Tuesday, May 29, 2012

Ashtavakra Geethai

அஷ்டவாக்கர கீதை

சாந்திப்பிரியா 


நாம் அனைவரும் பகவத் கீதை என்பதையே கேள்விப் பட்டு இருப்போம். ஆனால் அதைப் போலவே உள்ளது இன்னொரு கீதையும். அஷ்டவாகர கீதை எனப்படும் அந்த கீதை பலருக்கும் தெரியாது. அஷ்டவாகர கீதை என்பது வேத காலத்தில் எழுதப்பட்டு உள்ள சமிஸ்கிருத நூலாகும். இதை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால் அதை எழுதியவர் அஷ்டவாகரா என்ற முனிவர் என்று கூறுகிறார்கள். இன்னொரு கூற்றின்படி இந்த நூல் அஷ்டவாகர முனிவர் என்பவர் மிதிலையின் மன்னனான ஜனக மகாராஜருக்கு கூறிய ஞான உரை என்று கூறுகிறார்கள். அஷ்டவாக்கரா யார்?
முன்னொரு காலத்தில் உதலாக்கா என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கி பண்டிதர். அவருக்கு இருந்த பல சீடர்களில் கஹோடா என்பவரும் ஒருவர். அந்த சீடரின் குணதிசயத்தையும், கல்வியில் இருந்த ஞானத்தையும் கண்ட உதலாக்கா முனிவர் அவருக்கே தன்னுடைய மகளான சுஜாதா என்பவளை மண முடித்துக் கொடுத்தார். சில காலம் ஓடியது. சுஜாதா கர்ப்பம் அடைந்து நிறை மாத கர்பிணியானாள். கிராமங்களில் கூறுவார்கள், கர்பவதிகள் நல்லவற்றையே காது கொடுத்துக் கேட்க வேண்டும், இறைவனின் நாமத்தை வாய் நிறைய கூறிக் கொண்டே இருக்க வேண்டும், மற்றும் இறைவன் பாடல்களை கேட்க வேண்டும். அப்போதுதான் பிறக்க உள்ள குழந்தையும் நல்ல குணத்துடன் பிறப்பான்.
இதை மனதில் கொண்ட சுஜாதா தன்னுடைய கணவருக்கு தனது தந்தை தினமும் செய்து வந்த உபதேசங்களையும், அவருக்குக் கற்றுக் கொடுத்து வந்த வேத பாடங்களையும் அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு கேட்பதுண்டு. அதே சமயத்தில் அவள் வயிற்றில் வளர்ந்து வந்தக் குழந்தையோ அவற்றை தானும் கிரகித்துக் கொண்டது. குரு தனக்கு சொல்லிக் கொடுத்தப் பாடங்களை வீட்டில் வந்து கஹோடா மீண்டும் மீண்டும் கூறியவாறு அதை மனப்பாடம் செய்வார். அப்படி செய்யும்போது அவர் உச்சரிப்புக்களில் சில பிழைகள் ஏற்படுவது உண்டு. அதை கவனித்து வந்த சுஜாதாவின் வயிற்றில் வளர்ந்தக் குழந்தை அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் வயிற்றில் இருந்தே அவர் செய்யும் பிழைகளைக் உரத்தக் குரலில் கூறி தவற்றை திருத்தும். முதல் சில நாட்கள் எதோ ஆசிரி குரல் போல இருந்த அந்த குரலைக் கேட்டு வந்த கணவன், மனைவி இருவரும், சில நாட்களில் அதை செய்வது அவள் வயிற்றில் உள்ளக் குழந்தைதான் என்பதைக் கண்டு பிடித்தார்கள். ஆத்திரம் அறிவை மறைக்கும் என்பார்கள். தன் குழந்தையே தன்னை திருத்துவதா என கோபமுற்ற கஹோடா தன்னை மறந்து அதற்கு சாபமிட்டார். 'நீ பிறந்தாலும் அஷ்ட கோணலாகப் பிறக்க வேண்டும்'. ஆனால் அடுத்த நிமிடமே தனது ஆத்திர புத்தியை நினைத்து கஹோடா மனம் வருந்தினார். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலைமையில் இருந்தார்.
இதற்கிடையில், அந்த குழந்தை பிறக்கும் முன், தன்னுடைய குடும்பம் செழிப்பாக இருக்க வேண்டும் என நினைத்த கஹோடா தன்னுடைய வாதத் திறமையை சபையில் காட்டி சன்மானம் பெற்று வர வேண்டும் என எண்ணிக் கொண்டு ஜனக மன்னனிடம் சென்றதும் அங்கு நடைபெற்ற வாதப் போட்டியில் அரச பண்டிதரிடம் தோற்றுப் போனார். அந்த அரசவை பண்டிதரின் நிபந்தனைப்படி தோற்பவர்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு மரணத்தை அடைவார்கள். ஆகவே வாதப் போட்டியில் தோல்வி அடைந்த கஹோட் முனிவரும் அந்த தண்டனைப் பெற்று மரணம் அடைய வேண்டி இருந்தது.
 அவர் மரணம் அடைந்ததும் அவர் சாபமிட்டபடி சுஜாதாவிற்கு குழந்தை எட்டு கோணல்களுடனான உடம்புடன் பிறக்க, அஷ்ட என்றால் எட்டு என்றும் வாக்ரா என்றால் கோணல் என்றும் பொருள் வரும் வகையில் அதற்கு அஷ்டவாக்ரா எனப் பெயரிட்டார்கள் . அதே நேரத்தில் கஹோட்டின் குருவான உதலாக்கா முனிவருக்கும் ஒரு குழந்தைப் பிறந்தது. அதற்கு ஸ்வேதகேது எனப் பெயர் சூட்டினார்கள். குழந்தை அஷ்டவாக்கரா வளரத் துவங்கினாலும் அவனுடைய தாயார் அவனுக்கு தந்தை மரணம் அடைந்த செய்தியை கூறவில்லை. அவனையும் அவனுடைய தந்தையின் குருவான உதலாக்காவிடமே கல்வி பயில அனுப்பினாள். அஷ்டவாக்கராவும், ஸ்வேதகேதுவும் சேர்ந்தே அவரிடம் கல்வி பயின்றார்கள். அவர்கள் இருவரும் இணைபிரியாத நண்பர்களும் ஆயினர். அஷ்டவாக்ரா ஏற்கனவே கருவில் இருந்தபோதே பல வேதங்களை கற்றறிந்து இருந்ததினால் அபார கல்வி ஞானத்தைப் பெற்றார்.
தனது தந்தை மரணம் அடைந்த செய்தியை முதலில் அறிந்திராத அஷ்டவாக்கரா உதலாக்காவே தனது தந்தை என்று நினைத்து இருந்தார். ஆனால் பின்னர் சில காலம் பொறுத்து தனது தந்தைக்கு ஏற்பட்ட நிலையை எப்படியோ தெரிந்து கொண்ட அஷ்டவாக்கரா தனது தந்தையின் மரணத்துக்குக் காரணமான பண்டிதரை பழி வாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தார். ஒரு முறை அரண்மனையில் மீண்டும் வாதப் போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முடிவு செய்த அஷ்டவாக்கரா தன்னுடைய நல்ல தோழரான ஸ்வேதகேதுவுடன் ஜனகர் அரண்மணைக்குச் சென்று அரச பண்டிதரான பாண்டியை -தனது தந்தையின் மரணத்துக்குக் காரணமானவரை - வாதப் போட்டியில் சந்திக்க அனுமதி கோரினார்.
போட்டியின் நிபந்தனையின்படி வாயில் காவலாளி முதல், அமைச்சர்கள் வரை அனைவரையும் வாதத் திறமையால் தோற்கடித்துக் கொண்டே சென்றனர். போகும் வழி நெடுக அந்த இரண்டு சிறுவர்களும் காட்டிய திறமை மன்னனின் காதில் எட்ட, அவர் அந்த இரு சிறுவர்களையும் அரச சபைக்கு உடனே அழைத்து வருமாறு கூறினார். அவர்கள் அரச சபைக்குள் நுழைந்ததுமே அஷ்டவாக்கராவின் அங்கஹீனத்தைக் கண்டு
அங்கிருந்த அனைவரும் பெரியதாக சிரித்து கேலி செய்ய கோபமடைந்த அஷ்டவாக்கரா, மன்னனைப் பார்த்து “அரசே, நான் இந்நாள் வரை உங்கள் அரச சபையில் படித்த மேதாவிகள்தான் உள்ளனர் என நினைத்திருந்தேன். இங்கு வந்ததும்தான் தெரிகின்றது இந்த அவையில் செருப்பு தைப்பவர்கள்தான் உள்ளனர் என்பது. ஏன் எனில் அவர்களுக்குத்தானே தோலின் மீது நாட்டம் இருக்கும். எந்த ஒருவனுடைய உருவத்தையும் கொண்டு அவனை எடை போடக் கூடாது. அவனுடைய திறமையைதான் சோதித்துப் பார்த்து அவனைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டும்” எனக் கோபமாகக் கூறியதும், அந்த சிறுவன் கூறியதைக் கேட்ட அனைவரும் வாயடைத்து நின்றனர். சற்றே சங்கடம் அடைந்த மன்னனும் அஷ்டவாக்கராவிடம், அவனை கேலி செய்தவர்களின் சார்ப்பில் தானே மன்னிப்புக் கேட்டு விட்டு, சிறுவன் என்றும் பாராமல் அவனை போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தார்.
போட்டி துவங்கியது. அஷ்டவாக்கரா சற்றும் தயக்கம் இன்றி அரச பண்டிதரான பாண்டியுடன் ஆன்மீகத்தில் வாதம் செய்யத் துவங்க, நீண்ட வாதங்களுக்குப் பிறகு அரச பண்டிதர் தோற்றுப் போனார். ஆகவே போட்டியில் தோற்று விட்ட அரசவைப் பண்டிதருக்கு என்ன தண்டனை தரவேண்டும் என மன்னன் கேட்கவும், அஷ்டவாக்கரா கூறினார் “என் தந்தை மரணம் அடைந்தது போலவே பண்டிதரும் நீரில்
மூழ்கடிக்கப்பட்டு மரணம் அடைய வேண்டும்”.
அதைக் கேட்ட அரசவைப் பண்டிதரான பாண்டி சற்றும் கலக்கம் அடையவில்லை. ஆனால் அதுவரை தான் ரகசியமாகக் காத்து வந்த ஒரு உண்மையை அனைவர் முன்னிலையிலும் கூறினார். “ ஐயா, நான் வருண பகவானின் மகன். ஆகவே நீரில் மூழ்கடித்தாலும் எனக்கு மரணம் கிட்டாது. மேலும் உன் தந்தையின் மரணத்துக்கோ, அல்லது மற்றும் தோற்றுப் போன பலரின் மரணத்திற்கோ நான் காரணம் அல்ல. உண்மையில் என் தந்தை ஒரு பெரிய யாகம் செய்து கொண்டு உள்ளார். அதில் நன்கு ஞானம் பெற்ற பண்டிதர்கள் தேவையாக இருந்ததினால்தான் என்னிடம் தோற்றவர்களை அங்கு அனுப்பி வந்தேன். ஆகவே அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கின்றேன். நான் அறியாமல் செய்து வந்த தவறை நிவர்த்திக்கும் வகையில், என்னால் இறந்து போனதாக கருதப்பட்டு மேலுலகில் நடைபெறும் யாகத்தில் பங்கேற்றுக் கொண்டு இருந்த அனைவரையும் திரும்ப அழைக்கின்றேன்'' என்று கூறி விட்டு அஷ்டவாக்கராவின் தந்தையை மேலுலகத்தில் இருந்து வரவழிக்க அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் அவருடைய தந்தை சபையில் வந்து நின்றார்.


