Friday, November 28, 2014

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 4

-4-


பன்னிரண்டாம் செட்டியார் கதை என்ன?  இதுவும் செவி வழிக் கதைதான். காவிரி பூம்பட்டினத்தை ஆண்ட சோழ மன்னன் ஒருவன் செட்டியார் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மணக்க விரும்பினான். ஆனால்  காவிரி பூம்பட்டினத்து வணிகர்கள் தம்முடைய பெண்ணை வேறு இனத்தவருக்கு மணமுடித்துக் கொடுக்க உடன்படவில்லை.  மன்னன் எத்தனையோ முறைக் கேட்டும் அவர்கள் அதற்க்கு உடன்படவில்லை என்பதினால் கோபம் கொண்ட மன்னன் அவர்கள் வசித்த நகருக்குத் தீயிட்டான். அங்கிருந்த பலரும் தீயினால் மரணம் அடைய,  அவர்களில் வணிகர் குலத்தைச் சேர்ந்த பதினோரு பேர் தீயிலிருந்து தப்பி பல பொருட்களையும் எடுத்துக் கொண்டு அந்த நகரை விட்டு வெளியேறி தாம் தங்கி இருக்க நாட்டின் பல இடங்களுக்குச் சென்றனர். ஆனால் எந்த இடமும் சரிவர அமையவில்லை என்பதினால் அந்த பதினோரு வணிகர்களும் தங்கள் பொருட்களுடன் ஐயர் மலைக்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவர்கள்  தாம் கொண்டு வந்திருந்த பொருட்களை பாகம் பிரித்துக் கொண்டார்கள். எப்படி பாகம் பிரித்தாளும் அதை மீண்டும் எண்ணும்போது அது பன்னிரண்டு பாகங்களாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே சலித்துப் போனவர்கள் சரி நம்முடைய பங்கை எடுத்துக் கொண்டபின் மீதி உள்ள பன்னிரண்டாம் பங்கை செய்வது எனப் புரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தபோது அங்கு ஒரு அந்தணர் வந்தார்.  வந்தவர்  'ஏன் இப்படி சோகமாக அமர்ந்திருக்கிறீர்கள்' என அவர்களிடம்  கேட்டதும் அவர்களும் நடந்ததை அவர்கள் அவரிடம் கூற அந்த அந்தணர் 'சரி அந்த பன்னிரண்டாம் பாகத்தை நீங்கள் ஏன் இங்குள்ள இறைவனுக்கு தரக்கூடாது'  என்று கேட்க, அதுவே சரியான வழி என அவர்கள் மனதில் விழுந்தது. தயங்காமல் அவர்களும் 'ஐயா, உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்கிறோம். இதை இதோ இறைவனுக்கு உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கிறோம்' என தயங்காமல் கூறிவிட்டு பன்னிரண்டாவது பாகத்தை இறைவன் சன்னதியில் வைக்க அந்த அந்தணரும் மறைந்தார். சிவபெருமான் அவர்கள் முன் காட்சி தர அவர்கள் அப்படியே அவர் பாதத்தில் விழுந்து வணங்கினார்கள்.  அவரும் 'பக்தர்களே, இனி நானும் உங்களில் ஒருவன். இனி நீங்கள் பதினோரு பேர்கள் அல்ல, பன்னிரண்டாவதாக நானும் உங்களுடன் இருப்பேன்' என அவர்களுக்கு ஆசிகளை தந்தப்  பின்னர் மறைந்து போனார்.   அதைக் கண்டு மகிழ்ந்து போன பன்னிரண்டு செட்டியார்களும் 'இனி நாங்கள் சம்பாதிப்பதில் எங்களால் முடிந்ததை இங்குள்ள இறைவனுக்கே தந்து விடுகிறோம்' என அங்கேயே சங்கல்பம் செய்து கொண்டார்கள். அது முதல் அவர்கள் வருவாயில் பன்னிரண்டில் ஒரு பங்கு இறைவனுக்குச் சேர்க்கிறார்கள்.


இதனால்தான் அந்த வணிகர்களின் குலத்துக்கு பன்னிரண்டாம் செட்டியார்கள் என்ற பெயர் ஏற்பட்டது. பல ஊர்களில் பரவி உள்ள இந்த பன்னிரண்டாம் செட்டியார் இனத்தவர் ரத்தினகிரீஸ்வரரையே தங்கள் குல தெய்வமாகக் ஏற்றுக் கொண்டு பக்தி மார்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்கள். சிவபெருமான் பன்னிரண்டாம் பங்கு பெற்ற வரலாறு வாட்போக்கிக் கலம்பகம்,  இரத்தினகிரி உலா போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டு உள்ளது.
ஆலயத்துக்குள் நுழைந்துடன்  தட்சிணாமூர்த்தி சன்னதி காணப்படுகிறது. அவரை தரிசனம் செய்தபின்னரே மூலவரான ரத்னகிரீஸ்வரரை தரிசிக்க வேண்டுமாம்.  சித்திரை மாத சிவராத்திரி நாட்களில்  சூரிய ஒளி  கிரணங்கள் கருவறைக்கு  நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக உள்ளே வந்து மூலவர் மீது விழுவதை குறிப்பிடுகையில் அன்று சிவபெருமானை இங்கு வந்து சூரியன் நமஸ்கரிப்பதாகக் கூறுகிறார்கள்.   எட்டு  பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் திருவாட்போக்கி எனும் ரத்னகிரீஸ்வரராக ஸ்வயம்புவாக அவதரித்துள்ள சிவபெருமான் அங்கு வந்து தன்னை வணங்கி வேண்டி நிற்கும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.

இந்த ஆலயத்தில் மூலவர்  மேற்கு நோக்கியும், அவருடைய மனைவியான பார்வதி சுரும்பாற்குழலி மற்றும் ஆராளகேஸ்வரி எனும் பெயருடன் கிழக்கு நோக்கி இருந்தபடி  காட்சி தருகின்றனர். இந்த தலத்தில் சாப விமோசனம் பெறுவதற்காக இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன், அகத்தியர் முதலியோர் வந்துள்ளனர். ரத்னகிரீஸ்வரரை இங்கு வந்து வணங்கி வழிபட்டால்  திருமணத்தில் ஏற்படும் தடங்கல் விலகும், தொழில் அபிவிருத்தி அடையும், புத்திர பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.   மலையில் படிகள் வழியே மேலே ஏறிச் செல்லும்போது அங்குள்ள மூலிகை மரங்கள் மீது விழுந்தபடி வீசும் காற்றை   சுவாசிப்பதினால் ஆஸ்தும, ரத்த கொதிப்பு, நெஞ்சுவலி, கை கால் மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் விலகுமாம்.

-  முடிவுற்றது  -

Thursday, November 27, 2014

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 3

-3-

இந்த மலைக்கு வந்து வாயுபகவான் சாபவிமோசனம் பெற்றதை அறிந்திட்ட ஆதிசேஷனும் மகாவிஷ்ணுவிடம் சென்று தனக்கு  முன்னொரு ஜென்மத்தில் சகோதரர்களைக் கொன்றதினால் ஏற்பட்ட தோஷத்தையும், மேரு மலையை உடைத்ததற்கு காரணமாக தானும் இருந்ததினால் அதனால் பெற்ற சாபத்துக்கும்  விமோசனம் பெற என்ன செய்ய வேண்டும் எனக் கேட்க அவரும் அதே மலைக்குச் சென்று சிவபெருமானை வேண்டித் தவம் இருக்குமாறும் அப்படி செய்து சிவபெருமானின் அருளைப் பெற்றால் மட்டுமே சாபவிமோசனம் பெற முடியும் என்றதும், ஆதிசேஷனும் அங்கு சென்று ஒரு தீர்த்தம் அமைத்து,  அதில் தினமும் நீராடி சிவபெருமானை துதித்து பல காலம் தவமிருந்து சாப விமோசனம் அடைந்தார்.

