Saturday, December 21, 2013

Siva Kavasam - 2


 
அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித்,

துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம்

தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த

மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க


(பிரபஞ்சத்தின் மூல நாயகர், ஞான வடிவம், ஆனந்த ஸ்வரூபிணி, பூமி முதல் விண்ணுலகம் வரை பறந்து கிடக்கும் உயிர் அணுக்களின் ஜீவன், மரணம் அடைந்தப் பின் எம்மை உம்முள் அட்கொள்பவரான சிவபெருமானே, இந்த பூமியில் எந்த தீமையும் என்னை சூழாமல் காத்து அருள வேண்டும் )

குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித்

தரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடாவண்ணம் காப்போன்

நிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்ய

விரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க.(ஓஹ் என்ற ஒலியை எழுப்பி ஓடிவரும் நீரைப் போலல்லாது, மௌன நீரோடையாக பயிர்களில் பாய்ந்து, உணவைத் தந்து உயிர்களைக் காப்பவரே, அலையலையாக வரும் மேகக் கூட்டத்தின் வழியே மழையாக வந்து மலை மீது பொழி, பாய்ந்து வரும் அந்த நீரின் வெள்ளத்தில் விழுந்து இறந்து விடாமல் எம்மை நீங்களே  காத்து அருள வேண்டும். )

கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள்தீயால்

அடலைசெய்து அமலை தாளம் அறைதர நடிக்கும் ஈசன்

இடைநெறி வளைதாபத்தில் எறிதரு சூறைக் காற்றில்

தடைபடாது எம்மை இந்தத் தடங்கடல் உலகில் காக்க


(பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட யுக முடிவில், அனைத்து உலகத்தையும் தெய்வீகத் தீயினால் பொசுக்கி அவற்றால் உன் மேனியில் திருநீர் எனும் அரிதாரம் பூசி நிற்கையில், பார்வதி தேவியார் தாளம் போட, அதில் மயங்கி நடனமாடும் சிவபெருமானே, வளைந்து வளைந்து வந்து தீ போன்ற வெப்பம் தரும் சூரைக் காற்றினால் உன் வரவு தடைபடாமல் இருக்க,  பெரும் கடல்போல உள்ள இவ்வுலகில் எம்மைக் காத்தருள வேண்டும்)

தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்

பாயுமான் மழுவினோடும் பகர் வரத அபயங்கள்

மேயதிண் புயங்கள் நான்கும் மிளிரும் மின்னனைய தேசும்

ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை யதனில் காக்க


(தூய்மையான மூன்று கண்களையும், சுடர்விட்டு எரியும் பொன்னிறம் போன்ற நான்கு திருமுகங்களையும் கொண்டவரே, பாயும் மானைப் போன்ற மழுவாளினையும் (ஒருவித ஆயுதம்), வரத மற்றும் அபய முத்திரைகளையும் காட்டும் நான்கு புஜங்களையும் (கைகள்),   மின்னலைப் போல ஒளிவிடும் மேனியையும் கொண்டவருமான தத்ரூப புருஷரானவரே, கிழக்கு திசையில் நின்றவாறு என்னைக் காத்திடுவீர்)

மான்மழு சூலம் தோட்டி வனைதரு நயன மாலை

கூன்மலி அங்குசம் தீத் தமருகம் கொண்ட செங்கை

நான்முகம் முக்கண் நீலநள் இருள் வருணம் கொண்டே

ஆன்வரு மகோர மூர்த்தி தென்திசை யதனில் காக்க

 
(பாயும் மானைப் போன்ற மழுவாள், சூலம், கோடரி போன்றவற்றுடன் ருத்திராக்ஷ மாலை, கூனனைப் போல வளைந்து நிற்கும் அங்குசம், தீ, தமருகம் (டமாரம்) போன்றவற்றை ஏந்திய சிவந்த கைகளுடன், மூன்று கண்களை கொண்ட நான்கு திருமுகங்களுடன்  காட்சி தருபவரே, கருநீல நிறத்திலான எருதின் மீது அமர்ந்து உள்ள ஐம்முகத்துள் ஒன்றான அகோர முகத்தைக் கொண்டவரே, தெற்குத் திசையில் நின்றவாறு எம்மைக் காத்திடுவீர்)

திவள்மறி அக்க மாலை செங்கை ஓர் இரண்டும் தாங்க

அவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தொடு அபயம் தாங்கக்

கவின் நிறை வதனம் நான்கும் கண் ஒரு மூன்றும் காட்டும்

தவளமா மேனிச் சத்தியோ சாதன் மேல் திசையில் காக்க 

 

(தாவுகின்ற மானையும், ருத்ராக்ஷ மாலையையும் இரு கைகளும் ஏந்தி நிற்க, ஒளிமயமான இன்னும் இரு திருக்கைகள் அபய முத்திரையைக் காட்டி நிற்க, ஐம்முகங்களுள் ஒன்றாக மேற்கு நோக்கிய முகமும் கொண்டவரே, மூன்று கண்களையும் அளவற்ற அழகுடைய நான்கு முகங்களும் கொண்டவரே, மேற்கு திசையில் நின்று எம்மைக் காத்திடுவீர்)

கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்

அறைதரும் தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்திப்

பொறைகொள் நான்முகத்து முக்கண் பொன்னிற மேனியோடும்

மறைபுகழ் வாமதேவன் வடதிசையதனில் காக்க 


(ரத்தம் தோய்ந்த மழு வாள், மான், அபய முத்திரை சின்னம், ருத்திராக்ஷ மாலை போன்றவற்றை ஏந்தி நின்றவாறு  நான்கு சிவந்த  திருக்கைகளை காட்டி, ஜொலிக்கும் பொன் போன்ற முக்கண்களுடன் சாந்தமான நான்கு திருமேனிகளைக் (முகங்கள்) காட்டுபவரே, வேதங்கள் போற்றிப் புகழும் வாமதேவ மூர்த்தியே (சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றே வாமன் என்பது ), வட  திசையில் நின்றிருந்து எம்மை நீர் காத்தருள வேண்டும்)

அங்குசம் கபாலம் சூலம் அணிவரத அபயங்கள்

சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித்

திங்களின் தவள மேனித் திருமுகம் ஐந்தும் பெற்ற

எங்கள் ஈசான தேவன் இருவிசும்பு எங்கும் காக்க (வரத சின்ன முத்திரை காட்டி, அங்குசம், கபாலம், சூலம், மான், பாசக் கயிறு, ருத்திராஷம், டமாரம் போன்றவற்றை பத்து கரங்களிலும் ஏந்தி, சந்திரனைப் போன்ற வெண் நிற திருமேனியின்  ஐந்து திரு முகங்களில் ஒரு முகத்தை வடகீழ்த்திசை நோக்கி வைத்துள்ள மூர்த்தியே, தேவலோகம் வரை படர்ந்திருக்கும் அனைத்து இடங்களிலும் எம்மை நீர்  காத்து அருள வேண்டும்)

சந்திர மவுலி சென்னி (தலை) தனிநுதல் கண்ணன் நெற்றி

மைந்துறு பகன்கண் தொட்டோன் வரிவிழி அகில நாதன்

கொந்துணர் நாசி வேதம் கூறுவோன் செவி கபாலி

அந்தில் செங்கபோலம் தூய ஐம்முகன் வதனம் முற்றும்(சந்திரமௌலீஸ்வரர் எனும் சிவபெருமான் எங்கள் தலையையும், நெற்றிக் கண் கொண்ட மூர்த்தியானவர் எம் நெற்றியையும், கண் கூசும் ஒளி தரும் சூரியனின் ஒளியையே பறித்த பரமசிவனார் விழிகளையும், பூங் கொத்துக்களின் வாசனைகளை உணரும் சக்தி மிக்க நாசிகளையும், எமது காதுகளையும் நான்கு வேதங்களையும் அருளிய நாயகன் சிவபெருமான் காக்க, எமது கபாலத்தை கபால மூர்த்தியும், எம் முகத்தை ஐம்முகத்தைக் கொண்டவனான சிவபெருமானே  அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும்)


வளமறை பயிலும் நாவன்நா, மணி நீல கண்டன்

களம் அடு பினிகபான கையினை தரும வாகு

கிளர்புயம் தக்கன் யாகம் கொடுத்தவன் மார்பு தூய

ஒளிதரு மேருவில்ல உதரம் மன்மதனைக் காய்ந்தோன்

(வேதங்களை உச்சரிக்கும் நாவினை கொண்ட நீல நிறக் கழுத்தோனான வேத மூர்த்தி எம் கழுத்தினையும், போரில் பினாகம் என்னும் வில்லை கையில் ஏந்திய தர்மவாகு எனும் சிவபெருமான் எமது கைகளையும் தோளையும் காத்தருள, தக்கன் யாகத்தை அழித்த மூர்த்தியானவர்  எம் மார்பினையும், காமதேவனை தகனம் செய்த பேரொளி தரும் மேரு மலையான் எம் வயிற்றினையும்  தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும் )