தன்னுடைய மகனுடைய வாதத் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை கஹோட் மிக்க மகிழ்ச்சி அடைந்து, தன் மகனை உடனடியாக அங்கிருந்துச் சென்று சாமங்கா என்ற நதியில் குளித்துவிட்டு வருமாறு கூறினார். அவரும் அந்த நதியில் சென்று குளித்துவிட்டு நீரில் இருந்து எழுந்த பொழுது அங்கஹீனம் மறைந்து போயிற்று. அதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்து போக ஜனகரும் அஷ்டவாக்கராவையே தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டார். அந்த அஷ்டவாக்கரா தந்த போதனைகளினால் ஒரு முறைக் பெரும் குழப்பத்தில் இருந்த ஜனகர் மனத்தெளிவு பெற்று ஞானம் அடைந்தாராம். அந்த ஞான பாடமே அஷ்டவாக்கர கீதை எனப்படுவதாக கூறுகிறார்கள். அஷ்டவாக்கர கீதை என்பது பகவத் கீதையைப் போன்ற கீதை. ஆனால் இது மன்னன் ஜனகருக்கு எழுந்த சந்தேகங்களுக்கு முனிவர் அஷ்டவாக்கரர் விளக்கம் அளித்தது என்கிறார்கள். அஷ்டவாக்கர கீதையில் '' இந்த உலகமே மாயையானது. எவன் ஒருவன் ஆத்ம ஞானம் பெறுகின்றானோ அவனே கடவுளுடைய முழுமையான அருளைப் பெற்றவன் ஆகிறான். அப்படிப்பட்ட அருள் கிடைக்கும்போது அவன் பேரானந்த நிலையை அடைகின்றான். தனது அறியாமையினால்தான் உலக பந்தத்தில் அகப்பட்டுக் கொண்டு அவதிப்படுகின்றான்'' என்பதை விளக்குகின்றார்.

Monday, May 28, 2012

Satyobathesa kathaa

நாரதரின் சந்தேகம்
 
சாந்திப்பிரியா'சத்யோபதேசக் கதை' என்ற பெயரில் வடநாட்டு ஆலயத்  திருவிழாக்களில்
நடைபெறும் பிரசங்கங்களில் கேட்டிருந்த ஒரு புராணக் கதை இது 


ஒரு முறை விஷ்ணுவிடம் சென்ற நாரதர் கேட்டார், '' பெருமானே எனக்கொரு சந்தேகம். நீங்கள் முன்பொருமுறை என்னிடம் கூறி உள்ளீர்கள். பந்த பாசத்தை துறந்து துறவிகளாகி விட்டால் பிட்ஷை எடுத்தே உண்ண வேண்டும். அந்த நிலையில் தரப்படும் பிட்ஷை கடவுள் கொடுக்கும் உணவிற்கு சமமானது. ஏன் எனில் பிட்ஷை போடுவது யாராக இருந்தாலும், பிட்ஷை போடும் அந்த ஷணத்தின் போது அவர்கள் தெய்வீகமாக இருப்பார்கள். ஆகவே தெய்வமே வந்து பிட்ஷை போட்ட உணவை தூக்கி எறிந்து விடக் கூடாது. ஒரு வேளை, கிடைத்த பிட்ஷை அதிகமாகி விட்டால் அவற்றை உண்டவுடன் தூக்கி எறிந்து விடாமல் அவற்றை பசு உண்பதற்குக் கொடுக்க வேண்டும். அதனால்தான் பிட்ஷை எடுத்தால் கூடியவரை பசுமாட்டின் அருகில் அமர்ந்தபடியேதான் அதே உண்ண வேண்டும் என்பது நியதி. அதைக் கருத்தில் கொண்டுதான் மடங்களில் பசு மாடங்களை வைக்கின்றார்கள் என்று கூறினீர்களே. இப்படியாக சாஸ்திரங்களை பெருதும் மதித்து நடந்து வந்த, பிட்ஷை எடுத்தே உண்டு வந்த ஆசார பிராமணர் ஒருவரும், நேற்று வரை பிரும்ம ராக்ஷசனாக இருந்தவானாலும், இன்றைக்கு உங்கள் வைகுண்டதில் எப்படி வர முடிந்துள்ளது? பிரும்ம ராக்ஷஷன் நரகத்துக்கு அல்லவா சென்று இருக்க வேண்டும். இதன் மூலம் நாம் என்ன புண்ணியம் செய்தாலும், பாபம் செய்தாலும் கிடைக்கும் பலன் ஒன்றுதானே என்ற எண்ணம் மனிதருக்கு வராதா? இது சரியான நீதியா என்பதை எனக்கு விளக்க முடியுமா? '' என்று கேட்க விஷ்ணு பகவான் சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தப் பின் அவருக்கு நடந்த சம்பவத்தைக் கூறலானார் :
'' நாரதா இந்தக் கதையைக் கேள்...
சில காலத்துக்கு முன்னால் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாழ்ந்து வந்த ராமனாம சர்மா என்ற ஒரு பிராமணர் பல சாஸ்திரங்களையும் கற்றறிந்து குருகுல வாசத்தை மேற்கொண்டு இருந்தார். தினமும் நான்கு வேளை பூஜைகள் செய்தும், விரதங்களை கடுமையாக அனுஷ்டித்துக் கொண்டு இருந்தவாறு, பிட்ஷை எடுத்தே உண்டு வந்தார். அதனால் அவருக்கு பெருமளவில் புண்ணியம் சேர்ந்து கொண்டே இருந்தது.
ஒரு நாள் அவர் பிட்ஷை எடுத்துக் கொண்டு ஆஸ்ரமத்திற்கு வந்து கொண்டு இருந்த வழியில் ஒரு மாட்டு வண்டி தறிகெட்டு ஓடி வந்தவாறு இருந்தது. அதை ஓட்டி வந்தவன் வண்டியை வேகமாக ஓடுவதற்காக அதை அடித்துக் கொண்டே இருக்க, வேகமாக ஓடி வந்து கொண்டு இருந்த மாட்டின் கால்கள் சாலையில் இருந்த மண்ணைத் தட்டித் தட்டி புழுதியைக் கிளப்பி விட்டபடி சென்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த சாலை வழியே சென்று கொண்டு இருந்த ராமனாம சர்மாவின் கையில் இருந்த பாத்திரத்தின் மீதும் புழுதி வந்து விழ 'அடடா,பாத்திரத்தை துணியால் மூடிக் கொண்டு செல்ல மறந்து விட்டேனே, அதனல்தானே தெருவில் இருந்து பறந்து வந்த புழுதி உணவில் விழுந்து விட்டது. ஆகவே இதை எப்படி உண்பது' என வருத்தமுற்று அதை அப்படியே பக்கத்தில் இருந்த சாக்கடையில் கொட்டி விட்டு மீண்டும் பிட்ஷை எடுத்துக் கொண்டு ஆஸ்ரமத்திற்குச் சென்று விட்டார்.
ஆனால் அதற்கு தண்டனையாக அவர் அடுத்த ஜென்மத்தில் ஒரு சண்டாளனாகப் பிறந்து வாழ வேண்டும் என நியதிப்படி அவர் சண்டாளனாகப் பிறவி எடுத்தார். ராமனாம சர்மா மரணம் அடைந்து சண்டாளப் பிறவி எடுத்து இருந்தாலும், அவர் சேர்த்து வைத்து இருந்த பெருமளவு புண்ணியத்தினால் மனம் மகிழ்ந்திருந்த பிரும்ம தேவர் சண்டாளப் பிறவியிலும், ராமனாம சர்மா சேர்த்து வைத்து இருந்த அனைத்துப் புண்ணியங்களும் அவருடன் சேர்ந்து செல்லும் என்று அருள் புரிந்து இருந்தார்.