ஆதிசேஷனின் இந்த நிலைக்குக் ஒரு பின்னணிக் காரணம் உண்டு. கிருஷ்ண பகவானின் முடிவு காலம் நெருங்கியபோது யாதவர்கள் தமக்குள்  தாமே சண்டை இட்டுக் கொண்டு யாதவ வம்சத்தை அழித்துக் கொண்டபோது அதில்  கிருஷ்ணருடைய சகோதரரான பலராமர்  பங்கேற்று பல யாதவர்களை  கொல்ல நேரிட்டது.  ஆகவே சகோதரர்களைக் கொன்ற தோஷம் ஏற்பட்டு இருந்தது.  ஆகவே அவர் வாழ்க்கையில் வெறுப்புற்று  ஆதிசேஷனாக மாறி விஷ்ணுவிற்கு ஆசனமாக மாறினாலும் அந்த தோஷம் அவரைத் தொடர்ந்தது. விஷ்ணுவே கிருஷ்ணராக  அவதரித்து  இருந்தார்.  அவரால்தான்  பலராமரும் இந்த தோஷத்தைபெறக் காரணமாக இருந்தார் என்பதினால் அந்த சாப விமோசனத்தை அவரால் தரமுடியாது. ஆகவே விஷ்ணு பகவான்  ஆதிசேஷன் அவதாரத்தில் இருந்த பலராமரை   வாயுவுடன் போர் புரிய வைத்து  அதன் மூலம்  இன்னொரு சாபம் பெற்று, அதற்கு சாப விமோசனம்  பெறுவதின் மூலம் பாலராமராக இருந்தபோது பெற்ற சாபத்தையும் விலக்கிக் கொள்ள வழி வகுத்தாராம்.  இதெல்லாம்  வாய் வழியாக கூறப்பட்டு வரும் கதைகளே.

அது போலவே தொண்டை நாட்டில் இருந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த சிவபதியில் முதலியார் இனத்தில் பிறந்த வைராக்கியப் பெருமாள் எனும் பக்தருக்கு வெகு காலம் குழந்தைப் பிறக்காமலேயே இருந்தது. ஆகவே அவர் பல தலங்களுக்கும் சென்று தமக்கு குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டி வந்தார். அப்படி தலம் தலமாக சுற்றிக் கொண்டு இருந்தவர் எங்கு சென்றும் தமக்கு குழந்தைப் பாக்கியம் பெறும் பாக்கியம் கிடைக்கவில்லையே என நொந்து போய் முடிவாக இந்த இடத்துக்கும் வந்தார். மலை மீது இருந்த சிவலிங்கத்தை 'ஈசனே, நான் பல இடங்களுக்கும் சென்று பல காலம் வேண்டியும் எனக்கு குழந்தை பாக்கியமே கிடைக்கவில்லை என்பதினால் மனம் சோர்ந்து விட்டேன். முடிவாக உன்னிடம் சரண் அடைந்து உள்ளேன். எனக்கு குழந்தைப் பாக்கியம் கிடைத்தால் இங்கேயே வந்து என் தலையையே உனக்கு காணிக்கையாகத் தருகிறேன்' மனதார வேண்டிக் கொண்டார். தினமும் இப்படியே வேண்டியவாறு சில காலம் அங்கு தங்கி இருந்தவர் கனவில் ஒரு நாள் சிவபெருமான் தோன்றி அவர் வேண்டியது நிறைவேறும் என ஆசி கொடுத்தார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து போன பெருமாள் வீடு திரும்பினார். அடுத்த வருடமே அவருடைய மனைவிக்கு குழந்தையும் பிறந்தது.

தன்னுடைய வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றித் தந்ததினால் அவர் தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு ரத்னகிரீஸ்வரர் ஆலயத்துக்கு சென்றார். அங்கு பூஜைகளை செய்தப் பின் கீழிறங்கி வந்து தான் சிவபெருமானிடம் கூறியது போல சற்றும் தயங்காமல் தனது கையில் கொண்டு வந்திருந்த வாளினால் தனது தலையை துண்டாக்கிக் கொண்டு காணிக்கையை செலுத்தினார். அந்தத் தலை அப்படியே பறந்து போய் மலை மீது விழ, உடல் பூமியில் விழுந்தது. அவர் பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவனார் அவருக்கு காட்சியைத் தர, தாம் வேண்டிக்கொண்டபடி வாக்கில் பிறளாது தமது தலையை கொய்து கொண்ட அந்த பக்தரின் பக்தியால் மகிழ்ந்து போன தேவர்கள் தேவலோகத்தில் இருந்து பூமாரி பொழிந்தனர்.

அவர் பக்தியை மெச்சிய சிவபெருமான் அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அந்த ஆலயத்தில் சில விதிமுறைகளை ஏற்படுத்தினார்.  அதன்படி அந்த சன்னதியின் அடுத்து அமைந்துள்ள சன்னதியில் உள்ள வைராக்கியப் பெருமாளுக்கே  இறைவனுக்குச் சூடிய மாலைகள் முதலில்  சூட்டப்படும். அடுத்து  இறைவனுக்கு  கற்பூர ஆரத்தி எடுத்தப்  பின் முதல் மரியாதையாக இவருக்குத்தான் கல்பூர ஆரத்தி காட்டப்பட வேண்டும். அது போலவே  இறைவனுக்கு படைத்த நெய்வித்தியமும் இவருக்கே முதலில் தரப்படும். அது மட்டும் இல்லாமல்  மலையின் அடிவாரத்தில் இவர் உடம்பின் அடிப்பாகம் ஒரு சன்னதியாகவும், நடுப்பாகம் மலைக்கு செல்லும் நடு வழியில் ஒரு சன்னதியாகவும், அவருடைய தலை பாகம் மலைமேல் இறைவன் சன்னதிக்கு மிக அருகில் ஒரு சன்னதியாகவும் அமைந்துள்ளது.

கீழிருந்து மலை மீது ஏறிச் செல்லும்போது வழியில் ஆங்காங்கே இருபத்தொரு மண்டபங்கள் காணப்படுகின்றன. அவை பல்வேறு காலங்களில் அமைந்தவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புராணக் கதையும் உள்ளது. அவற்றில் குறிப்பிட வேண்டியவை இலட்ச தீப மண்டபம், காக்கை மண்டபம், வசந்த மண்டபம், சகுனக்குன்று, பொன்னிடும் பாறை மற்றும் பதினெட்டாம் படி போன்றவை ஆகும்.

காக்கை மண்டபத்தின் மீது காகங்கள் பறப்பதில்லை, காகங்கள் அங்கு வந்து அமர்வதும் இல்லை. ஒருவிதத்தில் பார்த்தால் காகம் என்பதே இல்லாத பகுதியாக அந்த மண்டபம் உள்ளது. அதன் காரணம் ஒன்று உண்டு. ஒருமுறை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய ஒரு பக்தர் ஒருவர்ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்து வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய அதைக் கீழே வைத்தபோது, அதைக் கவ்வி எடுத்துச் வேகமாக பறந்து வந்த ஒரு காக்கை அந்தக் கிண்ணத்தை கவிழ்த்து விட்டு பறந்து ஓடிவிட, அடுத்த சில அடி தூரத்திலேயே தீ மூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு அடுப்பில் அந்தக் காக்கை நிலைக் குலைந்து போய் விழுந்து தீப்பற்றி எரிந்து விட்டதாக ஒரு கதை உண்டு. அதனால்தான் காகங்களுக்கு அந்த இடத்தில் நுழையக்கூடாது என்கின்ற சாபம் ஏற்பட்டு அவை அங்கு நுழைவதில்லை என்கிறார்கள்.


