Thursday, October 31, 2013

Temples in Malwa Region - 15

சாந்திப்பிரியா                                                        -  15 -


...........ஹரிசித்தி   ஆலயம் 

எனக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என நான் நினைத்திருந்த சிலரே எதிராக சிலர் சதி செய்து கொண்டு என் மீது வீணான பழிகளை சுமத்திக் கொண்டு  வாழ்க்கையில் நான் தோற்கடிக்கப்பட வேண்டும், அவமானப்பட வேண்டும் என்றும் நான் வாழ்க்கையில் அழிந்து   விட வேண்டும் எனவும்  ஆசைப்பட்டுக் கொண்டு, அதற்கான காலத்தை எதிர்பார்த்தபடி இருந்தார்கள். என்னை பல விஷயங்களிலும் சிலர் ஏமாற்றிக் கொண்டு இருப்பதையும் (அனைத்திலும் சில உறவினர்களையும் சேர்த்தே என்றாலும் அவர்களைப் பற்றிக் கூற முடியாத சூழ்நிலை)  கூறி விட்டு இனியாவது என்னை அவர்களுடன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறினார் (அவர்கள் யார் என்பதை கோடிட்டுக் காட்டினார்).

என் மனைவியின் நகைகள் திருட்டுப் போனதின் காரணம் அவளது எதோ ஒரு நகையில் தோஷம் உள்ள வைரம் இருந்ததே காரணம் என்று கூறி ஆனால் அது எந்த நகை என்பதை தன்னால் கூற இயலாது என்றும் கூறிய பின்னர் எங்களுடைய  அனைத்துப் பிரச்சனைகளுக்குமான காரணமான இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அவரே கூறினார்.  அவர் கூறியதைக் கேட்டு நாங்கள் இன்னும் அதிர்ந்து போனோம்.

என் மனைவி ஆசைப்பட்டாள் என்பதினால் எங்கள் வீட்டில் திருட்டுப் போவதற்கு சில மாதங்களுக்கு முன்னால்தான் ஒரு ஆன்மீக வியாபாரியிடம் ஏமார்ந்து போய் வைரத் தோட்டை பிரித்து இன்னொரு வைரம் சேர்த்து பெரியதாக்கிக் கொடுக்குமாறு  கொடுத்தோம். ஆனால் அவரோ பணத்தையும் வாங்கிக் கொண்டு ஒரு தோஷ வைரக் கல்லை தோட்டில் வைத்துக் கட்டி கொடுத்து எங்களை ஏமாற்றி விட்டார். அந்த புதிய தோட்டை அணிந்து கொண்ட பிறகே  எங்களுக்கு செல்வம்  இழப்பு நேரிட்டது மட்டும் அல்ல வேறு சில புதிய தொல்லைகளும் எனக்கு தேவையே இல்லாமல் வந்து சேர்ந்தவண்ணம் இருந்தது.  அலுவலகத்தில் திடீர் என காரணமே இல்லாமல் எனக்கே சம்மந்தம் இல்லாத விஷயங்களிலும் என்னை சில விஷமிகள் வேண்டும் என்றே இழுத்து விட்டு  நான் சற்றுமே எதிர்பாராத விதத்தில் அலுவலகத்திலும் பல்வேறு நெருக்கடிகளை திடீர் எனக் கொடுக்கத் துவங்கினார்கள். சிலர் ஒன்று சேர்ந்து எனக்குக்  கீழே இருந்த ஒருவன் என்னைத் தாண்டி பதவி உயர்வு பெற வேண்டும்  என்பதற்காகவும், என்னுடைய அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் எனவும் சதி செய்தார்கள். நான் அந்தப் பதவியில் இருந்தது பல விதங்களிலும் அவர்களை பாதித்தது.

நடு இரவிலும் என்னைத் தூங்க விடாமல் குடிகாரர்கள் மூலம் பல மிரட்டல் தொலைபேசிகள் வரத் துவங்கின. முதலில் அவை அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்ட நான் நாளடைவில் அவை அதிகரிப்பதைக் கண்டு அதனால் என் மனைவிக்கும் ஆபத்து ஏற்படலாம்  என்பதை உணர்ந்தேன். அப்படி ஏற்பட்ட திடீர்  சூழ்நிலை என்னை நிலை குலைய வைத்தது. நான் சற்றுமே சம்மந்தப்படாத விஷயங்களில் கூட என்னை வேண்டும் என்றே போலியாக சிக்க வைத்து என் மனோதிடத்தை குலைக்க முயன்றார்கள். நான் ஒருவனை கொலை செய்ய முயன்றதாக பொய் குற்றம் சாட்டி  காவல் நிலையத்தில் புகார் செய்து என்னை ஜெயிலில் தள்ள முயற்சி  செய்தார்கள். அந்த சூழ்நிலை  என் மனைவியின் உடல் நிலையை பெரிதும் பாதித்தது.  அவை அனைத்துமே ஜாதி சங்கம் மற்றும் தொழில் சங்கங்களுடன் சம்மந்தப்பட்டது என்பதினால் அன்று இருந்த அரசியல் சூழ்நிலைக் காரணமாக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்த என் மேலதிகாரிகள் எனக்கு அலுவலகத்தில் தக்க ஆதரவு கொடுக்காமல்  இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தார்கள்.

நல்லவேளையாக என் மீது சுமத்தப்பட்டு இருந்த பொய்யான குற்றச் சாட்டுக்களை விசாரிக்க மத்திய நிதி அமைச்சகம் அமைத்த விசாரணைக் குழு, என்மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் ஜோடிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் என கண்டறிந்து அறிக்கை தந்தது.  என் மீது பொய்யான புகாரை தந்தவன் மீதே இன்னும் அதிக நடவடிக்கை எடுத்தார்கள்.  அதற்குள்  என் மன உறுதியே ஆட்டம் கண்டுவிட்டது. அத்தனை மன உளைச்சல். அந்த நேரத்தில் பல மாதங்கள் நான் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். அன்று எனக்கு உதவி செய்யவும் ஆறுதல் கூறி என்னை தைரியப்படுத்தவும் இருந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே.  ஆனால் அந்த வேளையில் அனாதைப் போல தனியே நின்றிருந்தபோது ஆறுதலுக்காக நான் மிகவும் நம்பி இருந்த சில பெரிய மனிதர்கள் என்னுடன்  பேசுவதைக் கூட தவிர்த்து ஓடி ஒளிந்து   கொண்டது மீண்டும்  பெரிய இடியாகவே இருந்தது !!! அப்போதுதான் வாழ்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.  நம்மிடம்  கை நிறைய பணம் இருந்தால் மட்டுமே  நம்மையும்  மதிப்பார்கள் என்பதையும் கண்கூடாக புரிந்து கொண்டேன். என் மனதில் இப்போது இந்த எண்ணம் ஓடுகிறது 'இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான், அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்' என்ற தத்துவப் பாடலின் அர்த்தத்தைப் போலவே  செல்வம் வரும், போகும், ஆனால் பணத்தினால் பெறும்  அல்ப சுகங்கள் நிலையானது அல்ல, மனித நேயமே காலத்துக்கும் நினைக்கப்படும் என்பதே உண்மை .

