Saturday, June 30, 2012

Selva Sannithiyan Murugan Temple- Sri Lanka

சன்னிதியான் எனும் ஸ்ரீ செல்வ சன்னிதி 
ஸ்ரீ லங்காவின் முருகன் ஆலயம்
சாந்திப்பிரியா


ஸ்ரீ லங்காவில் பல தமிழ் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சில வரலாற்று சிறப்பு மிக்கவை.  ஸ்ரீ லங்காவில்தான்  முருகப் பெருமான் வள்ளித் தேவியை சந்தித்தார் என்றும், அங்குதான் ஆவலுடன் அவருக்கு காதல் ஏற்பட்டு அவரை மணந்தார் என்பதும்  புராணங்களில் கூட நம்பிக்கையாக இருந்துள்ளது என்பதின் காரணம் உலகிலேயே அங்கு உள்ள மலைப் பிரதேசத்தில்தான்  வள்ளியின் பெற்றோர்களான வேதாஸ் எனப்பட்ட வேடவர்களின்  இனத்தினர் உள்ளதாகவும், அதனால்தான் வள்ளி தேவி அங்கு வளர்ந்தவர் என்றும் நம்புகிறார்கள்.  இப்படியான நம்பிக்கையினால் ஸ்ரீ லங்கா முருகன் ஆலயங்களில் வள்ளி தேவிக்கே பிரதான இடம் உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த நாட்டின் குழப்பமான அரசியல் நிலைமையினால் அவை அதிகம் அறியப்படாமல் இருந்துவிட்டது. அப்படி உள்ள சில ஆலயங்களில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் என்பது விளங்குகின்றது.  இந்த ஆலயம் ஸ்ரீ லங்காவின் தென் பகுதியில் நல்லூருக்கு அருகில்  உள்ள தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது . இதன் தோற்றம், அமைப்பு, மற்றும் வழிபாட்டு முறை என அனைத்துமே தனித் தன்மைக் கொண்டனவாக உள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பான மற்றும் தனித் தன்மைக் கொண்ட அம்சம்  என்ன என்றால் கந்தஸ்வாமி என அழைக்கப்படும் முருகன் இங்கு வேல் வடிவில் மட்டுமே வழிபடப்படுகிறார் என்பதே . அவருக்கு அங்கு முருக உருவிலான வேறு சிலை அமைக்கப்படவில்லை. ஞான சக்தியைக் குறிக்கும் ஆயுதமான வேல் என்பது ஒருவருக்கு உபதேசமும் முக்தியையும் தரும் சின்னம் ஆகும். ஆகவேதான் செல்வ சன்னிதியானின் ஆலயத்திலும் வேலவனை இந்த வேல் என்ற சின்னத்தில் வழிபடுகிறார்கள்.
 

செல்வசன்னிதி ஆலய வழிபாடு வினோதமானது. முருகனின் அருளைப் பெற அங்கு வருகைத் தரும் பக்தர்களின் சமய ஈடுபாடும், தெய்வ பக்தியுமே முன்னிலைப்படுத்தப்பட்டு ஆகம வழிபாட்டு முறைகளும் வழக்கங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளது. ஆலயத்துக்கு வரும் பக்தர்களே பூஜைகளை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.  அவர்களை முன்னிலைப்படுத்தி வைத்துக் கொண்டு  அங்குள்ள ஆலயப் பண்டிதர் தமது வாயை மெல்லிய துணியால் மூடிக் கொண்டு பூஜைகளை செய்கிறார். ஆனால் மந்திரங்கள்  எதுவும் ஓதப்படுவது இல்லை. 
 
ஆலய மேற்கூரையின் சித்திரம் 

இந்த ஆலயத்தில் (செல்வசன்னிதி) உள்ள வேல் இலங்கையின் இன்னொரு பகுதியில் உள்ள கதிர்காமனில் உள்ள கதிர்காமக் கடவுள் எனக் கூறப்படும் முருகனின் ஆலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது . கதிர்காமன் எனும் ஆலயத்திலும் முருகப் பெருமானை வேல் வடிவிலேயே வணங்குகிறார்கள். கதிர்காமனில் நடைபெறும் வருடாந்தர கொடியேற்ற விழாவின்போது செல்வசன்னதி ஆலயத்தில் இருந்து முருகனை கதிர்காமனுக்கு எடுத்துச் செல்வார்கள். அங்கு நடைபெறும் கடைசி நாள் விழாவான தீர்த்த விழா முடிவடைந்ததும், அதை மீண்டும் கொண்டு வருவார்கள். அது போலவே கதிர்காமனில் படைக்கப்படும் தினை மாவில் தேனைக் கலந்து செய்யப்படும் மாவிளக்கைப் போலவே இங்கும் அதை படைக்கின்றார்கள் . அந்த மாவின் மீது சிறு விளக்கை ஏற்றி வைத்து வழிபட்டப் பின் அந்த விளக்குகள் அணைந்ததும்  அந்த மாவை பிரசாதமாக அங்குள்ள பக்தர்களுக்குத் தருவார்கள்.  அன்று  பன்னிரண்டு திரிகளைக் கொண்ட விளக்குகளை ஏற்றுவார்களாம்.  பன்னிரண்டு திரிகளும், முருகனின் பன்னிரண்டு கைகளைக் குறிக்குமாம். இந்த ஆலயத்தில் பெரிய இலைகளை கீழே வைத்து  அதன் மீதுதான் பிரசாதமாக தரப்படும் உணவை கொட்டி வைத்து பூஜை செய்கிறார்கள். அதன் பின் அந்த உணவை பிரசாதமாக அங்குள்ளவர்களுக்குத் தருவார்களாம்.
ஜாப்னா பிராந்தியத்தில் பல சன்யாசிகளுக்கு இந்த ஆலயத்தின் பக்கத்தில் அமைந்து உள்ள பல மடங்களே தியானம் செய்யவும், தங்குவதற்கான புகலிடமாகவும் உள்ளது. இங்கு வந்து வேண்டினால் பக்தர்கள் கேட்டதை  முருகன் தருகிறார் என்றே அங்கு வரும் பக்தர்களின் எண்ணமாக உள்ளது .
அந்த ஆலயம் குறித்து ஆதாரபூர்வமான செய்திகள் இல்ல. ஆனால் இந்த ஆலயத்தின் வரலாற்றைக் குறித்து கர்ண பரம்பரையாக கூறப்பட்டு வரும் கதை இது.  தற்போது தொண்டைமானாறு என்ற பெயரில் ஓடும் நதி முன்னர் வல்லி நதி என்ற பெயரைக் கொண்டு இருந்ததாம். அந்த நதியை ஒட்டி இருந்த இடங்கள் வல்லை வெளி என்று அழைக்கப்பட்டு வந்திருந்தன.  அப்போது அந்தப் பகுதியை ஆண்டு வந்த மன்னன் அந்த நதியின் ஒரு முனையை கடல் நீர் கலக்கும் வகையில் வெட்டி விட ஏற்பாடு செய்தார். அதற்குக் காரணம் அந்த நதியின் நீருடன் உப்பு நீரான கடல் நீர் கலந்து வந்தால், அந்த ஆற்றின் கரைகளில் தண்ணீரைத் தேக்கி நிறைய உப்பு உற்பத்தி செய்ய முடியும் (உப்பளம்), அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருத்தும் உதவும் என்ற எண்ணத்துடன் அந்த  மன்னனின் பிரதிநிதியான தொண்டைமான் என்பவர் அந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக வல்லுனர்கள் கருத்து கொண்டுள்ளார்கள். இன்னொரு கதையின்படி  அந்த தொண்டைமான் என்பவரும் அந்தப் பகுதியில் இருந்த மன்னரே என்றும் கூறுகிறார்கள். அது முதல் அவர் பெயரிலேயே அந்த நதியானது தொண்டைமான் ஆறு என ஆகி காலப்போக்கில் அது மருவி தொண்டைமன்னாறு என்று ஆகி விட்டது. அதனால் அந்த ஆற்றைத் தொட்டு இருந்தப் பகுதியும் அதே பெயரை அடைந்தது.
 
