Wednesday, August 22, 2012

Chithambara Manmiyam -12

சாந்திப்பிரியா

பாகம்-12


காளியின் கர்வபங்கம் அடங்கியக் கதை 

ஒரு முறை சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகின்றது. நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை 'சக்தி இல்லையேல் சிவனும் இல்லை' என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சபித்து விடுகிறார். சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி அழுது புலம்பி தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொள்ள சிவன் கூறினார் ' இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களின் சார்ப்பில் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். அப்போது நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். அங்கு  உன்னுடன் சேர்ந்து நடனமாடி உன்னை என்னுடன் மீண்டும் அழைத்துக் கொள்வேன்'.
காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களை துன்புறுத்தி வரலானான். தேவர்களும் ரிஷி முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். ஆகவே அவனை அடக்க சிவபெருமானும் காளி உருவில் இருந்த பார்வதியை அனுப்ப அவனை யுத்தம் செய்து வதம் செய்த பார்வதியின் உக்ரஹம் அடங்காமல் போயிற்று. வெறி கொண்டு ஊழித் தாண்டவம் என்ற நடநாத்தை ஆடத் துவங்கினாள். சிவபெருமானை விட தானே உயர்ந்தவள் என்ற எண்ணம் அவள் மனதில் தொடர்ந்து கொண்டு இருந்தது. ஆகவே அவளது கோபத்தை தணித்து அவளுடைய அகங்காரத்தை அடக்க நினைத்தவர் அவளை நடனப் போட்டிக்கு அழைத்தார். அந்த போட்டியின் விதிப்படி போட்டியில் தோற்பவர்கள்   அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும். 
நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் கடவுட்களும் ஆயிரக்ககணக்கான இசை ஒலிகளை எழுப்ப காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி நிற்காமல் தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான் திடீரென ஊர்த்துவத் தாண்டவம் என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர் தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து காலை மேலே தூக்கி தனது காதில் அணிந்து கொள்ள, அதே ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது.  பெண்ணினால் எப்படி காலை மேலே தூக்கிக் காட்டுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள். அவளது உக்ரஹமும் குறைந்தது. அந்த ஊரின் எல்லைக்குச் சென்று தில்லைக் காளி அம்மனாக அமர்ந்து கொண்டாள். சிதம்பரத்தில் தில்லை நடராஜர் மற்றும் தில்லைக் காளி அம்மன் எனும் இரண்டு ஆலயங்களும் ஒன்றுடன் ஒன்று சில நூறு அடி தூரத்தில்தான் அமைந்து உள்ளது.
--சிதம்பர மான்மியம் நிறைவுற்றது--

Chithambara Manmiyam - 11

சாந்திப்பிரியா


பாகம்-11

சோழ மன்னன் அமைத்த ஆலயம்

காலம் ஓடியது. வியாக்கிரபாத முனிவர் ஆணைப்படி இரண்யவர்மர் நடராஜப்  பெருமானுக்கு (அங்கு நடனம் புரிந்த சிவபெருமானுக்கு - அது தனிக் கதை ) திருவம்பல ஆலயத்தையும், திருமூலாடேஸ்வரருக்கு ஒரு திருக்கோவிலும், தில்லை வாழ் அந்தணர்களுக்கு வீடுகளும் கட்டுவித்து அவர்களைக் குடியேற்றினார்.
பதஞ்சலி முனிவரைக் கொண்டு சிவகணப்படி நியமங்களை எழுதச் செய்து அதை யானை மேல் ஏற்றி தில்லைக்  கோவிலை வலம்  வரச் செய்தப் பின் கனகசபைக்கு எடுத்துச் சென்று  பூஜா விதிகளை அமைத்தார்.
நித்ய பூஜை, ஆண்டு பூஜை,  ஆணி உற்சவம், பவித்திரம் சாத்துதல்,  ஆடி நீர் விளையாட்டு உற்சவம், மார்கழி மற்றும் தைபூச திருப்பாவாடை போன்றவற்றை விதிப்படி செய்ய ஏற்பாடுகளை செய்தார்.
இப்படியாக சோழ மன்னன் இரண்யவர்மானால்  சிவாலயம் அமைக்கப்பட்டு இருந்தாலும், பூமியிலே முதன் முதலாக தோன்றிய திருக் கோவிலாக சிதம்பரமே இருந்தது என்பதின் காரணம் கட்டிடம் என்ற அமைப்பில் அங்கு சிவாலயம்  சோழ மன்னன் காலத்தில் தோன்றினாலும், அந்த தில்லை வனத்தில் காலமறியாக் காலம் முதலே சிவகங்கைப் பகுதியில் இருந்த சிவலிங்க உருவிலான சிவபெருமானை முனிவர்களும், ரிஷிகளும் ஆலயக் கடவுளாகவே வணங்கி வந்துள்ளனர். அவரே பின்னாளில் கட்டிடமாக அமைந்த கனக சபையில் குடி புகுந்தார். ஆகவே சிவபெருமான் அங்கிருந்த காலமும் விளங்கவில்லை. பூமியிலே புனிதமான விசேஷ தலங்களில்  மட்டுமே ஆலயங்கள் எழுகின்றன.  புண்ணியம் செய்தவர்களினால் அது அமைக்கப்படுகிறது.  புண்ணியங்களை செய்தவர்களால் மட்டுமே அங்கும் செல்ல முடிகிறது. சிதம்பரத்திலோ புண்ணியம் செய்யாமலேயே ஒருவர் செல்ல முடியும். புண்ணியத்தை தம்முடன் கொண்டு வர முடியும்.
புண்ணியத் தலங்கள் என்பவற்றுக்கு சில உருவகங்கள் உள்ளன. அவை சித்தர்கள் தவம் செய்த இடங்கள், இயற்கை அற்புதங்கள் நிகழ்ந்திருக்கும்,  சர்பதோஷங்கள் இருந்திராது, வம்சாவளியினரின் சாபங்கள் இருக்காது, அந்த பூமிக்கு அடியிலே கண்களுக்குப் புலப்படாத புனித நதிகளின் ஓட்டம் இருக்கும், ஸ்தல விருட்ஷங்கள் இல்லாமல் இருக்காது (ஸ்தல விருட்ஷங்கள் இல்லாத ஆலயங்கள் ஆவியற்ற உடலைப் போன்றது என்பார்கள்). இப்படிப் பலப் பல சிறப்புக்களைக் கொண்டதாகவே புண்ணியத் தலங்கள் இருக்கும். ஆலயங்களை அமைக்கும் முன்னர் அந்த பூமியின் சிறப்புக்களை அறிந்து கொள்ள  அந்த பூமியின் மீது  விநாயக  பகவானை வேண்டிக் கொண்டு சிறப்பு பூஜையை செய்து  அதன் முடிவில் அந்த இடத்திலேயே  சிறந்ந்த ஜோதிடரை  அழைத்து வந்து ஜோதிடம் அல்லது பிரசன்னம் பார்ப்பார்கள். அவற்றில் நன்மை தீமைகள் தெரிந்து விடும்.  அதற்கேற்பவே  அந்த இடங்களில் அமையும் ஆலயங்களின் கட்டிடப் பணி - எங்கு, எதை அமைப்பது என்பன- துவங்கும். 
அந்த காலங்களில் கடவுளே நேரில் வந்து முனிவர்களிடம் அந்த இடத்தின் மகிமையை எடுத்துக் கூறுவார்கள்.  ஆலயங்களை அமைப்பவர்களின் கனவில் வந்து இப்படி, அப்படி என எடுத்துக் கூறுவார்கள். அவற்றை காலப் போக்கில் வாய்மொழி மூலம் வம்சாவளியாகப்  பரவி வந்தன. காலம் மாறுவதினால் அது பிரசன்னத்தில் முடிவடைந்துள்ளது.  ஆனால் பின் காலத்தில்  பல்வேறு இடங்களிலும்  ஆலயங்களை அமைப்பது ஒரு வாடிக்கைப் போக்காகி விட்டது.  ஆகவே ஆலயங்கள் அனைத்துமே புண்ணியத் தலங்களில் அமைந்தவை  என்று கூற முடியாது.
சிதம்பரத்தில் சிவபெருமான் நடராஜர் அல்லது தில்லைக் கூத்தன் அதாவது தில்லையில் கூத்தாடியவர் என்று அழைக்கப்படுகிறார். கூத்தாடியவர் என்றால் நடனமாடியவர் என்று பொருள் கொள்ள வேண்டும்.  இந்த ஆலயத்தில்  விசேஷம் என்ன என்றால் சிவபெருமான் மூன்று வடிவங்களில் இங்கு உள்ளார். நடனமாடும் நடராஜராக, உருவமற்ற சிவலிங்கமாக பளிங்குக் காண்ணாடியிலான சந்திர மவுலீஸ்வரராக, ஆகாய லிங்கம் எனும் யந்திர வடிவிலாக  அவர் இந்த ஆலயத்தில் உள்ளார்.
இந்த ஆலயத்தில் உமாதேவியார் அவருக்கு துணைவியாக சிவகாமி அம்மாள் என்ற பெயரில் வீற்று உள்ளார். சிதம்பரத்தில் அவரை ஏன் நடராஜராக காட்டுகிறார்கள் என்றால் அவர் அங்குதான் நடனம் ஆடி காளி தேவியின் கோபத்தை அடக்கினார். அதற்கும் ஒரு கதை உள்ளது.
..........தொடரும் 

Monday, August 20, 2012

Cithambara Manmiyam - 10

சாந்திப்பிரியா

பாகம்-10
இரண்யவர்மர்  சோழ மன்னனான கதை

தில்லையில் இருந்த மூவாயிரம் அந்தணர்களும் அந்தர்வேனிக்கு சென்றார்கள். இரண்யவர்மனும்  வியாக்கிரபாத முனிவரது இரண்டாவது மகனைப் போலவே  இருந்து கொண்டு அனைவருக்கும் தொண்டு செய்து கொண்டு இருந்தவண்ணம் அவர்களுடன் இருந்து வந்தார்.
இப்படி இருக்கையில் கெளட தேசத்தில் ஆட்சியில் இருந்த மனு மன்னன் மரணப் படுக்கையில் இருந்தார். ஆகவே தனது ராஜ்யத்தை மூத்தக் குமாரனான சிங்கவர்மனிடம்  ஒப்படைக்க விரும்பினார்.  அவர் சிவபெருமானின் அருளினால் தில்லையில் உடல் கோளாறு நீங்கி சேவை செய்து கொண்டு இருந்த நிலை அவர் செவியையும் எட்டி இருந்தது என்பதினால் இனி ராஜ்ய பாரத்தை தனது மூத்த மகனான சிங்கவர்மர்  எனும் இரண்யவர்மர்  ஏற்க வேண்டும்  என எண்ணினார். ஆனால் அவர் இருந்த  இடத்துக்கு தம்மால் செல்ல முடியவில்லை என்பதினால் வசிஷ்ட முனிவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டு சுவர்க்கத்தை அடைந்தார்.
மனு மன்னன் மரணம் அடைந்தப் பின் அவரது இறுதிக் கிரியைகளை இளைய மகன்கள் மூலம் செய்து கொடுத்தப் பின், தற்காலிகமாக ஒரு மன்னனை நிறுவி வைத்தப் பின், வசிஷ்ட முனிவர் தென் திசைக்கு இரண்யவர்மரைக்  காண கிளம்பிச் சென்றார்.
தில்லைவனத்தை அடைந்த வசிஷ்ட முனிவரும் வியாக்கிரபாத முனிவரது பர்ணசாலையை அடைந்து சிவகங்கையில் முழுகி ஸ்நானம் செய்தப் பின் அங்கிருந்த மூன்று சிவலிங்கங்களுக்கும் பூஜைகள் செய்து வழிபட்டப் பின்னர் வியாக்கிரபாத முனிவரிடம் தான் வந்த விவரத்தைக் கூறினார். தனது தந்தை சுவர்க்கம் அடைந்த சேதியைக் கேட்ட இரண்யவர்மர் துக்கம் அடைந்தார். அதே நேரத்தில் பதஞ்சலி முனிவரும் அங்கு வந்து சேர மூன்று முனிவர்களும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டப் பின் நடக்க வேண்டிய காரியத்தை  செய்யத் துவக்கினார்கள்.
துக்கத்தில் இருந்த இரண்யவர்மரை தேற்றிய வியாக்கிரபாத முனிவர் அவரை வசிஷ்டருடன் அழைத்துக் கொண்டு போய் சிவகங்கை நதியில் ஸ்நானம் செய்வித்து சிவலிங்கங்களுக்கு பூஜித்தப் பின் தமது ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு விருந்து உண்டு களைப்பாறியப் பின் வசிஷ்ட முனிவர் அவர்களிடம் கெளட தேச மன்னன் தனது மூத்த மகனை  ராஜ்ய பரிபாலனத்தை ஏற்க ஏற்பாடு செய்யுமாறு தம்மை அனுப்பி உள்ளதினால் அதற்கான ஒரு முடிவை எடுக்குமாறு அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட வியாக்கிரபாத முனிவர் இரண்யவர்மரை நோக்கி ' உன் விருப்பம் என்னவென்றுக் கூறுவாயாக' என ஆணையிட்டார். இரண்யவர்மரோ  தாம் அங்கிருந்து கொண்டு சிவசேவை செய்து கொண்டிருப்பதையே விரும்புவதாகக் கூறினார்.
அதைக் கேட்ட வியாக்கிரபாத முனிவர் 'நீ சிவ சேவையே பெரும் சேவையாக நினைப்பதினால், உடனே  வசிஷ்ட முனிவருடன் கிளம்பிச் சென்று ராஜ்ய பரிபாலனத்தை ஏற்க வேண்டும். அதன் பின் உனது யானை, தேர் மற்றும் பிற வீரர்களையும் அழைத்துக் கொண்டு இங்கு வருவாயாக. வரும்போது அந்தர்வேனியில் தங்கி உள்ள மூவாயிரம் அந்தணர்களையும் உம்முடன் அழைத்து வர வேண்டும்' என ஆணையிட்டார்.
அதன் பின் இரண்யவர்மர்  தனது தந்தையாக ஏற்றுக் கொண்ட வியாக்கிரபாத முனிவர், அவர் பத்தினியான தனது வளர்ப்புத் தாய், பதஞ்சலி முனிவர் என அனைவரையும் சிரம் தாழ்த்தி  வணங்கி விட்டு வசிஷ்ட முனிவருடன் தனது நாட்டிற்குச் சென்று அரச பதவியை ஏற்றுக் கொண்டார். சிலகாலம் அங்கு தமது சகோதரர்களுடன் தங்கி இருந்தப் பின் தம்பிமார், மந்திரிமார், காலாட், தேர், யானைப் படை என அனைத்து படை வீரர்களுடன் கிளம்பி தில்லைவன எல்லையை அடைந்தார். தாம் வரும்போது தமக்கு கொடுக்கப்பட்ட ஆணைப்படி அந்தர்வேதியில் இருந்த மூவாயிரம் அந்தணர்களையும் தமது தேர்களில் ஏற்றிக் கொண்டு வந்திருந்தார்.
அங்கு வந்த அந்தணர்களை தேரில் இருந்து இறக்கியப் பின் ' பிரபோ, தாங்கள் கூறியபடி மூவாயிரம் அந்தணர்களையும் யாம் அழைத்து வந்து விட்டோம்' என்று கூற, வியாக்கிரபாத முனிவரும் 'மூவாயிரம் அந்தணர்களில் யாரையும் விட்டு விட்டு வந்திருக்க மாட்டீர்களே? இருந்தாலும் வந்துள்ளவர்கள் எத்தனைப் பேர் என அவர்களை எண்ணிக் காட்டி விடுங்கள்' என்று கேட்க இரண்யவன்மனும் அவர்களை வியாக்கிரபாத முனிவருக்கு எண்ணிக் காட்டினார். என்ன குழப்பம், எப்படி எண்ணிப் பார்த்தாலும் மூவாயிரம் அந்தணர்களில் ஒருவர் குறைவாகவே இருந்தார்கள். அதைக் கண்ட  அனைவரும் அஞ்சி நடுங்கிக் கொண்டு கனக சபைக்கு சென்று முறையிட, அவர்கள் முன்னால் தோன்றிய சிவபெருமானோ ' யாவரும் அஞ்சேல். இங்குள்ள அந்தணர்கள் எமக்கு ஒப்பானவர்கள். அவர்கள் யாவரும் எம்முள் ஒருவர். முன்னர் இருந்தது இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது (2999) அந்தணர்களே. ஆனால் அதில் ஒன்று நாமாகவே இருந்ததினால்தான் அவர்கள் எண்ணிக்கை மூவாயிரம் என இருந்தது' என்று கூற அனைவரும் சிவபெருமானின் கருணையை எண்ணி வியந்தார்கள்.
அதன் பின் இரண்யவர்மர்  கனக சபைக்கு கிழக்கு திக்கிலே ஒரு நகரை உருவாக்கிக் கொண்டு அங்கு தங்கினார்.
சில காலம் கழிந்தது. சிதம்பரத்திலே அனைவரும் சிவபெருமானின் நித்ய தரிசனத்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்திருந்தார்கள். அப்போது வியாக்கிரபாத முனிவர் கூறினார் ' இந்த தேசத்தை (சிதம்பரத்தை) ஆள  வேண்டியவன் இரண்யவர்மனே. அவன் தம்பிமார்கள் ஆள வேண்டியது கெளட தேசத்தை என்பதினால் அவரவர் அவரவர் பூமிக்கு  செல்லலாம்' என ஆணையிட, பதஞ்சலி முனிவர் முதல் உபமன்யு முனிவர் மற்றும் அனைத்து அந்தணர்களும் அதை ஆமோதிக்க, வியாக்கிரபாத முனிவர் இரண்யவர்மருக்கு   புலிக் கொடி ஒன்றைக் கொடுத்து அவருக்கு விவாஹம் செய்து வைத்து அந்த ராஜ்யத்தின் மன்னனாக  முடி சூட்ட, இரண்யவர்மரும் சோழ மன்னனாக அங்கே ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொண்டார். அவர் தம்பிமார்களோ முனிவரின் ஆணையை ஏற்று கெளட தேசம் சென்று அங்கு நல்லாட்சி தரலானார்கள்.
.....தொடரும் 