அது மட்டுமா ?  நாங்கள் அமெரிக்கா  செல்வதற்காக விசா வாங்க மும்பைக்கு சென்றபோது ரயிலில் எங்கள் பெட்டியில் எடுத்துச் சென்ற 35000 ரூபாய் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்க எடுத்துச் சென்று இருந்த வேறு பல பரிசுப் பொருட்களும் திருட்டுப் போய்  விட்டன. மும்பை சென்றப் பின் ஹோட்டலில் இறங்கி பையை திறந்தபோது அதில்  ஒரு பைசா கூட இல்லை.  காபி சாப்பிடக் கூட பணம் இல்லை. அப்படியே அதிர்ந்து போனோம். நாங்கள் சென்ற நாளும் ஞாயிற்றுக் கிழமை. யாரை எந்த அலுவலகத்தில் அணுகுவது? ஹோட்டலிலேயே  மனைவியின் கழுத்தில் இருந்த ஏதாவது ஒரு நகையை விற்று பணத்தைப் பெற்றுக் கொண்டு உடனடியாக தேவாஸ் திரும்பிச் சென்று விடலாம் என்ற அளவில் எண்ண  வேண்டியதாயிற்று.

ஆனால் ஹோட்டலில் இருந்தே உடனடியாக அமெரிக்காவில் இருந்த என் மகனுடன் தொடர்ப்பு கொண்டு நடந்ததை விவரிக்க அவன் எங்களை சமாதானப்படுத்தி கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறி,  என்னிடம் அவன் ஒருமுறை அவன் கொடுத்து இருந்த வங்கிக் கார்டை பயன்படுத்தி எத்தனைப் பணம் வேண்டுமோ தயங்காமல் அதை எடுத்துக் கொள்ளுமாறு கூறினான்.  அது அவனுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம் பெறும்  கார்ட் ஆகும். அப்போதுதான் எங்களுக்கு நினைவுக்கு வந்தது அவன் கொடுத்து இருந்த ஒரு வங்கிக் கார்ட்! அது என்னுடைய பர்ஸ்சில் பல வருடங்களாக பயன்படுத்தாமல் அப்படியே இருந்துள்ளது. அதுவரை நான் எந்த ஒரு வங்கியின் கார்டையும்  பயன்படுத்தியதே இல்லை என்பதினால் அதை எப்படி பயன்படுத்துவது என்பது கூடத் தெரியவில்லை. உடனடியாக அருகில் இருந்த வங்கிக்குச் சென்று அங்கிருந்த காவலாளியின் உதவியுடன் ATMமில் இருந்து பணத்தை எடுத்தோம். அதன் பின்னரே நிம்மதி ஆயிற்று. அவன்தான் எங்களை அன்று கடவுள் போல எங்களைக் காப்பாற்றினான்.

சில வருடங்களாக இந்த மாதிரி தொடர்ந்து எங்களுக்கு நடைபெற்றுக் கொண்டு வந்திருந்த பல்வேறு  துயரமான நிலைமைகளுக்கெல்லாம் மூலமாக  இருந்த சில முக்கியமான காரணங்களைக் கூறிய திரு வியாஸ்  நாங்கள் உடனடியாக செய்ய வேண்டிய  மேலும் சில அறிவுரைகளைக் கூறி எங்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வந்து கொண்டிருந்த தொல்லைகளை ஒழிக்க ஹர்சித்தி ஆலயத்துக்கு சென்று அங்குள்ள கார்கோடனின் சன்னதியில் ஒரு பூஜை செய்யுமாறு கூறினார். நாங்களும் நாட்களைக் கடத்தாமல் உடனடியாக அவரை  முற்றிலும்  நம்பி அவர் மூலமே அந்த பூஜையை செய்து முடித்தோம். அது முதல் எங்களுக்கு இருந்த மறைமுக தொல்லைகள் மெல்ல மெல்ல மறையத் துவங்கியதை நாங்கள் உணரத் துவங்கினோம்.   நாங்கள் விரைவில் அழிந்து விடுவோம் என இலவு காத்த கிளிபோல ஆவலுடன் காத்திருந்த சிலருடைய ஆசையில் மண் விழுந்தது என்பது ஹரிசித்தி ஆலய கார்கோடனின் பூஜையின் மகிமையே என்றே நினைக்கிறோம்.

நாங்கள் ஹரிசித்தி ஆலயத்தில் நாக பூஜை செய்து முடித்தப் பின்னர் சில நாட்களிலேயே அடுத்தடுத்து விரைவாக சில வியக்கத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கியது. நான் சிக்கலில் இருந்தபோது எனக்கு ஆதரவு கொடுக்கத் தவறிய மேலதிகாரி  பல விதமான பிரச்சனைகளில் மூழ்கி உயர் பதவியைப் பெறாமலேயே பெரும் துக்கத்துடன் ஒய்வு பெற்றார். அலுவலகத்தில் புதிய தலைமை அதிகாரியும் (General Manager) வந்தார். அவர் வந்ததும் ஒரு சில வாரங்களிலேயே எனக்குத் தனித் தன்மை வாய்ந்த முக்கியமான பெரும் அதிகாரப் பொறுப்புடன் கூடிய  பதவி தரப்பட்டது. என்னைத் தொல்லைப்படுத்தி வந்தவர்கள் என்னிடமே வந்து தஞ்சம் அடையும் வகையில் என் பதவியின் அதிகாரம் அமைந்தது.  அலுவலகத்தில் தலைமை அதிகாரியின் மிக முக்கியமான அதிகாரியாக  நான்  ஆயினேன்.  அது முதல் நான் ஒய்வு பெறும் வரை அலுவலகத்தைப் பொருத்தவரை  என்னுடைய அதிகார வரம்பு ஏறு முகமாயிற்று என்றாலும்  முட்டாள்தனத்தினால் எனக்கு  கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திய தவறியதினால் மேலும் கிடைக்க இருந்த உயர் பதவியை அடைய முடியாத முட்டுக்கட்டையில் அகப்பட்டுக் கொண்டு வேலையில் இருந்து ஒய்வு  பெற்றேன் என்பது வாழ்க்கையில் ஒரு பெரிய அடியாகவே மனதை நெருடியது. எத்தனை முயன்றும் நடந்தேறிய துயர நிகழ்சிகள் என்  மனதில் இருந்து மறையவில்லை. இதயத்தில் பட்ட அடியின் வலி அதிகமாகவே உள்ளது. காலம் அதை மாற்றும் என்றே நினைக்கிறேன். தொடர்ந்து அவமானங்களை மட்டுமே சந்தித்து வந்தவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும் என்பது உண்மை.

ஹரிசித்தி ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வந்த பின்னர் நாங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுத்தோம். அதனால் வீட்டைப் பொருத்தவரை எங்களுடைய வாழ்க்கை அமைதியுடன் ஒரே நிலையாக செல்லத் துவங்கியது. அவை  அனைத்துமே நாங்கள் பகலாமுகி மற்றும் ஹரிசித்தி ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வந்த பின்னரே நடந்தது  என்பதினால் அவற்றை மனதில் கொண்டிருந்த நாங்கள் இந்த முறை உஜ்ஜயினிக்கு சென்றபோது திரு வியாஸ் அவர்களை மீண்டும் சந்திக்க ஆசைப்பட்டோம். ஆனால் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் மரணம் அடைந்து விட்டார் என்ற தகவலைக் கேட்டு மனம் வருந்தினோம். ஆனால்  அன்று அவர் கூறிய பல விஷயங்கள் இன்று உண்மையாகி உள்ளதைக் கண்டு இன்றும் வியக்கிறோம்.

ஹர்சித்தி மாதா ஆலயத்தில் உள்ள மஹாமாயா எனும் தேவியின் சன்னதியும் சக்தி வாய்ந்தது. தரை மட்டத்துக்கு கீழே ஒரு சிறு அறையில் அமைக்கப்பட்டு உள்ள அவளது சன்னதியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. பூசாரி மட்டுமே செல்வார். ஆனால் அந்த தேவியை அந்த சன்னதியை சுற்றி மேலே எழுப்பட்டு உள்ள சுவற்றின் துவாரம் வழியேதான் தரிசிக்க முடியும். மஹாமாயா துர்கையின் அம்சம். அவளை அங்கு வணங்கித் துதிப்பதின் மூலம் திருஷ்டி தோஷங்கள் விலகுமாம். அந்த சன்னதியில் இடைவிடாது எரியும் அகண்ட ஜ்யோதியும் வைக்கப்பட்டு உள்ளது. அதன் எதிரில் வினாயகர் சன்னதியும் உள்ளது.

