Tuesday, April 23, 2013

Chandi Saptha Sathi - 6

சண்டி சப்த சதி -6

சாந்திப்பிரியா சில ஸூக்தங்களுக்கு பெண்களே ரிஷிகளாக உள்ளார்கள். ரிக் வேதத்தில் இந்த மாதிரியான ஸூக்தங்கள் சில உள்ளன அவற்றில் ஒன்றே வாகாம்ருணீய ஸூக்தம். வாக் என்பவள் பிரும்ம ரிஷி என்பதாக அறியப்படுகிறது. 
வாக் என்றால் வாக் எனும் பரப்பிரும்மம் என்று பொருள் கொள்ளலாம்.  அவளே பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து அநுபூதி நிலையைப் பெற்றவள். அந்த நிலையில் அவள் ஆத்மஸ்துதி செய்து கொள்ள முடியும். ஆகவேதான் தேவி ஸூக்தத்தில்   கூறப்பட்டு உள்ள  ஆத்மஸ்துதி  என்ன என்றால் ?   
''நான் உலகிற்குக் காரணமாய் வாசு ருத்திரர்களாகவும், அதித்ய விஸ்வ தேவர்களாகவும் சஞ்சரிக்கிறேன்.
 பிரும்ம ஸ்வரூபமாய் இருந்து கொண்டு வருணன், இந்திரன், அக்னி என்ற அனைத்து தேவர்களையும் அவரவர் ஸ்தானத்தில் நிலைக்கச் செய்கிறேன்.  உலகின்  என்னுள்ளேயே அடக்கி வைத்துள்ளேன்.
த்வஷ்டா முதலிய தேவர்களை உரிய  ஸ்தானத்தில் அமர வைத்து தேவர்களுக்கு ஹவிஸ் மற்றும் சமரசத்தை தரும் என் எஜமானருக்கு நான் ஐஸ்வர்யத்தைத் தருவேன்.
பரபிரும்மத்தை அறிந்து என் உருவின் மூலம் அதை அனைவருக்கும் வெளிப்படுத்துவேன். அதனால்தான் நான் தேவர்களில் முதன்மையானவளாகக்  கருதப்படுகிறேன். அதனால்தான் பஞ்ச பூதங்களையும் என்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உள்ள என்னை பல இடங்களிலும் தேவர்கள்  ஸ்தாபனம் செய்துள்ளார்கள். 
மனிதன் உண்பதும் பார்ப்பதும், கேட்பதும், உயிர் உள்ளவர்களாக இருப்பதும் என்னால்தான். ஐம்புலன்களும் என்னால்தான் இயங்குகின்றன.  என்னை அறிந்து கொள்ளாதவனுக்கு அழிவு நிச்சயம்.
நான் விரும்பினால் எதையும் உயர்ந்த நிலையில் வைப்பேன். ஒரு மனிதனை ரிஷியாகவோ, பிரும்ம ரிஷியாகவோ, அதி மேதாவியாகவோ என்னால் ஆக்க முடியும்.
கடவுளை வெறுப்பவர்களை தண்டிக்கும் ருத்திரனுக்கு அவர் வில்லின் நாணைப் பூட்டித் தருபவளும் நானேதான்.  என் பக்தர்களின் விரோதிகளை அழிப்பவள் நான். 
பூமியிலும், இரவு பகலிலும் அந்தர்யாமியாக உள்ளேன். நானே இந்த உலகிற்குக் காரண ரீதியாக  இருந்து சிருஷ்டிக்கிறேன்.  காற்றைப் போல அனைத்து இடங்களிலும் சஞ்சரிக்கிறேன். பூமியையும் ஆகாயத்தையும் கடந்து  நிற்பவள் நான்''.
சப்த சதியில் காணப்படும்  ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு அத்தியாய தேவதை அதிபதியாக  இருக்கிறாள். அவர்கள் யார் ?
 • அத்தியாயம் -1      மகாகாளி 
 • அத்தியாயம் -2      மகா லஷ்மி 
 • அத்தியாயம் -3      சங்கரி தேவி 
 • அத்தியாயம் -4      ஜெயா துர்கா 
 • அத்தியாயம் -5      மகா சரஸ்வதி 
 • அத்தியாயம் -6      பத்மாவதி 
 • அத்தியாயம் -7      மாதாங்கி 
 • அத்தியாயம் -8      பவானி 
 • அத்தியாயம் -9      அர்த்தாம்பிகா 
 • அத்தியாயம் -10    காமேஸ்வரி 
 • அத்தியாயம் -11    புவனேஸ்வரி 
 • அத்தியாயம் -12    அக்னி துர்கா 
 • அத்தியாயம் -13     தாரிகா பரமேஸ்வரி 

பின்னுரை 

இந்த ஆறு கட்டுரைகளில் சப்த சதி என்பது என்ன, அதை பாராயணம் செய்ய வேண்டிய முறை என்ன , அதில் எத்தனை பாகங்கள் உள்ளன, தேவிகள் யார் என்பதைப் பற்றி மட்டுமே எழுதி உள்ளேன். இதை ஒரு அறிவு ஞானத்திற்காகவே எழுதினேன்.  
தேவி சப்த சதியை நல்ல குருவிடம் தீக்ஷைப் பெற்றுக் கொண்டு பாராயணம் செய்வது ஒரு வகை. அதை நல்ல ஞானம் பெற்றவர்களினால் மட்டுமே செய்ய இயலும். அனைவராலும் அதை பாராயணம் செய்ய இயலாது.  ஏன் எனில் அது மந்திர சாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்தது. முக்கியமாக சாதனாக்களை செய்பவர்கள், மாயையில் இருந்து விலகி  ஆன்மீக உச்ச நிலையை அடைய, குரு தீட்ஷைப் பெற்றுக் கொண்டு, நியமனங்களை கடுமையாக பின்பற்றிக் கொண்டு இதை சிலர் சாதனாவாக செய்வார்கள்.  அந்த காலத்தில் அத்தியாயத்தைப் படிக்கத் துவங்கியதும் நடுவில் ஏதேனும் ஒரு காரணத்தினால் அதை தொடர்ந்து படிக்க முடியாமல் போனால், அதை நடுவில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் படிக்கத் துவங்கக் கூடாது.  ஆரம்பத்தில் இருந்து மீண்டும் படிக்கத் துவங்க வேண்டும் என்பது கண்டிப்பான விதியாகும்.  நவராத்திரி போன்ற விஷேஷ விழாக் காலங்களில் வீட்டில் நடைபெறும் நவராத்திரி பூஜைகளிலும் இதை பூஜையாக செய்வார்கள். 
ஆனால் அதே சமயத்தில் பாமரனும் தேவி மகான்மியத்தைப் படித்துப் பலன் பெரும் வகையில் தேவி மகாத்மியம் பல காலமாகவே தமிழில் கூடப் பாடலாகப் பாடப்பட்டு வந்துள்ளது. அதைப் படிப்பதினால் மன நிம்மதி கிடைக்கப் பெற்று வீட்டில் அமைதி நிலவும், வீண் மன பயம் விலகும் என்பார்கள். 
முடிந்தபோது சுமார் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் பாடலாக பாடப்பட்டு வந்துள்ள தேவி  சப்த சதியை  நவராத்திரி சமயத்தில்  பாராயணம் செய்வதற்கு உதவியாக இருக்க  வெளியிடுகிறேன்.
முற்றியது  

Monday, April 22, 2013

Chandi Saptha Sathi - 5

சண்டி சப்த சதி -5

சாந்திப்பிரியா 


சண்டி சப்த சதியை படிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட சண்டி சப்த சதி மூன்று சரித்திரங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் பிரதம சரிதம், மத்தியம சரிதம் மற்றும் உத்தம சரிதம் என மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
பிரதம சரிதம் எனும் முதல் பாகத்தில் முதல் அத்தியாயத்தில் லோக மாயைப் பற்றியும் அத்கில் சிக்குண்டு தேவர்கள் முதல் மற்றவர் அனைவரும்  மாயையில் சிக்கி தவிப்பதையும் மாயையான அந்த லோக மாதாவை, அதாவது லோக மாதா எனும் மகா காளியையே  வழிபட்டு அவர்களது மாயையில் இருந்து விடுபட அவளைப் பிரார்த்திப்பதைக் கூறுகிறது. அதில் உள்ள லோக மாதாவான மாயைக்கு  விஷ்ணுவே  உட்படுகிறார். இதில் பிரும்மா லோகமாதாவை துதிக்கும் ஸ்தோத்திரமே மிக முக்கியமானது. மதுகைடப சம்ஹாரம் இதில் வருகின்றது.  
மத்யம சரிதம் எனும் இரண்டாம் பாகத்தில் உள்ள அத்தியாயம் இரண்டு முதல் நான்குவரை  மகிஷாசுரமர்தனின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் தேவர்கள் தேவியை ஸ்தோத்திரம் செய்வது மற்றும் மகிஷாசுரனின் சைனியம் மற்றும்   மகிஷாசுரனின் வதமும் விவரிக்கப்பட்டு உள்ளது.  சகல தேவர்களின் உடல்களில் இருந்தும் பல தேவிகள் வெளிப்பட்டு மகாலஷ்மி எனும்  மகிஷாசுரமர்தினியான  ஒரே அம்பிகையாகிறாள். 
உத்தம சரிதம் எனும் மூன்றாவது பாகத்தில் அத்தியாயம் ஐந்து முதல் பதிமூன்றுவரை (5-13) உள்ளது.   இதில் ஆறாம் அத்தியாயத்தில் தும்ரலோசன வதம், ஏழாவதில் சண்ட-முண்ட அசுரர் வதம், எட்டாவதில் ரக்தபீஜ வதம், ஒன்பதில் நிசும்ப வதம், போன்றவை உள்ளன.   இது அனைத்து விருப்பங்களும் நிறைவேற பிரார்த்திக்கும் வகையில் உள்ளது.
இந்த உத்தம சரிதத்தின் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் சப்த சதியினைப் பாராயணம் செய்வதினால் ஏற்படும் நன்மைகளை தேவியே கூறுவது போல அமைந்துள்ளது.
அந்த பன்னிரண்டாம் அத்தியாயத்தில் தேவி கூறுகிறாள் '' இந்த துதிகளினால் யார் என்னைப் பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுடைய கஷ்டங்களை நான் போக்குவேன். அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் நவமி போன்ற தினங்களில் இதைப் படிப்பவர்களை பாவங்கள் அண்டாது.  இந்த மகாத்மியத்தைப் படித்த மட்டிலேயே அனைத்து கஷ்டமும் விலகும். இது எங்கு படிக்கப்படுமோ அங்கு நான் நிரந்தரமாக இருப்பேன். இதை பூஜை, ஹோமங்களில் படிக்கையில் எதிரிகள் ஓடி ஒளிவார்கள் . அவர்களது குலமும்  கோத்திரமும் மேன்மையாக  விளங்கும். அவர்களின் இல்லங்களில் மங்களம்  நிலைக்கும்.  எங்கெல்லாம் பூஜைகளும், அக்னி காரியங்களும் ( ஹோமம்) நடைபெறுமோ அங்கெல்லாம்  இந்த மான்மியம் படிக்கப்பட  வேண்டும்.  வருடம் முழுவதும் செய்யப்படும் கோதானம், அன்னதானம், தூபதீபம், மற்றும் புஷ்பதானம் போன்றவற்றினால் கிடைக்கும் பலனைக் காட்டிலும்,  ஒரே ஒரு தடவை  இந்த மான்மியத்தைப் படிப்பதின் மூலம் அதே பலன் கிடைக்கும்''.
சப்த சாதியின் பூர்வாங்க பாராயணங்களுக்குப் பிறகு மூன்று சரிதங்களைப் பாராயணம் செய்தப் பின் முடிவாக சப்த சாதியின் உத்திராங்கம் எனும் பகுதியைப் படித்து முடிக்க வேண்டும். அந்த உத்திராங்கத்தில் வருவதே தேவி  ஸுக்தம் எனப்படுவது.  இதை வாக் ஆம்ருணிய ஸுக்தம்  என்றும் கூறுவார்கள். இந்த ஸுக்தத்தை  அமைத்தவர் ஒரு பெண்  ரிஷியாவார். அவர் பெயர் வாக் தேவதை.
.............தொடரும் 

Sunday, April 21, 2013

Chandi Saptha Sathi - 4

சண்டி சப்த சதி -4

சாந்திப்பிரியா

கீலகம் :
கீலகம் என்றால் கொடுத்துப் பெறுதல் என்பது பொருளாகும். எதற்காக கீலகம் என்ற பெயரில் மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டியது அவசியம் என்றால் தன்னிடம் உள்ள அனைத்தையும்  தேவியிடம் தந்து விட்டு அவளை சந்தோஷப்படுத்தி  தன்னை  பற்றற்ற நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவளும் நமக்கு தேவையானதைத் தருவாள்.  'தன்னிடம் உள்ள அனைத்தையும்  தேவியிடம் தந்து விட்டு' என்று கூறுவது செல்வத்தை  குறிக்க அல்ல. தன்னையே என்பது  முழுமையான சரணாகதி என்ற தத்துவத்தையே இங்கு குறிப்பிடுகிறது.  சப்த சதியை பாராயணம் செய்யத் துவங்கும் முன்னர் கீலகம் எனும்  மந்திரத்தை ஓதி தேவியை தியானிக்க வேண்டும். (அந்த ஸ்லோகங்களை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா).

ராத்திரி  ஸூக்தம்  
உலக இயக்கம் அனைத்தும் தற்காலிகமாக மறைந்து இருக்கும் காலமே இரவு என்பது. அதுவே ஜீவராத்திரி அல்லது ஈஸ்வர ராத்திரி எனப்படும். அதாவது உயிருள்ள ஜீவன்கள் ஓய்வெடுக்கும் காலம் அந்த நேரம். அப்போது பரம்பொருள் மட்டுமே விழித்த நிலையில் இருக்கும். ஈஸ்வர ராத்திரி எனப்படும் இது இந்த சந்தியா காலத்தில்தான் ராத்திரி ஸூக்தம்   பாராயணம் செய்யப்படுகிறது.  ராத்திரி சுக்தம் ஏன் படிக்கப்படுகிறது என்றால் இரவு என்பது அஞ்ஞானத்தைக் குறிக்கும். பகல் என்றால் ஞானத்தைக் குறிக்கும்.  ஸூக்தம்   என்றால் பிரார்த்தனை அல்லது  பாராயணம் என்று பொருள்படும். ஆகவேதான் மனதில் உள்ள அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தைத் தர வேண்டும் என்பதற்காக அது இரவு தேவதையை வேண்டிக் கொண்டு படிக்கப்படுகிறது. அதாவது 'என்னுடைய அஞ்ஞானத்தை விலக்கி ஞானத்தைக் கொடு' என்பதான தத்துவம். 
சப்த சதியை படிப்பதற்கு  முன்னால்   ராத்திரி   ஸூக்தமும் சப்த சதிக்கு பின்னால் தேவி    ஸூக்தமும் படிக்கப்பட வேண்டும் என்பது நியதி. உலகில் உள்ள ஒவ்வொரு இயக்கமும் தற்காலிகமாக ஒய்வு எடுத்தாலும் அந்த வேளையிலும் சக்தியின் இயக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆகவேதான் காலை மாலை என்ற இரண்டையும் ஆட்கொண்டு உள்ள இரண்டு  தேவதைகளை ராத்திரி தேவதை என்றும் காலை தேவதையை உஷை என்றும் அழைப்பார்கள். உஷை என்பவள் சூரியனின் மகள். இருவருமே சகோதரிகளே. (அந்த ஸ்லோகங்களை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா ).
 