Chithambara Manmiyam - 9

சாந்திப்பிரியா


பாகம்-9

சிங்கவன்மர் இரண்யவர்மர் ஆனக் கதை

அதன் பின் ஒருநாள் அந்த வேடனிடம் தான் பூமியிலே உள்ள சிவ ஸ்தலங்களை வழிபட்டுக் கொண்டு இருப்பதாகவும் அந்தப் பகுதியை சுற்றி வேறு எங்கும் வழிபடும் தலம் உள்ளதா எனக் கேட்டார்.  அவனும் அவரை தில்லை வனத்துக்கு அழைத்துப் போவதாகவும், அங்கு உள்ள  முனிவரை சந்தித்தால் அந்த இடத்தின் மேன்மையை அவர் கூறுவார் என்று கூறியப் பின்  யோகத்திலே அமர்ந்திருந்த வியாக்கிரபாத முனிவர் இருந்த இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றான். வியாக்கிரபாத முனிவரைக் கண்ட சிங்கவர்மர்  அவரை நமஸ்கரித்து கண்களில் கண்ணீர் தழும்ப அவரிடம் தனது வரலாற்றை எடுத்துரைத்தார். தாம் உடல் கோளாறு கொண்டதினால் அரசாளத் தகுதி இன்றிப் போய்விட்டதாகவும், ஆகவே பல இடங்களுக்கும் சென்ற வண்ணம் குறைந்த பட்ஷம் முக்தி இன்பத்தையாவது பெறமுடியுமா என்பதற்காக  இடமிடமாகச் சென்று சிவபெருமானை தரிசனம் செய்து கொண்டு வருவதாகவும்,  இங்கும் முக்தி இன்பம் (மோட்ஷம் பெறுவதற்கான வழி முறை ) கிடைக்குமா என்பதை அறிந்து கொள்ளவே வந்ததாகவும் கூறினார்.
அதைக் கேட்ட வியாக்கிரபாதரும் அவருடைய மனக் குறையை அறிந்து கொண்டு அவர் மீது இறக்கம் கொண்டார். அவரை அங்கேயே அமர்ந்து இருக்குமாறு கூறி விட்டு பதஞ்சலி முனிவரிடம் சென்றார்.  அவரிடம் சிங்கவர்மனின் கதையை கூறிய பின் என்ன செய்யலாம் என இருவரும் ஆலோசனை செய்தார்கள். முடிவாக அவர்கள் இருவரும் சிவபெருமானிடமே சென்று முறையிடலாம் என முடிவு செய்து விட்டு  கனக சபையின் வாயிலிலே சென்று நின்று கொண்டு சிவபெருமானிடம் மனமுருகி வேண்டினார்கள் 'எம்பெருமானே, இங்கு கெளடதேசத்தை சேர்ந்த குமாரன் ஒருவன் வந்து உம்மை சரணடைந்து நிற்கிறான். அவனது உடல் குறையை  நீக்கி, அவனுக்கும் உமது திருக்காட்சியைத் தந்து அவனை உமது அடிமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்'.
அதைக் கேட்டு இரக்கம் கொண்ட நடன சபாபதி அவர்கள் முன் தோன்றினார். அதன் பின் அவர் 'முனிவர்களே, உங்கள் வேண்டுகோட்களை கேட்டேன். அந்த குமாரனை முதலில் பொற்றாமரை குளத்திலே ஸ்நானம் செய்யுமாறு  கூறியப் பின்  இங்கு அழைத்து வாருங்கள் ' என்று கூறி அனுப்ப அவர்களும் உடன் கிளம்பிச் சென்று சிங்கவர்மரை சிவகங்கை நதியிலே குளிக்கச் செய்து அவரை கனக சபைக்கு அழைத்து வந்து அங்கு நமஸ்கரிக்கச் சொன்னார்கள்.
அவரும் அதுபோலவே செய்தப் பின் கனக சபைக்கு வந்து  நமஸ்கரித்து எழுந்தவுடன் ஆனந்த நடராஜர் அவருக்கும்  காட்சி தந்தார். அவர் காட்சியைப் பெற்ற சிங்கவர்மரின் உடல் கோளாறு அந்தக் கணமே மறைந்தது. அவர் நல்ல உடல் நிலையுடன் தோற்றம் கொண்டார். ஆகவே அவர்  இரண்யவர்மன் என்ற பெயரைப் பெற்றார். இரண்ய என்பது விடுதலைப் பெற்ற என்பதாகும். கண்களில் தாரை தாரையாக ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட, நெஞ்சம் சிலிர்க்க, நெஞ்சே வெடிக்க, நடராஜர் முன்னிலையில் விழுந்து விழுந்து வணங்கி ஆனந்தம் மேற்பட அழுதார். அதன் பின் அவரிடம் சிவபெருமான் கூறினார் ' இரண்யவர்மனே , இன்று முதல் நீயும் இங்கேயே தங்கி இருந்து நமக்கும், வியாக்கிரபாதா முனிவர் , பதஞ்சலி முனிவர் மற்றும் இங்குள்ள மூவாயிரம் முனிவர்களுக்கும் தொண்டு செய்து வருவாயாக' என்று ஆசிர்வதித்தார்.
அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த வியாக்கிரபாதா முனிவர் அங்கிருந்து கிளம்பி இரண்யவர்மனை  தன்னுடன் அழைத்துச் சென்று தமது மனைவியிடம் சென்று கூறினார் 'பத்தினிப் பெண்ணே , உபமன்யுவிற்குப்  பிறகு நீ பெற்றேடுக்காதப் பிள்ளை இவர் ' என்று அவரை அறிமுகம் செய்து அவர் வரலாற்றைக் கூற, இரண்யவர்மரும்  'தாயே , என்னை ஆசிர்வதியுங்கள்' என்று கூறி விட்டு அவள் காலில் விழுந்து வணங்கினார். அன்று முதல் இரண்யவர்மரும் அவர்களுடனேயே தங்கி இருந்து அனுதினமும் சிவகங்கையிலே நீராடி சிவபெருமானை ஆராதித்து, முனிவர்களுக்கு தொண்டு செய்தவாறு அங்கு இருந்து வந்தார்.

.....தொடரும் 

Chithambara Manmiyam - 8

சாந்திப்பிரியா


பாகம்-8

சிங்கவன்மர்  கதை

இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காமல் இன்னொருவரும் தில்லைவனத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தார். இந்த பிரபஞ்சத்தை சிவபெருமான் படைத்தபோது சூரியனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் மனு மற்றும் யமன் என்பவர்கள் ஆவர். பாவங்கள் செய்தவரை பூமியிலே தண்டிக்க மனுவும், இறந்தப் பின் அவர்கள் செய்த பாவத்துக்கு தண்டனைத் தர யமனும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள்.
மனுவானவர் இமயமலையின் தெற்கே உள்ள கெளட தேசத்தில் ஆட்சியில் இருந்தார். அவர் வம்சத்தை சேர்ந்த நான்கு மனுக்கள் ஆட்சி புரிந்து மறைந்தப் பின் ஐந்தாம் மனுவிற்கு இரண்டு மனைவிகள் அமைந்தார்கள் . அவர்களில் மூத்தவளுக்கு உடல் முழுவதும் சிங்கம் போல இருக்க சிவந்த தேகத்தைக் கொண்ட சிங்கவர்மர் என்ற பிள்ளையும், இளையவளுக்கு பேரழகான பிள்ளையாக தேவவர்மனும் பிறந்தார்கள்.
உடல் முழுவதும் சிங்கம் போல தேகத்தைக் கொண்ட சிங்கவர்மர், அந்த உடல் கோளாறினால் ஆளுமைக்கு தகுதியானவனாக இல்லை என்பதினால், இனி இந்த ராஜ்யத்தில் இருந்து அவமானப்படக் கூடாது என எண்ணினான். ஆகவே ராஜ்யத்தில் அவமானமான தோற்றத்தில் உள்ள  உடல் கோளாறுடன் இருப்பதை விட யார் கண்களிலும் படாமல் கிளம்பி  பூமி எங்கும் சுற்றித் திரிந்து,  அங்காங்கே உள்ள இடங்களில் சிவதரிசனம் செய்து கொண்டு இருந்தால் எதோ முக்தியாவது கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டு, தனது தந்தையாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தன்னை முற்றிலுமாக போர்வையினால் மறைத்துக் கொண்டு கெளட தேசத்தில் இருந்துக் கிளம்பிச் சென்றான். முதலில் காசிக்குச் சென்று, அங்கு கங்கையில் ஸ்நானம் செய்தப் பின் அங்கிருந்த விஸ்வநாதரை வணங்கித் துதித்தார். அதன் பின் வங்க தேசம், ஓடித (ஒரிசா) மற்றும் தெலுங்கு தேசம் என பல இடங்களுக்கும் விஜயம் செய்து சிவபெருமானை தரிசித்து மகிழ்ந்தார். அங்காங்கே செல்லுகையில், அந்தந்த ஊர்களின் விசேஷ வழிபாட்டு இடங்களைக் கண்டறிந்தும், கேட்டறிந்தும், அங்கெல்லாம் சென்று சிவதரிசனம் செய்தார்.
இப்படியாக இடமிடமாக அலைந்து கொண்டு இருந்தவர் ஸ்ரீ சைலத்துக்கு சென்றப் பின் மற்றொரு ஊரை நோக்கி வனப் பகுதி வழியே நடந்து கொண்டு இருக்கையில் வழியில் ஒரு வேடனை சந்தித்தார். அவனிடம் 'ஐயா, இந்த வனப் பகுதியில் விசேஷமான தலம் ஏதும் உண்டா ?' என வினவினார். அதற்கு பதிலளித்த வேடனும் 'ஐயா, இங்குள்ள வனத்துக்குள் ஒரு ஆற்றங்கரை உள்ளது. அதனருகில் ஒரு முனிவர் அமர்ந்து இருக்கிறார். காலையும், மாலையும் இளம் பெண் ஒருத்தி அங்கு வந்து இரண்டு வேளையும் அவர் மீது பூமாரி பொழிந்து விட்டுச் செல்கிறாள். ஆனால் அது பற்றி மேற்கொண்டு விவரம் யாம் அறியாம்' என்று கூறினான்.
அந்த வேடனிடம் அவன் குறிப்பிட்ட இடத்தின் வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டு அவன் துணையுடன் அந்த இடத்தை அடைந்தார். அதுவே திருவேங்கடம் எனும் இடத்தில் இருந்த சிவலிங்கமாகும். சிங்கவர்மரும் அங்கேயே தங்கிக் கொண்டு தாமும் இருவேளையும் அதற்கு பூக்களை சூட்டி, வழிபட்டு வந்தார். அந்த வேடனும் தினமும் கொண்டு தந்த தேன், தினை, கனிகள் மற்றும் காய்களை உண்டபடி சிலகாலம் இருந்தார்.

......தொடரும் 

Saturday, August 18, 2012

Chithambara Manmiyam - 7

சாந்திப்பிரியா


பாகம்-7

பிரும்ம தேவர் செய்த யாகம்

வியாகிரதபாதா முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் போன்றோரும் முனி ரிஷிகளும் தில்லை வனத்திலே சிவபெருமானை தரிசனம் செய்து கொண்டிருந்த வேளையிலே பிரும்ம தேவர் கங்கைக் கரையில் ஒரு யாகத்தை செய்யத் துவங்கி இருந்தார். ஆகவே தில்லையில் வாழ்ந்து வந்த அந்தணர்களையும் முனிவர்களையும் அதற்கு அழைத்து வருன்மாறு நாரத முனிவரை அவர் தில்லை வனத்துக்கு அனுப்பினார். அங்கு சென்று அனைவரையும் அழைத்த நாரத முனிவரிடம் அந்தணர்களும், முனிவர்களும் 'மாபெரும் முனிவரே, நாங்கள் இந்த தில்லை வனத்திலே ஆனந்தமயமான அமிர்தம் பருகுவதைப் போல போன்ற காட்சியை ரசித்துக் கொண்டு இருப்பதினால், இதை விட மேலானது எதுவுமே இருக்க முடியாது  என்பது தெளிவாகிறதினால் , உங்கள் அவிர்பாகத்தை ஏற்க எம்மால் வர இயலாது'  எனப் பணிவோடு கூறியப் பின் நடந்த இனிய நிகழ்ச்சிகளை விவரமாக எடுத்துக் கூறினார்கள். அன்புடன் அவரை வழி அனுப்பினார்கள். 'அடடா...இவர்கள் கூறுவதைப் பார்த்தால் நானும் அல்லவா அந்த அற்புதத்தைக் காணாமல் இத்தனை நாளும் இருந்துள்ளேன்.  ஆகவே உடனே சென்று பிரும்ம தேவரையும் அழைத்து வந்து அவருக்கும் இந்த அற்புதத்தைக் காட்ட வேண்டும்' என முடிவு செய்து விட்டு,  அந்தணர்கள் தன்னுடன்  வாராததினால் ஏமாற்றத்துடன் சென்ற நாரதர்  பிரும்ம தேவரிடம் சென்று நடந்தவற்றை விவரித்தார். அதைக் கேட்ட பிரும்ம தேவருக்கும் ' அந்த அற்புதத்தை நாமும் நேரிலே தரிசித்துவிட்டு, அமிர்தமயமான காட்சியை சுவைத்து விட்டு  வியாகிரதபாதா முனிவர் மூலம் அந்தணர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை இந்த யாகத்துக்கு அழைத்து வரலாம் என முடிவு செய்தார்.  அதன்படி நாரதரும், பிரும்ம தேவரும் தில்லைவனத்துக்குச்  மறுநாள் காட்சி தந்த சிவபெருமான்-உமையின் அற்புதக் காட்சியை மனதார ரசித்தப் பின்,  அங்கிருந்து மீண்டும் செல்ல மனமே இல்லாமல், ஆனால் யாகத்தை நிறைவடையச் செய்ய வேண்டுமே என்ற கவலையினால், வியாகிரதபாதா முனிவரிடம் சென்று நிலைமையை எடுத்துக் கூறினார்கள்.  அவர் மூலம் அங்கிருந்த அந்தணர்களையும், முனிவர்களையும் யாகத்துக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றாலும், யாகம் முடிந்தவுடன் அவர்கள் அனைவரும் மீண்டும் தில்லைவனத்துக்கே வந்து சிவ தரிசனம் பெறலாம் என்ற  ஏற்பாட்டை செய்ய அந்தணர்கள் பிரும்ம தேவரின் யாகத்துக்குச் செல்ல சம்மதித்தார்கள். அவர்கள் சென்று விட்டாலும்  வியாகிரதபாதா முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் இருவருமே தில்லைவனத்திலேயே தங்கி இருந்தபடி தினமும், சிவபெருமானின் ஆனந்த தரிசனத்தை மனம் குளிர கண்டவாறு இருந்தார்கள்.
..........தொடரும்

Chithambara Manmiyam - 6


சாந்திப்பிரியா


பாகம்-6

சிவபெருமான் தந்த தரிசனம்

தைபூசம் வியார்கிழமை அன்று விஷ்ணு பகவான் ஆதிசேஷனுக்கு வாக்களித்திருந்தபடி மதிய வேளையில், ஆயிரம் முகத்தைக் கொண்டவர் எனக் கூறப்பட்ட பானுகம்பர் ஆயிரம் சங்கை ஊத, ஆயிரம் தோள் கொண்டவன் என வர்ணிக்கப்படும் வாணாசுரன் முரசொலிக்க, பஞ்ச துந்துபி ஒலியும் வேத கானமும் முழங்க ஞான சபையிலே சிவபெருமான் தனது இடப்புறத்தில் உமா தேவியோடு அனைவருக்கும் காட்சி தந்தார்.
வியாக்கரபாத முனிவர், பதஞ்சலி முனிவர், உபமன்யு முனிவர் மற்றும் பிரும்மா, விஷ்ணு என கடவுட்கள், ஆயிரமாயிரம் தேவர்கள், மூவாயிரம் அந்தணர்கள் என அனைவரது மத்தியிலும் தோன்றிய சிவபெருமானின் எழில் தோற்றத்தைக் கண்ட அனைவரும் மெய் சிலிர்த்து, நெஞ்சம் நெகிழ, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி ஓட சிவனந்தம் எனும் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள்.
அப்போது பதஞ்சலி முனிவர் கூறினார் 'எம்பெருமானே, இந்த ஞான சபையிலே உமாதேவியோடு இன்று முதல் எக்காலமும் பூவுலகில் உள்ள ஆன்மாக்களுக்கு (பூமியில் உள்ள மனிதப் பிறவிகளுக்கு) உம்முடைய ஆனந்த காட்சியை காட்டியவாறே வர வேண்டும்' என்று வேண்டினார். அவர் வேண்டுகோளுக்கு சிவபெருமானும் ததாஸ்து கூறினார்.
உடனடியாக அனைத்து தேவர்களுள் சடசடவென அங்கே பொன்னாலான மேடையை அமைத்து சபை ஒன்றையும் நிறுவினார்கள். அந்த ராஜாங்க அறையை கனக சபை என்றார்கள். அங்கு தங்கிய சிவபெருமான் அன்று முதல் அனைவருக்கும் அங்கு இருந்தபடி தரிசனம் தந்து கொண்டும், அங்கு வந்து தன்னை வணங்கி துதித்தவர்களை மோட்ஷத்துக்கும் அனுப்பி வரலானார்.
..........தொடரும் 