இன்னொரு கதையின்படி அபிஷேகத்துக்காக கொண்டு வந்திருந்த பாலுடன் இருந்த கிண்ணத்தை ஒரு காக்கை கொத்தி கவிழ்த்து விட்டதினால் அந்த பாலைக் கொண்டு வந்திருந்த பக்தரின் மனம் வேதனை அடைய, அவர் ஈசனிடம் இனி அந்த இடத்தில் காகங்கள் பறக்கக்கூடாது என சாபம் கொடுக்குமாறு வேண்டிக் கொள்ள இறைவனும் அந்தகக் காக்கைக்கு அந்த பக்தர் வேண்டியபடியே சாபம் கொடுக்க, அதனால் அந்தப் பகுதியில் இயற்கையாகவே காகங்கள் நுழைவதே இல்லை என்கிறார்கள். எந்தக் கதை உண்மையோ ஆனால் அங்கு காகங்கள் பறப்பதில்லை என்பது ஓர் அதிசய நிலையாகவே உள்ளது. அதனால் அங்கு கட்டப்பட்டுள்ள மண்டபத்தை காக்கை மண்டபம் எனப் பெயரிட்டு அந்த மலைப் பகுதிக்கு காகம் பறவா மலை என பெயர் வந்துள்ளது.
 

அந்த மலை ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்கள் தாம் எண்ணிய காரியம் நிறைவேறுமா என்பதை தெரிந்து கொள்ள அந்த குன்றின் மீது உள்ள சகுனக் குன்று எனும் இடத்தில் நின்று கொண்டு நாம் என்ன காரியம் நிறைவேற வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதை மனதில் நினைக்க வேண்டுமாம். நினைத்தக் காரியம் நிறைவேறும் என்றால் அங்கு எங்காவது ஒளிந்து கொண்டு இருக்கும் பல்லி ஒலி எழுப்பி சப்தமிடுமாம். அப்படி பல்லி கத்தினால் நினைத்த காரியம் கைகூடும் என்றும், பல்லி கத்தாவிடில் காரியம் நிறைவேறாது என்பதும் காலம் காலமாக நம்பிக்கையாக உள்ளது. ஆகவே சகுனம் பார்க்கும் இடமாக உள்ள அந்த பகுதியை சகுனக் குன்று என்றே அழைக்கிறார்கள்.

பதினெட்டாம் படி எனும் இடம் உள்ளது. அந்த இடத்தை நாட்டாமையார் என்று கூறுவார்கள். அந்த காலத்தில் கிராமங்களில் நாட்டாமையார் முன்னிலையில் நடைபெறும் பஞ்சாயத்தில் உண்மையை கண்டறிய சத்தியம் செய்து உண்மையைக் கூறுமாறு கூறுவார்கள். அல்லது ஒரு ஒரு கடவுளின் படத்தின் முன் கற்பூரத்தை ஏற்றி அதன் முன் சத்தியம் செய்யுமாறு கூறுவார்கள். அப்படி செய்தால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தவறு செய்தவன் பயந்து கொண்டு போய் சத்தியம் செய்யமாட்டார்கள் என்பது ஒரு நம்பிக்கையாகவே இருந்தது. அது போலவே ஒருகாலத்தில் இந்த இடத்தில் சச்சரவுகளை தீர்த்து வைக்க இருதரப்பினரையும் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யுமாறு கூறுவார்கள். சச்சரவுகளைத் தீர்ப்பார்கள். அந்த முறையை இன்றும் சிலர் கடைப் பிடிக்கிறார்களாம். ஆகவே பல காலமாக பதினெட்டாம்படி ஒரு நாட்டாமை இடமாகவே கருதப்படுகிறதாம்.
..........தொடரும் 

Wednesday, November 26, 2014

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 2

-2-

ஆரிய   நாட்டு  மன்னர்கள் 

மனு வழி மன்னனைப் போலவே ஆரிய வம்சத்தை சேர்ந்த இன்னொரு மன்னன் ஆரிய நாட்டில்** இன்னொரு காலத்தில் வாழ்ந்திருந்தான். அவன் பெயர் ஆர்யராஜா என்பதாகும்.  அவன் நாடும் ரத்னகிரீஸ்வரர் மலையின் அருகில்தான் இருந்தது.  அவனும்  சிவபக்தி நிறைந்தவனே. அந்த மன்னனிடம் அபூர்வமான நவரத்தினக்கல் பதித்த மணிமுடி இருந்தது.  அந்த மணிமுடி அந்த மன்னனுக்கு  மிக முக்கியமானது.  வாழ்க்கையில் பல நன்மைகளை பெற வேண்டும், தான் பலமிக்க அரசனாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜகுருக்களின் ஆலோசனைப்படி விசேஷ பூஜைகளை செய்து அதை செய்திருந்தான். தினமும்   அந்த மணிமுடியை அணிந்து கொண்டுதான் அரச சபைக்கும்  செல்வான். ஒருமுறை அவனது பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் அவனுடைய நவரத்தினம் பதித்த மணி முடியை காணாமல் போகச் செய்தார். காலை எழுந்து குளித்தப் பின் மன்னன்   அரச சபைக்கு கிளம்பினான். மணிமுடியை தேடினான். அதைக் காணாமல் திகைத்து நின்றான்.

மணிமுடி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அரண்மனையில்  யார் வந்து அதை திருடிச் செல்ல முடியும்?   என்ன மாயம் இது என அரண்மனையில் இருந்த அனைவரும் பிரமித்துப் போனார்கள். அனைத்து இடங்களுக்கும் சென்று அந்த மணிமுடியை  தேடி அலைந்தார்கள். இரவுவரை அது கிடைக்கவே இல்லை.  மனம்  குழம்பிக் கிடந்த மன்னன் கவலையில் உறங்கி விட்டான்.  நடு இரவு. அவன் அறையை யாரோ வந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யார் வந்து கதவைத் தட்டுகிறார்கள் என  யோசனை செய்தவாறு மன்னன் கதவைத் திறக்க அங்கு ஒரு அந்தணர் நின்று கொண்டு இருந்தார். மன்னன் எதையும் கேட்கும் முன்னரே அந்த அந்தணர்  மன்னனிடம் இருந்து களவு போய்  உள்ள நவரத்தினம் பதித்த மணிமுடி  அருகில் உள்ள மலை மீதுள்ள சிவலிங்கத்தின் மீது காணப்படுவதாகவும், அங்கு சென்று அதை எடுத்துக் கொள்ளுமாறும்  கூறிவிட்டு அவசரம் அவசரமாக அங்கு நிற்காமல் சென்று விட்டார். வாட்போக்கி மலை* உள்ள இடத்தின் அடையாளத்தையும்  குறிப்பிட்டு சென்று விட்டார். 

{ * இன்று வாட்போக்கி எனப்படும் இடம் அன்று அந்தப் பெயருடன் இருக்கவில்லை. அது ஒரு மலைமுட்டாகவேதான் இருந்தது .

