Friday, January 31, 2014

Guru Charithram -12

 
அத்தியாயம் - 6

சித்த முனிவர் கூறிய ஸ்ரீ பாத வல்லபாவின் கதையை ஆழ்ந்து கேட்ட நமத்ஹரகா அவரிடம் கேட்டார் ''என் குருதேவா, மகாத்மா, சித்த புருஷரே, இந்தக் கதையில் நீங்கள் கூறினீர்களே ஸ்வாமி ஸ்ரீ பாத வல்லபா தாத்தாத்திரேயரின் அவதாரம் என்று, அப்படி என்றால் தெய்வமான அவர் ஏன் பல புனித இடங்களுக்கும் சென்று அங்குள்ள ஆலயங்களில் தரிசனம் செய்தார். அதற்கும் மேலாக அவர் எதற்காக கோகர்ணத்துக்கு முக்கியத்துவம் தந்து அங்கு சென்றார் என்பதை எனக்கு கூறுவீர்களா?'' எனப் பணிவுடன் கேட்க சித்த முனிவர் அவரது சந்தேகத்துக்கான விளக்கத்தை தந்து  அந்தக் கதையையும் கூறினார்.

''நமத்ஹரகா, நீ கேட்டது நல்ல சந்தேகமே. இந்த சந்தேகம் எவருக்கும் வரக்கூடியதே. ஸ்ரீ பாத வல்லபா தத்தாத்திரேயரின் அவதாரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  தெய்வங்கள் மனித உருவை எடுத்து வரும்போது மனித குலத்துக்கு எடுத்துக் காட்டும்  வகையில்  அவர்கள் கடைபிடிக்க வேண்டிய  சில செயல்பாடுகளை  தாமே செய்து காட்ட  வேண்டி உள்ளது.  எதையுமே வாயால் சொல்வதை விட செயலால் செய்து காட்டுவதே சிறந்த முறை ஆகும். ஆகவே அந்த செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்பதை மனித குலத்துக்கு எடுத்துக் காட்டவே ஸ்ரீபாத வல்லபா தனது சீடர்களுடன் தானே ஆலயங்களுக்கு சென்று அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் சில காரியங்களை செய்து காட்டினார். அவற்றை அவரது சீடர்கள் அனைத்து இடங்களிலும் பரப்பி வந்தார்கள். அப்படியே பின்னர் வந்த மகாபுருஷர்களும்  செய்தார்கள்.

அவர் ஏன் கோகர்ணத்துக்கு சென்றார் என்றால் அந்த புனித தலம் திருமூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானின் இருப்பிடம். அங்குதான் சிவபெருமான் தானே ஆத்மலிங்க உருவில் அமர்ந்து உள்ளார்.   இதனால்தான் அந்த ஷேத்திரம் மஹா ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. அது மகா புனித பூமியாகும். இதுதான் பகீரதன் தவமிருந்து அழைத்து வந்த கங்கை நதி முதலில் பூமியில் பாய்ந்த இடம். அதில் பல தெய்வங்களும்,  சித்த புருஷர்களும், மகாத்மாக்களும் தீர்த்தமாடி உள்ளார்கள். அங்குள்ள சிவலிங்கம் சிவபெருமானின் மைந்தனான வினாயகப் பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  அதன் கதையை கூறுகிறேன். அதைக் கேட்டால் அங்கு ஸ்ரீ பாத வல்லபா அங்கு ஏன் முதலில் சென்றார் என்பதின் காரணம் புரியும்'' என்று கூறிய சித்த புருஷர் அந்தக் கதையைக் கூறலானார்.
 