நவாக்ஷாரி 
 நவா என்றால்  ஒன்பது என்று அர்த்தம். அந்த ஒன்பது அட்ஷரங்களை கொண்ட மந்திரத்தை, ஒன்பது ரூபங்களைக் காட்டும் துர்கா தேவியை துதிப்பதையே சண்டி காயத்திரி என்பார்கள். நம்முடைய மனதில் உள்ள மாயையை ஒழித்திட தினமும் இருபது முறை  சண்டி காயத்திரியை படிக்க வேண்டும் என்பார்கள். இதை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும்போதுதான் ஒருவர் பிரும்மன் என்ற நிலையை அடைவார். அங்கிருந்தே மாயையை விளக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். அந்த நிலையே ஆனந்தம் என்பது. அந்த நிலைக்கு அதிபதியானவளே ஆனந்தி எனும் தேவி. அவளே  மாயையை அழிக்கும் சாமுடா தேவி என்பவள். இந்த நவாக்ஷாரி மந்திரத்தின் தேவதைகள் யார் தெரியுமா? அவர்களே மகா காளி, மகா லஷ்மி, மற்றும் மகா சரஸ்வதியானவள். சப்த சாதியின் முக்கிய மந்திரமே  நவாக்ஷாரி மந்திரம். நவாக்ஷாரி மந்திரத்தை பாராயணம் செய்யாமல் சப்த சதியை படித்தால் அதற்க்கு பூரண பலன் கிடைக்காது. (அந்த ஸ்லோகங்களை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா ).
...............தொடரும் 

Chandi Saptha Sathi -3

சண்டி சப்த சதி -3

சாந்திப்பிரியா 

மேதஸ் ரிஷி கூறலானார் '' மன்னனே கேள் . சப்த சதியை பாராயணம் செய்ய சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும். அதை பாராயணம் செய்யும்போது உச்சஸ்தாயியில் பாராயணத்தை செய்யாமல் மிகவும் மெதுவாகவும், நமக்குள் மட்டும் கேட்கும் குரலிலும் மட்டுமே படிக்க வேண்டும். இதை பாராயணம் செய்யும் முன்னால் சில அத்தியாயங்களை முதலில் படிக்க வேண்டும். இதை பாராயணம் செய்ய நித்திய கர்மாவை முடித்துக் கொண்டு  பரிசுத்தமான இடத்தில் அமர்ந்து கொண்டு  ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு அதன் பின்னரே கீழ் கூறி  உள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் பாராயணதைக் கைக்கொள்ள  வேண்டும். 
ஆனால் அதே நேரத்தில் தேவி மகாத்மியத்தை பாராயணம் என்று  செய்யாமல் நேரடியாகப் படிப்பதும் வாழ்க்கைக்கு தேவையான பலவிதமான நல்ல பலனையே தரும் என்றாலும், ஒருவனுக்கு உலகத்தில் இருந்து - அதாவது மாயையில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் நல்ல குருவிடம் தீட்ஷை பெற்றுக் கொண்டு முறைப்படி அதை மந்திர பாராயணம் செய்ய வேண்டும்.  ஸ்லோகங்கள் இல்லாமல்  நேரடியாகப் படிக்கும்  தேவி மஹாத்மியத்தின் கதை மந்திர பாவங்களைக் கொண்டது அல்ல.
சிதம்பர ரஹஸ்யத்தில் பரமேசுவரர் பார்வதிக்குக் கூறினார் ? 'தேவியே! ஸப்த சதீயின் மகிமையைக் கூறுகிறேன், கேள். அதைப் படிப்பவர் ஏழ்மையினின்று விடுபடுவர், மாயையில் இருந்து விடுதலை ஆவார்கள். சின்மயமான திரிபுரா என்பவள் மூன்று வடிவைக்  கொண்டவள். அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டுப் பரதேவதை காளி உருவைக் கொண்டாள். அவளே காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும் ஸரஸ்வதியாகவும்  தோன்றினாள்'. 
அப்படி அவர் கூறியதைக் கேட்ட பரமேஸ்வரி அழகாக சிரித்தாள். அதைக் கண்ட சிவபெருமான் துணுக்குற்று அவளிடம் கேட்டார் ' பத்தினியே, நீ ஏன் நான் கூறியதைக் கேட்டு சிரித்தாய்?' 
பரமேஸ்வரி கூறினாள் 'நாதா அவை அனைத்துமே என்னுள்  இருந்து உருவானவைகள்தானே!  அப்படி இருக்கும்போது நானே எடுத்த அவதாரத்தை எனக்கே ஒரு புதிர் போலக் கூறியதினால் அதைக் கேட்டு சிரித்தேன் ' என்றாள். அதைக் கேட்ட பரமேஸ்வரரும் தன்னை மறந்து அவளுடன் சேர்ந்து சிரித்தார். அவர்கள் சிரித்த சிரிப்பினால் உலகமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அவர்கள் ஆனந்தமயமாக சிரித்த அந்த ஷணத்திலே உலகில் வேறெங்குமே துன்பம் இல்லை. அந்தக் கோலம் ஏற்பட்டதின் காரணம் சப்த சதி எனும் பெயரினால் விளைந்தவை அல்லவா?  ஆகவேதான் கூறுகிறேன் மன்னா, நீயும் தேவியான அந்த பரமேஸ்வரியைச் சரணடைவாய். அவளை ஆராதித்தால் அவள் இகலோக இன்பங்களையும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பாள்''.
இப்படியாகக் கூறியவர் சப்த சதியை பாராயணம் செய்ய தேவையான  நியமங்களைக் கூறலானார்.

கவசம்
ஒரு போர் வீரன் கவசத்தை அணிந்து கொண்டு போருக்குப் போவது போன்ற மந்திரம் இது. பத்து திக்குக்களின் சக்திகள், சப்த மாத்ருகைகள் (பெண்) , பல இடங்களிலும் பல கோலத்துடன் காட்சி தரும் சக்திகள் என அனைவரையும் அழைத்து வணங்கி, நம் ( பாராயணம் செய்பவரின்) உடலின் புற மற்றும் அக உறுப்புக்கள், சுவாசிக்கும் பிராண்ணன், மனைவி, உடன் பிறந்த மக்கள், புத்திர புத்திரிகள், செல்வம் என அனைத்தையும் காக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு பிரார்த்திக்கப்படுகிறது. ஆகவே சப்த சதியை பாராயணம் செய்யும் முன் மற்ற இடைஞ்சல்களில் இருந்து நம்மைக் காத்தருள ஓத வேண்டிய மந்திரத்தையே கவச மந்திரம்'' என்று கூறியவர் கவச மந்திரத்தையும் அவர்களுக்குக் போதித்தார். (கவச மந்திரம் சுமார் 101 வரிகளானது என்பதினால் அதை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா ).

அர்க்கலம்
மேதஸ் ரிஷி அடுத்து பாராயணம் செய்ய வேண்டிய அர்க்கலம் என்பதைப் பற்றிக் கூறினார். ''அர்க்கலம் என்பது எந்த ஒரு காரியத்தையும் வெற்றியுடன் செய்யும்போது ஏற்படக் கூடிய இடையூறுகளை அகற்றுவதற்காக செய்ய வேண்டிய பிரார்த்தனை ஸ்லோகம். அதனால்தான்  சப்த சாதியைப் பாராயணம் செய்யும்போது ஏற்படும் இடையூறுகளை தடுக்க இந்த தோத்திரத்தை படிக்காமல் தேவி மகாத்மியத்தைப் படித்தால் பூரண பலன் கிடைக்காது. இதைப் படிப்பதினால் சிறந்த பல பலன்கள் கிட்டும்'' என்பதாகக் கூறிய பின்னர் அந்த சுலோகங்களையும் கூறினார். (அந்த ஸ்லோகங்களை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா ).
...........தொடரும்

Saturday, April 20, 2013

Chandi Saptha Sathi -2

சண்டி சப்த சதி -2

சாந்திப்பிரியா சண்டி சப்த சதிக்கு துர்கா சப்த சதி என்று பொருள். துர்கா என்றால் அணுகுவதற்கு அறியவள் என்பதும் ஒரு பொருள் ஆகும். துர்கா என்றால் துர்கதி அடையாமல் நம்மை காப்பாற்றுபவள் என்றும் அர்த்தம். தேவி சூக்தத்தில் அம்பிகை கூறுகிறாள் ''எவன் என்னை தியானிப்பானோ, எவன் என்னிடம் சரண் அடைகிறானோ அவனை நான் ரிஷியாகவும், பெரும் மேதையாகவும் ஆக்கிடுவேன்''
அதனால்தான் கூறுவார்கள் இந்த உலகம் என்ற மாயையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். அன்னை கூறுவாள் '' இந்த உலகில் நான் ஒருவளே இருக்கிறேன். என்னைத் தவிர என்னைப் போன்ற இரண்டாமவர் கிடையாது. அனைத்தையுமே படைத்தவள் நான். ஒன்றாகி இருந்த பிரும்மமான  நான் இரண்டாகி என்னைப் பெருக்கிக் கொண்டேன் என்பதின் காரணம் உங்களைக் காக்கவே''.
ஆக்குவதும், காப்பதும் மற்றும் அழிப்பதும் தன் முக்குணத்திலான சத்வ, ரஜஸ், தமஸ் என்றவற்றால் நடத்தி வைக்கும் மகா சக்தி அவள். மகா காளி, மகா லஷ்மி மற்றும் மகா சரஸ்வதி  என மூன்று ரூபங்களை மும்மூர்த்திகளைப் போல  எடுத்து உலகைக் காத்தவள் அவளே நம்மையும் இந்த உலகின் மாயையில் இருந்து விடுதலைப் பெற உதவ வேண்டும். அக்ஞானத்திற்கு  ஆதாரமாக மாயையை ஒழித்து  ஞானத்தை தர வந்தவளின் மகிமையை எடுத்துரைக்க எழுதப்பட்டதே சண்டி சப்த சதி எனும் நூல். தமது பரப்பிரும்ம  ரூபத்தை அம்பிகை எப்படி வெளிப்படுத்தி போதிக்கிறாள் என்பதைக் கூறுவதே  தேவி மகாத்மியம் என்ற இந்த  மகாத்மியம். 
சண்டி சப்த சதியில் வரும் ஒரு கதையில் சுரதன் என்ற அரசன் மற்றும் சமாதி எனும் வைசியன் என்ற இருவரும் தமது இல்லங்களில் இருந்து விரட்டப்பட்டவர்கள். வனத்திலே சந்தித்த அவர்கள் சுமேதஸ் என்ற மஹரிஷியிடம் தமது மனக் குறைகளைக் கூறி அழுதபோது அவர் அவர்களுக்கு அறிவுரை செய்தார்.
அரசன் கேட்டான்  ' மகா முனிவரே, நான் செய்யாத தர்மம் இல்லை. செய்யாத நற்காரியங்கள் இல்லை. என்னை சுற்றி இருந்தவர்கள் என்னை விரட்டி விட்டு வேதனைப் படுத்தினார்கள். இதற்கு என்னக் காரணம் ?'' என்று கேட்டபோது அந்த ரிஷியானவர் அவனிடம் கூறினார்:
'' மன்னா, நீ நல்லவை பலவற்றையும் செய்தாய். ஆனால் நீ செய்த பெரும் குற்றம் உன்னை வளர்த்தவர்களை, உனக்கு உதவி செய்து உன்னை முன்னேற்றம் அடைய வைத்தவர்களை, உன்னை சேர்ந்தவர்களை ஒரு கட்டத்தில்  உதாசீனப்படுத்தினாய். அவர்களது மனதை நோக வைத்தாய். மனதிலே தூய்மையானவன் செய்யும் காரியம் அல்ல அவை. தேவியை ஆராதிப்பவனின் மனது தூய்மையுடன் இருந்தால்தான் அவன் நல்ல பலனைப் பெற இயலும்.
நீ நல்லவனாக இருந்தபோது தேவியை ஆராதித்ததினால் உனக்கு அருள் கிடைத்தது. அப்படி கிடைத்த அருளினால் நீயும் அரசனானாய். ஆனால் அகங்காரத்தினால் ஒரு கட்டத்திலே அந்த தேவியே  உன்னிடமே சரண் அடைந்து விட்டவளைப் போல  ஒரு பிரமையை உலகிற்கு  காட்ட நினைத்தாய். மற்றவர்களைத் தூற்றிக் கொண்டே உன்னை  நல்லவனாக, வல்லவனாக, தேவிக்கு பிரியமனானவனாக காட்டிக் கொள்ள நினைத்து அதை அனைவருக்கும் கூறத் துவங்கினாய்.  அந்த தேவி உனக்கு மட்டுமே விசேஷமான அருள் புரிந்தது போலக் காட்டிக் கொண்டாயே, அதுவே நீ செய்த அற்பத்தனம்.  நீ யார், என்ன நிலையில்  இருந்தாய் என்பதை எண்ணிப் பார்க்காமல் திடீர் எனக் கிடைத்த ஆடம்பர வாழ்வில்  மதி இழந்து  அகங்காரம் கொண்டு, உண்மைகளை மறைத்து பொய்யை பரப்பிய அந்த ஈனச் செயல்களை கண்டு உன் சுக துக்கங்களில் பங்கு கொண்டு உன் வாழ்க்கையில் நீ முன்னேற உதவியவர்கள், உன்னுடன் தோளோடு தோளாக நின்றவர்கள்  மனம் வெதும்பினார்கள். அவர்களது வெந்த மனம் உன் வாழ்கையை வேக வைத்து விட்டது. முன் ஜென்மத்தின் உன் பெற்றோர்கள் செய்த புண்ணியத்தினால் உனக்கு இந்த ஜென்மத்தில் உனக்கு கடவுள் கொடுத்த அருளை தவறாகப் புரிந்து கொண்டு உனக்கு மட்டுமே அந்தக் கடவுள்  மிகப் பெரிய அளவில் அருள் புரிந்துள்ளதாக கருதிய மூடனே நீ  என்பதினால் நீயும் ராஜ்யத்தை இழந்தாய். இங்கு வந்து  நாதியற்று நிற்கிறாய்.  மன நிம்மதியே இன்றி இருக்கிறதாய். இதில் இருந்து நீ செய்த அற்பத்தனம் உனக்கு விளங்கவில்லையா? உண்மையிலேயே நீ அந்த தேவி உன்னிடம்  ஆத்மார்த்தமான அன்பு கொண்டு இருந்தால் உன் மன நிம்மதிக்காவது அருள் புரிந்து இருக்க மாட்டாளா?  இது உனக்கு ஆரம்பம்தான். ஆகவே இன்னமும் பழிவாங்குதல் என்ற உன் ஈனத்தனமான  எண்ணங்களை விட்டு  ஒழிக்காமல்  அதே எண்ணத்துடன் நீ இருந்தால்  இன்னமும் அவதிப்படுவாய் . இதற்குக் காரணம் நீயேதான்.
அன்னையின் தத்துவம் என்ன தெரியுமா? ' முழு மனதுடன் அவளை மட்டுமே துதி. ஆனால் அதை செய்யும்போது  அதை நல்ல மனதுடன் செய். அவளை  மட்டுமே முழுமையாக  நம்பு.  ஆனால் உன்னிடம் அன்பு செலுத்தியவர்களை, உனக்கு நல்லது செய்தவர்களை  பழித்துக் கொண்டே அவளை மட்டுமே துதித்தால் அதை அவள் உன்னிடம் மட்டுமே கருணைக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு மாயை தோற்றத்தை நீ உணரலாம். அது உன் அறியாமை. ஆனால் களங்கமுள்ள மனதுடன் செய்யப்படும்  துதியை அவள்  ஏற்பதில்லை. தேவியை எதற்கு துதிக்கிறாய்? மற்றவர்களை தூஷித்துக் கொண்டே இருக்கவா? ஒருவனுக்கு  தேவை இந்த உலகின்  மாயையில் இருந்து விடுபட வேண்டும்.
ஆனால்  அந்த மாயையிலேயே உழன்று கொண்டு,  நல்லவன் போல காட்டும் பிரமையை ஏற்படுத்திக் கொண்டு அவளிடம் சென்று பிரார்த்தித்தால் அவள் உனக்கு அருள் புரிவாளா என்ன?  அவளிடம் சரண் அடைய வேண்டும் என்றால் முதலில் உன் மனதை தூய்மையாக வைத்துக் கொண்டு அவளை துதிப்பாய். அப்போதுதான்  அதை அவள்  ஏற்று உனக்கு மாயையில் இருந்து விடுதலை தருவாள் '.
இதையெல்லாம் மனதில் கொண்டு தூய மனதுடன் நவராத்திரியில் சப்த சதியை  நீ  துதித்தால் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவாய்''. அதைக் கேட்ட மன்னன் தான் செய்த தவறுகளை எண்ணிப் பார்த்தான். தான் செய்துள்ள தவறுகளே தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்பதை உணர்ந்தான்.  இனியாவது திருந்தி வாழலாம்  என எண்ணியவன்  சப்த சதியை ஜெபிக்கும் முறையைக் கேட்க அவரும் அதை  கூறலானார்.
............தொடரும் 