** ஆரிய நாடு என்பது ஆரியர்கள் ஆண்ட வட இந்தியப் பகுதியில் இருந்த நாட்டைக் குறிப்பிடுவது அல்ல. இதில் வரும் அனைவருமே ஆரியர்கள் வருகை தரும் முன்னரே இருந்த தென் பகுதி நிலத்தை சேர்ந்த தமிழ் மக்கள். கிராமங்களில் முத்துப்பட்டன் கதை என்ற ஒரு வில்லுப்பாட்டு உண்டு. அதில் முத்துப்பட்டன் என்பவரைப் பற்றிய கதைக் கூறப்படும். அவர் வாழ்ந்த நிலப்பரப்பு அன்றைய திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கேரளா மானிலத்தை  சேர்ந்த எல்லைப் பகுதிகளில் இருந்த சிற்றூர்களை இணைத்த நிலப்பரப்பாகும். அந்த நிலப்பரப்பையே , பெரும்பாலும் மலைத்தொடர்களால் சூழப்பட்டு  இருந்த பகுதிகளையே ஆரியநாடு என்று கூறி உள்ளார்கள். இந்த உண்மை குற்றாலங் குறவஞ்சி  எனும் நாட்டுப்புறப் பாடலிலும் காணப்படுகிறது. அந்தப் பகுதியில் ஆட்சியில் இருந்தவனே இந்தக் கதையில் கூறப்பட்டு உள்ள மன்னன் ஆவார் }

 மன்னன் சுயநினைவுக்கு  வந்து, தன்னை சுதாகரித்துக் கொண்டு   அந்த நேரத்தில் வந்தது யார் என்பதை அறிய முற்படும் முன்னரே அந்தணர் சென்று விட்டார். வந்தது யார், அவர் எப்படி வந்தார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை, புரியவும் இல்லை. என்ன இது நடப்பது அனைத்துமே மாயமாக உள்ளதே, மணிமுடி களவு போயிற்று, யாரோ அந்தணர் எங்கிருந்தோ வந்தார், அவரும் காணாமல் போய்விட்டார். இது எப்படி சாத்தியம் ஆகும்?  குழப்பத்துக்கு மேல் குழப்பம்.  ஆனாலும் அந்த சம்பவத்தை பொருட்படுத்தாமல் இருக்க முடியாத நிலையில் விடியற்காலை எழுந்து குளித்து விட்டு தனது பரிவாரங்களுடன் அந்த மன்னன் தன்னிடம் நடு இரவில் வந்து அந்தணர் கூறிய இன்றைய வாட்போக்கி எனும் மலைப் பகுதியை சென்றடைந்தார். அங்கு ஆச்சர்யமாக ஒரு சிவலிங்கம் இருந்ததையும் அதன் அருகிலேயே அவரிடம் வந்து விவரம் கூறிய அதே  அந்தணர் இருந்ததையும்  கண்டார்.  சிவலிங்கத்தின் தலையில் அந்த நவரத்தின மணிமுடி ஜொலித்தது.


கடவுளே ...அரண்மனையில் களவு போன மணிமுடி இங்கு எப்படி வந்தது என அனைவரும் வியந்து அந்த சிவலிங்கத்தைப் பார்த்தபடி நின்றிருக்க, அந்த அந்தணர் மீண்டும் கூறினார் 'மன்னா இன்று விடியற்காலை சிவபெருமான் எனக்குக் காட்சி தந்து இந்த மணிமுடியை மன்னன் வந்தால் அவரிடம் கொடுத்து விடு  என்று   கூறினார்.  ஆனால் அதற்கு  ஒரு நிபந்தனையும் போட்டு உள்ளார்.  அது என்ன என்றால் இதோ சிவலிங்கத்தின் அருகில் உள்ளதே சின்ன  பாத்திரம் அதை நீர் ஊற்றி  நிறப்ப  வேண்டும்.  அந்த நீரை எங்கிருந்து கொண்டு வர வேண்டும்  தெரியுமா ?  அதோ தெரிகிறதே காவேரி ஆறு, அதில் இருந்து நீரை எடுத்து வந்து பாத்திரம் நிறைய நீரை ஊற்றி நிறப்பிய பின்னரே மணிமகுடத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். ஆகவே இந்த பாத்திரத்தில் நீரை ஊற்றி  நிறப்பிய  பின் மணிமுடியை எடுத்துச் செல்லலாம்' என்று கூறிவிட்டு சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து கொண்டார்.

இதென்ன பெரிய காரியம் என எண்ணிய மன்னன் தனது பரிவாரங்களை அனுப்பி காவேரி ஆற்றில் இருந்து தண்ணீரை  குடங்களில் எடுத்து வரச் செய்து அந்த பாத்திரத்தில் ஊற்றினான். ஆனால் குடம் குடமாக நீரை எடுத்து வந்து எத்தனைக் குடம் நீரை ஊற்றியும், மன்னன் எவ்வளவோ முயன்றும் அந்தப் பாத்திரத்தை நீரால் நிறப்ப முடியவில்லை.  அதனால் கோபங் கொண்ட மன்னன் தனது உடைவாளை உருவி எடுத்து அந்த அந்தணரை வெட்ட முயன்றான். அடுத்த கணம் அந்த அந்தணன் அப்படியே சிவலிங்கத்தில் நுழைந்து மறைய அந்த சிவலிங்கத்தின் தலைப் பகுதியில் இருந்து ரத்தம் பீரிட்டு வந்தது.  ஐயோ நான் தவறு செய்துவிட்டேனே என பதறிய மன்னன் ஓடிச் சென்று சிவலிங்கத்தின் மீதிருந்து வழிந்த ரத்தத்தை தடுத்து நிறுத்த தன்  உடலால் அதைக் கட்டிப்பிடித்து அணைத்தபடி நின்று கொண்டு தன்னை மன்னித்து விடுமாறு கதற அவன் பக்தியை மெச்சி அவன் முன் காட்சி தந்த சிவபெருமான் அவனுக்கு அருள் புரிந்து மணிமகுடத்தை தந்தார்.  அதே சமயம் அவன் அந்தணரை வெட்ட முயன்ற அவனுடைய கையில் இருந்த வாளும் மறைந்து போயிற்று.  இதனாலும் அந்த இடத்துக்கு வாள் போக்கி அதாவது வாளைத்  தொலைத்த இடம் என்ற பெயர் ஏற்பட்டது.


சிவபெருமான் மன்னனுக்கு மணிமுடியை தந்ததும் இல்லாமல், அது முதல் அவனது குலத்தை  சார்ந்தவரே மட்டுமே காவேரி ஆற்றில் இருந்து நீரை எடுத்து வந்து தன்னை அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் அவன் குலத்தினரைத் தவிர வேறு யாரும் அபிஷேகம் செய்தால் அதற்குப் பலன் இருக்காது என்று அருள் புரிந்தார். அதனால்தான் காலம் காலமாக  இன்றுவரை அந்த ஆரிய மன்னன் ஆர்யராஜாவின் குலத்தவர் எனப்படும் பன்னிரண்டாம் செட்டியார் எனும் மரபினர் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள காவேரி ஆற்றில் இருந்து  தண்ணீரைக் குடங்களில் நிறப்பிக் கொண்டு கால்நடையாகவே  இங்கு வந்து சிவலிங்கத்தை அபிஷேகித்து  வணங்கி வருகிறார்கள். அந்த  குலத்தினரைத் தவிர  வேறு யாருக்கும் அந்த அபிஷேகம் செய்யும்  உரிமைத் தரப்படவில்லை. அந்த ஆலய வாயிலிலும் மன்னனின் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது.  அது முதல் இந்த சிவலிங்கத்தை  மணிமுடி மற்றும் திருமுடித் தழும்பர் அதாவது இறைவனின் திருமுடியில் வாள் வெட்டுபட்டதினால் ஏற்பட்ட தழும்பைக் கொண்டவர் என்பதாக கூறப்பட்டார். அந்த சிவலிங்கத்தில் இன்றும்  அதைக் குறிக்கும் விதத்தில் தழும்பு போன்று காணப்படுவதாகக் கூறுகிறார்கள்.  
.........தொடரும் 

Tuesday, November 25, 2014

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 1

-1-

தமிழ்நாட்டின் கரூர் மற்றும்  திருச்சி மாவட்டத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளித்தலை எனும் சிற்றூருக்கு அருகில் உள்ள ஐயர் மலை எனும் இடத்துக்கு சென்றால் காவேரி கரைப் பகுதியில் உள்ள மலை மீது உள்ள ரத்னகிரீஸ்வறரை தரிசிக்கலாம்.