ஆலய சன்னதியின் எதிரில்   உள்ள ஆயிரத்து எட்டு 
ஜ்யோதிகளை  ஏற்றும் ஸ்தம்பம் (இரவு காட்சி)

ஆலய சன்னதியின் எதிரில்   உள்ள ஆயிரத்து எட்டு 
ஜ்யோதிகளை  ஏற்றும் ஸ்தம்பம் (பகல் காட்சி) 
 
1008 விளக்குடன்  ஸ்தம்பம் (இரவு காட்சி) மற்றும் அதன் 
அருகில் உள்ள தூணில் ஒரு காட்சி 

பாதாளத்தில் உள்ள மஹாமாயா 
சன்னதியில் மஹாமாயா
 

பாதாளத்தில் உள்ள மஹாமாயா சன்னதியில் 
மஹாமாயாவின் அருகில் காணப்படுவது  அகண்ட தீபம் 

 
 கார்கோடன் சன்னதி நுழை வாயில் 

 
மேலே உள்ள இரண்டு படங்களும் கார்கோடன் சன்னதியில் 
லிங்க வடிவில் காணப்படும் கார்கோடன்  
மற்றும் கீழே உள்ள படங்கள் சன்னதியில் 
காணப்படும் மற்ற நாக உருவங்கள்


கீழே உள்ளவை  ஆலயத்தின் பிற 
சன்னதிகளில் உள்ள சிற்பங்கள்வினாயகர் சன்னதியில் வினாயகர் 
..............தொடரும் 

Wednesday, October 30, 2013

Temples in Malwa Region - 14

சாந்திப்பிரியா                                                        -  14 -


ஹரிசித்தி   ஆலயம்

அடுத்து அங்கிருந்துக் கிளம்பி ஒய்வு எடுத்தப் பின் மாலையில் நாங்கள் சென்றது ஹரிசித்தி எனும் ஆலயம். இதுவும் தாந்த்ரீக சித்திகளைத் தரும், நம்மை சுற்றி உள்ள தீய சக்திகளை விரட்டி அடிக்கும் ஆலயம். பகலாமுகி ஆலயம் போலவே மிகவும் சக்தி வாய்ந்தது. மிகப் புராதமானது. அரசன் விக்ரமாதித்தியனால் கட்டப்பட்டது. மினால்பூர் என்று சொல்லப்படும் மியானி என்னும் இடத்தில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவால் கட்டப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்த ஹர்சித்தி மாதா கோவிலுக்குச் சென்று தேவியின் ஆசியைப் பெற்று வந்து உஜ்ஜயினியில் ஸ்வயம்புவாகத் தோன்றிய ஹரிசித்தி தேவிக்கு விக்ரமாதித்தியன் ஆலயம் எழுப்பினார் என்று சொல்கிறார்கள். மியானி என்னும் இடம் குஜராத்தில் போர்பந்தரிலிருந்து முப்பது கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரை நகரம் துவாரகாவிற்கு போகும் வழியில் உள்ளது. தனக்கு பிரச்சனைகள் ஏற்படும்போதெல்லாம் விக்ரமாதித்தியன் இங்கும் பகலாமுகி ஆலயத்துக்கும் சென்று பூஜைகளை செய்வாராம்.

சக்தி பீடம் எனப்படும் ஹர்சித்தி ஆலயம் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் மட்டும் அல்ல இந்தோர், ஜபல்பூர் போன்ற இடங்களிலும், வெளி மானிலங்களான கோவா, குஜராத்கில் போர்பந்தர், த்வாரகா, வாத்வான், ஔரங்காபாத், படோட், வர்வாலா, ஹரிபாரா மற்றும் கட்ச் போன்ற இடங்களிலும் சிறிதும் பெரியதுமான ஹர்சித்தி தேவியின் ஆலயங்கள் உள்ளன. தக்க்ஷ யாகத்தில் மரணம் அடைந்த பார்வதியை சிவபெருமான் தூக்கிக் கொண்டு சென்றபோது அவளுடைய முழங்கை விழுந்த இடம் உஜ்ஜயினி என்று நம்பப்படுவதினால் இங்குள்ள ஹரிசித்தி ஆலயம் சக்தி பீடமாகும் என்று கூறுகிறார்கள். ஹர்சித்தி தேவி பகலில் இங்கும், இரவில் குஜராத்திலும் அருள்பாலிப்பதாகச் சொல்லப்படுகிறது.

பூமிக்கு மேலாக அமைக்கப்பட்டு உள்ள மண்டப சன்னதியில் மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதிக்கு நடுவே தேவி ஹர்சித்தி  வீற்றிருக்கிறாள். ஆனால் அவர்களது முழு உருவிலான சிலைகள் வைக்கப்படாமல் பிண்டி எனப்படும் கழுத்து பாகம் வரையிலான ரூபத்தில் காட்சி தரும் தேவிக்கு சிவந்த பட்டுத்துணி போர்த்தி, செந்தூரம் பூசி, வெள்ளியினால் ஆன கண் மலர்கள் பதித்து, மூக்குத்தி, நெற்றித் திலகம், காதணிகள் அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். சிவந்த உதடுகளோடு அத்தனை அலங்காரங்களுடன் அற்புதமாக காட்சி கொடுக்கிறாள். சன்னதியில் தேவியின் இடப்புறம் பைரவர் சிலையும் வலப்புறம் வினாயகரது சிலையும் பதிக்கப்பட்டுள்ளன.

இந்த சன்னதிக்கு முன்னால் உள்ள மண்டபப் பகுதியின் உள் கூரை மீது பல விதமான யந்திரங்களைப் போன்ற உருவங்கள் வரையப்பட்டு உள்ளன. ஹர்சித்தி மாதா கோவிலில் சக்தியின் ஸ்ரீ யந்திரம் ஒன்றும் பதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதை மந்திர வலிமைக் கொண்ட கூடம் என்றும் அங்கு நின்று நாம் தேவியை வேண்டிக் கொண்டு பூஜை செய்யும்போது நமக்கும் தேவி மனவலிமையை தருகிறாள், நம்மை தொடரும் தீய சக்திகளை அழிக்கிறாள் என்றும் கூறுகிறார்கள். சன்னதியின் பின்புறத்தில் காளி மற்றும் அன்னபூரணி தேவியின் சன்னதிகள் உள்ளன. சன்னதியின் முன்புறத்தில் ஒரு கண்ணாடிக் குடுவையில் அகண்ட ஜோதி ஒன்று பல காலமாக அணையாமல் ஏற்றி வைக்கப்பட்டு உள்ளது.

ஹரிசித்தி தேவியின் இடதுபுறத்தில் தனி சன்னதியில் கார்கோடன் எனும் நாக தேவர் கார்கோடக மகாதேவ் எனும் பெயரில்  பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இங்கு  லிங்க வடிவில் உள்ளார். சிவபெருமானின் கணங்களில் ஒருவரான இவருக்கு இங்கு நாக சர்ப்ப யாகம் செய்தால் நாக தோஷமும் பிற தோஷங்களும் உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது.  உலகில் உள்ள 84 கார்கோடக மகாதேவர் ஆலயங்களில் இதுவே முதலாமானது, முக்கியமானது  என்கிறார்கள். இந்த ஆலயத்துக்கு வந்து ஹரிசித்தியை வேண்டிக் கொண்டப் பின் கார்கோடக மகாதேவருக்கும்  பூஜைகளை செய்தால் பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள். இந்த சன்னதி மிக்க சக்தி வாய்ந்த சன்னதியாகும்.  இங்கு உள்ள  கார்கோடன் உலகில் உள்ள அனைத்து நாக தேவிகளையும், நாக தேவர்களையும் தன்னுடன் அடிமையாக வைத்துக் கொண்டு இருக்கிறாராம். கார்கோடனை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற அளவிலான சக்தியைக் கொண்டு இருக்கிறாராம்.

