Saturday, December 8, 2012

வெண்கடுகு- White Mustard

குடும்ப அமைதிக்கு வெண்கடுகு
 
சாந்திப்பிரியா

சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ''பல குடும்பங்களிலும் உள்ள ஓரே பிரச்சனை குடும்ப அமைதி இன்மை. சகோதர, சகோதரிகளிடையே மன வேறுபாடு. வீட்டில் உள்ள பெண்கள்  திருமணம் ஆகிய பின்  கணவனுடன் சென்று வசிப்பார்கள். அது போல ஆண்கள் தன்னுடன் வசிக்க தன் மனைவியையும் அழைத்து வருவார்கள். ஒரு குடும்பத்தில் பெண்கள் வெளியே சென்று விட, புதுப் பெண் உள்ளே நுழைய  பெரும்பாலும் அந்த இரு பிரிவுப் பெண்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் மூலமே  மனஸ்தாபங்கள் தோன்றத் துவங்குகிறது. சின்ன சின்ன பிரச்சனைகளினால் ஏற்படும் மனஸ்தாபங்கள் பெரிய அளவில் எழுகிறது.  இன்னும் சில குடும்பங்களில் சகோதர சகோதரிகளுக்கு இடையேயும் மனஸ்தாபங்களும் வெளியில் தெரியாத வெறுப்பும் ஏற்படும்போது அவை அனைவரது குடும்ப வாழ்க்கை மற்றும் மன நிலையை பாதிக்க அவர்கள் அமைதி இன்றி  வாழ்கிறார்கள். பல வருடங்களாக ஒற்றுமையுடன் இருந்த  நல்ல குடும்பங்களில் கூட திடீர் என  இப்படிப்பட்ட வேற்றுமை தோன்றத் துவங்குகிறது.  இதற்கு மூலக் காரணமே நம் வீடுகளில் குடி புகுந்து கொள்ளும் தீய சக்திகள்தான். தீய சக்திகளினால்  எளிதில் ஆக்ரமிக்க முடிந்தவர்கள்  வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும்   மன வலிமையற்ற பெண்களின் மீதுதான்.
வீடுகளில் சுற்றித் திரியும் அவை வீட்டில் உள்ள நல்ல ஆவிகளை அடித்து விரட்டி விட்டு  அங்குள்ள எண்ண அலைகளை, அதிர்வுகளை  தாமே ஆக்ரமித்துக் கொள்ளும்போது எதிர்மறையான எண்ணங்களையே விதைத்துக் கொண்டு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். பல்வேறு காரணங்களினால் அங்காங்கே சுற்றித் தெரியும் தீய ஆவிகள் யார் மூலமாவது வீடுகளில் புகுந்து கொண்டு முதலில் குடும்ப ஒற்றுமையைக் குலைக்கும். வீட்டிற்குள் நுழைய முடியாத அளவில் உள்ளபோது வெளியில் இருந்தவண்ணம் அவற்றால் எதுவுமே செய்ய இயலாது. ஆனால் ஒருமுறை யார் மூலமாவது வீட்டிற்குள் நுழைந்து விட்டால் அவற்றை கண்டுபிடித்து வெளியேற்றுவது கடினம் என்பதின் காரணம் அவை வீட்டில் உள்ளவர்களின் மன நிலையை தன்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறது என்பதினால்தான். தான் தீய சக்தியாக இருப்பதினால் தான் குடி வந்துள்ள  வீட்டில் வேறு யாரும் மன அமைதியுடன் இருக்கக் கூடாது என அவை நினைப்பதே அதற்குக்  காரணம். வீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை விலக்குவது கடினம் அல்ல. ஆனால் வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான் என்பது மட்டும் சத்தியமான உண்மை. ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றி சிதறும் என்பதின் காரணம் அந்த தீய ஆவிகளின் செயல்பாடினால்தான் .

வெண்கடுகு எனும் வெண் கணங்களின் 
மத்தியில் பைரவர்  

ஆகவே அப்படிப்பட்ட தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன? அதைக் குறித்து சாயி உபாசகர் ஒருவர் கூறிய நிவாரணம் இது. ''மனதளவில் பிரிந்து உள்ள குடும்பங்கள் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவவும், வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் உள்ளது. வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளைக் கடுகை ( வெண்கடுகு என்பார்கள்) போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டு வந்து ஸ்வாமி அறையில் வைத்து விட வேண்டும். அதன் பின் நடப்பதைப் பாருங்கள். வீட்டில் அந்நாள் வரை இருந்து வந்த மன அமைதி மெல்ல மெல்ல  அதிகமாவதைக்  காணலாம். வெண் கடுகிற்கு அத்தனை சக்தியா? அது எதனால்?
அதன் காரணத்தைக் கேட்டபோது ஒரு பண்டிதர் கீழ் கண்ட காரணங்களைக் கூறினார். ''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.   வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள். அதன் சக்தி புரியும்.  மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். ஆகவே அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார். அதன்படி  ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார். எதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க ராஜ குரு கூறினார் ' மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார். ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும். 
சாதாரணமாக ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில் சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். அப்படிப்பட்ட ஹோமத்தில் வெண்கடுகை ஸமித்து ஹோமம் செய்யும் போது சர்வ சத்ருக்களும் அவர்களுடன் சேர்ந்த தீய ஆவிகளும் அழிவார்கள். அது போலவே போர்களில் அடிபட்டு இறக்கும் தறுவாயில் உள்ள வீரர்கள் பூமியில் கிடக்கும்போது அவர்களை சுற்றி உள்ள இடங்களில் வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால் யம பகவான் அவர்களின் உயிர்களை பறிக்க வர மாட்டார் என்ற நம்பிக்கை சங்க காலங்களில் இருந்துள்ளது. அதற்குக் காரணம் வெண்கடுகுப் புகை ஸூதர்சனார் வருகை தரும் நிலையைக் குறிப்பதாகும் . ஆகவேதான் வெண் கடுகு கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது' என்று விளக்கம் அளித்தார்.  தனது ராஜ குரு கூறியதைப் போலவே மன்னன்  மயில்வண்ணன் வெண் கடுகைப் போட்டு பூஜையும், யாகமும் செய்ய அனைத்து தீய ஆவிகளும் வீட்டை விட்டு வெளியேறின. அவர் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்பட்டது.

Monday, December 3, 2012

Book Review- Ayyanar and Mariamman –Folk Deities in South India

ஐயனார் மற்றும் மாரியம்மன்
-கிராம தேவதைகள்-

புத்தக விமர்சனம்
சாந்திப்பிரியா 
 
1949 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த திருமதி  'க்ரிஷ்டா நியுயேன்ஹோபர்' எனும் எழுத்தாளர் ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள கிராம மக்களின் வாழ்கை முறை மற்றும் கலாச்சாரங்களைக் கண்டறிய தனது கணவருடன் அங்குள்ள பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். தான் கண்டறிந்த உண்மைகளை  பல படங்களுடன் தனது இணையதளமான http:/www.pbase.com/neuenhofer என்பதில் வெளியிட்டு உள்ளார்.
அந்த ஆர்வத்தின் காரணமாக கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள டோகோ, பெனின் மற்றும் கானா போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல அறிய  புத்தகங்களையும் எழுதி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தகங்கள் சில 'டோகோ மற்றும் பெனின்', 'வூடூ மக்களின் தாய் நாடு', 'கானாவில் பிட்டிஷ் நாட்டு பாதிரியார்கள்', 'பில்லி சூனிய பகுதிகள் மற்றும் தகன முறைகள்' போன்றவை ஆகும்.  பல இடன்ன்களுக்குச் சென்றாலும்  அவருக்கு பிடித்தமானதாக இருந்தவை இந்திய கிராமங்களே என்பதினால் வருடத்துக்கு ஒரு முறையாவது இந்தியாவிற்கு விஜயம் செய்கிறார். ஆரியர்கள் மற்றும் திராவிடர்களின் மாறுபட்ட கலாச்சாரத்தை அறிய ஆர்வம் கொண்டவர் இந்தியாவில் விஜயம் செய்யாத மானிலமே இல்லை எனலாம் . கிராமங்களில் உள்ளவர்கள் தமது கிராமங்களை கிராம தேவதைகளே காப்பாற்றி வருவதாக எண்ணுகிறார்கள் எனும் ஆழ்ந்த நம்பிக்கையை  'க்ரிஷ்டா நியுயேன்ஹோபர்' நேரிடையாக கண்டறிந்துள்ளார். ஆகவே பல்வேறு கிராமங்களுக்கும் விஜயம் செய்து அங்குள்ளவர்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், தற்போது பல இடங்களிலும் நின்று விட்ட மிருக பலி போன்றவற்றை நேரில் கண்டார்.  அவை  அனைத்துமே அவர் எழுதி உள்ள புத்தகத்தில் காணப்படுகின்றன. அவர் எழுதி உள்ள புத்தகத்தில் காணப்படும் சில பகுதிகள் இவை:

 '' ......கிராம எல்லையில் எங்களுடைய வாகனம் நின்றது.  தூரத்தில் பயங்கரமான முகத் தோற்றத்துடன் சிலர் காணப்பட்டனர். கணவன் மனைவி போன்று தோற்றம் தந்த ஆஜானுபாவனான மனிதர்கள் தூக்கி வைத்துக்  கொண்டு இருந்த கையில் பெரிய கம்புகள் இருந்தன. எங்களை உள்ளே வராதே என்று எச்சரிப்பது போல  அந்த பொம்மைகள் காணப்பட்டன.  அவர்களை தொடர்ந்து மேலும் சில வீரர்கள், நாய், யானை போன்றவை காணப்பட்டன. அனைத்துமே மண்ணினால் செய்யப்பட்ட  பொம்மைகள் என்பது அருகில் சென்றதும் தெரிந்தது''
''..........எங்களுடன் இருந்த ரவி என்பவர் '  கிராம மக்களுக்கு சிவன், விஷ்ணு, கிருஷ்ணர் மற்றும் ராமர் என்பவர்கள் யார் என்றே தெரியாமல் இருந்தது. திராவிட மக்கள் இயற்கை சக்திகளையே கடவுட்கள் என நம்பி வழிபட்டார்கள். அவர்களின் நம்பிக்கையின்படி  பொறுத்தவரை உலகில் மூன்று தீய சக்திகள் உள்ளன . அவை பேய் பிசாசு, பூதம் மற்றும் தன்னுடைய ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் அடைந்தவர்களின் ஆவிகள் போன்றவை' என்று கிராம தேவதைகளைப் பற்றிக் குறிப்பிட்டார்  .........''
''...........தமது கிராமத்தை கிராம தேவதைகள் நன்கு பாதுகாத்து வருவதாக மக்கள் நம்புகிறார்கள். ஐயனாரினால் கொல்லப்பட்ட தீய ஆவிகளை குதிரைகளின் கழுத்தில் மாலையாகப் போட்டு வைத்துள்ளார்கள் என்பதைக் காட்டும் பொம்மைகள்........''
''............நமன சமுத்திரம் என்ற இடத்தில் உள்ளவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதோ அல்லது மரங்களை சமையல் செய்யத் தேவையான அடுப்பு விறகாக அவற்றை  பயன்படுத்தி எரிப்பதையோ தடை செய்துள்ளார்கள் என்பதின் காரணம் அந்த கடவுட்கள் கோபம் அடைந்து விளைநிலப் பயிர்களை அழித்து விடுவார்கள் என்பதினால்தான் ...........''
''..........முத்துமலையாபுரம் என்ற ஊரில் காணப்படும் ஐயனார் மற்றும் கருப்பச்வாமி வெளுத்த நிறத்தில் இந்துக் கடவுட்களைப் போல (ஆரியர்கள்) இருக்க, அவர்கள் வாகனமாக உள்ளது குதிரை அல்ல, மாறாக பசு மாடுகள்............''

''.....புதுச்சேரி எல்லையில் முனீஸ்வரர் தனது மனைவியுடன்..........''
''..........சில இடங்களில் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தமது கோரிக்கை நிறைவேற பொம்மைகளை செய்து வைத்துள்ளார்கள் ..........''
இப்படியாக ஒவ்வொரு படத்துக்கும் விளக்கங்கள் காணப்படுகின்றன. கிராமத்தைக் காக்கும் கடவுட்கள், மழலை செல்வத்தைக் கொடுப்பவர்கள், வியாதிகள் நெருங்காமல் தம்மைப் பாதுகாப்பவர்கள் என கிராம மக்கள் நம்பும் ஐயனார் மற்றும் மாரியாம்மனைக் குறித்தத் தகவல்களையும், அற்புதமான படங்களையும் கொண்ட புத்தகத்தைக் குறித்து விமர்ச்சனம் எழுதுமாறு திருமதி க்ரிஷ்டா நியுயேன்ஹோபர் என்னை பிரதியோகியமாக கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் அந்தப் புத்தகத்தைக் குறித்த விமர்சனத்தை மேலே அளித்து உள்ளேன்.
திருமதி க்ரிஷ்டா நியுயேன்ஹோபர் எழுதி உள்ள 'ஐயனார் மற்றும் மாரியம்மன்- கிராம தேவதைகள்' புத்தகத்தை வாங்க இந்த முகவரிக்குச் செல்லவும்.
Ayyanar and Mariamman
Folk Deities in South India 
 Book  Review

Born in Germany in the year 1949, Mrs. Christa Neuenhofer, a writer, has travelled with her husband to remote villages in various parts of Asia and Africa to learn about the customs and life styles of people living there. Interacting with tribal people, they learnt about their traditional ways of life. On the Internet she published many of those photos which she took during these journeys: http:/www.pbase.com/neuenhofer.
Their  interest in traditional religions made the couple travel to Togo, Benin and Ghana in West Africa and their experiences can be found in the books ‘Togo and Benin, Homelands of Voodoo’ and ‘Ghana, Fetish Priests, Witch Camps and Funeral Rites’, written by Mrs. Neuenhofer. Though she has visited many countries, she has retained a special relation to India, which she normally visits at least once a year. She has taken a great interest in the diversity of Aryan and Dravidian culture, and there is hardly any Indian state left where she has not been. Further, Christa Neuenhofer has been particularly attracted by the beliefs of the rural population who are convinced that the village gods guard them. Extensively touring interior villages in South India, she could collect much data on the village gods, the rituals practiced there, including animal sacrifices, which are defunct in most of the villages now. Her book contains absorbing illustrations with texts describing her experiences and information on the gods, rituals and festivals. Here are some excerpts from her book:         
Our car stops. A field next to the road is populated by some fierce looking giants. A huge couple, armed with big clubs, have raised their hands. Do they welcome me or do they tell me not to move on? They are accompanied by several riders on white or earthen terracotta horses who attack some imaginary enemies with their sabres. An elephant, dogs and foot soldiers support these warriors.’’
Ravi informs me that in the early days the village people knew nothing of Shiva, Vishnu, Krishna or Rama. In the native Dravidian religion energy was the ultimate form of god. People believed that there were three evils: Devil, Demon and souls with unfulfilled desires.’’
‘’ It seems that the god has protected the village very well so far. The heads of demons, slain by Ayyanar, garland like trophies the horses’ necks.’’
The village people further inform me that in the sacred grove of Namana Samudram it is prohibited to chop down a tree or collect firewood. This would cause the anger of the god who, in retaliation, would destroy the crops on which life of the villagers depends.’’
‘’……. near Muthumaliyapuram I have come across an example of Ayyanar and his companion Karuppu Sami – here with fair skin - who have been transformed into Hindu gods. …… they no longer ride on their horses. They have mounted sacred cows….’’‘’ Muneeswaran with his consort on the outskirts of Puduchery’’
‘’Those dolls have been offered to the temple by couples whose desire for a child has so far been unfulfilled  and who wish the god to bless them with a baby.’’
There are many such descriptions and explanations which follow each photo.
An impressive book, both rich in photographs and narrations not only about Ayyanar and his companion gods but also about Mariamman, the mother goddess who also protects the villages and who is the goddess of fertility and diseases. 
Mrs. Neuenhofer was kind enough to send me a preview of her book. I am privileged to publish in bilingual the  excerpts and photographs from her book - in English and in Tamil.
To purchase the book, AYYANAR AND MARIAMMAN, FOLK DEITIES IN SOUTH INDIA, please click this link: http://www.blurb.com/my/book/detail/3782738