சண்டாளப் பிறவி எடுத்து இருந்த ராமனாத சர்மாவிற்கு தனது பூர்வ ஜென்ம வினைப் பயன் தெரியாது. ஆனால் அவருடன் சென்று இருந்த புண்ணியங்களின் பலனாக சண்டாளனாகப் பிறப்பு எடுத்திருந்தாலும் அவர் இறை வழிபாட்டை கை விடவில்லை. அது அவருக்கு இயற்கையாகவே அமைந்து இருந்தது. சண்டாளன் என்பதினால் கிராமங்களிலும் சரி நகரங்களிலும் சரி அவர்களை ஆலயங்களில் நுழைய விட மாட்டார்கள் என்பதினால், அவன் காட்டிற்குள் சென்று அங்கிருந்தக் குளத்தில் குளித்து விட்டு அருகில் பாழடைந்துக் கிடந்த ஆலயம் ஒன்றில் சென்று விஷ்ணுவை வழிபட்டு விட்டு வருவான். இது பல ஆண்டுகளாக தொடர்ந்தது. அப்போது சாப விமோசனம் பெற்று, அவனுக்கு அந்தப் பிறவி முடிவுக்கு வரும் காலம் வந்தது.
அப்போது ஒரு நாள் எப்போதும் போல அந்த சண்டாளன் காட்டிற்குள் சென்று குளித்து விட்டு ஆலயத்துக்கு சென்று கொண்டு இருந்தபோது வழியில் ஒரு பிரும்ம ராக்ஷஷன் அவரை தடுத்து நிறுத்தியது. தான் பல நாட்களாகப் பட்டினியாகக் கிடப்பதினால் தனக்கு உணவு வேண்டும் என்பதினால் அவனைக் கொல்லப் போவதாகக் கூறிற்று. சண்டாளனோ அதனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான். 'பிரும்ம ராக்ஷசனே , நீ என்னைக் கொல்வதற்கு முன்னால் என்னை ஆலயத்துக்கு என்றும் போல சென்று இறைவனின் வழி பாட்டை செய்து விட்டு வருவதற்கு அனுமதிக்க வேண்டும்' .
அதைக் கேட்ட பிரும்ம ராக்ஷசன் 'உன்னை நான் எப்படி நம்புவது? நீ அங்கிருந்து ஓடிவிட்டால் என்ன செய்வது?' என்று கேட்டதும், பல விதத்திலும் வேண்டியும் அது தனது பேச்சைக் கேட்காததினால், முடிவாக ஒரு நிபந்தனையை சண்டாளன் கூறினான். ' சரி, நான் ஒரு சத்தியம் செய்து கொடுக்கிறேன். நான் கூறியபடி ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டு உன்னிடம் நான் திரும்பி வராவிட்டால் இதுவரை நான் செய்த அனைத்து புண்ணியங்களும் உன்னை அடைந்து விடும். ஆனால் நான் திரும்பி வந்து விட்டால் அவை என்னுடனேயே இருக்கும். ஆகவே நான் இங்கு வைத்துவிட்டுச் செல்லும் புண்ணியங்களை சுமக்கும் இந்த இடத்து மண்ணை பாதுகாத்தபடி நான் வரும்வரை இங்கேயே காத்து இருக்க வேண்டும், சரியா?' எனக் கேட்க அந்த பிரும்ம ராக்ஷசன் அதை ஏற்றுக் கொண்டு அவனை ஆலயத்துக்கு செல்ல வழியை விட்டது.
சண்டாளனோ முன் பிறவியில் சத்தியத்தைக் கடைப் பிடித்து வாழ்ந்து வந்த பிராமணனாக இருந்தவன். ஆகவே அவன் உள்ளத்தில் அந்த உணர்வு இந்த ஜென்மத்திலும் தொடர்ந்து கொண்டு இருந்தது என்பதற்குக் காரணம் அவனுடன் இந்தப் பிறவியில் தொடர்ந்து வந்திருந்த பூர்வஜென்மப் புண்ணியங்களின் காரணம்தான் என்பதினால் ஆலயத்தில் என்றும் போலவே பூஜைகளை முடித்து விட்டு திரும்பி வந்தான். அவனைக் கண்டது பிரும்ம ராக்ஷஷன் அதிசயப்பட்டது .
திரும்பி வந்த சண்டாளனிடம் பிரும்ம ரக்ஷஷன் கேட்டது ' ஐயா, உன் நேர்மையைக் கண்டு நான் வியக்கின்றேன். பூர்வ ஜென்மத்தில் நீ பிராமண குலத்தில் பிறந்து பூஜை புனஸ்காரங்களை செய்து கொண்டு தர்ம நெறியில் வாழ்ந்து கொண்டு இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன். இல்லை என்றால் கொடுத்த வாக்கை காப்பாற்ற நீ இப்போது இங்கு வந்திருக்க மாட்டாய். மேலும் நீ ஆலயத்துக்குப் போகும் முன் சத்தியத்தை செய்து உன் புண்ணியங்களை இங்கு வைத்து விட்டுச் சென்றபோதே உன்னை நான் புரிந்து கொண்டேன். ஆகவே உன்னை நான் கொல்ல விரும்பவில்லை. நீ இங்கிருந்து போகலாம். ஆனால் எனக்கு ஒரு சிறிய உதவி செய்வாயா?' என்று அந்த பிரும்ம ராக்ஷஷன் அந்த சண்டாளனிடம் கேட்கவும், 'தாராளமாக என்ன செய்ய வேண்டும் என்று கேள். என்னால் ஆன உதவியை செய்கிறேன்' என அவன் பதில் கொடுத்தான்.
பிரும்ம ராக்ஷஷன் கூறியது ' ஐயா, நானும் பூர்வ ஜென்மத்தில் ஒரு பிராமணனாகவே இருந்தேன். பல தர்ம காரியங்களை செய்து கொண்டு, சாஸ்திரத்தை மீறாமல் வாழ்கையை ஓட்டி வந்தேன். ஒருமுறை நான் ஹோமகுண்டம் வளர்த்து ஒரு பூஜையை செய்து கொண்டு இருந்தபோது, என் கண்ணின் முன்னால் வந்து சுற்றிக் கொண்டு, என்னை தொந்தரவுபடுத்திக் கொண்டு இருந்த ஈயை அங்கிருந்து ஓட்ட நினைத்து அதைத் தட்டினேன். ஆனால் துரதிஷ்டவசமாக அது ஹோம குண்டத்தில் விழுந்து இறந்தது. அந்த ஈயோ அதன் பூர்வ ஜென்மத்தில் ஒரு முனிவராக இருந்திருந்தது. ஆகவே அறியாமல் அந்த முனிவரைக் கொன்று விட்ட தோஷத்தினால் பிரும்ம ராக்ஷசனாகப் பிறந்துள்ளேன். ஆகவே நீ பெற்றுள்ள புண்ணியத்தில் சிறு துளியை எனக்குத் தந்தால் நான் இதில் இருந்து சாப விமோசனம் பெற முடியும்'' என்று கூறவும் சண்டாளனோ ' பிரும்ம ராக்ஷஷா , நான் யார் என்பது எனக்குத் தெரியாது. எனக்குப் புண்ணியம் உள்ளதா என்பதும் எனக்குத் தெரியாது. காரணம் நான் ஒரு சண்டாளன். ஆகவே என்னையே அறியாமல் நாம் புண்ணியங்களை அடைந்திருந்தேன் என்றால் அதில் உனக்கு பாதி சேரட்டும் ' எனக் கூற அந்தப் புண்ணியத்தைப் பெற்றுக் கொண்ட பிரும்ம ராக்ஷஷன் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்று விட்டது.
அங்கிருந்து கிளம்பிச் சென்ற சண்டாளன் தினமும் அங்கு வந்து தனது ஆலய பூஜைகளை நிறுத்தாமல் செய்து கொண்டு இருந்தான். சில நாட்கள் கழிந்தது. ஒருநாள் அந்த இடத்தை இடத்தை வந்து சேர்ந்த போது, அவனுக்கு திடீர் என பூர்வ ஜென்ம நினைவு நிழல் போல கண் முன் வந்து நின்றது. பூர்வ ஜென்மத்தில் தான் பிராமணனாக இருந்த காலத்தில் செய்த அனைத்தும் அவன் முன் வந்து நிழலாட அப்படியே அங்கு அமர்ந்து கொண்டவனை திடீர் என வந்த விஷ நாகம் கொத்திவிட அவன் அங்கேயே மரணம் அடைந்தான். அவனுக்கு பெருமளவு புண்ணியம் இருந்ததினால் அவன் வைகுண்டத்திற்குச் சென்றான். அங்கு ஏற்கனவே பிரும்ம ராக்ஷசனாக இருந்தவரும் வந்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சியுடன் அவருடன் இணைந்து கொண்டார்.
நாரதா, அந்த இருவரும் அவர்கள் வைத்துள்ள புண்ணியங்களினால் வைகுண்டத்திற்கு வந்து உள்ளார்கள். சண்டாளனாக இருந்த பிராமணன் தனது புண்ணியங்களில் பாதியை பிரும்ம ராக்ஷசனுக்குத் தந்துவிட்டாலும், சண்டாள ஜென்மத்திலும் , என்னை வந்து தவறாமல் பூஜித்ததின் மூலம் இன்னும் பெருமளவு புண்ணியத்தைத் தேடிக் கொண்டான். அவன் தந்த பெருமளவிலான புண்ணியங்களே பிரும்ம ராக்ஷசனுக்கும் வைகுண்டத்தை தந்துள்ளது என்பதற்கு இன்னும் ஒரு காரணம், நீ நினைப்பது போல பிரும்ம ராக்ஷஷன் கெட்டவன் அல்ல . பூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிக்கவே பிரும்ம ராக்ஷஷனாக பிறந்து இருந்துவிட்டு, அதிலும் நேர்மையை கடைப் பிடித்துவிட்டப் பின் பெரும் புண்ணியங்களை பெற்றுக் கொண்டு இங்கு வந்துள்ளான். ஆகவே இங்கு வந்துள்ள இருவருமே நேர்மையான பிராமணர்களே'' என்று கூற நாரதர் மனம் தெளிவடைந்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