இந்த ஆலயத்தின் மகிமையை பலரும் பல விதமாகக் கூறுகிறார்கள். அதை உண்மையிலேயே அனுபவித்தவர்கள் நாங்கள். இந்த ஆலய மேன்மைப் பற்றி எழுதும்போது எங்கள் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த முக்கியமான ஒரு சம்பவத்தையும் அதற்குக் காரணமாக இருந்த எங்கள் வாழ்கையின் ஒரு சிறு பகுதியையும் கூறாமல் இருக்க முடியாது.அதனால்தான் இந்த ஆலயத்துக்கு கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்பதற்காக நாங்கள் இம்முறை உஜ்ஜயினிக்கு சென்றோம். அது ஒரு அற்புதமான ஆனந்தமான அனுபவம். ஆகவே நாங்கள் ஏன் இந்த ஆலயத்தை உயர்வாக கருதினோம் என்பதை விளக்கும் என் வாழ்வில் நடைபெற்ற சிறு பகுதியை படித்தால்  இந்த  ஆலய மகிமையை புரிந்து கொள்ள முடியும்.

சில வருடங்களுக்கு முன்னால் நான்  தேவாஸ் நகரில் பணி புரிந்து கொண்டு இருந்தபோது பல விதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தேன். அவற்றை எப்படியோ சமாளித்துக் கொண்டு வந்த நான்  பணியில் இருந்து ஒய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் இன்னொரு அலுவலகத்தில் கிடைக்க இருந்த நல்ல வாய்ப்பை  சில காரணங்களினால் வேண்டாம் என ஒதுக்கியதினால் ஏற்பட்ட பின் விளைவுகளைக் கண்டு நான் எடுத்த முடிவுகள் எத்தனை மடத்தனமானது என்பதை பல காலம் பொறுத்து புரிந்து கொள்ள முடிந்தது. எனக்குக் கிடைக்க இருந்த உயர் பதவியை தவறான அறிவுறைகளினால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதினால்  வாழ்க்கையில் பின்னர் பெரிய சறுக்கலை சந்திக்க வேண்டியதாயிற்று. அந்த முடிவினால் என்னை விட கீழ் நிலையில் இருந்தவர்கள் கூட என்னைத் தாண்டி உயரத் துவங்கினார்கள்.  நான் அப்படியே இருந்தது மட்டும் இல்லாமல் மேலும் பல அவமானங்களை சந்திக்க வேண்டியதாயிற்று. துரதிஷ்டவசமாக சிலர் செய்த சதியினால் அலுவலகத்திலும் எனக்குக் கிடைக்க இருந்த உயர் பதவி என் கையை விட்டுப் போயிற்று. நான் அலுவலகத்தில் பட்ட அவமானங்கள் அது மட்டுமா ?

பலமான காவலுடன் இருந்த குடியிருப்பில் இருந்த எங்கள் வீட்டில், முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக எந்தவித அசம்பாவிதமும் நடந்திராத அந்த குடி இருப்பில், அதுவரை கேள்விப்படாத ஒரு நிகழ்ச்சியாக பெரும் திருட்டு நடைபெற்றது. அந்த திருட்டும் முதன் முதலாக எங்கள் வீட்டில்தான் நடைபெற்றது என்பது அந்த குடியிருப்பின் முப்பத்தி ஐந்து  ஆண்டுகளின் சரித்திரமாக அமைந்தது.

 அன்றுதான் எனக்கும் சம்பளம் வந்திருந்தது. ஏற்கனவே வீட்டில் அலமாரியில் பணமும் நிறையவே வைத்து இருந்தோம். அத்தனைப் பணத்துடன் எங்கள் வீட்டில் இருந்த அனைத்து நகைகளும் கொள்ளை போயிற்று. ஆடிப் போய் விட்ட நாங்கள் எப்படியோ சமாளித்துக் கொண்டோம். அந்த வேளையில் ஆறுதலை மட்டுமே எதிர்ப்பார்த்து நின்ற எனக்கு  நான் மலைப்  போல நம்பி இருந்தவர்கள் ஆறுதல் கூடக் கூறாமல், என்னுடன் பேசுவதைக் கூட தவிர்த்து அது பற்றி ஒரு வார்த்தைக் கூட கூறாமல் ஒன்றுமே தெரியாதது போல ஒதுங்கிக் கொண்டது பெரிய இடியாகவே இருந்தது !!!நாங்களும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டபடி பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தோம்.

மேலும் மேலும் சில துயர நிகழ்சிகள் எங்களை தொடர்ந்தபோது எங்களை உஜ்ஜயினி ஹரிசித்தி ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு பிரபல ஜோசியரான திரு சுரேந்திர வியாஸ் என்பவரிடம் ஒரு நண்பர் அழைத்துக் கொண்டு சென்றார். அவர் உஜ்ஜயினியில் பிரபலமான ஜோதிடர். ஹரிசித்தி ஆலயத்தில் பரிகார பூஜைகளை செய்து கொடுப்பவர். தேவி உபாசகர். அனைவருக்கும் ஜோதிடம் பார்க்க மாட்டார். பெரும் பெயர் பெற்றவர். அவர் ஜாதகத்தைப் பார்த்து பலன் கூறுவதில்லை. ஒருவரது கையைப் பிடித்துக் கொண்டாலே அவர்களுடைய பிரச்சனைகளை அறிந்திடுவார். அத்தனை ஆன்மீக சக்தி கொண்டவர் அவர். அவரை நாங்கள் சந்தித்தபோது அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு கணம் தியானத்தில் ஆழ்ந்தப் பின் எங்களுடைய குடும்பத்தைப் பற்றி நான் கூறாமலேயே குடும்ப சம்மந்தப்பட்ட சில முக்கியமான விஷயங்களை தெளிவாகக் கூறத் துவங்கினார். அவை அதிர்ச்சியாக இருந்தன.