''இலங்கையை ஆண்டு வந்த ராவணனின் தாயார் கைகாசி என்பவள். அவள் பெரும் சிவபக்தை. சிவ தீட்ஷையை பெற்று இருந்த அந்தப் பெண்மணி தினமும் ஒரு புதிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு போய் நதிக்கரையில் அதை வைத்துவிட்டு அங்கேயே நதியில் குளித்தப் பின் சிவலிங்கத்தை பூஜித்தப் பின் அதன் எதிரில் அமர்ந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி தினமும் ஒரு இலட்சத்து எட்டு முறை முறை  நமச்சிவாயா எனும் மந்திரத்தை ஓதி சிவபெருமானை பூஜித்தப் பின்னரே உணவு அருந்துவாள்.  தினமும் ஒரு புதிய சிவலிங்கத்தை எடுத்து வந்து  பூஜை  செய்பவளுக்கு  ஒருநாள் அவளுக்கு புதிய சிவலிங்கம்  கிடைக்கவில்லை.  ஆகவே பூஜைக்கு நேரமாகிவிட்டது என்பதினால் நதிக்கரைக்கு சென்று பூமி மண்ணைக் கொண்டு ஒரு சிவலிங்கத்தை செய்து அதற்கு பூஜை செய்துவிட்டாள். அன்று எதேற்சையாக அவள் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜித்ததை ராவணன் பார்த்துவிட்டான்.  உடனே தன்  தாயிடம் சென்று 'அம்மா, நீங்கள் ஏன் தினமும் புதிய சிவலிங்கத்தை தேடி அலைய வேண்டும். அந்த சிவபெருமான் குடி உள்ள கைலாய மலையையே இங்கு கொண்டு வந்து வைக்கிறேன். நீ நேரடியாகவே  அவரை பூஜிக்கலாம்' என்று கூறிவிட்டு கைலாய மலையை பெயர்த்து எடுத்து வரச் சென்றான். (அந்த கட்டத்தில்தான்  ராவணனது பிடியில் அனைத்து தேவர்களும், காலங்களும், திசைகளும் இருக்க தேவேந்திரன் முதல் வருணன், வாயு, அக்னி மற்றும் யமன் போன்றவர்களும் ஒவ்வொரு விதங்களில் அவனுக்கு சேவகம் செய்யும் நிலை இருந்தது. ராவணனின் சகோதரன் குபேரனே அவருக்கு அடிமையாக இருந்த நேரம் அது.  அத்தனை சக்தி வாய்ந்தவனாக ராவணன் இருந்தான். அதைக் குறித்து அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறை இட்டு தம்மை ராவணனின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டி வந்தார்கள். தாம் தக்க நேரத்தில் அவர்களுக்கு உதவுவதாக சிவபெருமான் கூறி இருந்தார். அந்த நேரத்தில் நடந்த சம்பவம்தான் இந்தக் கதை)

கைலாய மலை அடிவாரத்துக்கு சென்று அந்த மலையை தனது  தலைகளினால் முட்டி, மோதி  அதை ஆட்டி, ஆட்டி  பூமியில் இருந்து அடியோடு பெயர்த்து எடுக்க முயன்றான். மலை பயங்கரமாக ஆடத் துவங்க  தேவர்களும், கைலாயவாசிகளும் பயந்து போய் சிவபெருமானிடம் சென்று அதைக் குறித்துக் கூறினார்கள். அனைத்தையும் கைலாயத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த சிவபெருமான் அவன் மலையை பெயர்த்து தோளிலே வைக்க இருந்த சமயத்தில் தனது காலினால் மலையை அவன் மீது அழுத்த அவன் மலை அடியில் சிக்கிக் கொண்டு வலி தாங்காமல் கதறினான். என்ன இருந்தாலும் ராவணனும் சிவபெருமானின் பரம பக்தன் என்பதினால் அவன் கதறலைக் கேட்டு ஒரு ஷணம் அவன் தலையையும் இரு கைகளையும் மட்டுமே வெளியில் எடுக்க வைத்து விட்டு மீண்டும் மலையை அவன் மீதே வைத்து அமுக்கிக் கொண்டார்.

ராவணன் சற்றும் தாமதிக்காமல் தனது கையினால் ஒரு தலையை வெட்டி எடுத்து, இன்னொரு கையையும் வெட்டி எடுத்துக் கொண்டு அவற்றைக் கொண்டு தனது சக்தியினால் ஒரு வீணையை உருவாக்கினான். அவனுக்குத் தெரியும்  சிவபெருமான் இசைப் பிரியர் என்று.  உடலின் பல பாகங்களில் இருந்து நரம்புகளை பிடுங்கி எடுத்து அவற்றை வீணையின் தந்திக் கம்பிகளாக்கி  அதை மீட்டி சிவபெருமானைப் போற்றி பல்லவி, அனுபல்லவி என ஏழு ஸ்வரங்களில் சாமவேத கானத்தில் சிவஸ்துதியை  பாடத் துவங்கினான். அவன் பாடிய இசையில் மனம் லயித்துப் போன சிவபெருமானும் அவனை மலை அடியில் இருந்து வெளியில் எடுத்து அவன் அந்த மலையை பெயர்க்க முயன்றதின் காரணத்தைக் கேட்டார்.