ஊர்வலத்தில் முருகன் 

அந்த ஆற்றுக் கரை ஓரங்களில் இருந்த பெரும்பான்மை இனத்தவர் பிராமணர்கள் அல்லாத குருகுலத்தவர் என்பார்கள். அந்த குருகுலத்தவர் இங்கு தமக்கு வழிபாட்டுத் தளம் தேவை என எண்ணி  சிறிய ஆலயம் ஒன்றினை இங்கு அமைத்து அதில் முதலில் வேல் ஒன்றை வைத்து வழிபாட்டு வந்துள்ளார்கள். அவர்கள் முருகப் பெருமானை குறிக்கும் சின்னமாக வேலை அமைத்ததின் காரணம் அப்போது அங்கு பரவத் துவங்கி வந்த முருக பக்தி வழிபாட்டு மரபே. அந்த வேலை அவர்கள் கந்தஸ்வாமி என்று அழைத்தார்கள். அது மட்டும் அல்ல ஆற்றுக் கரையின் பக்கத்தில் இருந்த ஆலயத்தில் முருகப் பெருமான் இருந்ததினால் அவரை கல்லோடையான் அதாவது ஓடும் ஆற்றுக் கரையில் கல்லாக அமார்ந்தவர் என்ற பொருளில் அழைத்தார்களாம். ஆகவே அதை சுற்றி இருந்த அந்த இடம் கல்லோடை என அழைக்கப்பட்டது. அவருக்கு ஆற்றங்கரை வேலன் என்ற பெயரும் இருந்தது. அந்த நதிக்கரையில் முருகன் ஆலயம் அமைந்ததற்கான இன்னொரு காரணமும் உண்டு. தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மனையும், அவனுடைய சகோதரர்களையும் அழித்தால் ஒழிய தமக்கு விமோசனம் கிடையாது என்பதை உணர்ந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது துயரங்களைக் களையுமாறு வேண்டிக் கொள்ள அவர் முருகனைப் படைத்தார். முருகப் பெருமான் தேவ படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது தனக்கு யுத்தத்தில் உதவி செய்வதற்காக வீரவாகு எனும் கணத்தைப் படைத்துக் கொண்டார். வீரவாகு நல்ல பராக்கிரமசாலி.  சூரனை அழிக்க முருகன் கிளம்பிச் சென்றபோது, யுத்த நெறியாக அவர்  முதலில் வீரவாகுதேவரை மகேந்திரபுரி எனும் இடத்தில் தங்கி இருந்த சூரனிடம் தூதுவராக அனுப்பி அவன் சிறைப் பிடித்து வைத்திருந்த தேவர்களை விடுதலை செய்யுமாறு கூறினார். ஆகவே மகேந்திரபுரிக்குக் கிளம்பிச் சென்ற தூதுவரான  வீரவாகு தேவர் முதல் முதலாக வட இலங்கையின் வல்லி நதிக் கரையில் இருந்த கல்லோடை வழியே சென்றார். அப்போது  அவர் காலடி தடம் அங்கும் பதிந்தது.  சூரனிடம் சென்ற வீரவாகு தமது முயற்சியில் தோல்வியை அடைந்து திரும்பி வந்தார். திரும்பி வந்த வழியில்  இங்கு வந்தபோது மாலை சந்தியாகாலம் ஆயிற்று. உடனே அவர் அந்த நதிக்கரை அருகிலேயே அமர்ந்து கொண்டு முருகனை நினைத்து சந்தியகால வந்தனம் செய்தார்.  அவர் அங்கு வழிபட்டபோது அங்கு முருகன்  வந்து காட்சி அளித்தார். அது முதல் உள்ளூர் மக்களுக்கு  அதிக செல்வம் பெருகத் (உப்பளம் மூலம் ) துவங்கியதாம். அப்படி வீரவாகு வந்தனம் செய்த இடத்திலேயே பின்னர் உருவமற்ற முருகனுக்கு  முதலில் ஒரு சன்னதி அமைத்து வழிபட்டார்கள். பின்னர் தமக்கு செல்வத்தை தந்து கொண்டு இருந்த அந்த சன்னதியை  பெரிய ஆலயமாகவும் பிற்காலத்தில் உரு மாற்றினார்களாம்.  ஆகவேதான் செல்வத்தை தந்து கொண்டு இருந்த இடத்தில் ஒரு சன்னிதியை அமைத்து  வீரவாகு தேவர்  வழிபட்ட இடத்தில் அமைந்திருந்த அந்த ஆலயத்தை செல்வ சந்நிதியான் என்ற பெயரில் அழைக்கத் துவங்கியதாக நம்புகிறார்கள். இந்த ஆலயத்தில் வந்து வணங்குபவர்களுக்கு சகல செல்வமும் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக இருந்தது. 
 
வீரவாகு தேவரின் காலடித்தளம் 

இன்னொரு சிறப்பான அம்சம் என்ன என்றால் வீரவாகுதேவர் இங்கு காலடி வைத்துச் சென்றதாகக் கூறப்பட்ட இடத்தில் அவருடைய பாத சுவடுகளை பதிந்துள்ளதாகவும், அவற்றை இன்றும் ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் காண முடியும் என்று கூறுகிறார்கள்.
இந்த ஆலயத்தின் சிறப்பை கூற இன்னொரு கதையும் உண்டு. ஒருமுறை தேவலோகத்தில் இருந்த ஐராவசு என்ற முனிவர் வியாழ பகவானினால் ஒரு சாபத்தைப் பெற்று இருந்தது. அந்த சாபம் விலக வேண்டுமானால் அது பூமியில் சென்று ஒரு யானையாக பிறந்து  சிகண்டி என்ற முனிவர் மூலம் சாப விமோசனம் பெறவேண்டும் என்ற  விதி இருந்தது. அந்த சாபத்தின்படி ஐராவத முனிவரும்  இலங்கையில் இருந்த கதிர்காமன் எனும் பகுதியில் இருந்த காட்டில் யானையாகப் பிறந்து இருந்தார். அப்போது ஒருமுறை அந்த வனப்பகுதியின் வழியே கதிர்காமனை தரிசிக்கச் சென்று கொண்டு இருந்த சிகண்டி முனிவரின் சீடர்களை அந்த யானை மதம் கொண்டு தாக்க முயன்றபோது, முருகனை நினைத்துக் கொண்டு, அந்தக் காட்டில் இருந்த ஒரு வெற்றிலையைக் கிள்ளி  அதன் மீது சிகண்டி முனிவர் எறிய அது ஒரு வேலாக மாறி அந்த யானையைத் தாக்கிக் கொன்றது. அத்துடன் அந்த யானை உருவில் இருந்த ஐராவு முனிவரின் சாபமும் விலக அவர் சிகண்டி முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கி  தனது பூர்வ ஜென்மக் கதையைக் கூறி தனக்கு முக்தி கிடைக்க ஒரு வழி கூறுமாறு வேண்டினார். சிகண்டி முனிவரும் வல்லி நதிக்கு அருகில் வீரவாகுதேவர் முருகப் பெருமானை வழிபட்ட இடத்தைக் கூறி அங்கு  சென்று வழிபாட்டு முக்தி பெருமாறுக் கூறினார். அவர் கூறிய அறிவுரையை ஏற்று செல்வசந்நிதியான் ஆலயத்தின் அருகில் வந்த ஐராவு முனிவர் அங்கிருந்த பூவரசு மரத்தின் அடியில் முருகப் பெருமானை நினைத்து தவம் இருந்து முக்தி அடைந்தார். அந்தப் பூவரசம்மரமானது தெய்வத்தன்மை பெற்றது. அந்த முனிவர் முத்தியடைந்து சமாதி அடைந்த பூவரசமரத்து அடிதான் வீராகு தேவர் சந்திக்கடன் செய்த இடமும் ஆகும். இன்று அந்த இடத்திலேயே கந்தப்பெருமான் வேல் ரூபத்தில் அந்த ஆலயத்தில் குடி கொண்டுள்ளார்.
இதற்கிடையில் கதிர்காமனுக்குச் சென்ற கதிர்காமர் என்ற பெயரைக் கொண்ட ஒரு முருக பக்தருக்கு கதிர்காமனில் முருகனின் சின்னமான வேல் ஒன்று பரிசாகக் கிடைத்தது. அவர் அதை இங்கு கொண்டு வந்து ஆலயத்து மாடத்தில் (மேற்கூரை போடப்பட்ட திறந்தவெளி) வைத்து தின பூஜைகளை செய்து வந்தார். சில நாட்களுக்குப் பிறகு கதிர்காமரையே  அந்த ஆலயத்தை நிர்வாகித்து வர  அனுமதித்தார்கள்.
இன்று  செல்வ சன்னிதி முருகன் ஆலயத்தை  சுற்றி இன்னொரு ஆலயமும், சில மடங்களும் தோன்றி உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், துறவிகளும் இந்த ஆலயத்துக்கு வருகை தருகிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமன்னார் உப்பளம்  இந்த ஆலய தலத்திற்கு மேன்மை சேர்க்கின்றது.  ஆலயத்தை சுற்றி உள்ள மடங்களில் அந்த ஆலயத்திற்கு வருகைத் தரும் துறவிகள் உணவருந்த எந்த நேரத்திலும் உணவு கிடைக்கின்றது. அங்கு வருகை தரும் சில பக்தர்கள், இறைவன் அருளினால் தம்முடையக் கோரிக்கைகள் நிறைவேறியதை கொண்டாடும் வகையில் அன்னதானமும் செய்கிறார்கள். அதனால்தான் வருடம் முழுவதுமே அங்குள்ள அனைத்து மடங்களிலும் யார் வந்து தங்கினாலும் அவர்களுக்கு  உணவு இலவசமாகவே கிடைக்கின்றது.  இந்த ஆலயம் அன்னதான  கைங்கர்யத்திற்கு பெயர் போனதாக இருப்பதினால் அங்குள்ள ஆலய முருகனை அன்னதான முருகன் என்றே அழைக்கின்றார்கள். இந்த ஆலய விழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்:
காவடி மற்றும் கரக ஆட்டம்,  குழந்தைகளை தத்து எடுப்பது, தத்து கொடுப்பது, தலையை மொட்டை அடித்தல், தலையில் பால் குடத்தை ஏந்திச் செல்லுதல், கற்பூர குடத்தை (குடத்தில் எரிந்து கொண்டிருக்கும் கற்பூரம் ) ஏந்திச் செல்வது, ஆலயத்தை சுற்றி அங்கப் பிரதர்ஷனம் செய்வது,  காது குத்துதல், குழந்தைக்கு முதலாம் அன்னப் பிராயச்சனம் செய்வது போன்றவை .