சிறு விளக்கம்

ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -PDF

சிறு விளக்கம் 
 
ஜீவ சரித்திரத்தை பாராயணம் செய்யும் முறை பற்றி சிலருக்கு சில சந்தேகம் ஏற்படலாம் அதாவது புத்தகத்தை தொண்ணூறு நாட்களில் படித்து முடிக்க வேண்டுமா?  அப்படி என்றால் தினமும் எத்தனை பக்கங்களை படிக்க வேண்டும்? முழு புத்தகத்தையும் ஒரு நாளைக்கு ஒருமுறை என தொண்ணூறு  நாட்கள் படிக்க வேண்டும்.
இந்த பாராயண புத்தகத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை முழுவதும் படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் தொடர்ந்து படித்து முடிக்க நேரம் இல்லை என்றால் தவறில்லை.  நான்கு அல்லது ஐந்து பாகங்கள் என இரண்டு அல்லது மூன்று  வேளைகளாகவும் ஒரு நாளில் இதை பிரித்துக் கொண்டு படித்து முடிக்கலாம். ஆனால் ஒரு நாளில் அந்த புத்தகத்தை தொடர்ந்தோ அல்லது மூன்று  வேளைகளாக பிரித்துக் கொண்டோ முழுவதுமாக படித்து முடிக்க வேண்டும்.  இதைப் படிக்கும் பெண்களுக்கு வீட்டில் அசௌர்கரியம் ஏற்பட்டுள்ள நாட்களில் படிக்க  தடைப்பட்டாலும் அதற்குப் பின்னர் மீண்டும் தொடர்ந்து படிக்கலாம். ஒரு கோரிக்கைக்கு  மொத்தம் தொண்ணூறு நாட்கள்   படித்து முடிக்க வேண்டும். இதுவே நியமம் .

Friday, November 30, 2012

ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -PDF

சிறு செய்தி 

இந்த தொடரில் இடை இடையே நான் தந்துள்ள விளக்கங்களை எடுத்து விட்டு, ஜீவ சரித்திரத்தை மட்டும் பாராயணம் செய்யும் வகையில் சிறிய புத்தக வடிவில்  PDF வடிவில் அமைத்து உள்ளேன். ஆகவே  ஜீவ சரித்திரத்தில் படிக்க வேண்டிய பகுதிகளை  மட்டும்  நீங்கள் புத்தக வடிவிலேயே நேரடியாக படிக்க இயலும்.  இதை முதல் முயற்சியாக செய்து  உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தக வடிவில் ஜீவ சரித்திரத்தைப் படிக்க  உங்களுடைய  ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்பினால்  PDF ஐ அனுப்ப இயலும்.
நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்ப வேண்டிய முகவரி:

nrj_1945@yahoo.com
nrj1945@gmail.com 

சாந்திப்பிரியா 
30-11-2012

Thirupathi Sree Venkateswarar - 25

சாந்திப்பிரியா 
 
லஷ்மி தேவி ஷேஷாசலத்தை அடைந்தபோது  ஸ்ரீனிவாசர் தனது மனைவியான பத்மாவதியுடன் அங்கு இருந்த நதிகள், ஓடைகள், நீர் நிலைகள் என பல்வேறு இடங்களுக்கும் சென்று விட்டு புதியதாக நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்துக்குள் பிரவேசித்தார். அங்கு அவர்கள் நின்று கொண்டு இருந்த சமயத்தில் லஷ்மி கோபத்துடன் உள்ளே நுழைய  அவளைக் கண்டதும் ஸ்ரீனிவாசரும் பத்மாவதியும் நிலை குலைந்தார்கள். பத்மாவதியோ இவள் யார் நாம் உள்ள இடத்தில் வந்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டே இருக்கையில் உள்ளே வந்த லஷ்மியோ ' பெண்ணே நீ யார் என் கணவருடன் சல்லாபித்துக் கொண்டு நிற்கிறாய்' என்று கோபமாகக் கேட்க, பத்மாவதியோ ' அடியே பெண்ணே...என்னய்யா யார் என்று கேட்கிறாய்? நான்தான் இவருடைய மனைவி. எங்களுக்கு இப்போதுதான் திருமணம் ஆகி உள்ளது. நீ என்னடா என்றால் என் கணவர் என்கிறாய். என்ன என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாய்?' என்று முறைக்க இருவரும் நீ...நான் என வாதம் செய்து கொண்டு அடிக்காத குறையுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்ததைக் கண்ட ஸ்ரீனிவாசர் அவர்கள் இருவருமே தனது மனைவிகளே என்று கூறி இருவரையும் சமாதானப்படுத்த முயல, இருவரும் அவருடன் சண்டை போடத் துவங்கினார்கள்.
ஆகவே அதை சமாளிக்க முடியாமல் போனவர் சற்று பின்னே சென்று  நின்று  அப்படியே அங்கு சிலையாக மாறி விட்டார். அவர் சிலையானதும் பெரிய  சப்தம் கேட்டது. அந்த சப்தத்தைக் கேட்டு திரும்பிய இருவரும் ஸ்ரீனிவாசர் சிலையாக நிற்பதைக் கண்டு அந்த சிலைக்கு அருகில் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார்கள். சிலையில் இருந்த ஸ்ரீனிவாசரான விஷ்ணு கூறினார் ' அம்மா லஷ்மி, நான் இப்போது இங்கு திருமணம் செய்து கொண்டுள்ளது வேறு யாருமல்ல. பத்மாவதி  எனும் இவளும் உன் துணை அவதாரமே.  நீ பெற்றிருந்த ஒரு சாபத்தினால் நீ இரு அவதாரங்களை எடுத்து இங்கு வந்து என்னை அடைய வேண்டி இருந்தது.
 ஒரு அவதாரத்தில் நீ சீதையாகப் பிறந்து இருந்தபோது, உன்னுடைய பல்வேறு அவதாரங்களில் ஒன்றான வேதவதி என்பவள் வந்து உன்னைக் பாதுகாக்க வேண்டிய அவசியம்  வந்தது.    உன்னைப் பாதுகாத்துக் கொள்ள  நீயே  ஏற்படுத்தி இருந்த வேதவதி எனும்  துணை அவதாரம் குறித்து நீ அக்னிப் பிரவேசம் செய்தபோதுதான் உனக்கும் தெரிந்தது. அப்போது உன்னை சாட்சியாக வைத்துக் கொண்டு அல்லவா அந்த துணை அவதாரத்திடம் அவளை நான் ஸ்ரீனிவாசர் அவதாரத்தில் மணம் செய்து கொள்வதாக வாக்கு தந்தேன் என்பது உன் நினைவுக்கு இப்போது வருகிறதா? அதைக் காப்பாற்றவே இப்போது இவளை மணக்க வேண்டி இருந்தது' என்று கூறவும் லஷ்மியும் பத்மாவதியும் ஒருவருடன் ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு தாம் அனாவசியமாக சண்டை போட்டுக் கொண்டதற்கு விஷ்ணுவிடம் மன்னிப்பைக் கோரினார்கள்.

