Tuesday, January 29, 2013

Bande Mahakali, Bangalore

பெங்களூர்

சாந்திப்பிரியாபெங்களூரில் கெம்பகெளடா கோபுரம் எனும் இடத்தில் மலைப் பகுதி போன்ற பகுதியில் உள்ளது 'பண்டே மகா காளி' எனும் காளி தேவியின் ஆலயம். இந்த இடம் கவிபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 300 அல்லது 350 ஆண்டுகளுக்கு முன்பே வெளியில் தெரிந்ததாக கருதுகிறார்கள். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அது ஸ்யம்புவாகத் தோன்றி இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். இதைக் கட்டியவர் யார், மற்றும் இதன் வரலாறு என்ன என்பது குறித்து சரியான விவரம் தெரியவில்லை. மலைப்பாங்கான பகுதியில் ஒரு பெரிய பாறையில் காளி தேவியின் சிலை காணப்படுகிறது. அங்கொரு ஆலயத்தை நிறுவி அதற்குள் பாறையில் காணப்படும் அந்த காளி தேவியின் சிலை இருக்குமாறு சிறு சன்னதியாகக் கட்டி உள்ளார்கள். அந்த சன்னதிக்கு செல்ல படிகள் ஏறிப் போக வேண்டும். அந்த சன்னதியை சுற்றி வேறு பல தெய்வ சன்னதிகள் உள்ளன.
இந்த காளியின் ஆலயத்துக்கு எதிரில் வீரபத்திர ஸ்வாமி ஆலயம் உள்ளது. அவரை பிரளயகால வீரபத்திரர் என்கிறார்கள். இந்த ஆலயம் ராஜராஜ சோழனின் காலத்து ஆலயம் என்கிறார்கள். மேலும் அங்குள்ள வீர பத்திரர் பிரளய காலத்தில் சுயம்புவாக அங்கு எழுந்தவராம். ஆனாலும் இந்த ஆலய வரலாறு குறித்தும் சரியான தகவல் கிடைக்கவில்லை.

வீரபத்ரர் 

வீரபத்திரர் சிவபெருமானின் அவதாரம் ஆகும். காளியும் சிவபெருமானால் படைக்கப்பட்டவள். சாதாரணமாகவே சிவபெருமானுக்கு காவலாக நிற்பவள் காளி என்பார்கள்.  ஆகவே வீரபத்திரர் ஆலயத்துக்கு  எதிரில் அமைந்துள்ள இந்தாள் காளியின் ஆலயம் சிவபெருமானுக்குக் காவலாக நிர்ப்பவள் காளி என்ற தத்துவத்துக்கு  மிகப் பொருத்தமாகவே உள்ளது.  
இந்த ஆலய காளியின் விசேஷம் என்ன என்றால், ஆலயத்தில் உள்ள காளி சிலையின் கால்களைத் தொட்டு வணங்கும்போது அந்த காளி தேவியின் உருவத்தின் மீது சிறிய சொம்பினால் நீரை ஊற்ற, சிலை மீது ஊற்றப்படும் தண்ணீர் சிலை மீது இருந்து நம் தலையில் தெறித்து விழுகிறது. அதையே காளி தேவி நம் மீது தண்ணீர் தெளித்து ஆசிர்வதிப்பதைப் போலக் கருதுகிறார்கள். தை மாத வெள்ளிக் கிழமையில் கூட்டம் அலை மோதுகிறது. நீண்ட வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. அதைத் தவிர இருபது ரூபாய் கொடுத்து விசேஷ வாயில் மூலமும் செல்லலாம் என்றாலும் இரண்டிலும் கூட்டம் குறைவே இல்லை. திருப்பதி ஆலயத்தில் உள்ளதைப் போலவே ஜலகண்டி தரிசனமே கிடைக்கின்றது. ஆகவே நிதானமாக காளி தேவியை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றால் வெள்ளிக் கிழமையை தவிர்த்து பிற நாட்களில் சென்று தரிசனம் செய்யலாம். 
இந்தக் காளியின் இன்னொரு மகிமை  என்ன என்றால் தோஷங்களினால் பீடிக்கப்பட்டவர்கள், நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டு குணமடைய முடியாதவர்கள், பில்லி சூனியம் போன்ற தீமைகளினால் பீடிக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து இங்குள்ள காளியை வழிபட்டால் அவை விலகும் என்பது நம்பிக்கை. கவிபுரத்தில் பல பிரபலமான ஆலயங்கள் - புல் டெம்ப்ள் எனப்படும் மிகப் பெரிய நந்தியின் ஆலயம், பவானி தேவி மற்றும் வீரபத்ரர் ஆலயம்- போன்றவை உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ளது இந்த ஆலயமும்.

 பகவான்  ஜீவீஸ்வர் 
'பண்டே மகா காளி' ஆலயத்தை ஸ்வகுலசாலி எனும் ஒரு பிரிவினர் சஹாஸ்ரார்ஜுன ஷத்ரியா எனும் பிரிவினருடன் சேர்த்து பூஜைகள் செய்து நிர்வாகித்து வருகிறார்கள். ஸ்வகுலசாலி என்பவர்களின் பகவான் ஜீவீஸ்வராவை வழிபடுபவர்கள். பகவான்  ஜீவீஸ்வர் யார்? அவரைக் குறித்துக் கூறப்படும் கதை இது. ஒரு முறை ஆதிமாயா எனும் பராசக்தி சிவபெருமானிடம் பேசிக் கொண்டு இருந்தபோது அவரிடம் அற்புதமான துணிகளை உற்பத்தி செய்யும் புண்ணிய புருஷனைப் படைக்குமாறு கேட்டுக் கொண்டபோது அவர் ஸ்ராவண மாதத்தில் திரியோதிசி நாளில் தனது நாக்கில் இருந்து ஒரு புண்ணிய புருஷனைப் படைத்தார். அவருக்கு கைலாயத்தில் மிக சிறப்பாக ஒரு விழா எடுத்து அவருக்கு சாலி என்ற பெயரை சூட்டினார். அதன் பிறகு பார்வதியும் தன் பங்கிற்கு அவரை வணங்குபவர்கள் ஸ்வகுலா என அழைக்கப்படுவார்கள் என்று கூறினார். அதன் பின் அவரை சிவனின் நாக்கில் இருந்து வெளிவந்தவர் என்பதினால் நாக்கு என்பதை குறிக்கும் சொல்லான ஜீவி என்பதை முன் நிறுத்தி அவரை பூமிக்கு ஜீவீஸ்வரா எனும் பெயரில் அனுப்பி அவருடன் காசிக்கு வந்து அவரை சந்நியாசி ஆக்கி விட்டுச் சென்றார்கள். அவரே காலபைரவர் ஆனார். இப்படியாக வந்தவரே ஜீவிஸ்வரா எனும் பகவான். அவரை ஏற்று அவர் வழியில் வந்த சந்ததியினர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார்கள். அவர்கள் ஸ்வகுலாசாலி என அழைக்கப்பட்டார்கள்.