இடைஇப முகத்தோன் தாதை உந்தி  நம் ஈசன் மன்னும்

புடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில்  வாமம்   

படர் சக தீசன் சானு பாய்தரும் இடப கேது

விடைநெறி கணைக்கால் ஏய்ந்த விமலன் செம்பாதம் காக்க 


(யானை முகத்தோனின் தந்தையானவர் என் வயிற்றையும், அதே சர்வேஸ்வரன் தொடைப் பகுதியின் மேல்புற இடையையும், குபேரனின் தோழரும்  ஐந்து முகங்களில் ஒன்றை இடப்புறத்தை நோக்கிக் காட்டி நிற்கும் வாம முகத்தவருமான  சிவபெருமான் எம் தொடையையும்  காக்க,  படமெடுத்தாடும் பாம்பு போல படர்ந்து விரிந்துள்ள ஜகத்தின் ஈசன்  எம் முழங்கால்களையும், எம் கணுக்காலை பாய்ந்து வரும் ரிஷபத்தின் (நந்தி) தலைவனானவர் காத்து அருள, விமலன் எனும் மூர்த்தியானவர் எம் பாதத்தையும்  தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும் )

வருபவன் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம்

பொருவரு வாம தேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம்

செருமலி மழுவாள் அங்கைத் திரியம்பகன் நாலாம் யாமம்

பெருவலி இடப ஊர்தி பிணியற இனிது காக்க

(வேதங்கள் கூறும் பதினோரு ருத்ரர்களில் ஒருவரான பவன் (சிவபெருமானின் இன்னொரு பெயர்) முதற் ஜாமத்திலும் , ஹேஸ்வரன்  எனும் ஈஸ்வரன் இரண்டாம் ஜாமத்தின் பின் பகுதியிலும்,  முனிவர் போன்ற உருவிலான  வாமதேவர் (சிவபெருமானின் இன்னொரு பெயர்) மூன்றாம்  ஜாமத்திலும்,  மழுவாயுத்தை ஏந்திய  திரியம்பகனாதர் (சிவபெருமானின் இன்னொரு பெயர்) நாலாம் ஜாமத்திலும் காத்து அருள இடபத்தில் பவனி வரும் மூர்த்தியானவர் எம் சரீரம் பிணிகளால் (வியாதிகள்) பீடிக்கப்பட்டு சோர்வடையாமல்   அந்தந்த ரூபங்களில் தனித் தனியே   இருந்தவாறு காத்தருள வேண்டும்.

கங்குலின் முதல் யாமத்துக் கலைமதி முடித்தோன் காக்க

தங்கிய இரண்டாம் யாமம் சானவி தரித்தோன் காக்க

பொங்கிய மூன்றாம் யாமம் புரிசடை அண்ணல் காக்க

பங்கமில் நாலாம் யாமம் கவுர்தன் பதியே காக்க


(இரவின் முதற் ஜாமத்தில்  பிறைசூடிய மூர்த்தியும் இரண்டாம் ஜாமத்தில் கங்காதர மூர்த்தியும் (கங்கையை தலையில் கொண்டுள்ள) எம்மை காத்து அருள வேண்டும். மூன்றாம் ஜாமத்தில் ஜடா மகுட மூர்த்தி காக்க, பங்கமே இல்லாத  நாலாம் ஜாமத்தில் உமை எனும் பார்வதியின் கணவரான உமாபதி வந்து எம்மைக் காக்க வேண்டும்)

அனைத்துள காலம் எல்லாம் அந்தகன் கடிந்தோன் உள்ளும் 

தனிப்பெரு முதலாய் உள்ள சங்கரன் புரமும் தாணு  

வனப்புறு நடுவும் தூய பசுபதி மற்றும் எங்கும்  

நினைத்திடற் கரிய நோன்மை சதாசிவ நிமலன் காக்க 

(அனைத்து காலங்களிலும் காலத்தை நிர்ணயிக்கும் கால சம்ஹார  மூர்த்தி எம்மைக் காத்து வர, காலத்தின் உட்பகுதியில் தனித்தன்மை வாய்ந்த சங்கரரும் (சிவபெருமானின் இன்னொரு பெயர்), வெளிப்புறத்தில் தாணு (சிவபெருமானின் இன்னொரு பெயர்) மூர்த்தியும், நடுப்புறத்தில் ஆன்மாக்களை தன்னுள் அடக்கி வைத்துள்ள பசுபதி நாதர் (பசு என்பது ஆன்மாவைக் குறிக்கும் இன்னொரு சொல்) எனும் சிவபெருமானும், மற்ற இடத்தில் என்றுமே (சதா என்பது என்றுமே என்பதின் வாய் மொழிச் சொல்)  நினைவில் சுழன்றுகொண்டிருக்கும் சதாசிவ முர்த்தியும்  எம்மை தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும் )

நிற்புழி புவனநாதன், ஏகுழி நிமலன், மேனி

பொற்புறும் ஆதி நாதன், இருப்புழி பொருவி லாத

அற்புத வேத வேத்தியனும், துயில்கொள்ளும் ஆங்கண்

தற்பர சிவன், விழிக்கின் சாமள ருத்திரன் காக்க

(யாம் நிற்கும் இடங்களிலெல்லாம் புவனநாதரும், நடக்குமிடமெல்லாம் மாசற்ற  நிர்மலனாதனும் (நிர்மலம் என்பது மாசின்மை மற்றும் மனக் கவலை அற்றவர் என்ற பொருளை தருவதினால் நிர்மலமானவர் என சிவபெருமானின் இன்னொரு பெயராக அமைந்தது),  உடலழகினை முதலும் முடிவுமே இல்லாத அனைத்தையுமே படைத்த அந்த ஆதி மூர்த்தி காக்க,  இருக்குமிடமெல்லாம் வேதங்கள் புகழும் வேத மூர்த்தி சிவபெருமான் காக்க, உறங்கும்போதேல்லாம் பரம்பொருளான பரமசிவன் காக்க, விழித்திருக்கும் நிலையில் சியாமள ருத்ரர் எனும் சிவபெருமான் தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு எம்மைக் காத்தருள வேண்டும்)

மலைமுதல் துருக்கம் தன்னில் புராரி காத்திடுக மன்னும்

சிலைமலி வேட ரூபன் செறிந்த கானகத்தில் காக்க

கொலையமர் கற்பத்து அண்ட கோடிகள் குலுங்க நக்குப்

பலபட நடிக்கம் வீர பத்திரன் முழுதும் காக்க

(அடி மலை முதல் அதன் மேல் முகட்டுவரை (முகட்டு என்பது மலை உச்சியின் பெயர்)  புராரிக் கடவுள் காக்க வேண்டும்.  காட்டினில் என்னை விட்டுப் பிரியாமல் இருந்து வில்லேந்திய  வேட வடிவ மூர்த்தி காக்க,  பேரழிவைத் தரும் பிரளயகாலத்தில் அண்டகோடிகள் நடுங்குமாறு நடனமாடும் வீரபத்திரர் (சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்களைக் கொண்டு ஐந்தொழில் ஆற்றுகையில் ஆணவாதி மலங்களை அழிப்பதற்காக ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து  வீரபத்திரரைப் படைத்தார் என்பது புராணக் கதை) என்னை முற்றிலுமாக சூழ்ந்திருந்து காக்க வேண்டும்)

பல்உளைப் புரவித் திண்தேர் படுமதக் களிறு பாய்மா

வில்லுடைப் பதாதி தொக்கு மிடைந்தியும் எண்ணில்கோடி

கொல்லியல் மாலை வைவேல் குறுகலர் குறுகும் காலை

வல்லியோர் பாகன் செங்கை மழுப்படை துணித்து மாய்க்க

(கழுத்து மயிரினையுடைய குதிரைகள் பூட்டிய தேர்கள், மதம் பிடித்தது போன்ற மத யானைகள், பாய்ந்து செல்லும் குதிரைகள், வில்லேந்திய கோடிக்கணக்கான படைவீரர்கள் என அனைவருடன் சேர்ந்து கூர்மையான வேலுடன் பகைவர்களை அழித்திடும்  வள்ளியின் நாயகனை படைத்த சிவப்பு நிறக் கைகளைக் கொண்டவரின்  திருக்கரத்தில் இருக்கும் மழு ஆயுதம் என்னைக் காக்கட்டும் )

தத்துநீர்ப் புணரி ஆடைத் தரணியைச் சுமந்து மானப்

பைத்தலை நெடிய பாந்தள் பல்தலை அனைத்தும் தேய்ந்து

முத்தலை படைத்த தொக்கும் மூரிவெம் கனல் கொள் சூலம்

பொய்த்தொழில் கள்வர் தம்மைப் பொருதழித்து இனிது காக்க

(படமெடுத்தாடும் ஆதிசேஷன் எனும் நாகம் படுத்துக் கிடக்கும் பாய்ந்து வரும் கடலையே தன்  ஆடையாக போர்த்தி , பூமியையே தாங்கி நின்ற கடவுளை உம் முத்தலைகளுக்குள் அடக்கியவரே, அந்த  வலிமைகளை  அடக்கிய    தீய எண்ணம் கொண்ட கயவர்களை அழித்து மகிழ்ச்சியைத் தரும்  உம்முடைய  சூலம் எம்மைக் காத்து அருளட்டும் )

முடங்குளை முதலாய் நின்ற முழுவலிக் கொடிய மாக்கள்

அடங்கலும் பினாகம் கொல்க என்று இவை அனைத்தும் உள்ளம்

திடம்பட நினைந்து பாவம் தெறும் சிவகவசம் தன்னை

உடம்படத் தரிப்பை யானால் உலம்பொரு குலவுத் தோளாய்


(பிடரி மயிருடைய சிங்கத்தை ஒத்த வலிமை மிக்க தோள்களைக் கொண்டு கொடிய மிருகங்களையெல்லாம் பினாகம் என்கிற வில்லால் கொல்வது போல, இருதயத்தில் சிவனையே வைத்து உறுதியுடன் தியானித்தால், அனைத்து பாவங்களையும் வெல்லும் சிவகவசத்தை ஒருவர் அணிந்து கொள்வாரேயானால் (பாராயணம் செய்வது என்பது பொருள்) )

பஞ்ச பாதங்கள் போம் பகைகள் மாய்ந்திடும்

அஞ்சலில் மறலியும் அசூசி ஆட்செயும்

வஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும்

தஞ்சம் என்றிதனை நீ தரித்தல் வேண்டுமால்

(இப்படியாக பாராயணம் செய்பவர்களது பஞ்சமா பாதகங்கள் அனைத்துமே நீங்கும், சுற்றி உள்ள பகைகளும்  விலகும், பயமின்றியும்  வாழலாம், கொடிய வியாதிகள் விலகும், வறுமை எனும் தரித்திரம் தொலையும்).