லஷ்மி தேவி 

அவர்களைப் பார்த்த விஷ்ணு லஷ்மியிடம் கூறினார் ' லஷ்மி,   கலியுகம் பிறக்கும் முன்னால் உன் மூலம் சில காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதினால்தான் இங்கு உன்னையும் வரவழைத்தேன்.  இங்கு நீ என்னுடன் லஷ்மியாக இருந்து கொண்டு மக்களுக்கு போக பாக்கியத்தை கொடுக்க வேண்டும். அதை அனுபவிப்பவர்கள் பல தவறான காரியங்களை செய்து கொண்டு இருந்தவண்ணம் அதற்கு பரிகாரம் தேட  என்னிடம் வேண்டும்போது பணமும் பொருளும் பல்வேறு பிரார்த்தனைகளையும் செய்வார்கள்.  அதைக் கொண்டு உன்னை மணப்பதற்காக நான் குபேரனிடம் இருந்து பெற்ற கடன்களை திரும்ப செலுத்திக் கொண்டே இருப்பேன். அவர்கள் பணமும் கொடுப்பார்கள். காணிக்கையாக பொருட்களையும், ஏன் தமது தலை முடியைக் கூட  கொடுப்பார்கள். நான் பெரும் அனைத்து காணிக்கைகளிலும் ஒரு பகுதியை வட்டியாகக் குபேரனிடம் கொடுப்பதாகக் கூறி உள்ளேன்.  அந்தக் கடன் தீர கலிகாலம் ஆகிவிடும். ஒருபுறத்தில் நீ செல்வத்தைக் கொடுக்கக் கொடுக்க, மக்கள் செய்யும் தவறுகளும் பெருகிக் கொண்டே போகும். அப்போது  தாம் செய்யும் தவறுகளுக்கு பயந்து அதற்கு பிராயசித்தம்  தேட இங்கு வந்து என்னை வணகுவார்கள். இங்கு வருபவர்களின் அனைத்து துயரங்களையும் நான் தீர்த்துக் கொண்டே இருப்பேன் என்பதினால் அப்படி தவறு செய்பவர்கள் இங்கு வந்து இந்த இடத்தையே பூவுலக வைகுண்டமாகக் கருதி அதே செல்வத்தை நம்மிடம் காணிக்கை என்ற பெயரில் திருப்பித் தருவார்கள் என்பது மட்டும் அல்ல, அவர்களின் கஷ்டங்கள் அதனால் குறைவதைக் கண்டு பூவுலகில் பக்தி பெருகும். அதற்கு நானும் நீயும் காரணமாக இருக்க ஸ்ரீனிவாச அவதாரம் எடுத்த காரணமும் நிறைவாகும். ஆகவே நீயும் வந்து என் வலது மார்பில் அமர்ந்து கொண்டு இந்த காரியத்தை செய். பத்மாவதி என் இடது மார்பில் அமர்ந்து இருப்பாள். இப்படியாக நீ மீண்டும் உன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டு என்னை சுற்றி இரு புறத்திலும் இரு அவதாரங்களாகவே இருப்பாய்.

 வெங்கடாசலபதி 

அதே சமயத்தில் பக்தர்களைக் காப்பாற்ற  நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப பத்மாவதியும்  பத்மசாரோவரத்தில் சென்று ஒரு ஆலயத்தில் அமர்ந்து கொள்வாள்.  நான் தினமும் இரவு அங்கு வந்து உன்னோடு - உன் அவதாரத்தோடுதான் -  தங்கி இருப்பேன்.  மற்ற நேரத்தில் இங்கிருந்தபடி பக்தர்களுக்கு நீ கொடுக்கும் செல்வத்தை கொடுத்துக் கொண்டும், மீண்டும் அதை அவர்களிடம் இருந்தே பெற்றுக் கொண்டவண்ணம் அவர்களின் குறைகளை களைந்து கொண்டு இருப்பேன். இப்படியாக நீ தரும் செல்வம் உன்னிடமே மீண்டும் மீண்டும் வந்து கொண்டு மீண்டும் மக்களிடையே ஒரு முடிவற்றப் பயணமாக தொடர்ந்து கொண்டு செல்லும். இங்கு வரும் மக்கள் காணிக்கையாக எதை வேண்டுமானாலும் கொடுக்கக் கூறுவேன். ஏன் அவர்கள் தலை முடியைக் கூட காணிக்கையாகப் பெற்றுக் கொள்வேன். தலை முடியைக் கொடுப்பது ஒரு இழிவான செயல் அல்ல. மனிதர்களுடைய  அழகை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான உடல் பாகம் ஆகும் அது. ஒன்று தலை முடியை அழகு செய்யாமல் முனிவர்கள், ரிஷிகளைப் போல அதை அப்படியே விட்டு விட வேண்டும்.  அப்படி விட்டு விடப்படும்  தலை முடி அடையாக, சிக்காக மாறி  விட்டாலும் சரி அதற்க்கு முக்கியத்துவம் தராமல் அப்படியே விட்டு  விட வேண்டும். அல்லது கடவுளுக்கு முன் வரும்போது  அதை துறந்து விட்டு வர வேண்டும்.   ஆகவேதான்   தலை முடியை கொடுப்பதை ஒரு பக்தியை வெளிப்படுத்தும் சடங்காக  காட்டி என்னிடம் வரும் வேளையில் தமது  வெளித் தெரியும் அழகினையும் ஆசைகளையும்  அழித்துக் கொண்டு  தமது  பக்தியை மட்டும் வெளிப்படுத்தும் ஒரு  அடையாளமாக  அந்த சடங்கை செய்து கொண்டு வர வேண்டும் என்பதை காட்டும்  சடங்காக்கி ஆலய மகிமையை பிரபலப்படுத்திக் கொண்டு இருப்பேன். அந்த தலைமுடி கழித்தல் கூட பூவுலகில் உள்ள செல்வத்தை இங்கு கொண்டு வந்து சேர்க்கும் ஒரு கருவியாக அமையும். தேவி இதற்கு நீ உடன்பட வேண்டும்' என்று ஸ்ரீனிவாச அவதாரத்தில் இருந்த விஷ்ணு கூறவும், அதைக் கேட்ட பத்மாவதியான லஷ்மி தேவியும் மேல்மங்காபுரத்தில்  உள்ள ஆலயத்தில் சென்று அங்கு சிலையாக அமர்ந்தாள். அதனால்தான் ஸ்ரீனிவாசப் பெருமான் மேல்மங்காபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் திரும்புகிறார்.

 பத்மாவதி அம்மையார் 
இதற்கு இடையில் மகனைத் தேடி வந்த வகுளாதேவியை தனது கழுத்தில் தொங்கும் துளசி  மாலையாக மாற்றிக் கொண்டார் ஸ்ரீனிவாசர். தனது சகோதரர் கோவிந்தராஜரையும் தன்னுடன் இருக்கும் வகையில் அதே இடத்தில் கீழ் திருப்பதியில் சென்று வசிக்குமாறு கூறினார். இப்படியாக விஷ்ணுபிரான் ஸ்ரீனிவாசர் அவதாரத்தில் திருப்பதியில் தனது மனைவி லஷ்மியுடன் பல்வேறு ரூபங்களில் இருந்து கொண்டு கலியுகத்தில் மக்களைக் காத்து வருகிறார்.


வராஹா ஸ்வாமி 

ஏழு மலைகளைக் கொண்ட திருப்பதி மலை முழுவதுமே வராஹ ஸ்வாமியின் கட்டுப்பாட்டில் உள்ளதினால் மலையில் ஏறி வெங்கடாசலபதியைக் காண்பவர்கள் முதலில் வராஹா ஸ்வாமியை  தரிசித்த  பின்னரே மேலே செல்ல வேண்டும்.  அதற்குக் காரணம் அங்கு வசிக்க திருப்பதியான் வந்தபோது அவருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார். அதன்படி அவருக்கு அங்கு தங்க வாடகை கொடுக்க வேண்டும். அதற்கு இணையாக முதலில் வராஹ ஸ்வாமிக்கு  நெய்வித்தியம் செய்த பின்னரே வெங்கடாசலபதியாக உள்ள தனக்கு நெய்வித்தியம் செய்வார்கள்  என்பதே வாடகை பணம்  ஆகும்.  அது போலவே திருச்சானூரில் குடி அமர்ந்துள்ள பத்மாவதியை தரிசிக்காமல் திருப்பதிக்கு மட்டும் சென்று விட்டு வந்தால் வெங்கடாசலபதியின் பூரண அருள் கிடைக்காது.
திருப்பதி மலையைக் கட்டிய விவரம் சரிவரத் தெரியவில்லை அதை முதலில் கட்டியவர் சோழ  மன்னனான தொண்டைமான் என்பது சரியான செய்தி அதற்குப் பிறகு பல மன்னர்களும் விஜயநகர  மன்னர்கள் வரை அதை மேலும் கட்டி சிறப்பித்து உள்ளார்கள் திருப்பதி வெங்கடேஸ்வரர்  ஏழு மலைகளுக்கு உள்ளே அமைந்துள்ளதினால் அவரை ஏழு மலையான் என்று அழைக்கிறார்கள். அவரை வேண்டித் துதிப்பவர்களுக்கு அனைத்து செல்வமும் கிடைக்கும் என்பதில் ஐயமே இல்லை.
 ஸ்ரீனிவாசர் மகிமையான அவருடைய ஜீவ சரித்திரம் நிறைவுற்றது 