சற்றும் தயங்காமல் அவரிடம் ராவணம் கூறினான் 'சிவபெருமானே, என்னுடைய தாயார் உமது பக்தை ஆவாள். அவள் தினமும் ஒரு சிவலிங்கத்தை எடுத்து வந்து அதியே நீங்களாக பாவித்து உமது நாமத்தை ஒருலட்ஷத்து எட்டு முறை உச்சாடனம் செய்த  பின்னரே உணவு அருந்துவாள்.  அவளுக்கு இன்று எந்த சிவலிங்கமும்  கிடைக்கவில்லை என்பதினால் மண்ணினால் ஆன சிவலிங்கத்தை நீங்களாக  பாவித்து பூஜை செய்தாள் . அது என் மனதை வேதனைப்படுத்தியது. என் காலடியில் நவ நதிகளும் ஓடுகின்றன. தேவேந்திரன் முதல் வாயு, அக்னி, யமன், வருணன், என அனைவரும் எனக்கு சேவகம் செய்கிறார்கள். காமதேனு என் இல்லத்தில் இருக்க கல்பவிருஷமோ என் வீட்டு தோட்டத்தில் வளர்கிறது. இவை அனைத்துமே உங்களுக்குத் தெரியும். அவை அனைத்துமே கிடைக்க நீங்கள் கொடுத்த வரமே காரணம். எனக்கு நிகரானவன் இனி இல்லை எனும் அளவுக்கு நீங்கள் எனக்கு சக்தியை தந்துளீர்கள்.  இப்படியாக அனைத்து சக்திகளும் பெற்று உள்ள நான் நீங்கள் குடி கொண்டுள்ள இந்த மண்ணினால் ஆன மலையையே இலங்காபுரியில் கொண்டு வந்து வைத்து விட்டால் அவள் தினமும் உங்களை நேரடியாக பூஜிக்கலாம் அல்லவா என்று எண்ணியே இங்கு வந்து இந்த மலையை எடுத்துப் போக வந்தேன்' என்றான்.

இசை மழையினால் ஈர்க்கப்பட்ட  சிவனார் அவன் முன் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்' என்று கூறினார். இராவணன் கேட்டான் 'சிவபெருமானே நான் கூறியபடி எனக்கு என்னுடைய தாயாரின் மகிழ்ச்சியே முக்கியம். ஆகவே அவள் கஷ்டப்படாமல்  தினமும் உம்மை துதித்து விட்டு அதன் பின்னர் உணவருந்தும் வகையில் இருக்க நீர் குடி கொண்டுள்ள இந்த மலையை உம்மோடு சேர்த்து என் நாட்டிற்கு எடுத்துச் செல்ல என்னை அனுமதிக்க வேண்டும். அதோடு எனக்கும் உங்களைப் போலவே அளவற்ற சக்தி வேண்டும். மகேஷ்வரா இந்த வரத்தை மட்டும் தந்தால்  போதும்' என்று கேட்டான்.

அதைக் கேட்ட சிவபெருமான் சற்றும் தாமதிக்காமல்  கூறினார் 'ராவணா, உன்னுடைய தாயாருக்காக நீ என்னிடம் வைக்கும் உன்னுடைய வேண்டுகோள் நியாயமாகவே உள்ளது. ஆகவே நீ அதிக சிரமம்படத் தேவை இல்லை. உன்னுடைய தாயாருக்கு வேண்டியது என்னை பூஜிப்பதே. ஆகவே உனக்கு நான் உனக்கு நானே குடி இருக்கும் என்னுடைய ஆத்ம லிங்கத்தைத் தருகின்றேன். அதை ஆராதிப்பதின் மூலம் உன் தாயாருக்கு என்னை நேரடியாக ஆராதித்ததின் பலன் கிடைத்து விடும். ஆகவே நீ மலையை தூக்கிக் கொண்டு  செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் குடி இருக்கும் ஆத்ம லிங்கத்தை மட்டும் ஆராதித்தால் அது மட்டுமே போதும். மேலும் இதை நீயும் மூன்று வருடங்கள் தொடர்ந்து  மூன்று வேளை  பூஜை செய்து  நான் இப்போது உனக்கு உபதேசிக்கும் மந்திரத்தை ஒரு லட்ஷத்து எட்டு முறை உச்சாடனம் செய்து வந்தால் நீயும் என்னைப் போலவே சக்தி கொண்டவனாக மாறி விடுவாய் (அந்த மந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார்). ஆனால் ஒரே ஒரு சின்ன நிபந்தனை.
............தொடரும்

Thursday, January 30, 2014

Guru Charithram -11

 