Jalasayana- Vishnu Temple, Katmandu

ஜலசயனா- - காட்மாண்டு
படுத்த நிலையில் உள்ள விஷ்ணு ஆலயம்

சாந்திப்பிரியாஎனக்கு சுகன்யா என்ற சாயி பக்தர் சமீபத்தில் அவர் மேற்கொண்டு இருந்த யாத்திரையில் காட்மாண்டுவில் கண்ட ஆலயம் ஒன்றின் செய்தியை அனுப்பி இருந்தார். அதனுடன் மேலும் கிடைத்த செய்திகளை சேர்த்து அதை அனைவருடனும் பங்கீட்டுக் கொள்கிறேன். நன்றி சுகன்யா...நன்றி. ஏரியில் படுத்துள்ள விஷ்ணுவின் சிலையை தத்ரூபமாகக் காட்டும் படம் அற்புதம்.
காட்மாண்டுவின் வடக்கு பகுதியில் உள்ள சிவபுரி மலைப் பள்ளத்தாக்குப் பக்தியில் உள்ளது புத்தநீல்கண்டா எனும் விஷ்ணுவின் ஆலயம். இதன் அர்த்தம் பழைய நீல நிற தொண்டை என்பது. ஆலயம் நகரின் மையப் பகுதியில் இருந்து சுமார் எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நகரில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அங்கு செல்ல பஸ்கள் உள்ளன. காட்மாண்டுவில் தங்கிக் கொண்டால் இந்த ஆலயத்தில் தரிசனம் செய்தப் பின் அங்கிருந்து பசுபதிநாதர் ஆலயம், ஸ்வயம்புநாத் எனும் புத்தநாத் மற்றும் குகேஸ்வரி போன்ற ஆலயங்களுக்கும் சென்று தரிசிக்கலாம்.
இந்த ஆலயத்தில் உள்ள மூர்த்தி ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாம். விஷ்ணு குப்தா என்ற லிச்சாவி வம்ச மன்னர் காலத்தில் இந்த சிலை செய்யப்பட்டு உள்ளதாம். நாற்பத்தி மூன்று அடி (43 அடி ) நீளமான ஒரு செயற்கைக் குளத்தில் பதினேழரை (17 அடி ) அடி நீளமான விஷ்ணுவின் சிலைக் காணப்படுகிறது. பாற்கடலில் ஆயிரம் தலை ஆதிசேஷன் மீது விஷ்ணு பகவான் படுத்து இருந்ததைப் போலவே பதினோரு தலை ஆதிசேஷன் மீது படுத்த காட்சியில் செதுக்கப்பட்டு உள்ள நிலையில் விஷ்ணு காணப்படுகிறார். கால்களை மடித்து வைத்தவாறு படுத்துக் கொண்டு இருக்கும் விஷ்ணுவின் நான்கு கைகளில் அவருடைய சின்னமான சங்கு, சக்கரம், தாமரை மலர் மற்றும் கதை போன்றவை உள்ளன. அதை செதுக்கி உள்ள கல்லைப் போன்ற கல் அந்த நாட்டில் வேறு எங்குமே கிடைக்கவில்லையாம். இந்த சிலை எட்டாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
இந்த சிலை கிடைத்தக் கதை ஒன்றை அங்குள்ளவர்கள் கூறுகிறார்களாம். எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த அந்த சிலைக் காணாமல் போய் விட்டது. ஒருமுறை அந்தப் பகுதியில் இருந்த ஒரு கணவனும், மனைவியும் நிலத்தை உழுது கொண்டு இருந்தபோது அவர்களது கலப்பை எதோ பாறை ஒன்றின் மீது இடித்ததைப் போல சப்தம் கொடுத்தது. ஓரளவு தெரிந்த ஒரு கல் பாறையில் ரத்தமும் இருந்தது. ஆகவே அதை மேலும் தோண்டிப் பார்த்தபோது அவர்கள் இந்த சிலையைக் கண்டார்கள். பின்னர் உள்ளூர் மக்களின் உதவியுடன் ஆலயம் அமைத்து உள்ளார்கள்.


ஆனால் இது குறித்த இன்னொரு செய்தியும் உள்ளது. அந்த நாட்டை ஆண்டு வந்த பிரதாப மல்லா எனும் மன்னனுக்கு கனவில் வந்த விஷ்ணு தனக்கு ஒரு ஆலயத்தை இங்கு அமைக்குமாறு கூறியதினால் பூமியில் இருந்து கிடைத்த அந்த சிலையைக் கொண்டு இந்த ஆலயத்தை அவர் நிறுவினார் என்றும் கூறுகிறார்கள். இன்னொரு விசேஷமான செய்தி என்ன என்றால் இந்த நாட்டை சேர்ந்த மன்னர்கள் தாம் ஆட்சியில் இருக்கும்போது இந்த ஆலயத்துக்கு செல்ல மாட்டார்களாம். அப்படி சென்றுவிட்டுத் திரும்பினால் அவர்கள் அழிவை சந்திப்பார்கள் என்பது நம்பிக்கையாம் . அந்த நூற்றாண்டிலேயே செதுக்கப்பட்டு உள்ள மூன்று விஷ்ணுவின் சிலைகளில் ஒன்று இந்த ஆலயத்தில் இருக்க, அதை மன்னர்கள் பார்க்க இயலாது என்பதினால் மற்ற இரண்டையும் பாலாஜு கார்டன் என்ற பொது இடத்திலும் மூன்றாவதை மன்னர்களின் அரண்மனையிலும் வைத்து இருக்கின்றார்கள்.
இன்னொரு செய்தி என்ன என்றால், நீலத் தொண்டை என்பது சிவபெருமானைக் குறிப்பது. ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் தொண்டை நீல நிறமாயிற்று. அந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல் போனவர் கோசைன்குண்ட் என்ற நதியில் வந்து படுத்துக் கொண்டார் என்றும் , அங்கிருந்து தண்ணீர் இங்கு வருவதினால் அதற்கு பழைய நீலத் தொண்டை என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இந்த ஆலயத்தில் படிக்கட்டில் இறங்கி விஷ்ணுவின் கால்களைத் தொட்டு வணங்க இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. பிற மதத்தவர்களுக்கு அந்த அனுமதி கிடையாது. தூரத்தில் இருந்து மட்டுமே அவரை தரிசிக்க முடியும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வரும் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து கலந்து கொள்கிறார்கள். அப்போது வரும் ஹரிபோதிசினி ஏகாதசி தினத்தன்று விஷ்ணு விழித்தெழுந்து கொள்வதாக நம்புகிறார்கள். இந்த விஷ்ணுவை ஜலசயனா என்றும் அழைக்கின்றார்கள்.