Thirupathi Sree Venkateswarar - 24

சாந்திப்பிரியா 
 
அப்போது ஒரு நாள் தொண்டைமானின் கனவில் விஷ்ணு தோன்றினார். அவர் அவரிடம் கூறினார் ' மன்னா, நீ பூர்வ ஜென்மத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடுத்தாய். நீ அடுத்தப் பிறவி எடுத்து ராஜாங்கத்தை ஆளும்போது, எனக்கு ஒரு ஆலயம் அமைத்துத் தருவாய் என்பதே அந்த வாக்குறுதி. அதன்படி நீயும் இப்போது அரசனாகி விட்டாய். ஆகவே எனக்கு ஷேசாசலத்தில் ஒரு ஆலயம் அமைத்தால் அங்கு நானே வந்து குடி புகுவேன். அங்கு வந்து நான் ஆலயத்தில் அமர்ந்து கொண்டு கலியுகம் முடியும்வரை மக்களைக் காத்து வருவேன். ஆகவே அங்குள்ள வராஹ ஸ்வாமியின் ஆலயத்துக்கு அருகிலேயே எனக்கு ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்'.
அதைக் கேட்ட தொண்டைமான் விழித்தெழுந்ததும் ஒரு விஸ்வகர்மாவை அழைத்து வந்து ஆலயம் அமைக்க ஏற்பாடுகளை செய்து பெரிய ஆலயம் ஒன்றை அமைத்தார். கண்களுக்குப் புலப்படாமல் அந்த ஆலயத்துக்கு அனைத்து தேவர்களும், முனிவர்களும், கடவுட்களும் பூலோகத்து மக்களும் வந்தார்கள். அங்கு விஷ்ணு வந்து குடியேறியதும் பிரும்மா தானே வந்து இரண்டு விளக்குகளை ஏற்றி வைத்து கலியுகம் முடியும்வரை அவை அங்கு ஓளி வீசிக் கொண்டு இருக்கும் என்று கூறினார்.  அந்த ஆலயத்தில் நடைபெற்ற விழாவை பிரும்மாவே இருந்து நடத்தியதினால் அந்த விழாவை பிரும்மோத்சவம் என்று அழைத்தார்கள். ( இந்த ஆலயம் முதலில் தேவ லோகத்தில் அதே இடத்திற்கு மேல் பகுதியில் விச்வகர்மாவினால் பிரும்மாண்டமாகக் கட்டப்பட்டது என்றும், அதில் மேல்கூறிய அனைத்து வைபவமும் நடைபெற்றப் பின்னரே, அது அப்படியே கீழிறங்கி வந்து தொண்டைமான் கட்டிய ஆலயத்தின் பூமிப் பகுதிக்குள் மறைந்து கொண்டது என்பதினால்தான் இந்த ஆலயத்தில்  உண்மையாகவே விஷ்ணு பகவான் ஸ்ரீனிவாசராக குடி உள்ளார் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது). பூமியில் தொண்டைமானால  கட்டப்பட்ட ஆலயம் கட்டப்பட்டு கொண்டு இருந்த நேரத்தில் ஸ்ரீனிவாசர்  தனது மனைவியான பத்மாவதியுடன் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் தொண்டைமானுக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. கனவில் தனக்கு விஷ்ணு  ஒரு ஆலயம் அமைக்க கட்டளை இட்டதைத் தொடர்ந்து அவரது தெய்வீக அவதாரம் எனக் கருதப்படும் ஸ்ரீனிவாசரும் அல்லவா இங்கு நேரில் வந்துள்ளார். ஆகவே விஷ்ணுவே நேரில் வந்து ஆலயத்தில் குடி புக உள்ளார் என்பது நிரூபணம் ஆகிவிடும் போல உள்ளதே என எண்ணியவர் மனதில் மகிழ்ச்சி  இறட்டிப்பாகியது.

நாரதர் தனது நாடகத்தை மீண்டும்  துவக்கினார் 

தொண்டைமானின் நாட்டில் இப்படியாக பல அதிசய நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் நாரதர் சும்மா இருப்பாரா? அவர் அடுத்து செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான காரியமும் இருந்ததே. முதலில் விதிப்படி விஷ்ணுவுடன் வேதவதியான பத்மாவதியை திருமணம் செய்து வைத்தாகி விட்டது. அடுத்து தவத்தில் உள்ள உண்மையான லஷ்மி தேவியை இனி விஷ்ணுவுடன் இணைத்து வைக்க வேண்டும். விஷ்ணுவின் ஸ்ரீனிவாச அவதாரமும் வெளிப்பட வேண்டும். இதை மனதில் கொண்ட நாரதர் உடனடியாக லஷ்மி தேவி தவம் இருந்த கொல்லாபுரத்துக்கு கிளம்பிச் சென்றார்.
லஷ்மி தவம் இருந்த யாத்துக்குச் சென்றவர் அவள் கண் விழிக்கும் வரைக் காத்திருந்தார். எப்போதும்போல லஷ்மிதேவி தவத்தையும் பூஜையையும்  செய்து முடித்தப் பின் வெளியில் வர அங்கு நாரதர் நின்று கொண்டு இருந்ததைக் கண்டாள். 'என்ன நாரதரே, உமக்கு என்ன ஆயிற்று? எதற்காக இங்கு வந்து நின்று கொண்டு  இருக்கின்றீர்கள் ? உள்ளே வந்து அமர்ந்து இருக்கலாம் அல்லவா ' என்று விசாரிக்க நாரதர் கூறினார் ' அம்மா, நான் சொல்ல என்ன உள்ளது? நீங்கள் இங்கு உங்கள் பர்தாவுடன் இணைய வேண்டும் என்று தவம் இருந்து கொண்டு இருக்கையில் ஷேசாசலபுரத்தில் உங்கள் பர்த்தா விஷ்ணுபிரான் பத்மாவதி என்று ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக இருக்கிறாரே என்பதினால் எனக்கு உங்கள் மீது இரக்கம் வந்துவிட்டது. ஆகவேதான் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும் வகையில் உங்களுக்குத் துணையாக இருக்கவே இங்கு வந்தேன்' என்று பீடிகையுடன் ஒரு செய்தியைப் போட்டார்.
அது போதாதா லஷ்மியின் கோபத்தைக் கிளற? ' என்ன என் நாதன் இன்னொருவளை மணந்து கொண்டு விட்டாரா. இதோ  இப்போதே கிளம்பிச் சென்று நியாயம் கேட்கிறேன். தயவு செய்து என்னுடன் கிளம்பி வந்து அவர்கள் உள்ள இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் ' என்று அவரிடம் கெஞ்சிக் கேட்கத் துவங்க அதையே எதிர்பார்த்திருந்த நாரதரும் சற்றும் தயங்காமல் லஷ்மி தேவியை அழைத்துக் கொண்டு ஷேசாச்சலத்துக்குச் சென்றார்.

 .........தொடரும்

Thirupathi Sree Venkateswarar - 23

சாந்திப்பிரியா 
 
ஸ்ரீனிவாசரான விஷ்ணுவும் பத்மாவதியும் சில காலம் வசிஷ்டரின் ஆஸ்ரமத்தில் தங்கிக் கொண்டு இருந்தபோது  ஒரு நாள் ஆகாசராஜன்  உடல் நலமின்றி இருப்பதினால் உடனே அவர்களை கிளம்பி வருமாறு  செய்தி வர இருவரும் மீண்டும்  அரண்மனைக்குக் கிளம்பிச் சென்றார்கள்.  உண்மையைக் கூறினால் ஆகாசராஜன் அவர்கள் வரும்வரை தனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தார். அவர்கள் வந்ததும் ஸ்ரீனிவாசரின் கைகளைப் பிடித்துக் கொண்டு  தான்  மரணம் அடைந்து விட்டப் பின் அந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு தக்க ஏற்பாட்டை செய்துவிட்டுப் போக வேண்டும் என்றும்,  தனது மகனான வசுதானன்  மற்றும் அவருடைய தம்பியான தொண்டைமான் இருவரையும் அவரே ஒற்றுமையுடன் இருந்து நாட்டை ஆளச் செய்ய வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டப் பின் மரணம் அடைந்தார்.
ஆகாசராஜர் மரணம் அடைந்து அனைத்துக் காரியங்களும் முடிந்த உடனேயே  அவருடைய பிள்ளையான வசுதானன்  மற்றும் அவருடைய தம்பியான தொண்டைமான் இருவருக்கும்   யார் அரசுப் பொறுப்பை ஏற்பது என்பதில் சண்டை வந்தது.  அப்போது அவர்கள் இருவருமே ஆகாசராஜரின் இரு பகுதிகளை ஆண்டு வந்த சிற்றரசர்களாக இருந்ததினால் குதிரைப் படையை திரட்டிக் கொண்டு போர் முனைக்கு வந்தார்கள்.

