் என்ற விதியும் இருந்தது.  அப்போது பிருகு முனிவர் மயூரபுரி என்ற இடத்தில் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தவத்தில் இருந்தார்.  பிருகு முனிவர் குடிலுக்கு அருகில் இருந்த குளத்தில் ஒரு மலர் மீது சிறு குழந்தை வடிவில் லக்ஷ்மி வந்து மிதந்தாள். அங்கு வந்த பிருகு முனிவர் அந்த சிறு குழந்தையை எடுத்து வந்து அதற்கு பார்கவி என்றப்  பெயரை சூட்டி வளர்த்தார். அதே நேரத்தில்  ஒரு முறை  பிரும்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொள்ள சிவபெருமான் பல இடங்களில் சுற்றி அலைந்து பிச்சை பெற்றுக் கொண்டு அலைந்து  வந்தார். அப்போது இந்த மயிலை பகுதிக்கு  வந்த சிவபெருமானைக்  கண்டதும் பிருகு முனிவராக இருந்த லஷ்மி தேவி அவருக்கு பிச்சை போட சிவபெருமானின் தோஷமும் அங்கேயே விலகியது. லஷ்மியும் தனது சுய உருவத்தை பெற்றாள். அதே நேரத்தில் விஷ்ணுவும் லஷ்மியை தேடி அலைந்தவாறு அங்கு வந்தார். லஷ்மியைக் கண்டார். அனைவரையும் ஒரு சேரக் கண்ட பிருகு முனிவர் அங்கேயே தனது மகளாக வளர்ந்த லஷ்மியை ஒரு தந்தையாக இருந்து விஷ்ணுவிற்கு மணம்  செய்துத் தர விஷ்ணுவும், லஷ்மியும் அங்கு கேசவப் பெருமாள் மற்றும் பார்கவி தேவியாக குடி கொண்டார்கள்.  சிவபெருமானும் அங்கிருந்து சற்று தள்ளி இருந்த ஒரு இடத்தில் ஒரு கற்பக மரத்தடியில் தன்னுடன் மீண்டும் இணைய வேண்டும் என்ற கோரிக்கையுடன்  மயில் உருவில் தவம் இருந்துகொண்டு இருந்த பார்வதியை மணந்து கொண்டு கபாலீஸ்வரர் ஆலயத்தில் குடி கொண்டது  தனிக் கதை. 
லஷ்மி தேவியானவள் பார்கவி, மற்றும் மயூரவல்லி தாயார் போன்ற பெயரையும் கொண்டு ஆதிகேசவர் ஆலயத்தில்  வலப்புறத்தில் தனிச் சன்னதியில் அமர்ந்து இருக்கிறாள். வெள்ளிக்கிழமை தோறும் காலையில்  ஸ்ரீ சூக்த வேத மந்திரத்துடன் வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆகவே அந்த நேரத்தில் தாயாரை வழிபடுவது விசேஷமான பலனைத் தரும்.  லஷ்மி தேவியே மீண்டும் விஷ்ணுவை இங்கு மணந்து கொண்டதினால் திருமண தோஷம் நீங்க இங்கு வேண்டுதல் செய்வது நிச்சயப் பலனைத் தருமாம். மேலும் விஷ்ணுவின் ஆயுதமான ஒரு வாள் இங்குள்ள தீர்த்தத்தில் பேயாழ்வாராகப் பிறந்தார்.   அப்படியாக அங்கு பிறந்தவரான பேயாழ்வாருக்கு இந்த ஆலயத்தில் லஷ்மி தேவி  ஒரு குருவாக இருந்து  உபதேசம் செய்வதினால் இந்த ஆலயத்திற்கு  வந்து கல்வியில்  சிறந்து விளங்க வேண்டும் என பிராதிப்பதும் நடைமுறைப் பழக்கமாக உள்ளது. இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக இங்கு வரும்  பக்தர்கள், மயூரவல்லி தாயாருக்கு வில்வ அர்ச்சனை செய்து, 2 சிறிய மணிகளை அவளது பாதத்தில் வைத்து பூஜித்து பின்பு, சன்னதி கதவில் கட்டி வழிபடுகின்றனர். இந்த மணிகள் தம்மை அங்கு வந்து வைத்துள்ள பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை அவர்களின் குரலாக ஒலித்தவண்ணமே  இருந்து கொண்டு  தாயாரிடம் பிரார்த்தனை செய்வதாக ஐதீகம் உள்ளது. அவரவர் கோரிக்கைகள் நிறைவேறியப் பின்னர் பக்தர்கள் அங்கு வந்து  மீண்டும் இரண்டு மணிகளைக் கட்டி நேர்த்திக் கடன்களை  நிறைவேற்றுகின்றனர்.
ஆலயத்தில்  கட்டப்பட்டு உள்ள மணிகள் 
 இந்த ஆலயம் பற்றிய மேலும் சில சிறப்புச் செய்திகள்  இவை:
(1) சந்திர பாகவான்  இங்கு வந்து இங்குள்ள புனிதக் குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றாராம்.
(2) அப்போது இந்த குளத்தில் அனைத்து இடங்களிலும் இருந்த புனித நதிகளின் நீரும் வந்து சங்கமிக்க விஷ்ணு பகவான் ஏற்பாடு செய்தாராம். ஆகவே இங்குள்ள தீர்த்தக் குளமும் மிகப் புனிதமானது. 
(3) ராவணனை வதம் செய்து சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திப் பட்டினத்திற்கு திரும்பிச் சென்ற ராமபிரான் இங்கு வந்து ஆதிகேசவப் பெருமாளை வணங்கிச் சென்றாராம்.

ஆலய விலாசம்
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்
கேசவ பெருமாள் சன்னதித் தெரு
மயிலாப்பூர்
சென்னை-600 004 
+91-44-24643873