 -------------------xxxxxxxxxxxxxxxxxxxxxx-----------------

Siva Kavacham -1முன்னுரை

பொதுவாகப் பலரும் ஷண்முக கவசம், லலிதா சஹாஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் கந்தர் சஸ்டி கவசம் போன்றவற்றைத்தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றைப் போலவே சிவகவசம் என்பதும் உள்ளது என்பது பலருக்கு தெரியாது.

சிவகவசம் என்பது பாண்டிய மன்னன்னான வராமதுங்கர் என்பவர் காலத்தில் அவரால் இயற்றப்பட்ட செய்யுளாகும். இதை விடபமுனி எனும் முனிவர் பத்ராயு எனும் ஒரு அரசகுமாரனுக்கு அருளுபதேசம் செய்ய அதை வராமதுங்கர் என்ற பாண்டிய மன்னன் தாம் எழுதிய சிவபெருமானின் புண்ணியக் கதைகளை எடுத்துரைக்கும் பிரம்மோத்ர காண்டம் எனும் நூலின் ஒரு பகுதியாக செய்யுள் வடிவில் இயற்றினார் என்பதும் செய்தியாகும். தென் காசிப் பாண்டியர் எனப்படும் பாண்டிய மன்னர்களில் ஒருவரான வராமதுங்கர் அபிராம சுந்தரேசன் மற்றும் வீர பாண்டியன் என்ற பெயர்களையும் பெற்று இருந்தவர். ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகளுடன் ஒன்றாக சேர்ந்தே இருந்த இலங்கையில் இருந்த நல்லூரை ஆட்சி செய்து வந்தவர். விஜயநகர் நாயக்கர்கள் ஆட்சியில்  இருந்தபோது இந்த பாண்டிய மன்னர்கள் அவர்கள் வசம் இருந்த ராஜ்யங்களில் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். தமிழ் மொழியில் அதிகத் திறமைப் பெற்று இருந்த வராமதுங்கர் பெரும் சிவ பக்தர். அந்த மன்னன் கருவை கலித்துறை அந்தாதி, கருவை பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி போன்ற இன்னும் சில தமிழ் நூல்களை இயற்றி உள்ளார். 

கந்தர் சஷ்டி கவசம் என்பது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் கூறி அதை காக்குமாறு முருகப் பெருமானை வேண்டும் தமிழ் மந்திர பாடல் ஆகும். கவசம் என்றாலே காக்கும் ஒரு தடுப்பு அரண் போன்றதாகும். முருகனை வேண்டிக் கொண்டு கந்தர் சஷ்டி கவசத்தைப் படிப்பதின் மூலம் மன அமைதி கிட்டும் , நோய் நொடிகள் விலகும், விஷ ஜந்துக்களின் விஷங்கள் முறியும், தீய ஜந்துக்கள் நம்மைத் தீண்டாது என்பது நம்பிக்கை ஆகும்.அது போலவேதான் சிவகவசமும் சைவ அன்பர்களால் ஒரு காலத்தில் பாராயணம் செய்யப்பட்டு வந்தது. சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர் என்பதினால் அவருடைய அந்த ஐந்து முகங்களைக் குறிப்பிட்டு உடலின் ஒவ்வொரு பாகத்தை காக்குமாறும், நான்கு திசைகளில் இருந்தும் வரும் ஆபத்துக்களில் இருந்தும் தம்மைக் காப்பாற்றுமாறு சிவபெருமானை வேண்டி துதிக்கும் மந்திர பாடலாகும். இதை பாராயணம் செய்தால் பஞ்சமா பாதகங்கள், பகைகள், வறுமை போன்றவை விலகி அதை பாராயணம் செய்பவர்களுக்கு ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.

இப்படிப்பட்ட பாடல்கள் அனைத்தும் இலக்கணத் தமிழில் எழுதி வைக்கப்பட்டு உள்ளதினால் இவை அதிகம்  பிரபலமாகவில்லை. அதற்குக் காரணம் தமிழ் மொழி பேசும் சராசரி மனிதர்கள் அனைவருக்குமே இலக்கணத் தமிழ் தெரியாது என்பதினால் அதன் அர்த்தம் புரிவது இல்லை. அதனால்தான் அவற்றின் புகழை அவர்கள் அறிந்திருக்கவில்லை  என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மேலும் ஒரு கட்டத்தில் வைஷ்ணவம் தலை தூக்கி நின்றபோது சைவ சமய நூல்கள் தழைத்து இருக்கவில்லை என்பதும் இன்னொரு காரணம். இப்படிப்பட்ட மந்திரசக்தி வாய்ந்த  பாடல்களின் அர்த்தங்கள்  தெளிவாக விளக்கப்பட்டு  எழுதப்பட்டு  இருந்தால் அவற்றின் மகிமைகள் பரவி இருக்கும். ஆனால் அப்படி செய்யப்படவில்லை. விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே சிவகவசத்தின்  அர்த்தங்கள் கூடிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அதனால்தான் ஒரு முயற்சியாக மந்திர சக்தி வாய்ந்த சிவகவசத்தை அதன் விளக்கத்துடன் வெளியிட முடிவு செய்தேன். ஆன்மீகத்தில் நாம் அறிவதை  பிறருக்கும்  வெளிச்சம் போட்டுக் காட்டுவது நல்ல ஆன்மீகக்  காரியம் என்பார்கள்.

கந்தர் சஷ்டி கவசத்தைப் படிப்பது போல சிவகவசத்தை  திங்கள் கிழமைகளிலும்  பிரதோஷ தினங்கள் அன்றும்  தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் பல பலன்கள் கிடைக்கும் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். அடுத்த இரு நாளில் விளக்கத்துடன் கூடிய சிவகவசம் வெளியாகும்.
...............தொடரும் 

Sunday, December 8, 2013

Kathaayi Amman / கருணைமிகு காத்தாயி


கருணைமிகு காத்தாயி

சாந்திப்பிரியா சித்தாடி காத்தாயி அம்மன் எங்கள் குல தெய்வம். தஞ்சாவூரில்   கோவிலூரில் உள்ள காத்தாயி அம்மனின் இன்னொரு கோவிலைப் பற்றி எனக்கு ஒருவர் அனுப்பி இருந்த தகவலை காத்தாயி அம்மனை வழிபடும் பக்தர்களின் பார்வைக்காக மட்டும் அல்ல வள்ளி தேவியை வணங்கித் துதிக்கும் பிற பக்தர்களுக்காகவும் இங்கு பிரசுரம் செய்துள்ளேன்.  இந்த ஆலயத்தைக் கட்டும்போது  சித்தாடி ஆலயத்தில் இருந்து  வரப்பட்ட மண்ணை சிறிது கொண்டு வந்து அதை சேர்த்தே  உள்ளார்கள்.

காத்தாயி அம்மன் என்பவர் முருகப் பெருமானின் இரண்டாவது மனைவியும், தேவேந்திரனின் மகளாகப் பிறந்த, அதற்கு முன்னர் மகாவிஷ்ணுவின் இரண்டு பெண்களில் ஒருவராக இருந்தவருமானவர்.  ஒரு சாபத்தை நிவர்த்தி செய்து கொள்ளவே வள்ளி தேவியானவள் பூமியில் வந்து வேடர் குலத்தில்  பிறந்து முருகனுக்கு மனைவி ஆனவர்.  அநேக கிராமங்களில்  அம்மன் வழிபாடு என்பது  மிகவும் பரவலானது. அம்மனை காளி தேவி, மாரிஅம்மன், பிடாரி, பச்சை, காத்தாயி, பேச்சிச்சாயி, ரேணுகா தேவி போன்ற பல்வேறு பெயர்களில் வழிபடுகிறார்கள்.  கொடிய  நோய்கள் வராமலிருக்கவும் அம்மை போன்ற நோய்கள் குணமடையவும், கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் அவ்வப்போது மழை பொழியவும், பயிர்கள் சேதமடையாமல் இருக்கவும், துற தேவதைகளின் தொல்லைகளில் இருந்து ஊர் விடுபட்டு  நிம்மதியாக வாழவும் கிராம தெய்வ ஆலயங்களில் உள்ள தெய்வங்கள் வணங்கி வழிபடப்படுகின்றன. விழாக்களும் நடை  பெறுகின்றன. இனி தினகரன் இதழில் 2012 ஆம் ஆண்டில் வெளியாகி உள்ள இந்த செய்தியைப் படிக்கவும் :-
கருணை மிகு காத்தாயி :-

 தமிழ்நாட்டின் பல கிராமங்களில் காத்தாயி அம்மன் சிறப்பாக வழிபடப்படும் தெய்வம். காத்தாயி அம்மனோடு பச்சையம்மன், பூங்குறத்தி, வேங்கையம்மன் மற்றும் சப்த முனீசுவரர்களையும் காணலாம். வெட்ட வெளியில், தென்னை மரங்களின் பின்னணியில் அவர்களைக் காணும்போது மெய்சிலிர்க்கிறது. வாள் ஏந்தி மிக உயர்ந்த உருவாக நிற்பதும், அவரது கால்களுக்கிடையே பாதாள, நரகலோக அரக்கன் ஒருவனின் தலை மீது கால் வைத்தபடி அமர்ந்துள்ளார் வாள்முனி.