ஹரிசித்தி தேவியின் சன்னதியில் மூன்று தேவிகள் 


ஆலய முகப்பில் உள்ள வாசகக் கல்வெட்டு
.........தொடரும்

Tuesday, October 29, 2013

Temples in Malwa Region - 13

சாந்திப்பிரியா                                                        -  13 -


சின்ன சின்ன ஆனால் புராணப் பெருமைகளைக் கொண்ட ஆலயங்கள் 

'சார் தாம்'  ஆலயம்

ஹிந்துக்களாகப் பிறந்தவர்கள் தத்தம் வாழ்க்கையில் ஒருமுறையாவது துவாரகா, பத்ரிநாத், ஜகன்னாத் பூரி மற்றும் ராமேஸ்வரம் என்கின்ற நான்கு முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை தரிசனம் செய்துவிட்டு வர வேண்டும் என்று ஆதி சங்கரர் அறிவுறுத்தி உள்ளதான கதை உண்டு.  அதற்குக் காரணம் நான்கு திசைகளில், வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ள பத்ரிநாத் பெருமான் (விஷ்ணு),  பூரி  ஜகன்னாத் (விஷ்ணு அவதாரம்), த்வாரகா (கிருஷ்ணர் பலராமன் ) மற்றும் சிவபெருமானின் ராமேஸ்வரம் உள்ள   அந்த நான்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை அந்த நான்கு இடங்களுக்கும்  சென்று தரிசனம் செய்தால் வாழ்க்கையில் பெற்று இருந்த அனைத்து பாபங்களும் விலகும், மறு பிறப்பு இல்லாத நிலையை அடையலாம் என்று நம்புகிறார்கள். ஆனால் அனைவராலும் அங்கெல்லாம் சென்றுவிட்டு வர முடியாத நிலை உண்டு. அதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கலாம். ஆகவேதான் அந்த முக்கியமான நான்கு ஆலயங்களையும் ஒரே இடத்தில் சென்று தரிசிக்க அதே தெய்வ உருவிலான சிலைகளை, அதே வழிமுறை கொண்ட பூஜை விதிகளுடன்  இந்தியாவின் சில நகரங்களில் 'சார் தாம்' அதாவது 'நான்கு புனித இடங்கள்' என்ற பெயரில் வழிபாட்டுத் தலங்களை ஸ்ரீ அகண்ட ஆஷ்ரம் சார்ப்பில் ஸ்ரீ ஸ்வாமி ஸாந்தி ஸ்வரூபானந்த்ஜி அவர்கள் நிறுவி உள்ளார்கள்.  'சார் தாம்'  என்ற ஆலயத்தில் சென்று  அந்த நான்கு தெய்வங்களையும் வழிபட்டால் அந்த நான்கு இடங்களையும் தரிசித்த  பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  

உஜ்ஜயினியின் சார் தாம் ஆலயத்துக்கு நாங்கள் சென்றபோது சன்னதிகள் மூடப்படும் நேரம் ஆகிவிட்டதினால் ராமேஸ்வரம் சன்னதியைத் தவிர மற்றவை மூடப்பட்டுக் கொண்டு இருந்தன. ராமேஸ்வர சன்னதியில் ஆர்த்தி நடைபெறத் துவங்கியது.  அந்த ஆலயத்தில் குகை போன்ற அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டு அதற்குள் புராணக் கதைகளின் சில சம்பவங்களைக் எடுத்துக் காட்டும் வகையில் உண்மையான மனித உருவத்தில்,  சிலைகளுடன் கூடிய  தத்ரூபமான காட்சிகளை நிறுவி உள்ளார்கள். அந்த ஆலயத்துக்குச் செல்பவர்கள்  கட்டணம் கொடுத்துப் பார்க்க வேண்டியது அங்குள்ள குகை  காட்சிகள்.ஆலய நுழை வாயில் 


ஆலயத்தில் குகைக்குள் 
உள்ள காட்சிகள் 
க்லீம்  சாமுண்டா ஆலயம் 

உஜ்ஜயினியில் இருந்தபோது நாங்கள்  இன்னும் சில சிறு ஆலயங்களையும் பார்த்தோம்.  அதில் ஒன்று க்லீம் சாமுண்டா ஆலயம். இந்த ஆலயத்துக்கு பராலிசிஸ் எனப்படும் கை கால் விளங்காதவர்கள்  வந்து வேண்டிக் கொண்டு போகிறார்கள். இங்கு வந்து வேண்டிக் கொண்டால் அவர்களது நோயின் கடுமை குறைகிறதாம். மேலும் பல்வேறு வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து விட்டு தத்தம் குறைகளை சன்னதியின் பின்னால் உள்ள சுவற்றில் எழுதி வைத்து விட்டுச் செல்கிறார்கள். ஆலயத்தில் பெருமளவில் பக்தர்கள் வருகிறார்கள்.  இங்குள்ள சன்னதியில் காணப்படும் மூன்று தேவிகளில் க்லீம் சாமுண்டி தேவி நடுவில் இருக்க, இரு புறமும் சாவன் மற்றும் மாத்வா  என்ற தேவிகள் உள்ளனராம்.  வேறு சிலர் அந்த இருவரையும் லஷ்மி மற்றும் சரஸ்வதி என்கிறார்கள்.

மேலே உள்ள படத்தில் ஆலய சன்னதியில் க்லீம் சாமுண்டி 
கீழ் படத்தில் : நடுவில் க்லீம் சாமுண்டி மாதா, 
இருபுறமும் மகாலஷ்மி மற்றும் சரஸ்வதி 

 சன்னதியின் பின்புற சுவற்றில் காணப்படும் 
எழுதி வைக்கப்பட்டு உள்ள வேண்டுதல்கள் 

 குசேர பைரவர் ஆலயம்

ப்ரீ கஞ்ச் எனும் மத்தியப் பகுதியில் கடக்காளி ஆலயத்துக்கு செல்லும் வழியில் இந்த சின்ன ஆலயம் உள்ளது. அபூர்வமான உருவுடன் இருந்த பைரவரின் ஆலயத்தையும் பார்த்தோம். அதை குசேர பைரவர் என்கிறார்கள்.  இவரை இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நம்மை சுற்றி உள்ள தீய சக்திகளின் ஆதிக்கம் மற்றும் மன பயம் நீங்குமாம்.  அந்த ஆலயத்தில் உள்ள பைரவரின் உருவம் நம்மூரில் உள்ள காவல் தெய்வங்களின் சிலையை ஒத்து உள்ளது. ஆனால் உஜ்ஜயினியில் இப்படித்தான் பல பைரவர் ஆலயங்கள் அங்கும் இங்கும் பல்வேறு உருவங்களில் உள்ளன என்றாலும் அவற்றைப் பற்றிய மகிமைகளை பெருமையோடு கூறுகிறார்கள்.

மேல் படம் : குசேர பைரவர் ஆலயம்.
கீழ் படம் : இரு குசேர பைரவர் சிலைகள் 
...........தொடரும்

Monday, October 28, 2013

Temples in Malwa Region - 12

சாந்திப்பிரியா                                                        -  12-


சிந்தாமணி வினாயகர் ஆலயம் 

அடுத்து அங்கிருந்துக் கிளம்பி நேராக உஜ்ஜயினியில் சிப்ரா நதிக்கரையில் இருந்த சிந்தாமணி வினாயகர் ஆலயத்துக்குச் சென்றோம்.

உஜ்ஜயினி நகரம் பல ஆலயங்களைக் கொண்டுள்ள மிகப் பழமையான நகரம். இங்குள்ள பல ஆலயங்கள் மந்திர தந்திர சக்திகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள். சிப்ரா நதிக் கரையில் அமந்துள்ள இந்த வினாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள வினாயகர் தானாகத் தோன்றிய ஸ்வயம்பு வினாயகர். அவருக்கு இருபுறத்திலும் அமர்ந்துள்ளவர்கள் அவருடைய மனைவிகளான ரித்தி மற்றும் சித்தி என்பவர்கள். ஸ்வயம்புவாகத் தோன்றியதாக கூறப்படும் சுமார் ஐந்து அடி நீளமும் மூன்று அல்லது நான்கு அடி பருமனும் உள்ள இந்த வினாயகரின் காலம் தெரியவில்லை. ஆனால் 12-13 ஆம் நூற்றாண்டில் மால்வா பிரதேசத்தை ஆண்டு வந்த பர்மார் மன்னர்கள் காலத்தில்தான் இந்த ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளது என்பது தெரிகிறது. இந்த ஆலயத்தின் காலம் தெரியவில்லை என்றாலும், இது மிகப் பழமை வாய்ந்த ஆலயம் என்பது நிச்சயம். ஆலயம் சிறிது என்றாலும் கீர்த்தி பெரியது. இந்த ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயம்.