Friday, January 25, 2013

Birth of Vishnu Sahasranamam

விஷ்ணு சஹஸ்ரநாமம் 
பிறந்த கதை
சாந்திப்பிரியா


பெரும்பாலான ஆஸ்தீக பக்தர்கள் பெரிதும் போற்றிப் படிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. பூஜையே செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு அதை தினமும் ஸ்தோத்திரம் செய்வதின் மூலம் அவரை தினமும் ஆயிரம் முறை பூஜித்தற்கான  பலனைத் தரும் என்பார்கள். சஹஸ்ர என்றால் ஆயிரம் என்று அர்த்தம். ஆகவேதான் ஆயிரம் நாமங்களைக் கொண்ட இதன் பெயர் சஹஸ்ரநாமம் என்றாயிற்று. இந்த உலகில் லலிதா சஹஸ்ரநாமம், கணேச சகஸ்ரநாமம், லஷ்மி சகஸ்ரநாமம், நரசிம்ஹ சகஸ்ரநாமம் மற்றும் சுதர்சன சகஸ்ரநாமம் போன்ற சக்தி வாய்ந்த மந்திர நாம தோத்ராவளிகள் பலவும் இருந்தால் கூட சஹஸ்ரநாமம் என்றாலே எவருக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமமே மனதில் எழும் கூறுவார்கள். 
இந்த நாமாவளியே அத்தனை சக்தி வாய்ந்தது என்பதான நம்பிக்கை இன்றல்ல, பல ஆயிரம் வருடங்களாகவே இருந்துள்ளது என்பதின் காரணம் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் மகாபாரதத்துக்கும் நெருங்கிய சம்மந்தம் உள்ளது.  சரியாகக் கூறினால் இந்த சஹாஸ்ரனாமத்தை சனக குமாரர்களில் ஒருவரே பிதா மகனான பீஷ்மருக்கு உபதேசித்ததாகவும், பீஷ்மர் மூலமே இது மகாபாரத யுத்த முடிவில் அனைவருக்கும் தெரியக் காரணமாக இருந்தது என்பதுமே சரியானதாகும். ஆனால் இந்த சஹாஸ்ரனாமத்தை எழுத்து வடிவில் முதலில் படைத்தது வேத வியாசர் ஆகும். வேத வியாசரே மகாபாரதத்தை எழுதியவர்.


ஆமாம் விஷ்ணு சஹஸ்ரநாமம் தோன்றியது எப்படி என்கிறீர்களா? அதன் கதை இது. மகாபாரத யுத்தம் முடிந்தது. தர்மத்தை அழித்து வெற்றி அடைய நினைத்த துரியோதனின் சகோதரர்கள் மரணம் அடைந்து விட்டார்கள். கங்கா தேவி பெற்றெடுத்த மாபெரும் புனிதரான பீஷ்மர் அர்ஜுனனின் அம்புக்கு இரையாகி மரணப் படுக்கையில் கிடக்கிறார். அவர் உத்ராயண காலத்தில் மட்டுமே தான் மரணம் அடைய வேண்டும் என்று விரும்பியதினால்  அர்ஜுனன் அவருக்கு அம்பினால் ஒரு படுக்கையை அமைத்துக் கொடுக்க அவர் அதில் படுத்துக் கிடக்கிறார். ஆனால் அதே நேரத்தில் ராஜ்ய பதவியில் அமர்ந்து கொண்டிருந்த யுதிஷ்டருக்கு மனதில் அமைதி இல்லை. நடந்து முடிந்திருந்த யுத்தத்தில் தமது உற்றார் உறவினர்களை, நண்பர்களை, நாட்டு மக்களை என அனைவரையும் இழந்து விட்டு பதவியில் அமர்ந்திருக்கிறோமே என்ற மன உறுத்தலால் அவர் அமைதி இல்லாமல் இருந்தார். இரண்டாவது நாளில் உடனடியாக  கிருஷ்ணரை தேடிச் சென்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறார். 'பரமாத்மா, என்னால்  அமைதியாக இருக்க முடியவில்லையே. எனக்கு மன அமைதி கிடைக்க நீதான் ஒரு வழியைக் கூற வேண்டும். உன்னை விட்டால் எனக்கு வேறு நாதியே இல்லையே கண்ணா....எனக்கு மன அமைதியைத் தர ஒரு வழியைக் கூறு' என்று துக்கம் தாங்காமல் அழுதார்.
அதைக் கேட்ட கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டரிடம் கூறினார் ' யுதிஷ்டிரா, நீ   படும் அவஸ்தையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதற்கு என்னால் விடை தர முடியாது. ஆகவே நினைத்த நேரத்தில் தன் உடலைத் துறந்து விட்டு மேலுலகம் செல்லக் கூடிய சக்தி பெற்றவரான பீஷ்மரிடம் சென்று அவரிடம் ஏதாவது உபாயம் உள்ளதா என்று கேட்போம். அவரே இதற்கான விடையைக் கொடுக்க முடியும் என்பதின் காரணம் அனைத்து தர்ம சூத்திரங்களையும் அறிந்துள்ள அவர் இதற்கான வழி முறையையும் அறிந்துள்ளார். ஆகவே மரணப் படுக்கையில் உத்திராயண காலத்தை எதிர்பார்த்து தனது ஆத்மாவை வெளியில் எடுத்துச் செல்லக் காத்திருக்கும் அவர் அதை செய்யும் முன்னர் அவரிடம் செல்லலாம் வா...' என யுதிஷ்டரை அழைத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட யுதிஷ்டரும் கண்ணனுடன் மரணப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மரிடம் சென்றார். கிருஷ்ணருடன் கிளம்பியவர்களில் வியாச முனிவரும் இருந்தார்.  அவர்கள் அனைவரும்  ஒரு சேர தன்னிடம் வந்ததும், அவர்கள் வந்தக் காரணத்தை கேட்ட பீஷ்மர் விரக்தியால் சிரித்தார். 'சரி யுதிஷ்டிரா என்ன சந்தேகம், கேள்' என்று யுதிஷ்டரிடம் பீஷ்மர் கேட்க யுதிஷ்டரும் ' பிதா மகனே, நடந்தது நடந்து முடிந்து விட்டது. ஆனாலும் நான் மன அமைதி இன்றி தவிக்கிறேன். நான் எனக்கு மன அமைதி கிடைக்க வழி தேடி வந்துள்ளேன். ஆகவே எனக்குள்ள சில சந்தேகங்களை நீங்கள் விளக்க வேண்டும்.  தெய்வங்களிலேயே உயர்வான தெய்வம் எது?  எந்த தெய்வத்தை வேண்டுவதின் மூலம் வாழ்வில் மன அமைதி கிடைத்து மனிதர் மகிழ்ச்சியோடு இருக்க முடியும்? பிறப்பு எனும் இந்த பிறவிக் கடலை விட்டு விலக நான் யாரை வணங்கித் துதிக்க வேண்டும்? ஒவ்வொருவருடைய பிரார்த்தனையும் சென்றடையும் முடிவான இடம்தான் எது என்பது தெரிந்தால் நானும் அதை செய்ய விரும்புகிறேன். இவையே என் சந்தேகங்கள். தயவு செய்து இவற்றை நீங்கள் விளக்க முடியுமா? ' என்று கேட்டார்.
பீஷ்மரோ கண்ணனைப் பார்த்துக் கூறினார் ' என்ன கண்ணா, இன்னமும் உன் திருவிளையாடல் ஓயவில்லையா? உன்னை சாரதியாக்கிக் கொண்டு மகாபாரத யுத்தத்தை நடத்தி முடித்து விட்டாய். எவை எல்லாம் நடக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சப்தம் இன்றி திறமையாக செய்து காட்டி விட்டாய். நீயே தெய்வம் என்பதை நிரூபித்தப் பின்னரும் அதை அறிந்து கொள்ளாத பாண்டவ சகோதரர்களை இந்த சாமான்யனிடம் ஏன் அழைத்து வந்தாய்? உன்னால் முடியாத காரியமும் உள்ளதா? ஆனாலும் நீ எதோ ஒரு காரணத்துக்காக என்னிடம் இவர்களை அழைத்து வந்துள்ளாய். அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி நீயும் எனக்கு மோட்ஷத்துக்கு வழிகாட்ட வந்துள்ளதற்கு நான் உனக்கு நன்றி கூறியே ஆக வேண்டும்' என்று கூறிய பின் யுதிஷ்டரைப் பார்த்துக் கூறலானார்.
 'யுதிஷ்டிரா இந்த பிரபஞ்சத்தில் பராசக்தியினால் படைக்கப்பட்ட மகா விஷ்ணுவே கடவுட்களுக்கு எல்லாம்  கடவுளாக விளங்குகிறார். அவருக்கு ஆயிரம் நாமகரணங்கள் உண்டு . அந்த நாமத்தை எவன் உச்சரித்து அவரை வணங்குவானோ அவனுக்கே மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். ஆத்மாவில் ஏற்படும் துக்கங்கள் அனைத்தும் விலகி ஓடும். இந்த உலகத்தை முற்றிலும் அறிந்தவர் முதலும் முடிவுமாக உள்ள அவரே. அவரே அனைத்து துக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவருடைய நாமத்தை எவன் ஒருவன் தொடர்ந்து நிலையான மனதுடன் பூஜிப்பானோ அவன் அனைத்து விசனங்களில் இருந்தும் விடுபடுவான்.  இந்த உலகுக்கு ஒளி கொடுக்கும் சூரியனைப் போல அவரை பூஜிப்பவர்களின் மனதிற்கும் இதயத்திற்கும் அமைதி எனும் ஒளியைக் கொடுப்பார். புனிதம் என்றாலே விஷ்ணு என்று அர்த்தம் தரும் வகையில் உள்ள புனிதமானக் கடவுள் அவர்.  ஆகவே முதன்மைக் கடவுளான விஷ்ணுவை ஆயிரம் நாமங்களைக் கொண்டு பூஜிப்பதின் மூலமே மன பயத்தில் இருந்தும் இதய பயத்தில் இருந்தும் விடுதலைக் கிடைக்கும்'