Saturday, May 26, 2012

Balarama Avatharam

பலராம  அவதாரம்
சாந்திப்பிரியா இராமாயண யுத்தம் முடிந்து ராமரும் சீதையும் லஷ்மணர் சமேதியாக அயோத்திக்குத் திரும்பினார்கள். அதன் பின் பல நிகழ்ச்சிகள் நடந்தன. ராமரும் லஷ்மணரும் அவரவர் அவதாராம் முடிந்து அடுத்த அவதாரம் எடுக்கச் சென்று விட்டனர். அப்போது கடைசி கட்டத்தில் ராமரைப் பார்த்து தம்பி லஷ்மணர் கேட்டார் '' அண்ணா எனக்கு ஒரு ஆசை. நான் இதுவரை நீங்கள் கூறியபடியேதான் நடந்து வந்துள்ளேன். ஆனால் என்னால் சுயமாக சிந்திக்க முடியாமல் போய் விட்டது. ஆகவே நான் அடுத்த ஜென்மத்திலாவது, அது என்ன பிறப்பாக இருந்தாலும், நானாக முடிவெடுக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, அந்த அவதாரத்திலும் உங்களுக்குத் துணையாக இருக்கவே விரும்புகிறேன்'' எனக் கேட்டார். ராமர் சிரித்து விட்டு 'அப்படி ஆகட்டும்' என்று கூறி விட்டு சென்றப் பின் சில நாட்களிலேயே இருவரும் தாம் எடுத்த அவதாரங்களை முடித்துக் கொண்டார்கள். அடுத்த அவதாரத்தில் ராமர் கிருஷ்ணராகவும், லஷ்மணர் பலராமனாகவும் அவதாரம் எடுத்தார்கள்.
ஆனால் பாலராமரின் பிறப்பு சில காரணங்களினால், தேவகி மற்றும் ரோஹிணி என்ற இரு தாயார்களின் வயிற்றில் வளர்ந்து பிறப்பு எடுக்கும் நிலையில் நிகழ்ந்தது. அதனால்தான் அவரை சம்கர்ஷன் அதாவது இரு கருவில் வளர்ந்தவர் என்ற பெயரிலும் அழைத்தார்கள். லஷ்மணர் ஏன் பலராம அவதாரம் எடுத்தார்? அதற்கும் ஒரு பிண்ணனி கதை உண்டு. ராம அவதாரம் முடிந்தப் பின் அடுத்த அவதாரத்தை எடுக்க வேண்டி இருந்த விஷ்ணு லஷ்மணரை பாலராமராகவும், தன்னை கிருஷ்ணராகவும் -அண்ணன் தம்பிகளாக - அவதாரம் எடுக்க முடிவு செய்தார். வேடிக்கை என்ன என்றால் சம காலத்தில் விஷ்ணு பகவான் இரண்டு அவதாரங்களில் காட்சி அளிக்க வேண்டியதாயிற்று.
முதலில் கீழே உள்ள கதையைப் படியுங்கள்.
ஒரு நாள் ஆதிசேஷன் மீது அமைதியாகப் படுத்துக் கொண்டு இருந்த விஷ்ணு பகவானிடம் சென்ற நாரத முனிவர் அவரிடம் கேட்டார் ' ஐயனே நீங்கள் உங்களது எட்டாவது அவதாரத்தில் பாலராமராகவும், ஒன்பதாவது அவதாரத்தில் கிருஷ்ணராகவும் பிறந்து உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இரண்டுமே துவாபர யுகத்தில்தான் நடந்துள்ளது. உங்களால் எப்படி இரண்டு பிறப்புக்களை சம காலத்தில் எடுக்க முடிந்தது? அது சாத்தியமா?  மேலும் அப்படி சம காலத்தில் எடுத்த அவதாரத்தின் தத்துவாத்தம் என்ன? 


விஷ்ணு பகவான் கூறினார் , 'நாரதா உன் சந்தேகம் வலுவானதுதான். என்ன செய்வது? சில காரணங்களினால்  சிலவற்றை நடத்திக் காட்டும் பொறுப்பை நான் ஏற்று உள்ளேன்.  அவற்றில் ஒன்றே பலராம அவதாரமும். நான் ஒரு  அவதாரத்தில் ராமனாகப் பிறந்து இருந்தபோது, என்னுடைய தம்பியாக லஷ்மணன்  இருந்தார். அந்த லஷ்மணன் யார்? என்னுடைய படுக்கையான ஆதிசேஷனே லஷ்மணனாக பிறப்பை எடுத்து இருந்தது.  அடுத்து  கிருஷ்ணருக்கு உதவியாக இருக்கப் பிறந்த  பலராமன் யார்? ஆதிசேஷனே பலராமனும். உங்களின் அவதாரம் பலராமர் என்றால், அவர் எப்படி ஆதிஷேஷனுடைய அவதாரமாக இருக்க முடியும் என்று யோசனை செய்கிறாயா? 
நாரதா....கவனமாகக் கேள்.......... என்னால் பல அவதாரங்களை ஒரே நேரத்தில் எடுக்க முடியும். ஆனால் அனைவரினாலும் அவற்றை செய்ய முடியாது.  நான் தசாவதாரம் எடுத்து சில காரியங்களை செய்ய வேண்டும் என்ற நியதி இருந்ததினால் என்னையும் படைத்த பரப்பிரும்மன் எனக்கு சில விசேஷ சக்திகளை அளித்து உள்ளார். அதில் ஒன்றுதான் பல ரூபங்களை ஒரே நேரத்தில் எடுக்கும் நிலை.  நான் எந்த அவதாரத்தை எடுத்தாலும், என்னுடைய மூல அவதாரத்தை (விஷ்ணு) களங்கப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே நான் எந்த அவதாரத்தை எடுத்தாலும், என்னுடைய மூல அவதாரத்தின் துணை எனக்குத் தேவை எனக் கருதியதினால் , என்னுடைய சக்தியில் ஒரு பாகத்தை கொண்டு ஆதிசேஷனை படைத்து அதில் என்னை வைத்துக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு அவதாரத்திலும்  எனக்குத் துணையாக ஆதிஷேஷனுக்குள் உள்ள என் சக்தியும் ஒரு உரு எடுத்து என்னுடன் துணையாக வர வேண்டும் என்று எண்ணியே  அப்படி ஒரு ஏற்பாட்டை செய்தேன்.  அதில் வந்துள்ளதே பலராம அவதாரமும். அதாவது என் மாயையான ஆதிசேஷனின்  மூலம் வெளிவந்த அவதாரமும்.
ராம அவதாரம் எடுத்தபோது நான் என்னுடைய விஷ்ணு அவதாரத்தை துறந்திருன்தேனா?  எனக்குள் உக்ள்ள பல சக்திகளில் ஒன்றான ஒரு சக்தியின் ஆதிசேஷனே  லஷ்மணராகவும், பாலராமராகவும் அவதாரங்களை எடுத்தபோது கூட விஷ்ணுவாக நான் இருந்தபோது எனக்கு படுக்கையாகவும் இருந்து வந்தார். ஆதிசேஷன் என்பது என்னால் படைக்கப்பட்ட ஒரு மாயையான உருவமே. ஆகவே ஆதிசேஷன் பாலராமராகவும், லஷ்மணராக அவதாரத்தை எடுத்ததாக சொல்லப்பட்டாலும், இருவருமே என் மாய ரூபங்களே.
நான் ராம அவதாரத்தில் இருந்தபோது என்னை வேண்டித் துதித்த பலரும், பல நன்மைகளை அடைந்தார்கள். ஆனால் என்னுடன் எப்போதும் இருந்த, என் கால்களில் தினமும் விழுந்து வணங்கி வந்த தம்பி லக்ஷ்மணன் மட்டும் என்னுடன் சேர்ந்து பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருந்தான். ஆகவேதான் ஒரு அவதாரத்திலாவது லஷ்மணனை எனக்கு மூத்தவராக அவதரிக்கக் எண்ணினேன். அப்போதுதானே என்னுடைய நன்றிக் கடனை தீர்க்க அவருடையக் காலில் நான் விழுந்து வணங்க முடியும்?  இதுவே நான் எடுத்த எட்டாவது மற்றும் ஒன்பதாவது அவதாரங்களின் பலராம- கிருஷ்ணனின்- ரகசியங்கள்'' என்று கூறியதும் நாரதர் முகத்தில் வெளியாகிக் கொண்டு இருந்த  இன்னொரு சந்தேகத்தை விஷ்ணு பகவான் கண்டு கொண்டார். ஆகவே மீண்டும் நாரதரிடம் அவர் என்ன தயங்குகிறார் என்று விஷ்ணு கேட்க,  நாரதரும், ஒரே நேரத்தில் எப்படி பல ரூபங்களை அதாவது அவதாரங்களை விஷ்ணுவால் எடுக்க முடியும் என்பதை நேரில்  பார்த்தல் ஒழிய யாரும்  நம்பமாட்டார்களே என்று யோசிப்பதாகக் கூற விஷ்ணு கூறினார் '' நாரதா உன் சந்தேகம் உண்மையில் இந்த உலகத்துக்கு நன்மை பயக்கும். ஆகவே தக்க சமயத்தில் நான் யார் என்பதையும், எனக்குள் அடங்கி உள்ள ரூபங்களையும் உலகறியச் செய்வேன். அதுவரை சற்று பொறுமையாக இரு'' என்று கூறி விட்டு மறைந்து விட்டார். அதன் காரணமாகவே விஷ்ணு பகவான் கிருஷ்ணராக அவதரித்தபோது, அர்ஜுனனுடைய சந்தேகத்தின் மூலம் உலகறியச் செய்யும் விதமாக விஸ்வரூபக் காட்சியைத் தந்து தனக்குள்  அடங்கி இருந்த அனைத்து ரூபங்களையும் வெளிப்படுத்தினார்.