இந்த ஆலயம்  இரண்டாம் குலோதுங்க சோழனால் கட்டப்பட்டுள்ளது.  இந்த ஆலயத்துக்கு  இரதினகிரி என்ற பெயரைத் தவிர மாணிக்க மலை, சிவாய மலை, ஐயர்மலை என்று வேறு பெயர்களும் உண்டு.  தற்போது மக்கள் வழக்கில் இந்த மலைப் பகுதி ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது.  பாண்டவ சகோதரர்கள்  ஐந்துபேரும் தமது வனவாசத்தின்போது இந்த மலையில் வந்து தங்கியதினால்  இந்த மலைக்கு ஐவர் மலை அதாவது  ஐந்து சகோதரர்கள் என்ற பெயர் வந்ததாம்.  அதுவே காலப்போக்கில் ஐயர் மலை என்றாயிற்று.

மலை உச்சியில் அமைந்துள்ள ரத்னகிரீஸ்வரர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் சுமார் 1017 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். ரத்னகிரீஸ்வரர் ஆலயம் பல கதைகளை உள்ளடக்கிக் கொண்டது.  புராணப் பெருமை பெற்றுள்ள ஸ்தலமாகும். 'காலைக் கடம்பர், மத்தியான சொக்கர், அந்தி திருவேங்கி நாதர்' என்பது கிராமியப்  பழமொழி ஆகும்.  அது ஏன் அப்படிக் கூறப்படுகிறது என்றால் காலை வேளையில் குளித்தலையில் கடம்பவனநாதரை தரிசனம் செய்தப் பின், மதியம் சிவாயமலை எனப்படும் ஐயர் மலையில் சொக்கநாதரை தரிசனம் செய்தப் பின், அந்திப் பொழுதில் (மாலை) ஈங்கோய் மலையில் வேங்கிநாதரை சென்று வணங்க வேண்டும் என்பது ஐதீகம் ஆகும்.

இந்த ஆலயத்தின் மேன்மையை இப்படியாக கூறலாம்:-

1) தமது குல தெய்வம் யார் என்பது தெரியாதவர்கள் இங்குள்ள ரத்னகிரீஸ்வறரை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு பூஜிக்கலாம். இறைவன் அதற்கு அப்படிப்பட்ட சக்தியை தந்துள்ளாராம்.

2) இங்குள்ள சன்னதியில் பாலைக் காய்ச்சாமல் நெய்வித்தியம் செய்தப்பின் ஸ்வாமிக்கு முன் வைத்து விட்டுச் சென்றால் மறுநாள் அந்தப் பால் கெடாமல், மாறாக தயிராக உறைந்து இருக்குமாம். இந்த அதிசயத்தை வேறெங்கும் காண முடியாதாம்.

3) இந்த மலை மீது யாரையாவது பாம்பு தீண்டினாலும் அதன் விஷம் உடலுக்குள் ஏறாதாம். இது இன்னொரு அதிசயம்.

4) இந்த மலை மீது எந்த ஒரு காகங்களையும் காண முடியாது. அதற்கான காரணக் கதை ஒன்று உள்ளது.

இங்குள்ள சிவபெருமானை ஐயர்மலை ரத்னகிரீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். பொதுவாக இந்த ஆலயம் நாட்டார்கள் எனப்படுபவர்களில்  பன்னிரண்டாம் செட்டியார் எனப்படும் பிரிவினர் தமது குல தெய்வ ஆலயமாகவே கருதி போற்றி வணங்கும் ஆலயம் என்றாலும், ஜாதிப் பிரிவினை இன்றி பிற பிரிவினரும் இங்குள்ள ரத்னகிரீஸ்வறரை வழிபட்டு வணங்கி வருகிறார்கள். ஒரு காலத்தில் சமண முனிவர்கள் பலர் காவிரிபூம்பட்டினம் என அன்று கூறப்பட்டு வந்திருந்த இந்த பகுதியில் வந்து மலைகள் மீதிருந்த பல குகைகளில் தவத்தில் இருந்துள்ளார்கள் என்பது வரலாறு. அதனால்தானோ என்னவோ இந்த மலையிலும் சமண முனிவர்கள் தவமிருந்த குகைகள் சில காணப்படுகின்றன.

இந்த மலை தோன்றிய வரலாறும் தேவலோகத்துடன் சம்மந்தப்பட்டதுதான். ஒருமுறை வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் கடும் போர் மூண்டது. அப்போது ஆதிசேஷன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மேரு மலையை சற்றே அசைத்து அங்கு ஒரு இடத்தை அமைத்துக் கொண்டு அந்த மேரு மலையின் அடியில் மறைந்து கொண்டது. அதைத் தேடி வந்த வாயுதேவன் அந்த மலையை பிளக்க அந்த மலை ஐந்தாக உடைந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்துக்கு பறந்து சென்று விழுந்தன. அதில் ஒரு பகுதியே இந்த ரத்னகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மலை என ஆயிற்று. மேரு மலை சிவபெருமானை சார்ந்தது என்பதினால் அதை உடைத்த குற்றத்தை செய்த வாயுதேவன் சிவபெருமானின் சாபத்தைப் பெற்றார். ஆகவே அந்த சாபத்தை போக்கிக் கொள்ள தமக்கு உதவிடுமாறு வாயுதேவன் சிவபெருமானை வேண்டிக் கொள்ள அவரும் வாயு தேவனை வாட்போக்கி  (அப்போது இதன் பெயர் வாட்போக்கி என்பதல்ல. அந்தப் பெயர் வந்ததின் காரணக் கதை வேறு உண்டு) எனப்படும் இந்த இடத்துக்குச் சென்று அங்கு வந்து தம்மை வணங்கி துதிக்குமாறு கூற வாயுதேவனும் வாட்போக்கிக்கு வந்து அங்கு ஒரு தீர்த்தம் அமைத்து அதில் பல காலம் நீராடி அங்கேயே தவமிருந்து சிவபெருமானை துதித்து அவர் அருளைப் பெற்று சாப விமோசனம் பெற்றார். இப்படியாக வாயு பகவான் அமைத்த தீர்த்தம் ஒன்று அங்கு உருவானது.