இப்படிக் கூறியபின் பீஷ்மர்  விஷ்ணு சஹாஸ்ரனாமாவளியில் வரும் ஆயிரம் நாமாக்களையும்  மற்றும் அவற்றின் அர்த்தங்களையும், அவற்றின் பலன்களையும்  யுதிஷ்டருக்குக் போதித்தார். அப்படி பீஷ்மர் வாய் வழியே  உபதேசித்த விஷ்ணு சஹாஸ்ரனாமத்தையே  மகாபாரதத்தை  வெகு காலத்துக்குப் பின்னர்  படைத்த வேத வியாசர் எழுத்து வடிவில் தந்தார் என்பது நம்பிக்கை.
இந்த உலகைக் காக்க விஷ்ணுவின் பத்து அவதாரங்களை எடுக்க வைத்த பராசக்தி விஷ்ணு அவதாரத்தின் மகிமையை அவருடைய ஒரு அவதாரத்தின் மூலமே வெளிப்படுத்த வேண்டும் என விரும்பி அதை மகாபாரத யுத்த முடிவில் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் மூலம் உலகிற்கு வெளிக் கொண்டு வந்தாள்  என்பதினால்தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமை இன்னும் கூடுகிறது.  இதன் மூலம் ஹரியும் சிவனும் ஒருவரே என்ற தத்துவம் மேலும் வலுப்பெறுகிறது.

 வேத வியாசரும் ஆதி சங்கரரும் 

இந்த சஹஸ்ரநாமத்தின் பெருமை பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர் மூலம் உலகிற்குப் மேலும் பரவியது என்பதும் உண்மை ஆகும். ஏன் என்றால் அந்த பராசக்தியான அம்பிகைதான் அவருக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தை அறிய வைத்தாள். பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரருக்கும் இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இந்த கதையை  படியுங்கள். ஒருமுறை பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர் காஷ்மீரத்தில் தங்கி இருந்தபோது (காஷ்மீரத்தில் பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரரின் ஆலயம் கூட உள்ளது) அவர் லலிதாம்பிகையின் சஹஸ்ரனாமாவளிக்கு ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என விரும்பினார். லலிதா சஹஸ்ரநாமம் என்பது ஹயக்ரீவர், மகாவிஷ்ணு மற்றும் அகஸ்திய முனிவர்களுக்கு இடையே ஏற்பட்ட சம்பாஷணை மூலம் படைக்கப்பட்டது என்று பிருமாண்ட புராணம் மூலம் அறியப்படுகிறது.
பண்டாசுரனை அழிப்பதற்காக அவதரித்த லலிதாம்பிகை அவனை வதம் செய்தப் பின் ஆனந்தமாக ஸ்ரீபுரம் எனும் தனது இருப்பிடத்தில் அமர்ந்திருந்தபோது அங்கு அவளால்  படைக்கப்பட்டு  இருந்த வசினி என்னும் தேவதையின் தலைமையில் இருந்த வாக்தேவிகள் ஸ்ரீ சக்கிரத்தில் அமர்ந்திருந்த லலிதாம்பிகையின் புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர். லலிதாம்பிகையின்  வாயில் இருந்து வெளிவந்த  வாசினிகள் என்ற தேவதைகள் துதித்த நாமாவளியே  லலிதா சஹஸ்ரநாமம் ஆயிற்று எனக் கூறுகிறார்கள். அந்த நாமாவளியை வாக்தேவதைகள் லலிதாம்பிகையின் பெருமையை ஆயிரம் பெயர்களைக் கூறி அவளை ஆராதிக்கும் விதத்தில் அமைத்து இருந்ததினால் அதை ரகஸ்ய நாமாவளி என்றும் அதை உச்சரித்து தேவியை வழிபடுவது பல பலன்களை தரும் என்பார்கள். உண்மையில் பார்வதியே  அந்த இடத்தில் சாந்தநாயகியான லலிதாம்பிகை என்ற ரூபத்தில் இருந்தாள். அந்த  இடத்தில் அகஸ்திய முனிவரும் வந்து லலிதா நவரத்னமாலா எனும் பாடலை தானே இயற்றிப் பாடினாராம்.
ஆகவேதான் அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அந்த நாமாவளிக்கு அர்த்தம் தரும் ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என காஷ்மீரத்தில் அப்போது தற்காலிகமாகத் தங்கி இருந்த ஸ்ரீ ஆதிசங்கரர் விரும்பினார். அவர் தமது சீடரை அழைத்து அங்கிருந்த புத்தகசாலையில் ( லைப்ரரி) சென்று தேவி நாமாவளியை எடுத்து வருமாறுக் கூறினார். சீடர் அங்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்து வந்தார். சீடர் எடுத்து வந்த புத்தகம் விஷ்ணுவின் ஆயிரம் நாமாவளியைக் கொண்ட புத்தகமாக இருந்தது. ஆகவே தவறாக எடுத்து வந்துவிட்ட அந்த புத்தகத்தை வைத்து விட்டு லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வருமாறு ஸ்வாமிகள் தமது சிஷ்யரிடம் கூற அவர் சிஷ்யரும் மூன்று  முறை உள்ளே சென்று புத்தகத்தைக் கொண்டு வந்தாலும் மூன்று முறையும் அவர் கொண்டு வந்த புத்தகம்  விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்ததாம்.  மீண்டும் மீண்டும் தான் கேட்டதைத் தவிர வேறு  புத்தகத்தையே ஏன் எடுத்து வருகிறாய் என சிஷ்யரிடம் ஸ்ரீ  பாகவத் பாதாள் கேட்டதும் அந்த சிஷ்யர்  கூறினாராம் ' ஸ்வாமி  என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நான் சென்று நீங்கள் கூறிய புத்தகத்தை எடுக்க முயன்றபோது அங்கிருந்த ஒரு சிறுமி, இதுதான் நீ தேடும் அந்த புத்தகம்  என ஒரு புத்தகத்தைத்    தந்தாள். நானும் அவள் கூறியதை நம்பி  அவள் கொடுத்த புத்தகத்தை எடுத்து வர வேண்டியதாயிற்று' என்றதும் ஸ்ரீ பாகவத் பாதாளுக்கு புரிந்தது இதை செய்வது அந்த அம்பிகைதான்.  அவளால் இந்த பிரபஞ்சத்தின் நம்மைக்காக அவளால் படைக்கப்பட்ட விஷ்ணுவின் நாமத்திற்கு முதலில் பாஷ்யம் எழுத வேண்டும் என்பதினால்தான் இப்படி செய்கிறாள். அந்த உண்மையை உணர்ந்து கொண்டவர் முதலில் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதிய  பின்னரே  லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதினர். இதில் இருந்தே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.