Wednesday, June 27, 2012

Ramanujar and temple priest

ஆறுவது சினம் 
 
சாந்திப்பிரியா 
 

திருவரங்க ஆலயம் ரங்கநாதப் பெருமாளுக்கு உகந்த ஆலயம். அந்த ஆலயத்தில் ஒரு பண்டிதர் இருந்தார். அவர் நல்லவர் அல்ல. பொய் பித்தலாட்டன்களை  நிறையவே செய்து வந்தவர். அவருடைய வாழ்கையின் குறிகோள் எத்தனை விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டுமோ அத்தனை விரைவாக சம்பாதிக்க வேண்டும். பணம் எந்த வழியில் வந்தாலும் அவருக்கு திருப்தியே.  வெளிக்கு மக்களுக்கு நல்வழிப்  போதனைகளை நிறையவே செய்வார். ஆனால் அவர் வாழ்க்கையோ முற்றிலும் மாறாக இருந்ததினால் மக்கள் அவர் மீது மரியாதையை இழந்து கொண்டே இருந்தார்கள். அர்ச்சகரின் வயதும் ஏறிக்  கொண்டே இருந்தாலும் அறிவு மட்டும் வளரவே இல்லை.
ஒருமுறை அந்த ஊருக்கு ராமானுஜர்  விஜயம் செய்து சொற்பொழிவுகளை ஆற்றி  வரலானார் . அவர் வந்ததினால் ராமானுஜரின் புகழ் பரவி அர்ச்சகரின் பெருமையும் வருமானமும்  குறையலாயிற்று.  ராமானுஜர் போதானைகளை ஏற்ற மக்கள் ஆலய அர்ச்சகரின் போதனைகளை தள்ளி வைத்தார்கள். ஆகவே அந்த அர்ச்சகர் ராமானுஜரை தமது முதல் எதிரியாகக் கருதி அவர் உயிருடன் இருக்கும்வரை தனக்கு மதிப்பு இருக்காது என்று  கோபமுற்று அவரை கொன்று விட முடிவு செய்தார். ஆனால் வெளியிலோ ராமானுஜரை மிகவும் மதிப்பவர் போல நாடகம் ஆடிக் கொண்டு இருந்தார். ஒருநாள் தனது மனைவியிடம்  ராமானுஜர் அடுத்த ஊருக்கு சென்று விட்டு வர உள்ளதாகவும், ஆகவே ஊருக்குப் போகும் முன்  தான் ராமானுஜரை வீட்டிற்கு சாப்பிட அழைக்க உள்ளதாகவும் அவருக்கு பரிமாறும் உணவில் தான் தரும் விஷத்தைக் கலந்து பறிமாறி விடுமாறும் , உணவு அருந்தியதும்  கிளம்பிச் செல்லும் ராமானுஜரை அந்த விஷம் நான்கு அல்லது ஐந்து மணி நேரத்தில் சாகடித்து விடும்  என்றும், வழியில் இறந்து விட்டால் அது யாருக்கும் அதன் காரணம்  தெரிய வராது என்றும்  கூறினார். அதைக் கேட்ட அவர் மனைவி திடுக்கிட்டாள்.  வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு விஷம் வைத்துக் கொல்வதா, அது பெரும் மகாபாபம் ஆயிற்றே என்று வருந்தியவள் அந்த திட்டத்தைக் கை விடுமாறு அவருக்கு அறிவுரை கொடுத்தாள். ஆனால் பண்டிதரோ அவளை மிரட்டி அவளைக் கட்டாயப் படுத்தி விட்டார்.  அந்த காலங்களில் பெண்களால் தமது கணவருடன் சண்டைப் போட முடியாத நிலைமை.  ஆகவே மனம் வருந்தியவள், கணவருக்குத் தெரியாமல் ராமானுஜரை ஆலயத்தில் சந்தித்து அவரிடம் நடக்க  உள்ள நிலைமையை அவசரம் அவசரமாகக்  கூறி, ஆகவே தன் வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் எச்சரித்து விட்டுச் சென்று விட்டாள். ராமானுஜருக்குக் குழப்பம் ஆகி விட்டது. இப்படிக் கூட நடக்குமா என யோசனை செய்தவர் சரி இதுவும் திருவரங்கனின் நாடகமே  என மனதை தேற்றிக் கொண்டு, தன்னை வீட்டிற்கு அழைத்த பண்டிதரிடம், தனக்கு வேறு வேலை உள்ளதாகக் கூறி விட்டு அடுத்த முறை வருவதாக உறுதி அழைத்தார். ஆலய பண்டிதருக்கு ஒரே கோபம். தனது திட்டம் பாழாகிவிட்டதே, திரும்ப இவர் வந்துவிட்டால் தன் பிழைப்புக் கெட்டு விடுமே என்று கவலைக் கொண்டு  வேறு திட்டம் தீட்டினார்.
இரண்டே நாளில் ராமானுஜர் வெளியூருக்கு கிளம்ப இருந்தார். ஆகவே அவர் ஆலயத்துக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்யாமல் போக மாட்டார். அப்போது ஸ்வாமி தீர்த்தம் தரும் தண்ணீரில் விஷத்தைக் கலந்து அதை அவருக்கு தந்து விட வேண்டும் என்று மனதில் திட்டம் போட்டார்.  அதற்காக முதல் நாள் இரவே அந்த விஷத்தை ஸ்வாமிக்கு வைக்கும் தீர்த்தத்தில் கலந்து அதை தனியாக வைத்து விட்டார். எப்போது ராமானுஜர் வந்து ஸ்வாமியின் அர்ச்சனை தண்ணீர் கேட்டாலும் அதை தர வேண்டும் என்பதற்காக அதை தனியாக வைத்து  இருந்தார்.  அது யாருக்கும் தெரியாது.  காரணம் கருவறையில் அந்த அர்ச்சகரைத் தவிர வேறு  யாரும் செல்ல முடியாது.
மறுநாள் ராமானுஜர் வெளியூருக்கு புறப்பட இருந்தார். காலை ஆலயம் திறந்ததும்  ராமானுஜர் ஆலயத்துக்கு வந்தார். ஸ்வாமிக்கு பூஜைகள் நடந்தப் பின், பண்டிதர் அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதம் கொடுத்ததும் அனைவரும் சென்று விட்டார்கள்.ஆனால் ராமானுஜர்  ஊருக்கு கிளம்புவதினால் அர்ச்சனைப் பூவுடன் சேர்த்து தீர்த்தப் பிரசாதம்  தருவதாகக் கூறி விட்டு, உள்ளே சென்று ஸ்வாமியின் பாதத்தில் இருந்து பூக்களை எடுத்து வரும்போது விஷ தீர்த்தப் பாத்திரத்தையும் மாற்றி எடுத்துக்  கொண்டு வந்து   தீர்த்தப் பிரசாதத்தையும் பூக்களையும்  கொடுத்து விட்டார். ராமானுஜர் அங்கிருந்து சென்றதும்  மீண்டும் உள்ளே சென்று  விஷ ஜலத்தைக் கீழேக் கொட்டி விட்டார்.  மனது நிம்மதி அடைந்தது. அப்பாடா இனி ஊருக்குச் சென்று விட்டு இவர் எங்கிருந்து வரப்போகின்றார், வழியில்தான் இரண்டுவிடுவாரே என்று மனதிற்குள் சந்தோசம் அடைந்தவாறு அப்படியே அமர்ந்து கொள்ள  அரை மணி நேரம் கழிந்தது. 
மெல்ல ஸ்தோத்திரம் கூறியபடியே ராமானுஜர் ஆலயத்துக்குள் நுழைந்தார்.  அவரைக் கண்ட பண்டிதர் துணுக்குற்றார். மீண்டும் எதற்காக ஆலயத்துக்குள் வருகிறார்?. சன்னதிக்கு வந்த ராமானுஜர், ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்யுமாறு அவரைக் கேட்க பண்டிதரோ, இப்போதுதானே அர்ச்சனை செய்துவிட்டுப் போனீர்கள், மீண்டுமா என அவரிடம்  குழப்பத்துடன்  கேட்க, நான் இப்போதுதானே வருகிறேன்...எதற்காகக் கேட்கின்றீர்கள் என ராமானுஜரும் குழப்பத்துடன் கேட்க,  அடுத்த நிமிடம் கருவறைக்குள் இருந்த ரங்கநாதரின் கழுத்தில் இருந்த மாலை அறுந்து தீர்த்த பாத்திரத்தின் மீதும் மற்ற பிரசாதங்கள் மீதும் விழுந்து அத்தனையையும் கீழே தள்ளியது.   எரிந்து கொண்டு இருந்த திரி விளக்கும் கீழே விழுந்து அணைந்தது.  என்ன அபசகுனம் ஆகிவிட்டது என பயந்தவாறே உள்ளே ஓடிய பண்டிதர் கண்களுக்கு சன்னதிக்குள் ரங்கநாதரே மரணம் அடைந்து விழுவது போல காட்சி தெரிய, கதறியபடி வெளியில் ஓடி வந்து தடால் என ராமானுஜரின் கால்களில் விழுந்தார்.  தம்மை மன்னித்து விடுமாறும், உடனே கருவறைக்குச் சென்று , ரங்கநாதரை எழுப்புமாறும் கூறி  கதறி அழுதார்.  ராமானுஜருக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் காலில் அர்ச்சகர் விழுவதா என திடுக்கிட்டு அவரை எழுப்பி என்ன நடந்தது என அவரை கேட்க நடந்தது அனைத்தையும் அர்ச்சகர் கூறிவிட்டு, தன்னை மன்னிக்குமாறு கேட்டு கதறினார். அவரை சாந்தப்படுத்திய ராமானுஜர் கருவறைக்குள்  சென்று அலங்கோலமாகக் கிடந்த அனைத்தையும் சரி செய்து விட்டு மீண்டும் பூஜைகளை  செய்யுமாறு  அர்ச்சகரிடம் கூற அவரும் தன் வீட்டிற்கு ஓடோடிச் சென்று குளித்து விட்டு வந்து மீண்டும் அனைத்து பூஜைகளை செய்தார்.  அப்போதுதான் ராமானுஜர் உருவில் வந்திருந்து விஷ  தீர்த்ததைப் பெற்று சென்றது ரங்கநாதரே என்பது புரிந்தது.  ராமானுஜர் எந்த அளவு ரங்கநாதாரின் அருளுக்கு ஆளாகி இருந்தால் இப்படி திருவரங்கரே செய்வார் என்பதை எண்ணி  வியந்து நின்றார்.  ராமானுஜர் நாம் நினைப்பது போல சாதாரணமான மனிதர் அல்ல,  அவர் தெய்வ அருளை பூரணமாக அடைந்தவர் என்பதைப் புரிந்து கொண்டார். அதன் பின் அந்த ஆலய அர்ச்சகர் ராமானுஜரின் பரம பக்தராகி விட்டார்.