வாயுதேவன்

வாட்போக்கி என இந்த இடத்துக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? அது இரண்டு காரணங்களினால் ஏற்ப்பட்டது என்கிறார்கள். முன்னொரு காலத்தில் மனு வம்சத்தை சேர்ந்த மன்னன் ஒருவன் நீதி தவறாது  ஆட்சி செய்து வந்தான். அவன் பக்தி மார்கத்தில் சிறந்தவன். ஆனால்  அவன் நாட்டில் தூம்ரலோசனன் என்ற ஒரு அசுரனும் வாழ்ந்து வந்தான். மிக்க பலசாலியான அந்த அரக்கன் பிரும்மாவிடம் இருந்து பல அறிய வரங்களையும் பெற்று இருந்தான்.  அந்த செருக்கினால் அந்த அரக்கன் அவ்வப்போது அந்த நாட்டில் இருந்த மக்களிடம் வேண்டும் என்றே வம்புக்குச் சென்று அவர்களை அடித்து உதைத்து அவர்களை துன்புறுத்துவான். அந்த நாட்டு அரசனால் கூட அந்த அரக்கனை அடக்க முடியவில்லை.  நாளுக்கு நாள் அவன் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்க வேறு வழித் தெரியாமல் கலங்கிய மன்னன்  கைலாயத்துக்குச் சென்று அங்கு வாயிலில் அமர்ந்து கொண்டு சிவபெருமானை வேண்டித் துதித்தான். அந்த காலத்தில் ஆட்சி செய்து வந்தவர்கள் தேவலோக மனிதர்கள். அவர்கள் ஏதாவது ஒரு விதத்தில் தேவலோகத்துடன் சம்மந்தப்பட்டவர்களாகவே இருந்தார்கள். அவர்களால் தெய்வங்களின் இருப்பிடங்களுக்கு செல்ல முடிந்தது.  அதனால்தான் அந்த மன்னனும் கைலாயத்துக்கு செல்ல முடிந்தது.   கைலாய வாயிலில் அவன் அமர்ந்து கொண்டு  தன்னை துதித்து  தவத்தில் இருந்த மன்னனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுக்க அவனும் தனது நாட்டில் அந்த அரக்கனால் ஏற்பட்டு வந்துள்ள துன்பங்களை எடுத்துரைத்தான். அவற்றைக் கேட்டு கோபமுற்ற சிவபெருமான்  அவரது துணைவியான பார்வதியை அழைத்து அவனை அழிக்குமாறு கட்டளை இட்டார். பார்வதியும் துர்க்கை வடிவு எடுத்து சவளது யுத்த தேவதைகளான சப்த கன்னிமார்களுடன் வந்து அரக்கனுடன் போரிட்டு அவனை இரண்டாகப் பிளந்து  அவனை  அழித்தாள். 


இப்படியாக அரக்கன் என்றாலும் தெய்வ பக்தி கொண்டிருந்தவனைக் கொன்ற காரணத்தினால் துர்க்கை வடிவில் இருந்த பார்வதிக்கு பிரும்மஹத்தி தோஷம் பிடித்தது. ஆகவே கவலையுற்ற பார்வதி அந்த தோஷத்தைக் களைந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என சிவபெருமானிடம் கேட்டாள்.  சிவபெருமானும் அந்த தோஷத்தைக் களைந்து கொள்ள எந்த இடத்தில் அந்த அரக்கனை வதம் செய்தாலோ அதே இடத்துக்கு சென்று அங்குள்ள மலை பகுதியை ஒரு வாளினால் இரண்டாகப் பிளந்து அதற்குள் அவனுக்கு மோட்ஷம் கிடைக்க வழி செய்யுமாறு கூறிவிட்டு அவளுக்கு மலையைப் பிளக்கும் வாள் ஒன்றையும் தந்தார். அவளும் அதே மலையில் சிவாயம் என இன்று அழைக்கப்படும் மலைப் பகுதிக்கு சென்று மலையைப் பிளந்து அந்த அரக்கனின் ஆன்மாவுக்கு சாந்தி கொடுத்தாள். அந்த மலைப் பிளவில் இரண்டு பாறைகள் எதிரெதிரே பிளவுபட்ட நிலையில் காணப்படுகிறது. அந்த அரக்கனும் அங்கேயே அவளை எழுந்தருளுமாறு வேண்டிக் கொள்ள துர்கையும் அவளது  தேவ கணங்களான சப்த கன்னிகைகளும்  அந்தப் பிளவுபட்ட பாதை நடுவிலேயே சில காலம் தங்கி இருக்க, இப்போதும் அங்கு பிளந்து உள்ள  பாறையின் நடுவில் சப்த கன்னிகைகளுடன்  துர்கையும் காட்சி தருவதைக் காணலாம்.

 சிவாயம் மலைப் பிளவில் 
சப்தகன்னிகைகளுடன் உள்ளே  துர்க்கை 
 .............தொடரும் 

Friday, November 14, 2014

தோஷங்களை அழிக்கும் பூஷணிக்காய்


இந்த ஓவியத்தை கட்டுரைக்காக தந்து உதவியவர் 
Ranjani Ramesh
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைக் கடைந்தெடுத்தப் பின் அசுரர்கள் ஏமாற்றப்பட்டு அமிர்தம் அவர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று. ஆகவே அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பகை தொடர்ந்து கொண்டே இருந்தது. அவ்வப்போது சிவபெருமான் மற்றும் விஷ்ணு போன்ற கடவுட்களிடம் இருந்து பல அறிய வரங்களைப் பெற்றுக் கொண்டிருந்த சில அசுரர்கள் தமது பகை உணர்வைக் காட்ட அவ்வப்போது தேவர்களுக்கு தொல்லைத் தந்தவண்ணம் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பெற்றிருந்த வரங்களின் காரணமாக அவர்களை தேவர்களால் வெற்றிக் கொள்ள முடியாமல் போனதினால் அந்த வரம் பெற்றிருந்த அசுரர்கள் தங்கி இருத்த சில இடங்களுக்கு , அது தேவ லோகமாகவே இருந்தாலும் தேவர்களினால் செல்ல முடியாமல் போயிற்று.

தேவர்கள் மற்றும் அசுரர்கள் என்ற பிரிவினை சில இயற்கைக் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதாவது இந்த உலகில் தீமை மற்றும் நன்மைகளைக் குறிக்கும் விதத்திலேயே தீய குணங்களை அசுரர்கள் என்றும், நல்ல குணங்களை தேவர்கள் என்றும் கூறப்பட்டு எப்பொழுதுமே நன்மைக்கு எதிராக தீமைகள் உள்ளதாகவும், அந்த தீமையை அழித்து நல்ல பண்புகளைக் கொள்ளும்போது ஒருவன் தேவபுருஷர்கள் ஆகி விடுவார்கள், அதாவது பரிசுத்த மனத்தை அடைந்து விடுகிறார்கள், அப்போது அவர்கள் இறைவீகத்தின் வாயிலில் சென்று விடுவதான நிலை ஏற்ப்படும் என்ற அடிப்படை தத்துவத்தை உணர்ச்சிபூர்வமாக பூலோக மனிதர்களுக்கு எடுத்துக் காட்டவே பரமாத்மன் என்பவர் அசுரர்கள் மற்றும் தேவர்கள் என்பவர்களைப் படைத்து அவர்கள் மூலம் சில நாடகங்களை நடத்திக் காட்டுகிறார்.  ஆகவே அசுரர்களும் சரி, தேவர்களும் சரி, அனைவருமே  மேலுலகில் இருந்துதான் வந்துள்ளவர்கள் என்பதும், அனைவரும் அடிப்படையில் தேவ கணங்களே, சில சாபங்களின் காரணமாக அசுரர்களாக பிறந்து இருந்தார்கள் என்பதே உண்மை.