Tuesday, January 22, 2013

Magalam Siva Temple

மாகாளேஸ்வர் ஆலயம்
சாந்திப்பிரியா


மாகாளேஸ்வர் ஆலயம் என்றாலே உஜ்ஜயினியின் நினைவுதான் அனைவருக்கும் வரும். ஆனால் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பெருமையை கொண்ட இன்னொரு மாகாளேஸ்வர் ஆலயம் பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ள இரும்பை மாகாளம் என்ற ஊரில் உள்ளது. இந்த இடத்துக்கு செல்ல திண்டிவனத்தில் இருந்து கிளியனூர் வழியே பாண்டிச்சேரி செல்லும் பாதையில் செல்ல வேண்டும்.
இந்த தலம் எழுந்த வரலாறு சுவையானது.  இந்த தலம் எழக்காரணம் காடுவெளிச் சித்தர் என்ற உண்மை பலமாக உள்ளது. காடுவெளி என்பது வெட்ட வெளியைக் குறிக்கும். வெட்டவெளி என்பது சூன்யப் பிரதேசம் ஆகும்.  ஆகவே இந்த முனிவர் இவர் அந்த வெட்ட வெளியான  சூனியத்தையே   தியானித்து சித்தி பெற்றதால் காடுவெளிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார் என்பது ஒரு நம்பிக்கை. இவர் காஞ்சிபுரத்தில் சமாதியடைந்ததாக சிலர் கூறுகின்றனர். இவருடைய வாழ்கை  வரலாற்றை யாரும் முறையாக எழுதவும் இல்லை. இவரைப் பற்றிய பல செய்திகள் வாய் மொழிக் கதைகளாகவே உள்ளன.  
இந்த ஆலயத்தைக் குறித்து சில இடங்களில் கூறப்படும் கதைகள் சற்றே மாறுபட்டு உள்ளன. ஒரு காலத்தில் இந்தப் பகுதி பஞ்சத்தினால் சூழப்பட்டு பலர் மரணம் அடைந்தார்கள். அப்போது அந்தப் பகுதி மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த காலம் ஆகும்.  இந்தப் பகுதியை அவனால் நியமிக்கப்பட்ட குறுநில மன்னன் ஒருவன் ஆண்டு கொண்டிருந்தான். மழை இல்லை என்பதால் பூமி வறண்டு, எதுவுமே விளையாமல் போயிற்று . எத்தனை யாகம் செய்தும் மழை பொழியவில்லை. பஞ்சத்தினால் நாடே தவிக்க, என்ன செய்வது எனப் புரியாமல் போன மன்னன் தமது அரசவைக் கூட்டி பஞ்சத்தை நிவர்த்திக்க என்ன செய்யலாம் என்ற ஆலோசனையை நடத்தினார். அப்போது அவர்கள் அந்த நாட்டின் ஒரு பகுதியில் கடும் தவத்தில் அமர்ந்திருந்த காடுவெளிச் சித்தர் என்பவருடைய உதவியினால் மட்டுமே அதற்கு தக்க வழி காண முடியும் என்பதை ஜோதிட ரீதியாக அறிந்து கொண்டார்கள்.
ஆனால் தவத்தில் அமர்ந்து உள்ள முனிவருடைய தவத்தைக் கலைத்து யார் அவரை எழுப்ப இயலும் ? அவர் தவம் கலைந்து   சாபமிட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவர்களை சூழ்ந்து கொண்டது. ஆகவே நாடு முழுவதும் மன்னனின் பரிதவிப்பையும், பஞ்ச நிலைமையையும் தண்டோரா போட்டு எடுத்துக் கூறி அந்த முனிவருடைய தவத்தைக் கலைத்து அவரை எழுப்ப யாராவது முன் வரத் தயாராக உள்ளார்களா எனக் கேட்டார்கள். ஆனால் இரண்டு மூன்று நாள் ஆகியும் அந்த செயலை செய்ய எவரும் முன்வரவில்லை.  காரணம்  பயம்.