இந்த நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் தத்தம் வீடுகளில் நடைபெறும் முக்கிய விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் முடிவை எடுத்தவுடன் இங்கு வந்து இவருக்கு பூஜைகளை செய்துவிட்டுப் போவார்களாம். அது போலவே வீட்டுத் திருமணங்களில் அடிக்கப்படும் அழைப்பிதழ்களை முதலில் இந்த வினாயகரின் ஆலயத்தில் வந்து வைத்து விட்டுத்தான் மற்றவர்களுக்கு வினியோகத் துவங்குகிறார்கள் என்பது ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தினமும் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், புதன் கிழமைகளில் உள்ளே நுழைய முடியாத அளவு கூட்டமாக மக்கள் இங்கு வருகிறார்கள்.

இந்த ஆலயத்தில் உள்ள வினாயகர்
-தடைகளை நீக்குவார்
-வேண்டுதலை நிறைவேற்றுவார்
-வாழ்வில் வளம் தருவார்
-மன அமைதியையும், சந்தோஷத்தையும் தருவார்
-உஜ்ஜயினியில் உள்ள சிவ கணங்களின் அதிபதியாக இருக்கின்றார் என்று கூறுகிறார்கள்.

ஆலயத்தில் உள்ள தூண்களில் காணப்படும் சிற்பங்கள் அற்புதமானவை. அவை பர்மார் மன்னர்கள் காலத்தை சேர்ந்தவை. சிந்தாமணி என்றால், மனத் துயரங்களை தீர்ப்பவர் என்று பொருள். இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் பெருமளவுக்கு வந்து அவரை வணங்குவதின் காரணம் தம்முடைய பிரச்சனைகளை தீர்ப்பவர் இவர் என்ற நம்பிக்கைதான். அதனால்தான் அவருடைய ஆலயத்திற்கு சிந்தாமணி கணேஷ் அதாவது மனக் கலக்கங்களையும் சிந்தனைகளையும் நிவர்திப்பவர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆலயத்தில் உள்ள ஸ்வயம்பு வினாயகரை விக்னேஷ்வரர் எனவும் அழைக்கின்றனர் . இந்து தர்மத்தின்படி நமக்கு தடங்கல்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக விக்னங்களைக் களையும் வினாயகப் பெருமானையே முதலில் வணங்கவேண்டும். ஆகவே உள்ளூர் மக்கள் ஆலயத்தில் உள்ள வினாயகரை சிந்தாமன் அதாவது கலக்கம் அற்ற மனதைத் தருபவர் என்று போற்றி வணங்குவதில் வியப்பில்லைதான்.

இந்த ஆலயத்துக்குச் செல்ல ரயில் நிலையத்தில் இருந்தும், பஸ் நிலையத்தில் இருந்தும் டெம்போ, மற்றும் வாடகைக் கார்கள் நிறையக் கிடைக்கின்றன. அவற்றைத் தவிர நிறைய பஸ்களும் அங்கு செல்கின்றன. நகரின் ஒரு கோடியில் உள்ள இது நகர மத்தியில் இருந்து அதிக தூரத்தில் இல்லை. உஜ்ஜயினிக்கு வருகை தரும் யாத்ரீகர்கள் இந்த ஆலயத்துக்குச் செல்லாமல் இருக்க மாட்டார்கள். அத்தனை பிரசித்தி பெற்ற ஆலயம் இது.
  
சன்னதியில் சிந்தாமணி வினாயகர் 

சன்னதியில் சிந்தாமணி வினாயகர் -இன்னொரு தோற்றம் 

  சிந்தாமணி வினாயகர் ஆலயத் தோற்றம் 

 ஆலய வளாகத்தில் மரத்தடி ஹனுமான் 
.....தொடரும் 

Sunday, October 27, 2013

Temples in Malwa Region -11

சாந்திப்பிரியா                                                        -  11-

பாங்கர் தத்தாத்திரேயர் ஆலயம்

மறுநாள் காலைக் கிளம்பி உஜ்ஜயினிக்கு சென்றோம். வழியில்  பாங்கர் என்ற சிறு கிராமத்தில் இருந்த தத்தாத்திரேயர் ஆலயத்துக்குச் சென்றோம். புதிய ஆலயம் கட்டப்பட்டது  20-25 ஆண்டுகளுக்கு  முன்னர்தான் இருக்கும் என்றாலும் அங்கு பல வருடங்களுக்கு முன்பே மரத்தடியில் சிறு ஆலயம் இருந்துள்ளது. நான் வேலையில் இருந்தபோது உஜ்ஜயினி செல்லும்போதெல்லாம் இந்த ஆலயத்துக்கு செல்லும் பழக்கம் எங்களுக்கு உண்டு. அதற்குக் காரணம் நான் தத்தாத்திரேயரை  அதிகம் நினைப்பவன். அவர் மீது என்னை அறியாமலேயே நான்  தேவாஸில் இருந்தபோது பெரும் பக்தி ஏற்பட்டு இருந்தது. அதற்குக் காரணம் நான் மைசூரில் இருந்த தத்தாத்திரேயர் அவதாரமான கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளைப்  பற்றிப் படித்து இருந்ததுதான். அவரை பின்னர் ஒரு காலத்தில் சந்தித்துள்ளோம். (அவருடைய ஆஸ்ரமத்துக்கு சுமார் 200 பக்கத்திற்கும் மேலான குரு போதனைகள் என்கின்ற ஒரு புத்தகமும் கூட தமிழில் எழுதித் தந்து உள்ளேன். அவரை சந்தித்து நேரடியாக ஆசி பெற்றது இனிமையான தனி அனுபவம். அது குறித்து பின்னர் எழுதுவேன்). பாங்கரில் உள்ள தத்தாத்திரேய  ஆலயத்தில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் கோரிக்கைகள் நிறைவேறுவதாக அங்குள்ள மக்கள் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். அங்கு சென்று அடிப் பிரதர்ஷணம் செய்யும் பலரையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். தத்தாத்திரேயர் ஆலயங்களில் கோரிக்கைகள் நிறைவேற தேங்காயைக் கட்டி வைத்து விட்டு கோரிக்கைகள் நிறைவேறியதும் அங்கு வந்து அதை எடுத்துச் செல்வார்கள்.

ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக தள்ளி உள்ள  இந்த ஆலய இடத்தில் தங்கி இருந்த சாது ஒருவர் கனவில் தோன்றிய தத்தாத்திரேயர் தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறி இருந்ததினால்தான் அவர் இந்த கிராமத்தில் ஆலயம் எழுப்பினார் என்றும் கூறுகிறார்கள். அவர் யார், எங்கிருந்து வந்து அங்கு தங்கினார் போன்ற விவரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவர் பல வருடங்களாக அதே இடத்தில் ஏற்கனவே இருந்த  தத்தாத்திரேயரை பூஜித்து வந்துள்ளார் என்றும் அங்கு ஏற்கனவே இருந்த தத்தாத்திரேயர் அங்கு எந்த காலத்தில் நிறுவப்பட்டு இருந்தார் என்பது யாருக்குமே தெரியாது என்றும் கூறுகிறார்கள்.  ஆகவே இந்த புது ஆலயம் அமைவதற்கு முன்பாகவே இந்த கிராமத்தினர் பல நூற்றாண்டுகளாக தத்தாத்திரேயாரை வழிபட்டு வந்துள்ளார் என்றும் அதனால்தான் அந்த ஆலயம் இத்தனை மகிமை பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாக ஆலய வளாகத்தின்  உள்ளேயே உள்ள பெரிய  மரத்தையும் காட்டுகிறார்கள்.