அவரோடு, லலாடமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, சடைமுனி ஆகிய அறுவரும் சேர்த்து, அன்னை பராசக்தியான காத்தாயியின் ஏழு புதல்வர்கள் ஆவர். இவர்களை ஆறுமுகப் பெருமானின் அம்சம் என்றும் கூறுவர். வீரமும் கருணையும் கொண்ட காவல் தெய்வங்கள் அவர்கள். தவக்கோலத்துடன், வீரவேற்கோலமும் கொண்டு, அன்னையின் ஏவலை ஏற்று, பக்தர்களின் தீமைகளை அகற்றி, நன்மையை சேர்க்கும் அந்த அருளாளர்கள், வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர்.

வேத முதல்வனாகிய சிவபெருமானின் திருமேனியில் இடப்பாகத்தில் இடம் பெறுவதற்காக கச்சி ஏகம்பரைப் பணிந்து வணங்கி வழிபட வந்தாள், உமையம்மை. அந்தப் பரம்பொருளை அடைந்திட, காஞ்சி மாநகரில் அவள் காமாட்சியாக ஊசி முனையில், ஒற்றைக் காலில் நின்றபடி தவமிருந்தாள். கம்பா நதிக்கரையில் நீராடி, திருநீறணிந்து ருத்திராட்சக் கண்டிகையும் அணிந்து அவள் தவமிருக்கையில், வெள்ளம் பெருக்கெடுத்தது.

அப்போது தான் வழிபட்டு வரும் சிவலிங்கத் திருமேனி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடுமோ என்ற அச்சம் கொண்ட அன்னை, ஏகம்பநாதராகிய ஏகநாயகனை, தனது இரு கரங்களாலும் மார்போடு சேர அணைத்துக் கட்டிக் கொண்டாள். இறைவனுக்கு, ‘தழுவக் குழைந்த ஈசன்’ என்ற திருநாமத்தையும் பெற்றுத் தந்தாள்.

சிவ புராணத்திலும், காஞ்சி புராணத்திலும் விரிவாகக் கூறப்படும் இந்த நிகழ்ச்சிகள், காலப்போக்கில் கிராமங்களில் சற்றே உருமாறி காத்தாயி அம்மன் தவம், மன்னார்சாமி காத்தாயி திருமணம் என்று வழங்கப்பட்டு வருகிறது. அதுவே காலப்போக்கில் விரிவாக்கம் பெற்று, காத்தாயி அம்மனுக்கும் அவளது பரிவார தேவதைகளுக்கும் தனிக்கோயில் எழுப்பி, குலதெய்வமாகக் கொண்டாடிடும் மரபினையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் கிராமங்களில் எண்ணற்ற காத்தாயி அம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. தஞ்சை மாவட்டம் கோவிலூர் காத்தாயி அம்மன், அவர்களில் தனிச் சிறப்பு பெறுகிறாள்.

தஞ்சாவூர்-திருவாரூர் நெடுஞ்சாலையில் தஞ்சைக்கு கிழக்கே 10 கி.மீ. தொலைவில் கோவிலூர் திருத்தலத்தில் குடிகொண்டுள்ளாள் காத்தாயி அம்மன். வடவாற்றின் கரையில் நெல்லித்தோப்பு கிராமத்தில் காசவன நாடு, புதூர் முனையதிரையர் குடும்பத்தினரால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவான கோயில் இது.

காத்தாயி அம்மனோடு, பச்சையம்மன், பூங்குறத்தி, வேங்கையம்மன், விநாயகர், லவ-குசர், முருகப் பெருமான், மகாவிஷ்ணு ஆகியோர் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்துள்ள பெரிய கோயில் இது. கோயில் முன்னே வண்ணமிகு மகாமண்டபம் அமையப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சண்டி ஹோமம்’ இங்கே மிகவும் பிரசித்தம்.

உலக வாழ்க்கையை வெறுத்திட்ட இளம் பெண்ணொருத்தி, தனது குழந்தையோடு தீயில் இறங்க முற்பட்டபோது, அவளது குழந்தையைக் காப்பாற்றினாள் காத்தாயி. அதனை நினைவுபடுத்திடவே, தனது இடது கரத்தில் குழந்தையை வைத்தபடி காட்சி தருகிறாள். தீயில் பாய்ந்திட்ட அந்தப் பேதைப் பெண்ணை காத்தாயி ஏன் காப்பாற்றவில்லை? காரணம், தீப்பாய்ந்த அம்மனாக அவளை உலகோர் வழிபட வேண்டும் என்பதற்காகவே!
அதற்காகவே, அவளது குழந்தையைக் காப்பாற்றி தனது கரத்தில் வைத்துக் கொண்டாள். அவளைத் தெய்வமாக்கி, தனது அருகிலேயே இருத்திக் கொண்டாள். காத்தாயி அம்மனின் கரத்தில் அமர்ந்துள்ள குழந்தை குமரனின் அம்சமாகவே கருதப்படுகிறது.

தெய்வமான பெண்கள் அனைவரையுமே மக்கள் பச்சையம்மனின் சகோதரிகளாகவே வணங்குகின்றனர். அவர்களையே தங்கள் குலதெய்வமாகவும், துணைத் தெய்வங்களாகவும் வழிபடுவது தமிழரின் பண்டைய மரபு. தமிழகத்தில் பல இடங்களில் தீப்பாய்ந்த அம்மனுக்கு தனிக் கோயில்கள் உள்ளன. “சிதக்னி குண்டசம்பூதாயை நம” என்று லலிதா சகஸ்ர நாமத்திலும் இடம் பெற்றுள்ளாள் அவள்.

காத்தாயி அம்மனுக்கு இடதுபுறம் காட்சி தருகிறாள் பச்சையம்மன். பச்சை நிற முகத்தை உடையவளாக, மரகதமேனி மருக்கொழுந்தாக, மார்பில் முத்தாரம், கழுத்தணி, காதணியோடு, கையில் வளையலும், இடுப்பில் ஒட்டியாணமும் அணிந்துள்ளாள். பச்சை நிறத்தாலான பாவாடை, தாவணி. பார்க்கின்ற கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் பச்சை நிறம் கொண்டு, தனது எல்லைக்குட்பட்ட மக்களையும் கால்நடைகளையும் காத்து நிற்பவள் அவள். கங்கையின் அம்சமாக உருவெடுத்தவள்தான் பச்சையம்மன்.

வள்ளியம்மையின் அவதாரமாகக் கருதப்படுபவள் பூங்குறத்தி. நடந்தவை, நடக்க விருப்பவை என அனைத்தையும் குறி சொல்லி, அருள்வாக்கு கூறுகிறாள் இவள்.

புலி போல காவல் ஆற்றல் உடைய பெண் தெய்வமே வேங்கையம்மன். அன்னை பராசக்தி பயணம் செய்யும்போது, உடன் காவலாக வருபவள். பகைவர்களை எல்லைக்கு அப்பால் விரட்டி, அரணாக நிற்கும் வீரத் தாய்தான் வேங்கையம்மன்.

அஷ்ட ஐஸ்வர்யங்களுக்கு அதிபதியான ஆதிநாராயணன், மகாலட்சுமியோடு இத்தலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

அகிலம் போற்றும் புராணங்கள் புகழும் சப்த முனீசுவரர்கள், காத்தாயி அம்மன் கோயில் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர். இருளைப் போக்கிடும் செந்நிறத் திருமேனி கொண்டவராக செம்முனி, தீமைக்குக் காரணமான மருளை நீக்கும் அருளை உடைய வாழ்முனி, குறையாத செல்வங்களை அருளும் கும்ப முனி, ஞானத்தையும், அறிவாற்றலையும் தந்திடும் லலாடமுனி, யோகத்தின் பயனைத் தரும் ஜடாமுனி, நாதமாய் நிலவி நயமாய் அருள் செய்திடும் நாதமுனி மற்றும் முத்து மாலைகள் அணிந்து யோகியரில் முத்தாக விளங்கும் முத்துமுனி ஆகியோர்களே இவர்கள். சங்கடம் தீர்க்கும் சங்கிலிக் கருப்பனோடு, வினை தீர்க்கும் வில்லாளனாக பாம்பாட்டி வீரன், காட்டு வெளி செல்லும்போது காக்கின்ற கருமுனியும், காத்தாயி அம்மன் கோயில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

அடியார்களின் நெஞ்சில் குடிகொண்டுள்ள செங்கமலத் திருவடியும், சிலம்பு அணிந்த சிற்றடி, அருமறை சிரமதில் சுடர் ஒளியும், முடிகொண்ட படர் அரவும், மதிநிகர் முகமும், அருள்சோதி புன்முறுவலும், முக்கண் நோக்கும், நெற்றியில் சுட்ட வெண்ணீறும், கரிகுழலும் மிளிர, செம்பட்டு உடையில், செங்கமலத்தை வலக்கரத்தில் ஏந்தி, அஞ்சேல் என அபயமளித்தபடி கொலுவீற்றிருக்கும் காத்தாயி அம்மன், தன்னை நாடி வந்தோர்க்கெல்லாம் தாயாகவே விளங்குகிறாள். (நன்றி : Dinakaran daily, 27 Jan 2012 )

Saturday, December 7, 2013

Siththar Gurusaami ammaiyaar


புதுவையில் உள்ள சித்தர் சமாதிகளில் குருசாமி அம்மையார் எனும் பெண் சித்தரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் யார், எங்கிருந்து வந்தார் மற்றும் அவருடைய வாழ்கைக் காலம் போன்றவை எதுவுமே யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு குருசாமி அம்மையார் என்று பெயர் வந்ததின் காரணமும் தெரியவில்லை.
அவர் எழுதி உள்ளதாக  கூறப்படும் ஒரு உயிலில் அவர் குருசாமி அம்மையார் என்று கையெழுத்து போட்டு உள்ளதினால் அந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். அவர் காலம் 1800 ஆம் ஆண்டின் முற்பகுதியாக இருக்கலாம் என்கிறார்கள். அவர் புதுவைக்கு வந்த காலத்தில் அந்த மானிலம் பிரான்ஸ் நாட்டவர் ஆட்சியில் இருந்தது. அவர் புதுவையில் வந்து தங்கி இருந்து அற்புதங்களை நிகழ்த்தி சமாதியும் அடைந்துள்ளார் என்ற அளவில் மட்டுமே அவரைக் குறித்து அனைவரும் அறிந்துள்ளார்கள்.