 காடுவெளிச் சித்தர் 

அரசனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. அப்போது அகஸ்மாதாக அந்த ஊருக்கு வந்திருந்த ஒரு தேவதாசி நாட்டு நிலைமையைக் கண்டு மனம் உருகி தானே சென்று அந்த முனிவரை எழுப்பி அவர் உதவியை நாட சம்மதித்தாள். அதற்காக அவர் கோபம் கொண்டு தன்னை சபித்தாலும், தான் மக்களின் நலனுக்காக உயிர் இழக்கவும் தயாராக இருப்பதாக கூறிவிட்டு, காடுவெளிச் சித்தர் தவம் இருந்த இடத்துக்குச் சென்றாள். அந்த முனிவரை சுற்றி பல மரங்கள் எழுந்திருந்தன. அந்த மரங்களில் இருந்து அவர் கைகளில் விழும் சில பழங்களை மட்டும் ஒரு நாளைக்கு ஒரு வேளை, இருவேளை என அவருடைய நீண்டு இருந்தக் கைகள்  வாய் வரை கொண்டு செல்ல அவற்றை அவர் உண்டு வாழ்ந்து வருவதைக் கண்டாள். ஆனால் அவருடைய  கண்கள் விழிக்கவோ, வாய் பேசவோ, சுற்றிலும் நடப்பதை உணரவோ இல்லை. ஒரு இறந்த சடலம் போல தவத்தில் இருந்தவர் உண்டதெல்லாம் மரங்களில் இருந்து விழுந்த பழங்கள் மட்டுமே. அவர் முன்னால் சென்று பலவகையான பாடல்களைப் பாடியும், ஆடியும் அவர் தவத்தை கலைக்க முயன்ற தேவதாசி தனது செயல்களில் தோல்வியையே கண்டாள் .
ஆகவே அவள் வேறு வழியைக் கையாள முடிவு செய்தாள். மரங்களில் இருந்து சில பழங்களைப் பறித்தாள். அவற்றை வெட்டி அவற்றுக்குள் உப்பும் காரமும் சேர்த்து அவர் கைகளில் போட்டாள். சில நாட்கள் கழிந்தன. உப்பும், காரமும் தவத்திலோ அமர்ந்து இருந்தவருடைய  உடலில் சேர நாக்கு ருசியை சுவைக்க ஆரம்பித்தது. ஒருநாள் அவர்  கையில் தேவதாசி வேண்டும் என்றே உப்பும், காரமும் கலக்காமல் வைத்தப் பழத்தின் சுவை பிடிக்காமல் அவர் கண்கள் தாமாகத் திறந்து கொண்டதும், அதையே எதிர்பார்த்து காத்திருந்த தேவதாசியும் நடந்த அனைத்தையும் கூறி, அவர் தவத்தைக் கலைத்த தன்னை மன்னித்து விடுமாறும், மடிந்து கொண்டு இருக்கும்  மக்களை காக்க அவர் உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தாள். கண் விழித்த முனிவரும் அவள் கூறியதைக் கேட்டப் பின் அவள் மீது கோபப்படாமல் அவளை வாழ்த்தினார். ஆவலுடன் அரண்மனைக்குச் சென்று அரசனை சந்தித்தார். அந்த ஊரில் ஒரு சின்ன சிவன் ஆலயத்தை நிறுவி அங்கு தங்கி அதைப் பூஜிக்கலானார். ஒரு சில நாளிலேயே கடும் மழைப் பொழிந்தது. நாட்டில் பஞ்சம் விலகத் துவங்கியது.
ஆகவே அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஆலயத்தில் பெரும் விழா ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். விழாவும் துவங்கியது. அந்த விழாவில் ஆடல்கள், பாடல்கள் நடைபெற்றன. அப்போது அந்த விழாவின் நாட்டிய நிகழ்ச்சியில் காடுவெளிச் சித்தரை தவத்தைக் கலைத்து அழைத்து வந்த தேவதாசியும் நடனம் ஆடிக் கொண்டு இருந்தபோது அவள் கால்களில் இருந்த ஒரு சலங்கை அறுந்து  விழுந்தது.

 தேவதாசி நடனம் 

அதை எடுத்துக் கொண்டு போய் அவள் கால்களில் மாட்டி விட்ட முனிவரின் செய்கையைக் கண்டு அங்கு கூடி இருந்தவர்கள் கேலி செய்தார்கள். அதைக் கண்ட அந்த சித்தர் கோபம் அடைந்து இறைவனை நோக்கிப் பாடத் துவங்க, தனது பக்தனுக்கு நேர்ந்த கதியைக் கண்டு கொதித்துப் போன சிவபெருமானின் ரூபமான சிவலிங்கத்தின் தலை மூன்று பகுதிகளாக வெடித்துச் சிதறியது. அதைக் கண்ட அனைவரும் பயந்து ஓடினார்கள். அங்கு ஓடோடி வந்த மன்னன் முனிவரிடம் தனது மக்களின் அறியாமையினால் நிகழ்ந்த அவமானத்துக்கு தானே மன்னிப்புக் கோரி சிவலிங்கத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டுகோள் விடுத்தார். அதைக் கேட்ட முனிவரும் சினம் தணிந்து மீண்டும் ஒரு பாடலைப் பாட அந்த வெடித்துச் சிதறிய சிவலிங்கத்தின் தலை மீண்டும் ஒன்றாகியது. அதன் மீது அவரே செப்புத் தகட்டை வைத்து பந்தனம் செய்தார். ஆகவே இன்றும் அங்குள்ள சிவலிங்கத்தில் தலையில் வெடித்த இடத்தின் தழும்புகள் உள்ளன. அதன் பின் அந்த இடத்திலேயே அந்த சிவலிங்கத்திற்கு ஒரு ஆலயம் எழுப்பினார்கள். நாடும் செழிப்புற்றது. மாகாளத்தில் இப்படியாக காடுவெளிச்  சித்தரால் உருவான சிவன் ஆலயமே தென் இந்தியாவின் மாகாளீஸ்வரர்  ஆலயம் எனப்படுகிறது.