இதில் ஒரு சிறிய குழப்பம் உள்ளது. அதை நீக்குவதற்காக இந்த விளக்கம் தரப்பட வேண்டி உள்ளது. விஷ்ணு எடுத்த அவதாரம் பத்து அவதாரங்களே என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த அவதாரங்கள் சில யுகங்களில் ஒரு குறிப்பிட்ட காரியங்களை முடிக்க எடுக்கப்பட்ட அவதாரம். ஆனால் வேறு சிலர் விஷ்ணு பகவான் எடுத்த அவதாரம் இருபத்தி இரண்டு என்று கூறி அதற்கு ஆதாரமாக ஸ்ரீமத் பாகவதம் ஒன்றினை சுட்டிக் காட்டுகிறார்கள். அதைப் பற்றிய விவரங்களைப் படிக்க இங்குள்ள இங்குள்ள வலை தளத்தின் http://ancientindians.wordpress.com/2009/09/24/the-avatars-of-vishnu/ மீது கிளிக் செய்யவும். இது குழப்பத்தை தரவில்லையா என்று சிலர் கேட்கலாம். குழப்பமே இதில் தேவை இல்லை. விஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து மட்டுமே. அந்த அவதாரங்களை எடுத்து  சில முக்கியமான நிகழ்ச்சிகளில் அவர் நேரடியாக ஈடுபட்டு அவற்றை நிவர்த்திக்க வேண்டி இருந்தது. ஆனால் அந்த பத்து அவதாரங்களிலும் நேரடியாக ஈடுபட்டு இருந்த அவருக்கு மறைமுக உதவி செய்ய மேலும் சிலர் தேவையாக இருந்ததினால் அந்த யுகங்களில் அவரே மேலும் சில துணை  அவதாரங்களை எடுத்தார்.
பலராம அவதாரத்தை எடுத்தபோது அவர்  துரியோதனன் மற்றும், பீமனுக்கு கதையைக் கொண்டு யுத்தம் செய்யும் கலையைக்  கற்றுக் கொடுத்தார். ஆனால் மகாபாரத யுத்தம் நடந்தபோது இருவருமே அவரிடம் சென்று அவருடைய துணையை நாடினார்கள். பலராமர் கூறினார் ' நான் உங்கள் இருவரையுமே இரண்டு கண்களாக பாவித்தே அந்தக் கலையை உங்கள் இருவருக்கும் சமனாக கற்றுக் கொடுத்தேன். உங்கள் இருவரில் நான் யாருக்குமே எந்த பேதத்தையும்  காட்டவில்லை. ஆகவே நான் உங்கள் இருவரில் யாராவது ஒருவருடைய பக்கத்தில்  சேர்ந்தால், அது நான் என் மனசாட்சிக்கு செய்யும் துரோகம் ஆகும்'  என்று கூறி விட்டு அவர்கள் இருவருக்கும் உதவ மறுத்து விட்டார். ஆனால் யுத்தத்தில், கிருஷ்ணரின் யோசனைப்படி துரியோதனனின் தொடையைப் பிளந்து அவனை பீமன் கொன்ற போது, தான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த யுத்த நேர்மை என்பதை பீமன் உடைத்து விட்டான் என்று கோபமுற்ற பரசுராமர் பீமனைக் கொல்லச் சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்தினார் கிருஷ்ணர். பலராமனிடம் தம் இருவரின் அவதாரக் கதையையும் நினைவு கூறி,  இந்த அவதாரத்தில் தனக்கு உதவியாக இருக்கவே  அவரும் படைக்கப்பட்டு உள்ளதாகக் கூறிவிட்டு  அவருடைய கோபத்தை தணித்து அனுப்பினார்.
மகாபாரத யுத்தமும் முடிந்தப் பின் கிருஷ்ணரும், பலராமரும் தமது ராஜ்யத்திர்க்குச் சென்றுவிட்டார்கள்.  அப்போது ஒருமுறை கிருஷ்ணரின் மகனான சாம்பவான திருமணத்தின்போது சாம்பவானை ஹஸ்தினாபுரத்தை ஆண்டவ ஒரு மன்னன்  சிறைப் பிடித்துக் கொண்டு கடலுக்குள் சென்றுவிட, சம்பவானை மீட்பதற்காக பலராமர் தனது கலப்பையின் நுனியினால் ஹஸ்தினாபுரத்து பூமியையை குத்தி, அதை இழுத்து வந்து சம்பவானை மீட்டார்.
வாழ்க்கையில் நாம் தெரிந்தோ தெரியாமலோ பலவித பாபங்களைச் செய்திருக்கலாம். அந்தந்த பாபங்களுக்கேற்ப அவரவர் கர்ம பலனை அனுபவித்து ஆகவேண்டும். செய்த பாபங்களுக்கு பரிகாரம் செய்து கர்ம வினைப் பலனைக் குறைத்துக் கொள்ள முடியும்.அவ்வளவே. ஆனால் செய்த பாவத்திற்கு சிறிதளவாவது துன்பத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது தெய்வ நீதி.  இந்நிலையில் ஒருமுறை  விஷ்ணுவின் அவதாரமான  ஸ்ரீ பலராமரே தனது தோஷங்களையும் பாபங்களையும் போக்கிக் கொள்ள தான தர்மங்கள், க்ஷேத்திராடனங்களுக்கு தீர்த்த யாத்திரை,பித்ரு கர்மா போன்றவற்றை   செய்துள்ளார் என்று  ஸ்ரீமத் பாகவதத்தின் தசமஸ்கந்தம் என்ற பிரிவில் கூறப்பட்டு உள்ளதாம். அப்படிப்பட்ட பாவத்தை பலராமர் செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
ஒரு சமயம்  நைமிஷாரண்யா வனத்தில் ஒரு பெரிய யாகத்தை ரிஷி முனிவர்கள் செய்து கொண்டு இருந்தார்கள். அப்போது  அங்கு சென்று அந்த யாக சாலைக்குள் பலராமர்  நுழைந்ததும் அனைத்து முனிவர்களும் எழுந்து நின்று  பலராமரைக் கரம் கூப்பி  வணங்கி மரியாதை செய்தனர். ஆனால் வியாசரின் சிஷ்யரான ரோமஹர்ஷணர்  என்ற முனிவர் மட்டும் தனது இருப்பிடத்தை விட்டு எழுந்திருக்காமல் யாக காரியத்தில் மூழ்கி இருந்தார். அவர், தன்னைச் சிறிதும் மதிக்காமல் அமர்ந்திருந்ததைக் கண்டு கோபமுற்ற பலராமர் சற்றும் யோசனை செய்யாமல் அந்த ரிஷியைக் கொன்று விட்டார்.
அதைக் கண்டு அதிர்ச்சியுற்ற முனிவர்கள் பெரிதும் வருந்தி,  பலராமருக்கு ஒரு பிராமணரைக் கொண்டதற்காக பிரும்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும் என்று சாபமிட்டு விட்டார்கள்.   பலராமரும் தன் தவறை உணர்ந்து  ஆத்திரத்தில் நிதானமிழந்து அந்த முனிவரைக்  கொன்று விட்ட தான் அதற்க்கு மிகவும் வருந்துவதாக கூறிவிட்டு அதைக் களைந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என அவர்களிடம் கைகூப்பிக் கேட்டார். அவர்களும் அதற்கு பிராயசித்தமாக, அந்த யாகத்தை நடக்க விடாமல் ஒரு கொடிய அரக்கன் பல்வேறு கேடுகெட்ட செயல்களை செய்வதாகவும், ஆகவே பலராமர் அந்த யாகம் நடந்து முடிய உதவியப் பின் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டால் பிராமணரைக் கொன்ற பாபம் விலகும் என்று கூறினார்கள்.  அவர்களது வேண்டுகோளை ஏற்று  அந்த யாகத்தைக் தடுத்து வந்த அரக்கனை பலராமர் கொன்றார். யாகம் இனிதே நடந்தேறியது. அதன் பின் அந்த மா முனிவர்கள் கூறியபடி  தனது பாபங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொள்ள பல ஷேத்ரங்களுக்கும் சென்றும், பல தீர்த்த யாத்திரையையும்  மேற்கொண்டப் பின், பல தெய்வங்களையும் வழிபட்டுக் கொண்டு வந்த பலராமர் தம்முடைய தோஷத்தைக் களைந்து கொண்டார். அதை எதற்காக செய்தார் என்றால் தனது அவதார புருஷரான பலராமன் மூலம் விஷ்ணுவானவர், பூமியில் ஜனித்த யாருமே செய்த பாவங்களுக்கு தக்க பரிகாரங்களை செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை உலகறியச் செய்யவே அதை மேற்கொண்டார். அதற்குப் பிறகு நடந்த பல நிகழ்ச்சிகளின் முடிவில் கிருஷ்ணர்  தனது அவதாரத்தை துறந்துவிட , அந்த துயர்ரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் போன பலராமனும், தனது உயிரை தானே விளக்கிக் கொண்டார். அப்போது அவர் தலையில் இருந்து ஆதிசேஷன் வெளியேறி அந்த அவதாரத்தை முடித்து வைத்தது  என்று ஒரு கதை உண்டு. 