Friday, April 19, 2013

Chandi Saptha Sathi - 1

சண்டி சப்த சதி -1

சாந்திப்பிரியா 

சண்டி சப்தசதி என்பது என்ன? தேவி உபாசனைகளைக் குறிக்கும் தேவி மகாத்மியம் எனும் மந்திர நூலாகும். 400- 500 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு உள்ள இந்த மகாத்மியம் மார்கண்டேய முனிவரால் இயற்றப்பட்டது. பதிமூன்று அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டு உள்ள இந்த பாராயண நூலில் உள்ள 700 ஸ்லோகங்களில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும் சக்தி மிக்கது. மந்திர சக்தி வாய்ந்தது. சப்த சதி என்பதற்கு எழுநூறு என்ற அர்த்தம் உண்டு. சப்தசதி என்பது ஏழு சதி எனும் தேவதைகளையும் குறிக்கும். இதை முறைப்படி துதித்து ஸ்தோத்திரம் செய்தால் வேண்டியப் பலனை அடையலாம் என்ற நம்பிக்கை உண்டு.
இந்த ஸப்த சதியை முறைப்படி படித்து பாராயணம் செய்தால் படிப்பவர்களுக்கு ஏழ்மையில் இருந்து விடுதலை கிடைக்கும், பகைவர்களை வெல்லும் திறமை உண்டாகும். மனதில் தம்மையே அறியாமல் ஏற்படும் பீதி மற்றும் அச்சம் விலகும்.
தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டு ஒன்பது நாட்கள் ஊசி மீது தவத்தில் இருந்த பராசத்தியானவள்  தானே மஹிஷாசுரமர்தினியாகவும் அடுத்த மூன்று நாட்கள் மகாலஷ்மியாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் இருந்து தவம் புரிந்து அசுரர்களைக் கொன்று அழித்தாள்.
தேவி உபாசனைக்கு உரிய அனைத்து நூல்களிலும் சிறந்ததே தேவி சப்த சதி என்பதாகும். பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் பிரதம சரிதம், மத்தியம சரிதம் மற்றும் உத்தம சரிதம் என மூன்று பாகங்களாக உள்ளது.
முதல் பாகத்தில் முதல் அத்தியாயம் (1) மட்டுமே உள்ளது. அது பிரும்மாவினால் படைக்கப்பட்ட இரண்டு அசுரர்களான மதுகைடபர் வதத்துடன் முடிவடைகின்றது.
அடுத்த பாகத்தில் அத்தியாயம் இரண்டு முதல் நான்குவரை (2-4) உள்ளது. இதில் மகிஷாசுரமர்தனின் வதம் உள்ளது.
மூன்றாவது பாகத்தில் அத்தியாயம் ஐந்து முதல் பதிமூன்றுவரை (5-13) உள்ளது.  இது அனைத்து விருப்பங்களும் நிறைவேற பிரார்த்திக்கும் வகையில் உள்ளது.
இந்த பாராயணத்தில் உள்ள மூன்று வடிவு கொண்ட பராசக்தியின் உருவை சின்மயம் என்று சொல்லுவதுண்டு. திரிபுரா என்ற பெயரிலும் அவளை அழைப்பார்கள்.
இந்த சரிதத்தை பாராயணம் செய்வதின் மூலம் மூன்று வேதங்களான ரிக், யஜுர் மற்றும் சாம வேதத்தை பாராயணம் செய்தப் பலனைத் தரும் என்பது மட்டும் அல்ல  அக்னி, வாயு மற்றும் சந்திரன் என்ற மூன்று தத்துவங்களையும் குறிப்பதாகும்.
சப்த சதி என்பது ஏழு சதி எனும் தேவதைகளையும் குறிக்கும் என்பதாக நம்பப்படும்.  அந்த ஏழு தேவிகள் யார் என்பதை விவரமாக தெரிவிக்கவில்லை. அது குறித்து இரண்டு அபிப்பிராய பேதங்கள் உள்ளன. ஒரு சாரர் அந்த ஏழு சதிகள் நந்தா, சாகாம்பரி, பீமா, ரத்த தந்திகா, துர்கா, பிராம்மரி மற்றும் சதாக்ஷி என்று நம்பினாலும் அந்த சதிகள் பிராம்மி, வராஹி, வைஷ்ணவி, சாமுண்டா, மகேஸ்வரி, கௌமாரி மற்றும் இந்திராணி என்பவர்களே என்பதை விவரம் அறிந்தவர்களும் பெரும் பண்டிதர்களும் கூறுகிறார்கள். அதுவே சரியானதாகவும் இருக்கலாம்.
தேவி சப்த சதி என்பது ஏதோ செளந்தர்யலஹரி போன்றது அல்ல. இதனை பாராயணம் செய்யத் துவங்கும் முன் அதை நல்ல குருவிடம் இருந்தே முறைப்படி தீக்ஷை எடுத்துக் கொண்டு துவங்க வேண்டும்.
.........தொடரும் 

Sunday, April 14, 2013

Village Deities- 24

 கிராம தேவதைகள் - 24
 

சுந்தரபாண்டியம் ஆலயத்தில் உள்ள சிலை 

சுந்தரபாண்டியம் 
வைகுண்டமூர்த்தி 

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

மதுரையில்  இருந்து  ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் மதுரையில் இருந்து பதினைந்து கிலோ தொலைவில் உள்ளதே சுந்தரபாண்டியம் எனும் கிராமம். அந்த இடத்தை மூன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாரவர்ம பாண்டியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஒரு முறை அந்த ஊரின் அருகில் இருந்த காட்டின் வழியே ஒரு வயதான தம்பதியினர் நடந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்களது எதிரில் திடீரென ஒரு எரும்புப் புற்று தோன்றியது மட்டும் அல்லாமல் அது வளரவும் துவங்கியது. ஆகவே ஆவலினால் அதற்குள் என்ன உள்ளது என்பதைப் பார்க்க அந்த வயதானவர் தனது வாளை புற்றில் நுழைத்துப் பார்க்க அது ஒரு கல்லில் மோதி அதில் இருந்து ரத்தம் வந்ததாம். ஆகவே ஊருக்குள் சென்று கிராமத்தினரை அழைத்து வந்து அந்த புற்றை விலக்கி விட்டுப் பார்த்தபோது அங்கு வைகுண்ட மூர்த்தி அவர் மனைவிகளுடன் சிலையாக இருந்தார். அதை வெளியில் எடுத்தப்  பின் அது குறித்து  மன்னனிடம் கூற அவரும் அங்கு வந்து அதைப் பார்த்துவிட்டு  அங்கு ஆலயம் எழுப்பினார் . அதன் பின் அதன் அருகில் இருந்த மலையில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியால் அந்த மலை மீது இருந்த பெரிய கருப்பச்சாமி ஆலயத்தில் இருந்த பெரிய கருப்பச்சாமியின் சிலை அடியோடு வெளி வந்து அந்த ஆலயத்தின் முன்  விழுந்தது. ஆகவே வைகுண்ட சாமியின் அனுமதியோடு அவருக்கும் அங்கு ஒரு ஆலயம் அமைத்தனர். அது முதல் பெரிய கருபச்சாமி வைகுண்ட சாமிக்கு உதவி வருகிறார். மணப்பாறை கிராமத்தில் மாமுண்டிக் கறுப்பர் என்பவருக்கும் ஆலயம் இருந்தது. அவர் சுந்தரபாண்டியத்துக்கு அடிக்கடி வருவது வழக்கம். ஆகவே அவரையும்  பெரிய கருப்பச்சாமி மூலம் வைகுண்டர் அங்கு வந்து தங்குமாறு அழைத்தார். அங்கு வர சம்மதித்த மாமுண்டி கருப்பரோ  தான் வரத் தயாராக உள்ளதாகவும், ஆனால் பெரிய கருபச்சாமி தனது உத்தரவையும் மதிக்க வேண்டும் என்று கூற அதற்கு ஒப்புக் கொண்டவுடன் அவரும் அங்கு வந்தார்.
அந்த காலத்தில் ஒரு சமயம் மந்திரக் கலை தெரிந்து இருந்த பக்கத்து நட்டு கேரளத்து அரசன் தனது சக்தியினால் சுந்தரபாண்டியத்தில் மழை பெய்யாமல் மழையை கட்டி வைத்து விட்டான். ஆகவே மாமுண்டி கருப்பு கேரளாவுக்குச் சென்று சொல்ல முடியாத வயிற்று உபாதையை மன்னனின் மனைவிக்குத் தர மன்னன் தனது மனைவியின் உபாதையைத் தீர்க்க மாமுண்டிக் கருப்பின் உதவியை நாடினார். அவரோ மன்னன் மந்திரத்தினால் கட்டி வைத்து இருந்த மழையையும் நீரையும் அவிழ்த்து விட்டால் தான் அதை தீர்ப்பதாகக் கூற மன்னனும் அதை செய்ய சுந்தரபாண்டியத்தில் பெரும் மழை பெய்து நாடு செழிப்படைந்தது.
இன்னொரு முறை அந்த ஆலயத்தின் வழியே சென்ற ஆங்கிலேயன் அந்த ஆலயத்தை அவமதிக்க பெரிய கருப்பச்சாமி அவன் குதிரையை ஆகாயத்தில் தூக்கி அடித்தார். அந்த ஆங்கிலேயன் ஆலயத்தின் சக்தியை அறிந்து கொண்டு தன் குதிரையை அந்த ஆலயத்துக்கே தந்து விட்டுச் சென்றான். அதை குறிக்கும்  வகையில்   ஆலயத்தில் பதினைந்து அடி உயர குதிரையின் சிலை காணப்படுகிறது.
அந்த ஆலயத்தில் அவர்களைத் தவிர பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், லாட சன்யாசி, ஏழு கன்னிகைகள், பூ மாலை ராஜா, மாடத்தி, மாடசாமி, இருளப்பசாமி , வீரபத்ரன், மீனாக்ஷி, உத்திரகாளி, பத்ரகாளி மற்றும் மாரியம்மன் போன்றோரின் சிலைகளும் உள்ளன. அவர்களைத் தவிர அந்த ஆலயத்தைக் கண்டு பிடித்த வயதான தம்பதியினர்களுடைய சிலையும் உள்ளது.
ஆலயத்தின் வெளியில் உள்ள வேப்ப மரத்தடியில் சுந்தர  மகாலிங்கம் உள்ளது. ராக்சி அம்மனையும் பேச்சியம்மனையும் குழந்தை வரம் கேட்டு வணங்குகிறார்கள். வைகுண்ட மூர்த்தியை பேய் பிசாசு தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்க வணங்குகிறார்கள். பெரிய கருப்பணச்சாமிக்கு ஆடு வெட்டப்பட்டு அதன் ரத்தம் ஒரு பாத்திரத்தில் பிடிக்கப்படுகின்றது. அதனுடன் அரிசியை கலந்து அவருக்கு படைக்கின்றார்கள். அதன் பிறகு சாமியாடிகள் அதை எடுத்து அருகில் உள்ள புளியமரத்தின் மீது உள்ளதாக கருதப்படும் பேய் பிசாசுகளுக்கு என தூக்கி எறிவார்கள். அப்படி போடப்படும் அரிசி உருண்டைகள் பூமியில் திரும்ப விழுவது இல்லையாம். தமிழ் புது வருடப் பிறப்பன்று விழா நடைபெறும்.