நீதி: சினத்தைக் குறைத்து நற் சிந்தனையை வளர்த்துக் கொள்

Tuesday, June 19, 2012

Pamban Swamigal, Tiruvanmiyur

பாம்பன் ஸ்வாமிகள்
சாந்திப்பிரியா 1848 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பாம்பன் என்ற இடத்தில் இருந்த ஸ்ரீ சாந்தப்பிள்ளை மற்றும் செங்கமத்தாள் என்ற ஒரு சைவ வழியைச் சார்ந்த தம்பதியினருக்கு பிறந்தக் குழந்தையே அப்பாவு. படிப்பில் நட்டம் இல்லை என்பதினால் பிற விளையாட்டுக்களான மல்யுத்தம் போன்றவற்றில் ஆர்வம்  கொண்டு இருந்தார். வயதுதுக்கு  வந்ததும் தன்னுடைய குடும்பத்தை விட்டு வெளியேறிய அந்தக் குழந்தையே பின்னர் பாம்பன் ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார். சிறு வயதிலேயே ஞானப் படிப்பிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய அந்தக் குழந்தை பிற்காலத்தில் மாபெரும் ஞானியாக புகழ் பெற்று விளங்குவார் என அவர்கள் வீட்டு ஜோதிடர் கூறி இருந்தாராம் . நல்ல ஆங்கில மற்றும் தமிழ் புலமைப் பெற்றவர் அப்பாவு.
தனது இளம் வயதில் ஓயாமல் சிவ சிவா என மனதில் ஜெபித்துக் கொண்டே  தீவீரமான சிவ பக்தராக இருந்தவர் திடீர் என ஒருநாள்  கந்தர் சஷ்டிக் கவசத்தைப் படிக்கத் துவங்கியதும், முருக பக்தர் ஆனார்.  அவருடைய பதிமூன்று வயதில் தேங்காய்த் தோப்பில் அமர்ந்த வண்ணம் குமார குரு மீதான பாடலை பனை ஓலைகளில் எழுதினர். அது முதல் தன்னுடைய மானசீக குருவாக அருணகிரிநாதரை எண்ணிக் கொண்டு தினமும் ஒரு பாடல் என்று எழுதத் துவங்கி, தொடர்ந்து நூறு நாட்களில் நூறு பாடல்களை  எழுதி முடித்தார். அதைப் பார்த்த சேதுமாதவ ஐயர் என்ற ஆலய புரோகிதர் அப்பாவுவிற்கு முருகக் கடவுள் மீது இருந்த பக்தியைப் புரிந்து கொண்டு அப்பாவுவிற்கு ராமேஸ்வரத்தில் இருந்த அக்னி தீர்த்தம் என்ற இடத்தில் ஆறு அட்சர சுப்பிரமணியக் கடாஷ  மந்திரோபசேதம் செய்து வைத்தார்.
இளமைப் பருவத்திலேயே தெய்வீக வாழ்வை ஏற்று இருந்தாலும் பெற்றோர் மற்றும் சேது மாதவ ஆசானின் ஏற்பாட்டின்படி தனது  இருபத்தி ஐந்தாம் வயதில் காளிமுத்தமி என்பவளுடன் திருமணம் செய்து கொண்டவருக்கு சில காலத்திலேயே ஒரு மகனும் இரண்டு புதல்விகளும் பிறந்தனர். திருமணம் ஆனாலும் கூட பாம்பன் ஸவாமிகள் பெரும்பாலும் ஒரு துறவி போலவே வாழ்ந்து வந்தார். அவர் தந்தை மரணம் அடைந்ததும் அவருடைய தொழில்களை ஏற்று நடத்திக் கொண்டு நல்ல மேன்மை அடைந்தார். ஒரு நாள் பாம்பன் ஸ்வாமிகளின் ஒரு வயதே ஆன மகள் உடல் நலமின்றிப் போய் அழத் துவங்கினாள். அவருடைய மனைவி அவரிடம் மந்தரித்த வீபுதி கொடுக்கும்படிக் கூற, அவர் அதற்கு மறுத்து விட்டு அவள் குணமடைய வேண்டும் எனில் முருகனை பிரார்திக்கும்படிக் கூறி விட்டார். ஆவலுடன் சேர்ந்து தானும் முருகனிடம் வேண்டி பிரார்த்தனை செய்யலானார். அன்று இரவு யாரோ வயதான ஒருவர் வந்து சிறிது வீபுதியைக் கொடுத்து விட்டு அதை குழந்தையின் உடம்பில் தடவச் சொல்லி விட்டுச் சென்றார். அவர் கூறியபடியே அவர்களும் செய்ய குழந்தை குணம் அடைந்தது. ஆனால் வந்தவர் யார்? யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பாம்பன் ஸ்வாமிகளின் மனதுக்குப் புரிந்தது வந்தவர் முருகனே என்றும் அவரே தன் குழந்தையைக் காப்பாற்றி உள்ளார் என்பதை உணர்ந்தார்.
ஒருமுறை பழனிக்கு செல்ல ஆசைப்பட்டு தன்னுடைய நண்பருடன் யாருக்கும் சொல்லாமல் பழனிக்கு கிளம்பியவரின் கனவில் வந்த முருகன் அவர் பழனிக்கு வரத் தகுந்த நேரம் அது அல்ல என்றும், தான் கூறும்போது மட்டுமே அங்கு வர வேண்டும் என்று கடுமையாக ஆணையிட்டு விட பழனிக்குச் செல்வது தடைபட்டது. அது ஏன் நிகழ்ந்தது என்பது அவருக்கு தெரியவில்லை.
ஸ்வாமிகள் பல இடங்களுக்கும் சென்று தன்னிடம் வந்து கொண்டு இருந்த முருக பக்தர்களுக்கு ஆன்மீகத்தை போதித்து வந்தார். 1894 அம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த பீரப்பன்வலசை என்ற இடத்தில் இருந்த ஸ்வாமிகளுக்கு பழனி ஆண்டவரிடம் நேரடியாக உபதேசம் பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஒரு மயானத்தில் தற்காலிகமாக ஒரு சிறிய அறையைக் கட்டிக் கொண்டு அதில் அமர்ந்து கொண்டு தியானத்தில் அமர்ந்தார். அவர் தியானத்தைக் கலைக்க தீய சக்திகள் பலவாறு முயன்றன. ஒரு நாள் பெரிய பேய் ஒன்று அவரைத் தாக்க வந்த பொழுது அதைத் தன் தண்டத்தினால் அடித்து விரட்டினார். இன்னொரு நாள் யாரயோ வந்து அவரை எழுந்திருக்குமாறு கூறியது. தன் உயிரே போனாலும் பழனி ஆண்டவர் தன் முன் வந்தால் ஒழிய எழுந்திருக்க மாட்டேன் என்றவரிடம் …… உன்னுடைய கடவுள் நான் வந்துள்ளேன். கண்களை திறந்துப் பார் …… என்ற குரல் கேட்டு கண்களை திறந்தவர் தன் எதிரில் பழனி ஆண்டவர் இரண்டு ரிஷிகளுடன நிற்பதைக் கண்டார். அதன் பிறகு பழனி ஆண்டவர் அவருடைய வலது காதில் ஒரு மொழிச் சொல்லான உபதேசத்தை செய்தார்.