...........அத்தியாயம் - 5(ii)
அதைக்  கேட்ட அவரது பெற்றோர் மனம் வருந்தினார்கள். சுமதிக்கு  தத்தாத்திரேயர் காட்சி தந்தபோது அவளுடைய மகன் எதைக் கூறினாலும் அதை தடுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தது மனதில் அழியாமல் இருந்தாலும் தனக்கு மகனாகப் பிறந்து விட்ட ஒருவர் துறவற  நிலைக்கு செல்வதை மனத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள். அவர் இப்படிக் கூறியதும், அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ''மகனே, எங்கள் வாழ்க்கையில் நல்லதொரு மகனாக வந்து விளக்கேற்றி வைப்பாய். எங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தருவாய் என நினைத்தோமே. குருடனாகவும், முடமாகவும் உள்ள உன் சகோதரர்களை எங்கள் காலத்துக்குப் பின்னர் யார் பாதுகாத்து வருவார்கள் என்று நாங்கள் வருந்திக் கொண்டு  இருந்த நேரத்திலே, கவலைப்படாதே, நான் இருக்கிறேன் என்பது போல நீ வந்து என் வயிற்றில் பிறந்து எங்களுக்கு மன அமைதியை தந்தாய். ஆனால் அந்த மகிழ்ச்சி உடைந்து போய்விடும் போலல்லவா இருக்கிறது நீ துறவி  என்ற நிலையில் செல்ல  நினைப்பதும். எங்களுக்கும் வயது ஏறிக் கொண்டே உள்ள நிலையில் உன் சகோதரர்களை பாதுகாக்க யார் இருப்பார்கள். நாமோ ஏழைக் குடும்பத்தில் உள்ளோம். நமக்கு உதவவும் யாரும் கிடையாது.  உன் முடிவை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் மன பாரத்தைக் கொட்டுவது போல உன்னிடம் என் மனதில் உள்ள கவலையை கூறிவிட்டேன்.  இனி நடப்பது நடக்கட்டும். இதுதான் விதி என்றால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.  வேறென்ன செய்ய இயலும்''  என்று கண்களில் இருந்து அருவிபோல வழிந்தோடிய கண்ணீருடன் அவரை இறுகக் கட்டிக் கொண்டவள் அப்படியே மயங்கியும் விழுந்து விட்டாள்.

மயங்கி விழுந்தவளை ஆறுதலாக தூக்கி எழுப்பினார் ஸ்ரீபாதா. அவளிடம் கூறினார் ''அம்மா, என்னை தயவு செய்து தவறாக நினைக்காதே.  நான் உனக்கு மகனாகப் பிறந்ததே உனக்கு நல்லதொரு மகன் வேண்டும் என்று நீ வேண்டியதினால்தான். இந்த  ஜென்மத்தில் நான் மனித குல மேம்பாட்டுக்கு என்னை அர்பணித்துக் கொண்டுதான் உன் மூலம் வெளி வந்தேன். அதற்காக நான் உன்னைக் கை விட்டு விடுவேன் என்று தவறாக நினைக்காதே. மனித குலத்தில்  நீங்களும் ஒன்றுதானே. நான் ஏற்கனவே யோக லஷ்மியை மணந்து கொண்டு விட்டவன் (அதாவது தான் தத்தாத்திரேயரின் அவதாரம் என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டினார். தத்தாத்திரேயரின் மனைவியே லஷ்மி தேவியின் இன்னொரு அவதாரமான யோக லஷ்மி ஆவார் ).  ஆகவே  எதற்கும் அஞ்சாமல் நான் விரும்பும் வாழ்கையை கைகொள்ள எனக்கு நீங்கள் அனுமதி தர வேண்டும். என் சகோதரர்களை கைவிட்டு சென்று விடுவேன் என்று எப்படி நீங்கள் நினைத்தீர்கள்? என்னை நம்பியவர்களை  நான் எப்படிக்  கைவிடுவேன் என்று நினைக்கின்றீர்கள்? கவலை படவேண்டாம். அவர்களை பாதுகாப்பது என் பொறுப்பு''.

இப்படியாகக் கூறிய பின்னர் தனது இரண்டு சகோதரர்களையும் அருகில் வருமாறு சைகை காட்டினார். என்ன அதிசயம் நடக்கிறது என்பது புரியாதது போல குருடராக இருந்தவரும் சைகையை புரிந்து கொண்டு அவர் அருகில் செல்ல முடமானவரும் அவர் அருகில் சாதாரணமாக நடந்து சென்றதும் அவர்கள் இருவரின் தலை மீதும்  தனது கையை வைத்து ஸ்ரீ பாத வல்லபா ஆசிர்வதிக்க, இரண்டு சகோதரர்களும் திடகார்த்தமான உடலுடன் உள்ள ஆண் மகன்களாக உருமாறினார்கள். இரு சகோதரர்களும் தமது சகோதரர் தங்களை விட வயதில் இளையவர் என்றாலும் கூட ஸ்ரீ பாத வல்லபாவின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். அதைக் கண்ட பெற்றோர்கள் ஆனந்தம் அடைந்து அழுதார்கள்.