இந்த ஆலயத்தின் ஒரு விசேஷ காட்சி என்ன என்றால் வேறு எங்குமே இல்லாத வகையில் தத்தாத்திரேயர் படமெடுத்து ஆடும் ஐந்து தலை நாகம் ஒன்றின் கீழ் நின்று கொண்டு இருப்பதும், அவர் சன்னதிக்கு முன்னால் ஒரு மிகப் பெரிய ஆமை வைக்கப்பட்டு உள்ளதும்தான். இங்குள்ள ஆமையின் உருவ அளவில் வேறு எந்த ஆலயத்திலும் நாங்கள் ஆமையின் உருவச் சிலை வைக்கப்பட்டு உள்ளதைப் பார்த்திருக்கவில்லை. தத்தாத்திரேயர் ஒரு நாகத்தின் கீழ் நிற்கும் சிலையும் வேறு எங்குமே கிடையாது. அதற்குக் காரணம் மும்மூர்த்திகளில் ஒருவரான தத்தர் இங்கு விஷ்ணுவாகவும், லஷ்மி தேவி ஆமை அம்சத்தில் உள்ளதாகவும் நம்புகிறார்கள். ஆமை என்பது லஷ்மியை குறிக்கும் சின்னம் ஆகும்.  கூர்ம அவதாரத்தில் விஷ்ணு அவதரித்ததை காட்டும் சின்னமும் இங்குள்ள ஆமையாகும். அங்கு சென்று நாங்கள் வணங்கி துதித்தப் பின் மீண்டும் உஜ்ஜயினிக்கு பயணித்தோம். தத்த  ஆலயத்தின் படங்கள் கீழே உள்ளன.

 தத்தாத்திரேயர் சன்னதியில் படமெடுத்து 
ஆடும் நாகத்தின் கீழ் தத்தர் 

 தத்தாத்திரேயர் சன்னதியின்  முன்னால் காணப்படும் ஆமை. 
இது தாமிரத்தில் செய்யப்பட்டு உள்ளது

 அத்தி மரத்தில் கட்டப்பட்டு உள்ள தேங்காய்கள் 

 ஆலய வளாகத்துக்குள் கட்டப்பட்டு உள்ள தேங்காய்கள் 

ஆலய சுவற்றில் தத்தாத்திரேயரை வேண்டிக் கொண்டு 
அவர் சன்னதியின் பின்னால் வைக்கப்பட்டு 
உள்ள குங்குமப் பொட்டுக்கள்
...............தொடரும்

Saturday, October 26, 2013

Temples in Malwa Region - 10

சாந்திப்பிரியா                                                        -  10-

இந்தூர் கஜரானா மஹா கணபதி

இரவு மீண்டும் தேவாஸ் வந்து ஒய்வு எடுத்தப் பின் மறுநாள் இந்தூருக்குச் சென்று அங்கு கஜரானா எனும் பிள்ளையார் ஆலயம் சென்றோம். இந்தூர் ரெயில் நிலையத்தில்  இருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோ தொலைவில் நகரத்துக்கு உள்ளேயே உள்ள கஜரானா கணபதி ஆலயத்திற்கு நேரடியாக சென்று வர டெம்போ ஆட்டோ மற்றும் பஸ்கள் நிறைய கிடைக்கின்றன.

சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு பெருமை வாய்ந்த அஹில்யா இராணியின் கனவில் ஒரு முறை வினாயகர் தோன்றி தான் இந்தூரில் கஜரானா பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கிக் கிடப்பதாகவும்  தன்னை வெளியில் எடுத்து ஒரு ஆலயம் அமைத்து வழிபடுமாறு கூறினாராம். கஜரானா என்ற பகுதி இந்தூரில் மிகவும் நெரிச்சல் மிக்க பகுதியாக இருக்க என்ன செய்வது என முதலில் குழம்பியவள் தன்னுடைய கனவு பற்றி மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்தப் பின் வினாயகர் கொடுத்தக் கட்டளையை மீறக் கூடாதென முடிவெடுத்து கஜரானாவில் இருந்த ஒரு குளத்தை சுத்தம் செய்து தூர் வாரச் செய்தார். அப்படி செய்கையில் அந்த குளத்தினுள் புதைந்து இருந்த வினாயகர் விக்ரகம் கிடைத்தது. என்ன ஆச்சரியம். அந்த பிள்ளையாரும் அவருடைய கனவிலே தோன்றிய வினாயகரும் ஒரே மாதிரி இருந்தனர். உடனே அந்த விக்ரகத்தை சுத்தம் செய்து அந்த குளத்தின் எதிரிலேயே அகம முறைப்படி ஆலயம் ஒன்றை எழுப்பி விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து 1735 ஆம் ஆண்டு அந்த ஆலயத்தில் பூஜைகளைத் துவக்கினாராம்.

சுமார் ஆறு அடி உயரமுள்ள வினாயகரின் சிலைக்கு இரு பக்கத்திலும் இரண்டு மனைவிகளை வடிவமைத்து உள்ளனர். அந்த ஆலயத்தில் ஏழு அல்லது எட்டுத் தலைமுறையாக பூஜைகளை செய்து வரும் பண்டிதர் அதன் பெருமையை மனம் மகிழ்ந்து கூறினார். பண்டிகை தினங்களில் முக்கியமாக புதன் கிழமைகளில் நடு இரவுவரை நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்து வினாயகரின் அருகில் சென்று அவரை வணங்கி வேண்டுதல்கள் செய்கின்றனர். குடும்பத்தில் அமைதியின்மை, தடை பெற்றுவரும் காரியங்கள் சித்தி பெற குடும்பச் சண்டை போன்றவற்றிக்கு நிவாரணம் பெற என பல்வேறு கோரிக்கைகளை வைத்து வேண்டுதல் செய்கின்றனர். வினாயகரை வேண்டிக் கொண்டு அந்த ஆலத்தில் உள்ள ஒரு மரத்தில் நோம்புக் கயிற்றைக் கட்டி வைத்துவிட்டு ஒரு தேங்காயை பூசாரியிடம் தந்து விட்டு வேண்டுதல்களை அவரிடம் கூறிவிட்டுச் செல்கின்றனர். அதை அவர் ஸ்வாமி பீடத்தில் வைத்து விடுகின்றார். எப்பொழுது தன் வேண்டுதல் பலிக்கின்றதோ அப்பொழுது அவர் அந்த ஆலயத்திற்குச் சென்று பூசாரியிடம் அதைப் பற்றிக் கூற அவர் பீடத்தில் இருந்து ஒரு தேங்காயை பிரசாதமாகத் தருகிறார்.

ஆந்த ஆலயத்திற்கு செல்லும் பல பக்தர்கள் கூறும் கதைகள் மெய்  சிலிர்க்க வைக்கின்றன.  எங்களுக்கே கஜரானா வினாயகரின் மகிமையைக்  குறித்த ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு முறை தேவாஸ் நகரில் எங்கள் வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள பணமும் தங்க, வைர நகைகளும் திருட்டுப் போய் விட்டன. திருடனைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  எங்களுடைய ஒரு நண்பர் வற்புறுத்தலினால் நாங்கள் மறுநாள் காலையில் காளியை வழிபடும் ஒரு மாந்த்ரீக ஜோதிடரிடம் சென்று திருட்டைக் குறித்து கேட்ட பொழுது அவரும் எங்கள் வீட்டில் திருடியவன் வெளியூரை சேர்ந்தவன் எனவும், அவன் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன் எனவும், அவன் திருட்டுத் தொழிலில் கைதேர்ந்தவன் எனவும், அடுத்த மூன்று நாட்களுக்குள் அவனைப் பிடிக்காவிடில் அதன் பிறகு அந்த திருடனை பிடிக்கவே முடியாது, அவன் பிடிக்க முடியாத இடத்திற்கு சென்று விடுவான் எனக் கூறி  அவன் அந்த நேரத்தில் தங்கி இருந்த இடத்தைக் குறித்து சில தகவல்களைக் கூறினார். அதாவது தேவாஸில் இருந்து போபால் செல்லும் வழியில் சுமார் முப்பது  கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில்தான் இருக்கிறான்  என்று கூறினார்.