Friday, August 17, 2012

Chithambara Manmiyam - 5


சாந்திப்பிரியா


பாகம்-5பதஞ்சலி முனிவர் வருகை 

வியாக்கிரபாத முனிவர் தனது தந்தையார் மற்றும் மைந்தரான உபமன்யு முனிவர்களுடன் சிவ நடன தரிசனத்தை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சிவ பூஜை செய்தபடி அங்கிருந்தபோது, வைகுண்டத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
ஆதிஷேஷனுடைய உடல் மீது சயனித்துக் கொண்டு இருந்த விஷ்ணு பகவானின் உடல் திடீரென கனத்தது மட்டும் அல்ல அவர் எதையோ யோசனை செய்வது போல அப்படியும் இப்படியும் ஆடிக் கொண்டே இருந்தார். ஆடிக்கொண்டே இருந்ததினால் தன் மீது படுத்துள்ள விஷ்ணு பகவான் விழுந்து விடக் கூடாதே என்ற கவலைக் கொண்ட ஆதிசேஷன் மிகவும் பவ்யமாக விஷ்ணு பகவானிடம் அது குறித்துக் கேட்டார். பதில் ஒன்றும் கூறாமல் ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது இருந்து திடீர் என அதிகாலையில் எழுந்த விஷ்ணு பகவான் தனது நித்தியக் கடமைகளை செய்து முடித்தப் பின் தனது சிம்மாசனத்தில் சென்று அமர்ந்து கொண்டார். அதைக் கண்ட ஆதிசேஷன் அவரிடம் கேட்டார் ' பிரபோ, நீர் அடியேன் மீது முன்போல சயனித்து மெல்ல எழுந்திராது திடீர் என இன்று ஏன் இத்தனை விடியற்காலை எழுந்து விட்டீர்கள் ?. உங்களுடைய்ப் போக்கே இன்று மாறி உள்ளதே, அதன் காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?' என்று கேட்டார்.
அதற்கு விஷ்ணு பகவான் கூறினார் ' ஆதிசேஷா, நேற்று சிவபெருமான் பிட்ஷாடன வடிவம் கொண்டு, என்னை மோகினி அவதாரம் எடுக்கக் கூறி விட்டு என்னுடைய தேவாதார வனத்தில் வந்து பிட்ஷை கேட்கலானார். அப்போது அங்கு கூடி இருந்த நாற்பத்தேட்டாயிர முனிவர்களும் என்னைக் கண்டு மோகிக்க, அவர்களுடைய பத்தினிகளோ சிவபெருமானைப் பார்த்து மோகித்தார்கள். அதைக் கண்டு விட்ட அந்த முனிவர்கள் தமது பத்தினிகளை சபிக்காமல் அவர்களது மோகத்துக்கு ஆளாகி விட்ட சிவபெருமானை சபித்தார்கள். ஆனால் அவை எதுவுமே சிவபெருமானை ஒன்றும் செய்யவில்லை. ஆகவே கோபம் கொண்ட முனிவர்கள் சிவபெருமானை அழிக்க எண்ணி அபிச்சார ஹோமம் செய்தார்கள். அந்த ஹோம குண்டத்தில் இருந்து இருந்து ஒரு பயங்கரப் புலி வெளி வர, சிவபெருமான் அதை தம் கையினால் பிடித்துக் கொண்டு அதன் தோலை உருவி உடையாக உடுத்திக் கொண்டார். அதன் பின் ஹோமத்தில் இருந்து வெளிவந்த சர்பத்தை எடுத்து அதை சுற்றிப் பின்னி கையில் தனது கணையாழியாக அணிந்து கொண்டார். அதன் பின் வெளிவந்த முயலவனை கீழே தள்ளி அவன் முதுகெலும்பு முறியும் அளவிற்கு அவனை அழுத்தி அவன் மீது நின்று கொண்டார். அவனைத் தொடர்ந்து வந்த அக்கினியை தன திருக்கரத்திலே ஏந்திக் கொண்டார். அவர்கள் ஓதிய மந்திரங்களையும் தானே ஆவாஹித்துக் கொள்ள முனிவர்கள் செய்வதறியாது திகைத்தார்கள். 
பிட்ஷாடன வடிவத்தில் வந்திருந்தது சிவபெருமானே என்று அறிந்து கொண்டதும், அவரிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அதன் ஓபின் அவரிடம் தமக்கு தரிசனம் தந்து அருளுமாறு வேண்டிக் கொள்ள, சிவபெருமானும் மனம் இளகி, தேவி உமையோடு தனது ரிஷபத்தில் ஏறி வந்து ஆகாயத்தில் அவர்களுக்கு காட்சி தந்தார். நானும் மோகினி வேடத்தைக் களைந்து விட்டு அவரை அப்படியே வணங்கி நிற்க, இந்திரன், பிரும்மன்,என அனைத்து தேவர்களும், முனிவர்களும் அங்கு வந்து கூடி நின்று உமையோடு இருந்த சிவபெருமானை தரிசித்தார்கள். இனி நீங்கள் அனைவரும் நித்தம் சிவலிங்கத்தை தியானித்து வழிபடுங்கள் என்று கூறி விட்டு சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார். அந்தக் காட்சி என் கண்ணில் மீண்டும், மீண்டும் வந்து நிற்க என் நித்திரையும் அகன்றது, கனவும் கலைந்தது. அந்தக் கனவுக் காட்சியே என்னை புளகாங்கிதம் அடைய வைத்து தூங்க விடாமல் செய்தது. அந்த ஆனந்தக் காட்சியை உனக்கு எப்படிச் விளக்குவேன் , ஆதிசேஷா, அது மீண்டும் கிடைக்க முடியாததல்லவா ' என்றார்.
இவ்வாறாக சிவபெருமானின் தோற்றத்தைக் குறித்து விஷ்ணுவானவர் ஆதிசேஷனுக்கு கூறிக் கொண்டு இருக்கையில், ஆதி சேஷனின் மனதில் பெரும் ஆசை ஏற்பட்டது. 'ஆஹா.. விஷ்ணு பகவானே நிலை குலைந்து நின்று வணங்கிய அந்த அழகியக் காட்சியை என்னால் கண்டு களிக்க முடியாமல் போயிற்றே ...என்றாவது ஒருநாள் இந்த பாக்கியம் எனக்கும் கிட்டுமா?....என்ன இருந்தாலும் சிவனுக்கும் தொண்டு செய்வதில் எந்த தப்பும் இல்லையே....அவர் அருகில் இருந்திருந்தால் அந்த அற்புதக் காட்சியை நானும் கண்டு களித்திருக்கலாமே' என்று மனதில் எண்ணிக் கொண்டிருக்க, ஆதிசேஷனின் மனதில் ஓடிய எண்ணத்தை மஹாவிஷ்ணு புரிந்து கொண்டு இனி சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் காணும்வரை ஆதிசேஷன் மனதில் அந்த சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும், அவரால் எனக்கு நல்ல சயனத்தைக் கொடுக்க இயலாது, என்று கவலைப் பட, அதை புரிந்து கொண்டப் ஆதிசேஷனும் வருத்தமுற்றார். 
மகாவிஷ்ணு அவரிடம் கூறினார் ' ஆதிசேஷா, உன்னை நான் குறைக் கூற மாட்டேன். நானே சிவபெருமானின் நடனக் காட்சியைக் கண்டு சொக்கிப் போய் அல்லவா அதை அடக்க முடியாமல் உம்மிடமும் கூறினேன். ஆகவே அதைப் பார்க்க உமக்கு ஆவல் ஏற்படுவதில் வியப்பில்லைதான். அதற்கு நான் தடையாக இருப்பது தவறு. ஆகவே நீயும் பூலோகம் சென்று தக்க நேரத்தில் அந்தக் காட்சியை கண்டு களிக்க வேண்டும் என்று உனக்கு ஆசிகளைக் கூறுகிறேன்.
முன்னொரு காலத்தில் அத்ரி முனிவரும் அவர் மனைவி அனுசூயையும் திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள் அதற்கு ஏற்ப பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண் குழந்தையும் உண்டு. நீ பதஞ்சலியாகப் பிறக்கும் முன்னர் ஆதிஷேஷனாகவே நீ இருந்தாய். அப்போது உன்னை பிள்ளையாகப் பெற விரும்பி விஷ்ணுவான என்னை நோக்கித் தவமிருந்து உன்னை மகனாகப் பெற்றார்கள். ஆனால் நீயோ ஐந்து தலை நாகமாக அவர்களுக்கு பிறக்க அதைக் கண்டு அஞ்சியவர்கள் பயந்து போய் உன்னை கீழே போட்டுவிட கீழே விழுந்த நீயும் பதஞ்சலி என்ற உருவைப் பெற்றாய். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் பூமியிலே நீ விழுந்ததால் உன் பெயரும் பெயர் பதஞ்சலி என ஆயிற்று.
ஆகவே இப்போது நீயும் அதே பதஞ்சலி எனும் உருவம் கொண்டு நாகலோகத்துக்குப் போ. அதற்குள் ஒரு மலையும் அந்த மலைக்குள் ஒரு துவாரமும் உள்ளது. அந்த துவாரத்தின் வழியே நீ சென்றால் தில்லை வனத்தை அடையலாம். அந்த தில்லை வனத்தில் வடக்குப் பக்கத்தில் ஒரு ஆலமரம் இருக்கும். அங்கு மூல வடிவமாக உள்ள சிவலிங்கத்தை வியாக்கிரபாத முனிவர் என்பவர் ஸ்தாபித்து வைத்து உள்ளார். அந்த்ய முனிவரோ தான் சிவ நடனத்தையும், சிவபெருமானின் அபூர்வக் காட்சியையும் காண வேண்டும் என்று வேண்டியவாறு அந்த சிவலிங்கத்துக்கு பூஜை செய்து கொண்டு உள்ளார். நீயும் அங்கு சென்று அவரோடு சேர்ந்து பூஜை செய்தால் தைபூசம் வியாழர் கிழமை அன்று நாம் அங்கு வந்து சிவ தரிசனத்தைக் கண்டு களிக்க உதவுவோம். நீ அந்தக் காட்சியைக் கண்டு கழித்தப் பின் திரும்பி வரும்வரை உன் பிள்ளையை எனக்கு சயனிக்க அனுப்பி வை'.
அதைக் கேட்ட ஆதிஷேஷரும் அதி ஆனந்தம் அடைந்து விஷ்ணுவை பலவாறாக தோத்திரம் செய்து வணங்கினார். அடுத்து அவரிடம் விடைப் பெற்றுக் கொண்டு, தன் மகனை விஷ்ணு பகவானின் சயநாப் படுக்கையாக இருக்குமாறு ஏற்ப்பாடுகளை செய்தப் பின் பதஞ்சலி உருவம் கொண்டு நாகலோகத்துக்குப் போய், அங்கிருந்த பர்வதத்தை (மலை) வணங்கி நின்று அதன் தென்புறத்தில் இருந்த பிலாத்துவாரம் (வழி) வாயிலாக பூலோகத்தை அடைந்து அங்கிருந்து தில்லை வனத்தையும் சென்றடைந்தார்.
விஷ்ணுவானவர் கூறியது போல வடப் பகுதியில் ஆலமரத்தின் அடியில் வியாக்கிரபாத முனிவர் இருந்த இடத்தை அடைந்து அவரை சந்தித்து தமது வரலாற்றை எடுத்துரைத்து, தான் வந்த காரணத்தையும் கூறினார். அதைக் கேட்ட வியாக்கிரபாத முனிவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரை தம்முடன் இருந்தபடி சிவ பூஜையை செய்யுமாறு வேண்டிக் கொண்டார். இப்படியாக பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவருடன் சேர்ந்து கொண்டு தினமும் சிவகங்கையில் குளித்தப் பின் திருமூலாட்டேஸ்வரரையும், திருபுலீசமுடையாரையும் பூஜை செய்து வந்தார். திருபுலீசமுடையார் யார் என்றால் அது வியாக்கிரபாத முனிவர் ஸ்தாபித்த லிங்கம் ஆகும். சிவபெருமான் அவருக்கு புலி போன்ற உடல் வலிமையையும், நகங்களில் புலி நகத்தின் போன்ற சக்தியையும் தந்தப் பின் அந்த லிங்கத்தை அவர் ஸ்தாபித்ததினால் அது காலப்போக்கில் திருபுலீசமுடையார் என அழைக்கப்பட்டது.
இப்படியாக இருக்கையில் சில நாள் கழித்து தில்லை வனத்தின் மேல் பகுதியில் பதஞ்சலி முனிவர் ஒரு குளத்தைக் கண்டார். ஆகவே அங்கு சென்றவர் அங்கு ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து அதன் வலப்பக்கத்தில் ஒரு பர்ணசாலையை தனக்கென அமைத்துக் கொண்டு அங்கு தங்கி இருந்தவாறு மூன்று சிவ லிங்கங்களையும்- திருமூலாட்டேஸ்வரர், திருபுலீசமுடையார் மற்றும் தாம் ஸ்தாபித்தது என மூன்றையும் பூஜித்துக் கொண்டு இருந்தார்.
அவர் அங்கு வருவதற்கு முன்னரே மூவராக - மத்யன்திக முனிவர், வியாக்கிரபாத முனிவர், அவர் புதல்வரான உபமன்யு முனிவர் என மூவர் இருக்க பதஞ்சலி முனிவருடன் சேர்ந்து நால்வரும் அற்புதாமான சிவ தரிசனத்தைக் காண வேண்டும் என்று வேண்டியவாறு சிவனை நினைத்து பூஜை செய்து வரலாயினார்கள். பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாதரும் சிவனின் ஆனந்த தாண்டவ காட்சியைக் காண விரும்பினார்கள் என்பதினால் பின்னர் அந்த பரம்பொருளும் அவர்களுக்குத் தன் ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருளினார். அந்த நேரத்தில் அவர் (சிவபெருமான்) தன்னுடன் காசி நகரில் இருந்த மூவாயிரம் அந்தண  வேத விற்பன்னர்களையும் அங்கு வரவழைத்தார். அந்த வேத விற்பன்னர்கள் தான் இன்றைய சிதம்பரம் தீட்சிதர்கள் என்று ஒரு புராண கதையும் உள்ளது. பதஞ்சலி முனிவரும், வியாக்ரமபாத முனிவரும் செய்த இடை விடாத தவத்தினால் மனம் மகிழ்ந்தார் பரமேஸ்வரர். ஆகவே அவர் அவர்களுக்கு அருள் புரிவதற்கு அவர்கள் முன் தோன்றியபோது அவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் சிவபெருமானின் ஆனந்தக் கூத்தைப் கண்டு களிக்க வேண்டும் என அவரிடம் வேண்டிக் கொண்டபோது  தக்க  நேரத்தில் அதை செய்வதாக அந்த சிவனும் உறுதி கொடுத்தார்.
.........தொடரும்