இந்த பெண் சித்தரின் சமாதி ஆலயம் கண்டமங்கலம் மாவட்டத்தில் விழுப்புரம் செல்லும் நெடும்சாலையில் அரியூர் எனும் சிற்றூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் உள்ளது. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் மிளகாயை அரைத்து அதை தண்ணீருடன் கலந்து அந்த தண்ணீரை அந்த அம்மையாரின் சிலைக்கு அபிஷேகம் செய்வார்களாம். அதற்கான காரணக் கதையும் கீழே உள்ளது.

குருசாமி அம்மையார் சமாதி ஆலயம் உள்ள இடம் பாண்டி மற்றும் தமிழ்நாட்டின் எல்லையில் உள்ளது. ஒருவிதத்தில் பார்த்தால் இந்த ஜீவ சமாதி ஆலயம் தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரியின் எல்லை போலவே இருந்து உள்ளது. பாண்டிச்சேரி அந்த காலத்தில் பிரெஞ்ச் நாட்டவர் ஆட்சியில் இருந்ததினால் இந்திய நாட்டை சேர்ந்த சாமியார்கள் அதிக விளம்பரம் பெற்றதில்லை. அப்படிப்பட்ட தெய்வீகப் பிறவிகளை இந்து மதத்தினர் வெளிப்படையாக ஆராதிக்க முடியாமல் மத கட்டுப்பாடுகள் தடுத்து வந்துள்ளன என்பதே அதன் காரணம்.  நாடு விடுதலைப் பெற வேண்டும் என்பதற்காக புரட்சியாளர்கள் பல்வேறு உருவங்களில் வந்து அரசாங்கத்துக்கு தொல்லைகளை தந்து வந்ததினால் சாமியார்கள் மற்றும் சாதுக்கள்  என யாரையுமே மக்கள் கூட்டமாக சென்று பார்க்க முடியாத நிலையை அன்றைய வெளிநாட்டு அரசு தோற்றுவித்து  இருந்தது.

குருசாமி அம்மையார் பாண்டிச்சேரிக்கு வந்து வாழ்ந்திருந்த காலத்தில் இந்தியா ஆங்கிலேய நாட்டவர் ஆதிக்கத்தில் இருந்தது. அவர்களை எதிர்த்து இந்தியர்கள் ஆங்காங்கே புரட்சி செய்து கொண்டு இருந்தார்கள். தமிழ்நாடு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்திருக்க பாண்டிச்சேரியோ பிரெஞ்ச் நாட்டவர் ஆதிக்கத்தில் இருந்தது. ஆகவே பிரெஞ்ச் நாட்டவரின் காவல் துறையினரும் ஆங்கிலேய அரசின் காவல் துறையினரும் அன்றைய மதராஸ் எனப்பட்ட இடத்திலும் மதராசை தொட்டபடி இருந்த பாண்டிச்சேரியின் எல்லை பகுதியாக இருந்த கண்டமங்கலத்திலும் காவலில் இருந்ததினால் இந்த ஆலயத்துக்கு வருவதற்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள் பயந்திருந்தார்கள் என்றும் கூடக் கூறலாம்.

இந்த நிலைமையின் பின்னணியில் குருசாமி அம்மையார் பாண்டிச்சேரிக்கு வந்துள்ளார்கள். வந்தவர் உள்ளூர் மக்களைப் போன்ற ஜாடைகளைக் கொண்டவராக இல்லாமல் இந்தியாவின் வடநாட்டை சேர்ந்தவர் ஒருவரைப் போல வெளித் தோற்றத்தைக் கொண்டு இருந்ததினால் அவரை இந்தியாவின் வட பகுதியில் இருந்து அங்கு வந்துள்ள ஒருவர் என்றே நினைத்து இருந்துள்ளார்கள்.

இங்கு முக்கியமான ஒன்றைக் குறிப்பிட வேண்டி உள்ளது.  குருசாமி அம்மையார் யார் என்பதை யாராலும் கூற இயலவில்லை என்று  கூறப்பட்டாலும், அவர் கந்தசாமி சாமியார் என்பவருக்கு எழுதி கொடுத்துள்ளதாக  கூறப்படும் உயிலில் தம்மை அவர் கண்டமங்கலத்தை சார்ந்த  சுதர்சன ஐயங்காரின் குமாரத்தி குருசாமியம்மாள் என்றும் பிராமண ஜாதி, விஷ்ணு மதம் என்று எழுதி உள்ளத்தினாலும் அவர் வைஷ்ணவப் பிரிவை சார்ந்த  பிராமணர் ஒருவருடைய புதல்வியோ என்ற சந்தேகம் எழுவது இயற்கை  ஆகும். அதன் பின்னரே  அவர்  சைவப்  பிரிவிற்கு தம்மை மாதம் மாற்றிக் கொண்டு சன்யாசினியாக மாறி  இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அந்த சுதர்சன ஐயங்கார் யார் என்பதோ அவர் எங்கு வாழ்ந்து இருப்பார் என்பதோ தெரியவில்லை. மேலும் அவர் எழுதி உள்ளதாக கூறப்படும் உயில் 1900 ஆம் ஆண்டில் எழுதப்பட்டு உள்ளதினால் அவர்  ஏறக்குரிய அதே காலத்தில் வாழ்ந்து இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆகவே அவர் சுமார் 110 அல்லது 115 ஆண்டுகள் முன் வரை வாழ்ந்து இருக்க வேண்டும். அந்த கட்டத்தில்தான் பிரான்ஸ் நாட்டினர்  புதுச்சேரியில்  ஆட்சியில் இருந்துள்ளார்கள்.  தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆண்டுக் கொண்டு இருந்தார்கள்.

அந்த அம்மையாரும் கண்டமங்கலத்துக்கு வந்தப் பின் அங்கேயே தங்கி இருந்து கொண்டு தியானத்தில் அமர்ந்திருந்தார். தினக் கடமைகளையும், உணவையும் மறந்து, தன்னிலையையும் மறந்து வனப்பகுதியாக புற்களும், அடர்ந்த மரங்களும் சூழ்ந்து இருந்த ஒரு மரத்தடியில் நாள் முழுவதும் அமர்ந்திருந்தார்.

அவர் முகத்தில் ஒரு தெய்வீகக் களை இருந்துள்ளது. ஆகவே சாது போலவே தோற்றம் தந்து கொண்டிருந்த அந்த அம்மையாரிடம் அந்தப் பக்கத்தில் வந்து போகும் மக்கள் சென்று வணங்குவார்களாம். அந்த அம்மையாரும் அவர்களிடம் நலம் விசாரிப்பது உண்டு. நாளடைவில் மூதாட்டியாக உள்ளாரே என்று தம் வீட்டினரைப் போலவே கருதிக் கொண்டு அந்த அம்மையாரிடம் அந்தப் பக்கங்களில் செல்லும் சிலர் தமது மனக் குறைகளை இறக்கி வைப்பார்களாம். அவரிடம் தம் மனக் குறைகளைக் கூறியதும் அவரும் 'கவலைப்படாதே அனைத்தும் சரியாகிவிடும்' என்பதுபோல ஆசிர்வாதம் செய்து அனுப்புவார்.  அப்படி அங்கு வந்து அந்த அம்மையாரிடம் தமது தீராத மனக் குறைகளை கூறிவிட்டு சென்றதும், அவர்களது தீர முடியாத குறைகள் கூட விலகத் துவங்குமாம். அதனால் அந்த அம்மையார் ஒரு தெய்வப் பிறவி என எண்ணி அவரிடம் மக்கள் வரத் துவங்கினார்கள்.