Friday, May 25, 2012

Vallimalai Pondi Devi, Velore

வள்ளி மலைப்  பொங்கி தேவி

சாந்திப்பிரியா

வள்ளி தேவி எனும் பொங்கி தேவி  

ஸ்ரீ வள்ளிதேவி சில அவதாரங்களை எடுத்து இருக்கின்றாள். அதில் ஒரு அவதாரமாக அவள் காத்தாயி எனும் பெயரில் சித்தாடி எனும் கிராமத்தில் ஆலயம் ஒன்றில் அமர்ந்து இருக்கின்றாள். அப்படிப்பட்ட அந்த வள்ளி தேவி அவதரித்த இடமாக வேலூரில் உள்ள வள்ளி தேவியின் ஆலயத்தையும் கூறுகிறார்கள்.  முருகனின் முதல் மனைவியானவளே வள்ளி தேவி.  அவள் வேடர் குலத்தில் பிறந்து முருகனை மணக்க வேண்டி இருந்தது. அவர்களுடைய  பூர்வ ஜென்மத்தில் வள்ளியும் தெய்வானையும்  மகா விஷ்ணுவின் மகள்கள் ஆவார்கள்.  அவர்கள் தங்களுக்கு அழகானவரும், கோபமே இல்லாத கணவன் வேண்டும் என எண்ணி அதற்காக தபம் இருக்க, முருகப் பெருமான் அவர்கள் முன் தோன்றி அவர்களை தான் பூமியில் வந்து மணப்பதாக உறுதி கூறினார். அவர் கூறியபடியே வள்ளி வேத்தா எனும் வேடரின் மகளாகப் பிறந்தாள். தெய்வானை  இந்தரனுக்கு  மகள்களாகப் பிறந்த பின் அவர்களை அவர் மணந்து கொண்டார். பன்னிரண்டு வருடம் வள்ளியும் முருகனும் லீலைகள் பல புரிந்து திருமணம் செய்து கொண்டனர். வேலூருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியையே  வள்ளி தேவி  அவதரித்த வள்ளிமலை எனக் கூறுகிறார்கள்.
வள்ளி மலை என்பது வட ஆற்காட்டு மாவட்டத்தில்  உள்ள வாலாஜாவில் உள்ளது.  அங்கு உள்ள முருகன் ஆலயத்தில் அவர் வள்ளி- தெய்வானையுடன்  அமர்ந்துள்ளார். அந்த ஆலயத்தின் பின்புறம் உள்ளது சரவணப் பொய்கை என்ற நீர் நிலை (குளம்). அந்த மலையின்  உச்சியில் மற்றும் ஒரு  முருகன் ஆலயம் உள்ளது.  ஒரே ஒரு கல்லில் அமைக்கப்பட்டுள்ள அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் எனில் 444 படிகள் ஏற வேண்டும். அந்தப் படிக்கட்டுகளின் சில இடங்களில் பக்தர்கள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக தங்கும் இடம் உள்ளது.

 வள்ளி தேவி  முருகனுக்கு நீர் கொடுத்த மற்றும் அவள் குளித்த குளம் 

வள்ளி மலையின் மகத்துவத்தை எடுத்துக் கூறும் விதத்தில் ஒரு கதை உள்ளது.  வள்ளி மலையின் மகத்துவத்தைப் பற்றிக் கேட்டறிந்த காலம் சென்று விட்ட ஆன்மீகச் செம்மல் திரு கிருபானந்தவாரியார், திரு அருணாசலம், மற்றும் திரு அப்பாதுரை போன்றவர்கள் வள்ளியின் ஆலயம் இருந்த  அந்தப் பகுதியை புதுப்பிக்கும் நோக்கத்தில் அந்த இடத்தை ஒருமுறை ஆய்வு செய்து கொண்டு இருந்தார்கள்.  அப்போது அங்கு  இருந்த ஒரு பாறையின் நடுவில் இருந்து புகை மண்டலம் போல எதோ வெளி வந்து கொண்டு இருந்தது.  ஆகவே அந்த மூவருமே சேர்ந்து அந்தாப் பாறையை சற்று அகற்ற  உள்ளே இருந்து இன்னும் அதிக  புகை மண்டலம் வெளி வந்தது.  உள்ளே செல்ல சிறு படிக்கட்டுக்களைப் போன்ற பாதையும் இருந்ததைக் கண்டப் பின் , சரி உள்ளே சென்று பார்க்கலாம் என எண்ணி  உள்ளே சென்று பார்த்தவர்கள் பிரமித்தார்கள். பூமியின் பல அடிகள்  ஆழத்தில் காட்சி தந்த இடத்தில்  பல ரிஷிகளும், முனிவர்களும் யோக நிலையில் கண்களை மூடியபடி அமர்ந்து இருந்தனர். அதைக் கண்ட அவர்கள் பயந்து போய் வெளியில் ஓடி வந்து விட்டார்கள். வெளியில் வந்தவர்கள் மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள். மயக்கம் தெளிந்து எழுந்ததும், அந்த இடமே பல ரிஷி முனிவர்கள் அமைதியாக தவத்தில் உள்ள இடம் என்று கருதி, அந்த பாறையை அப்படியே மீண்டும் அதே இடத்தில் வைத்து அதை மூடினார்கள். அதன் பின் அந்தப் பாறை இருந்த இடத்தை மட்டும் புதுப்பிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். மேலும், அந்தப் பாறை எந்த இடத்தில் உள்ளது என்பதையோ, தாம் பார்த்த அனைத்து சம்பவங்களையோ  அவர்கள் யாரிடமும் கூறவில்லை. அதை புனித ரகசியமாகவே வைத்து இருந்தார்கள்.  அதற்குப் பிறகு  அந்த செய்தியைக் கேள்விப்பட்ட பலரும் அங்கு சென்று எத்தனை  தேடியும், அந்த பாறை எங்குள்ளது என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை.   அந்த மலையைக் குறித்து மேலும் பல கதைகள் உலவுகின்றன. இந்த மலையில்  பல சித்தர்கள் தவம் இருந்து இருக்கின்றனர். இதை சக்தி பீடம் என்று கூடக் கூறலாம். அதற்குக் காரணம் அந்த  இடம்தான் வள்ளி தேவி  அமர்ந்து இருந்து தவம் புரிந்த ஒரு இடமாக உள்ளது என்ற நம்பிக்கையே.
புராணக் கதையின்படி அங்கு முருகன் வந்து வள்ளியிடம் தனக்கு தினையும் , தேனும் தருமாறு கேட்டாராம். அதை  உண்டதும்  அவருக்கு விக்கல் எடுக்க தனக்கு சூரிய  ஓளியே படாத நீர் ஊற்றில் இருந்துத் தண்ணீர் கொண்டு வந்துத் தருமாறு அவளிடம் அவர் கேட்டார் . ஆகவே அங்கிருந்த குளத்தில் இருந்து  வள்ளி தண்ணீரை தனது கைகளில் எடுத்துத் தந்தாளாம்.  ஆகவேதான் வள்ளி தேவியின் கைபட்ட அந்தக் குளம் புனிதமானது மட்டும் அல்ல, கங்கையைப் போல என்றுமே வற்றாதக்  குளம் என்கிறார்கள் . இளம் பெண்கள் அங்கு வந்து தங்களுடைய தலை  மீது அந்த குளத்து நீரைத் தெளித்துக் கொண்டு தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என வள்ளி தேவியிடம்  வேண்டிக் கொண்டு செல்வார்கள் என்று சில பனை ஓலைகளில் எழுதப்பட்டு உள்ள செய்திகள் மூலம் தெரிய வந்தது.