Thursday, August 16, 2012

Chithambara Manmiyam -4சாந்திப்பிரியா


பாகம்-4
 
பால முனிவர் வியாக்கிரபாதர் ஆனக் கதை

தந்தையின் உபதேசத்தைப் பெற்றுக் கொண்ட தவப் புதல்வர்  தனது தாய் மற்றும் தந்தையை வணங்கி அவர்களுடைய ஆசிகளைப் பெற்றுக் கொண்டு  தென் திசையை நோக்கி தில்லைவனத்தைத் தேடித் பயணித்தார்.  அங்கும் இங்கும் சென்றவாறு இருந்தப் பின் முடிவாக தில்லைவனத்தை அடைந்தவர் அங்கிருந்த சிவகங்கை என்ற குளத்தில் நீராடிக் கொண்டு, அதன் அருகில் இருந்த ஒரு ஆல மர அடியையே தன் இருப்பிடமாக்கிக் கொண்டு, தினமும் அங்கு கரையில் இருந்த சிவலிங்க  பெருமானுக்கு பூஜைகளை செய்து வந்தார். அதோடு மட்டும் இல்லாமல் அங்கு திருமூலட்டாறு எனும் இடத்தில் இருந்த திருமூலட்டேஸ்வரரையும்  (சிவபெருமான்) வணங்கி பூஜித்து வந்தார்.
தில்லைவனம் என்பது சிதம்பரத்தில் உள்ளது. தில்லை என்பது ஒரு வகையான மரங்கள் ஆகும்.  சிதம்பரம் முதலில் தில்லை மரங்கள்  சூழ்ந்த வனமாகவே இருந்தது.  எந்த காலத்தில் என்று கணிக்க முடியாத காலத்தில் அதாவது வேத காலத்திலேயே அல்லது அதற்கும் முற்பட்டக் காலத்தில் என்று கூறலாம், சிதம்பரத்தின் பகுதி  அனைத்துமே  தில்லைக் காடாக இருந்தது. அப்படிப்பட்ட தில்லைவனத்தில்தான் ஒரு ஆல மரத்தின் அடியில் சிவகங்கை நதிக்குப் பக்கத்தில்  பால முனிவர் தங்கி இருந்தார்.
பால முனிவர் பல நாட்களாக அங்கு தங்கி இருந்தவாறு சிவ தரிசனத்தை செய்தவாறும், சிவ பூஜையை செய்தவாறும் இருந்தபோது  தான் வணங்கி வந்து கொண்டிருந்த திருமூலாட்டானேஸ்வரர் ஆலயத்தின் மேற்குப் பகுதியில் சற்று தள்ளி இன்னொரு குளம் இருப்பதைக் கண்டார். அந்த இடம்  அமைதியாக இருந்து கொண்டு சிவதரிசனம்  செய்யத் தனக்கு ஏற்றதாக  இருக்கும் என்று நினைத்தவர்  அந்த குளத்தின் அருகில் சென்று அங்கு ஒரு பர்ணசாலையை அமைத்துக் கொண்டு  அங்கேயே ஒரு சிவ லிங்கத்தை  ஸ்தாபித்துக் கொண்டார் . சிவலிங்கத்தை ஸ்தாபித்துக் கொள்வது என்றால், அந்தக் காலத்தில் கெட்டியான களிமண்ணுடன்  குங்குமம், மஞ்சள் மற்றும் வீபுதி போன்ற கலவைகளைக் கலந்து , அதை நன்கு காயவைத்து பத்திரமாக பூமியிலே மழை மற்றும் வெயில் படாத இடத்தில் மந்திரங்களை ஓதி  அந்த இடத்தை புனிதப் படுத்தி பாதுகாப்பாக   வைத்து அதையே தாம் மானசீகமாக வணங்கும் சிவபெருமானாக பாவிப்பார்கள்.  இப்படியாக ஸ்தாபித்த  அந்த சிவலிங்கத்தையும் முதலில் தான் வழிபாட்டு வந்த திருமூலாட்டானேஸ்வரரையும்  தினமும் வணங்கி பூஜித்து வந்தார்.
அங்கிருந்த வனப் பகுதிக்குச் சென்று  தினமும் பல பூக்களை பறித்து வந்து அந்த லிங்கங்களுக்கு பூஜை செய்து வந்தபோது, நாளடைவில் பூக்கள் கிடைப்பதும் அரிதாயிற்று. விடியற்காலை வேளைகளில் பனி பொழிந்து வெளியில் செல்வதும் கஷ்டம் ஆயிற்று.  பால முனிவராக இருந்தவர் அல்லவா. அவர் மன உறுதி பெற்றிருந்தது போல இயற்கையை எதிர்த்து நிற்க அவருடைய உடல் உறுதி படவில்லை.  ஆகவே ஒருநாள் அவர் பூஜை செய்யும்போது மனம் வருந்தி சிவலிங்கத்திடம் முறையிட்டு அழுதார்.
 ' பூக்களை விடிந்ததும் எடுக்கலாம் என்றால் வண்டு அதை சுவைத்து விடுகிறது, விடியும் முன் எடுக்கலாம் என்றால் வழியும் தெரியவில்லை, அது பக்குவமாகி விட்டதா என்பதும் புரியவில்லை ( பனிபடர்ந்த பிரதேசமாக இருந்ததினால் கண்களால் நன்கு பார்க்க முடியவில்லை என்ற பொருளில் அதாவது மலர்ந்த புஷ்பமா என்பது தெரியவில்லை), மரங்களில் ஏறினாலோ கால்கள் பனியால் வழுக்குகின்றன, பழுதில்லாத பூக்களைக் கொண்டு வந்து சிவ பூஜை செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்றே எனக்குப் புரியவில்லையே இறைவா'.
உண்மையான தன் பக்தனின் மனக் குமுறலைக் கேட்ட சிவபெருமான் மனம் மகிழ்ந்து அவர் முன் தோன்றினார். பால முனிவரிடம் கேட்டார்  'பக்தா, உனக்கு என்ன வரம் வேண்டும்?'. சிவபெருமானை தரிசனம் பெற்ற பால முனிவர் மகிழ்ச்சித் தாங்காமல் கூறினார் 'எம்பெருமானே, அடியேன்  மரங்களில் ஏறும்போது வழுக்காமல் இருக்க புலிக் கால் போன்ற திடமான காலையும் , அதில் உள்ள நகம் புலி நகம் போல வலிமைக் கொண்டதாகவும் தந்தால்  மரத்தின் மீது சிரமம் இன்றி ஏறுவேன், வழி பார்த்து நடந்து, பக்குவமான பூக்களைப் பறிக்க கால்களிலும் கைகளிலும் கண்களையும் கொடுத்தால் அப் பூக்களைக் கொண்டு வந்து நான் உம்மை தினமும் பூஜிக்க முடியும் எனும் வகைக்கு எனக்கு அருள் புரிய வேண்டும்'.  அதைக் கேட்ட சிவபெருமானும் மனம் மகிழ்ந்து  அந்த பால முனிவருக்கு அவர் கேட்டதை தந்து  அருள் புரிந்தார். அதுமட்டும் அல்லாமல் 'புலிப் பாதத்தைக் கொண்டவனாவாய்' என்று ஆசிர்வதிக்க  அன்று முதல் வியாக்கியம் என்றால் புலி என்றும் பாதர் என்றால் பாதத்தைக் கொண்டவர்  என்றும் பொருள் தரும் வகையில் அந்த பால முனிவர் தன் பெயரை வியாக்கியபாதர் என மாற்றிக் கொண்டார்.  
அது முதல் வியாக்கியபாதர் நாள்தோறும் விடியும் முன் இயற்கை  நியதிகளை முடித்துக் கொண்டு ஸ்நானம்  செய்தப் பின் பவித்திரமாக கோட்டுப் பூ, கொடிப்பூ, நிலப்பூ மற்றும் நீர்ப்பூ என்ற நான்கு அபூர்வ வகைப் பூக்களை பறித்து வந்து சிவ விதிப்படி நித்தமும் சிவனை பூஜித்துக் கொண்டு வெகுகாலம் அங்கிருந்தார்.
நாளடைவில் வியாக்கியபாதர் எனும் அந்த முனிவரின் பெயர் பல இடங்களிலும் பரவ, அவர் பிரபலமானார். அவர் நிறுவிய சிவலிங்கேஸ்வரரின் பெயர்  - புலி போன்ற தன்மையை வியாக்கியபாதருக்கு தந்த காரணத்தினால்  - திருபுலீஸ்வரர் என ஆயிற்று. பல முனிவர்களும் ரிஷிகளும் அங்கு வந்தார்கள். அவர் புகழைக் கேள்விப்பட்ட அவரது தந்தையான மந்தியந்தின முனிவரும் அங்கு வந்து பர்ணசாலையில்  தம் மகனுடன் தங்கி இருந்து கொண்டு சிவகங்கையிலே ஸ்நானம் செய்து  தன் புதல்வரான வியாக்கியபாதர் ஸ்தாபித்த சிவலிங்கத்தையும், திருமூலாட்டானேஸ்வரரையும் வணங்கி பூஜித்து வந்தார்.
இப்படியாக அவர்கள் அங்கிருந்தபடி சிவபூஜைகளை செய்து கொண்டு இருந்த காலத்தில் வியாக்கியபாதரின் புகழைக் கேள்விப்பட்ட வசிஷ்ட முனிவர் அங்கு வந்து சிவபெருமானின் அருள் பெற்று அவரை நேரடியாக தரிசனம் பெற்று இருந்த வியாக்கியபாதரின் புகழைக் குறித்த உண்மைகளைக் கண்டறிந்தப் பின், தனது சகோதரியை அவருக்கு மணமுடிக்க விரும்பினார். ஆகவே மாபெரும் முனிவரான வசிஷ்ட முனிவரின் விருப்பத்தை ஏற்று வசிஷ்ட முனிவரின் சகோதரியை  மணம் செய்து கொண்டு அவள் மூலம் ஒரு சத் புத்திரனை பெற்றெடுத்தார்.
அந்த சத்புத்திரனை வசிஷ்டரின் மனைவி அருந்ததி தன்னுடைய ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்று காமதேனுப் பசுவின் பாலைக் கொடுத்து சில நாள் வளர்த்தாள். சிறிது காலத்துக்குப் பின்னர் வியாக்கியபாதரின் மனைவி தனது புதல்வனை தன்னிடம் அழைத்து வந்து கிழங்கு பழம் போன்றவற்றை கரைத்த மாவுடன் அதற்குக் கொடுக்கத் துவங்க  அந்தப் பிள்ளையோ தனக்கு காமதேனுப் பசுவின் பால்தான் வேண்டும் என்று அழத் துவங்கியது. அவர்கள் காமதேனுப் பசுவின் பாலுக்கு எங்கே போவார்கள்?
ஆகவே வியாக்கியபாதர் அந்தக் குழந்தையைக் கொண்டு போய் திருமூலாட்டானேஸ்வர் சன்னதியில் கிடத்தினார்கள். பசி அடங்காமல் குழந்தை அழத் துவங்கியதைக் கண்ட சிவபெருமான் தன பக்தரின் குழந்தை அழலாகாது என்பதற்காக அங்கே பால் பொங்கும் ஒரு கடலையே  ஏற்படுத்தினார். இப்படியாகவே சிதம்பரத்தில் பாற்கடல்  என்ற குளம் ஏற்பட்டது.  அந்தப் புத்திரனும் பால் கடலின் பாலை உண்டு வளர்ந்து நாளடைவில் உபமன்யு என்ற பெயரைப் பெற்றார்.
தந்தை போதித்த பாடங்களினால் மெல்ல மெல்ல உபமன்யுவும் அனைத்தையும் கற்றறிந்த பால முனிவரானார். காலப்போக்கில் பால உபமன்யு முனிவராக இருந்த  அவருக்கும் சில சீடர்கள் அமைந்தார்கள். அப்போது ஒருநாள் சிவபெருமானுக்கு பூஜை செய்யப் பூக்கள் கிடைக்கவில்லை என்பதினால் உபமன்யு எனும் பால முனிவர் தன் சீடரிடம் இன்னொரு இடத்தில் கிருஷ்ணர் சிவபூஜை செய்த பூக்களைக் கொண்டு வருமாறு கூறி அனுப்பி, அந்தப் பூக்களைக் கொண்டு சிவபூஜை செய்தார். அதை அறிந்து கொண்ட கிருஷ்ணரும் அங்கு வந்து அவர் செயலை ஆட்சேபிக்க உபமன்யு முனிவரும் அவரிடம் எந்த ஒருவர் சிவ தீக்ஷைப் பெறாமல் சிவனுக்கு பூஜை செய்கிறார்களோ அந்த பூக்கள் நிர்மாலியமாகாது (பூஜிக்கப்பட்ட பூக்களாகாது என்பது பொருள்) என்பதினால் அவற்றை வேறு பூஜைகளுக்குப் பயன் படுத்தலாம் என்றும்,  சிவதீட்ஷைப் பெறாமல் செய்யும் பூசையையோ அந்தப் பூஜையில் போடப்பட்ட பூக்களையோ சிவனும் ஏற்பது இல்லை என்று கூறியதும், கிருஷ்ணருக்கு மனதில் ஒரு உண்மை  உறைத்தது.  தான் வெகுகாலம் சிவபூஜை செய்தும் தமக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை என்பதின் காரணம் தாம் சிவ தீக்ஷைப் பெறாமல் பூஜை செய்ததுதான் என்பதை புரிந்து கொண்டார். 
தீட்ஷை என்பது பல  வகைப்படும். ஒரு குருவானவர்  தன்னிடம் தொண்டு செய்தவரை  சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள தரப்படும் தீட்ஷை.  சன்யாசம் பெற கிடைக்கும் தீட்ஷை போன்றவை.  ஆனால் பூஜைகளுக்கான சிவதீக்ஷை பெறுவது என்பது வேறு வகை ஆகும். அது என்ன?  எவர் ஒருவரும், யாராக இருந்தாலும்  அதாவது சைவர்கள், பிற சமூகத்தினர், வைஷ்ணவப் பிரிவினர்  என யாராக இருந்தாலும்  குறிப்பிட்டக் காரணங்களுக்காக  சிவனுக்கு பூஜை  செய்யும்போது அந்த நேரத்தில் அந்த பூகைக்கான கர்த்தாவாக  தான் சிவனடியாராக மாறியதாக சத்தியம் செய்வதாகும். அதாவது இந்த நேரத்தில் இந்த  பூஜையை செய்யும் காரணத்துக்காக உனக்கு சிவனடித் தொண்டனாக இருக்கிறேன்  என்று கூறி அவரை வணங்குவதாகும். அந்தக் காலங்களில் அதை பூஜா விதிப் பிரமாணம் என்று கூறுவார்கள்.  ஆகவே  பூஜைகளுக்கான  சிவ தீட்ஷை பெறுவது  என்பது மத மாற்றமோ இல்லை இன மாற்றமோ இல்லை. குறிப்பிட்ட காரணங்களுக்காக சிவனை வேண்டிக் கொண்டு  பூஜையை செய்தப் பின்னர்  அவரவர் தாம் உள்ள பிரிவை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்  என்பதினால் பூஜைக்கான விதியை பின்பற்றாமல் இருந்தது தனது பிழையே என்பதை  உணர்ந்த கிருஷ்ணரும் உபமன்யு முனிவரிடம் சிவ தீட்ஷை பெற்றுக் கொண்டு அங்கேயே இருந்து கொண்டு அங்கிருந்த சிவலிங்கங்களுக்கு  சிவபூஜை செய்து சிவனார் அருள் மூலம் தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார். அந்த அருள் மூலம்  அவருக்குப் பிறந்தவரே சம்பா எனும் பிள்ளையாகும்.
காலம் ஓடியது. பாற்கடலின் பாலை (பால் என்பதை பிற காலத்தில் நீர் என்பார்கள் என்பதின் காரணம் அது நீர் நிலை ஆயிற்று) பருகிக் கொண்டு உபமன்யு எனும் பால முனிவர் வளர்ந்து பெரியவரானார். இப்படியாக ஒருவர் மட்டுமே இருந்த பர்ணசாலை மூவர் உள்ள பர்ணசாலையாயிற்று. அவருடன் அவருடைய தந்தையான வியாக்கியபாதர் மற்றும் பாட்டனாரான மந்தியன்தின முனிவர் என மூவரும் இருந்து கொண்டு திருமூல்லாட்டனேஸ்வர் மற்றும் திருபுலீச்வரம் எனும் சிவலிங்கங்களை வழிபாட்டு பூஜித்து வந்தார்கள்.
ஒருநாள் வியாக்கிரபாத முனிவர் திருமூல்லாட்டனேஸ்வர் சன்னதியில் அமர்ந்து கொண்டு யோகத்தில் இருந்தபோது அவர் கண்களுக்குள் முன்னொரு காலத்தில் தேவதாரு எனும் வனத்தில் நாற்பத்தெட்டாயிரம் முனிவர்கள் மகிழும் வகையில் சிவபெருமான் ஆடிய நடனக் காட்சி தெரிந்தது.  நடனத்தின் பின் காட்சி அளித்த சிவபெருமான்,  கோடி சூரியனைப் போன்ற  ஒளியுடன் , பச்சை நிற மேனியராக, மூன்று கண்களும், சந்திரப் பிறை மற்றும் கங்கையும் தலையில் கொண்டு, கொன்றைப் பூ மாலை அணிந்து கொண்டு, வலது செவியில் சங்க குண்டலம் தொங்க, இடச் செவியில் திருத்தோடு மின்ன, திருக்கரங்கள் கமண்டம், டமரம் ஏந்தி  , பிற கரங்கள்  அபய முத்திரை மற்றும் அருள் என அனைத்தையும் காட்டியவாறு இருக்க, இடுப்பிலே புலித்தோல் ஆடை மினுக்க, நந்தி மீது அமர்ந்திருந்தவரின் வலது பாதம் முயலகன் மேல் இருக்க , இடது பாதம் தூக்கி வளைத்து தொடை மீது காணப்பட, ஸ்ரீ பஞ்சாட்ஷர சொரூபியாய் உமையுடன் சேர்ந்து சிவபெருமான் அங்கிருந்த முனிவர்களுக்கு காட்சி அளித்ததைக் கண்ட வியாக்கிரபாத முனிவர் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது.  மெய் சிலிர்க்க, அந்தக் காட்சியைக் ஓடி இருந்தக் கண்களுக்குள்ளேயே  கண்டவர்  கைகள் தம்மை அறியாமலேயே சிரத்தின் மேல் சென்று குவிய, அந்த அற்புதத்தைக் கண்டவர் நா தழுதழுத்து கூறிக் கொண்டார்  ' ஆஹா....இந்த தரிசனத்தைக் காண என் திருத் தவம் இடம் கொடுக்கவில்லை என்றாலும், இந்த தில்லை வனமே மீண்டும் அப்படி ஒரு காட்சிக்கு உள்ளாகாதா?. இப்படியாக எண்ணிக் கொண்டு, அந்த தரிசனக் கோலத்தை தமக்கும் அந்த தில்லைவனத்தில் சிவபெருமான் தர வேண்டும் என வேண்டிக் கொண்டு   மீண்டும் கடும் சிவபூஜையை செய்யத் துவங்கினார்.

.......தொடரும்

Chthambara Manmiyam -3


சாந்திப்பிரியா


பாகம்-3
 
இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த பசுபதி எனும் சிவபெருமான் அனைத்து இடங்களிலும் வியாபித்து இருப்பவர். இந்த உண்மையை அறியாதவர்கள் முக்தியை அடைய முடியாது. ஆகவேதான் சிவபெருமானும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியாத தாம் படைத்துள்ள ஆன்மாக்கள் தம்மை வணங்கித் துதித்து மோட்ஷம் அடைய இந்த பூமியிலே எண்ணிலா ஸ்தலங்களை படைக்க வைத்தார். அவரால் படைக்கப்பட்ட அறுபத்தி எட்டு தலங்களில் ஆறு தலங்களே மிகச் சிறந்தவை என்றாலும், காசி, திருவாரூர் மற்றும் சிதம்பரம் என்ற மூன்று தலங்களே அதி மேன்மைப் பெற்றவை. திருவாரூரிலே பிறந்தவர்களுக்கும், காசியிலே இறந்தவர்களுக்கும், சிதம்பரத்திலே சிவபெருமானின் பாதங்களை தரிசித்தவர்களுக்கும் மோட்ஷம் நிச்சயம் என்பது சத்தியமான உண்மையாகும்.
திருவாரூரிலே பிறப்பதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டும். பிறர் பொருளை அபகரிக்காமல், பாவத்துக்கு பயந்து தர்ம நெறியிலே சம்பாதித்து, இறுதி காலத்திலே மோட்ஷம் தேடி காசிக்குக் செல்லும் வழியிலே இறக்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காசியிலே சென்று இறக்கவும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆனால் எந்தப் புண்ணியமும் செயாதவன் கூட சிதம்பரத்துக்குச் சென்று  சிவபெருமானின் பாதங்களைப் பார்த்த மட்டிலேயே அவனுக்கு முக்தி கிடைக்கும். சிதம்பரத்திலே உள்ளவன் அங்குள்ள சிவபெருமானை தரிசிக்காமல் முக்தியைத் தேடி காசிக்கு சென்றாலும், அவனுக்கு உடனே முக்தி கிடைக்காது. அங்கு சென்று வழிபட்டு, சாஸ்திர நியமத்தை செய்தால் மட்டுமே முக்தி கிடைக்கும். ஆனால் காசியில் உள்ளவர்கள் சிதம்பரத்தில் வந்து மரணம் அடைந்தால், வேறு வழிபாடு செய்யாமல்  இறைவனின் பாதங்களை தரிசித்தால் மட்டுமே போதும், அவர்கள் முக்தி பெறுவார்கள். ஆகவே இந்த பூஉலகில் உள்ள அனைத்து ஷேத்திரங்களிலும் மேன்மையான தலம் சிதம்பரம் மட்டுமே. அதற்கு ஈடு இணையே இந்த பூஉலகில் வேறு எதுவும் இல்லை.
பிண்டமும் பிரும்மாண்டமும் சமம் என்பார்கள். பிண்டமாகிய சரீரத்தில் இடப் பக்கத்தில் உள்ள  இடைக்கால நாடிக்கும், வலப்பக்கத்தில் உள்ள பிங்கலை எனும் நாடிக்கும் , இடைப் பகுதியில் உள்ள சுழுமுன நாடி என்பது இலங்கைக்கும், இமயமலைக்கும் நடுவில் உள்ள தில்லை எனும் நாடி போல உள்ளது. காரணம் தில்லியில்தான் சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடுகிறார். ஒருவரின் இதயத்திலும் மகிழ்ச்சி நிறையும்போது மகிழ்ச்சியால் மனம் நர்த்தனம் ஆடுகிறது என்பார்கள்.
சரீரம் என்பது பிரும்மபுரம் போன்றது ஆகும். சரீரத்தின் உள்ளே உள்ள இதயமோ சிவபெருமானின் வீடு போன்றது ஆகும். அந்த இதயத்தில் ஆகாயம் போல உள்ள வெற்றிடமே சிவம் வசிக்கும் இடம். அது போலத்தான் சரீரத்தின் வெளியே உள்ள பிரும்மாண்டமே பிரும்மபுரம் ஆகும். அதில் உள்ள தில்லைவனமே சிவபெருமானின் வாசஸ்தலம், அதில் வாயுவாக ஆகாசத்தில் உள்ளவரே சிவம். அந்த ஆகாசமோ சரீரத்தைப் போல அழிவைக் கொண்டது அல்ல. ஆதனால்தான் அழிவு அற்ற நிலையில் இருந்த அம்பலம் ( அனைவரும் பார்க்கும்படியான இடம்)  எனும் தில்லைவனத்துக்குப் போ.  {தில்லை வனமே சிதம்பரம் என்பது. ஆகாசத்தில் சித்தன் ஆடிய நடனத்தினால் இந்த இடம் சித்தனும் +அம்பலமும் என்பது சித்தம்பலம்  அதாவது  சிதம்பரம் என பின் நாளில் ஆனது}
 சிவமே சிந்தனையில் இருந்தால்  சித்தங்கள் அலை மோதுமோ?   சிரமே பணிந்தால் அது சிவனுக்கின்றி வேறு யாருக்காகுமோ என்ற நிலையில் இருந்து கொண்டு அந்த தலத்திலே  சிவ பூஜையை செய்து கொண்டு சிவ வழியில் நடந்து வந்தால் சிவபெருமானைக் காணலாம்' என்று மத்தியன்தின முனிவர் தனது மகனுக்கு  தில்லை வனம் என்கின்ற சிதம்பரத்தின் மகிமையை எடுத்துரைத்தார்.
அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த இளம் பாலகர் (இனி பாலகரை பாலக முனிவர் என்றே அழைப்பதே மரியாதைக்குரிய சொல்லாகும்) தான் உடனே கிளம்பி தில்லைவனத்துக் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை தனது தந்தையிடம் தெரிவித்து அவரது  அனுமதியைக் கோரினார்.
அவருடைய தந்தையும் மறுக்காமல் தனது தவப் புதல்வருக்கு தில்லை செல்ல அனுமதி தந்தார். தவப் புதல்வர் என்று கூறும் பெருமையைப் பெற்றவர்கள்  யார் என்றால்  தந்தை வழியில் ஏழு வம்சத்தையும், தாய் வழியில் ஏழு வம்சத்தையும், தன் வழியில் ஏழு வம்சத்தையுமாக இருபத்தியொரு வம்சங்களை செழிக்கச் செய்பவரே தவப் புதல்வர் ஆவார்.
.........தொடரும்
 