அதன் பின் சில நாட்களிலேயே அவர்களுக்கு எங்கெங்கிருந்தோ செல்வம் வந்து சேர வாழ்கை கஷ்டம் இல்லாமல் ஓடத் துவங்கியது. அந்தக்  கட்டத்தில் ஸ்ரீ பாதா அவருடைய பெற்றோர்களிடம் ''இனி என் சகோதரர்கள் உங்களுக்கு அனைத்து விதத்திலும் துணையாக இருப்பார்கள். நீங்களும் நலமாக இருந்து சொர்க்கம் செல்வீர்கள். இனி என் பிறப்பு எனக்கு இட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற கிளம்பிச் செல்கிறேன்'' என்று கூறிவிட்டு அவர்களிடம்  இருந்து விடைப் பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி புனித யாத்திரைகளை மேற்கொண்டார்.  கிளம்பிச் செல்லும் முன் தான் அவதாரப் புருஷர் என்றாலும் கூட, தன்னை பெற்றெடுத்ததினால் குருவுக்கு முன்னரான  தாய் - தந்தை ஸ்தானத்துக்கு மரியாதை தரும் வகையில் ஸ்தூல உடம்பில் உள்ள புதல்வனாக தன்னைக் காட்டிக் கொண்டு  அவர்களை நமஸ்கரித்து விட்டே கிளம்பிச் சென்றார்.

அங்கிருந்து கிளம்பி வடநாட்டிற்கு சென்றவர் விந்திய மலை, திரிவேணி சங்கம், காசி, கயா, ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதர்நாத், என  பல புனித இடங்களுக்கும் சென்று அங்கிருந்த நதிகளில் நீராடி, ஆலயங்களை தரிசித்தப் பின் தத்தாத்திரேயர் வசித்து வந்த இடமான ஸாயாத்ரி  மலை அடிவாரத்தை அடைந்தார். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டப் பின் அங்கிருந்துக் கிளம்பி  கோகர்ணம் எனும் சென்றார். அது அவருக்கு முக்கியமான விஜயமாக அமைந்தது.  வழி நெடுக அவருடைய  தெய்வீக அருளை உணர்ந்து  கொண்ட பல சாது, சன்யாச முனிவர்கள் அவரிடம் ஆசிகளைப் பெற்றார்கள். அதை அறிந்து கொள்ள முடிந்தவர்கள் அவரது மஹான்  எனும் தேஜஸ்சைக் கண்டு   அவருக்கு சிஷ்யர்கள் ஆயினர்.  அவர் வட நாடுகளுக்கு சென்று வந்தது முதல் அவரது சீடர்களினால் ஸ்ரீ பாத வல்லபா (வல்லபா என்றால் வலிமையானவர், திறமையானவர் என்று பொருள்) என்று அழைக்கப்படலானார் (இத்துடன் அத்தியாயம்-5 முடிந்தது).
.......தொடரும்

Wednesday, January 29, 2014

Guru Charithiram -10

 

...........அத்தியாயம் - 5(i)

கலி துவங்கி விட்ட  இந்த வேளையில் நானே அவளது மகனாகப் பிறந்து பூவுலகை  காப்பேன் என மனதில் முடிவு செய்த தத்தாத்திரேயர் அவளுடைய கருப்பையில் சென்று அமர்ந்து கொள்ள முடிவு செய்தார்.

சுமதியோ தன்னை மறந்து உள்ளே ஓடிச் சென்று தன் கணவர் செய்த சிரார்த்த காரியம் முடியும் வரை அமைதியுடன் இருந்தப் பின் அவரிடம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.  நல்ல பாண்டித்தியம் பெற்று இருந்த அப்பலராஜுவுக்கு புரிந்தது அப்படி பிட்ஷை எடுத்து வந்திருந்தவர் தத்தாத்திரேயராகவே  இருந்திருக்க வேண்டும்.  அவர்தான் தன்  பக்தர்களை சோதிக்க இப்படி எல்லாம் தன்னை அடையாளம் காண முடியாதபடி பல்வேறு வேஷங்களில் வந்து நாடகங்களை நடத்துவார் என்று கேள்விப்பட்டு இருந்தார் (இதனால்தானோ என்னவோ தத்தாத்திரேயரின் அவதாரம் எனக் கருதப்படும் சீரடி சாயிபாபாவும் மாறு வேடங்களில் பக்தர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களை சோதிக்க பிட்ஷை எடுப்பதுண்டு என்று அவருடைய வாழ்கை வரலாற்றுக் கதைகளில் சில நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன). மேலும் எவர் ஒருவர் அகால வேளைகளில் பிட்ஷை எடுக்க வருவார்களோ அவர்கள் விஷ்ணு பகவானின் அம்சமாக இருப்பார்கள்  என்று பண்டிதர்கள் கூறுவார்கள்.