குதிரைப் படையை திரட்டிக் கொண்டு போர் முனைக்கு வந்தார்கள்

அதுவும் நடந்து கொண்டிருந்த நாடகத்தின் ஒரு அங்கம்தான்.  அதற்குக் காரணம் தொண்டைமான்  பூர்வ ஜென்மத்தில் ஒரு பெண் பித்தராக இருந்தவர். ஆனால் அவர் தீவிர விஷ்ணு பக்தராகவும் இருந்தார். ஆகவேதான் அவரை விஷ்ணு நல்வழிப்படுத்தி பெண்களை  துன்புறுத்திய பாவத்தைக் களைய அடுத்த ஜென்மத்தில் பூவுலகில் அரச வம்சத்தில் பிறவி எடுத்து,   பல  மனக் கஷ்டத்தை அனுபவித்தப் பின்  அரசாண்டு அதே பூவுலகில்  தனக்கு ஒரு ஆலயம்  அமைக்க வேண்டும் என  அதற்கான  பிராயச்சித்தம் கூறி இருந்தார்.  ஆகவேதான்  தொண்டைமான் இந்த ஜென்மத்தில் ஆகாசராஜரின் தம்பியாகப் பிறப்பு எடுத்திருந்தார்.
நிற்க யுத்தத்தை துவக்கிய  இருவருமே ஸ்ரீனிவாசர் விஷ்ணு அவதாரம் என்பதினால் அவருடைய துணையை நாடினார்கள்.  ஆகவே  இருவருமே தனக்கு வேண்டியவர்கள் என்பதினால் சோழி குலுக்கிப் பார்த்தார். அதில் கிடைத்த வழிகாட்டுதலின்படி வேறு  வழி  இன்றி ஸ்ரீனிவாசர் தன்னிடத்தில் இருந்த சக்ராயுதத்தை   தொண்டைமானுக்கு கொடுத்து விட்டு யுத்தத்தில் தானே நேரடியாக வசுதனன்  பக்கத்தில் சேர்ந்து கொண்டு போர் புரிந்தார்.  சண்டை பயங்கரமாக நடந்தது. ஒரு கட்டத்தில் தொண்டைமானின் மகன்  வேறு வழி இன்றி ஸ்ரீனிவாசர் கொடுத்த சக்கரத்தை அவர் மீதே  வீச அது தாக்கி ஸ்ரீனிவாசர் நினைவை இழந்தார்.

 யுத்தத்தில் தான்தொண்டைமானுக்கு  கொடுத்த ஆயுதமே
தன்னைத்  தாக்கியதினால் மயங்கி விழுந்தார்  ஸ்ரீனிவாசர் 

அந்த நிலையைக் கண்ட அனைவரும் யுத்தத்தை உடனிடியாக நிறுத்தி விட்டு  அவரை மீண்டும் சுய நினைவுக்கு கொண்டு வருவதில் முழு முனைப்புடன் ஈடுபட்டார்கள்.  கண் விழித்த  ஸ்ரீனிவாசரிடம்  அனைவரும் மன்னிப்பைக் கேட்டு அவர் எப்படி  சொல்கிறாரோ அப்படியே  அவர்கள் நடப்பதாக உறுதி மொழிக் கூற அவரும் ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை தொண்டைமானுக்கும், இன்னொன்றை வசுதனனுக்கும்  அரசாளக் கொடுத்தார் அனைவரும் அதை முழு மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார்கள்.  அதன் பின் மீண்டும் ஸ்ரீனிவாசரும், பத்மாவதியும் அகஸ்தியர் ஆஸ்ரமத்துக்கு கிளம்பிச் சென்று விட்டார்கள். 
.........தொடரும் 

Thursday, November 29, 2012

Thirupathi Sree Venkateswarar - 22


சாந்திப்பிரியா 

விஷ்ணு மற்றும் பத்மாவதியின் திருமண வைபவம் 

திருமணத் தேவைக்கான செல்வம் கிடைத்ததும், தனது மூத்த சகோதரரான கோவிந்தராஜரை  அழைத்த ஸ்ரீனிவாசர் (கோவிந்தராஜர் வகுளாதேவியின் மூத்த மகன் ஆவார். அதை ஏற்கனவே கூறி உள்ளேன்) அனைவருக்கும் வந்து தங்கும் இடமும் உணவருந்தவும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு கூறினார். ஆகவே கோவிந்தராஜரும் தயங்காமல் பூலோகத்திலயே  வைகுண்டத்துக்கு இணையான இடத்ததை  தற்போது திருப்பதி மலை உள்ள இடத்திலேயே விஸ்வகர்மாவின் உதவிடன் செய்தார்.  அதே சமயம் கருட பகவானை அழைத்த ஸ்ரீனிவாசர் யாரை எல்லாம் திருமணத்துக்கு அழைக்க வேண்டும் என்பதை  வகுளா தேவி மற்றும் நாரத முனிவருடன் கலந்து ஆலோசனை செய்தப் பின்  அனைவருக்கும் தமது பூத  கணங்கள் மூலம் திருமண செய்தியை அனுப்பி அவர்களுக்கு தாம்பூலம், பழங்களைக் கொடுத்து அழைக்கச் சொல்லுமாறும், அந்த வேலையை கருடனே செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  நிறைய கடனை குபேரனிடம் இருந்து பெற்று வந்திருந்ததினால்  செலவு செய்ய பணத்துக்குப் பஞ்சமே இல்லை எனும் அளவில் காரியங்கள் நடைபெற்றன.
அதே நேரத்தில் ஆகாச ராஜனும் தனது மகளுடைய திருமண வைபவத்தை நன்கு நடத்த அந்த ராஜ்யத்தையே அலங்கரித்தார். அனைவர் வீடுகளிலும் தோரணங்கள் கட்டியும், கோலங்கள் போட்டு அலங்கரிக்கவும் ஏற்பாடு செய்ததும் அல்லாமல் மக்களுக்கும் பல பரிசுகளை வழங்கினார்.  அனைவருக்கும் வித விதமான உணவு வகைகளை தந்து  அவர்களை உபசரித்தார்.
திருமண நாளும் வந்தது. தேவ லோகத்தில் இருந்தும் பூலோகத்தில் இருந்தும் அனைவரும் வந்து அங்கு குமுழி இருந்தார்கள். சிவன், பார்வதி, பிரும்மா,  சரஸ்வதி, நாரதர், பிருகு முனிவர், சுக முனிவர், நந்தி தேவர், கருடர்  மற்றும் பல லட்சக் கணக்கான தேவர்களும், ரிஷி முனிவர்களும், தேவ கணங்களும்  குமுழி இருந்தார்கள்.

ஸ்ரீனிவாசர் முன் ஜென்மத்தில் வேதவதியாக 
இருந்த லஷ்மி தேவியின் மாய அவதாரத்தை மணக்கிறார் 

வசிஷ்ட முனிவர் புரோகிதர் பாகத்தை ஏற்று திருமணத்தை நடத்தினார். ஆரத்தி எடுத்து , பாத பூஜைகள் செய்து, மங்கள வாத்தியங்களை முழங்கி  நல்ல நேரத்தில் நவரத்தினங்கள், பவழங்கள், கோமேதகம், வைடூரியம் போன்ற கற்களை செதுக்கிய மாலையில்  செய்த திருமங்ககலியத்தை  அனைவர் முன்னாலும் ஸ்ரீனிவாசர் பத்மாவதியின் கழுத்தில் கட்டினார். ஆனால் அங்கு வராத முக்கியமான ஒருவர் யார் என்றால் அது லஷ்மி தேவியாகும். அவள் கொல்லாபுரத்தில் தவத்தில் இருந்ததினால், அவளுடைய ராமாயணக் கால மாய அம்சமான வேதவதியின் மறு ஜென்ம அவதாரமான பத்மாவதிக்கும் ஸ்ரீனிவாசர் உருவில் இருந்த விஷ்ணுவிற்கும் இடையே அப்போது திருமணம் நடந்தது அவளுக்குத் தெரியாது.