-----------------------------
பின் குறிப்பு :
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிராம ஆலயமான சுந்தரபாண்டியத்தில் பெரியகோயில் என்றழைக்கப்படும் வைகுண்ட மூர்த்தி ஆலயத்தில் - ஒரே ஆலயத்தில் -  தர்மசாஸ்தாவாகவும் (ஐயப்பனாகவும்), அய்யனாராகவும் இருவேறு உருவங்களில் எழுந்தருளி அப்பகுதி மக்களை காத்து வருகிறார்.  இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ள குதிரை பீடத்தில்  வைகுண்டமூர்த்தி அமர்ந்து கொண்டு ஐயப்பன் உருவில்   பரிவேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது. வைகுண்டவாசியான வைகுண்டமூர்த்தியினர்  பூலோக உயிர்களை காப்பதற்காக பூலோகத்தில் வந்து  நிலை கொண்டுள்ளார் என்பது நம்பிக்கை.
மதுரையில் இருந்து சுந்தரபாண்டியத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன  -  சாந்திப்பிரியா 

Saturday, April 13, 2013

Village Deities - 23

 கிராம தேவதைகள் - 23

படம் : http://www.pbase.com/neuenhofer/image/122496671
 தமிழ்நாட்டில் சேலத்தில் ஒரு கிராமத்தில் காணப்படும் 
அங்காள பரமேஸ்வரியின் சிலை 

[இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம
தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப்
பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் 

என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய 
புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  
அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ]

ஏனாடி செங்கோட்டை 
அங்காள பரமேஸ்வரி

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானா மதுரையில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது ஏனாடி செங்கோட்டை என்ற கிராமம். இங்குள்ள ஆலயத்தில் அங்காள பரமேஸ்வரி தன்னுடன் 21 துணை தேவதைகளையும் 64 பிற கடவுட்களையும் வைத்துக்கொண்டு வீற்று உள்ளாள். ஒரு காலத்தில் வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணத்தை மேற்கொண்ட வேடன் ஒருவன் தன்னுடன் தான் வணங்கிய அங்காள பரமேஸ்வரியின் சிலையையும் கொண்டு வந்து இருந்தான். ஒரு நாள் அவன் ஏனாடி சின்னக்கோட்டை கிராமத்தை அடைந்தபோது அங்கு இருந்த ஒரு மரத்தின் அடியில் அதை வைத்து விட்டு பூ பழங்கள் போட்டு அதை பூஜித்தான். அங்காள பரமேஸ்வரிக்கு அந்த இடம் பிடித்துப் போய் விட்டதினால் தான் அங்கேயே இருக்க விரும்புவதாகவும் , அவனை மேற்கொண்டு அவனது யாத்திரையை தொடருமாறும் கூறினாள் . ஆகவே அவளை அங்கேயே விட்டு சென்று விட்டவன் பின்னர் திரும்பி வரவேயில்லை. காலப் போக்கில் அந்த சிலையை மண் மூடியது. எவரும் அதை கவனிக்கவில்லை. அந்த ஊரின் அருகில் இருந்த மரவாநேன்தல் என்ற ஊரை சேர்ந்த யாதவ பால்காரப் பெண்மணி ஒருவள் தினமும் அந்த வழியாக செல்வதுண்டு. ஒரு நாள் அவள் அந்த வழியே சென்றபோது தடுக்கி விழுந்து அத்தனை பாலும் அந்த சிலை மூடி இருந்த மண் மீது மீது கொட்டி விட்டது. அது தினமும் தொடர்ந்து அதே இடத்தில் நடந்தது. அந்த நேரத்தில் தன்னுடைய ஊமை பெண்ணை அழைத்துக் கொண்டு ஒரு பிராமணன் ராமேஸ்வரம் சென்று கொண்டு இருந்தார். அவரும் அந்த வழியாகவே சென்றார். அவருக்கு கிளம்புன் முன் ஒரு அற்புதம் நிகழ உள்ளது என ஆரூடம் கூறப்பட்டு இருந்தது. அவர் தனது ஊமை மகளுடன் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தபோது மீண்டும் அந்த யாதவப் பெண்மணி பால் பாத்திரத்துடன் அதே இடத்தில் விழுந்தாள். ஊமை பெண் அதைப் பார்த்துவிட்டு ' பால் குடத்துடன் அவள் விழுந்து விட்டாள்' எனக் கத்தினாள். ஆகவே ஊமையை பேச வைத்த அந்த இடத்துக்கு எதோ மகிமை உள்ளது என அவர் கிராமத்திடம் கூற அவர்களும் அங்கு வந்து அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அங்காள பரமேஸ்வரியின் சிலை கிடைக்க அதை ஒரு வன்னி மரத்தடியில் அவர் பிரதிஷ்டை செய்தார். அப்போது ராமநாதபுரத்து மன்னனான சேதுபதியின் மனைவிக்கு தீராத வயிற்று வலி இருந்தது. பிராமணன் அவரிடம் சென்று அங்கு ஆலயம் அமைக்க உதவி கேட்டபோது அவர் தன் மனைவியின் நோயை குணப்படுத்தினால் அதை செய்வதாக வாக்கு தந்தார். அவர் மனைவி குணம் அடைந்தாள். ஆனால் மன்னன் தந்து இருந்த வாக்குறுதியை மறந்து விட்டார். பின்னர் ஒரு நாள் குதிரை மீதேறி அந்த இடம் வழியே செல்கையில் குதிரை தடுக்கி விழுந்து காயம் அடைந்தது. அங்காள பரமேஸ்வரி ஆலயத்து காவலாயை உதவி கேட்க அவனும், அந்த இடத்தில் இருந்த மண்ணை வீபுதி போல குதிரையின் நெற்றியில் தடவ அது உடனடியாக எழுந்து நின்றது. அப்போதுதான் மன்னனுக்கு தான் அங்கு ஆலயம் அமைப்பதாக கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வர உடனடியாக அங்கு ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்தார். அவளுக்கு உதவியாக இருக்க பாதாள ராக்கு, முத்து ராகாச்சி, முத்து இருளாயி, சந்தனக் கருப்பு, போன்ற இருபத்தி ஒரு துணை கடவுளுக்கும் அறுபத்தி ஒரு படை வீரர்களுக்கும் சிலைகள் வைத்தான். மூன்று கருவறைகள்- அங்காள பரமேஸ்வரி, சந்தனக் கருப்பு மற்றும் இருளாயி போன்றவர்களுக்கு ஏற்பட்டன. அங்காள பரமேஸ்வரி சுத்த சைவம். ஆகவே அவளைத் தவிர்த்து மற்ற தேவதைகளுக்கு மட்டுமே பலிகள் தரப்படுகின்றன.
வருடாந்திர விழா சிவராத்திரிக்கு இரண்டு நாட்கள் முன்னால் துவங்கி எட்டு நாட்கள் நடைபெறும். சிவராத்திரி அன்று அங்காள பரமேஸ்வரி பரி வேட்டை என்ற பெயரில் தான் முன்னர் புதைந்து இடம்வரை ஊர்வலமாக சென்றப் பின் அங்கிருந்து திரும்பி வருவாள். அன்றைய தினம் அவளுக்கு ஒன்பது விதமான தானியங்களை காணிக்கையாகத் தருவார்கள்.
மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அங்காள பரமேஸ்வரியின் துணை தேவதையான பத்திர காளிக்கு கர்பிணி ஆடு ஒன்றை பலியாகத் தருகிறார்கள்.
அங்காள பரமேஸ்வரிக்கு நிறைய பக்தர்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உண்டு. ஒரு முறை வைகை நதி நீர் கரை புரண்டு ஓடி அந்த ஆலயத்துக்குள்ளும் தண்ணீர் வந்துவிட்டது. ஆகவே அவளுடைய பக்தர்கள் மஞ்சள் கயிற்றை மஞ்சளுடன் சேர்த்துக் கட்டி அவள் கழுத்தில் போட்டு வைத்தப் பின் அதை ஒரு பானையில் வைத்து நதியில் போட வெள்ள நீர் உள்ளே புகவில்லையாம். வெள்ளமும் வடிந்ததாம்.

Village Deities - 22

 கிராம தேவதைகள் - 22
மாடப்புரம் பத்ரகாளி  ஆலயத்தில் 
காணப்படும்  சிலையின் இரு தோற்றம் 

மாடப்புரம் 
பத்திரக்காளி  

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தின் அருகில் உள்ளதே மாடப்புரம் என்கின்ற கிராமம். ஒரு முறை உலகில் பிரளயம் தோன்றியது. அனைத்தும் முழுகி விட மதுரை மீனாக்ஷி தன்னுடைய கணவரான சிவபெருமானிடம் மதுரையின் எல்லை எது என்பதை காட்டுமாறு கேட்டுக் கொண்டாள். ஆகவே அவர் தன்னை ஒரு மிகப் பெரிய பாம்பாக்கிக் கொண்டு அந்த நீரை அப்படியே வளைத்துப் பிடிக்க அவருடைய நாக்கு வாலை தொட்ட இடமே மாடப்புரம் என்பதை புரிந்து கொண்டாள். ஒரு முறை அவளும் சிவனாரும் வேட்டையாடச் சென்றனர். மதுரை மீனாக்ஷி களைத்து விட்டாள். ஆகவே சிவனார் அவளை அங்கேயே (மாடப்புரத்தில்) தங்குமாறு கூறி விட்டு துணைக்கு ஐயனாரையும் நிற்க வைத்து வைத்து விட்டுச் சென்றார். ஐயனார் அவளுக்கு துணையாக அங்கு உள்ளார். எவர் ஒருவர் வைகை நதியில் நீராடுகிறார்களோ அவர்களுக்கு கங்கையில் குளித்த புண்ணியத்தை விட அதிக புண்ணியம் கிடைக்கும் என சிவனார் கூறினார். அது முதல் மதுரை மீனாக்ஷி அங்கு பத்ரகாளியாக உள்ளாள். பார்வதிக்கு காவலாக நின்று இருந்ததினால் அங்குள்ள ஐயனாரை அடைக்கலம் ஐயனார் என அழைகின்றார்கள். அந்த ஆலயத்தில் மூல பூஜை பத்ரகாளிக்கே நடைபெறுகின்றது. அவள் சிலை சுமார் பதிமூன்று அடி உயரம் உள்ளது. அவளுடைய இரு பக்கத்திலும் இரண்டு பூத கணங்கள் உள்ளன. ஒரு பக்தர் தான் என்றும் அவளுடன் இருக்க விரும்பியதினால் அவருக்கு தன் பின்னால் நிற்க இடம் தந்தாள். அவர் மிகப் பெரிய குதிரையாக அவள் பின்னால் தனது முன்னங்கால்கள் இரண்டையும் அவள் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தபடி நிற்கின்றார். அவள் தன் கையில் ஒரு திரிசூலத்தை வைத்துக்கொண்டும், எரிந்து கொண்டு உள்ள கிரீடத்தை தலையில் அணிந்து கொண்டும் காட்சி தருகிறாள். அவளுக்கு எலுமிச்சை பழம் பிடிக்கும் என்பதினால் அந்த மாலை அணிவிக்கப்படுகின்றது. அவளுக்கு மட்டும் அணிவிக்க வேண்டும் எனில் நூறு பழம் வேண்டும். குதிரைக்கும் சேர்த்து என்றால் ஆயிரம் பழங்கள் வேண்டும்.
அந்த ஆலயத்தை நீதியின் இடம் என்கிறார்கள். ஆலயத்தில் அவளுக்கு முன்னால் ஒரு மேடு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும், குற்றம் சுமத்தப்பட்டவரும் அங்கு வந்து அந்த மேட்டில் நின்று கொண்டு தத்தம் வாதத்தை வைக்க வேண்டும். பொய் கூறுபவர் முப்பது நாட்களுக்குள் ஏதாவது ஒரு விதத்தில் தண்டனையை பெறுகிறார் . சில சமயங்களில் அவர்களால் அந்த கிராமத்தின் எல்லையைக் கூட கடக்க முடியாமல் ஆகிவிடுமாம். ஆகவே தண்டனை பெற்றவன் மீண்டும் ஆலயத்துக்கு வந்து பத்ரகாளிக்கு காணிக்கை செலுத்தி, குற்றமற்றவனுக்கும் அபராதமாக ஏதாவது தொகை தர வேண்டுமாம்.
பணக்காரர்களினால் கொடுமை இழைகப்பட்டவர்கள் ஈரத் துணி உடுத்தி அங்கு வந்து பட்டயக்கல் எனக் கூறப்படும் இடத்தில் நின்று கொண்டு ஒரு நாணயத்தை அங்குள்ள கத்தி மற்றும் சுத்தியலினால் இரண்டாக உடைத்து அங்கே போட வேண்டும். அதை செய்தால் அவர்களை கொடுமைபடுத்தியவர்களை பத்ரகாளி கடுமையாக தண்டிப்பாளாம் .
ஒரு காலத்தில் சில நீதிபதிகளே குற்றம் சாட்டப்பட்டவரையும் , குற்றம் சுமத்தப்பட்டவரையும் அங்கே அழைத்து வந்து அவர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின் வழக்கை விசாரித்ததாகக் கூறுகிறார்கள். பத்ரகாளிக்கு பின் புறத்தில் வேப்ப மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் மற்றும் திருமணத் தடை விலக வேண்டும் என வேண்டிக் கொண்டும் பக்தர்கள் அங்கு வருவது உண்டாம். அவை உடனேயே நடைபெறுகின்றனவாம். அந்த ஆலயத்தில் விழா எதுவும் கிடையாது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நிறைய கூட்டம் வருகின்றது.