அதன் பின்னர் 1895 ஆம் ஆண்டில் சன்யாசத்தை ஏற்ற பாம்பன் ஸ்வாமிகள் பாம்பன் நகரை விட்டு வெளியேறினார். ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய முருகன் அவரை சென்னைக்குச் செல்லுமாறு கூறினார். முன் பின் தெரியாத இடத்தில் சென்று யாருடன் தங்குவது என ஒரு கணம் குழம்பியவர் வருவது வரட்டும் என தீர்மானித்துவிட்டு, முருகன் இட்ட ஆணையை மீற முடியாமல் ஏற்று இரயில் மூலம் அங்கு சென்றhர். எக்மோர் ஸ்டேஷனில் இறங்கிய அவருக்கு இன்னொரு ஆச்சர்யம் காத்துக் கிடந்தது. ரயில் நிலையத்தில் அவர் அருகில் வந்த ஒருவன் அவரை அழைத்து வரச் சொல்லி வண்டியை அனுப்பி உள்ளதாகக் கூறி அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றான். ஸ்வாமிகளும் இது என்னடா விசித்திரமாக உள்ளது, நான் இங்கு வருவது யாருக்குமே தெரியாது , மேலும் எனக்கும் இங்கு யாருமே இல்லை. அப்படி இருக்கையில் யார் வண்டியை அனுப்பி உள்ளார்கள் எனக் குழம்பிக் கொண்டே ஒரு யந்திரம் போல வண்டியில் ஏறிக் கொண்டாலும், அவர் மனம் முழுவதும் முருகனே நிறைந்து இருந்தார்.. சரி, வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என தனக்குத் தானே கூறிக் கொண்டவரை அந்த காலத்தில் சென்னையில் பாரிஸ் என கூறப்பட்ட இடத்தில் சந்தில் இருந்த பங்காரு அம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டில் வண்டிக்காரன் இறக்கி விட்டுச் சென்று விட்டான். அங்கும் ஆச்சர்யமாக அந்த அம்மையார்  அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். தனது கனவில் முருகப் பெருமான் தோன்றி அவருடைய அடையாளத்தைக் கூறி அவர் மறுநாள் வருவார், அவருக்கு தங்க இடம் கொடுத்து அவரை வைத்துக் கொள்ள என்று கூறியதினால் அவள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றதாகக் கூறினாள்.
முருகன் சித்தமே அனைத்தும் என எண்ணிக் கொண்டு சில காலம் அங்கு தங்கியவர் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல புனித யாத்திரையை மேற்கொள்ளத் துவங்கினார். சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் அப்படியான யாத்திரையை மேற்கொண்டவர் காசிக்குச் சென்றார். அங்கு ஒரு நாள் முன்பின் தெரியாத யாரோ வந்து அவருக்கு காவி உடைக் கொடுத்து அதை அணியுமாறுக் கூறி விட்டுச் சென்றார். யாருக்கோ கொடுக்க வேண்டியதை தனக்குக் கொடுத்து விட்டாரோ என்று எண்ணிய ஸ்வாமிகள், பரவாய் இல்லை, இதுவும் முருகனின் கட்டளையாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டு அன்று முதல் காவி உடையையே உடுத்தலானார். அதற்கு இடையில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் நிறைய பாடல்களை இயற்றிக் கொண்டே இருந்தார்.
பல இடங்களுக்கும் விஜயம் செய்தப் பின் 1923 ஆம்  ஆண்டு மீண்டும் சென்னைக்கு சென்றவர்  தம்புச்செட்டித் தெருவில் நடந்து கொண்டு இருந்தபோது ஒரு விபத்து ஏற்பட்டது.  அதில் அவருடைய இடது முழங்காலில் குதிரை வண்டி ஒன்று ஏறி விட அவரது முழங்கால் முறிந்தது.  மருத்துவ மனைக்குச் சென்ற அவரை சோதனை செய்த மருத்துவர்கள் முட்டிவரை அவருடைய காலை வெட்டி எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்கள். ஆனால் ஸ்வாமிகள் அதை ஏற்கவில்லை. பதினோரு நாட்கள் படுக்கையில் கிடந்தார். மனம் கவலையில் ஆழ்ந்து இருந்தது. கால் வலியும் பொறுக்க முடியவில்லை. அன்று இரவு ஸ்வாமிகளின் கனவில் மயில் ஒன்று இறக்கைகளை விரித்து ஆடியபடி வந்தது. அடுத்து அவர் படுக்கையில் அவருக்குப் பக்கத்தில் முருகப் பெருமான் சிறு குழந்தை வடிவில் படுத்து இருப்பதைப் போல உணர்ந்தார். மனம் அமைதி அடைத்தது.  இன்னும் சில நாட்கள் படுக்கையில் படுத்துக் கிடந்தவர் கனவில் ஒரு வேல் வந்து முறிந்து போன காலில் நுழைந்தது போல காட்சி வந்தது.  அதற்கு அடுத்த சில நாட்களிலேயே பாம்பன் ஸ்வாமிகளின்  கால் முற்றிலும் குணமாயிற்று. ஆங்கில மருந்துவர்கள் கூட அந்தப் பின்னணியின் காரணம் தெரியாததினால் அவர் குணமடைந்தது அதிசயமான ஒன்று எனக் கூறி வியந்தார்கள்.
முருகனின் வேலும் மயிலும் முருகனை பிரார்த்திப்பவர்களுக்கு என்றுமே துணையாக இருக்கும் என்பதை உணர்ந்தார். இன்னும் சில காலம் ஓடியது. ஸ்வாமிகள் பல பாடல்களை இயற்றிக் கொண்டே இருந்தார். அவர் இயற்றிய அனைத்துமே முருக பக்தியின் மீதுதான் அமைந்து இருந்தன...முருகன்....முருகன் என்பதையே தாரக மந்திரமாக வைத்துக் கொண்டு இருந்த ஸ்வாமிகள் 1928 ஆம் ஆண்டு வாக்கில் விரைவில் தனக்கு முடிவு காலம் வர உள்ளதை உணர்ந்து கொண்டு தனது நண்பரை அழைத்து தாமதிக்காமல் திருவான்மியூர் அருகில் ஒரு இடம் தேடுமாறு கூறினார். அங்கு வாக்கிய இடத்தில் தங்கி இருந்தவண்ணம்  தம்மிடம் வந்து கொண்டு இருந்த பக்தர்களுக்கு ஆசிகளை வழங்கி வந்த பாம்பன் ஸ்வாமிகள் 1929 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதியன்று அனைவர் முன்னிலையிலும் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தார். சில ந்மிடங்களிலேயே அவரது ஆத்மா அவரது உடலை விட்டு அகன்றது. அங்கு அவருக்கு சமாதி எழுப்பினார்கள்.
அவருடைய வாழ்க்கையில் சில சுவையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
ஒருமுறை முறை கரடு முரடான வீதியில் பாம்பன் ஸ்வாமிகள்  நடந்து சென்று கொண்டு இருக்கையில் முட்களும், கற்களும் கால்களில் குத்தி வலியெடுக்க வலியினால் துடித்துப் போனவர் முருகனிடம் மனமாற பிரார்த்தனை செய்தார். அன்று இரவு செருப்புத் தைக்கும் தொழிளாளி ஒருவன் கனவில் தோன்றிய முருகன் தன் பக்தன் பாம்பன் ஸ்வாமிகளுக்கு செருப்புத் தைத்துத் தருமாறு கூற, மறு நாள் அந்த செருப்புத் தைப்பவன் அவருக்கு தன கனவில் வந்த செய்தியைக் கூறி ஒரு ஜோடி செருப்பை தந்து விட்டுச் சென்றான். முருகனின் கருணையை எண்ணி வியந்தார் பாம்பன் ஸ்வாமிகள்.
இன்னொருமுறை  பாம்பன் ஸ்வாமிகள் வாயிற்று நோயினால் அவதிப்பட்டு மயக்கம் அடைந்து விட்டார்.  அவருடைய மனைவியின் கனவில் தோன்றிய முருகன் உடல் முழுவதும் அவருக்கு வீபுதியைத் தடவி விடு . மேலும் உன்னை விட்டு நான் வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்று அவர் காதுகளில் கூறு …… என்று சொன்னார். ஆனால் அவள் வீட்டு விலக்காகி உள்ளதினால் அதை செய்ய தயங்க, முருகனும் ஆபத்திற்கு பஞ்சம் இல்லை என்று கூறி அவளை தான் கூறியதை செய்யுமாறு வற்புறுத்த அவர் மனைவியும் அதை செய்தாள். பாம்பன் ஸ்வாமிகள் நலமடைந்து எழுந்தார்.
ஸ்வாமிகள் ஒருமுறை காஞ்சிபுரம் சென்றிருந்த பொழுது ரயிலைப் பிடிக்க நேரம் ஆகி விட்டது என்பதற்காக இருந்த குமாரக் கோட்டத்திற்கு செல்லாமல் கிளம்பி விட்டார். வழியில் தலையில் முண்டாசு கட்டிய ஒருவர் அவரிடம் வந்து …… நீங்கள் எப்பொழுதாவது குமாரக் கோட்டத்திற்குப் போய் இருக்கின்றீர்களா ........ காஞ்சியப்ப சிவாச்சாரியார் என்ற ஆலய பண்டிதர் கந்தப் புராணம் இயற்றி வருவது தெரியுமா?…… என்றும் கேட்டார். பாம்பன் ஸ்வாமிகள் தெரியாதே என்று கூற அவரை வலுக்கட்டாயமாக அந்த ஆலயத்தின் அருகில் அழைத்துச் சென்று விட்டப் பின் வந்தவர் மறைந்து விட்டார். பாம்பன் ஸ்வாமிகள் செல்ல இருந்த ரயில் எதோ ஒரு காரணத்தினால் கிளம்பாமல் நின்று இருந்தது. ஆனால் அது அவருக்கு தெரியாது. சரி அடுத்த ரயிலில் செல்லலாம் என அங்கு பிரார்த்தனைகளை செய்து விட்டு ரயில் நிலையத்திற்குக் கிளம்பிச் சென்ற பாம்பன் ஸ்வாமிகள் வந்து ரயிலில் ஏறிய பிறகே அது கிளம்பிற்று. முருகனின் கருணையை எண்ணி வியந்தார் ஸ்வாமிகள்.


ஸ்வாமிகள் 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் எழுதி உள்ளார். அவர் இயற்றியவைகளில் எதிரிகளின் சூழ்ச்சியை வென்று எழந்த செல்வத்தைப் பெற்றிட சதுரங்க பந்தம்,  மனதில் தோன்றும் அலைபாயும் எண்ணங்களை தடுத்து நல்ல எண்ணங்கள் தோன்றிக்  கொண்டு இருக்கவும்  மேன்மை பெறவும் சஸ்த்ர பந்தம் , வாகன விபத்துக்கள் நேராமல் பயமின்றி பயணிக்க ரத பந்தம், மற்றும் நாக தோஷம் விலக ராகு மற்றும் கேதுவின் தொல்லைகள் விலக துவித நாக பந்தம் போன்றவற்றையும், கந்தர் கலி வெண்பா போன்ற பலவற்றையும் இயற்றி உள்ள ஸ்வாமிகளின் ஆலயம் மற்றும் ஆஸ்ரமம் சென்னை அடையாரைத் தாண்டி உள்ள திருவான்மியூரில் உள்ளது. ஆலயத்தில் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வரும்போது மனதில் இனம் புரியாத அமைதி நிலவுவது உண்மை. கடவுட்கள் உலவும் நிலத்தில் அமர்ந்துவிட்டு வரும்போது  அப்படி ஒரு மன அமைதி  நிலைமை  நமக்கு நேராவிடில்  வேறு எங்கு அந்த நிலை நமக்கு கிடைக்கும் ?

Monday, June 18, 2012

Thiruthangalpuram Temple, Viruthunagar

 

திருத்தாங்கல்புரம், விருதுநகர் 

சாந்திப்பிரியா

உபன்யாசத்தில் கேட்டக் கதை 

சில நேரங்களில் எழுதப்பட்ட ஆலயக் கதைகளைப் படிப்பதை விட காலஷேபங்களில் கூறப்படுவதை நேரடியாகக் கேட்பது சற்று மாறுதலாகவும், இனிமையாகவும் இருக்கும்.   ஒரு  திவ்யதேசத்தைப் பற்றி ஒரு வைஷ்ணவப் பெரியவர் ஆற்றிய உபன்யாசத்தின் ஒரு சிறிய பகுதியை முடிந்தவரை அப்படியே தந்துள்ளேன். படித்து மகிழவும் :

''...........இன்னிக்கு என்ன திவ்யதேசத்தைப் பத்தி சொல்லும்படி நிறையபேர் கேட்டுண்டா. இந்த லோகத்துல உள்ளவா ரொம்மபேருக்கு திவ்யதேசம்னா என்னனு தெரியாது. ஒத்தர் என்னக் கேட்டா, ஸ்வாமி திவ்ய தேசம்னா என்ன ? அந்த தேசம் எங்க இருக்கு?.......... நேக்கு ஆச்சர்யமா இருந்துது.....இதென்னடா, திவ்ய தேசம்னா என்னன்னு கேக்கறா....அதி புத்திசாலியா இருப்பா போலருக்கே அப்படீன்னு நெனச்சுண்டேன். ஆனா என்ன பண்ரது......காலம் ரொம்பவே கெட்டுப் போச்சு  ....இந்த காலத்ல இருக்கற கொழந்தேள்கு அவா அவா ஆத்லல்லாம் தெய்வத்தைப் பத்தி சொல்லித் தரதில்ல. கோவிலுக்குப் போறதே பாதிபேர்க்கு  சோம்பலா இருக்கு.  ஆத்துல  பூஜா பண்லாம்னா நேரம் இல்லாங்க்ரா....  அதனாலதான் பக்தீங்கரத்ல  இப்படியான ஷீன நிலமையில நாம் இருக்கோம் அப்படீன்னு நினச்சு வருத்தப்பட வேண்டியதாயிடுத்து.....ஆனா என்ன பண்றது சொல்லுங்கோ ...காலத்துக்கு ஏத்த மாதிரி நம்மையும் மாத்திக்கணும் இல்லையான்னு நெனச்சின்று அவருக்கு திவ்விய தேசம்னா என்னனு புரியும்படி சொன்னேன்.....