 மலை மீது உள்ள  இரண்டு முருகன் ஆலயங்கள் 

அந்த மலையின் மகிமை இன்னும் பல உண்டு. அந்த மலை  உச்சியில் உள்ள குளத்தில்  வள்ளி தான்  குளிக்கும்போது தனக்கு தேவையான மஞ்சளை அரைத்துக் கொண்ட  பாறை ஒன்று அங்கு உள்ளது.  அந்த மலைப் பகுதியில் உள்ள வள்ளி மலை  ஸ்வாமிகளின் ஆசிரமம் பக்கத்தில்தான் முருகன் தன்னை ஒரு  மரமாக மாற்றி நின்று  கொண்ட இடமும் உள்ளது என்கிறார்கள். பட்டுப் போய் இருந்த அந்தப் புனித மரத்தை அடையாளம் கண்டு கொண்ட வள்ளி மலை ஸ்வாமிகள் அதை எடுத்து விட்டு அங்கு ஒரு  தண்ணீர் குளத்தைக் கட்டினார்.  வள்ளிக்கு, வள்ளி மலையே  விளையாட்டு மைதானமாக இருந்து  உள்ளது. அங்குதான் அவள் முருகனுடன் ஆடிப் பாடி, கண்ணா மூச்சி ஆட்டம் ஆடி விளையாடி உள்ளார் என்று வல்லை மலை ஸ்வாமிகள் மூலம் அறிந்தார்கள். அந்த வள்ளி மலையை  சுற்றி உள்ள இயற்கைக் காட்சிகள், குகைகள்,  பசுமைத் நிலங்கள், நீருற்றுக்கள் என பலவும் அந்த வள்ளி மலைக்கு அழகூட்டுகின்றன.  வள்ளி மலை முழுவதிலுமே வள்ளி தேவி  பொங்கி எழும் மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்து கொண்டு இருந்து வந்ததினால் அவளை பொங்கி மலை அம்மா என்றும் அழைக்கின்றார்கள்.  வள்ளி மலையில்தான்  முருகனின் மனம் கவர்ந்த   வள்ளி தேவி மனித உருவில் பிறந்தாள் என நம்பப்படுவதினால்  மனித உருவில் பிறந்து மாயமாகி விட்ட அவளுடைய ஆத்மா அங்கு சுற்றிக் கொண்டு உள்ளது  என்றும் அங்கு வரும் பக்தர்களின் இதயங்களுக்கு ஆறுதல் தருகிறது என்கிறார்கள்.
வள்ளித் திருமணத்திற்கு உதவிய யானை  மற்றும் விநாயகரின் உருவச் சிலைப் பதித்த பாறை ஒன்று அங்கு உள்ளது. இயற்கையிலேயே விநாயகரைப்  போலவே அமைந்து உள்ள அந்தப் பாறையை கநேஷகிரி என்கிறார்கள்.  இருபதாம் நூற்றாண்டின்  முதல் காலத்தில் தென் இந்தியா முழுவதும் வள்ளி மலை  மகாத்மியம் பற்றியும் துறவி அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழையும் பரப்பி வந்த வள்ளி மலை  ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் அங்குதான் பல காலம் வாழ்ந்திருந்து  1950 ஆம் ஆண்டு இறுதியில்   சமாதி அடைநதார்.
ஒருநாள் வள்ளி மலை  ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் மலை  மீது நடந்து கொண்டுச் சென்று இருந்த பொழுது அவர் பாடிக் கொண்டே சென்று கொண்டு இருந்த சிறுமியான வள்ளி தேவியை சிறு பெண்ணின் வடிவில் காண நேரிட்டதாம். அந்த இடத்தில் ஒருப் பெண்ணா என ஆச்சர்யத்துடன் அவளை நோக்கி   '' குழந்தை, நீ யார்?'' என அவர் கேட்க அவளோ '' நான் யார் எனறு தெரிவது முக்கியம் அல்ல. ஆனால் என் பாடல்களைக்  கேட்டால் உன் மனதில் மகிழ்ச்சி ஏற்படவில்லையா ?'' என புன்னகை செய்தபடி திருப்பிக் கேட்டாள். சில சனமே.....அவள் அவருக்கு வள்ளி தேவியாகக் காட்சி தந்துவிட்டு அங்கிருந்து மறைந்தாள்.  அப்போதுதான் அவருக்குப் புரிந்தது அவள் பார்த்தப் பெண்  முருகனின் மனைவியான வள்ளித் தேவியே என்பது.  ஆகா.....வாழ்வில் ஆனந்தம் அடைந்தேன் என்ற மகிழ்ச்சியில்  அவளை தரிசித்த  மகிழ்ச்சியில் அது முதல் வள்ளி மலை ஸ்வாமிகள் அற்புதமான பாடல்களை  இராக தாளங்களுடன் பாடத் துவங்கினார். அங்கேயே ஒரு பாறையில் அவளை  ஸ்தாபனம் செய்தார். அது போலவே ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகளுக்கு வள்ளியைத் தவிர  முருகப் பெருமானையும்  நேரடியாக சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. ஸ்வாமிகளுக்கு வள்ளி மீது அளவு கடந்த பக்தி உண்டு.  வள்ளியை திருப்புகழ் பாடல்கள் மூலமே புகழ்ந்து பாட வேண்டும் எனவும் அப்பொழுதுதான் அவள் சமயம் கிடைக்கும் பொழுது முருகனிடம் நமது தேவைகளை அவள் எடுத்துக் கூறுவாள் என்று தமது பக்தர்களிடம் கூறுவார்.  ஸ்ரீ வள்ளி தேவி அனைவருக்கும் உதவி செய்பவள் என்றும், முருகன் மட்டுமே புருஷ அவதாரம் எனவும் மற்றவர்கள் அனைவரும் அவருக்கு துணைவிகள் என்றும் கூறி வந்தார். 
அம்மா சித்தாடி காத்தாயி எனும் வள்ளி தேவியே, எங்கள் குலத்தை நீதான் ரஷிக்க வேண்டும். எங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீயே எங்களுக்கு துணை நின்று எங்களைக் காத்தருள வேண்டும். நீ எங்களுடன் இருந்தால் எங்களை யார், என்ன செய்ய முடியும்?

Wednesday, May 23, 2012

Adi Sankarachcharya Temple, Kashmir

காஷ்மீரத்தில் ஆதி சங்கரர் ஆலயம்
 
சாந்திப்பிரியா


மலை மீது உள்ள ஆலயம் 

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியில் இருந்தபோது நான் இரண்டு விஷயங்களைக் குறித்து கேள்விப்பட்டு இருந்தேன். அந்த செய்திகள்  என்ன என்றால் ஆதி சங்கரர் தவம் இருந்த குகை ஓம்காரீஸ்வரத்தில் உள்ளது. அடுத்து ஆதிசங்கரருக்கு ஒரு ஆலயம் காஷ்மீரத்தில் உள்ளது. ஆகவே ஆவலினால் உந்தப்பட்டு  ஒம்காரீஸ்வரருக்குச் சென்று ஆதி சங்கரர் தவம் இருந்த குகையை பார்த்து விட்டுத் திரும்பினோம். ஆனால் காஷ்மீரத்து ஆதி சங்கராச்சாரியார் ஆலயத்திற்குச் செல்லும் பாக்கியம் கிட்டவில்லை.
ஒம்காரீஸ்வரருக்குச் சென்று பார்த்து விட்டு வந்ததும் அது பற்றியக் கட்டுரை ஒன்றை வார்த்தை சித்தர் என அழைக்கப்பட்டவரும், தற்போது மறைந்து விட்டவருமான திரு வலம்புரி ஜான் என்பவர் ஆசிரியராக இருந்த தாய் எனும் ஒரு வார இதழில் எழுதி இருந்தேன். அது அநேகமாக 1984 அல்லது 1985 ஆம் ஆண்டாக இருக்கலாம். ஆனால் காஷ்மீரத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் ஆலயம் பற்றி இப்போதுதான் எழுத சந்தர்ப்பம் வந்தது.
காஷ்மீரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1100 அடி உயரத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் ஆலயம் முதலில் 200 AD யில் பேரரசரான அசோகரின் மகனால் கட்டப்பட்டது என்றும் அதன் பின் ஒன்பதாம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்டது என்றுக் கூறுகிறார்கள்.  இன்னும் சில செய்திகளின்படி  இந்த ஆலயம் சந்திமான் என்பவரால் கட்டப்பட்டு அதன் பின் கோதபயா என்ற காஷ்மீரத்து மன்னனினால் சீர்படுத்தப்பட்டு உள்ளது என்கிறார்கள். 
788 - 820 AC கால கட்டத்தில் வாழ்ந்திருந்த ஆதி சங்கரர் ஹிமயமலைப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டு இருந்த நேரத்தில் இந்த ஆலயம் தற்போது உள்ள மலைக் குன்று போன்ற இடத்தில் இருந்த சிறு குகையில் தங்கி இருந்தவாறு காஷ்மீரத்தில் சனாதன தர்ம பரிபாலனங்களை பரப்பி  வந்துள்ளார். அந்த கட்டத்தில் அந்தப் பகுதிகளில் புத்த மதம் பெருமளவில் பரவத் துவங்கி இந்து மதத்தைப் பின்னுக்கு தள்ளத் துவங்கியது. ஆகவே இந்து மதம் அழியக் கூடாது என்று எண்ணிய ஆதி சங்கரர், இங்கு வந்து அங்கேயே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அந்த குகையில் தவம் இருந்து ஹிந்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டவும், சிவபெருமானின் பெருமைகளைப் பரப்பவும் முயற்சிகளை மேற்கொண்டாராம்.

ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் 
படத்திற்கு நன்றி : CVB   நியூஸ் சர்விஸ் 
 
 அவர் நிறுவிய அதே சிவலிங்கம்தான் தற்போது ஆலயத்தில் உள்ளது என்று நம்புகிறார்கள். ஆகவே முதலில் இந்த ஆலயம் சிவபெருமானின் ஆலயமாகவே கருதப்பட்டு இருந்தது. ஆனால் ஆதி சங்கரர் அங்கு தங்கி இருந்ததினால் அவரை கௌரவிக்கும் விதத்தில் அந்த ஆலயத்தின் பெயரை சங்கராச்சாரியார் ஆலயம் என மாற்றி விட்டார்கள். அப்படி புனர் பெயரிடப்பட்ட கால கட்டங்களோ, பிற விவரங்களோ யாருக்கும் சரிவரத் தெரியவில்லை. ஆனால் அந்த ஆலயத்திற்கான மின்சார வசதி 1925 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்டு உள்ளது.
இன்னொரு செய்தியின்படி ஆதிசங்கரர் இந்த குகையில் வந்து தவம் இருந்தப் பின்னரே பூரண ஞானம் அடைந்தார் என்றும் கூறுகிறார்கள். மலை மீது தக்கீ சுலைமான் (Takhte-i-Sulaiman) என்ற இடத்தில் உள்ள இந்த ஆலயத்திற்குச் செல்ல சுமார் நூறு படிகளை ஏறிச் செல்ல வேண்டும். பக்தர்கள் எளிதில் அந்த ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால் உந்தப்பட்டு அந்தப் படிக்கட்டுக்களை டோக்ரா பகுதியின் அரசராக இருந்த மகாராஜா குலாப் சிங் என்பவரே அமைத்துத் தந்துள்ளார். 
 