Chithambara Manmiyam-2


சாந்திப்பிரியா


பாகம்-2
முன்னொரு காலத்திலே மத்தியன்தின முனிவர் என்பவர் ஒரு காட்டில் ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தார். அந்த காலங்களில் இருந்த முனிவர்கள் தாமே தம் மக்களுக்கு  போதகர்களாக இருந்து சாஸ்திர சம்பிரதாயங்களை, வேதங்களை, ஆன்மீக பாடங்களை போதிப்பார்கள். அப்படிப்பட்ட முனிவர் பரம்பரையில் தோன்றும் பாலகர்களும் முனிவர்கலாகவே மாறுவார்கள். இளம் வயதிலேயே அபார ஞானமும் பெறுவார்கள். இந்த சூழ்நிலைக் காலத்தில்தான் ஓரளவு வயதுக்கு வந்த தன இளம் பாலகனுக்கு மத்தியன்தின முனிவரே பாடங்களை போதித்து வந்தார். அப்போது ஒரு நாள் அந்த பாலகன் தனது தந்தையிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
'தந்தையே, கடவுளை எங்கே தரிசிப்பது ?'
கேள்வியைக் கேட்டது சிறு பாலகனே என்றாலும் அதை பாலகனின் தவக் குறைவாகவே கருதிய முனிவர் அதற்கு பதில் கூறினார் ' என் மகனே , ஆகாயத்துக்குள் நின்று கொண்டே ஆகாயத்தை எங்கே காணலாம் என்று கேட்கலாமா?. பிரபஞ்சம் முழுவதுமே நிறைந்தவர் கடவுள். ஆகாயமே கடவுளுக்குள் அடங்கிய சிறு தூசியாகும். நாமெல்லாம் அந்த வியாபகத்துக்குள்ளே (வியாபகம் என்றால் படர்ந்து விரிந்த இடம் என்று பொருள் கொள்ளவும்) உள்ள சிறு அணுக்களைப் போன்றவர்கள். கடவுள் எங்கே என்று கேள்வி கேட்ட நீயும் அந்தக் கடவுளுக்குள்ளேயே  நின்று கொண்டுதான் கடவுள் எங்கே என்று கேட்டாய். பூமி முழுவதுமே கடவுள் உள்ள இடத்தின் மிகச்  சிறிய  சன்னதி ஆகும். அதில் பிறப்பெடுக்கும் உயிர்கள் தம்மை அறியாமலேயே தமது ஸ்தூல உடலை தாம் என்றும், தனி உயிர் என்று கருதிக் கொண்டும் உயிர் வாழ்கின்றன. அப்படி தாம் என்று வாழும் உயிர்கள் கடவுளை அறிந்து கொள்வது எப்படி?  அந்தக் குறையை நீக்கி என்றாவது ஒரு நாளன்று  கடவுளை எங்கும் காண்பதற்கு தேவையான மன நிலைப் பெறுவதற்கு அனுஷ்டிக்க வேண்டிய ஒரு நெறி உள்ளது. அதை இன்றே உனக்கு போதிக்கிறேன். கேள்' என்று கூறி விட்டு  தனது மகனுக்கு மத்தியன்தின முனிவர் அந்த நியதியை போதிக்கலானார்.
.........தொடரும்
 

Chithambara Manmiyam -1


சாந்திப்பிரியா


பாகம்-1

முன்னுரை
சிதம்பரத்துக்கு வடமொழியில் அநேக மான்மியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றே சிதம்பர மான்மியம் என்பது. சிதம்பரத்தின் மற்றொரு பெயராக அதை கோவில் என்றும் கூறுவார்கள். திருச்சிற்றம்பலம் எனக் கூறப்படும் சிதம்பரம் இந்த பூமியிலே முதன் முதலில் ஏற்பட்ட கோவிலாகவேஇருந்திருக்கக் கூடும் என்பது ஆன்மீக ரஹசியம்  என்பார்கள்.
பண்டிதமணி திரு கணபதி பிள்ளை என்பவர் சிதம்பர மான்மியத்தை 1979 ஆம் ஆண்டில் கோவில் என்ற தலைப்பில் ஒரு நூலினை, 1955 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையில் வெளியாகி இருந்த ஆறு பாக கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதி உள்ளார். ஆக தற்போது நான் எழுதி உள்ள இந்த மான்மியம் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் எழுதப்பட்டு இருந்த புராணக் கதையின் சாயல் ஆகும்.  ஆனால் பண்டிதமணி திரு கணபதி பிள்ளை என்பவரால் எழுதப்பட்டு உள்ள கோவில் எனும் நூலைத் தழுவி எழுதப்பட்டது என்னுடைய இந்த சிதம்பர மான்மியம்.  இதில் ஒன்றை கூற வேண்டி  உள்ளது. அந்த நூலில் காணப்படும் விஷயங்களைக் கொண்டே இது எழுதப்பட்டாலும், அவற்றில் உள்ள அதே நடையில் இது எழுதப்படவில்லை. அதில் உள்ளதை அப்படியே காப்பி அடித்தும் எழுதவில்லை. காலத்துக்கு ஏற்ப சிலவற்றை அனைவரும் புரிந்து கொள்ளும்  விதத்திலும், வேறு சில  கதைகளில் காணப்படும் சில  சம்பவங்களைக்  கொண்டும், இதில் சில மாற்றங்களை செய்துள்ளேன் என்றாலும் கோவில் எனும் நூலில் அவர் கொடுத்துள்ள அடிப்படை விஷயங்களை மாற்றி எழுதவில்லை.
சிதம்பர ஆலய வரலாற்றை குறித்து பல்வேறு வரலாற்று செய்திகளும், கதைகளும் இருந்தாலும்  சிதம்பர ஆலய நூல்களில்  காணப்படாத பல அறிய செய்திகள்  இவற்றில் இடம் பெற்று உள்ளன.  ஆகவேதான் என் மனதுக்கு நிறைவாக  இருந்த கோவில்  எனும் நூலை என் கட்டுரைக்கு மூலமாக எடுத்துக் கொண்டேன். பண்டிதமணி திரு கணபதி பிள்ளை எங்கிருக்கிறார் அல்லது அவர் நிலை என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் யாழ்ப்பாணத்திலே வாழ்ந்து கொண்டு  இருந்தவர் என்பது மட்டுமே தெரிந்தது. ஆகவே அவர் எங்கிருந்தாலும், அவருக்கு என் மனதார்ந்த நன்றியை இதன் மூலம்  கூறுகிறேன்.
.........தொடரும்

Monday, August 13, 2012

Lakshmi Puran by Balaram Das - Orissa


சாந்திப்பிரியா 

மனபாஸ குருபார் அல்லது குருபார ஓஷா என்பது லஷ்மியை பெண்கள் ஆராதிக்கும் பண்டிகை ஆகும். அந்த தினத்தன்று விடியற் காலையில் பெண்கள் எழுந்து, குளித்தப் பின் வீட்டின் முன்புறத்தில் சாணம் தெளித்து அலம்பியப் பின் அரிசி மாவினால் கோலமிட்டு, அதில் பூக்களை வைத்து லஷ்மியை வீட்டிற்குள் அழைப்பார்கள். வீட்டிற்குள் வந்த லஷ்மியை பூஜை செய்து ஆராதிப்பார்கள். பூஜை இடத்தில் நெற்களை தூவி வைத்து அதன் நடுவில் கோலமிட்டு அந்த கோலத்துக்கு மத்தியில் சிறு மேசை மீது அரிசியை அளக்கும் மூங்கில் கூடையில் நெல்லை நிறப்பி வைப்பார்கள்.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தின் இடையில் வரும் 'மார்கசிற்சா' அல்லது 'அக்ரஹாயனா' எனப்படும் மாதத்தில் ஒவ்வொரு வியாழர் கிழமையும் வீட்டுப் பெண்கள் விரதம் இருந்து , லஷ்மி பூஜை செய்து, லஷ்மி புராணம் எனும் புனித பாராயணத்தைப் படிப்பார்கள். அதை படித்து முடித்ததும், பிரசாதங்களை நெய்வித்தியம் செய்து வீட்டில் உள்ளவர்கள் உண்பார்கள். இந்த பூஜையில் வேத மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்படுவது இல்லை, பண்டிதர்கள் கிடையாது. வீட்டில் உள்ள பெண்களே இதை செய்வார்கள். பூஜை முடிந்ததும் லஷ்மி புராணத்தை பக்தியுடன் படித்து முடித்தப் பின்னரே பூஜை முடிந்ததாக கருதப்படும். 'மார்கசிற்சா' மாதத்தில் அதை ஏன் செய்கிறார்கள் என்றால் அந்த மாதமே விஷ்ணுவிற்கு உகந்த மாதம் ஆகும். ஆகவேதான் விஷ்ணுவின் ஆளுமைக்கு உட்பட்ட அந்த மாதத்தில் அவர் மனதிற்கு ஏற்ற அவருடைய மனைவியான லஷ்மி தேவியை ஆராதித்து பூஜை செய்கிறார்கள். அந்த பூஜை செய்வதற்கும் இன்னொரு காரணம் உள்ளது. அது லஷ்மி புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.

பலராம தாஸ் எழுதிய லஷ்மி புராண்

லஷ்மி புராணம் என்பது ஒரிஸ்ஸாவின் புகழ் மிக்க கவிஞரான பலராம தாஸ் என்பவரினால் பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது. பாடல் வடிவில் எழுதப்பட்டு உள்ள இந்தப் புராணம் ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் ஒரிஸ்ஸா எல்லைகளில் உள்ள ஆந்திராவின் பகுதிகள் போன்ற இடங்களில் பெண்களினால் புனிதப் புராணமாக கருதப்படுகிறது. வயல்களில் அறுவடை முடிந்ததும், செல்வத்தை அள்ளித் தரும் நல்ல அறுவடைக் கிடைக்கக் காரணமாக இருந்த லஷ்மி தேவிக்கு தமது நன்றியை செலுத்த - பெண்கள் இந்த புராணத்தை பாராயணம் செய்கிறார்கள்.
லஷ்மி தேவியானவள் செல்வத்தை மட்டும் கொடுப்பதில்லை, அவள் குடும்பங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறாள், அழகைத் தருகிறாள், மேலும் அன்பையும் தருகிறாள் என்றே நம்புகிறார்கள். பாராயண காலத்தில் ஒவ்வொரு வியாழற் கிழமை அன்றும் லஷ்மி பூஜையை செய்கிறார்கள். சாதாரணமாக வெள்ளிக் கிழமைகளில்தான் லஷ்மிக்கு பூஜைகள் செய்வது விசேஷம் என தென் மற்றும் வடநாட்டின் பல பகுதிகளிலும் கருதப்பட்டாலும் லஷ்மி புராண பாராயணம் மற்றும் அதை சேர்ந்த லஷ்மி பூஜையை வியாழர் கிழமைகளில் செய்வதே விசேஷம் என்று ஒரு நம்பிக்கை ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் ஒரிஸ்ஸா எல்லைகளில் உள்ள ஆந்திராவின் பகுதிகள் போன்ற இடங்களில் உள்ளது.
இந்தப் புராணம் மிகப் புனிதமாக போற்றப்படுவதின் காரணம் லஷ்மி விரத முறையை லஷ்மி தேவியே தனது வாயினால் ஒரு பெண்ணிற்குக் கூறினாள். அதற்கான காரணமும் அதே லஷ்மி புராணத்தில் உள்ளது.
லஷ்மி புராணம் என்பது லஷ்மியின் பிறப்பையும் அவளது மகாத்மியத்தையும் விரிவாக எடுத்துக் கூறும் நூல் அல்ல. ஆனால் இது லஷ்மியின் பெருமையை அதாவது லஷ்மி ஆராதனை இல்லை என்றால் வீடு வறுமையில் ஆழ்ந்து விடும் என்பதை விளக்கும் ஒரு புராணக் கதை ஆகும். ஒரு விதத்தில் பார்த்தால் இந்தக் கதை பூரி ஜகன்னாதர் ஆலயத்துடனும் பாலபத்திரர் எனும் பாலராமருடனும் சம்மந்தப்பட்டது என்று கூடக் கூறலாம். லஷ்மி புராணம் என்பது என்ன?

லஷ்மி புராணம்
 

ஒருமுறை நாரத முனிவரும், பராசர முனிவரும் பூலோகத்தில் இருந்த ஒரு கிராமத்திற்கு சென்றார்கள். அது 'மார்கசிற்சா' மாத வியாழர் கிழமை ஆகும். அந்த கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லஷ்மி பூஜையை செய்து கொண்டு நடனம் ஆடிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது நாரதர் பராசர முனிவரைப் பார்த்துக் கேட்டார் ' முனிவரே, இது என்ன விசித்திரமான கொண்டாட்டம்? எப்போதுமே ஒத்துப் போகாமல் இருந்த பிராமணர்களும் சண்டாளர்களும் இன்று அதிசயமாக ஒன்றாக இணைந்து நடனம் ஆடிக் கொண்டு, லஷ்மி பூஜையை செய்து கொண்டு இருக்கிறார்கள் ?'.
அதைக் கேட்ட பராசர முனிவர் கூறினார் ' நாரத மா முனிவரே, இந்தப் பண்டிகை லஷ்மி தேவியின் அருளை வேண்டிப் பெறுவதற்காக 'மார்கசிற்சா' மாதத்தில் பெண்கள் விரதம் இருந்து செய்வதாகும். இது பெண்களின் மகத்துவத்தைக் காட்ட ஏற்பட்ட பண்டிகை ஆகும். இதில் 'மார்கசிற்சா' மாதத்தில் வரும் முதல் வியாழற் கிழமை முக்கியமான நாளாகும். அந்த மாதத்தின் பத்தாவது நாளன்று அந்த வியாழற் கிழமை வந்தால் அன்று விசேஷமான சுதாஷா என்ற விரதத்தையும் செய்வார்கள்' என்று கூறினார். அதைக் கேட்ட நாரத முனிவருக்கு லஷ்மி புராணத்தைக் கேட்க ஆவல் ஏற்பட அந்த விரதம் குறித்த கதையை  தனக்குக் கூறுமாறு அவரிடம் கேட்டதும் பராசரர் அந்த புராணத்தை கூறத் துவங்கினார்.
''ஒருநாள் தனது கணவரான பூரி ஜகன்னதரின் அவதாரத்தில் இருந்த விஷ்ணுவிடம் சென்று லஷ்மி தேவி கேட்டாள் 'பிரபோ, இன்று என்னுடைய விரத நாள் ஆகும். பூமியில் பலரும் என்னை ஆராதிப்பார்கள். ஆகவே அவர்கள் என்னை எவ்வாறு ஆராதிக்கிறார்கள் என்பதைப் பார்க்க  நான் வெளியில் சென்று விட்டு வருவதற்கு எனக்கு உங்கள் அனுமதி வேண்டும்' என்று கேட்டாள் . அதைக் கேட்ட ஜகன்னாதரும் மனம் மகிழ்ந்து அதற்கு அனுமதி கொடுத்தார்.
அவருடைய அனுமதியைப் பெற்றுக் கொண்ட லஷ்மி தேவி தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு ஒரு வயதான பெண்மணியின் உருவில் பூமிக்கு சென்றாள். அங்கு சென்றதும் முதலில் அவள் ஒரு பிராமணரின் வீட்டிற்குச் சென்றாள். ஆனால் அவர்கள் வீட்டின் முன்னால் கோலமோ பிற   அலங்காரமும் காணப்படவில்லை. லஷ்மி பூஜையும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. ஆகவே அந்த வீட்டிற்குள் நுழைந்து வீட்டுப் பெண்மணியை அழைத்த லஷ்மி தேவி 'ஏனம்மா, நீங்கள் லஷ்மி பூஜை செய்யவில்லையா?' என்று அக்கறையுடன் கேட்டாள். அந்தப் பெண்மணி கூறினாள் ' அம்மா, எனக்கும் அந்த பூஜையை செய்ய ஆசையாகதான்  உள்ளது. ஆனால் அதன் விதி முறைத் தெரியவில்லை. ஆகவே நீங்கள் எனக்கு அந்த முறையை கற்றுக் கொடுத்தால் நானும் அதை செய்ய முடியும்' என்று அந்த வயதான பெண்மணியின் உருவில் இருந்த லஷ்மியிடம் கேட்டாள். அதைக் கேட்டு மகிழ்ந்து போன லஷ்மி தேவியும் அவளுக்கு அந்த விரத முறையைக் கூறலானாள்.


'அம்மா, காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டை நன்கு சுத்தம் செய்தப் பின் , வாயிலில் பசு சாணத்தை தெளித்து துடைத்ததும், அதில் வெள்ளை நிற அரிசி மாவு கோலமிட்டு, வண்ணப் பொடிகளைத் தூவி நன்கு அலங்கரிக்க வேண்டும். அது போல ஸ்வாமி கூடத்தில் ஒரு இடத்தை ஈரத் துணியால் சுத்தம் செய்து விட்டு, அறுவடை செய்த நெல்லைத் தூவி, வண்ணக் கோலமிட்டு, அதன் மீது ஒரு சிறு மேஜையை வைத்து அதன் மீது அரிசியை அளக்கும் ஒரு கூடையை வைத்து அதில் அரிசி நெல்லை நிறப்பி வைக்க வேண்டும்.