--------------------------------- 
பின் குறிப்பு :
இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாடப்புரம் மதுரைக்கு அருகில் உள்ளது. அந்த இடத்துக்கு செல்ல திருப்புவனத்தில் இருந்து வாகன வசதிகள் உள்ளன. அது போல திருநெல்வேலியில் இருந்தும் செல்ல நல்ல சாலை உள்ளது. சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதி கேசனை எடுத்து மதுரையை வளைத்தார்.
மேற்கே திருவேடகமும், தெற்கே திருப்பரங்குன்றமும், வடக்கே திருமாலிருஞ்சோலையும் இருக்குமாறு எல்லையை வைத்த இறைவன் கிழக்கில் இருந்த மடப்புரத்தில் தனது வாயையும் சேர்த்து வைத்தபடி இருந்தவாறு மதுரையின் எல்லையை பார்வதிக்கு காட்டினார் என்றும் அதனால் அந்த இடத்தில்தான் சிவபெருமானின் வாயில் இருந்து வெளியான நஞ்சை உண்ட பார்வதி இங்கு காளியாக காட்சி தந்தாள் என்பது இன்னொரு கதை. காளியின் தலை மீது கால்களை தூக்கியபடி நிற்கும் குதிரையின் கால்கள் நிழல் தரும் குடையாக உள்ளது என்கிறார்கள்
- சாந்திப்பிரியா 

Friday, April 12, 2013

Village Deities- 21

கிராம தேவதைகள் - 21

ஒரு  கிராம  ஆலயத்தில் காணப்படும்  இந்த 
கிராம தேவதை  பத்திரகாளியா அல்லது பைரவியா   
என்பது தெரியவில்லை 


தகத்தூர் 
மாப்பிள்ளை வீரன் 

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
 
நாகையில் வேதாரண்யத்தின் அருகில் உள்ளது தகத்தூர் கிராமம். மாப்பிள்ளை வீரன் என்றால் மாப்பிள்ளை என்று அர்த்தம். அந்த ஊரில் உள்ள அந்த ஆலயத்தில் சிலை கிடையாது. ஒரு கல்லை மட்டுமே கடவுளாக வணங்குகிறார்கள். அந்த ஆலயத்தின் கதை இது.
ஒரு காலத்தில் அந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் திருமேனி அம்மன் என்ற பெயரில் காளி சிலையை வணங்கி வந்தார். அவர் அதன் எதிரிலேயே மரணம் அடைந்தார். ஆகவே அவருக்கு அங்கேயே சமாதி எழுந்தது. அந்த ஊரில் சாமி வழிபாடுகள் எதுவும் இல்லாததினால் திருடர்கள் அட்டகாசம் அதிகரித்தது. மக்கள் துன்பம் அடைந்தனர். அந்த கிராமத்தின் அருகில் இருந்த அதியங்காடு என்ற இடத்தில் ஒரு சிவன் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தின் அனைத்து நகைகளையும் திருடர்கள் திருடிக் கொண்டு சென்று விடுவார்கள் என பயந்த மக்கள் அதை எடுத்து வந்து அந்த சாமியாரின் சமாதி இருந்த இடத்தில் புதைத்து வைத்து விட்டார்கள். அதன் மீது ஒரு வேப்ப மரத்தையும் நட்டு அதன் பெயரை மாப்பிள்ளை வீரன் என அழைத்தார்கள். சமாதியை சுற்றி தடுப்பும் கூரை மீது பனை ஒலையினால் ஆன தடுப்பையும் செய்து வைத்தனர். ஒரு நாள் அந்த மேல்கூரைத் தடுப்பு விளக்கினால் ஏற்பட்ட தீயில் அழிந்து போக மரமும் சிறிது சேதம் அடைந்தது. அவை என்றும் காணப்படுகின்றது. ஆகவே அவர்கள் அங்கு கல்லினால் ஆன தடுப்பை அமைக்க விரும்பி பூமியை தோண்டியபோது அவர்கள் கோடாலி ஒரு கல்லின் மீது வேகமாகப் பட்டது . கோடரி கல்லின் மீது பட்டதினால் கல்லில் இருந்து ரத்தம் வந்ததாம். ஆகவே அந்த கல்லை தெய்வமாக பாவித்து அதை ஒரு மூலையில் வைத்து மண்டபத்தைக் கட்டினார்கள். அந்த கல்லின் மீது ஓம் என்ற எழுத்தை பொறித்து வைக்க அதையே இன்றும் மாப்பிள்ளை வீரனாக வணங்குகிறார்கள். அவரே சிவனாரின் சொத்துக்களை அங்கு பாதுகாத்து வருவதாக நம்புகிறார்கள்.

 மாப்பிள்ளை வீரன் ஆலய நுழை வாயில் 

பங்குனி மாதத்தில் (மார்ச்- ஏப்ரலில் ) பதினெட்டு நாள் விழா நடைபெறும். அதியங்காட்டில் பைரவர் ஆலயம் உள்ளது. அங்கிருந்து சாமியாடிகள் இங்கு புறப்பட்டு வந்து மாப்பிள்ளை வீரனுக்கு பூஜைகளை செய்வார்கள். அதன் பின் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் தருவார்கள்.
தமது உடலில் எந்தப் பகுதியிலாவது நோய் வந்தால் அதைப் போல ஒரு உருவச் சிலையை செய்து வந்து அங்கு வைத்தால் நோய் குணமாவதாக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் அங்கு அத்ததகைய பொம்மைகள் நிறையவே அங்கு கிடக்கின்றன.

--------
பின்குறிப்பு:
வேதாரண்யத்தில் இருந்து இங்கு செல்ல பேருந்துகள் உள்ளன. மற்றும் தஞ்சாவூரின் சேதுபாவ சத்திரத்தில் இருந்தும் இங்கு பேருந்தில் செல்லலாம். தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருவிழாவில் , ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற சிலைகளை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தமது வேண்டுதல்களை நிறைவற்றிக் கொள்ள மண் குதிரைகள், மனித உருவ சிலைகளை கொண்டு வந்து கோவில் வளாகத்தில் நேர்த்திக் கடனாக வைக்கிறார்கள். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட பக்தர்கள் குலைக் குழியாக வாழைப்பழம் தார்களை கொண்டு வந்து கூட்டத்தினருக்கு விநியோகிப்பார்கள். அப்படி தானம் தரப்படும் பழத்தை பெறுவதன் மூலம் பெண்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை - சாந்திப்பிரியா 

Thursday, April 11, 2013

Village Deities - 20

கிராம தேவதைகள் - 20

சங்கிலிக் கறுப்பர் 

கீழவயல் 
சங்கிலிக் கறுப்பர் 

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கண்ணம்புரியின் அருகில் உள்ள கிராமமே கீழவயல் என்பது. அதன் அருகில் நாத கலை பட்டினம் என்ற வளர்ச்சி அடைந்த ஊர் உண்டு. அந்த ஊரில் இருந்தவர்கள் வசதியான வாழ்க்கையை மேற்கொண்டு உள்ளனர் என்பதினால் பொறாமை கொண்ட சில மந்திரவாதிகள் அந்த ஊர் மக்களுக்கு தொல்லை தரத் துவங்கினார்கள். அந்த கிராமத்தில் ஒளி விடை ஐயனாரின் ஆலயம் இருந்தது.  ஆகவே மக்கள் அங்கு சென்று ஐயனாரிடம் முறையிட்டனர். அவர் தந்து சகோதரியான மதுரை மீனாஷியை சந்தித்து அவளுடைய ஆலோசனைக் கேட்டார். அவள் தன்னிடம் உள்ள 121 படையினரில் எவரை வேண்டுமானாலும் அழைத்துப் போகுமாறு கூறினாள். ஐயனாருக்கு சங்கலிக் கறுப்பர் மீதே அதிக நம்பிக்கை இருந்ததினால் அவரையே அழைத்துச் சென்றார். சங்கிலிக் கறுப்பர் அங்கு சென்று மிகப் பெரிய உருவை எடுத்து மந்திரவாதிகளை கல் சிலைகளாக்கி விட்டார். அதை முடித்தப் பின் தனக்கு என்ன வெகுமதி தர உள்ளாய் என ஐயனாரிடம் அவர் கேட்க ஐயனாரோ அந்த ஊரிலும் அதை சுற்றி உள்ள பத்து கிராமங்களிலும் சங்கிலிக் கருப்பருக்கே தமது தேவதை என முதல் மரியாதை தருவார்கள் என்று கூறினார். ஆகவே அதுமுதல் கீழவயலை சுற்றி இருந்த பத்து கிராமங்களுக்கும் அவரே காவல் தெய்வமானார். ஆகவே அவருக்கு ஒரு ஆலயம் எழுப்பினார்கள். அவரோ சூரிய ஒளி தன் முகத்தின் மீதும், மழை தன் உடம்பின் பின் பகுதியிலும் விழுமாறும் ஆலயம் அமைக்க வேண்டும் எனக் கூற அவர்களும் அது போலவே ஆலயத்தைக் கட்டினார்கள். அந்த ஆலயத்தில் ஆலய மணிகளைத் தவிர கடவுளிடம் மட்டுமே ஆயுதம் இருந்தது. அந்த ஆலய மணியைக் கூட பக்தர்கள் தந்து இருந்தனர்.
ஒரு முறை ஒரு திருடன் அந்த ஆலயத்துக்கு வந்து அங்கிருந்த மணியை திருட முயன்றான். சங்கிலிக் கறுப்பர் ஒரு சிறுவன் வேடத்தில் ஊருக்குள் சென்று அந்த விஷயத்தை ஒரு முதியவரிடம் கூற அவர் ஆட்களைத் திரட்டி வந்து திருடனைப் பிடித்தார். அது முதல் அந்த ஊரில் திருட்டு பயமே இல்லையாம்.
அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் இருந்தது. ஆயிரம் அடித் தோண்டினாலும் நீர் கிடைக்கவில்லை என்ற நிலை இருந்தது . சங்கிலிக் கறுப்பர் ஒரு பக்தரின் கனவில் தோன்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்டுமாறு கூற 150 அடிக்கும் குறைவான அளவில் நிறைய தண்ணீர் வந்ததாம்.
சங்கிலிக் கறுப்பர் ஒப்புக் கொண்டால் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும். அனைவரும் ஆலயத்தின் முன் வந்து கூட அவர் வைத்துள்ள கத்தியில் இருந்து பல்லி கூவினால் விழா நடைபெறுமாம். மூன்று மாதங்களுக்கு முன்பே விழாவிற்கான ஏற்பாடுகளை துவக்கி விடுகின்றனர். ஊரில் உள்ளவர்கள் வெளி ஊருக்கு செல்ல மாட்டார்கள். மற்றவர்கள் வீட்டில் சாப்பிட மாட்டார்கள் ஆயிரம் ஆடுகள் பலி தரப்படும். பெண்கள் ஆலயத்தின் பக்கம் கூடப் போக மாட்டார்கள்.

Village Deities - 19

கிராம தேவதைகள் - 19

தமிழ் நாட்டில் ஒரு கிராம
 எல்லையில்  உள்ள காவல் தெய்வங்கள் 

காப்பாத்தம்பட்டி 
பச்சை மலையான் 

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

சேலம் மாவட்டத்தில் ஜலகண்டபுரத்தில் உள்ளது சிறிய கிராமமான கப்பாத்தம்பட்டி என்பது. அது வறண்ட பூமி. ஒரு முறை அந்த கிராமத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டது. தண்ணீர் இல்லை. ஆகவே அங்கிருந்து எண்பது கிலோ தொலைவில் இருந்த பச்சை மலை என்ற இடத்துக்கு சிலர் சென்று குடியேறினார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த நான்குபேர் அந்த மலை உச்சிக்குச் சென்று அங்கு கடவுளுக்காக ஒரு குடுசையில் தண்ணீர் வைத்து இருந்த மூன்று பானைகளில் இருந்த தண்ணீரை தாகம் தாங்காமல் குடித்து விட்டனர். அவர்கள் நால்வரும் குருடாகி விட்டனர். அதன் பிறகு அந்த மலை ஜாதியினர் தம் கிராமத்துக்கு வந்து நடந்ததைக் கூற அவர்கள் அங்கு மீண்டும் சென்று அங்கிருந்த ஆலய பூசாரியிடம் மன்னிப்புக் கேட்க அவரும் அவர்களுக்கு ஆலயத்தின் வீபுதியைக் கொடுக்க அவர்கள் இழந்த கண் பார்வையை திரும்பப் பெற்றார்கள். ஆகவே அந்த கிராமத்தினர் அவரிடம் கேட்டு அந்த மலை மீது இருந்த குடுசையில் இருந்து ஒரு கல்லைக் கொண்டு வந்து வைத்து அதை பச்சை மலையான் என பெயரிட்டு வணங்கலாயினர். அதை செய்தப் பின் அந்த கிராமம் மீண்டும் செழிப்புற்றது. நல்ல மழை பொழிய ஆரம்பித்தது. இன்றும் அங்கு உள்ள சில கற்களையே பச்சை மலையானாக வணங்கி வருகிறார்கள். அவரை சுற்றி நாடார், வீரக்காரன், சன்னாசி, வேடர், ஏழு கன்னிகைகள், சின்னண்ணன் மற்றும் பெரிய அண்ணன் போன்றோவர்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதன் பின் ஒரு இடத்தில் கூரைப் போட்டு அவர்கள் அனைவரையும் அங்கு மாற்றினார்கள். இன்றும் அங்கு உள்ள ஒரு கல்லை பச்சை மலையானாக வணங்கி வருகிறார்கள். அவரை சுற்றி நாடார், வீரக்காரன், சன்னாசி, வேடர், ஏழு கன்னிகைகள், சின்னண்ணன் மற்றும் பெரிய அண்ணன் போன்றவர்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதன் பின் ஒரு இடத்தில் கூரைப் போட்டு அவர்கள் அனைவரையும் அங்கு மாற்றினார்கள். ஆனால் அப்படி தேவதைகளைக் கொண்டு வந்தபோது அவற்றில் இரண்டு தேவதைகளை எடுத்து வர மறந்து விட்டதை அவர்கள் கனவில் தோன்றிய அந்த இரண்டு தேவதைகளும் சுட்டிக் காட்டின. ஆகவே மறுநாள் அந்த கற்களை எடுத்து வரச் சென்றபோது அவர்களால் பல கற்களுக்கு இடையே இருந்த அதை அடையாளம் காண முடியவில்லை. ஆகவே அங்கிருந்த அனைத்து கற்களையும் அவர்கள் தெய்வமாகக் கருதி எடுத்து வந்துவிட்டனர் .
பச்சை மலையான் சுத்த சைவ உணவையே உண்பவர். வைகாசி மாதத்தில் ( மே-ஜூன்) பச்சை மலையான் தவத் திருவிழா என்ற விழா நடைபெறுகின்றது. அந்த விழா ஒரு நாளைக்கு மட்டுமே நடைபெறும். மே மாதத்தில் கிராமத்தினர் அந்த ஆலயத்தில் ஒன்று கூடுவார்கள். பச்சை மலையானிடம் திருவிழாவை நடத்த வேண்டுமா எனக் கேட்பார்கள். ஆலயத்தின் வடக்கில் உள்ள ஆல மரத்தில் இருந்து பல்லி கத்தினால் ஆமாம் என்று அர்த்தம், இல்லை தென்புறத்தில் உள்ள மரத்தில் இருந்து பல்லி கத்தினால் வேண்டாம் என்று அர்த்தம்.
கடவுளின் ஆயுதங்களும் அவருடைய வாளும் கிராமத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளன. விழா முடிவு செய்யப்பட்டவுடன் அங்குள்ள குயவர்கள் தூய்மையுடன் விரதம் இருந்து சிரத்தையுடன் புதிய பானைகளை செய்வார்கள். பொங்கல் படைக்க ஆயிரம் பானைகள் செய்யப்படும். அரிசியை அங்குதான் களைந்து இடிப்பார்கள் . அந்த கிராமத்து பெண்கள் அங்கு வந்து அரிசியை இடித்தப் பின் அதை ஒரு பையில் கொட்டி வைத்து தமது பெயரையும் அதன் மீது எழுதி வைத்து விட்டுச் செல்வார்கள். ஆலயத்தின் மீது புதிய கூரை போடப்படும். விடியற் காலை மூன்று மணிக்கே எழுந்து அவருடைய ஆயுதமும் மற்றும் ஆலய மணிகளை எடுத்து வருவார்கள். சுமார் முந்நூறு மீட்டர் தள்ளி சாமியாடிகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். முதலில் பெரிய பானையில் பச்சை மலையானுக்கு பொங்கல் படைத்தப் பிறகு ஏழு கன்னிகைகளுக்கும் சிறிய பானைகளில் படைக்கப்படும். சாமியாடிகள் குறிகளும் சொல்வார்கள்.
சின்னண்ணன், பெரியண்ணன் மற்றும் அவர்கள் பாட்டனாரான பாட்டப்பனுக்கும் ஆடு பலி தரப்படும். அதன் பின் பன்றிகளைத் துரத்தி பிடித்து வேட்டை ஆடிக் கொல்வார்கள் . அதன் பின் மூன்று பானைகளில் தண்ணீர் வைத்தப் பின் விழா முடிவடையும்.