மெல்ல மெல்ல அவரிடம் வந்து தம் பிரச்சனைகளைக் கூறிவந்த மக்களின் கூட்டம் அதிகரிக்க அந்த சித்தர் பெண்மணியும் அக்கம் பக்கங்களில் பிரபலமாகத் துவங்கினாராம். தம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தந்த அந்த அம்மையாருக்கு பலர் நிலங்களையும் தமது சொத்தின் ஒரு பாகத்தையும் கூட தானமாகக் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த சொத்துக்கள் எதையும் அந்த அம்மையார் தனக்கு பயன்படுத்திக் கொள்ளவில்லையாம். அதை எப்படி நிர்வாகிக்க வேண்டும் என அவர் உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளதான  (படத்தில் காணப்படுவது அந்த அம்மையார் எழுதிய உயிலின் பிரதி என எனக்கு ஒருவர் அனுப்பி வைத்திருந்த போடோ காப்பி ஆகும்)  செய்தியும் உள்ளது.  அந்த உயிலில் அவர் 'தான் நடத்தி வந்தது போலவே அவரது மரணத்துக்குப் பின்னர் (அதை ஜீவதுசை எனக் கூறி உள்ளார்) பரிபாலனம் செய்து கொண்டு இருக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டு உள்ளதினால் அவர் பல தர்மங்களை செய்து கொண்டு இருந்திருக்க வேண்டும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
  
அந்த சித்தப் பெண்மணியின் நடவடிக்கைகளும் விஜித்திரமாகவே இருந்தனவாம். முக்கியமாக பௌர்ணமி தினங்களில் அந்த அம்மையார் தன உடல் முழுவதும் அரைத்த மிளகாய் விழுதை தடவிக்கொண்டு அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்த கிணற்றில் குளிப்பது உண்டாம். அவர் கிணற்றில் இறங்கிக் குளிப்பதை வேறு யாரும் பார்க்கக் கூடாது என்றும் அப்படி அந்த விதியை மீறி அவர் குளிப்பதைப் பார்த்துவிட்டால் அந்த அம்மையாரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் ஒரு நம்பிக்கை இருந்தது. பல பெண்மணிகள் நான் நீ எனப் போட்டிப் போட்டுக் கொண்டு அந்த அம்மையாருக்கு அரைத்த மிளகாயை உடம்பெல்லாம் தடவி விடுவார்களாம். அப்படி செய்தால் அவர்களது பல குறைகள் விலகி அவர்கள் வேண்டியவை பலிக்கும் என்று நம்பினார்கள்.

குருசாமி அம்மையார்

ஒருமுறை அப்படி அந்த அம்மையார் குளிப்பதை அறிந்திடாமல் ஒரு பெண்மணி அந்தக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது அந்த கிணறு முழுவதுமே தலை முடியினால் மூடப்பட்டு உள்ளது போலாக காணப்பட்டது என்றும் ஒரு செய்தி உள்ளது. கிணற்றில் இறங்க   படிகள் கூட சரியாக இல்லாத நிலையில் எப்படி அந்த அம்மையார் கிணற்றில் குளித்து விட்டு மேலே வருவார் என்பது மர்மமாகவே இருந்தாலும் சித்தர்களால் எதையும் செய்ய முடியும், ஏன் வானில் கூட பறவைகளைப் போலப்  பறப்பார்கள் என்ற உண்மை நிலை உள்ளபோது அது ஆச்சர்யப்படக் கூடிய செய்தி அல்ல. ஆனால் அந்த காலங்களில் அது அதிசயமாகவே பார்க்கப்பட்டது.   அந்தக் கிணறு இன்று சமரச சன்மார்கக் கட்டிடத்தில் பாழடைந்த நிலையில் காணப்படுகிறதாம். பாண்டியில் வில்லியனூரை சேர்ந்த குருசாமி அம்மையாருடைய  பக்தர் ஒருவர் கொடுத்த தகவல்கள் பெயரில் இவற்றை எழுதி உள்ளேன். அம்மையார் பல இடங்களுக்கும் கால் நடையாகவே பயணம் செய்வாராம்.

அந்த அம்மையாரின் ஜீவசமாதியும் செடிகளும், முட்களும் பரவிக் கிடந்த அடர்ந்த செடிகளின் இடையே மூடப்பட்டுக் கிடந்தது உள்ளது. பல காலம் அது வெளியிலேயே தெரியாமல் இருந்தபோது, அந்த அன்னையின் பக்தரான நடராஜ ஸ்வாமிகள் என்பவரால் அவர் ஜீவசமாதி அடைந்திருந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. பல காலம் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு ஆன்மீக நடைப் பயணத்தில் ஈடு பட்டுக் கொண்டு இருந்த துறவியான நடராஜ ஸ்வாமிகளுக்கு ஒருமுறை ஒரு குரல் அழைத்து அவரை குருசாமி ஆலயத்துக்குப் போகுமாறு ஆணையிட்டது. அப்போது நடராஜ ஸ்வாமிகள் புதுவை மானிலத்தில் இருந்தார். அவை அனைத்தும் அப்போது ஆங்கிலேயர் வசம் இருந்த பூமிகளாகும். சாமியார், சாதுக்களை அவர்கள் மதிக்காத காலம். அதனால் இந்துக்கள் தாம் வணங்கி வந்திருந்த சாமியார்களையும் சாதுக்களையும் அதிக விளம்பரம் இல்லாமல் சந்தித்து வந்திருந்தக் காலம் ஆகும். அந்த நேரத்தில்தான் நடராஜ ஸ்வாமிகளுக்குக் கிடைத்த அந்தக் குரலின் ஆணையை ஏற்று அந்தக் குரல் கொடுத்த செய்தியின் அடிப்படையில் அரியூரில் இருந்த ஜீவசமாதி இடத்தைக் கண்டு பிடித்தார். அங்கு சென்றதும் மீண்டும் அந்தக் குரல் தான் அங்கேயே சமாதி உள்ளதாகக் கூற நடராஜ ஸ்வாமிகளும் அந்த சமிக்கையைப் புரிந்து கொண்டு புதர்களை அகற்றிப் பார்த்தபோது அதற்குள் இருந்த ஜீவசமாதி தெரிந்தது. அதைக் கண்டு பிடித்ததும் முதலில் அவர் அங்கு சிறு சமாதியை அந்த அம்மையாருக்காக எழுப்பினாராம். 

அதன் பின் மெல்ல மெல்ல அன்னையாரின் புகழும் பெருமையும் வளரத் துவங்கியது.   அன்னையின் ஆலயமும் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. இன்று அந்த ஆலயத்தின் மேம்பாடுகளை வள்ளலார் ஆன்மிகப் பேரவை  கவனித்து வருகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் குருசாமி அம்மையாரின்  சமாதி ஆலயத்துக்கு வந்து பல பெண்மணிகள் தமது குடும்பத்தின் வேண்டுகோள்கள் நிறைவேற குருசாமி அம்மையாரின் (மூலவர்) விக்கிரகத்துக்கு மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்யும் வழிபாடு நடக்கிறது.

ஆலயத்தில் குருசாமி அம்மையாரின்
மூலவர் சிலை 
பல பெண் பக்தர்கள் பௌர்ணமி தினங்களில் வந்து ஆலய வளாகத்திலேயே மிளகாய் அரைத்துத் தருவதை அந்த அம்மையாருக்கு ஒரு சேவையாகவே செய்கிறார்களாம். வியாழக்கிழமைகளில் பால், எலுமிச்சம்பழச் சாறு கொண்டு குருசாமி அம்மையாருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். வள்ளலார் ஆன்மிகப் பேரவையை சார்ந்த  குழுவினர் பக்தர்கள் தரும் காணிக்கையை ஏற்று அந்த சமாதி ஆலயத்தில் பௌர்ணமி மற்றும் விஷேஷ தினங்களில் அன்னதானம் செய்கிறார்களாம்.  

(பின் குறிப்பு:- இந்த கட்டுரையில் காணப்படும் அனைத்து செய்திகளும் எனக்கு அந்த அம்மையாரின் ஒரு பக்தர் மூலம் நான் கேட்டறிந்த வாய்வழிச் செய்தி ஆகும். அந்த பக்தர் நல்ல நிலையில் உள்ளவர்.  ஒரு பள்ளி ஆசிரியராக உள்ளார். அவரிடம் பேசியபோதே அவருக்கு உள்ள பக்தியும், நல்ல தன்மையும் வெளிப்பட்டது. அவர் மூலமே அம்மையார் எழுதி உள்ளதாக கூறப்படும் உயிலின் பிரதியும், ஆலயத்தின் படங்களும் கிடைத்தது. அவருடைய அனுமதியை கட்டுரை எழுதும்போது பெறவில்லை என்பதினால் அவருடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. இதே போன்ற கட்டுரைகளும்  செய்தியும்  சில பத்திரிகைகளிலும் பத்து அல்லது அதற்கு முந்தைய வருடங்களில் வெளியாகி உள்ளன. நான் அந்த ஆலயத்துக்கு இன்னும் செல்லவில்லை என்றாலும் அந்த பக்தர் கொடுத்த தகவல்கள் சரியான தகவல்களே  என்பது வெளிப்படுகிறது.  அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதையும் மீறி இதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அது  வாழ்மொழி செய்தியை சார்ந்தது ஆகும்.  எழுதி வைக்கப்பட்டு  உள்ள வரலாற்று செய்திகள் இல்லாத நிலையில் நான் கேட்டதை மட்டும் எழுதி உள்ளதினால்  இதில் செய்திப் பிழைகள் இருந்தால்  அதற்கு நான் பொறுப்பு அல்ல- சாந்திப்பிரியா )

Garudazhvaar -4


4
ஒரே புழுதி மண்டலமாக இருந்த இடத்தில் வெளியில் வந்திருந்த நாகங்கள் இரண்டும் கண்களில் புழுதி போகாமல் இருக்க ஒரு ஷணம் கண்களை மூடிக் கொள்ள அதுவே தருமணம் எனக் காத்திருந்த கருடன் வேகமாக கீழே பறந்து வந்து அந்த நாகங்களை அப்படியே தனது அழகினால் கொத்திக் கொண்டு வெளியில் வந்து அவர்களைக் கடித்துத் துப்பி விட அவை இரண்டும் மடிந்து விழுந்தன. சற்றும் தாமதிக்காத கருடன் அந்த ராட்டினத்தின் மையப் பகுதிக்குச் சென்று பாலகியா முனிவர்கள் கொடுத்திருந்த சக்தியைப் பயன்படுத்தி தன் உடம்பை மிகச் சிறியதாக்கிக் கொண்டு புழுதி மண்டலம் இருந்தபோதே  உள்ளே நுழைந்து ராட்டினத்தின் அடிப் புறத்தில் இருந்த பல் சக்கரத்தில் ( Gear ) ஒரு கட்டையை வைத்து ராட்டினத்தை நிறுத்தி விட்டு அதன் அடிப்பகுதியை உடைத்து எறிந்தது.  அதன் பின் அமிர்த கலசத்தை வெளியில் எடுத்துக் கொண்டு வந்தது. கருடனை எதிர்க்க வந்தவர்களை தன் சக்தி மிக்க இறகுகளினாலும் கால் நகங்களினாலும் கீறிக் குதறிக் கொன்றது. அதன் பராக்கிரமத்தை தாங்க முடியாமல் போன தேவ கணங்கள் அங்கிருந்து ஓடிச் சென்று இந்திரனிடம் முறையிட்டன.