ஆமா...திவ்யதேசம்னா என்னனுன்னு நினக்கரேள் ? திவ்யம்னா அற்புதமான, எல்லாமே நன்னா இருக்கற ,இன்னும் சொல்லனும்னா நமக்கு வேண்டிய எல்லாமே இருக்கற எடம்னு அர்த்தம். அதாவது பகவான் தான் இருக்கற எடுத்துலேந்து அவர் கிட்டப் போய் வேண்டரவாளுக்கு அவா கேட்டதெல்லாத்தையும் கொடுக்கற எடம்தாம் திவ்ய தேசம்  அப்படீங்கற  ஐதீகம்னு சொல்வா. ......அதனால   திவ்ய தேசத்தோட அர்தம்.....திவ்யமா இருக்கற எடம்னு அர்த்தம்.

................நம்ம தமிழ்நாட்டுல திருத்தாங்கல்புரம்னு ஒரு திவ்யதேசம் இருக்கு...அது மகா புண்யஷேத்ரம்...பூதத்தாழ்வார் , இன்னும் திருமங்கை ஆழ்வார்  அப்படீங்கரவாளால  மங்களாசாசனம் செய்யப்பட்ட  தலம்னு  சொல்வா....ரொம்மபேர்க்கு தெரில்ல அது இருக்கற எடம் ........அப்படி ஒரு நெலம ....சாதாரணமா மதராஸ்...மதுரை ...திருச்சி...கோயம்பத்தூர்....கும்பகோணம் .... மாயுரம் அப்படிநீனு  பெரிய பெரிய எடத்த சொன்னாதான் ரொம்மபேர்க்கு தெரியறது...........இல்லனா அது எங்க மாமா இருக்கூன்னு கேட்டுர்ரா...போட்டும் .. அந்த எம்பெருமான் தளப் பெருமையைக் கேளுங்கோ .....கவனமா கேளுங்கோ

.............திருத்தாங்கல்புரம் , திருத்தாங்கல்புரம்னு ஒரு திவ்யதேசம் இருக்குன்னேன் இல்லையா...அது ரொம்மவே புண்யம் பண்ரவா மட்டுமே  பாக்க முடிஞ்ச எடம்னு கூட சொல்வேன்......... என்னனா அங்க பெருமாள் நின்னுன்றுக்கா...தாயாரும் நின்னுன்ருக்கா...சரி நின்னுன்று இருந்தா என்ன பெரிசுன்னுக் கேக்காதேங்கோ.. பெருமாள் எப்போதுமே நிக்கற கோலத்துல இருக்க மாட்டா...அது போல தாயாரும் நிக்கற கோலத்துல வேற எங்கயுமே இருக்க மாட்டா....  ..ஆனா இங்க ரொம்ம அபூர்வமா  நின்ன கோலத்துல இருப்பா.....

.....................மத்த கோவில்லல்லாம் கால் வலிக்கும்கர்த்துக்காக உக்காரமாட்டா... உட்கார்ந்து இருக்கறது ஒரு ரூபத்தக் காட்டத்தான் ... நம்மாத்லல்லாம் ஒண்ணு சொல்வா...பெரிவா முன்னாடி நாம உட்கார்ங்துக்கர்த்து மரியாத இல்லான்னு...அது வேற.....ஆனால் பெருமாள் முன்னாடி உட்கார்ந்துக்கர்தூங்கர்த்து அவரவிட நாம சின்னவான்னுக் காட்டர்த்துக்குத்தான்.  அது ஒரு உருவம் அவ்ளவுதான்...அதனாலத்தான் நீங்க பார்த்தேள்னா எந்த மூல தெய்வத்துக்கு முன்னாடியும் அங்க இருக்கற மத்தவா அத்தனைபேரையும் சின்னவாளாக் காட்டுவா....அதாவது அவாள விட ஒசரம் கம்மியா இருக்கும்,  இல்லேன்னா அவா முன்னாடி உட்கார்ந்து இருப்பா.... ராம பட்டபிஷேக படத்தப் பாருங்கோ....சிவன் திருமண படத்தையோ,   இல்லேன்னா நெறைய  கோவில்ல இருக்கற சிலைகளைப் பாருங்கோ ...புரியும்.

திருத்தாங்கல்புரம் அப்டீங்கர்து சிவகாசி, விருதுனகர்னு நம்ம தென் பகுதில இருக்கற எடத்துல இருக்கு. சிவகாசி, இல்லேன்னா விருதுநகர் அப்படீன்னா நமக்கெல்லாம் பட்டாசு இல்லைன்னா தீப்பெட்டி ஞாபகம்தான் வரும்...ஏன்னா அந்த ஊர்ல அப்படி நெறையா தொழில்சாலைலாம் இருக்கு....ஆனால் அங்கல்லாம் நல்ல நல்ல கோவிலும் இருக்கூன்னு ரொம்பபேர்க்கு தெரில்ல...அங்கல்லாம் பக்தியும் ஜாஸ்தி....பெரிய பெரிய ஊர்ல இருக்கறதவிட அந்த ஊர்லலாம் ஜனங்களுக்கு பக்தி ஜாஸ்தியா இருக்கு... சரி திருத்தாங்கல்புர கோவிலோட கதை  என்னனு கேக்கறேளா...சொல்றேன் கேளுங்கோ ...

.........ஒரு  சமயத்துல ஸ்ரீதேவி, பூதேவி இன்னும் நீலா தேவிங்கற மூணு  பொம்னாட்டிகளுக்கும்  ஒரு விவாதம் வந்துட்த்தூ ...நாம மூணுபேர்ல யார் பெரிவா....சாதாரணமா மூணு  பொம்னாட்டி  ஒண்ணா சேந்தாலே நீயா, நானான்னு சண்ட வரும்..அப்படி இருக்கச்சே ஸ்ரீமான் நாராயணன் மேல வெச்சுர்க்ற   அன்ப யாராவது கொறச்சு சொல்லிப்பாளா, இல்ல அவர்கிட்ட தான்தான் நெருக்கம்னு சொல்லிக்க ஆசபடமாட்டாளா?  அதுதான் இங்கயும் வந்துட்தூ......ஒத்தர்கொத்ரர் அப்படி, இப்படீன்னு சொல்ல ஸ்ரீதேவிக்கு வருத்தம் வந்துட்தூ.... அங்கேந்து எழுந்து போய்ட்ரா...எங்க போனா.....நேர திருத்தாங்கல்புரம் இருக்கற எடத்துல வந்து  பெருமாள  மனசுல நெனச்சு த்யானம் பண்றா...நாதா...பெருமாளே......நேக்கு நீ ஒஸ்தீனா நீ இங்க வந்து என்னோட இருக்கணும்....இப்படி ரொம்ப நாளா அவர தியானம் பண்ணிண்டு இருந்தா.    ரொம்ம நாளா அங்கயே ஒக்காந்துண்டு அவ நாராயணன் நெனச்சு த்யானம் பண்ணதும் பெருமாளுக்கே மனசு இளகிடுத்து ... இது சரில்ல...பாவம், அவோ மனச ஏன் நோகடிக்கணும், நேக்கு எல்லாருமே ஒன்னுதான்னாக் கூட இப்ப இவ வருத்தத நீக்கணும்னு நெனச்சுண்டு அங்க வந்து அவளுக்கு காட்சி தந்துட்டார்....அவளோட அங்கயே நின்னுண்டார்...அதனால, ஸ்ரீதேவி இங்க வந்து, தங்கி பகவான பிரார்திச்சதுனால , பகவானும் அங்க வந்து அவளோட நிண்நுண்டத்னால நின்ற நாராயணப் பெருமாள்னு அவருக்கும் பேர் வந்துட்த்து ...ஸ்ரீதேவியோட அவர் இந்த தங்கிட்டத்னால, அந்த ஊருக்கும் திரு அதாவது ரொம்ம புனிதமானன்னு அர்த்தம்.....தங்கல் அதாவது தங்கினது ...அப்படீன்னு ரெண்டயும் ஒண்ணா  சேர்த்து புண்ணியம் தர்ரவா தங்கின எடம்கர  பேர்ல திருத்தாங்கல்னு ஆயுடுத்துனு சொல்வா.

இன்னும் ஒரு சமாச்சாரம் என்னன்னா பெரியபிராட்டியாரோட தவத்த மெச்சின எம்பெருமான் இந்த லோகத்துல இருக்கறவா எல்லாருக்குமே அன்னம் தர அன்னபூர்ணியா நீ  இருப்பாய் அப்படீன்னு ஆசிர்வாதம் கொடுத்தாராம். அதனால அன்னபூரணி நம்ம பெரியபிராட்டியோட அம்சமாவே  அங்க இருக்கா என்பது இன்னொரு நம்பிக்கை. நாம சாப்படற சாதம் கூட தாயார் போடற சாப்பாடுதான்னு  நாம எப்போதுமே நினச்சிண்டு இருந்தா, அது நமக்கு புண்ணியத்த தரும்.

.........இந்த கோவில்ல என்ன விசேஷம்னு கேக்கறேளா ....ரொம்மவே இருக்கு ஸ்வாமி....சொல்றேன்...கேட்டுக்கோங்கோ....
இந்த பூமில எந்த கோவில்லயாது  மூலவர் சன்னதில பதினோரு பேர் ஒண்ணா இருக்கறத பார்திருக்கேளா .. ..நிச்சயமா பார்த்திருக்க மாட்டேள்.....ஏன்னா  அத்தனைபேரும் மூல சன்னதில இருக்க மாட்டா. ....ரெண்டுபேர் இருந்ததாலே சண்ட வந்துடூங்கர்ச்சே பதினோரு பேரா....