Wednesday, April 10, 2013

Village Dieties - 18

கிராம தேவதைகள் - 18
 
மேலாரப்பனூர்  தவசி ஆண்டி ஆலயம் 

மேலாரப்பனூர் 
தவசி ஆண்டி

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

மதுரை அருகில் உள்ளதே திருமங்கலம் என்கிற கிராமம். ஒரு காலத்தில் தவசி ஆண்டி என்பவர் உயர் ஜாதியினரால் வணங்கப்பட்டு வந்திருந்தார். ஆனால் இன்றோ அவரை தலித்துக்களே வணங்குகின்றனர். அந்த தேவதைக்கு ஆலயம் இல்லை. அலங்கரிக்கப்பட்டு உள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ள கல்லையே தவசி ஆண்டி என வணங்குகின்றனர். அவர் சக்தி வாய்ந்த கடவுள் என்ற நம்பிக்கையும் உள்ளது. தவசி ஆண்டி அந்த ஊருக்கு எப்படி வந்தார் என்பதோ அல்லது அந்த ஆலயத்தின் பண்டிதரும், ஆலயத்தின் சாமியாடியும் ஏன் தலித்துக்களாகவே உள்ளனர் என்பதோ யாருக்கும் தெரியவில்லை. அவருடைய அருளினால்தான் தம் நிலங்களில் நல்ல விளைச்சல் ஏற்படுகின்றது என கிராமத்தினர் நம்புகின்றனர். ஆகவே தமது விளைச்சலில் ஒரு பகுதியை அவருக்கு காணிக்கையாக அர்பணித்து விடுவார்கள். யார் எவ்வளவு கொடுத்தனர் என்ற விவரம் எழுதி வைக்கப்பட்டு விடுகின்றது.
கார்த்திகை மாத மூன்றாம் வெள்ளிக் கிழமையில் ( நவம்பர்- டிசம்பரில்) தவசி ஆண்டியின் விழா நடைபெறும். அந்த ஆலையத்துக்கு தரப்பட்ட தானியங்கள் விற்கப்பட்டு அந்தப் பணத்தில் வாழைப்பழங்கள் வாங்கி வரப்படும். சாதாரணமாக ஐம்பதாயிரம் வாழைப் பழங்கள் வாங்கப்படும். அந்த பண்டிகை தினத்தன்று ஆலய பூசாரியும் சாமியாடியும் உணவு அருந்தாமல் விரதம் இருப்பார்கள். இரண்டு கறவை மாடுகள் ( பெண் மாடுகள்) கொண்டு வரப்பட்டு அங்கு கட்டி வைக்கப்படும் . காலை முதல் அதன் பாலை சுரக்க விடாமல் அதன் காம்பின் மீது எதோ மந்திரித்த வீபுதியை தூவுவார்களாம். அதன் கன்று கூட பாலை அருந்தாது.
உள்ளூரில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ள தவசி ஆண்டியின் ஆபரணங்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் எடுத்துச் செல்லப்படும். அவர்கள் அதை வணங்குவார்கள். கிராம எல்லைவரை அதனுடன் பெண்களும் செல்வார்கள். ஆனால் ஆலயத்துக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதினால் அதன் பின் அவர்கள் அவரவர் வீட்டுக்குத் திரும்பி விடுவார்கள். நாடு இரவில் மாட்டின் பாலைக் கறந்து அதனுடன் சிறிது பழத்தைக் கலந்து அபிஷேகம் செய்வார்கள்.
அதன் பின் அனைத்து ஆண்களும் அங்கு தேவதை முன் கூடி நின்று ஊரில் '' மழையும் தண்ணீரும் வேண்டும். எங்களுக்கு நல்ல விளைச்சல் வேண்டும். அதற்கு நீ அருள் புரிந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் . இதன் அடையாளமாக ஏதாவது ஒரு சமிக்கையை எங்களுக்குக் காட்ட வேண்டும் '' என அவரிடம் வேண்டுவார்கள். அந்த ஆலயத்தின் பக்கத்தில் உள்ள ஆல மரத்தில் இருந்து பல்லி கத்தினால் அவர் அருள் கிடைத்து விட்டது என்று அர்த்தம். அந்த சப்தம் வர நேரமானால் கிராமத்தில் எதோ தவறு நடந்து விட்டதாகக் கருதுவார்கள். அந்த சப்தம் வரும் வரை இரண்டு நாளானாலும் அங்கேயே காத்துக் கிடப்பார்கள். சப்தம் வந்த பின்னரே அங்குள்ள சாமியாடிக்கு அனைவரும் நமஸ்காரம் செய்வார்கள். எத்தனை நேரம் ஆனாலும் பல்லியின் சப்தம் வராமல் விழாவை விட்டுப் போக மாட்டார்கள்.
அது போலவே ஒவ்வொரு குடும்பத்தினரும் அவரவர் பிரச்சனைக்கும் பதில் கேட்டு காத்திருப்பார்கள்.
விழா முடிந்தப் பின் வாழைப் பழங்களை அவரவர் கொடுத்த காணிக்கைக்கு ஏற்ப கிராமத்தினருக்கு பகிர்ந்து கொடுப்பார்கள்.

--------------
பின்குறிப்பு:-
மதுரையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் பாதையில் உள்ளது மேல் உரப்பனூர் கிராமம். இந்த கிராமத்திலும் மதுரையிலும் தவசி ஆண்டி எனும் காவல் தெய்வத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது என்பதே உண்மை. அதன் காரணம் ஒரு காலத்தில் ஜாதி பேதம் இன்றி அனைவராலும் வணங்கப்பட்ட காவல் தெய்வம் அவர்.   
தவசி ஆண்டி யார், அவர் எங்கிருந்து வந்தார், எப்படி கிராமக் காவல் தெய்வமானார் என்பதைப் பற்றிய விவரம் யாருக்கும் தெரியவில்லை.  அவருடைய உருவப் படமும் கிடைக்கவில்லை. ஆனால் தவசி ஆண்டியைப் பற்றி கூறப்பட்டு வரும்  கிராமிய வாய்மொழிக் கதைதான் மேலே கூறப்பட்டுள்ள கதை. 
அவரைப் பற்றி கிராம மொழி ஒன்று  உண்டு . அது - கண்மாய் கரையில் தவசி ஆண்டி சக்தியுள்ள தெய்வமாக அமர்ந்திருந்து, கண்மாயைக் காத்திருந்து, கழனியை (நிலம்) செழிக்க வைத்து,  பசியில்லாது இருக்க கஞ்சி ஊற்றுகிறார்.     -சாந்திப்பிரியா

Village Deities - 17

கிராம தேவதைகள் - 17
பெங்களூரில் ஒரு ஆலயத்தில் முனீஸ்வரர் 

கோபால சமுத்ரம் 
அடைக்கலம் காத்தார்

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
 
உப்பூர் கோபாலசமுத்திரம் என்பது திருவாரூர் மாவட்டத்தின் முத்துப் பேட்டையில் இருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு பெரிய முனீஸ்வரன் ஆலயம் உள்ளது. அவரே ஊரின் அடைக்கலம் காத்தாரின் காவல் தெய்வம். அடைக்கலம் என்றால் காப்பவர், மற்றும் சரண் அடைந்தவர் என்ற அர்த்தம் உண்டு. ஒரு காலத்தில் கோபால சமுத்திரம் சமுத்திரத்தின் கரைப் பகுதியாக இருந்துள்ளது. நாகப்பட்டினம் மற்றும் அந்த காலத்தில் கொலம்போ என அழைக்கப்பட்ட ஸ்ரீ லங்காவுக்கு கப்பல் மூலமே வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு முறை நாகப்பட்டினத்தில் இருந்து கொலோம்போவுக்கு சரக்கு கப்பல் போய் கொண்டு இருக்கையில் கடலில் பயங்கரமான சூறாவளி ஏற்பட்டது. கடல் கொந்தளித்தது. கப்பல் முழுகி விடும் போல இருக்க அந்த கப்பலின் சொந்தக்காரன் கடவுளை வேண்டிக் கொள்ள அந்த கப்பல் எதன் மீதோ மோதி நின்று விட்டது. ஆகவே எதன் மீது அந்தக் கப்பல் மோதி நின்றுள்ளது என்பதைப் பார்த்துவிட்டு வருமாறு கப்பலை ஓட்டி வந்தவனை சோதனை செய்யுமாறு கூற அவனும் அந்தக் கப்பல் ஒரு கல்லின் மீதுதான் மோதி நின்றுள்ளது என்ற அதிசயத்தை சொந்தக்காரனிடம் கூறினான். அந்த கப்பல் மோதியது ஒரு கல் மீதே என்பதைப் பார்த்தவர் அந்த கல்லினால் கப்பல் நின்று இருக்க முடியாது என நினைத்து அதை கடலில் தூக்கிப் போட்டு விட்டார். அது மட்டும் அல்லாமல் உண்மையில் இந்த இடம் தெய்வாம்சம் பொருந்தியது என்றால் நான் அடுத்த முறை வரும் போது கடல் இங்கு இருக்க கூடாது என நினைத்தார். அதுவே நடந்தது. அடுத்த முறை அவர் அங்கு சென்றபோது அங்கு கடல் இல்லை. சிறிய தீவே இருந்தது. அது மட்டும் அல்ல அவர் தூக்கிப் போட்ட அதே கல்லும் அந்த தீவின் மீது இருந்தது. ஆகவே அவர் அந்தக் கல்லை எடுத்து வரச் சொல்லி அதற்கு அங்கு ஒரு ஆலயம் அமைத்தார். அந்த ஆலயத்துக்கு கப்பலைக் காத்தவர் என்ற பெயரில் அடைக்கலம் காத்தார் என பெயரிட்டார். அது முதல் அவர் வியாபாரம் பெருகியது. நிறையப் பணம் வரலாயிற்று. அதற்குக் காரணம் அடைக்கலம் காத்த பெருமாளே என நினைத்து அவருக்கு இன்னும் பெரிய ஆலயம் கட்டினார். அதன் முன்னால் பெரிய யானையின் சிலையை செய்து வைத்தார். முதலில் யானையின் உடலை செய்து வைத்தவர் அடுத்து அதன் முகத்தை செய்தது அதை உடலுடன் பொருத்துமாறு கூறினார். ஆனால் எத்தனை முயன்றும் யானை சிலையின் தலை உடைந்து விழுந்து கொண்டே இருந்தது. அவர் ஒரு சாமியாடியை அது குறித்துக் கேட்க சாமியாடி அடைகலம் காத்தாரின் வாகனம் குதிரை என்பதினால் அப்படி நடக்கின்றது என்று கூறினார். ஆகவே முன்னர் செய்த யானையின் சிலையை எடுக்காமல் அதன் எதிரில் இருக்குமாறு ஒரு குதிரையின் சிலையை செய்து வைத்தார். . அது இன்னமும் அங்கே உள்ளது. அந்த ஆலயத்தில் அடைக்கலம் காத்தாரின் உருவச் சிலை இல்லை. கடலில் கண்டு எடுத்த அந்தக் கல்தான் அடைக்கலம் காத்தவர் என்று என்று கருதி அவரை கல்லின் உருவில்தான் வணங்குகிறார்கள். என வணங்குகிறார்கள். ஆனால் முனீஸ்வரருக்கு மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு உள்ளது. அவர் அடைக்கலம் காத்தாரின் பாதுகாவலராக இருக்கிறார். மக்கள் முதலில் முனீஸ்வரரை வணங்கிய பின்தான் அடைக்கலம் காத்தாரை வணங்குவார்கள்.
வைகாசி மாதத்தில் (ஏப்ரல்-மே) வண்ணமயமான குதிரையின் சிலைகள் அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள அலாங்காடு என்ற கிராமத்தில் செய்யப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். அடைக்கலம் காத்தார் சைவ உணவையே உண்பவர். ஆகவே அவருக்கு பலி தரப்படுவது இல்லை. ஆனால் முனீஸ்வரருக்கு பலிகள் தரப்படுகின்றன. முத்துபேட்டையில் இருந்து திருத்துரைபூண்டிக்கு வளைந்து வளைந்து செல்லும் அபாயகரமான பாதை உள்ளது. ஆனால் அந்த சாலையில் விபத்துக்களே நடப்பது இல்லை.