Thursday, January 17, 2013

Thirumurugatrup padai
திருமுருகாற்றுப் படை
சாந்திப்பிரியா

சூரியனை வதம் செய்ய புறப்பட்ட முருகப் பெருமான் புலவர் நக்கீரரை காப்பாற்றியக் கதை முருகனின் புராணத்தில் உள்ளது. நக்கீரர் பெரும் கவி. யாருக்கும் தலை வணங்காதவர். காரணம் அவருக்கு உண்மையைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதே. சிவபெருமானை வணங்காமல் வேறெங்கும் செல்ல மாட்டார்.  ஒருநாள் என்றும் போல வெளியில் கிளம்பிச் சென்றார். நக்கீரர் ஒருமுறை வெளியூருக்குப் பயணமானார். அது திருப்பரம்குன்றம் எனும் இடமாகும். அங்கு சென்றவே அங்கிருந்த குளத்தில் குளித்து விட்டு அருகில் இருந்த சிவாலயத்தின் வெளியில் இருந்த மரத்தடியில் படுத்துக் கொண்டார். ஆலயம் இன்னும் திறக்கவில்லை. அது திறந்ததும் அங்கு சென்று சிவபெருமானை வழிபடலாம் என எண்ணி இருந்தார்.
அதே நேரத்தில் அங்கு சாபம் ஒன்றைப் இருந்த கார்முகி எனும் பூதம் ஒன்று ஆலயத்தின் வெளியில் காத்துக் கிடந்தது.  அதன் வேலை என்ன என்றால் அந்த ஆலயத்தில் வந்து சிவனை பூசிப்பவர்கள் சிவ பூஜையில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவர்களை கொண்டு போய் சிறையில் அடைத்து விடும். இப்படியாக ஆயிரம் பக்தர்களை  சிறையில் அடைத்தப்  பின் அவர்களை காளி தேவிக்கு பலி கொடுத்தால் அதன் சாபம் விலகி அது தன் பழைய மனித உடலைப் பெற்று விடும். ஆகவே அது சிவாலயங்களை சுற்றித் திரிந்து வந்தது. ஆகவே அது அங்கு வரும் பக்தர்களின் கவனத்தைக் கலைத்து சிவ பூஜையில் தவறிழைக்கச் செய்து, அதில் தவறு செய்பவர்களாய் பிடித்துச் சென்று விடும்.
ஆலயமும் திறக்க அதற்குள் சென்ற நக்கீரர் பூஜையை செய்யலானார். அந்த காலங்களில் ஆலயம் என்பது மிகப் பெரிய அளவில் இருக்காது. கருவறை என்பதெல்லாம் கிடையாது. நான்கு சுவர்களுக்குள் ஒரு குளத்துடன் மரமும் உள்ள இடத்தில் விக்ரகங்கள் அல்லது  ஒரு கல்லைப் போன்ற உருவம் இருக்கும். அதையே குறிப்பிட்ட கடவுளாகக் கருதி பூஜிப்பார்கள். பூஜை செய்யத் துவங்கிய நக்கீரரின் முன்னால் இருந்த குளத்தில் அவர் அமர்ந்து இருந்த மரத்தின் மீது இருந்து சில இலைகள் பறந்து வந்து விழுந்தது. ஆச்சர்யமாக அந்த அந்தக் குளத்தில் விழுந்த இலையோ ஒரு மீனாக மாறிவிட,  குளத்தின் கரையில் விழுந்த இலை ஒரு மீன்கொத்திப் பறவையாக மாறியது. அடுத்தகணம் மீன் கொத்திப் பறவை அந்த மீனைப் பிடிக்க முயல,  அதைக் கண்ட  நக்கீரர் அதிசயத்தினால் அவற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தார். அதனால் பூஜையில் அமர்ந்த அவருடைய கவனம் கலைந்தது. அதுவே தக்க தருமணம் என்று எண்ணிய கார்முகி அவரை அப்படியே தூக்கிக் கொண்டு போய் தன் சிறையில் அடைத்து விட்டு ஆனந்தமாகக் கூத்தாடியது. உடனே சென்று குளித்து விட்டு வந்து காளிக்கு பலி தருகிறேன் என குதுகுலத்துடன் கூறி விட்டுச் செல்ல அவருக்கு முன்னால்  அங்கு சிறையில் இருந்தவர்கள் அவரைக் கண்டதும்  'ஓ' என ஒப்பாரி வைத்து அழலானார்கள். நக்கீரருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் எதற்காக அழுகிறார்கள் என விசாரித்தபோது அவர்கள் கார்முகி பூதத்தின் கதையைக்  கூறியப் பின் இதுவரை அந்த பூதம் 999 பேர்களை சிறையில் அடைத்து வைத்து உள்ளதாகவும், பல மாதங்கள் தேடியும் அதனால் ஆயிரமாவது மனிதனைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறியது என்றும், இன்று நக்கீரரை பிடித்து வந்துவிட்டதின் மூலம் அதன் நோக்கம் நிறைவேறி விட்டது என்றும் இனி அங்குள்ள அனைவருக்கும் மரணமே என்றும் கூறி அழுதார்கள்.
ஆனால் அதைக் கேட்ட நக்கீரர் கலங்கவில்லை. ஆர்பரிக்கவில்லை. கண்களை மூடியபடி கந்தனை வேண்டிப் பாடத் துவங்கினார். 'கந்தா, கருணை வேலவா, உன் இடத்துக்கு வந்துள்ள என்னைக் காக்க முடியாதவனாகி விட்டாய் என்பதை நான் நம்பவில்லை. உன் சக்திக்கு எதிராக எந்த பூதம் எங்களைக் கொள்ள இயலும். உன் தந்தைக்கு பூஜை செய்தப் பின் உனக்கல்லவோ பூஜை செய்ய வந்தேன். அப்படிப்பட்ட நற்பண்பு கொண்ட உன் பக்தனை கேவலம் ஒரு பூதத்துக்கு இறையாக்கலாமா? இது முறையா? தர்மமா? உன் வேலின் சக்தி என்ன ஆயிற்று? அதை எங்கே ஒழித்து வைத்து விட்டாய்? முருகா, ஷண்முகா...எம்மைக் காக்க வருவாயா?' என மனமுருகி பிராத்திக்க அவர்கள் சிறை வைக்கப்பட்டு இருந்த குகைக்குள் பெரிய வெளிச்சம் தோன்றியது. அந்த வெளிச்சத்தைத் தொடர்ந்து வந்த கந்தவேலன் அங்கேயே அவர்கள் அனைவரையும் ஆசிர்வதித்தப் பின் காத்திருந்து கார்முகி வரவை எதிர்பார்த்துக் காத்திருந்து அது வந்தப் பின் அதை தனது வேலினால் குத்திக் கொன்றார். அடுத்து அங்கிருந்த ஆயிரம் பேர்களையும் விடுதலை செய்தப் பின் அங்கிருந்துக் கிளம்பிச்  சென்று சூரபதமனையும் அழித்தார்.  அதன் பின்னரே முருகப் பெருமானின் அற்புதத்தை வெளிப்படுத்தும்  திருமுருகாற்றுப் படை எனும் அற்புத பாடலும் பிறந்தது.