விஷ்ணு மேற்கொண்ட ஷேத்ராடனம்  

இருவருக்கும் திருமணம் ஆனப் பின்னர் ஆகாசராஜன் கண்ணீர் மல்க தனது மகளை ஸ்ரீனிவாசருடன் அனுப்பி வைத்தார். திருமணம் முடிந்து அவர்கள்  கிளம்பிச் சென்ற பின்னரே அவர்கள் இருவருமே மனித  அவதாரம் எடுத்துள்ள விஷ்ணு மற்றும் லஷ்மி தேவி என்பதை மற்றவர்கள் அனைவரும்  அறிந்தார்கள் ஆகா....இத்தனை நாளும் நாம் அவர்களை தெய்வப் பிறவிகள் என்று அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று  மனம் தவித்தார்கள் ஆனால் அதற்குள்   அவர்கள்  ஷேத்ராடனம் செய்யக் கிளம்பினார்கள். அப்படிச் செல்கையில் அவர்களை வழியில் அகஸ்திய முனிவர் சந்தித்தார். அவர் அவர்களிடம் கூறினார் ' பிரபோ திருமணம் ஆகி ஆறு மாதத்துக்கு மலை மீது ஏறிச் செல்லக் கூடாது என்பது சாஸ்திரத்தின் ஒரு விதியாகும். ஆகவே  மலை மீது சென்று கொண்டிருக்கும் நீங்கள் ஆறு மாத காலம்  என் ஆஸ்ரமத்தில் தங்கி வசித்தப் பின் மலையேறிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட இருவரும் அகஸ்தியரின் ஆஸ்ரமத்திலேயே  சில காலம் தங்கி இருந்தார்கள். 
 .........தொடரும் 

Tirupathi Sree Venkateswarar - 21

சாந்திப்பிரியா  

விஷ்ணு குபேரரிடம் கடன் வாங்கியக் கதை 

மன்னனிடம் இருந்து திருமணத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும் ஸ்ரீனிவாசருக்கும் வகுளா தேவிக்கும் ஆனந்தம் ஆகி விட்டது. அது போல பத்மாவதியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள் . இனி அடுத்தக் காரியமாக திருமணத்துக்கு வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.
ஆனால் ஸ்ரீனிவாசரின் திருமணம் நடைபெற உள்ள செய்தி கிடைத்ததும் வைகுண்டத்தில்  இருந்த நாராயணன் கவலையோடு அமர்ந்து இருந்தார். அப்போது நாரதர் அங்கு அவரைக் காணச் சென்றார். அவர் கவலையுடன் இருப்பதைக் கண்ட நாரதர் ' நாராயணா நீங்கள் ஏன் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறீர்கள்? பூலோகத்தில் மனித உருவில் ஸ்ரீனிவாசராக உள்ள நீங்கள் விரைவில் லஷ்மியை திருமணம் செய்து கொண்டு உங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்தி விட்டு மீண்டும் வைகுண்டத்துக்கு திரும்பி வர உள்ளீர்கள். ஆகவே இப்போது ஏன் வினசத்துடன் இருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதைக் கேட்ட நாராயணனோ ' நாரதரே இப்போது  வைகுண்டத்தில் லஷ்மி தேவி இல்லாததினால் என்னிடம் திருமணம் செய்து கொள்வதற்கு தேவையான செல்வம் இல்லை. தேவலோகத்தில் உள்ள அனைவரும் என் திருமணத்துக்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போட்டு உபசரிக்க வேண்டும். அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரிப்பது என்றால் எத்தனை பணம் தேவையாக இருக்கும். ஆகவேதான் எப்படி அதற்கான ஏற்பாடுகளை செய்வது என யோசனை செய்து கொண்டு இருக்கிறேன்' என  விஷ்ணு பகவான் கூறினார். இங்கு செல்வம் இருந்தால்தானே அங்கு பூமியிலும் ஸ்ரீனிவாசனின் கையில் பணம் புழல ஏற்பாடு செய்ய முடியும். அதற்கு என்ன செய்வேன் என்றுதான் யோசனை செய்கிறேன்' என்று கூறினார்.

 விஷ்ணு தனது கவலையை நாரதரிடம் தெரிவித்தார் 

இங்கு ஒரு செய்தியை விளக்க வேண்டும். அவ்வப்போது  விஷ்ணுவையும் லஷ்மியையும் சம்மந்தப்படுத்தி கதை செல்வதினால், இந்தக் கதை நிகழ்ந்தது பூமியிலா இல்லை தேவ லோகத்திலா என்ற சந்தேகம் எழக் கூடும்.  கதை நடந்தது பூமியில்தான். ஆனால் அதில் இரண்டு தெய்வங்கள்  ஸ்ரீனிவாசர் உருவிலும், பத்மாவதி உருவிலும் சம்மந்தப்பட்டு உள்ளனர்.  அவர்கள் இருவரும் மனித உடலில் பிறந்து சாப விமோசனம் அடைகிறார்கள் என்பது மட்டும் அல்ல கலி யுகத்தைக் காக்க விஷ்ணுவிற்கு  தொண்டைமான் எனும் மன்னன் மூலம் ஒரு ஆலயம் அமைவதும் அவர்கள் கதை மூலமே நடைபெறுகிறது, அவர்கள் மூலமே விஷ்ணுவும், லஷ்மியும் பூமியில் உள்ளவர்களுக்கு தரிசனம் தந்துள்ளார்கள் என்பதெல்லாம் உண்மை என்பதினால் பூலோகக் கதை  மற்றும் தேவலோகக் கதை என இரண்டுமே அவ்வப்போது கலந்தே வருகிறது.
வைகுண்டத்தில் விஷ்ணுவிற்கு செல்வம் வந்தால்தான் பூவுலகிலும்  ஸ்ரீனிவாசராக மனித உருவில் உள்ளவருக்கும் யார் மூலமாவது செல்வம் கிடைக்கும்.   வேடராக உள்ள அவரை நம்பி யார் பெரும் அளவிலான பணத்தைக் கடன் கொடுப்பார்கள்? ஆகவே ஸ்ரீனிவாசருடன் பத்மாவதிக்கு திருமணம் ஆகும் வேளையில் தேவ லோகத்திலும் பெரும் அளவிலான திருமண வைபவம் நடைபெறும், அப்போது அனைவரையும் அங்கு விஷ்ணு பகவான் திருப்திபடுத்தி அனுப்ப வேண்டும் என்பதை இப்படிக் குறிப்பிட்டு உள்ளார்கள். உண்மையில் பூலோகத்தில் ஸ்ரீனிவாசருடன் பத்மாவதிக்கு நடந்த திருமணத்தில் அப்படிப்பட்ட செலவுகள் நடைபெறவில்லை. ஸ்ரீனிவாசருடன் சம்மந்தப்பட்டவர்களும், பத்மாவதியுடன் சம்மந்தப்பட்டவர்களும் பூலோகவாசிகளாக இருந்தார்கள். பூமியில் விஷ்ணுவின் அவதாரப் புருஷனான ஸ்ரீனிவாசருக்கு திருமணம் நடந்த அதே வேளையில் மேலுலகில் விஷ்ணுவிற்கும் லஷ்மியின் அவதாரமான வேதவதிக்கும் திருமணம் சம்பிரதாயமாக நடைபெற்றது. அதன் பின் விஷ்ணுவின் ஆலயம் திருப்பதி வெங்கடேசர் என்ற பெயரில் எழுகிறது என்பதே திருப்பதி ஏழுமலையானின் கதை. இனி கதை தொடர்கிறது.
 