இந்த பின்னணியில் அறிய வரங்களைப் பெற்றிருந்த அசுரர்கள் தமக்கு சொல்லொண்ணாத்  துயரங்களைத் தருவதைக் குறித்து பலமுறை தேவர்கள் சிவன், பிரும்மா மற்றும் விஷ்ணுவிடம் முறையிட்டும் அவர்கள் ஒன்றும் கூறாமலேயே சென்று விடுவார்கள். ஆனால் அதே சமயத்தில் அசுரர்கள் தேவர்களுக்கு அநீதி இழைத்து கொடுமை செய்வதை தக்க நேரத்தில் சிவபெருமானோ அல்லது விஷ்ணுவோ அழிக்கத் தயங்கியது இல்லை. ஆனால் அதற்கான காலம் வரும்வரை, அதாவது அசுரர்களுக்கு அழிவு காலம் வரும் வரைப் பொறுத்திருந்து பார்த்தப் பின் அதை செய்தார்கள். ஏன் என்றால் அவர்களாலும் அவர்களே படைத்திருந்த  நியதிகளை மீற முடியவில்லை. வெகு காலத்திற்கு முன் இப்படியாக இருந்த நிலையில் தேவர்களும், அசுரர்களும் தீராப் பகை கொண்டிருந்தனர் என்பதினால் அடிக்கடி அவர்கள் ஒருவரை எதிர்த்து ஒருவர் போர் செய்தபடியே இருந்தனர். போரில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களையும், வரங்களையும் வைத்திருந்தனர்.

தேவர்களுக்கும், மேலுலகத்தில் வசித்து வந்த அசுரர்களுக்கும் அவர்கள் நினைத்த இடங்களுக்கு, அது தேவலோகமோ இல்லை பூலோகமோ அல்லது பாதாளமோ அங்கெல்லாம் செல்லும் சக்தி இருந்தது. சில கர்மாக்களின் வினையாக சில தெய்வீக கணங்களே அசுரர்களாக பிறவி எடுத்து கர்மாக்களை அழித்துக் கொள்ள வேண்டி இருந்ததினால்தான், அந்த கணங்கள் அசுரர்களாக உருவெடுத்து மேலுலகில் வாழ முடிந்தது. சாபம் பெற்ற வேறு சில கணங்கள் பூவுலகில் அரக்கர்களாக பிறவி எடுத்து அந்த சாபங்களை விலக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது அவை ராக்ஷசர்கள் மற்றும் பிரும்ம ராக்ஷசர்கள் போன்ற பிறவிகளை பூமியில்  எடுக்க வேண்டி இருந்தது.  அடிப்படையில் தேவ கணங்களான அவை ராக்ஷச மற்றும் பிரும்ம ராக்ஷச பிறப்புக்களை எடுத்திருந்தாலும், அந்த நிலையில் தேவ லோகத்துக்கு செல்ல முடியாமல், ஆனால் பூவுலகில் சில சக்திகளைக் கொண்டு இருந்தன.

தேவலோகத்தில் அசுரர்களாக இருந்தவர்கள் பூவுலகில் பிறவி எடுத்திருந்த ராக்ஷசர்கள் மற்றும் பிரும்ம ராக்ஷசர்களை  சந்தித்து விட்டு செல்லும் பழக்கத்தைக் கொண்டு இருந்தன. அப்படி வந்திருந்தபோது தாம் எந்தெந்த தேவர்களினால் ராக்ஷச மற்றும் பிரும்ம ராக்ஷச பிறப்புக்களை எடுத்து பூமியில் வந்து அவதிப்பட வேண்டி உள்ளது என்பதை தேவலோக அசுரர்களிடம் கூறியபோது அதைக் கேட்டு  கோபமடைந்த அசுரர்கள் தேவலோகத்தில் இருந்த தேவர்களை துன்புறுத்தத் துவங்கினார்கள். இதனால்தான் தேவர்களுக்கும், தேவலோக அசுரர்களுக்கும் முடிவற்ற வகையில் பகை பெருகிக் கொண்டே இருந்தது.

இந்த பின்னணியில்தான் தேவலோகத்துக்கு அடிக்கடி விஜயம் செய்து வந்த விஷ்ணு பக்தனான கூஷ்மாண்டன் ( சில கதைகளில் அவனை கூச்மாண்டன் என்கிறார்கள்)  எனும் அசுரன் அங்கிருந்த தேவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கி வந்திருந்தான். பல தெய்வங்களிடம் இருந்து அறிய வரங்களைப் பெற்று இருந்த அசுரன் கூஷ்மாண்டன் வேண்டும் என்றே தேவலோகத்தில் இருந்த தேவர்களிடம் வம்பு செய்து அவர்களை துரத்தி அடிப்பதும், தமது இருப்பிடத்திற்கு இழுத்து வந்து சிறையில் வைத்து கொடுமைகளையும் செய்து வந்தான். இத்தனைக்கும் அவன் அடிப்படையில் ஒரு கூஷ்மாண்டா எனும் ஒரு தேவியின் பக்தனாவான். அந்த தேவியோ விஷ்ணுவினால் படைக்கப்பட்டவள்.  கூஷ்மாண்டாவுக்கு உகந்த நாள்  வெள்ளிக்கிழமை ஆகும். அவள் மங்களத்தைத் தருபவள் என்பார்கள். அது போலவே கூஷ்மம் என்றால் முட்டை அல்லது அண்டம் என்றும் பொருள் தரும். முதன் முதலில் இந்த பிரபஞ்சம் தோன்றியபோது அது ஒரு முட்டை உருவில் வெளி வந்தது. அதில் இருந்து வெளிவந்த விஷ்ண்வை சுற்றி பல தேவிகளும் இருந்தார்கள். அதில் ஒருவளே கூஷ்மா என்பவளும் ஆவாள். ஆகவேதான் கூஷ்மாவின் பக்தனான கூஷ்மாண்டனுக்கு விஷ்ணுவின் அரிய வரங்கள் கிடைத்து இருந்தன. கூஷ்மாண்டன் பக்தி மார்கத்தில் அதாவது தனக்கு வரமளித்த தெய்வங்களிடம் அதிக ஈடுபாடு கொண்டு அவர்களை மறவாது அனுதினமும் வணங்கி துதித்தே வந்தவன். அதனால்தான் அவனுக்கு அத்தனை கர்வம் இருந்தது. 

இதனால் கூஷ்மாண்டனின் பலம் ஓங்கி, அட்டகாசம் அதிகமாகி, தேவலோகத்திலிருந்து அனைவரும் விரட்டியடிக்கப்பட்டார்கள். தேவேந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் அடைக்கலம் புகுந்தனர். ஆனால் பிரம்மனாலும் அவர்களின் துயரைத் தீர்க்க முடியவில்லை என்பதினால் அனைவரும் தம்மை கூஷ்மாண்டனின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு வேண்டிக் கொண்டு பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார்கள்.

அவர்கள் கூறியதைக் கேட்ட விஷ்ணு பகவான் சினம் அடைந்தார்.  கூஷ்மாண்டனுக்கு சாப விமோசனம் தரும்  காலம் நெருங்கி விட்டதையும், தன்னுடைய பக்தனான அவனுக்கு அவன் மரணம் அடையும் முன்னால்  ஏதாவது வழியில் பெருமையும் தர எண்ணி இருந்த நாளும் நெருங்கியது என்பதையும் உணர்ந்தார். விஷ்ணு பகவான் கூறியவாறு தேவர்கள் பெரும் படையுடன் கூஷ்மாண்டான்  ஆண்டு வந்த பூமிக்கு சென்று அவனுடன் போரிட்டார்கள். அதில் விஷ்ணுவும் கலந்து கொண்டு அந்தப் படையின் ஒரு பிரிவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். யுத்தம் நடந்திட விஷ்ணுவிடம் நேரடியாக மோதும் கட்டத்தை கூஷ்மாண்டன் எட்டினான்.