மூன்று வெற்றிலைகளை மஞ்சள் ஜலத்தினால் சுத்தம் செய்து அந்த மேஜை மீது வைக்கவும். அதை சுற்றி உள்ள இடங்களில் காய்கறிகள், கனிகள் மற்றும் மலர்களைக் கொண்டு நன்கு அலங்கரிக்க வேண்டும். அதன் பின் ஊதுபத்தி மற்றும் நெய் விளக்கை ஏற்றி மகாலஷ்மியை வீட்டிற்கு அழைக்க வேண்டும். மூன்று வகைகளினால் ஆன அரிசி உணவை செய்து நெய்வித்தியமாக படைத்தப் பின் இனிப்புக்களையும் வைத்து பூஜை செய்தப் பின், லஷ்மியின் பெருமையை விளக்கும்  புராணத்தைப் படித்தப் பின் நெய்வித்தியத்தை வீட்டினர் உண்ண வேண்டும். இதில் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பிரசாதங்களை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே உண்ண வேண்டும். அக்கம் பக்கத்தினருக்கோ, விருந்தாளிகளுக்கோ, அவ்வளவு ஏன் திருமணம் ஆகி விட்ட சொந்த பெண்ணுக்குக் கூட- திருமணம் ஆனப் பின் அவள் வேறு வீட்டை சேர்ந்தவள் ஆகி விடுவதினால்- தரக் கூடாது. அப்படி தந்தால் பூஜையின் பலன் கிடைக்காது.
மேஜை மீது மூங்கில் கூடையில்
நிரப்பி வைக்கப்பட்டு உள்ள நெல் 
அந்த மாதம் முழுவதுமே, முக்கியமாக விரத தினங்களில் வீட்டில் உள்ள குழந்தைகளை கடுமையாக கடிந்து கொள்ளக் கூடாது, இருட்டிலே அமர்ந்து கொண்டு உணவு அருந்தக் கூடாது, மாலையில் தலைக்கு எண்ணை தடவிக் கொண்டு வாரிக் கொள்ளக் கூடாது, மாமியார்- மாமனாரை அவமரியாதை செய்யக் கூடாது.  இரவு ஆடைகள் இன்றி படுத்து உறங்கலாகாது. கணவரிடம் சண்டைப் போடக் கூடாது. எந்த வீட்டில் உள்ளப் பெண்கள் கணவன் எழுந்து கொண்டப் பின் எழுந்து சோம்பேறியாக உள்ளார்களோ, யார் தன் கணவருடன் சண்டை இட்டுக் கொண்டும், அவரை அவமானப்படுத்தும் விதத்திலும் நடக்கிறார்களோ அவர்கள் வீடுகளை விட்டு லஷ்மி தேவி உடனடியாக வெளியேறி விடுவாள். அதன் பின் அங்கு உள்ளே செல்ல மாட்டாள். இவற்றை எல்லாம் உன்னால் கடை பிடிக்க முடியும் என்றால் நீ விரதத்தை இன்றே துவக்கு' என்று அறிவுறுத்த அந்த பிராமணப் பெண்மணியும் சந்தோஷமாக அதை உடனே செய்வதாகக் கூறி வயதான பெண்மணி உருவில் இருந்த லஷ்மி தேவிக்கு நன்றி கூறி அவளை அனுப்பி வைத்தாள்.
அடுத்ததாக லஷ்மி தேவி இன்னொரு பகுதிக்குச் சென்றாள். அது பிராமணர்கள் அல்லாத கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள், முக்கியமாக சண்டாளர்கள் என்று அந்த காலத்தில் கூறப்பட்ட மக்கள் வசித்தப் பகுதியாகும். அங்கு நுழைந்ததுமே ஷ்ரியா என்ற சண்டாளப் பெண்மணி அவள் வீட்டில் வாயிலில் சாணம் தெளித்து, துடைத்தப் பின் வண்ணமயமான அரிசி கோலத்தைப் போட்டு அதன் மீது தாமரை மலர்களையும் வரிசையாக அடுக்கி வைத்து இருந்ததைக் கண்டாள். அந்த மலர்கள் அவளுடைய  வீட்டின் உள்ளே பூஜை அறை வரை வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. அந்த தாமரை மலர்களைக் கண்டதுமே லஷ்மி தேவிக்கு அந்த வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. ஆகவே அவள் அந்த தாமரை மலர்கள் மீது காலை வைத்துக் கொண்டவாறே நடந்து சென்று சண்டாளன் வீட்டிற்குள் நுழைந்து விட்டாள். உள்ளே சென்றவள் ஷ்ரியா லஷ்மி பூஜையை செய்து கொண்டு இருப்பதைப் பார்த்து அவள் எதிரில் சென்று தரிசனம் கொடுத்து விட்டு ' உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டாள்.

லஷ்மி தேவி தரிசனம் தந்தாள்

லஷ்மி  திடீர் என தன்  எதிரில் நிற்பதைக் கண்டதும் ஷ்ரியாவுக்கு காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை. அப்படியே அவள் முன் குனிந்து  நமஸ்கரித்தாள் .  அவள் பாதங்களைப் பிடித்துக் கொண்டு அதில் தன் தலையை வைத்து வணங்கியவள் 'எனக்கு ஆயிரம் பசுக்கள், நிறைய செல்வம், கொஞ்சி மகிழக் குழந்தை, மற்றும் பல நகைகளும் வேண்டும்' என்று கேட்க அவை அனைத்தையும் தந்து அவளுக்கு லஷ்மி தேவி அருள் புரிந்தாள். இப்படியாக லஷ்மி தேவி வேறு சில சண்டாளர்கள் வீடுகளுக்கும் சென்றாள்.
அப்போது ஜகன்னாதரும், அவரது சகோதரர் பலராமர் எனும் பாலபத்திரரும் காட்டில் வேட்டை ஆடிக் கொண்டிருந்தார்கள். லஷ்மி தேவி சண்டாளன் வீட்டிற்குள் சென்றதை அவர்களுக்கு உடனே ஓடிச் சென்று ஒற்றன் கூறினான். அதைக் கேட்ட பலராமர் கோபமடைந்து தனது சகோதரர் ஜகன்னாதரிடம் கூறினார் ' அண்ணா, பார்த்தீர்களா, உங்கள் மனைவி ஒரு சண்டாளன் வீட்டிற்குள் சென்று தோஷமாகி இருக்கிறாள். அங்கு சென்று விட்டு குளித்து தன்னை பவித்திரம் ஆக்கிக் கொள்ளாமல் ஆலயத்துக்கும் வந்து கொண்டு இருக்கிறாள். அது தவறு. அவள் நம் வீட்டிற்குள் (ஆலயத்துக்குள்) நுழையும் யோக்கிதையை இழந்து விட்டாள்' .
அதற்கு ஜகன்னாதர் கூறினார் 'பாலபத்ரா, என்னுடைய மனைவியை யார் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு அருள் புரிவது அவள் கடமையல்லவா.  இதில் அவளை வணங்குபவர் யார், சண்டாளனா இல்லை பிராமணனா என்று பேதம் பார்க்க முடியுமா. ஜாதி பேதம் பார்த்து அருள் புரிவது  தெய்வ நீதிக்கு எதிரானது அல்லவா ?' என்று கேட்டதும், பாலபத்திரர் அதிக கோபம் அடைந்தார். அவர் கூறினார் ' அண்ணா, உங்களுக்கு உங்கள் மனைவிதான் முக்கியமாகத் தோன்றினால் அவளுக்கு சண்டாளர்கள் வசிக்கும் இடத்தில் சென்று ஒரு மாளிகையை அமைத்துக் கொடுங்கள். எனக்குக் கவலை இல்லை. ஆனால் அவள் இனி நம் ஆலயத்தில் தங்க முடியாது. அவளை அடித்து விரட்டுங்கள்'.
ஜகன்னாதர் மீண்டும் கூறினார் ' இதோ பார். நாம் வீட்டுப் பெண்ணை  இப்போது விரட்டி விட்டால் அவளைப் போல இன்னொருவள் நமக்குக் கிடைக்க மாட்டாள். வீட்டுப் பெண்ணை விரட்டி விட்டால் செல்வத்தை இழந்து விடுவோம். அவளை மீண்டும் நம்முடன் அழைத்துக் கொள்ள தேவலோகத்தில் உள்ளவர்களுக்கு பல கோடி தட்ஷணைகளை கொடுத்து பரிகாரம் செய்து  அவளை மீண்டும் நம்முடன் இணைத்துக் கொள்ளலாம். மீண்டும் அதே தவறை அவள் செய்தால் அவளை ஆலயத்தை விட்டு துரத்தி விடலாம்'.

ஜகன்னாதரும், பாலபத்திரரும்

ஆனால் அவர் கூறியதை பாலபத்திரர் ஏற்கவில்லை. அவர் கூறினார் ' அண்ணா, நீங்கள் உங்கள் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். உங்களுக்கு சகோதரன் வேண்டும் என்றால் நான் உங்களுடன் இருக்கிறேன். உங்களுக்கு ஒரு லட்ஷ மனைவிகள் கூட கிடைக்க முடியும். ஆனால் உங்களுக்கு இந்த மனைவிதான் முக்கியம் என்றால் தாராளமாக அவளை அழைத்துக் கொள்ளுங்கள். நான் வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறேன். என்னால் பாவம் செய்தவள் உள்ள வீட்டில் தங்க முடியாது '. பலராமனின் கோபத்தைக் கண்ட ஜகன்னாதாரால் மேலும் பலராமரை சாந்தப்படுத்த முடியவில்லை.
அந்த இடம் அமைதியாயிற்று. ஆகவே இருவரும் கிளம்பிச் சென்று ஆலய வாயிலில் அமர்ந்து கொண்டார்கள். இதற்கு இடையே ஷ்ரியாவிற்கும் தன்னை ஆராதித்த மற்ற சண்டாள  குடும்பங்களுக்கும்   வேண்டிய அனைத்தையும் செய்து தந்தப் பின் லஷ்மி தேவி ஆலயத்துக்கு திரும்பி வந்தாள். அவளை உள்ளே விட மறுத்த ஜகன்னாதார் ' சண்டாளன் வீட்டிற்குச் சென்று விட்டு வந்துள்ள உனக்கு உள்ளே நுழைய அதிகாரம் இல்லை. நீ செய்த தவறை நான் மட்டும் பார்த்திருந்தாலும் பரவாய் இல்லை. என் சகோதரனுக்கும் அது தெரிந்து விட்டது. ஆகவே உன்னால் நாங்கள் அவமானத்தால் நிற்கிறோம். ஆகவே நீ இங்கிருந்துக் கிளம்பி வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள் '.
அதைக் கேட்ட லஷ்மி கூறினாள் ' நாதா, உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால், நம் திருமணத்தை முறித்து விட்டு என்னை தள்ளி வைத்து விடுங்கள். ஆனால் நான் என்ன தவறை செய்தேன் என்று  கூறுங்கள்'. ஜகன்னாதர் கூறினார் ' திருமணத்தை முறித்து விட்டு உன்னை வெளியேற்ற  நம்முடைய தேவ தர்மத்தில் வழி இல்லை. நீ ஒரு சண்டாளன் வீட்டிற்குள் நுழைந்து விட்டு வந்துள்ளதினால் உனக்கு இங்கு இடம் இல்லை'. லஷ்மி மீண்டும் கூறினாள் 'நாதா அமிர்தம் எடுத்தபோது கடலில் இருந்து வெளி வந்த என்னை திருமணம் செய்து கொண்ட நீங்கள் நான் தவறு செய்தால் மொத்தம் பத்து தவறுவரை பொறுத்துக் கொண்டு என்னை மன்னித்து விடுவீர்கள் என்று என் தந்தைக்கு ஒரு வாக்கு கொடுத்தீர்கள். அதன்படி பார்த்தால்  நான் இப்போது ஒரே ஒரு தவறுதான் செய்துள்ளேன். ஆனாலும் அதை நீங்கள் பொறுத்துக் கொள்ள மறுக்கிறீர்கள். இது நியாயமா?'.
ஜகன்னாதர் கூறினார் ' உன் தந்தை நாள் முழுவதும் போடும் கூச்சல் என்னால் தாங்க முடியவில்லை. ஆகவே எங்கள் அரண்மனையை சுற்றி அரண் எழுப்பக் கூட முடிவு செய்துவிட்டோம். நீ என்னடா என்றால் அவரை துணைக்கு அழைக்கிறாய். உன்னை என்னால் ஏற்க முடியாது. உனக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தருகிறேன். நீ வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள்'.
அதைக் கேட்ட லஷ்மியும் கோபமுற்றாள். 'நாதா, கடவுளுக்கு ஜாதி பேதம் உண்டா? மனித குலத்துக்கே நீங்கள் செய்யும் அநீதி அல்லவா அந்த பேதம் . நான் செய்தது தவறு என்றால் நீங்கள் ஏன் யாதவ குலத்தில்  பிறந்து பெண் எடுத்தீர்கள்? இடையர்களோடு சென்று நீங்கள் தங்கவில்லையா? தாழ்ந்த ஜாதியை சேர்ந்த நிமா என்பவளின் வீட்டில் நீங்கள் உணவு அருந்தவில்லையா? சாரா மீதி வைத்த உணவை நீங்கள் உண்ணவில்லையா? மனைவி தவறு செய்தால் அதை கணவன் பொறுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அவளை உதாசீனப்படுத்தக் கூடாது'.
அதைக் கேட்ட ஜகன்னாதரும் கூறினார் 'இதோ பார் லஷ்மி, என் சகோதரனுக்கு எதிராக உன்னை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. வேண்டுமானால் உனக்கு நான் ஆறு மாத கால உணவிற்கு தேவையான அனைத்தையும் செய்து தருகிறேன். எங்காவது சென்று வாழ்ந்து கொண்டு இரு. அதற்கு இடையில் என் சகோதரனை நான் சமாதானப்படுத்த முயலுகிறேன். அவன் சமாதானம் ஆகிவிட்டால்  உன்னை திரும்பவும் அழைத்துக் கொள்கிறேன். அவ்வளவுதான் என்னால் இப்போது செய்ய முடியும் '.
லஷ்மியினால் அதற்கு மேல் அவமானத்தை தாங்க முடியவில்லை. தன் உடலில் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கயற்றி அவரிடம் கொடுத்து விட்டுக் கூறினாள் ' சரி நான் போய் சண்டாளர்களுடன் வாழ்கிறேன். நம் தர்ம நெறிப்படி, மனைவியை விலக்கி வைத்தால் அவளுக்கு ஆறுமாத உணவிற்கு வழி செய்யும் வகையில் கணவன் ஏற்பாடு செய்தப் பின்னரே வீட்டை விட்டு அவளை அனுப்ப வேண்டும். ஆனால் இன்று நான் உங்களிடம் எதையும் பெற விரும்பவில்லை. மாறாக  நீங்கள் கொடுத்த அனைத்து ஆபரணங்களையும் திரும்ப உங்களிடமே  தந்துவிட்டு செல்கிறேன். போகும் முன் உங்களுக்கு ஒரு சாபம் கொடுக்கிறேன். நீங்கள் இருவரும் பன்னிரண்டு வருடம் சாப்பிட வழி இன்றி, நல்ல உடைகள் இன்றி அவதிப்படுவீர்கள். மீண்டும் நீங்கள் சண்டாளனாக உள்ள என் கையால் உணவு அருந்தினால் மட்டுமே உங்கள் சாபம் விலகும்' என்று கூறி விட்டு கோபமாக அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாள் .
அடுத்த நாள் அவள் விஸ்வகர்மாவை அழைத்தாள். அவரை தனக்கு தங்கத்தினாலும், வைர வைடூரியங்களிளுமான குடிசைக் கட்டித் தருமாறு கூறினாள். அவரும் அப்படிப்பட்ட குடிசை ஒன்றை  சண்டாளர்கள் இருந்தப் பகுதியில் அமைத்துத் தந்தார். அடுத்து லஷ்மி தேவி எட்டு வேதாளங்களை அழைத்தாள். யாருக்கும் தெரியாமல் ஆலயத்துக்குள் சென்று தான் வைத்து இருந்த அனைத்து செல்வங்கள் மற்றும் சமையல் அறையில் இருந்த அனைத்தையும் எடுத்து வந்து விடுமாறும், அவர்கள் படுக்கக் கூட கட்டில் இல்லாமல் அனைத்தையும் எடுத்து வருமாறும் கூறி அனுப்பினாள். சரஸ்வதியை அழைத்தாள். அந்த ஊரில் உள்ள அனைவரிடமும் சென்று ஜகன்னாதரும், பாலபத்திரரும் வந்தால் உணவு மட்டும் அல்ல குடிப்பதற்கு தண்ணீர் கூடத் தரக் கூடாது என்று கட்டளை இடுமாறு கூறி அனுப்பினாள் .
அன்று இரவு சகோதரர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த போது வேதாளங்கள் அங்கு சென்று அந்த சகோதரர்களுக்கே தெரியாமல் அவர்களைக் கட்டிலில் இருந்து இறக்கி கீழே படுக்க வைத்து விட்டு ஆலயத்திலும் அவர்கள் தங்கி இருந்த வீட்டிலும் இருந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.
மறுநாள் கண் விழித்த சகோதரர்கள் வீட்டில் எதுவுமே இல்லை என்பதையும், தாங்களே கீழே ஒரு துணி கூட விரிக்காமல் தரை மீது படுத்துக் கிடந்ததையும் கண்டு திடுக்கிட்டார்கள். அதைப் பார்த்த ஜகன்னாதர் கூறினார் 'பலராமா, இதற்குதான் நான் முன்னரே கூறினேன். வீட்டில் இருந்து லஷ்மி சென்று விட்டால் தரித்திரமே நிலைக்கும் என்று. நீ அதைக் கேட்கவில்லை'.
அதைக் கேட்ட பலராமர் கோபமுற்றுக் கூறினார் 'அண்ணா, ஒரு மனைவி என்பவள் தன் கணவர் பட்டி கிடந்து அவதிப் படட்டும் என்று விட்டு வைப்பாளா? அப்படி செய்பவள் நல்ல மனைவியாக இருக்க முடியுமா?'.
இப்படியாக இருவரும் மாற்றி மாற்றி எதையெதையோ  விவாதித்துக் கொண்டே சமையல் அறையில் சென்று பார்த்தார்கள். அங்கோ குடிக்கத் தண்ணீர்க் கூட இல்லை, ஒரு குவளையைக் கூட காணவில்லை. பாத்திரங்கள், பண்டங்கள் என எதுவுமே இல்லை. நேரம் செல்லச் செல்ல பசி, தாகம் எடுக்க 'இன்ரதும்னா' என்ற குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரச் சென்றால் அந்தக் குளமும் வற்றி இருந்தது. கிழிந்த ஆடைகளை அணிந்து கொண்டு பூணூல் உடலில் தெரிய பிராமணர்கள் இருந்தப் பகுதிகளுக்குப் போய்  வீடு வீடாகச் சென்று பிட்ஷைக் கேட்டார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாத பிராமணர்களோ அவர்கள் கொள்ளைக்காரர்கள் , பிராமணர்களைப் போல வேஷம் போட்டுக் கொண்டு திருட வந்துள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களை அடித்து விரட்டினார்கள். ஒரே ஒரு இடத்தில் அவர்கள் நிலையைக் கண்டு பரிதாபம் கொண்ட ஒரு பிராமண பெண் அவர்களுக்கு உணவு தர பாத்திரத்தை எடுத்தாள். உடனேயே அது அவள் கையில் இருந்து மாயமாய் மறைந்து போயிற்று. இன்னொரு இடத்தில் கஷ்டப்பட்டு அவர்களுக்கு உணவு கிடைத்தது. அதை உண்ணப் போனபோது பெரும் காற்று வீச  அத்தனையும் பறந்து சென்று மண்ணில் விழுந்தது.
ஆகவே அவர்கள் கடலுக்குச் சென்று வேதங்களை ஓதி பிரார்த்திக்க லஷ்மி அவர்களிடம் தனது வேலைக்காரியை அனுப்பினாள். அவளிடம் அவர்கள் தம் பசிக்கு உணவு கேட்க லஷ்மி தேவி அவர்கள் சண்டாளர்கள் வீட்டில் உணவு அருந்த முடியாது என்பதினால் உணவு தர மறுத்ததாகக் கூறுமாறு செய்தி அனுப்பினாள். அவர்களோ விடாப் பிடியாக தமக்கு உணவு தராவிடிலும் பரவாய் இல்லை, தமக்கு பாத்திரங்களையும், சிறிது அரிசியையும் தந்தால் அக்னியை மூட்டி அதில் தாமே சமைத்து உண்பதாகக் கூறினார்கள். அக்னிபட்டால் எந்த தோஷமும் விலகும் என்பதினால் அப்படிக் கேட்டார்கள். அவளும் அவர்களுக்கு அனைத்தையும் தந்து அனுப்பிவிட்டு அக்னியிடம் அவர்கள் உள்ள இடத்துக்கு செல்லக் கூடாது என்று தடுத்து விட்டாள். சகோதரர்கள் உணவை தயாரிக்க அடுப்பை மூட்டினால் என்ன செய்தும் தீ பற்றவே இல்லை.