குபேரனிடம் திருமால் கடன் பத்திரம்  
எழுதிக் கொடுத்து  கடன்  வாங்கினார் 

விஷ்ணுவின் கவலையைக் கண்ட நாரதர் கூறினார் 'நாராயணா....இதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்? திருமணத்துக்கான செலவை சமாளிக்க குபேரனை சந்தித்து அவரிடம் நாம் ஏன் கடனாக பணத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது? அவர்தானே லஷ்மி தேவியின் செல்வத்தைக் காத்து வருகிறார்?' என்று கூற அது நல்ல யோசனையாகத் தெரிய உடனே இருவரும் இணைந்து குபேரரை  பார்க்கச் சென்றார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல குபேரர் லேசுப்பட்டவர் அல்ல. அவர் பணம் தருவதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் அதில் ஒரு நிபந்தனை போட்டார். தான் தரும் பணத்திற்கு  திருமால் வட்டியும் சேர்த்துத் தர வேண்டும். அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட  திருமால் அவருக்கு ஒரு பத்திரமும் எழுதிக் கொடுக்க வேண்டியதாயிற்று. மூவாயிரத்து முன்னூற்று அறுபத்தி நான்கு ராம தங்க நாணயத்தை  கடனாக பெற்றுக் கொண்டு, இனி தான் பூமியில் குடி கொண்டப் பின் தனக்குக் கிடைக்கும் அனைத்துக் காணிக்கையிலும் வட்டியாக ஒரு பகுதியை செலுத்திக் கொண்டும், தான்  வட்டியை மட்டும் முதலில் செலுத்திக் கொண்டு இருப்பதாகவும், கலியுக முடிவில் வட்டியையும் முதலையையும்  சேர்த்துத் தருவதாகவும்  பத்திரம் எழுதிக் கொடுத்து கடனைப் பெற்றுக் கொண்டார்.
கடவுளும் வட்டியை வாங்கிக் கொள்வாரா என்று ஒருவர் நினைக்கலாம்.  குபேரனிடம் ஏன் விஷ்ணு  வட்டிக்கு  பணத்தைப் பெற்றுக் கொண்டார்  என்பதற்கும் ஒரு தத்துவார்த்தமான, ஆழமான அர்த்தம் உள்ளது. லஷ்மி தேவியானவள் வைகுண்டத்தை விட்டுச் சென்று விட்டதும் அவளோடு  செல்வமும் சென்று விட்டது.  மிச்சம் இருந்ததை மட்டும் குபேரன் பாதுகாத்து வந்தார்.  அதே நேரத்தில் செல்வம் இல்லாவிடில் பூமியில் உள்ளவர்கள் எப்படி வாழ முடியும்?  ஆகவே பூலோகத்தில் உள்ளவர்கள் செல்வம் (லஷ்மி) இல்லை என்பதினால் தவிக்கக் கூடாது. தன்னால் காணாமல் போய் விட்ட லஷ்மியைக் தேடிக் கண்டு பிடிக்கும் வரை  பூமியில் உள்ளவர்கள் செல்வம் இல்லாமல்  தவிக்கக் கூடாது என்பதை உணர்ந்த விஷ்ணு லஷ்மியின் செல்வத்தைப் பாதுகாத்து வந்திருந்த குபேரனிடம் சென்று  தன் பெயரில் உத்திரவாதத்துடன் கடன் வாங்கிக் கொண்டு பூவுலகில் அதைக்  கொடுக்கச் சென்றார்.
அதே நேரத்தில் செல்வத்தைத் தரும் அவருடைய மனைவியையும் மக்கள் மறக்கக் கூடாது. அவளது செல்வத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு பூமிக்குச் சென்று மக்களுக்குக்  அதைக் கொடுத்தால் அந்த செல்வத்தை  தான் கொடுத்ததாக நினைத்துக் கொண்டு தன்னிடம் நன்றி காட்டி காணிக்கை தருவார்கள். லஷ்மியை மறந்து விடுவார்கள். அவர்கள் தரும் அந்த காணிக்கை லஷ்மியின் செல்வத்தினால் கிடைத்ததாக கருத வேண்டுமே தவிற தனக்காக கிடைத்ததாகக் கருத முடியாது.
ஆகவே  செல்வத்தை லஷ்மியின் சார்ப்பில் தான் கொடுத்தாலும் அதைக் கொடுப்பவள்  லஷ்மியே என்பதை மக்கள் நினைவில் நிறுத்திக்  கொள்ள வேண்டும்.  தமக்கு  செல்வம் கிடைக்க அருள் புரியும்  அவளையும் மறக்காமல் அவளிடம் பக்தி செலுத்தி  அவ்வப்போது அவளுக்கும் காணிக்கை அளிக்க வேண்டும். அப்படி அளிக்கப்படும்  காணிக்கை என்பதே  பக்தியை வெளிப்படுத்தும்  வட்டி என்பது.
பக்தி  எனும் வட்டியை செலுத்த  பணத்தைத் தந்தவரிடம் நேரிடையாக சென்றே ஆக வேண்டும். நேரிலே சென்று தெய்வத்தை தரிசிக்கும்போது பக்தியும் பெருகும். பக்தி பெருகும்போது ஆன்மீகமும் அவர்கள் உள்ளத்தில் தானாகவே வளரும். ஆன்மீக உணர்வு பெருகும்போது  ஒருவருக்கு நல்ல குணங்கள் தன்னால் ஆழமாக வேர் ஊன்றும். நற்குணங்கள் வேர் ஊறும் போது தீமைகள் குறையும். பாவ எண்ணங்கள் அழியத் துவங்கும்.  மேன் மேலும் அதிக மக்கள் கடவுளை வணங்கித் துதிக்கும்போது  நல்லவை தானாகப் பரவும்.  இதுவே கலி காலத்தில் நிகழ உள்ள  தீமையைக்  குறைக்கும் வழி முறை.


நற்குணங்களும், பக்தியும், நல்ல பண்புகளும் 
நிறவி  உள்ள  இடத்தில் லஷ்மி தேவி 
நிரந்தரமாகக் குடி இருப்பாள்

ஆகவே இதையெல்லாம் மனதில் ஏந்திக் கொண்டுதான்  விஷ்ணு பகவான் நற்குணம் எனும் செல்வத்தை மக்களிடையே பரப்ப ஸ்ரீனிவாசர் எனும் பெயரில் ஒரு கடனாளியாக மாறி செல்வத்தை பூமிக்கு கொண்டு வருகிறார்.  நற்குணங்களும், பக்தியும், நல்ல பண்புகளும் நிறவி  உள்ள  இடத்தில் லஷ்மி தேவி  நிரந்தரமாகக் குடி இருப்பாள்.  இங்கு கடனாளி எனும் வடிவிலான விஷ்ணு  மக்களைப் பிரதிபலிக்கும் ஒரு உதாரணப் புருஷர். கடனாளி என்பது தன்னைப் படைத்த கடவுளுக்கு கடமைப்பட்டவன் என்பதாகும். வட்டி செலுத்துவது என்பது குறைவின்றி வாழ தனக்கு வழி செய்த  அந்தக் கடவுளுக்கு கடமைப்பட்டவன் அவ்வப்போது வெளிக் காட்டும் பக்தி  என்பது  ஆகும்.
 அசலுடன் கூடிய வட்டியும் சேர்ந்து செல்வத்தைப் பெருக்குவதைப்  போல லஷ்மியின் கருணையை தன் மூலம் பெறுபவர்கள், தன்னிடம் வந்து காணிக்கையாக பக்தி எனும் வட்டியை செலுத்த வரும்பொழுது, அவர்களுக்குள் நற் குணங்களையும் தன்னால் மேன் மேலும்  பரப்ப முடியும். செல்வத்தை தருபவர் என நினைத்து தன்னிடம் சிறுவர் முதல் வயதான வரையிலான   பலகோடி மக்கள் வரும்போது,  அவர்களிடையே உள்ள தீமைகளை அழித்து  அவர்கள் உள்ளத்தில் பக்தியைப் பரப்பினால்  கலியுகத்தின்  தீமைகள் குறையும். ஆகவேதான் கலியுகம் பிறக்கும் முன்பே பூமியில் பக்தியும், நல்லொழுக்கமும் பெருக வேண்டும் என்பதை ஒரு தத்துவார்த்தமாக கூறவே மக்களைப் பிரதிபலிக்கும்  விஷ்ணுவை  வட்டி தரும் கடனாளியாகக் காட்டி உள்ளார்கள்.
 ...... தொடரும்