தன்னை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்ற அகம்பாவத்தில் இருந்த கூஷ்மாண்டன் யுத்தத்தில் விஷ்ணுவை தாக்க முயன்றபோது அவரை சுற்றி அரணாக இருந்திருந்த தீக்கணங்கள் பெரும் தீ நாக்குடன் அவனைத் தாக்க அப்படியே சுருண்டு விழுந்தான் கூஷ்மாண்டன். உயிர் பிரிகின்ற நேரம்....தான் யார், இந்த ஜென்மத்தில் என்னென்ன பாவங்கள் செய்தேன் என அனைத்தையும் உணர்ந்தான். மரணத் தருவாயில் கரம் கூப்பி விஷ்ணுவை வணங்கி, அவர் மீது தோத்திரம் பாடி தனக்கு நற்கதி தருமாறும், வேறு நல்ல பிறவி எடுக்க அருள் தருமாறும் கேட்டான். அவன் நிலைக் கண்டு பரிதாபப்பட்ட நாராயணன் கேட்டார் '' கூஷ்மாண்டா, இந்த பிறவியில் தேவர்களும் கடவுளின் அவதாரங்களே, அவர்களும் தெய்வ கணங்களே என்பதை மறந்து போய் அவர்களை ஹிம்சித்து வந்ததின் மூலம் பெரும் தவறுகளை செய்துள்ளாய் என்றாலும் அந்த நிலையிலும், மரணத் தருவாயிலும் நீ தெய்வ பக்தியோடு இருந்துள்ளாய் என்பதினால் உனக்கு நல்ல கதி கிடைக்க உள்ளது. ஆகவே உன் வாழ்க்கையின் மூலம் பூலோகத்தில் உள்ளவர்கள் பயன் அடையும் வகையில், நீ பூலோகத்தில் ஒரு இந்த அகண்டத்தை பிரதிபலிக்கும்  உருவில் உள்ள பூஷணிக்காயாக அவதரிப்பாய். உன்னைக் கொண்டு எந்த ஒருவரும் தமது தோஷங்களை விலக்கிக் கொள்ள முடியும் என்ற வரத்தை உனக்கு அருளுகிறேன்.

இந்த ஓவியத்தை கட்டுரைக்காக வரைந்தவர்
Ranjani Ramesh
எப்படி உன்னை இப்போது நான் பூமி மீது மோதி விழ வைத்து மரணத்தைக் கொடுத்தேனோ அது போலவே தோஷங்களை விலக்கிக் கொள்ள உன்னை பூஜிக்கும்போது அங்குள்ள அனைத்து துஷ்ட ஆத்மாக்களையும் நீ உன்னுள் உறிஞ்சிக் கொண்டு அவற்றை உள்ளேயே அழிப்பாய் (பூஷணிக்காயின் உள்ளே). அதன் பின் அவற்றுக்கு உயிர் இருக்காது. அந்த நிலையில் பூஷணிக்காயாக உள்ள உன்னை பூமி மீது மோத விட்டு உடைத்தால் உன்னால் மரணம் சம்பவிக்கப்பட்ட அனைத்து துஷ்ட ஆத்மாக்களும் அவற்றுடன் ஒட்டிக் கொண்டுள்ள தோஷங்களுடன் பூமியிலே புதைந்து போகும். அந்த நிலையைக் காட்டும் விதத்தில்தான் பூஷணிக்காயை உடைக்கும் முன்பாக அதை சிறிது வெட்டி உள்ளே குங்குமத்தைக் கொட்டி பூஜித்தப் பின் அதை உடைப்பார்கள். அதை நீயும் உனக்கு அவர்கள் செய்யும் பூஜையாக ஏற்பாய். இன்று முதல் உன்னைக் கண்டாலே தீய தோஷ ஆவிகள் பயந்து ஒளியும் என்ற அளவு உனக்கு சக்தி தருகிறேன்.  தீய தோஷங்களை  நீ பூஷணிக்காய்  உருவில் இருந்தபடி அழிப்பாய் .

கூஷ்மாண்டா, உன்னை தானமாக தந்தால் அதைத் தந்தவனின் துயரங்கள் விலகும், அவனது தீய தோஷங்களும் விலகி ஓடும். முக்கியமாக அமாவாசை, பித்ருக்களின் திதி போன்ற நாட்களில் பூசணியாக பிறந்துள்ள உன்னை தானம் செய்தால் கஷ்டங்களும் வியாதிகளும் விலகி ஓடும். ஆனால் அதே சமயத்தில் பூஷணிக்காயை இலவசமாக பெற்றுக் கொள்பவர்கள், யாரிடம் இருந்து அதைப் பெற்றுக் கொள்வார்களோ அவர்களது பாவங்களையும் தமது வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வார்கள். '' என்று அருள் புரிந்தார்.

அதனால்தான் பூஷணிக்காயை பூஜை செய்து உடைப்பதின் மூலம் தீய ஆவிகளை கூஷ்மாண்டனிடம் அனுப்பி விடுவதாகவும், அவற்றை அவன் கொன்றுவிட்டதைக் குறிக்கும் வகையில் குங்குமம் அந்தக் காயின் உள்ளே உள்ள தண்ணீருடன் கலந்து விட, அந்தக் காயை உடைத்ததும்- தீய ஆத்மாக்களை கொன்று  விட்ட நிலையைக் குறிக்கும் விதத்தில், அந்தக் காய் சிவப்பு நிறத்தில் உடைந்து விழுகிறது என்றும், அந்த நேரத்தில் அங்கு சுற்றித் திரியும்  தீய ஆவிகள் பூஷணிக்காயில் இருந்து வெளிவரும் அந்த சிவப்பு நிறத்தைக் காணும்போது, தம்மையும் அதனுள் உள்ள கூஷ்மாண்டன் கொன்று விடுவான் என பயந்து கொண்டு அங்கிருந்து ஓடி விடுமாம். அதனால்தான் தீய அவைகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் தோஷங்கள் விலகி ஓட பூஷணிக்காயை வீட்டின் வாயிலில் முதலில்  கட்டி தொங்க வைத்து சில நாட்களுக்குப் பின்னர் அதை எடுத்து பூஜை செய்து உடைப்பதும் ஐதீகம் ஆயிற்று.  பூஷணிக்காயில் அமர்ந்து கொண்டு கூஷ்மாண்டன் பார்த்துக் கொண்டு இருப்பதினால்தான் கண்திருஷ்டி தரும் தீய ஆவிகள் அங்கிருந்து விலகி ஓடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

அது போலவே பணம் தராமல் பூஷணிக்காயை தானமாக பெறலாகாது .அப்படி தானம் பெற்றாலும், தானத்தைப் பெறும்போது, 'இன்று என் செய்கையினால் நான் பெற்ற ஒருநாள் நல்ல பலனை உனக்கு தருகிறேன் ' என்று தானம் தந்தவருக்கு கூறி விட்டோ அல்லது அதற்கு ஈடாக அரைக்காசு நாணயத்தையாவது தந்து விட்டு அதைப் பெற்றுக் கொண்டால் அது தானமாக பெற்றதாகாது. தீய பலன் தானம் பெற்றவரை சேராது என்பது ஐதீகமாகவும் ஆயிற்று. இதனால்தான் இப்படிப்பட்ட குணாதிசயத்தைக் கொண்ட பூஷணிக்காயை சாதாரணமாக யாரும் திருடுவது இல்லை.