பிராமண உருவில் இருந்த பலராமரும்
ஜகன்னாதரும் சண்டாளர் வீட்டில் உணவு அருந்தினார்கள்

ஒரு மாதம் ஆயிற்று. பசியின் கொடுமை தாங்க முடியவில்லை. உணவையும் சமைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இரு சகோதரர்களும் சண்டாளர் வீட்டில் லஷ்மி இருந்தாலும் அவள் வீட்டில் உணவு அருந்த சம்மதிக்க லஷ்மியும் நல்ல உணவு சமைத்து அனுப்பினாள். அதை அவள் சண்டாளப் பெண்களின் கையில் கொடுத்து அனுப்பி அவர்களே அதை பரிமாற்ற வேண்டும்  என்று கூறி அனுப்பினாள்.  வேறு வழி இன்றி அந்த சகோதர்களும் சண்டாளர்கள் வீட்டில் அதை உண்டார்கள்.  அது   'மார்கசிற்சா' மாதத்தின் வியாழர் கிழமை ஆகும். இருவரும் பசி அடங்கியப் பின்னரே  தம் தவறை உணர்ந்தார்கள்.
அவமானத்தினால் தலை குனிந்த பலராமர் தன் சகோதரர் ஜகன்னாதரிடம் கூறினார் 'நீங்கள் சென்று உங்கள் மனைவி லஷ்மியின் கையைப் பிடித்து  அழைத்து வாருங்கள்., நடந்த தவறுகளுக்கெல்லாம் நான்தான் காரணம். இனி அவளை விட்டுப் பிரியாதீர்கள்' என்று கூறி அவரை அனுப்ப லஷ்மியும் ஜகன்னாதரை வரவேற்று அவர் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அதன் பின் அவர் பாதங்களை கழுவி அந்த நீரில் சிறிது தான் அருந்திவிட்டு தன் மீதும் அந்த புனித நீரை தெளித்துக் கொண்டாள். அவரிடம் கூறினாள் ' என்னை சண்டாள பெண்ணாகக் கருதி வெளியே அனுப்பினீர்கள். ஆனால் அதே பெண்ணின் வீட்டில் மீண்டும் உணவு உண்ண வந்துள்ளீர்கள் . ஆகவே நீங்கள் இருவருமே இப்போதுதான் ஜாதி பேதத்தை  கடந்து நிற்கிறீர்கள். உங்கள் சபதம் என்ன ஆயிற்று? நீங்கள் போட்ட சபதத்துக்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். உங்கள் சகோதரனை எண்ணியும் நீங்கள் வெட்கப்பட வேண்டும். இனியாவது மனிதர்களில் பேதம் பார்க்காதீர்கள். உங்களை வணங்குபவர்களை அவமானப்படுத்தாதீர்கள். சரி போகட்டும், இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள்?'.
அதற்கு ஜகன்னாதர் கூறினார் 'லஷ்மி தேவியே, எங்களை மன்னித்து விடு . நங்கள் நீ இல்லாமல் பெரும் அவதிப்பட்டோம். லஷ்மி இல்லை என்றால் என்ன ஆகும் என்பதை உலகிற்கு எங்கள் மூலம் உணர்த்தி விட்டாய். இனி வியாழர் கிழமையில் உன்னை பூஜித்து உணவு அளிப்பவர்களுக்கு அனைத்து பாபங்களும் விலகி, செல்வம் பெருகி உன் விரதத்தை செய்பவர்கள் சொர்கத்தை அடைவார்கள்.
அதற்கு லஷ்மி தேவி கூறினாள் ' இனி உங்களைப் பொறுத்தவரை ஏழைப் பணக்காரன், ஜாதி என்ற பேதம் எதுவுமே உங்கள் ஆலயத்தில் இருக்கக் கூடாது. யார் வேண்டுமானாலும் வந்து உங்களை வணங்கலாம். யார் வேண்டுமானாலும் வந்து உங்களுக்கு பிரசாதம் படைக்கலாம் என்று எனக்கு வாக்குறுதி தந்தால் மட்டுமே நான் அங்கு வருவேன் ' என்றாள். அதைகேட்ட ஜகன்னாதரும் உடனடியாக அவள் கூறியதை ஏற்றுக் கொண்டார்.
அதைக் கேட்ட பலராமர் கூறினார் ' அம்மா, எந்த ஒரு வீட்டிலுமே ஒரு பெண் இருந்தால்தான் வீடும் நலமாக இருக்கும். ஒரு பெண்ணாகவே லஷ்மி தேவியான நீ இருப்பதினால் உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ளாத வீடு என்ன ஆகும் என்பதை எங்கள் மூலம் உலகிற்கு விளக்கி விட்டாய். நீ வெளியே சென்று விட்டால், எதுவுமே கிடைக்காது என்பதை இந்த சம்பவம் மூலம் உலகம் புரிந்து கொள்ளும். நாங்கள் பட்ட கஷ்டங்களை விளக்கும் இந்த 'மார்கசிற்சா' மாதத்தின் வியாழர் கிழமைகள் இனி புனிதமாக போற்றப்படும். அன்று உன்னை பெண்கள் வணங்கி பூஜிப்பார்கள். அப்படி பூஜிப்பவர்களுக்கு நீயும் அளவாற்ற செல்வத்தை தருவாய்''.
இந்தக் கதையைக் கேட்ட நாரதர் லஷ்மியின் அருள் இல்லாமல் யாருக்கும் ஒன்றும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டப் பின் கூறினார் 'யார் இந்த புனிதமான புராணத்தை இதய பூர்வமாக பாராயணம் செய்து விரதம் இருக்கிறார்களோ அவர்கள் ஆயிரம் கோடி பசுக்களை தானம் செய்தப் பலனை அடைவார்கள் என்பது மட்டும் அல்ல மோட்சமும் பெறுவார்கள்'.
இப்படியாக பலராம் தாஸ் அவர்கள் எழுதிய லஷ்மி புராணம் முடிவுற்றது.

Thursday, August 9, 2012

Sri Lanka - Sivan Temple

ஸ்ரீ லங்கா ஆலயம் -வன்னி
தான் தோன்றீஸ்வரர் ஆலய வரலாறு
சாந்திப்பிரியா


ஆவுடையார் இல்லாத சிவலிங்கம் 

ஸ்ரீ லங்காவின் வன்னி பிரதேசத்தில் அமைந்து உள்ள ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய 'தான் தோன்றி ஈஸ்வரர்' ஆலயம் எனும் சிவபெருமான் ஆலயம் பெரும் புகழ் பெற்றதாகும். ஸ்ரீ லங்காவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு உள்ளதாகக்  கூறப்படும் சில ஆலயங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. ஆனால் அந்த ஆலயங்களைப் பற்றிய செய்திகள் அதிகம் தமிழ் நாட்டில் அறியப்படவில்லை. அந்த ஆலயங்கள் சில மகிமை வாய்ந்தவை என்பது மட்டும் அல்ல, அற்புதங்களைக் கொண்ட கதைகளை உள்ளடக்கியவை. ஆகவே முன்னர் மலேஷியாவில்  இருந்த ஆலயங்களைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டது போல தற்போது  ஸ்ரீ லங்காவின் சில புகழ் மிக்க, புராதானமான ஆலயங்களைக் குறித்து எழுத முடிவு செய்தேன். 
அந்த நிலையில்தான் எதேற்சையாக  நான் சமீபத்தில் வன்னி பிரதேசத்தின் 'தான் தோன்றி ஈஸ்வரர்' ஆலய கும்பாபிஷேக மலரை படிக்க நேரிட்டது. ஆனால் அதில் கும்பாபிஷேகக் காலம் குறிப்பிடப்படவில்லை. அதில் காணப்படும் ஆலய வரலாற்று அடிப்படையிலும், பிற செய்திகளின் அடிப்படையிலும்  அந்த ஆலயத்தைக் குறித்தக் கட்டுரையை கீழே தந்து உள்ளேன்.  ஸ்ரீ லங்காவில் நடைபெற்ற யுத்தத்தினால் சேதம் அடைந்த இந்த ஆலயம் பழுது பார்க்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு உள்ளது.  ஆலயம்  தற்போது நடந்த யுத்தத்தின் போது சேதம் அடையவில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த யுத்தத்தின் போது இது சேதம் அடைந்து 1996 ஆம் ஆண்டு வாக்கில் புனருத்தாரணம் செய்யப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆகவே இந்த கும்பாபிஷேக மலரும் அந்த ஆண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.

சிவ லிங்கங்கள்

சிவலிங்கங்களில் ஸ்வயம்பு லிங்கம், தைவிக லிங்கம், ஆரிஷா லிங்கம், மனுஷ்ய லிங்கம், காணபத்திய லிங்கம் மற்றும் பாண லிங்கம் என்ற வகை லிங்கங்கள் உள்ளன. அவற்றில் சுயம்பு லிங்கம் என்பது  தானே உருவானது. தைவிக எனும் தெய்வீக லிங்கம் தெய்வங்களினால் படைக்கப்பட்டது. காணபத்திய லிங்கம் தேவ கணங்களினால்  படைக்கப்பட்டது.  பாண லிங்கம் கங்கை நதியில் உற்பத்தி ஆனது என்பார்கள். ஆனால் சுயம்பு லிங்கம் மட்டுமே தானாகத் தோன்றியது, அதாவது ஸ்வயம்புவாக எழுந்தவை என்றால் யாருமே சிலைகளை செதுக்காமல்,  தாமாகவே, அதாவது அந்த தெய்வமே அங்கு ஒரு சிலை உருவில் வந்து சில காலம்  தான் குடி இருப்பதற்காக தானே அமைத்துக் கொண்ட இடம் என்பார்கள். அப்படியாக சிவபெருமான் எனும்  ஈஸ்வரர் அங்கு தங்கிக் கொள்ள தனக்கு ஒரு இடத்தை அமைத்துக் கொண்டதினால் அதை 'தான் தோன்றி ஈஸ்வரர்' ஆலயம் என்கிறார்கள்.
பண்டைய கால ஆலய தோற்றம் 
படம் நன்றி : - photos: http://vehavanam.wordpress.com 

ஆலயம் எழுந்தக் கதை
வன்னிய பகுதியை சேர்ந்த பல கிராமத்தினரும் புண்ணிய பூமியாகக் கருதும் இந்த ஆலயம் தோன்றியக் காலம் குறித்த சரியான விவரம் இல்லை என்றாலும், கிடைத்துள்ள ஆதாரங்களின்படி இது 1500 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம்  என்பது தெரிகின்றது. குளக்கோட்டான் என்ற மன்னன் காலத்தில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஸ்வயம்புவாகத் தோன்றிய இந்த ஆலயத்து இறைவன் வேகாவனேஸ்வர் என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள சிவலிங்க ஈஸ்வரர் ஆவுடையார் இல்லாமல் காட்சி தருகிறார்.
யாழ்பாணத்து இடைக்காடு என்ற பகுதியை சேர்ந்த தீரபுத்திரர் என்பவர் சைவ வெள்ளாளர் பிரிவை சேர்ந்தவர். அவர் தனது இரண்டு மகன்களுடன் வன்னிக்கு வந்து குடியேறினார். அவரும் அவரது சந்ததியினரும் வாழ்ந்திருந்த இடம் அப்போது ஓட்டு சுட்டான் என்றக் காட்டுப் பகுதியாகும். அந்த இடம் இன்று இடைக்காடு என்று அழைக்கப்படுகின்றது. அவர் அந்த இடத்தில் இருந்த காட்டை அழித்து பயிர் நிலமாக மாற்றி விவசாயம் செய்தார். ஆனால் சித்தர் தவமிருந்த இடத்தில் இருந்த கொன்றை மரம் அழிக்கப்படவில்லை.
தமது நிலத்தில் குரக்கன் என்ற  கதிர்களை பயிரிட்டார். அந்தக் கதிர்கள் பக்குவமானதும் அவற்றைக் கொய்து அடுத்தப் பயிரைப் பயிரிட அந்த நிலத்தில் இருந்த காய்ந்து போன கதிர்களை (அதை ஓட்டு என்கிறார்கள்)  தீயிட்டு எரித்தார். அப்பொழுது அங்கிருந்த கொன்றை மரத்தின் கீழ் பகுதியில் இருந்த பகுதி  கதிர்கள் எரியவில்லை.  ஆகவே அங்கு எரியாமல் இருந்த பகுதியை அவர் மண்வெட்டியால் வெட்டிய போது அவர் மண் வெட்டியில் ரத்தம் கசிவதைக் கண்டார். பயந்து போய் வெட்டுவதை நிறுத்தினார். இந்த நிகழ்ச்சியை 'ஈஸ்வரர் பாமாலை' என்ற நூலில் இப்படியாகப் கூறி  உள்ளார்கள்:
''எரித்தவிடம் அனைத்தும் எரிந்து போக
எஞ்சியது கொன்றை மரத்தின் நிழலில் உள்ள
பெருத்தோட்டு எரியாமல் இருந்த ஈதை
எப்படியும் தீ மூட்டி எரித்திட்டாலும்
கரு தெரியாதிருந்ததினால் கோபம் கொண்டு
கடிதான மண்வெட்டியதனால் வெட்ட
தெரித்துதிரம் பெருகுவதைக் கண்டு பீதி
அடைந்த மன்னன் வன்னியனுக்கு எடுத்துரைத்தார்''

மண்வெட்டியில் தோன்றி இருந்த ரத்தத்தைக்   கண்டு பயந்து போன தீரபுத்திரன் ஓடோடிச் சென்று அந்தப் பகுதியை நிர்வாகித்து வந்த வன்னியனிடம் அதை எடுத்துரைத்தார். உடனே அங்கு வந்த அந்த சிற்றரசன் அந்த இடத்தை நன்கு ஆராய்ந்தப் பின் பெரியோர் ஆலோசனைப்படி அங்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு தீரபுத்திரனுக்குப் ஆணையிட்டார். அவரும்  அங்கு பிள்ளையாருக்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபட்டார். அதை கொற்றையடி பிள்ளையார் என அழைத்தார்கள். அங்கு வழிபாடுகள் நடைபெற்று வந்திருந்தபோது சில நாட்களுக்குப் பின்னர் அதே இடத்தில், அதே கொன்றை மரத்தின் கீழே, ஒரு சிவலிங்கம்  புதைந்து இருந்ததும் கண்ணுக்கு தென்பட்டது.  ஆகவே அதையும் வெளியில் எடுத்து அந்த ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்க முன்னர் கொற்றை மர பிள்ளையாராக இருந்த ஆலயம், கொன்றை மர ஈஸ்வரர் ஆலயமாயிற்று. அந்த மரத்தடியில் கிடைத்த சிவலிங்கமே அன்று தொட்டு இன்று வரை இக்கோயிலின் கருவறையிலுள்ள சிவலிங்கமாக உள்ளது . ஆலயத்தில் உள்ள  ஈஸ்வரரை வேகாத வனேஸ்வரர் எனும் அர்த்தத்தில் 'வேகாவனேஸ்வரர்' என்றும், ஓட்டுக்களை சுட்டதினால் (காய்ந்த கதிர்களை எரித்ததினால்) எழுந்த ஆலயம் உள்ள அந்த இடத்தின்  பெயர் ஓட்டு சுட்டான் என்றும் ஆயிற்று.

 சித்தருக்கு  காட்சி  தந்த  சிவபெருமான் 

மூன்று சித்தர்கள்
இந்த ஆலயத் தோற்றம் குறித்து இன்னொரு கதையும் புழக்கத்தில் உள்ளது. சுமார் இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னால் அந்த இடம் முழுவதுமே வனப் பிரதேசமாகவே இருந்தது. சுற்றிலும் மலைகள்  சூழ்ந்திருந்த  இருந்த அந்த பகுதிக்கு மூன்று சித்தர்கள் வந்தார்கள். அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், எதற்காக வந்தார்கள் என்ற  எந்த விவரமும்  தெரியவில்லை. அப்படி வந்தவர்களில் ஒருவர் வாவெட்டி எனும் மலைப் பகுதிக்குச் சென்று தவத்தில் இருந்து வெகு காலத்துக்குப் பிறகு அங்கேயே சமாதி அடைந்தார்.  இன்னொரு சித்தர் ஓட்டு சுட்டானுக்கு இரண்டு மைல் தொலைவில் இருந்த காதலியார் செம்மான் குளம்  என்ற இடத்துக்கு சென்று தவம் இருந்து சமாதி அடைந்தார். மூன்றாவது சித்தர் ஓட்டு சுட்டானிலேயே  தங்கி  இருந்து, ஒரு கொன்றை மரத்தடியில் தவம் இருந்து, அங்கேயே சமாதி அடைய, அவர் முன் தோன்றி அவருக்கு அருள் புரிந்தப் பின் சிவபெருமான் அங்கேயே சில காலம் பொறுத்து தானும் ஸ்வயம்புவாக சிவலிங்க உருவில் எழுந்தருளினார்.