ஆலய  தரிசனத்திற்குச்   செல்லும் மக்கள் 
படத்திற்கு நன்றி : CVB  நியூஸ் சர்விஸ் 

சிவபெருமானுக்காக கட்டப்பட்ட காஷ்மீரத்தின் மிகப் பழமையான இந்த ஆலயம் பலமுறை பழுது பார்க்கப்பட்டும் உள்ளது. இரண்டுமுறை அங்கு நிகழ்ந்த பூகம்பத்தினால் ஆலயம் முற்றிலும் அழியவில்லை என்றாலும், சிறிதளவு சேதம் ஏற்பட்டது என்பதினால் சரித்திரப் புகழ் பெற்ற இந்த ஆலயம் பழுது பார்க்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் உள்ளே பூஜையில் மக்கள் 
படத்திற்கு நன்றி :  CVB  நியூஸ் சர்விஸ்

இந்த ஆலயம் மதப் பெருமை மட்டும் பெற்றிருக்கவில்லை. அதில் காணப்படும் கலை அழகு சொட்டும் கட்டிடக் கலையும் அதற்குப் பெருமை சேர்க்கின்றது. ஒரு மிகப் பெரிய எட்டுமுக பீடம் அந்த ஆலயத்தை தாங்கி நிற்கின்றது. ஆலயத்திற்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுக்களின் இருபுறத்திலும் பல குறிப்புக்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. ஆலயத்தின் உட்புறம் பெர்ஷிய மொழியில் எழுதப்பட்டு உள்ள குறிப்புக்கள் மாபெரும் மன்னனான ஷாஜகான் காலத்தை  சேர்ந்தவையாம். அந்த ஆலயத்தின் மீது நின்றபடிப் பார்த்தால் காஷ்மீர் மானிலத்து இயற்கை காட்சிகள் அற்புதமாகத் தெரியும். ஆலயம் தற்பொழுது பழுது பார்க்கப்பட்டு நல்ல மேற்கூறையுடன் அமைக்கப்பட்டு உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள இந்த ஆலயம் ஆதி சங்கரருக்குப் பெருமை சேர்க்கும் ஆலயம் என்பதில் ஐயம் இல்லை.

Monday, May 21, 2012

Poovarasankuppam- Lashmi Narasimmar Temple

பூவரசன்குப்பம் 
லஷ்மி நரசிம்மர் ஆலயம்
 
சாந்திப்பிரியா

விழுப்புரத்தின் அருகில் உள்ள பூவரசன் குப்பத்தில் உள்ள லஷ்மி நரசிம்மர் ஆலயம் தெற்கு அபிலோகம் எனக் கூறப்படும் அளவுக்கு புகழ் பெற்றது. இது 1200 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தின் ஆலயம் என்கிறார்கள். இங்கு ஏழு முனிவர்களான சப்த ரிஷிகளுக்கு நரசிம்மர் காட்சி தந்தாராம்.
ஹிரண்யகசிபுவைக் கொன்ற பாதி மனித பாதி மிருக உடலைக் கொண்ட நரசிம்மர் தன்னை வேண்டி தவம் இருந்த முனிவர்களுக்குக் காட்சி தர தெற்கு நோக்கி வந்தபோது பூவரசன்குப்பத்தின் அருகில் அவர்களுக்குக் காட்சி தந்தார். ஆனால் அவர்களால் உக்ரஹ அவதாரத்தில் இருந்த நரசிம்மரை தரிசிக்க முடியவில்லை. காரணம் அத்தனை சூடாக அந்த பூமியே தகித்ததாம். ஆகவே அவர்கள் அவரது துணைவியாரான அமிருதவல்லித் தாயாரிடம் பெருமானை தாங்கள் தரிசனம் செய்ய வசதியாக இருக்க அவர் கோபத்தை தணிக்குமாறு வேண்டிக் கொள்ள தாயாரும் அவர் மடியில் சென்று அமர்ந்து கொண்டாள். ஒரு கண்ணால் நரசிம்மரையும் இன்னொரு கண்ணால் முனிவர்களையும் பார்த்துக் கொண்டு இடது தொடை மீது அமர்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்த தாயாரை நரசிம்மரும் நோக்க அவர் உக்ரஹத்தை தாயார் அப்படியே உறிஞ்சிக் கொண்டு விட நரசிம்மரின் கோபம் அடங்கியது. முனிவர்கள் ஆனந்தம் அடைந்து அவரை மனமார தரிசித்தார்கள். அது முதல் நரசிம்மர் அதே கோலத்தில் இருந்தபடி அங்கேயே ஒரு ஆலயத்தில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

 பூவரசன் ஆலயத்து லஷ்மி நரசிம்மர் 

இந்த ஆலயம் இந்த இடத்தில் எழும்பக் காரணமாக இருந்த சம்பவத்தைக் கூறும் ஒரு புராணக் கதை இது.
5 ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த ஒரு பல்லவ மன்னன் ஜைன மதத்தை தழுவத் துவங்கி தென் நாட்டில் இருந்த சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்களை இடித்துத் தள்ளத் துவங்கினார். அரசவை பண்டிதர்கள் எவ்வளோ தடுத்தும் அதை அவன் கேட்கவில்லை. அப்போது பூவரசன்குப்பப் பகுதியையும் சேர்த்து ஆண்டு வந்த அந்த மன்னன் தான் மேற்கொண்டு இருந்த சைவ, வைஷ்ணவ வழிபாட்டுத் தலங்களின் எதிர்ப்பு நிலையைக் கண்டித்த நரஹரி என்ற முனிவரை சிறை வைத்து விட்டதும் அல்லாமல் அவரைக் கொன்று விடவும் உத்தரவு இட்டான். அதனால் கோபமுற்ற . அந்த முனிவரும் அவனுக்கு பிரும்மஹத்தி தோஷம் ஏற்படட்டும் என சாபமிட்டப் பின் அங்கிருந்து தமது யோக சக்தியால் மறைந்து விட்டார்.
காலம் ஓடியது . அதன் பின் பல பிரச்சனைகள் அந்த மன்னனை சூழ்ந்து கொள்ள அவனுடைய ராஜ ரிஷிகள் இதுவே தக்க தருமணம் என நினைத்து அவனிடம் அவன் மேற்கொண்டு இருந்த சைவ, வைஷ்ணவ ஆலய எதிப்பு நிலையை எடுத்துக் காட்டி அதைக் கைவிடுமாறு மீண்டும் அறிவுறுத்தினார்கள். பிரச்சனைகள் தலைக்கு மேல் சென்று கொண்டிருந்த நிலையில் தான் செய்த தவறுகளை அந்த மன்னன் எண்ணிப் பார்க்கத் துவங்கினான். தன்னுடைய தவறை உணர்ந்தவன் தான் செய்த தவறுகளை மன்னிக்குமாறு சைவ மற்றும் வைஷ்ணவ ஆலயங்களுக்குச் சென்று அங்கு இருந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டான்.
  பூவரசன் ஆலயத்து ஹனுமான் சன்னதி 

இப்படியாக இருக்க ஒரு நாள் படுத்து உறங்கிக்கொண்டு அவன் கனவில் தோன்றிய நரசிம்மர் அந்த முனிவரே நேரில் வந்து அவனை ஆசிர்வதித்தால்தான் அவனுக்கு ஏற்பட்ட சாபம் களையும் என்று கூறி விட்டு மறைந்தார். ஆகவே அந்த மன்னனும் அந்த முனிவரை தானே தேடி அலையத் துவங்கினான். அப்படி அலைந்தபோது ஒருநாள் இந்த ஆலயம் உள்ள இடத்தில் இருந்த ஒரு பூவரச மரத்தடியில் உறங்கிக் கொண்டு இருந்த மன்னனின் மீது அந்த மரத்தில் இலை பொத் என்று விழுந்தது. பயந்துபோய் எழுந்த மன்னன் அதில் லஷ்மி நரசிம்மரின் உருவைக் கண்டான். அதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி அமர்ந்து கொண்டு இருந்த மன்னன் முன்னால் அந்த முனிவரும் எங்கிருந்தோ வந்து நின்றார். அப்படியே அந்த முனிவரின் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்ட மன்னனின் சாபத்தை அந்த முனிவரும் விலக்கி விட அதே இடத்தில் அந்த மன்னன் இந்த லஷ்மி நரசிம்மரின் ஆலயத்தையும் அமைத்தான்.

அற்புதமான லஷ்மி நரசிம்மர் தஞ்சாவூர் படம்  நன்றி :

இந்த ஆலயம் விழுப்புரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அல்லது பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் கோலியனூர் சாலையை அடைந்து அங்கிருந்து வளவனூர் எனும் சிறு ஊரை அடைந்து இந்த ஆலயம் உள்ள பூவரசன்குப்பத்தை அடையலாம். நல்ல சாலை உள்ளதினால் காரிலேயே செல்ல முடியும். விழுப்புரத்தில் இருந்து பூவரசன் குப்பம் செல்ல நேரடி பஸ்களும் நிறையவே உள்ளன. கடலூரில் இருந்து சென்றால் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்தை விரைவாகவே அடையலாம். ஆலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணிவரையும் திறந்து இருக்கும்.

ஆலய விவரங்களுக்கு தொடர்ப்புக் கொள்ள
Parthasarathy Bhattar @ 94439 59995 or 0413 2698191