பித்ரு காரியங்கள் நடைபெறும்போது நல்ல முறையில் பித்ரு காரியங்கள் நடைபெறும் இடங்களில் பித்ருக்களை சாந்தப்படுத்த, விஷ்ணு பகவான் ஏதேனும் ஒரு ரூபத்தில் சென்று அங்கு தரப்படும் பிட்ஷைகளை  ஏற்பார் என்று சாஸ்திர நம்பிக்கைகள் உண்டு (இங்கு பிட்ஷை என்பது பிராமண போஜனத்தைக் குறிக்கும்). தத்தாத்திரேயரோ விஷ்ணு பகவானையும் உள்ளடக்கியவர். ஆகவே காட்சி தந்தப் பின் உடனே மறைந்து விட்ட நிகழ்வும் காட்டுவது என்ன என்றால் திதி தரும் வேளையில் வந்திருந்தது நிச்சயமாக தத்தாத்திரேயராகவே  இருந்திருக்க வேண்டும் என்று நம்பினார்.  அப்படி நடந்த நிகழ்ச்சி மூலம் தான் செய்த பித்ரு காரியம் திருப்திகரமாக நடந்துள்ளது என்றும் அதற்குரிய புண்ணியம் நிச்சயம் தமக்கு நல்ல பலன்களைத் தரும்  என்று நம்பினார். அது மட்டும் அல்ல உண்மையிலேயே வந்திருந்தது தத்தாத்திரேயரே என்றால், தமக்கு விரைவில் தத்தாத்திரேய அவதாரமாக இருக்கும் மகன் பிறக்க சாத்தியம் உள்ளது. அப்படி நடந்தால் வந்திருந்தது நிச்சயமாக தத்தாத்திரேயரே என்பதும் தெரிந்துவிடும் என மகிழ்ந்தார்கள். காலம் ஓடியது. சுமதி மீண்டும் கர்பவதி ஆகி ஒரு அழகிய ஆண்  மகவைப் பெற்றெடுத்தாள் .

பிறந்த குழந்தையின் கால்களில் மீன் மற்றும் ஆமை மற்றும் சங்கு போன்ற வடிவ ரேகைகள் இருந்தன. அப்படிப்பட்ட ரேகைகள் சாதாரண மானிடர்களுக்கு இருக்காது. தப்பித் தவறி யாருக்காவது சங்கு ரேகை இருக்க முடியும். அதைக் கொண்டவர்கள் பெரும் வித்வான்களாக இருப்பார்கள். ஆனால் கூர்ம அவதாரத்தைக் குறிக்கும் ஆமை மற்றும் மச்சாவதாரத்தைக் குறிக்கும் மீன் போன்ற உருவ ரேகைகள் மானிடர்களுக்கு இருக்காது.  அவை இரண்டும் பெரிய மகான்களாக உருவெடுக்க உள்ளவர்களுக்கும், தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு  மட்டுமே இருக்கும். மேலும் அந்தக் குழந்தையின் ஜாதகத்தை ஆய்வு செய்த பண்டிதர்கள் அந்த குழந்தை நிச்சயமாக தெய்வாம்சம் பொருந்தியது என்றும், பிற்காலத்தில் பெரும் ஞானியாக உருவெடுப்பார் என்றும், பல சீடர்களைக் கொண்டு அவர்களுக்கு தர்ம நெறிகளை போதிக்கும் ஆசானாக இருந்து பெருமை மிக்கவராகவும் விளங்குவார் என்று கூறினார்கள். அதைக் கேட்ட பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இப்படியாக நல்ல அம்சங்களோடு பிறந்த குழந்தைக்கு ஸ்ரீபாதா என்று பெயரிட்டார்கள். ஒரு பிராமண வம்சத்தில் நடைபெறும் அனைத்து சடங்குகளையும் பிசகாமல் செய்தார்கள்.  முதன் முதலில் குழந்தைக்கு உணவு தரும் வைபவமான அன்னப்பிரசனம்  முதல் குலதெய்வக் காணிக்கை, பூணல் வைபவம், பாடசாலையில் புகுதல், வேதங்களைக் கற்றறிதல் என அனைத்தையும் அந்த குழந்தைக்கு செய்ய அதுவும் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமாக நன்கே வளரத் துவங்கியது. பாடங்களை கிரஹிப்பதிலும் படிப்பதிலும் அதன் ஆர்வம் மிகப் பெரிய அளவில் இருந்ததையும்,  எளிதில் அனைத்தையும் கற்றதையும் கண்டு அதற்கு பாடம் பயில்வித்த ஆசான்களே பிரமித்தார்கள். குழந்தை வளர்ந்து சிறுவனாகி இளைஞ்சனாகி  திருமண வயதையும் எட்டியது.  அதனால் அவருடைய பெற்றோர்கள் அந்த இளைஞ்ஜனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்க்கத் துவங்கியபோது  அந்த சிறுவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒருநாள்  தனது பெற்றோர்களிடம் அந்த இளைஞ்சர் கூறினார் ''தாய், தந்தையே, எனக்கு திருமணம் செய்ய முயலாதீர்கள். நான் சில குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே இந்த பூமியிலே பிறந்து இருக்கிறேன். என்னுடைய இந்த ஜென்மத்தில் நான் அனைத்து பெண் இனத்தையும் எனது தாய் குலமாகவே பாவிப்பேன் என்பது விதி. நான் பலருக்கும் தர்ம நெறியை போதிக்கும் ஆசானாக இருந்து, ஞானமும் தந்து தர்மத்தை நிலை நாட்ட வேண்டும்.  நானே தபம் செய்து இறுதியில் முக்தி அடைய நினைக்கிறேன். நான் பரப்பிரும்மனாக இருக்கவே பிறந்தவன். ஆகவே என்னை திருமண பந்தத்தில் மாட்டி வைக்க எண்ணாதீர்கள் ''  என்று கூறினார்.
...........தொடரும் 