பண்டைய கால ஆலய  குளத்தின் தோற்றம் 
படம் நன்றி : - photos: http://vehavanam.wordpress.com 

குளக்கோட்டான் அமைத்த ஆலயக் குளம்
குளக்கோட்டான் என்ற மன்னன் சோழ வம்சத்தை சார்ந்தவர். கி. பீ. 436 ஆம் ஆண்டு ராஜ்ய பரிபாலனம் செய்ததாக கூறப்படும் மனு  நீதி சோழனின் மருமகன் என்று இவரைக் கூறுகிறார்கள்.  திருகோண மலையில் கிடைத்துள்ள கல்வெட்டு செய்திகளின்படி குளக்கோட்டான் என்ற சோழ மன்னன் திரிகோண மலையில் இருந்த சிவன் ஆலயத்தை சீரமைக்க ஸ்ரீ லங்காவிற்கு வந்தான் என்பது தெரிகிறது. அந்தக் குளக்கோட்டானைக் குறித்து கூறப்படும் வாய்மொழிக் கதை இது.  இலங்கைக்கு வந்த குளக்கோட்டான் ஓட்டுச் சுட்டான் பகுதிக்கு அருகில் ஓடிக் கொண்டு இருந்த நதியின் பக்கத்தில் ஒரு குளத்தை நிறுவியவன். அப்போது அந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த நந்தி உடையார் என்பவரின்  மகளை அவன் பார்த்தான். அவளுடைய அழகில் மயங்கிய அவன் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் நந்தி உடையார் அவனது வேண்டுகோளை ஏற்கவில்லை. அதனால் கோபமுற்ற குளக்கோட்டான்,அந்த ஊரில் இருந்த நந்தி  உடையாரின் வயல்களுக்கு தண்ணீர் தந்து  கொண்டிருந்த நதியின் வழியை அடைத்து விட்டு அந்த நீரைக் கொண்டு தன் பகுதியில் ஒரு  குளத்தைக் கட்டினான். நந்தி உடையாரின் பாசனத்துக்கு  நதியில் இருந்து கிடைத்து வந்த  தண்ணீர்   நின்றது. வயல்கள் காயத் துவங்கின. ஆகவே கவலைக் கொண்ட நந்தி உடையார் ஈஸ்வரரை வேண்டிக்  கொள்ள, உடையார் நிலப் பகுதிகளில் பெரும் மழையைப்  பொழிய வைத்து ஈஸ்வரர் பயிர்களைக் காப்பாற்றினார். இதற்கு இடையில் அந்த ஆலயம்  இருந்த இடத்தின் அருகில்தான்  குளக்கோட்டான் ஒரு குளத்தை அமைத்தான் என்றும் அந்த  ஆலயத்தைக் கூட அவன்தான்  அமைத்தான் என்றும் கூறுகிறார்கள். ஆனால் அவன் ஆலயம் அமைத்ததற்கான காரணம் வலுவாக இல்லை.

ஆலய   சன்னதியில்   சிவலிங்கம்  
படம் நன்றி : - photos: http://vehavanam.wordpress.com

ஆலய சிவலிங்க மகிமை

இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ஆவுடையார் இல்லாத சிவலிங்கம் ஆகும். ஆகவே அப்படி இருப்பது தவறு என்று எண்ணிய ஆலய தருமகர்த்தா வெளியூர் சிற்பியை வரவழைத்து அதற்கு ஒரு ஆவுடையாரை செதுக்கச் சொல்லி, ஒரு கவசத்தையும் செய்து வருமாறுக் கூறினார். ஆனால் அன்று இரவே அவர் கனவில் வந்த ஈஸ்வரர் தனக்கு அவை எதுவுமே வேண்டாம் என்றும், தனது விருப்பத்துக்கு மாறாக அவற்றை செய்யக் கூடாது என்றும் கண்டிப்பாகக் கூறிவிடவே   கவசம் இன்றும் அதற்கு அணிவிக்கப்படாமல் ஆலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது.  ஆவுடையாரும் செதுக்கப்படவில்லை. அங்குள்ள சிவலிங்கம் ஆவுடையார் இல்லாத சிவலிங்கமாகவே உள்ளது. இது போன்று ஆவுடையார் இல்லாத சிவலிங்கம் இந்தியாவின் திருச்சி மாவட்டத்து திருவானைக்காவல் கோவிலில் மட்டுமே உள்ளதாம்.
 ஆலயத்தின்  உள்  தோற்றம் 
படம் நன்றி : - photos: http://vehavanam.wordpress.com 

ஆலய மகிமை-  பணியன் என்பவரின் அனுபவம்
வன்னி நிலப்பகுதிகளை ஆண்டு வந்த மன்னர்களும் இந்த ஆலயத்துக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார்கள். இப்படி இருக்கையில் போர்த்துகீசியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய காலத்தில் (1501 -1658) வன்னியையும் பிடிக்க வந்தார்கள். அப்போது அங்கு வந்த போர்த்துகீசியர் அங்கிருந்த மன்னர்களிடம் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டார்கள். அதன்படி வன்னி சிற்றரசர்கள் நாட்டை அவர்களே ஆண்டு கொள்ள அனுமதிப்பதாகவும், ஆனால் அதற்கு பதிலாக ஆண்டுதோறும் அவர்கள் போர்த்துகீசியருக்கு காட்டு யானைகளை கப்பமாக அனுப்ப வேண்டும் என்றும் கூறினார்கள். அதை அங்கிருந்த சிற்றரசர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.  ஆகவே காட்டு யானைகளைப் பிடிக்க  பணியாட்கள்  நியமிக்கப்பட்டு இருந்தார்கள். அந்தப் பணியாட்களை  பணிகன் என்று கூறுவார்கள். ஒரு முறை அங்கிருந்த ஒரு பணிகனுக்கு காட்டில் யானைகள் கிடைக்கவில்லை. யானைகளை அனுப்ப வேண்டிய நாளும் நெருங்கியது. அதனால் கவலையுற்ற பணிகன் அங்கிருந்த   'தான் தோன்றி ஈஸ்வர' ஆலயத்துக்குச் சென்று தனக்கு யானைகள்  எதுவுமே கிடைக்கவில்லை என்பதினால் தனக்கு யானைகள் கிடைக்க அவர் அருள் புரிந்தால் அவருடைய அந்த ஆலயத்தை புதுப்பிப்பதாக வாக்கு கொடுத்தான். அவன் கனவில் தோன்றிய ஈஸ்வரரும்  ஒரு குறிப்பிட்ட  இடத்தைக் கூறி அங்கு சென்றால் யானைகள் நிறைய  கிடைக்கும் என்றார். அவனும் அவர் கனவில் ஈஸ்வரர் கூறிய இடத்துக்குச் சென்று நிறைய யானைகளை பிடித்துச் சென்றான். அதன் பின் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் வகையில் ஆலயத்தையும் புதுப்பித்துத் தந்தான். இருந்தாலும்  ஆலயம் பெரிய அளவில் கட்டப்படாமலேயே இருந்தது.

 ஆலயத்தின்  முன்புறத் தோற்றம் 
படம் நன்றி : - photos: http://vehavanam.wordpress.com 

ஆலய மகிமை-  சின்னதுரை  என்பவரின் அனுபவம்
இந்த ஆலயத்தின் மகிமைக்கு எடுத்துக் காட்டாக இன்னொரு கதை உண்டு. ஸ்ரீ லங்காவின் சண்டிலிப்பாய் என்ற ஊரை சேர்ந்தவர் சின்னத்துரை  என்பவர். அவருடைய மனைவி ஒருநாள் அவரிடம் கூறினாள்  'இந்த ஆலயத்தின்  அருகில் ஒரு குளம் இருந்ததால் ஆலயத்துக்கு  செல்லும் பக்தர்கள் குளித்து விட்டுச் செல்ல வசதியாக இருக்கும் அல்லவா'. அதைக் கேட்ட சின்னதுரை நினைத்தார் 'இது ஒருவேளை ஈசனே அவள் வாய் மூலம் நமக்குக் கொடுத்துள்ளக் கட்டளையாக இருக்கும்'. ஆகவே அன்று முதல் அவர் தாம் செய்யும் வேலை நேரத்தில் கிடைத்த  ஓய்வை இந்த ஆலய நிர்மாணப் பணிக்கு செலவு செய்தார். தம்முடைய வேலையில்  கிடைத்த லாபத்தை இந்த ஆலய பணிக்கே செலவு செய்ததும் அல்லாமல் தனது கடைசி காலத்தில் தனது நிலபுலன்களையும் விற்று அந்தத் தொகைகளை இந்த ஆலயத்துக்கு காணிக்கையாகக் கொடுத்துள்ளார்.
இன்னொரு சம்பவம். சின்னதுரை  ஒருமுறை ஆலய வேலைகளுக்காக சிமெண்ட் மூட்டைகளை தருவித்து இருந்தார். அவற்றை எடுத்து வந்தபோது இரவாகி விட்டதினால் அவற்றை ஒரு இடத்தில் இறக்கி வைத்து விட்டு மறுநாள் பாதுகாப்பான இடத்தில் வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டு அசதியினால் அயர்ந்து தன்னை மறந்து நன்றாகத் தூங்கி விட்டார். மறுநாள் காலை எழுந்தபோதுதான் இரவில் நல்ல மழைப் பெய்து இருந்தது  தெரிந்தது. 'ஐயோ, அனைத்து சிமெண்ட் மூட்டைகளும் பாழாகி இருக்குமோ என்று பயந்தபடி ஓடிச் சென்று பார்த்தபோது அவை அனைத்தையும் யாரோ நல்ல பாதுகாப்பான இடத்தில் மழை நீர் நனையாமல் வைத்து இருந்தது தெரிந்தது. ஆகவே அதை செய்தவருக்கு நன்றி கூறலாம் என எண்ணியவர்  யார் அதை செய்தார்கள் என்று அங்கிருந்தவர்களை விசாரித்தார். ஆனால் அங்கு அக்கம்பக்கத்தில் இருந்த எவருமே அந்த வேலையே தாம் செய்யவில்லை என்று கூறி விட வியப்படைந்தார். அந்த வேலையே  செய்தவர் யாராக இருக்கும் என்பதனை அவரால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அன்று இரவு நன்கு தூங்கியவர் கனவில் சிவபெருமான் தோன்றி முதல் நாள் இரவு அன்று   சிமெண்ட் மூட்டைகளை தான்தான்அவை மழையில் நனையாமல் இருக்க இடம் மாற்றி வைத்ததாகவும், அதனால் தனது   உடலெல்லாம் வலிக்கின்றது என்றும், தன்னை  வென்நீரினால்  குளிப்பாட்டி தன்  உடல் வலியைப்  போக்குமாறும்  கூற ஆனந்தம் அடைந்த சின்னதுரை மறுநாள் சிவலிங்கத்துக்கு வெந்நீர் ஊற்றி அபிஷேகம் செய்தார்.
சின்னதுரைக்கு இன்னொரு அதிசய அனுபவம் கிடைத்தது.  ஒரு நாள் யாழ்பாணத்துக்கு சென்றப் பின் ஓட்டு சுட்டானுக்கு வந்தார் சின்னதுரை. இரவு வெகு நேரமாகி விட்டது. கடும் பசி எடுத்தது. ஊருக்குள் நுழைந்தவர் இன்னமும் ஆலயம் இன்னமும் திறந்து இருந்ததைக் கண்டார். ஆகவே அங்கு அந்த வேலையில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆலயத்துக்குள் சென்றவரை அங்கிருந்த  குருக்கள் வரவேற்றார். குருக்களை அவருக்கு நன்கு தெரியும். அவருக்காகவே தான் காத்திருந்ததாக கூறிவிட்டு  ஒரு தட்டில் சக்கரைப் பொங்கல், வாழைப்பழம் போன்றவற்றைக் கொண்டு வந்து தந்தார். அதை தன் வீட்டிற்கு எடுத்துப் போய் மறுநாள் கொடுப்பதாகக் கூறி விட்டு சென்ற சின்னதுரை வீட்டில் சென்று  பசி  ஆற உண்டுவிட்டு தூங்கினார்.மறுநாள் தாம்பாளத்தை எடுத்துக் கொண்டுப் போய்  குருக்களிடம் கொடுக்க குருக்களுக்கு ஒரே வியப்பு. ஆலயத் தட்டு  எங்கிருந்து சின்னதுரைக்கு  கிடைத்தது என்று கேட்டதும் முதல் நாள் இரவில் நடந்தவற்றை நினைவு கூர்ந்தார் சின்னதுரை.  அதைக் கேட்ட குருக்களோ ஆச்சர்யத்துடன் எப்போதும் போல கோவிலை தான் முன்னதாகவே மூடிவிட்டுப் போய்  விட்டதாகவும், சக்கரைப் பொங்கல் பிரசாதமும் அங்கு இருந்திருக்கவில்லை  என்றும் கூறிவிட்டு அவற்றை சின்னதுரைக்கு   கொடுத்தது அந்த ஈசனாகவே இருந்திருக்க வேண்டும் என்று கூறினார். அதைக் கேட்ட சின்னதுரை  கண்களில்ஆனந்தக் கண்ணீர் நிறைந்தது. 

ஆலய மகிமை-  சுப்ரமணிய முதலியாரின் அனுபவம்
இன்னொரு சுவையானக் கதை அந்த ஆலயத்தைப் பற்றி உண்டு. அந்த ஊர் மணியக்காரர் சுப்ரமணிய முதலியார் என்பவர். அவர் அவ்வபோது ஊர் நிலையைப் பார்க்க நகர் வலம் போவது உண்டு. ஒருமுறை அவர் அந்த ஊரை பார்க்க தனது பல்லக்கில் நகர் வலம் வந்து கொண்டு இருந்தபோது மாறா இலுப்பை என்ற ஊரை சேர்ந்த ஒரு சிவ பக்தர் அந்த  ஆலயத்திற்கு  தன் வீட்டு தோட்டத்தில் விளைந்திருந்த ஒரு குலை வாழைப் பழத்தை தனது தலையில் மூட்டையாகக் கட்டி வைத்துக் கொண்டு சென்றார். வழியில் அவரைக் கண்ட சுப்ரமணிய முதலியார் பல்லக்கை அவன் அருகில் சென்று நிறுத்தச் சொல்லி விட்டு அவற்றை எங்கு கொண்டு செல்கிறாய் என்று அவனிடம் கேட்க அவனும் தான் அதை ஆலயத்துக்கு எடுத்துச் செல்வதாகக் கூற, சுப்ரமணிய முதலியார் சற்றும் கவலைப்படாமல் அதில் இருந்து இரண்டு வாழைப் பழங்களை பிய்துத் தின்று விட்டு தனது ஊர்வலத்தைத் தொடர்ந்தார். அதைக்  கண்ட அந்த பக்தன் மனம் வருந்தினான். ஆலயத்துக்கு எடுத்துச் சென்ற வாழைப் பழத்தை ஆலயத்துக்கு செல்லும் முன்னரே முதலியார் எடுத்து சாப்பிட்டுவிட்டாரே என்று வருந்தினான். அன்று இரவு அதே வருத்தத்துடன் தூங்கியவனின் கனவில் வந்த ஈஸ்வரர் ' இதற்கு நீ ஏன் கவலைப்படுகிறாய், அந்த இரண்டு பழங்களையும் நான்தான் தின்றேன். அது சுப்ரமணிய முதலியார் வயிற்றில் செல்லவில்லை' என்று கூற அவன் ஆனந்தம் அடைந்தான்.
ஒட்டு சுட்டான் செல்லும் பாதையில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் கெடுரமாறு என்ற ஊரில் கிரி நிலை என்கின்ற வற்றாத நீக் குளம் ஒன்று உள்ளது. அதில் ஆடி அம்மாவாசை நாளில் மக்கள் நீராடுவார்கள். ஒரு முறை எப்போதும் போல மக்கள் அங்கு சென்று இருந்தபோது கொள்ளையர்கள் சிலர் பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்து விட்டுச் சென்றார்கள். அதை ஊர் மணியக்காரரான சுப்ரமணிய முதலியாரிடம் சென்று முறை இட்டார்கள். அவர் மிகவும் சாமர்த்தியக்காரர். தனது சாதூர்யத்தினால் வந்திருந்த கொள்ளையர்கள் யார் என்பதைக் கண்டு பிடித்து அவர்களை கைது செய்ய வைத்து தண்டனையையும் பெற்றுத் தந்தார். ஆகவே அவர்களில் முதல் எதிரியின் மருமகன் முதலியார் மீது வஞ்சம் தீர்த்தக் கொள்ள சமயம் பார்த்துக் காத்திருந்தான். யாழ்பாணத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் அவரைக் கொல்ல அவன் திட்டம் இட்டு இருந்ததை எப்படியோ முதலியார் கண்டு பிடித்து விட்டார். ஆகவே ஊர்  திரும்பும் போது ஒரு குஷ்ட ரோகியைப் போல வேடம் தரித்து வந்து அவன் திட்டத்தை முறியடித்து விட்டார் என்றாலும், அவனிடமிருந்து ஆபத்து விலகவில்லை. அவர் அம்மாவாசையில் ஊரை விட்டு எட்டு கிலோமீட்டர் தொலைவு இருந்த கெடுரமாறு கிரி நிலை தீர்த்தத்தில் சென்று குளித்து விட்டு பித்ரு தர்ப்பணம் செய்துவிட்டு திரும்புவது  வழக்கம் என்பதினால் அப்போது பார்த்துக் கொள்கிறேன் என்று அந்த அம்மாவாசைக்கு காத்திருந்தான். சாலையோ சீரானது அல்ல. காட்டுச் செடியுயம், புதர்களும்  மண்டிக் கிடக்கும்.  அவனது எண்ணத்தையும்  தெரிந்து கொண்ட முதலியாருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஆகவே ஈஸ்வரரின் ஆலயத்துக்கு சென்று தன்னை காப்பாற்றுமாறு வேண்டினார். அன்று இரவு அவர் அவர் கனவில் வந்த ஈஸ்வரர், ஊருக்கு அருகிலேயே கற்சிலை என்ற இடத்தின் அருகில் கருடனால் தோற்றுவிக்கப்பட்ட நீர் நிலை ஒன்று உள்ளது என்றும், அதுவும் வற்றாத நீர் நிலை, அதில் தீர்தமாடி தர்ப்பணம் செய்தாலும் அது கிரி நிலையில் உள்ள தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்றும் கூறி விட்டு மறைந்தார். அதுவரை அந்த நீர் நிலையின் புந்தம் யாருக்கும் தெரியாமல் இருந்தது.  அது முதல் உள்ளூர் மக்கள் அந்த கிரி நீர் நிலைக்குப் பதில் கருட தீர்த்தத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டார்கள். கருட தீர்த்தத்தின் விசேஷம் என்ன என்றால் அந்தப் பகுதியில் உள்ள பூமி எத்தனை வறண்டு போனாலும், அந்த நீர் நிலையில் உள்ள நீரும் வற்றியதும் இல்லை, குறையவும் இல்லை. காரணம் அது ஈஸ்வரரின் அருள் பெற்றத்  தீர்த்தம் என்று நம்புகிறார்கள்.

ஆலய திருப்பணி
இந்த ஆலயத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் ஒரு விசேஷம் என்ன என்றால் அந்தப் பகுதி யுத்தகளமாக இருந்த போதும், தினமும் நடைபெற்றுக் கொண்டு இருந்த மூன்று கால பூஜைகள் நிறுத்தப்படவில்லை. யுத்த குண்டு வீச்சுகளினால் ஆலயம் அழியவும் இல்லை. சுவர்கள் மட்டுமே சிறிதளவு சேதம் அடைந்திருந்தது. அதை சீர்படுத்தவே  யுத்தம் முடிந்ததும் அதற்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. மூன்று கால பூஜையும் தடை இல்லாமல்  இன்று வரை தொடர்ந்து கொண்டு உள்ளது . தற்போது ஆலயம் விரிவாக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.


ஆலய தொடர்பு முகவரி
 
தான் தோன்றி ஈஸ்வரர் ஆலயம்
ஒட்டுசுட்டான், ஸ்ரீ லங்கா
அலுவலக தொலைபேசி : ஸ்ரீ லங்கா 0217915574