Sunday, January 13, 2013

Kannagi worship in Sri Lanka

 இலங்கையில் கண்ணகி வழிபாடு 
புங்குடுத் தீவு 
கண்ணகி ஆலயம் 
 சாந்திப்பிரியா 


மதுரையை எரித்த கண்ணகிக்கு  இந்தியாவின் தென் பகுதியில் மட்டும் அல்ல இலங்கையிலும்  வழிபாடு உள்ளது. ஈழத்தில் முருகன் வழிபாடு எப்படி அதிகமாக உள்ளதோ, அதில் பாதி அளவாவது கண்ணகிக்கும் உள்ளது என்பது ஒரு ஆச்சர்யமான செய்தியாக இருக்கும். இலங்கையில் பல இடங்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் உள்ளன. கண்ணகியை ராஜராஜேஸ்வரி, நாகபூசணி, முத்துமாரி அம்மன், நாச்சியம்மன், புவனேஸ்வரி, மீனாட்சி போன்ற பல பெயர்களில் வழிபடுகிறார்கள்.
கண்ணகி ஆராதனை என்பதைசுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வந்தது கி.பி 170 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்டு வந்த கஜபாகு என்ற மன்னனே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கண்ணகியும் கோவலனும் தெய்வமாகி மேலுலகம் சென்றப் பின் இந்தியாவின் தென் நாட்டில் ஆட்சியில் இருந்த சேரன் செங்குட்டுவன் என்ற சேர மன்னன் கண்ணகிக்கு பெரும் விழாவை எடுத்தான். வாஞ்சி நகரில் அவன் நடத்திய கண்ணகி விழாவில் இமயமலையில் இருந்து கொண்டு வந்த கல்லில் செதுக்கிய கண்ணகி சிலையை வைத்து ஒரு ஆலயம் அமைத்து விழா நடத்தியபோது அவன் இலங்கையில் இருந்த தன்னுடைய நண்பரும் மன்னருமான கஜபாகு என்ற மன்னனுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். அதில் கலந்து கொள்ள வாஞ்சிக்கு வந்த கஜபாகு கண்ணகியின் மகிமையை அறிந்து கொண்டு அவளிடம் தன் நாட்டிற்கும் வந்து அருள் பாலிக்குமாறு கண்ணகி ஆலயத்தில் வேண்டிக் கொண்டார். 
கஜபாகுவின் விருப்பத்தை அறிந்து கொண்ட செங்குட்டுவன் விழா, முடிந்த கையோடு அவருக்கு கண்ணகியின் சிலம்பைப் போன்ற ஒன்றையும் ஆலய விழாவில் பயன்படுத்திய வெள்ளியில் ஆன மாம்பழம், சந்தனக் கட்டையினால் செய்த கண்ணகியின் சிலை போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார். அதைக் கொண்டு வந்த கஜபாகு முதன் முதலாக கண்டியில் கண்ணகிக்கு ஒரு ஆலயம் அமைத்தார் என்று கூறுகிறார்கள்.
இன்னொரு செய்தியின்படி கஜபாகு  தமிழ்நாட்டின் தென் பகுதியில் படையெடுத்துச் சென்று அங்கு சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த சிங்களவரை விடுதலை செய்து கொண்டு சேரன் செங்குட்டுவன் நடத்திய விழாவில் கலந்து கொண்டதாகவும், அப்போது கண்ணகி சிலையை எடுத்துக் கொண்டு வந்தபோது பெருமளவில் தென் இந்திய மக்களும் கஜபாகுவுடன் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததினால் அவர்களையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்ததாகவும் நம்பிக்கை உண்டு.  
அதைத் தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் கண்ணகிக்கு ஆலயங்கள் எழுந்தனவாம். அது மட்டும் அல்லாமல் மதுரையில் பாண்டிய நாட்டு மன்னனின் தலை நகரை அழித்த கற்புக்கரசி கண்ணகி இலங்கைக்கு வந்து சுமார் பத்து இடங்களில் தங்கி இருந்துள்ளதாக சில நம்பிக்கையும் இலங்கையில் உள்ளது. அதனாலும் கண்ணகிக்கு பல இடங்களிலும் ஆலயங்கள் எழுந்திருக்கலாம். கண்ணகியை சிங்களவர்கள் 'பத்தினி தெய்யோ' என வழிபாட்டு வருகிறார்கள். 'தெய்யோ' என்றால் 'தெய்வம்' என்று அர்த்தம்.


இப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றே யாழ்ப்பாணத்தில் உள்ள புங்கு தீவில் உள்ள கண்ணகி ஆலயமும். இந்த ஆலயம் சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சார்ந்த ஆலயம் என்கிறார்கள்.  முன் ஒரு காலத்தில் இந்த தீவில் இருந்த சைவ வேளாளப் பிரிவை சார்ந்த ஒருவர் மாட்டுப் பண்ணை முதலாளியாக இருந்தவர். அவருடைய மாடுகளை தினமும் அவருடைய வேலையாட்கள் காடுகளில் மேய விட்டுத் திரும்புவார்கள். இப்படியாக இருக்கையில் ஒருநாள் காட்டில் மேய விட்டு இருந்த ஒரு மாட்டுக் கூட்டம் திரும்ப வரவில்லை. அவர்கள் உடனே யஜமானரிடம் சென்று நடந்ததைக் கூற அவரும் பல இடங்களுக்கும் தனது வேலையாட்களை அனுப்பி அந்த மாட்டு கூட்டத்தைத் தேடுமாறு கூறினார். அவர்கள் அந்த மாட்டு கூட்டத்தை தேடி அலைந்தபோது அந்த மாடுகள் கடற்கரைக்கு அருகில் ஒரு பெரிய கட்டைப் பெட்டியை சூழ்ந்து கொண்டு நிற்பதைக் கண்டார்கள். உடனே அங்கு சென்று அந்தப் பெட்டியை திறந்து பார்க்க முயன்றார்கள். ஆனால் அவர்களால் அந்தப் பெட்டியை திறந்துப் பார்க்கவே முடியவில்லை. ஆகவே  அந்தப் பெட்டியை தூக்கிக் கொண்டு சென்று சற்று தூரத்தில் இருந்த ஒரு பூவரச மரத்து நிழலில் வைத்து விட்டு அங்கேயே இளைப்பாறினார்கள். சற்று தூங்கி கண் விழித்தப் பின் மீண்டும் அதை திறந்து பார்க்க முயன்றபோது அந்தப் பெட்டி முன்னை விட அதிக கனமாக இருந்ததைக் கண்டு வியந்தார்கள். என்ன ஆயிற்று  இதற்கு? சற்று நேரத்துக்கு முன்னர்தான் கொண்டு வந்தோம், அப்போது இதை தூக்க முடிந்த எம்மால் இப்போது தூக்க முடியாமல் இப்படி கனக்கிறதே!,  என எண்ணியவாறு தமது கிராமத்துக்குச் சென்று இன்னும் அதிக ஆட்களை அழைத்து வந்து அதை மிகவும் கஷ்டப்பட்டு திறந்து உள்ளார்கள்.
திறந்ததும் அவர்கள் அதிசயிக்கும் வண்ணம் அதில் ஆபரணங்களும், சிலம்பும் அணிந்த ஒரு பெண்ணின் அற்புதமான கல் சிலை இருந்ததைக் கண்டார்கள். அந்த சிலையை வெளியில் எடுத்து வைத்ததுமே அங்கு கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு சாமி ஏறியது. அவள் மூலம் அந்த சிலையில் உள்ளவள் 'தானே மதுரையை எரித்த கண்ணகி என்றும், தன்னை எடுத்து வைத்து வணங்கி பூஜித்தால் அவளை பூஜிப்பவர்களுக்கு பல ஐஸ்வர்யம் சேரும்' என்று கூறினாள். அந்த சிலையை அவள் கூறியபடியே வெளியில் வைத்து ஆலயம்  அமைத்து பூஜிக்கலானார்கள். அதுவே இன்று புங்குடுத் தீவில் கண்ணகி ஆலயமாக உள்ளது.  புங்குடுத் தீவு என்பது யாழ்ப்பான மாவட்டத்தில் தென் மேற்கு தீவில்  உள்ள ஏழு தீவுகளில் ஒன்றாகும். சுமார் இருபத்தி ஒன்று சதுர மைல் பரப்பளவில் உள்ள இந்த தீவில் முதலில் பெட்டி இருந்த இடத்தில் மகாதேவர் ஆலயமும், இரண்டாவதாக அவர்கள் பெட்டியை இறக்கி வைத்த இடத்தில் நாச்சியார் ஆலயமும் மூன்றாவதாக பெட்டியை திறந்து பார்த்த இடத்தில் கண்ணகி ஆலயமும் எழுந்துள்ளது. இந்த புங்குடுத் தீவில் இருந்தவர்கள் தென் இந்திய மக்களுடன் நெருங்கிய தொடர்ப்பில் இருந்துள்ளனர் என்பதினாலும் கண்ணகி ஆலயம் முக்கியத்துவம் பெறுகிறது. பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலத்தில் இந்த தீவும் அவர்கள் வசம் இருந்துள்ள பூமியாகும் . இந்த தீவிற்கு புங்குடு என்ற பெயர் வரக் காரணம் இங்கு புங்கை மரங்கள் மிக அதிகமாகும்.