Tuesday, April 2, 2013

Grama devathas and deities in Vedik temples - 4

 கிராம தேவதைகளும் 
நகர தெய்வங்களும் -4
(வழிபாட்டுத் தலங்கள்  
தோன்றிய  வரலாறு 

சாந்திப்பிரியா 


- IV -

நான் முன்னரே எழுதியது போல கிராமப்புறங்களில் இருந்த மக்களினால் வணங்கப்பட்டு வந்திருந்த தெய்வங்கள் அதாவது சுடலை மாடன் (பார்வதியினால் மயானத்தில் படைக்கப்பட்டவர் என்பது கதை) , ஐய்யனார், இசக்கி அம்மன், மாரி அம்மன் முதல் வினாயகர், முருகன், வள்ளி போன்றவர்கள் பிற்காலத்தில் படித்தறிவு பெற்று நகர்ப்புறங்களுக்கு சென்று குடி அமர்ந்த கிராம மக்களின் குல தெய்வம் ஆயின. இன்னொன்றையும் கூர்ந்து கவனியுங்கள் ஆகம வழிபாட்டு முறையிலான ஆண் தெய்வங்களில் கூட வெங்கடாசலபதி, முருகன் மற்றும் வினாயகரை தவிர அதாவது ஒரு குடும்பத்தில் ஆண்டாண்டு காலமாக அவர்களுடைய மூதையார்கள் தொடர்ந்து வழிபாட்டு வந்திருந்த ஆலய தெய்வம் வெளி இடங்களுக்குச் சென்று குடி அமர்ந்த அந்த குடும்பத்தை சார்ந்த சந்ததியினரால் குல தெய்வமாக ஏற்கப்பட்டது. அதில் ஒரு விசேஷம் என்ன என்றால் ஒரு கட்டத்தில், அப்படிப்பட்ட கிராம ஆலயங்கள் பிற இனங்களை சேர்ந்த மக்களைப் போலவே ஆச்சாரமான பிராமண குடும்பங்களை சேர்ந்தவர்களினால் கூட வணங்கப்பட்டு வந்திருந்த ஆகம விதிப்படி பூஜிக்கப்படாத கிராம ஆலயமாகவும் இருந்துள்ளது. ஆகம விதிப்படி பூஜிக்கப்படாத அதே கிராம ஆலயங்கள் பிற் காலத்தில் ஆகம விதிப்படி பூஜைகளைக் கொண்ட ஆலயங்களாக மாறி உள்ளன.

இவற்றில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு கட்டத்தில் கிராம தேவதைகள் என கருதப்பட்டவர்கள் பின்னர் தெய்வங்களாக ஏற்கப்பட்டார்கள். கிராம தேவதை ஆலயங்களிலும் பொதுவாக பெண் தெய்வங்களையே அதிகம் வணங்கி உள்ளார்கள். அதற்குக் காரணம் ஒருவருக்குத் தேவையான அனைத்தையும் அன்பையும் தருபவள் ஒரு தாயார் என்ற பொதுவான காரணமே. இன்னொன்று என்ன என்றால் தெய்வீக சம்மந்தமான பல கதைகளையும் படித்தால் பெரும்பாலான அரக்கர்கள் மற்றும் அசுரர்களையும் அழித்தவர்கள் பெண் உருவில் இருந்த தெய்வங்களே என்பது புரியும். ஆகவே அசுரர்களையும், அரக்கர்களையும் அழிக்கச் சென்ற பெண் தெய்வங்களுக்கு யுத்தத்தில் உதவியாக இருக்க அவர்களது உடலில் இருந்து வெளி வந்த படையினர் பெரும்பாலும் பெண் கணங்களே. இதனால்தான்  விட அதிக தெய்வங்கள் பெண்களாகவே இருந்துள்ளன. இதனால் பெண் தெய்வங்களுக்கே கிராமங்களிலும் அதிக ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை அனைத்துமே அம்மன் ஆலயங்களாக இருந்துள்ளன. அதற்கும் மேலே ஒரு படி போனால் இன்னொரு உண்மை புரியும். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவள் பெண் தெய்வம் என்பதான நம்பிக்கை உள்ளது. மேலும் முக்கியமான மந்திர வழிபாட்டு வழிமுறையைக் பாருங்கள். அவற்றில் சுமார் 90 சதவிகிதம் பெண் தெய்வங்களின் ஆராதனைகளாகவே இருக்கும்.   ஆகவே ஆண் தெய்வங்களை விட பெண் தெய்வங்களையே சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதி உள்ளார்கள். அதனால்தான் பலருடைய குலதெய்வம் என்பது பெண் தெய்வமாகவே இருந்துள்ளது.

இன்னொரு காரணம் பொதுவாகவே ஒவ்வொருவருடைய வீட்டிலும் உள்ள பெண்கள் அதிக பூஜை போன்ற வழிபாடுகளைக் கொண்டுள்ளார்கள். தமக்கு தாலி பாக்கியம் வேண்டும், குழந்தை வேண்டும், ஊரில் மழை  பொழிய வேண்டும், நோய் பரவக் கூடாது, என்றும் பெரும்பாலும் பராசக்தியின் அம்சங்களையே வேண்டிக் கொண்டதினால் அவர்கள் சக்தியின் ஆலயங்களுக்கு செல்லத் துவங்கினார்கள்.  தொடர்ந்து சக்தி ஆலயங்களுக்கே அவர்கள் சென்று கொண்டு இருந்ததினால் சக்தியே அவர்களுடைய குல தெய்வம் ஆயிற்று. சக்தி என்பது பலதரப்பட்ட அம்பிகைகள், அம்மன்களை உள்ளடக்கியது. . மேலும் முன்னர் இருந்த நிலப்பரப்புக்கள் பெரும்பாலும் கிராமங்களே என்பதாலும், கிராமங்களில் இருந்த கிராம மக்கள் அம்மன் போன்ற பெண் தெய்வங்களையே ஆண்டாண்டு காலம் பெரிதும் வணங்கி வந்தார்கள் என்பதினாலும் பெரும்பாலான குடும்பங்களில் குல தெய்வமானது பெண் சம்மந்தப்பட்ட தெய்வமாகவே- அதாவது அம்மன் சம்மந்தப்பட்டதாகவே இருந்துள்ளது என்பதே உண்மை நிலை. ஆகவேதான் ஆண் தெய்வத்தை குல தெய்வமாக ஏற்று இருப்பது மிகவும் குறைவானதாகவே இருந்துள்ளது
 
இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கிராமப்புறங்களில் எந்த காலத்திலுமே ஆண் தெய்வங்களுக்கு அதாவது சிவன், விஷ்ணு, பிரும்மா, கிருஷ்ணர், ராமர் போன்றவர்களுக்கு அதிக வழிபாட்டுத் தலங்கள் இருந்ததில்லை. அப்படி இருந்தாலும் அங்கெல்லாம் அம்பிகை சன்னதிகளும் இருந்துள்ளன. அதற்கும் காரணம் அந்த ஆண் தெய்வங்களைப் படைத்ததும்  சக்தியே என்பதாகும். ஆகவே அம்மன் மற்றும் அம்பிகைகளுக்கே பக்தர்கள் பெரும்பாலும் முக்கியத்துவம் தந்துள்ளனர். சிவாலயங்களில் வழிபாடுகள் சிவலிங்கத்துக்கு அதிகம் இருந்தாலும் சிவலிங்கத்தை சக்தி-சிவன் என்ற தத்துவத்தில் பார்த்ததினால் அங்கும் அம்பிகைகளே அதிக முக்கியத்துவம் பெற்றார்கள். மேலும் வம்சம் விருத்தி அடைய வேண்டும் என்றால் பெண்கள் மூலமே அது நடக்கும் ( கர்ப்பம் அடைந்து குழந்தைகளைப் பெற்றெடுப்பது என்பதே இதன் பின்னணி) என்பதினாலும் பெண் தெய்வங்களே முக்கியத்துவம் பெற்றார்கள். இப்படியாக பல விதங்களிலும் பெண்களே முக்கியத்துவம் பெற்று இருந்ததினால் ஆண் தெய்வங்களை விட பெண் தெய்வங்கள் அதிக முக்கியத்துவம் பெற்று இருந்தன. அதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை என்பதாக ஒரு பண்டிதர் கூறினார்.

குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கி, வாழ்ந்து மறைந்த முன்னோர்களையோ, கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த பெண்களையோ, தங்களின் வீட்டுத் தெய்வமாக வழிபடும் மரபு காணப்படுகிறது. இது பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். இதனை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், வாழ்வரசி என்று கூறுவதுண்டு.

முடிவாக கிராம தேவதைகள் அல்லது காவல் தெய்வங்களும் நகர தெய்வங்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவைதான். அதாவது அனைவரும் தெய்வீக நிலையில் உள்ளவர்கள். அவற்றில் சிலர் ஆகம வழி முறையில் வழிபடப்பட்டவர்கள். சிலர் ஆகம முறையில் வழிபடப்படாதவர்கள். சிலர் தெய்வங்களில் முதன்மை தெய்வம். சிலர் தெய்வீக கணங்கள், சிலர் பரிவார தேவதைகள். இதுவே உண்மை நிலை.

கிராம தேவதைகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது தெரியுமா?

ஆண் தேவதைகள் அல்லது காவல் தெய்வங்கள் :-
கருப்பசாமி, சுடலை மாடன், கருப்பண்ணசாமி, காத்தவராயன், பெரியாண்டவர், முனீஸ்வரன், ஐயனார், பெரியசாமி, பெரியண்ண ஸ்வாமி , மலையாள கருப்பு, கொல்லி மலை கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு, ஒண்டிக் கருப்பு, சங்கிலி கறுப்பர், பனையடி கருப்பு, கூத்தாண்டவர், சமயக் கருப்பசாமி, கழுவடியான், இருளப்ப சாமி, மாடசாமி, உத்தாண்ட சாமி, எல்லைக் கறுப்பு, மாதேஸ்வரர், மகாலிங்கா, ராஜவாயன், மதுரை வீரன், மாகா முனி, லாட சன்னாசி, வீரபுத்திர ஸ்வாமி, ஆந்திரமுடையார், சிதம்பர நாடார், தாடி வீரசாமி, பொன்னர், தூண்டி வீரன், கொன்றையாண்டி, வேம்புலி ஐயனார், மருது ஐயனார், விருமாண்டி, சீவலப்பேரி சிங்காரம், கலியாண்டி ஐயனார், சமணமலை ஐயனார், சிறை மீட்ட ஐயனார், குளத்து அய்யனார் , வீர முத்து ஐயனார், பிராண்டி ஐயனார், வீர பயங்கர ஐயனார், வீரப்பிள்ளை ஐயனார், இருளப்பர், காவல்காரன், நொண்டிக் கருப்பு, பாவாடைக்காரன், கிளுகிளுப்புக்காரன், மண்டக் கருப்பு போன்றவர்கள்.

பெண்களில் காவல் தெய்வம் அல்லது கிராம தேவதைகள் :-

மாரியம்மா, மரம்மா, காளியம்மா, கங்கம்மா , சௌடம்மா , பொலிமேரம்மா, கிகிரம்மா, வெங்கலியாம்மா, மரியம்மா, மைசம்மா, ஐடம்மா, பொசம்மா, எல்லம்மா , சீதலதேவம்மா, எட்டுகை அம்மன், கொல்லிப் பாவை, பாப்பாத்தி, கருப்பாயி, பாலம்மா, பத்ரகாளி, பூலங்கொண்டாள் அம்மன், பொன்னிறத்தாள் அம்மன், அங்காள பரமேஸ்வரி, கன்யகலம்மா, மந்தராலம்மா, ஜம்புலம்மா, ஜனம்மா, நண்டையலம்மா, திரௌபதம்மா, அன்னம்மா, கௌரம்மா , கேலுவலம்மா, பெரண்டலம்மா, நீலி, பைரவி, மாடச்சி, அம்மாச்சி, பேராத்துசெல்வி, தளவாய்பேச்சி, பூங்குறத்தி, பெத்தம்மா, மஞ்சலம்மா, மலசிசெம்மா, பகவடல்லி, மன்கலியம்மா, கோனியம்மா, துர்கம்மா, பப்பம்மா, சுன்குலம்மா, அங்கம்மா, திருபதம்மா, அன்காரம்மா, மாரியம்மா, விழியம்மா, கெம்பம்மா,தீப்பாச்சி அம்மன் , இடைச்சியம்மன், கிச்சம்மா, தொட்டிச்சி அம்மன், பூலம்மா, சப்தகன்னிகை, துர்க்கை, உடலம்மா, உக்கிரமாகாளி, உச்சினமாகாளி, வாசுகோடி, ஈலம்மா, வானமாலம்மன், பேச்சியம்மன் போன்றவர்கள்.
கட்டுரை முடிவுற்றது 

Monday, April 1, 2013

Grama devathas and deities in Vedik temples - 3

 கிராம தேவதைகளும் 
நகர தெய்வங்களும் -3
(வழிபாட்டுத் தலங்கள்  
தோன்றிய  வரலாறு 

சாந்திப்பிரியா 


- III -

ஒரு விஷயத்தை மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  கிராம ஆலயங்களில் உள்ள தெய்வங்கள்  மற்றும் கிராம தேவதைகள் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்றால் கிராம தேவதைகள்  என்பவர்கள் இரண்டாம் நிலைக் கடவுட்கள் .  அவர்கள்  மூல தெய்வங்களின் அதாவது சிவன், விஷ்ணு, பார்வதி போன்றவர்களின் பூத கணங்கள் அல்லது அவர்களுடைய பரிவார தேவதைகள் எனக் கருதப்பட்டன. அதாவது கிராம தேவதைகளை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலைக் கடவுட்கள் என்று கூடக் கூறலாம்.

முதலாம் கட்ட காலத்தில் வழிபடப்பட்ட கிராம தேவதைகள்- பாறைகள், விலங்குகள், சூலம், போன்ற உருவங்கள்  பூதகணங்களில் அடக்கம் இல்லை. முதலாம் கட்ட கிராம தேவதைகள் ஒரு விதத்தில் ஆவி உலக வழிபாட்டுடன் சம்மந்தப்பட்டது. அந்த கால மக்கள் இனம் தெரியாத சக்திகளை ஆவிகள் என நம்பியதினால்தான்  அப்படிப்பட்ட உருவ வழிபாடு இருந்தது.   அவர்களைப் பொருத்தவரை தமக்கு பாதுகாப்பு வேண்டும் என்று எண்ணினார்கள். அதனால்தான் முதலில் கிராம தேவதைகள் தம்மையும் தமது சக்தியையும் வெளிக்காட்ட கிராம மக்களை ஏதாவது ஒரு விதத்தில் பயமுறுத்தினார்கள். கிராம மக்கள் சிலரின்  கனவில்  தோன்றி தான் இன்ன இடத்தில் புதைந்து உள்ளதாகவும், தன்னை வெளியில் எடுத்து வழிபட்டால் அந்த ஊரைக் காத்தபடி இருப்பேன் எனவும் கூறுவார்களாம். அதன்படி அந்த கிராம மக்கள் கனவில் வந்த அந்த தேவதைகளைக் கண்டறிந்து சிறு ஆலயம் எழுப்பி வழிபடுவார்கள். அந்த தேவதையும் அந்த ஊரைக் காத்தபடி ஊர் எல்லைகளில் அமர்ந்து இருப்பார்களாம். அதனால் கிராம மக்கள்  உருவமற்ற அந்த கடவுட்களின்  சின்னமாக கற்களையும், பாறைகளையும், சூலாங்களையும் ஏன் சில இடங்களில் பானைகளையும்   குப்புற வைத்து அதையே கனவில் வந்த தேவதைகளாக எண்ணி அதற்கு மஞ்சள் குங்குமம் பூசி வழிபாட்டு வந்துள்ளனர்.  இந்த நிலை சற்று மாறுபட்டபோது  இரண்டாம் கட்ட கிராம தேவதைகள் - கருப்பசாமி, ஐயனார், முனீஸ்வரர், சுடலை மாடன் - போன்றவர்கள் தெய்வங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டன. அவர்கள்  தெய்வங்களின் பூத கணங்களாக கருதப்பட்டு வணங்கப்பட்டு  வந்துள்ளார்கள்.
 