ஓடோடி அங்கு வந்த தேவேந்திரன் அந்த குடத்தை எடுத்துக் கொண்டு வானிலே கருடன் பறந்தபோது அதன் மீது தனது வஜ்ராயுதத்தை வீசி அதன் இறகுகளை வெட்ட நினைத்தார். ஆனால் அந்த கருடனை சுற்றி பாலகில்யா முனிவர்களின் சக்தி அரண் போல தடுத்து இருந்ததினால் அந்த முனிவர்களின் தவ வலிமைக்கு எதிராக இந்திரனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அப்போது நடப்பதை அனைத்தையும் வானில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த மகா விஷ்ணுவோ கருடனின் தாய் பாசம், சமயோசித புத்தி, சாமர்த்தியம், வீரம் மற்றும் கடமை உணர்ச்சி மற்றும் இந்திரனையே எதிர்த்து நின்று வெற்றி கொண்ட தன்மை போன்றவற்றைப் பார்த்து கருடனை தன்னிடம் அழைத்து அதற்கு அருளாசிகளை தந்தார். அதற்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க கருடனும் தான் வந்த காரியத்தை எடுத்துரைத்தப் பின் தனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை என்றும் தன்னை மகாவிஷ்ணுவின் வாகனமாக ஏற்றுக் கொண்டு தன் மீது அமர்ந்து கொண்டே மகா விஷ்ணு பயணிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கூறினார். அதைக் கேட்டு மேலும் மகிழ்ந்து போன விஷ்ணுவோ அவரை தன் வாகனமாக ஏற்றுக் கொண்டு அதை தன் கொடியிலும் இருக்குமாறு அருள் புரிந்தார்.

அப்போது அங்கு வந்த இந்திரனும் கருடனிடம் தன் தவறுக்கு மன்னிப்பைக் கேட்டப் பின் அந்த அமிர்தக்  குடத்தை திருப்பித் தந்து விடுமாறு வேண்டினார். ஆனால் கருடனோ தான் அதைக் கொண்டு சென்றால் மட்டுமே தன்னுடைய தாயார் விடுதலை அடைவார் என்பதினால் அதை மீண்டும் யாரும் பயன்படுத்தாமல் மீட்டுக் கொண்டு வரும் ஒரு உபாயத்தையும் இந்திரனுக்குக் கூறினார். அதை ஏற்றுக் கொண்ட இந்திரனும் மாறு வேடத்தில் கருடனுடன் பூமிக்குப் பயணித்தார்.

தனது  இளைய தாயார் காதுவிடம் சென்ற கருடனும் ஒரு அந்தணர் வேடத்தில் வந்திருந்த இந்திரனின் கையில் வைத்திருந்த அந்த கலசத்தை காத்ருவிடம் கொடுத்து விட்டு தன் தாயார் வினிதாவை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டார். இனி அமிர்தத்தை தன்னுடைய புத்திரர்களான நாகங்கள் உண்டு விட்டால் அவற்றுக்கு இறவாமை கிடைத்து விடும் என எண்ணிய காத்ருவும் நாகங்கள் அனைத்தையும் அழைத்தாள். அவை அங்கு வந்தவுடன் அந்த குடத்தில் இருந்த அமிர்ததை எடுத்து உண்ணுமாறு ஆனந்தத்துடன் கூறிக் கொண்டு இருந்தபோது அந்தணர் உருவில் அவர்கள் முன் நின்றிருந்த இந்திரனும் அந்த அமிர்தத்தை நதியில் குளித்து விட்டு வந்து உண்ணாமல் அப்படியே உண்டால் பலன் கிடையாது என்ற ஒரு விதி உள்ளதாகக் கூறி அவர்கள் அனைவரையும் குளித்து விட்டு வருமாறு கூறினார். அவர்கள் குளித்து விட்டு வரும் முன் அந்த இடத்தை சின்ன யாகம் செய்து தூய்மைப் படுத்தி அமிர்த கலசத்துக்கும் பூஜை செய்து தயாராக வைத்திருப்பதாகவும் அதன் பின் அவர்கள் அதை உண்ணலாம் என்றார். அதனால் காத்ருவும் தன் கையில் இருந்த அமிர்த கலசத்தைக் கீழே வைத்தாள்.

அந்த அந்தணர் கூறியதைக் கேட்டவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு நதியில் குளிக்கச் சென்றதும் பூஜைகளை துவக்குவது போல பாசாங்கு செய்த இந்திரனும் காத்ரு கீழே வைத்த அமிர்த கலசத்தை தூக்கிக் கொண்டு இந்திர லோகத்துக்கு பறந்து போய்விட்டார். காத்ருவினாலும், அவளுடைய மகன்களினாலும் இந்திரனின் சக்திக்கு பதில் தர முடியவில்லை. இப்படியாக கருடன் தனது தாயாரை அடிமைத்தனத்தில் இருந்து சாமர்த்தியமாக மீட்டதும் இல்லாமல் அமிர்தத்தையும் அந்த தீய நாகங்கள் உண்ணாமல் தடுத்து நிறுத்தி மகா விஷ்ணுவின் வாகனமாகவும் மாறிவிட்டார்.

கருடன் விஷ்ணுவின் வாகனமாக மாறிய பின் அவருக்கு கருடாழ்வார் என்ற பெயரும் கிடைத்தது. இப்படியாக இருக்கையில் கிருத யுகத்தில் அஹோபலி எனும் இடத்தை ஒரு கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனே ஹிரண்யகசிபு. அவன் கடவுள் நம்பிக்கை அற்றவன். ஆனால் அவனுடைய மகனோ விஷ்ணுவின் பக்தன். ஆகவே தன் மகனையே ஹிரண்யகசிபு கொடுமை படுத்தி வந்தான். ஆகவே தனது பக்தனான சிறுவன் பிரஹலாதனைக் காக்க விஷ்ணுவும் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்தபோது கருடனால் அவருடன் அந்த  தூண்  உள்ளே விஷ்ணுவை சுமந்து கொண்டு செல்ல முடியாமல் போயிற்று. அதனால் கருடன் வருத்தம் அடைந்து பெருமாளிடம் தனக்கும் அவருடைய நரசிம்ஹ அவதார காட்சியை காட்டி அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதற்கு மகா விஷ்ணுவும் அந்த அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என்றால் கருடன் சில காலம் அஹோபிலோகத்தில் இருந்தவாறு தம்மை நோக்கி தவம் இருக்க வேண்டும் என்றும் அப்படி தவம் இருந்தால் தவத்தின் முடிவில் தான் அங்கேயே கருடனுக்கு நரசிம்ம அவதார காட்சியை தருவதாகவும் வாக்கு தந்தார்.

பெருமாளை நரசிம்ஹ மூர்த்தி கோலத்தில் கண்டு களிக்க வேண்டும்  ஆசையில் பூமிக்கு ஒரு முனிவர் போல மனித உருவில் வந்து கடுமையான தவத்தில் இருந்த கருடனின் தவ சக்தியினால் வெளிப்பட்ட வெட்பம் தேவலோகம்வரை சென்றது. பூமியும் தேவலோகமும் கொதிக்கத் துவங்கியதைக் கண்ட இந்திரன் மீண்டும் கவலை அடைந்தான். ஏற்கனவே தேவலோகம் வந்து அமிர்த கலசத்தை கொண்டு சென்று இருந்த கருடனின் பராக்கிரமத்தை பார்த்திருந்த இந்திரன் அந்த வெட்பத்தினால் தேவலோகம் தவிப்பில் ஆழ்ந்து விடுமோ என்று கவலைக் கொண்டு கருடனின் யாகத்தை கலைக்க முடிவு செய்தான். கருடன் மனிதப் பிறவி எடுத்து வந்து தவத்தில் இருந்ததினால் அவரை ஊர்வசியின் அழகில் மயங்க வைத்து அவள் மோக வலையில் சிக்க வைத்தால் தவமும் கலையும், கருடனுக்கு பெருமாளின் நரசிம்ஹ அவதாரக் காட்சியும் கிடைக்காது என எண்ணிக் கொண்டு ஊர்வசியை அனுப்பினார். ஊர்வசியும் அபிலோகத்துக்கு வந்து அற்புத இனிய கீதங்களைப் பாடியும், அற்புதமான நடனங்களை ஆடியும் கருடனின் தவத்தைக் கலைக்க முயன்றாள்.