Tuesday, January 28, 2014

Guru Charithram - 9

 

அத்தியாயம் - 5

துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தினால் விஷ்ணு பகவான் பத்து அவதாரங்களை எடுத்தார். பகீரதன் பெரும் பிரயாசை செய்து கங்கையை பூமிக்கு எடுத்து வந்தார். அந்த செயலை பகிரப் பிரயத்தினம் என்பார்கள்.   இந்த உலகில் தீமைகள் அதிகரித்தபோது அதே போன்ற பகீரதப் பிரயத்தினம் செய்து தீமைகளை தடுத்து நிறுத்தி தர்ம நெறியை நிலைநாட்ட  மனித உருவில் அவதரிக்க முடிவு செய்த தத்தாத்திரேயர் தன்னிடம் வேண்டிக் கொண்ட ஒரு பிராமணப் பெண்மணிக்கு  அவளுடைய மகனாகவே இந்த பூமியில் பிறந்தார். அந்தக் கதையை  இப்போது கூறுகிறேன் கேள்'' என்று கூறிய சித்த முனிவர் அந்தக் கதையைக் கூறத் துவங்கினார்.

'' துவாபர யுகமும் முடிந்து கலியும் பிறந்தது. அங்காங்கே தர்மநெறி முறைகள் குறையத் துவங்கின என்றாலும் பரவலாக தர்ம நெறி முறைகளை அனுஷ்டித்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அப்படி வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள்தான் அப்பலராஜு என்ற தெலுங்கு  பிராமணத் தம்பதியினர். சாஸ்திர நெறிமுறைகளை விட்டு விலகாமல், அனைத்து வேதங்களையும் கற்றறிந்து,  தர்மநெறி முறையில் வாழ்ந்து வந்தவர்கள் அந்த தம்பதியினர். கணவனும் மனைவியும் நகமும் சதையும் போல அனைத்திலும் ஒற்றுமையுடன்  இருந்தவாறு வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்களின் பெரும் வருத்தம் என்ன என்றால் அவர்களுக்கு பிறந்த பத்து  மழலை செல்வங்களில் எட்டு இறந்து விட மிஞ்சியது இரண்டேதான். ஆனாலும் அவற்றிலும்  ஒன்று குருடாகவும்,  இன்னொன்று முடமாகவும் பிறந்து இருந்தது. நாம் செய்த புண்ணியப்  பலன் இதுதான் என்று தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு அப்போதும்  தர்ம நெறி தவறாமல் வாழ்ந்து வந்தார்கள் அந்த தம்பதியினர்.

ஒவ்வொருவர் வீட்டிலும் இறந்தவர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பது வழக்கம் அல்லவா. அது போலவேதான் அப்பலராஜு வீட்டிலும் சிரார்த்த தினம் வந்தது. அன்று வேண்டும் என்றே தத்தாத்திரேயர் ஒரு பிராமணர் உருவில் சென்று பிராமணர்கள் போஜனம் முடியும் முன்னரே அந்த வீட்டில் யாசகம் கேட்டார்.  எந்த  ஒருவர் வீட்டிலும் சிரார்த்த தினத்தன்று பிராமண போஜனம் முடியும்வரை பிட்ஷை போட மாட்டார்கள். அதுவும் சிரார்த்த காரியங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதோ கதவைக் கூட திறக்க மாட்டார்கள். யாராவது கால்கைகளை அலம்பிக் கொள்ளாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால் சிரார்த்த காரியத்துக்கு களங்கம் ஏற்பட்டு சாஸ்திர சம்பிரதாயங்களை  மீறியதாகி விடும்   என்பதினால் அந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்தது.