இன்னொரு விஷயத்தையும் கூர்ந்து ஆராய்ந்தால் அந்த காலத்தில் கிராம மக்கள் தம்மை அறியாமலேயே  தம்மைக் காக்கும் கடவுளாக நினைத்து தெய்வங்களின் பலவிதமான சின்னங்களை வணங்கி வந்துள்ளார்கள் என்பது புரியும். அதைக் கூடசில மாகான்கள் தெய்வங்களின் செயலே என்றே கூறுகிறார்கள். தெய்வங்கள் மனித உருவில் தாம் பூமிக்கு வந்திருந்தபோது, அந்த மனித உடம்பைத்  துறந்து சென்றபோது அவர்களது  உடல்கள்களும், அவர்களது பரிவார தேவதைகள் மற்றும் கணங்களின் உடல்களும்  பூமியில் பல இடங்களிலும் புதைந்து இருந்தன எனவும், அவை தெய்வீக உடல்கள் என்பதினால் அவை அதே வடிவத்தில் அவை அனைத்துமே  கற்களாக மாறி அதே உருவத்திலான சிலைகளாயின. இப்படியாக வெளிவந்ததே கடவுட்களின் பல உருவங்களும் என்பதும் சில மகான்களின்  கூற்று.

எங்கெல்லாம் தெய்வங்கள் அவதரிக்க நினைத்தார்களோ அங்கெல்லாம் இருந்த மக்கள் கனவிலும் தோன்றி தம்மை வெளியில் எடுக்க வைத்து  பல இடங்களிலும் தெய்வங்களும் அவர்களது பரிவார தேவதைகளும் அமர்ந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ கிராமத்தில் இருந்த மக்கள்  (அப்போதெல்லாம் நகரங்கள் இருந்ததில்லை என்பதை முன்னரே கூறி உள்ளேன்)  தம்மை அறியாமலேயே தெய்வங்களின் சின்னங்களை மட்டுமே வணங்கி வந்துள்ளனர்  என்பது வியப்புக்குரிய செய்தி.  மக்கள் வணங்கி வந்திருந்த முக்கியமான சின்னங்கள்  எவற்றைக் குறிப்பவை என்பதைப் பார்த்தால் வியப்பே ஏற்படும் ?  கிராம மக்கள் சிங்கங்கள், புலி , ஓநாய், பூனை, கழுதை, முதலை, போன்ற மிருகங்களின் சிலைகளையோ அல்லது  கருடன், பருந்து  போன்ற பறவைகளின் சிலைகளையோ கூட வணங்கவில்லை . அவர்கள் வணங்கி வந்தவை குறிப்பிட்ட பொதுவான சில சின்னங்களே. அவை என்ன?

குத்துக் கல்- இது சிவபெருமானின் லிங்க நிலையைக் குறிப்பது.
பாம்புப் புற்று - அம்மன்களைக் குறிப்பது 
வேல் மற்றும் சேவல்  -  முருகனைக்  குறிப்பது.
யானை -   இந்திரனின் வாகனம் என்பதினால்  தேவலோகக் கடவுட்களைக் குறிக்கும்  சின்னம் 
நாகங்கள்  - ராகு, கேது போன்ற கிரகங்கள் மற்றும் மாரி அம்மன் 
குதிரை -  அஸ்வாரூடை எனும்  மகிஷாசுரமர்த்தினியின் படை தளபதியான அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளின் வாகனம்
சூலம் :  மகிஷாசுரமர்த்தினி மற்றும் துர்கை
பயங்கர முகம் கொண்ட  சின்னங்கள் : காளிதேவி 
நாய் - பைரவர்
வரிசையான எட்டு அல்லது ஒன்பது பாறைகள் அல்லது கற்கள் : சப்த கன்னிகைகள் மற்றும் நவக்கிரகங்கள்
குப்புற வைக்கப்பட்ட வட்டவடிவிலான  பானைகள்  : சந்திரன், சூரியன்

கிராம மக்கள்  வணங்கிய கிராம தேவதைகள் யார்? அதையும் படியுங்கள். கிராம மக்கள் வணங்கும் கிராம தேவதையான கருப்பசாமி யார்? முதலில் கிராம தேவதையாக கருதப்பட்டு இருந்த கருப்பசாமி காலப் போக்கில் ராமர் காட்டில் இருந்தபோது சீதைக்கு காவல் இருந்த முனிவரால் தர்பை மூலம் படைக்கப்பட்ட குழந்தை என்றும், யார் தன்னுடைய உண்மையான குழந்தை என்பதைக் கண்டு பிடிக்க ராமர் நடத்திய தீப் பரீட்சையில் தீயில் கருகி எரிந்து போன தர்பைக்கு ராமரே மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப, தீயில் எரிந்ததினால் கருப்பாக மாறிய  அவர் கருப்பசாமி ஆனார் என்றக் கதைகளும் உள்ளது. அது முதல் கருப்பசாமி ராமரின்   வளர்ப்புக்  குழந்தையானார் என்பது கிராமியக் கதை.  முதலில் அவர் கிராம மக்களினால் ஆராதிக்கப்பட்டதினால் கிராம தேவதையாக இருந்தார். காலம் மாறிய பின்னர் அவரையும் ஒரு கடவுளாக ஏற்றுக் கொண்டு உள்ளதினால்தான் தமிழ்நாட்டில் கருப்பஸ்வாமிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவருக்கு மதுரை அழகர் ஆலயத்தில் தனி மரியாதையுடன் கூடிய சன்னதியே உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் எனும் ஊரில் அவருக்கு கோவில் உள்ளது. அதில் அம்பாள் செல்லாண்டியம்மன் அன்னைக்கும் சன்னதி உள்ளது.  மேலும் கருப்பசாமியை சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஆப்ரிக்கா  போன்ற நாடுகளில் உள்ளவர்கள் ஆகம வழியிலான தெய்வமாகவே ஏற்றுக் கொண்டு நகரங்களில் ஆலயங்கள் அமைத்து வழிபடுகிறார்கள். அங்கெல்லாம் அவர் கிராம தேவதையாகக் கருதப்படுவது இல்லை.  இன்னொரு கதையின்படி கருப்பசாமி கருப்பாக இருப்பதினால் சில காரணங்களினால் அவர் பிராமணர் அல்லாத யாதவர் குலத்தில் பிறந்து இருந்த கிருஷ்ணரின் அவதாரம் எனவும், மக்களை துன்பங்களில் இருந்து காப்பாற்ற பூமியில் கிருஷ்ணரே கருப்பசாமியின் உருவத்தில் அவதரித்து உள்ளார் என்கிறார்கள்.
 
ஐயனார் யார்?  அவர் சிவன் மற்றும் மோகினி அவதாரத்தில் இருந்த  விஷ்ணு என்ற இருவர் மூலமும்  படைக்கப்பட்டவர் என்று  தமிழ்நாட்டில் கடலூரை சேர்ந்த  தென்னம்பாக்கம் கிராமத்து முத்தையனார் கோவில்  கதை உள்ளது. அங்குள்ள ஆலயத்தில் உள்ள அய்யனாருக்கு காவல் வீரபத்திரர்.  ஐயனாரை அங்கு அழகன் முத்தையனார் என்ற பெயரில் அழைக்கிறார்கள். அதே ஐயனார் கடலூர் மாவட்டத்திலேயே உள்ள இடைச்செருவாய் எனும் சிறிய கிராமத்தில் மஞ்சபத்திரய்யனார் எனும் பெயரில் கிராம காவல் தெய்வமாக இருக்கிறார்.  அது போலவே பாண்டிச்சேரி மானிலத்தில் உள்ள  புதுப்பெட்டில் உள்ள மஞ்சனீச்வரர் எனும் ஆலயத்தில் பூரணா, புஷ்களா  எனும் இரண்டு அம்பாள் சகிதமாக ஐயனார் காட்சி தருகிறார். ஐயனாரே பின்னர் ஐயப்பனாக  அவதரித்தார் என்பதும் இன்னொரு புராணக் கதை.

அடுத்த கிராம தெய்வம்  வீரபத்திரர்.   அக்னி வீரபத்திரருக்கு மதுரை சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற கிராமத்தின் அருகில் உள்ள சூரக்குடி என்ற சிறு ஊரில் பிரபலமான ஆலயம் உள்ளது.   அங்கு உள்ள ஒரு அரச மரத்தடியில்தான் வீரபத்திரர் வந்து தங்கி இருந்து தவம் இருந்து தோஷத்தைக் களைந்து கொண்டாராம். அது மட்டும் அல்ல அந்த நேரத்தில் அவர் அந்த கிராமத்தின் தேவதையாக இருந்து ஊரைக் காத்து வந்தாராம். அவரையும் யார் என்று தெரியாமல் வீரபத்திரர் என்ற பெயரில் கிராம தேவதையாக வழிபட்டு வந்தார்கள். ஆனால் அவர் சிவபெருமானால் படைக்கப்பட்டவர் என்பது பின்னர் தெரிந்தபோது அவருக்கும் ஆகம முறையிலான பூஜைகளை செய்யத் துவங்கினார்கள். கும்பகோணத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்திலும் அவருக்கு பெரிய ஆலயம்  உள்ளது. அது முன்னர் கிராம தேவதை ஆலயமாக இருந்ததாம்.
 
 மாரியம்மனை எடுத்துக் கொண்டால் அவர் பாம்புப் புற்றில் இருந்து வெளியானவர், மழையைப் பொழிய வைப்பவர், நோய்களை தீர்ப்பவர்  என்று கருதி கிராம மக்கள் வணங்கினார்கள். காலப் போக்கில்தான் அவரும் பார்வதியின் அவதாரம் என ஏற்கப்பட்டு நகர ஆலயங்களில் அமர்த்தப்பட்டு ஆகம முறையிலான பூஜை புனஸ்காரங்கள் அவருக்கும் செய்யப்பட்டன. வேறு பல அம்மன் ஆலயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.  தமிழ்நாட்டில்  சென்னை புரசைவாக்கம் அருகே குயப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஆதி மொட்டையம்மன் கோவில் முன்னர் கிராம ஆலயமாக இருந்ததுதான். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள முண்டகண்ணி அம்மன், கோல விழி அம்மன்,  தம்பு செட்டி சாலையில் உள்ள காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூரில் உள்ள சிவன் ஆலயம், என அனைத்துமே முன்னர் கிராம ஆலயங்களாக இருந்தவைதான்.

 முன்னர் ஒரு காலத்தில் வனப்பகுதிகளில் இருந்த சமயபுரம் மாரி அம்மன்,  புங்கைனல்லூர் மாரி அம்மன், ஏன் வனப்பகுதில்  இருந்த திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம், கும்பகோணத்தில் சித்தாடி எனும் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன்   என பல்வேறு ஆலயங்கள் அனைத்துமே ஒரு காலத்தில் கிராம ஆலயங்களாக இருந்தவைதான்.  இது போல பலப் பல ஆலயங்கள் முன்னர் கிராம ஆலயங்களாகவே இருந்துள்ளன  பொதுவாகவே வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு எங்கெல்லாம் ஆலயங்கள் எழுந்தனவோ அவை  அனைத்துமே கிராம ஆலயங்களாக  இருந்தவை.

பேச முடியாதவரை பேச வைக்க அருள் புரியும் என கிராம மக்கள் வணங்கித் துதிக்கும் பேச்சி அம்மன் யார் ? அவர் சரஸ்வதியின் அவதாரம். இசக்கி அம்மன் யார்? அவர் பார்வதியின் அவதாரம்.

கிராம தேவதை என கூறப்பட்ட முனீஸ்வரரை எடுத்துக் கொள்ளுங்கள். சிவபெருமானின் நெற்றியில் இருந்து வெளிப்படவராக கருதப்படும் அவர் சிவமுனி, மகா முனி, ஜடாமுனி, நாதமுனி, தரமுனி, வாழும் முனி மற்றும் தரமாமுனி என ஏழு அவதாரங்களை எடுத்தாராம். இலங்கையில் ஊறுகொடவத்தை என்ற ஊரில் கிராம ஆலயமாக இருந்த முனீஸ்வரர் வழிபட்டுத் தலம் இன்று மகா பத்ரகாளி ஆலயமாக மாறி உள்ளது. இப்படியாகத்தான் பல கிராம தேவதைகளும் தெய்வங்களுடன் இணைத்து பேசப்பட்டார்கள்.

ஒரு வருத்தமான உண்மை என்ன என்றால் முன்னர் ஒரு காலத்தில் கிராமங்களில் இருந்த ஆலயங்கள் பிராமணர்கள் அல்லாதோர் ஆலயம் என்றும், கிராமங்களுக்கு வெளியில் இருந்தவை பிராமணர்கள் ஆலயங்கள் எனவும் ஒரு காலத்தில் பார்க்கப்பட்டதினால் கிராம ஆலயங்கள் தெய்வீக ஆலயங்களாக கருதப்படவில்லை. அது மட்டும் அல்ல கிராம ஆலயங்களில் மிருக பலிகள் தரப்பட்டன, வேத முறையிலான மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்படவில்லை, மற்றும் அவற்றில் பூஜைகளை செய்ய பண்டிதர்களும் இருந்திருக்கவில்லை. இவை அனைத்துமே கிராம ஆலயங்கள் தெய்வீக ஆலயங்களாக ஏற்கப்படாமல் இருந்ததின் காரணம். ஆனால் காலப்போக்கில் அனைத்துமே மாறிவிட்டன. இன்று முன்னர் கிராம ஆலயங்களாக இருந்த பல ஆலயங்கள் ஆகம முறையிலான வழிபாட்டு முறைகளை ஏற்று பிரபலமாக ஆகிவிட்டன. ஆகம விதிப்படி தெய்வங்களின் சிலைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

காலம் மாறிக் கொண்டே இருக்க, ஆகம விதி ஆலயங்கள் தோன்றத் துவங்கிய காலத்தில் கிராம தேவதைகள் மற்றும் நகர தெய்வங்கள் என்ற பேதங்கள் மறையத் துவங்கி தெய்வங்கள் சில பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கப்பட்டன. தெய்வங்களை கிராம தெய்வங்கள், குல தெய்வங்கள், இன தெய்வங்கள் என பிரித்துக் கூறலானார்கள் ?
 .........தொடரும்