அவள் எத்தனை முயன்றும் கருடன் அவளை பார்க்கவும் இல்லை, அவள் அழகில் மயங்கவும் இல்லை. தன் மனம் அலை பாயாமல் பெருமாளின் ஒரே நினைவுடன் தவத்தில் இருந்தார். பல நாட்கள் அவள் முயன்று பார்த்தும் கருடனின் மனதை கலைக்க முடியாமல் போனதினால் வெட்கமுற்ற ஊர்வசி தேவேந்திரனிடம் திரும்பிச் சென்று தன்னால் அவர் தவத்தைக் கலைக்க முடியவில்லை என்ற உண்மையைக் கூறி கருடனின் பக்தியையும் வெகுவாக அவரிடம் புகழ்ந்து கூறினாள். கருடனின் திடமான பக்தியைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் கருடன் தவத்தை மெச்சி அவர் விரும்பியபடியே உக்ரஹ நரசிம்ஹராக பிரஹலாதனுக்கு எப்படி காட்சி தந்தாரோ அதே காட்சியை கருடாழ்வாருக்கும் தந்து அவருக்கு தனது பூரண அருளாசியையும் தந்தார். இப்படியாக பூரண பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிய சேவை என்று மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்ததினால்தான் அவர் கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத்தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.

முற்றும்

Garudazhvaar - 3


3
அவர்கள் ஏற்கனவே இந்திரனை பழி தீர்ப்பதற்காக பல காலமாக காத்து இருந்தவர்கள். பாலகியா என்ற அந்த முனிவர்களுக்கு இந்திரனின் மீது ஏன் கோபம்? அதற்கு பின்னணிக் கதை உண்டு. ஒருமுறை தக்ஷப்ரஜாபதி ஒரு பெரிய யாகம் செய்தார். அப்போது காஷ்யப முனிவர் தன் சார்ப்பில் அந்த யாகத்துக்கு 60000 க்கும் மேற்பட்ட பாலகியா முனிவர்களை அனுப்பினார். அவர்கள் தோற்றத்தில் குள்ளமானவர்கள். அந்த யாகத்துக்கு தன் சார்ப்பில் இந்திரனும் பல முனிவர்களை அனுப்பி இருந்தான். தன்னுடைய பெருமையை பறை சாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இந்திரனும் அனைத்து வனங்களில் இருந்தும் யாகத்துக்குத் தேவையான விறகுகளை எடுத்துப் போய் விட்டதினால் பல வனங்களிலும் தேடி அலைந்தும் அந்த பாலகியா முனிவர்களுக்கு யாகக் கட்டைகள் கிடைக்காமல் வெறும் கையுடன் யாகசாலைக்கு செல்ல வேண்டி இருந்தது.  அப்படி அவர்கள் சென்றபோது யாகக் கட்டைகள் எதையும் கொண்டு செல்ல முடியாமல் வெறும் கையுடன் யாகத்தில் கலந்து கொள்ள வந்த அவர்களை கண்டு இந்திரன் எள்ளி நகையாடினான். அதனால் கோபமுற்ற அந்த முனிவர்கள் யாகத்தில் கலந்து கொள்ள முடியாமல் திரும்பினார்கள். அப்போது அவர்கள் எப்படி தம்மை இந்திரன் அவமானப்படுத்தினாரோ அது போலவே தாம் அனுப்பும் எவர் மூலமாவது இந்திரனும் அவமானப்படுவான் என்று சாபமிட்டார்கள். அதற்காக அவர்கள் கடுமையான தவம் இருந்து இந்திரனை அவமதிக்கும் விதத்திலான ஒருவரை தோற்றுவிக்க வேண்டும் என்று காஷ்யப முனிவரை வேண்டி வந்ததினால் அவரும் அதுவே நல்ல தருணம் என எண்ணிய காஷ்யப முனிவரும் கருடனை அவர்களிடம் செல்ல இப்படி ஒரு நாடகத்தை நடத்தி இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது.

அதனால் காஷ்யப முனிவர் மூலம் தமக்கு அறிமுகமான கருடன் தங்களுடைய சார்ப்பாகவும் தேவலோகம் சென்று இந்திரனிடம் இருந்து அமிர்தத்தை  வெற்றிகரமாக எடுத்து வந்து இந்திரனை அவமானப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டார்கள். அதற்கான தவ வலிமையையும் அவர்கள் கருடனுக்குத் தந்தார்கள்.

தேவலோகத்துக்கு வந்து கருடன் அமிர்தத்தை கவர்ந்து  செல்ல உள்ள செய்தி தேவேந்திரனின் காதுகளையும் எட்டியது. அவர் கவலையுற்றார். அதை தடுத்தே ஆக வேண்டும். இல்லை என்றால் பாம்புகள் அமிர்தத்தை உண்டு சாகா வரம் பெற்றிடும். அதனால் பிற்காலத்தில் பல தொல்லைகள் ஏற்படும். அமிர்தம் என்பது தேவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை உணர்ந்தார். ஆகவே அதை தடுத்து நிறுத்தும் முயற்சிக்காக இந்திரன் அந்த குடத்தை சுற்றி அற்புதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

அமிர்த குடத்தை பாதுகாப்பதற்காக இரவும் பகலும் பெரிய, பெரிய கண்களை திறந்து வைத்து இருந்தபடி இருக்கும் இரண்டு ராக்ஷச நாகங்களை அதை சுற்றிக் கொண்டே இருக்குமாறு அங்கு தங்க வைத்தார். அவை இரண்டும் குடத்தை சுற்றி வந்தபடி ஓயாமல் வாயில் இருந்து விஷக் காற்றை வீசிய வண்ணம் இருந்தன. அந்த அமிர்த கலசம் மற்றும் நாகங்களை சுற்றி குடை ராட்டினம் போல பயங்கரமாக சுற்றிக் கொண்டே இருந்த இரண்டு ராக்ஷச சக்கரங்கள் இருந்தன. அந்த சக்கரம் முழுதுமே நன்கு கூர்மையாக்கப்பட்ட கத்திகளைக் கொண்டது. அவற்றின் அருகில் செல்பவர்களை துண்டு துண்டாக வெட்டி விடும். அத்தனைக் கூர்மையானது. அதன் மத்திய பகுதியில்தான் நாகங்கள் மேலே பார்த்தபடி அமர்ந்து கொண்டு இருந்தன. அந்த நாகங்களைக் கொன்றால் மட்டுமே அந்த துவாரத்தின் வழியே உள்ளே செல்ல முடியும். அவற்றைத் தாண்டி சுற்றிலும் லட்சக் கணக்கான இந்திரகணங்கள் கருடன் வருகிறதா என வானத்தைப் நோக்கி பார்த்தபடியே இரவும் பகலும் காவலில் இருந்தன.

இந்த நிலையில் அந்த கலசத்தை எடுத்து வருவது மிக்க கடினமானது என்பதை மேலே சுற்றிக் கொண்டு இருந்த கருடன் உணர்ந்தார். சிறகோடு அதன் அருகில் சென்றால் சிறகுகள் துண்டு துண்டாக சீவப்பட்டு விடும். ஆகவே முதலில் அந்த சக்கரம் சுற்றுவதை நிறுத்த வேண்டும். அதற்கான ஒரே வழி உள்ளே சென்று அதன் அடிப் புறத்தில் உள்ள பல் சக்கரத்தில் ( Gear ) ஒரு கட்டையை வைக்க வேண்டும்.

மேலே கருடன் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. எப்படி உள்ளே நுழையலாம் எனப் பார்த்துக் கொண்டே இருந்தபோது நாகங்கள் இரண்டும் சுற்றிக் கொண்டு சக்கரத்தின் நடு துவாரத்தில் தலையை விட்டு வெளியில் பார்த்தபடி இன்னும் அதிகமாக விஷத்தையும் தீ ஜுவாலையும் கக்கத் துவங்கின. அதன் அருகில் செல்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு எதுவும் கிடையாது என்பதினால்தான் இந்திர கணங்கள் அந்த ராட்டினத்தின் அடிப்பகுதியில்தான் காவலில் இருந்தன.

இங்கு இன்னொன்றைக் கூற வேண்டும். இந்த நாடகங்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது கருடனுக்கும் நாகங்களுக்கும் சம பலமே இருந்தது. கருடனால் நாகத்தைக் கொல்ல முடிந்த சக்தி இல்லை. ஆகவே என்ன செய்யலாம் என யோசனை செய்த கருடன் அங்கிருந்து பறந்து சென்று தேவலோக மண்ணில் புரண்டு எழுந்தது. அத்தனை தூசியையும் தன் உடம்பில் எடுத்துக் கொண்ட கருடன் தன் இறக்கைகளை படபடவென அடித்து அந்த பகுதி முழுவதையுமே கண்களே தெரியாத  அளவிற்கு  புழுதி மேகத்தினால் நிரப்பியது.  யார் எங்கு உள்ளார்கள் என்பதையே பார்க்க முடியாமல் அனைவரும் கண்களை இறுக மூடிக் கொள்ள வேண்டிய அளவு அந்த பகுதி முழுவதுமே புழுதி மண்டலமாயிற்று.  எதனால் அப்படி ஒரு நிலைமை தோன்றியது என்பதையே யாராலும் தெரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். அதுவே நல்ல தருமணம் என்பதை கருடன் உணர்ந்தார். 
.............தொடரும்