.........ஆமாம் ...பதினோரு தெய்வ அம்சங்களையும் ஒரே எடத்துல தன்னோட வச்சுண்டு பெருமாள் காட்சி தரார்..... .அது ஏன்னு கேக்கறேளா?...நீ பெரிவா, நான் பெரிவாங்கர்து இல்லாம எல்லாருமே நேக்கு வேண்டியவாதான் அப்படீன்னு காட்டர்துக்காக பெருமாள் அப்படி காட்சி தராராம்......அங்க பெருமாளோட இருக்கறவா யார் யார் தெரியுமா? .......ஸ்ரீதேவி, பூதேவி, நீலா தேவி, பிருகு ரிஷி, கருடன், சூர்யனோட தேரை ஓட்ற அருணன், கிருஷ்ணரோட பேரன் அனிருத்தன், அவன் பொண்டாட்டி உஷா, இன்னும் ஜம்பாவதிங்கர அத்னபேரும் அங்க இருக்கா.........சரி ...அவ்ளோபேர் அங்க ஏன் வந்தாங்கரேளா ....... அவாள்லாம் அங்க வந்து, பெருமால சேவிச்சு , வேண்டிண்டு, பெருமாளோட ஆசிய வாங்கிண்டவா.....

............பானாசுரன்கர அசுரன் அட்டகாசம் பண்றச்சே அவன கிருஷ்ணரா போய் அடக்கறார்..அப்போ அவன் தன்னோட தப்ப  உணர்ந்துண்டு   'நான் திருந்திட்டேன் ஸ்வாமி....என்ன மன்னிச்சுக்கோங்கோன்னு கேட்டுட்டு, தன்னோட பொண்ணு உஷாங்கரவளை அவரோட பேரன் அனிருத்ரனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துடறான். அந்தக் கல்யாணத்தை அவா ரெண்டுபேரும் பெருமாள் முன்னாடி இங்க வந்து பண்ணினத்னால அவா ரெண்டுபேரும் இங்க இருக்கா. இதுக்காக எம்பெருமான் நேர்லயே வந்தார்னு சொல்வா..

.....இங்க இருக்கற  பெருமாள  திருத்தான்கல் அப்பன் அப்டீனும் சொல்வா . சிலபேர் அவரை தெய்வீக வாசுதேவர்னும் சொல்வா. ரெண்டுமே சரிதான்.
..இங்க இருக்கற தாயாருக்கு செங்கமத் தாயார், கமலமஹாலஷ்மி, அன்ன நாயகி, ஆனந்த நாயகி, அமிருத நாயகி அப்ப்டீனல்லாம் நெறைய பேரு வைச்சுர்க்கா. இந்த அன்னனாயகிதான் அன்னபூரணி அப்படீம்பா.... இங்க ரெண்டு தீர்த்தம் இருக்கு....அது என்னன்னா பாஸ்கர தீர்த்தம், இன்னொன்னு பாபநாசன தீர்த்தம் அப்டீங்கர்த்து. பாபநாசன தீர்த்தம் அப்டீங்கர்த்து ரொம்பவே விசேஷமான தீர்த்தம்க்ரா....ஏன்னா எல்லா ஊர்லயும் இருக்கற நதிகள்ளையும் பாவம் செய்தவா  போய் குளிச்துனால அந்த நதி எல்லாத்துக்கும் நிறைய பாவம் சேந்துட்த்து.....என்னடா, நாமளும் பாவ நதிகளாயிடுவோமோன்னு அதுகள் எல்லாத்துக்கும்  பயம் வந்துட்டத்னால அவா சப்த ரிஷிகள்டையும் போய் எங்க ஒடம்புல சேர்ந்துண்டே  வர்ற பாவத்த தொலைக்கலைன்னா இன்னும் கொஞ்ச நாள்ல நாங்களும் பிரயோஜனம் இல்லாம ஆயுடுவோமே....என்ன செய்யலாம்னு யோசனைக் கேட்டப்போ அவா சொன்னா...போங்கோ...போய் எம்பெருமான  சேவிச்சு அவர் கால அலம்பிலேள்னா நீங்க சுத்தம் ஆவிடுவேங்க்ரா ....ஆஹா இந்த புத்தி நமக்கு தோணலயேன்னு  தலேல அடிச்சுண்ட நதி எல்லாமே  அந்த ரிஷிகள்ட கேட்டா...ஸ்வாமி...ஸ்வாமி..இப்ப பகவான் எங்க இருப்பார்?....
அவாளோட மனகஷ்டாத பார்த்த ரிஷிகளும்  அவர் இப்போ திருத்தாங்கல் அப்படீங்கற ஊர்ல  தங்கி இருக்கார்ன்னு  சொன்ன உடனே அத்தன நதியும் அங்க ஓடினா.. ஓடிப் போய்...பெருமாளே ....பெருமாளே...இன்ன மனக் கஷ்டம் எங்களுக்கெல்லாம் வந்துட்த்து....அதனால நீங்க எங்க உடம்புல ஒங்கக் காலை வைச்சு புனிதமாக்கணும்னு வேண்டின்டதும், அவரும் நீங்க எல்லாம் ஒண்ணா நில்லுங்கோங்க்றார். .......அவா எல்லாமே ஒண்ணா நின்னதும் அதுல இறங்கி குளிக்றார்.... உடனே அவா அத்தன பேரோட பாவமும் போய்டறது.....அதுக்கப்ரமா பெருமாளை சேவிச்சுட்டு திரும்பிப் போய்டரா....திரும்பிப் போர்துக்கு முன்னால அவா தன்னோட சரீரத்தைக் கொஞ்சம் அங்க விட்டுப் போறா. அதுதான் பாபநாசன தீர்த்தம்க்றது. அதுல குளிச்சா அனைத்து பாவமும் போய்டூம்க்றது அதனாலதான் ஒரு ஐதீக வந்துட்த்து ....

.........அது மாதிரி அந்த தீர்த்தத்துக்கு பக்கத்ல இருக்கற தீர்த்தத்துக்கு பாஸ்கர தீர்த்தம்னு பேரு. அதுல குளிச்சா  பிரும்மஹத்தி தோஷம் போகும்னு சொல்வா...என்னா ஒரு தடவ சூரிய பகவான் தன்னோட பொண்டாட்டிய தூங்கிண்டு போய்ட்ட ஒரு  அசுரனை தொரத்திண்டு போறார்....அவன் என்ன பண்ணான்னா,  ஓடிப் போயி ஒரு பிராமணன் பின்னால ஒளிஞ்ஜூன்றான்.  ஆனா அதுக்கு முன்னால சூரிய பகவான் அவன் மேல தூக்கிப் போட்ட ஆயுதம் அந்த பிராமணனையும் செத்துக் கொன்னுடர்தால அவருக்கு பிராமண ஹத்தி தோஷம் வந்துதுடுத்து  ... அடடா தெரியாம சேஞ்சது தோஷத்த தந்துடுத்தேன்னு பயந்து போய் என்ன செய்யலாம்னு பிரும்மாக்கிட்ட கேக்கறார். ...அவரோ உடனே ஓடிப் போய் எம்பெருமான் நின்னுண்டுள்ள ஷேத்ரத்துல இருக்கற  தீர்தல்ல குளிச்சா தோஷம் போகும்னதும், சூரியன் இங்க ஓடோடி வரார்....வந்து இந்த நதில குளிச்சுட்டு பெருமாளை செவிக்கறார்...அவ்ளோதான்.... உடனேயே அவர் தோஷம் போய்டறது.  இந்த தீர்த்தம் ரொம்ப புனிதமானது அப்படீன்னு சொல்வா...

இங்க உள்ள கருடப் பெருமானும் ரொம்ம ஒசத்தியானவர். இங்கதான் அவருக்கு நாலு கை இருக்கு. ரெண்டு கையால பகவானை செவிச்சுன்று மத்தத ரெண்டு கைல ஒண்ணுத்ல அமிர்த கலசத்தையும், இன்னொன்னுத்ல பாம்பையும் வெச்சுன்றுக்கார். இப்படிப்பட்ட விசேஷமான கோவில்ல போய் பெருமாளை செவிச்சு அவரோட அனுக்ரகத்த வான்கிக்கோங்கோ அப்படீன்னு சொல்லி நான் இதை முடிச்சுக்கறேன்''.

அவர் கூறிய காலத்ஷேபத்தைக் கேட்டப் பின் அந்த ஆலய விவரத்தை கேட்டு அறிந்தேன். இந்த ஆலயம் திவ்ய தேசங்களில் ஒன்றாம்.  இது விருதுநகரில் இருந்து 20 கிலோமீட்டர், சிவகாசி அல்லது சாத்தூர் போன்ற ஊர்களில் இருந்து ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. வில்லிப்புதூரும் இந்த ஊரின் அருகில் உள்ளது.   இந்த ஆலயத்தில்  உள்ள பெருமாளை வணங்கித் துதிப்பதின்  மூலம் குடும்ப ஒற்றுமை மேலோங்கும், தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும், குழந்தைகள் மேன்மை அடைவார்கள் என்று ஐதீகம் உள்ளதாம். இங்குள்ள பெருமாளுக்கு வெண்ணை சாத்துவது விசேஷம் என்கிறார்கள்.  ஆலயம் பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தையதாம். மூலவர் சன்னதியில் பதினோரு தெய்வ சிலைகள் உள்ளது இந்த ஆலயத்தில் மட்டும்தானாம்.  இங்குள்ள மூலவரை நின்ற நாராயணன் என்று அழைக்க தாயார் செங்கமலத் தாயார் என அறியப்படுகிறார். பெருமானுடன் ஜம்பாவதியும் சேர்ந்து உள்ளது இந்த ஆலயத்தில் மட்டும்தானாம். ஆலயத்தின் சிலப் படங்களைக் கீழே காணலாம்.

 மேலே உள்ள இரண்டு படங்களுக்கும் நன்றி படம் நன்றி