Friday, January 11, 2013

Full moon and Dark moon
அம்மாவாசை மற்றும் பௌர்ணமி
 பிறந்த கதை 

சாந்திப்பிரியா


ஒருமுறை தக்கன் சிவபெருமானை துதித்துக் கடும் தவம் புரிந்து பல ஆற்றல்களைப் பெற்றான். பல சக்திகளைப் பெற்றுக் கொண்ட தக்கன் சற்றே இறுமாப்புக் கொண்டு அலைந்தான். அவன் மணந்து கொண்ட மனைவிகள் மூலம் பால ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றெடுத்தான். ஆனால் பரிதாபம் என்ன என்றால் அவனுடைய எந்தப் பிள்ளைகளினாலும் அவனுக்கு பெருமைக் கிடைக்கவில்லை. ஆகவே அவன் மனம் நொடிந்து போனான். மீண்டும் சிவபெருமானை துதித்தார்.  சிவபெருமானின் அருளினால் அவனுக்கு இருபத்தி ஏழு பெண்கள் பிறந்தார்கள் . அவர்கள் அனைவரையும் நன்கு பேணி வளர்த்து வந்த தக்கன் அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளையை தேடி வந்தான். அப்போது அதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த சந்திரன் தனக்கு அவர்களை மணம் செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைக்க அதை ஏற்றுக் கொண்ட தக்கனும் சந்திரனுக்கு அவர்கள் அனைவரையும் திருமணம் செய்து வைத்தார்.
முதலில் சில வருடங்கள் அனைத்து மகள்களின் வாழ்கையும் இனிமையாகவே கழிந்தன. சந்திரனும் தினமும் ஒரு மனைவி என ஒவ்வொரு பெண்ணுடனும் ஒவ்வொரு நாளைக் கழித்தாலும் அவர்களில் மூத்தவளையும், இளையவளையும் அதிகம் நேசித்து அவர்கள் இவருடனேயே அதிக நேரத்தைக் கழிக்கலானார். மற்றவர்களை ஒதுக்கி வைத்தார். அதனால் கவலைக் கொண்ட அனைத்துப் பெண்களும் தனது தந்தையிடம் சென்று அது குறித்து முறை இட்டார்கள். அவனும் சந்திரனுக்கு எத்தனையோ எடுத்துக் கூறியும் சந்திரன் தக்கனின் அறிவுரையை ஏற்க மறுத்தார். ஆகவே கோபமடைந்த தக்கனும் இனி சந்திரன் அவரிடம் இருந்த அனைத்துக் கலைகளையும் இழக்க வேண்டும் என்று சாபமிட்டார். அந்த சாபத்தின் விளைவாக சந்திரனின் கலைகள் அனு தினமும் மெல்ல மெல்ல அழியத் துவங்கின. சந்திரனின் வனப்பு அழியத் துவங்கியது. சந்திர ஒளியும் குறைவுற்றது.
அதனால் பிரபஞ்சத்தில் சந்திர ஒளி குன்றியதினால் பல பிரச்சனைகள் தோன்றலாயின. சந்திரனிடம் மொத்தம் பதினைந்து அற்புதமான சக்தி வாய்ந்த கலைகள் இருந்தன . அவற்றை ஒவ்வொன்றாக இழக்கத் துவங்கிய சந்திரனிடம் எஞ்சி இருந்தது பதினைந்தாவது கலைதான் அதையும் சந்திரன் இழந்து விட்டால் இரவில் ஒளியே இருக்காது. சந்திரனின் மகிமையும் முற்றிலும் மறைந்து விடும். அதைக் கண்டு கவலைப்பட்ட சந்திரன் தக்கனின் தந்தையான பிரும்மாவிடம் சென்று நடந்ததைக் கூறி அவரை தக்கனுடைய சாபத்தை விலக்குமாறு  கோரிக்கை விடுத்தார். ஆனால் பிரும்மனோ தன்னால் அதை செய்ய முடியாது என்றும் சிவபெருமானினால்  மட்டுமே அதை செய்ய இயலும் என்றும் கூறி விட வேறு வழி இன்றி சந்திரன் சிவபெருமானிடம் சென்று நடந்ததைக் கூறி நடந்ததைக் கூறி அழுதார். ஆனால் சிவபெருமானும் தான் வரம் கொடுத்த தக்கனும் உண்மையில் முனிவர்களுக்கு நிகராக விளங்கி வந்ததினால் அதை எளிதில் மாற்ற முடியாது என்பதினால், சந்திரனிடம் இருந்த கடைசி கலையை தான் தனது முடியில் வைத்துக் கொள்வதாகவும், அப்படி வைத்துக் கொண்டப் பின் அதை தக்கனின் சாபம் அழிக்க முடியாது என்றும், தான் சந்திரனை அந்த பதினைந்தாவது கலையுடன் சேர்த்து  தன்  முடிக்குள் வைத்துக் கொண்டாலும், சந்திரன் முன்பைப் போலவே அனைத்து கலைகளையும் மீண்டும் பெறுவார் என்றும் கூறினார். ஆனால் அதில் இருந்த ஒரு சிறிய சங்கடத்தையும் சந்திரனுக்கு விளக்கினார்.
சந்திரனை தன் தலையில் பதினைந்தாவது கலையுடன் தான் முடித்து வைத்துக் கொண்டதும், ஒவ்வொரு நாளாக சந்திரனின் ஒவ்வொரு கலையும் சந்திரனிடம் மீண்டும் சென்று அவரை சக்தி மிக்கவர் ஆக்கி பதினைந்தாம் நாள் எப்போதும் போலவே அவர் பிரகாசிப்பார் என்றும், மறு நாள் முதல் மீண்டும் ஒவ்வொரு நாளும் அவர் கலைகள் அவரை விட்டு விலகும் என்றும், மீண்டும் பதினைந்தாம் நாள் அவர் கலைகள் அனைத்தையும் இழந்து விட்டப் பின்  ஒழி இழப்பார் என்றும் கூறினார்.  ஆனால் மீண்டும்  அதற்கு அடுத்த நாள் முதல் கலைகள் மீண்டும் அவருக்கு திரும்பும் என்றும் கூறினார். இப்படியாக ஒவ்வொரு பதினைந்து நாளும் சந்திரனின் கலைகள் விலகி அவர் ஒளி இல்லாமல் இருக்க அதுவே அம்மாவாசை என்றும்,  அடுத்த பதினைந்து நாளில் மீண்டும் அவரிடம் போய் சேரும் கலைகளினால் அவர் பிரகாசிப்பதினால் அதுவே பௌர்ணமியாகவும்  ஏற்கப்பட்டது.