அவர் குறிப்பிட்ட பகுதியில் இருந்தது சிறு  கிராமம். அது திருட்டிற்கு  பெயர் பெற்ற இடம்.  போபாலுக்கு செல்லும் பஸ்கள் அங்கு நின்று விட்டுச் செல்லும். அந்த கிராமத்தருகில் இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியே வாகனங்கள்  மற்றும் காரில் செல்பவர்கள் செல்ல மாட்டார்கள். காரணம் தனியே செல்லும் வாகனத்தை மடக்கி அவர்களை கொள்ளையடித்துக் கொண்டு செல்பவர்கள் அங்கு அதிகம். கொள்ளையடிப்பது மட்டும் அல்ல, அவர்களைக் அங்கேயே தள்ளி விட்டு  வாகனத்தையும்  எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். அதன் பின் வாகனங்களின் ஒரு பொருள் கூட கண்டு பிடிக்க முடியாத அளவு அதை அடுத்த சில மணி நேரத்தில் பிரித்து அவற்றை எடுத்துச் சென்று விடுவார்கள்.  ஆகவே தனியாக காரில் செல்பவர்களை எல்லையிலேயே போலிஸ் தடுத்து நிறுத்தி பாதுகாப்பிற்காக அங்கிருந்து ஐந்து அல்லது பத்து வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் வகையில் அனுப்பி வைப்பார்கள். ஆனால் ஒருவித பயத்தினால் அரசாங்க வாகனம் மற்றும் பஸ்ஸை கொள்ளை அடிக்க அந்த திருடர்கள்  வரமாட்டார்கள். 

நாங்கள் காவல் நிலைய அதிகாரியிடம் (அவரும் ஒரு முஸ்லிம் மதத்தவர்) அது குறித்து  கூறியும் அவர்கள் வேண்டும் என்றே அவனைப்  பிடிப்பதில் அசட்டையாக இருந்தார்கள். அதற்கான காரணம் அவர்களுக்கு இடையே இருந்த தொடர்ப்புக்கள்தான்  என்பது பின்னர் தெரிந்தது. ஜோதிடர் கொடுத்திருந்த கெடுவும் முடிந்தது.  திருடனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மாதங்கள் ஓடி விட்டன. காவல் நிலையத்திலும் அவனைப் பிடிப்பதில் எந்த அக்கறையையும் காட்டவில்லை.  மனம் வெறுத்துப் போய் இருந்த எங்களிடம் எதேற்சையாக ஒருவர் நீங்கள் கஜரானா ஆலயம் சென்று அங்கு வேண்டிக் கொள்ளுங்கள் அவர் நிச்சயமாக வேண்டுதலை நிறைவேற்றுவார் எனக் கூறி எங்களை ஆலயத்திற்கு தாமே அழைத்துச் சென்றனர். நாங்களும்  அங்கு சென்று வேண்டிக் கொண்டு திரும்பினோம்.

என்ன அதிசயம் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே வெளியூருக்குத் தப்பி ஓடி விட்டிருந்த அதே திருடன் மீண்டும் எங்கள் வீட்டை ஒட்டியபடி பின்னால் இருந்த வீட்டில் திருட வந்தான். சொன்னால் நம்ப மாட்டீர்கள். எதிர்பாராத விதத்தில் அவன் வீதியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறு பையன்களினால் மாட்டிக் கொண்டான். (பிடிபட்ட திருடன் முஸ்லிம் மதத்தவர்தான் என்பதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தோம். காளி ஜோதிடர் கூறியது எத்தனை உண்மை!  அது மட்டும் அல்ல திருடன் பிடிபட்ட பின்னர் ஜோதிடர் கூறிய அதே இடத்தில் தான் மூன்று நாட்களும் தான் தங்கி இருந்ததை அவன் வழக்கு மன்றத்தில் ஒப்புக் கொண்டான். அதன் பின் அவன் போபாலுக்கு  திரும்பிச் சென்றுள்ளான். திருடுவதை தொடர்ந்து தொழிலாகவே செய்து கொண்டு இருந்தவன் மீது போபாலில் மட்டும் 35 வழக்குகள் பதிவாகி இருந்தன) களவு போன நகைகளில் பத்து சதவிகித தொகை கூட திரும்பக் கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் மிகவும் போற்றி வைத்திருந்த முக்கியமான ஒரு பொருள் கிடைத்தது. திருடனை பிடிக்க முடியாதென ஜோதிடர் முதல் காவல்துறையினர்வரை பலர் கூறியும் பல மாதங்களுக்குப் பின் நாங்கள் கஜரானா கணபதியிடம் வேண்டிக் கொண்டப் பின்  அதே திருடன் மீண்டும் கிடைத்தான்.  அந்த மகிமையை என்னவென்று சொல்வது? அதனால்தான் எனக்கு இந்தூருக்குச் சென்றால் கஜரானா  ஆலயம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எப்போதும் இருக்கும்.

அப்படிப்பட்ட சம்பவங்கள் பலருக்கும் நடந்துள்ளன. பிளவு பட்ட குடும்பம் ஒன்றானது, பிழைப்பது சாத்தியம் இல்லை என கைவிடப்பட்டவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் அந்த காயம் கூடத் தெரியாமல் நல்ல வாழ்கையை கொண்டு வாழ்ந்து வந்தார். வருடக் கணக்கில் தேங்கிக் கிடந்த வழக்கினால் மன அமைதியை இழந்தவர் ஆலயத்தில் சென்று வேண்டிக் கொண்ட அடுத்த சில நாட்களில் வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டு அவருக்கு சாதகமாக முடிந்தது. இப்படி பல பல கதைகள் உண்டு.

கஜரானா ஆலய வளாகத்துக்குள்  கால பைரவர், மகாலஷ்மி, சாயி பாபா, ஹனுமான், ராமபிரான், சிவலிங்கம், மற்றும் சனி பகவான் போன்றவர்களுக்கு தனித் தனி சன்னதிகள் உள்ளன. இத்தனை மகிமைகளைக் கொண்ட ஆலயத்துக்கு மீண்டும் விஜயம் செய்ததில் மனம் மகிழ்ச்சி அடைந்தது. இனி மீண்டும் இப்படிப்பட்ட பயணம் மேற்கொள்ள முடியாது என்கின்ற உடல் நிலையில் உள்ள நாங்கள் மன மகிழ்ச்சியோடு அங்கிருந்து கிளம்பி இந்தூர்  கடை வீதிகளில் சுற்றி அலைந்தப் பின் தேவாஸ் திரும்பினோம். மறுநாள் மீண்டும் உஜ்ஜயினிக்கு பயணித்து அங்கு பல ஆலயங்களில் தரிசனம் செய்ய எண்ணி இருந்ததினால் அன்றைக்கு இந்தூரில் வேறு ஆலயத்துக்கு செல்லவில்லை.

மனைவிகள் ரித்தி மற்றும் சித்தியுடன் கஜரானா கணபதி 

கஜரானா கணபதி ஆலயத்தில் 
ஒரு சன்னதியில் துர்க்கை

கஜரானா கணபதி ஆலயத்தில் 
ஒரு சன்னதியில் ஹனுமான் 

கஜரானா கணபதி ஆலயத்தில் 
ஒரு சன்னதியில் ஹிங்லாஜ் தேவி 
(பார்வதியின் அவதாரம்)

கஜரானா கணபதி ஆலயத்தில் 
ஒரு சன்னதியில்  பைரவர் 
கஜரானா கணபதி ஆலயத்தில் 
பாதாளத்தில் உள்ள  சிவன்  
சன்னதியின் மேல்புறத்தில் நந்தி  
................தொடரும்