சிரார்த்த காரியங்கள் துவங்கி விட்ட நிலையில் வாசலில் வந்து நின்ற பிராமணரை அப்பலராஜுவின் மனைவியான சுமதி பார்த்து விட்டாள். அவளும் நல்ல தர்ம பத்தினி என்பதினால் அவள் மனதில் இனம் புரியாத ஒரு பயம் தோன்றியது.   சிரார்த்தம் நடக்கும் வீடுகளில் எந்த ஒரு பிராமணரும் சென்று யாசகம் கேட்பதில்லை.  ஆனால் இந்த பிராமணர் ஏன் சிரார்த்தம் நடந்து கொண்டு இருக்கும்போதே வாசலில் வந்து 'பவதி பிட்ஷாம் தேகி' என்று கேட்கிறார். இந்த சம்பவம் எதோ காரணமாகத்தான் நடக்கிறது. ஆனால் அதன் காரணம் அவளுக்கு விளங்கவில்லை. அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கமோ மனதில் ஒரு சலனம்.  வாசலில் வந்து பிட்ஷை எடுக்கும் பிராமணருக்கு  பத்து அரிசி தானியத்தைக்  கூட -அட்சதைப் போல- போடாமல் அனுப்புவது பெரும் குற்றம். அதுவும் திவசம் நடக்கும் அன்று அப்படி வெறும் கையுடன் ஒரு பிராமணரை அனுப்பிவிட்டால், பிட்ஷை கிடைக்காத அவர் மனதில் வருத்தத்தோடு சென்றால் பித்ருக் காரியமும் நிறைவடையாதே என அனைத்தையும் சில ஷணங்களில் யோசனை செய்து விட்டு தனது கணவனை ஜாடையாகக் கேட்கலாம் என எண்ணிக் கொண்டு அவரை நோக்கினாள்.

ஆனால் அப்பலராஜு அவளை கவனிக்காமல் சிரார்த்த மந்திரங்களை ஓதியபடி அமர்ந்து கொண்டிருக்க  வாயிலில் வந்திருந்த பிராமணரும் இரண்டாம் முறையாக 'பவதி பிட்ஷாம் தேகி' எனக் கூறி விட்டார். சாதாரணமாக  மூன்று முறை அப்படிக் கூவிய பின் ஒன்றும் கிடைக்காவிடில் பிட்ஷை கேட்டு வருபவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள் என்பதினால் சுமதி சற்றும் தாமதிக்காமல் வெளியில் சென்று அவசரமாக  பிட்சைப் போட்டு விட்டு வீட்டுக்குள் செல்ல முற்பட்டாள். அதையே எதிர்பார்த்துக் காத்திருந்த தத்தாத்திரேயர் சற்றும் தாமதிக்காமல் அவளுக்கு தன்னுடைய நிஜ ரூபத்துடன் தரிசனம் தர அவள் அங்கேயே அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். ''அம்மா, உனக்கு என்ன வரம் வேண்டும்...கேள்...தருகிறேன்'' என்று தத்தர் அவளைக் கனிவுடன் கேட்க அவளும் அவரிடம் கூறினாள்  ''பரமாத்மா, கேட்டவர் அனைவருக்கும் அவர்கள் கேட்டதை எல்லாம் தயங்காமல் கொடுத்து அருள் புரிபவர் நீங்கள் . அப்படிப்பட்டவர் இங்கு வந்து என்னை அம்மா என்று அழைத்தீர்கள். ஆனால் அந்த சப்தத்தை ஒருநாள் கூட மரணம் அடைந்து விட்ட என் எட்டு குழந்தைகள்  மூலம் கேட்க முடியாத அபலை நான். அது மட்டும் அல்ல, உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளும் குருடாகவும், முடமாகவும் இருக்கும்போது   நான் கேட்க என்ன உள்ளது? ஆனாலும்  இந்த ஜென்மத்தில் அம்மா என்று என்னை அழைக்க மழலைப் பேறு இல்லை என்றாலும், அடுத்த ஜென்மத்திலாவது உங்களைப் போன்ற நற் பண்புகள் கொண்ட, நீண்ட ஆயுளும், நோயற்றவனாகவும், பெரும் புகழ் பெற்று விளங்குபவனாகவும் இருக்கும் ஒரு மகவை நான் பெற்றிட அருள் புரிந்தால் அதுவே  இந்த அபலைக்கு போதும்'  என்று கதறி அழுதாள். ஆனால் அவளுக்கு தன்  முன் காட்சி தந்தது தத்தாத்திரேயர் என்பது அப்போது புரியவில்லை. மனம் அத்தனை வெறுமையாக இருந்தது.

அவளை தேற்றி சமாதானப்படுத்தினார் தத்தர். 'அம்மா, கவலைப்படாதே. விரைவிலேயே நீ மீண்டும் கர்ப்பம் அடைந்து நல்லதொரு மகனைப் பெற்றெடுப்பாய். அது தத்தாத்திரேய அவதாரமாக இருக்கும் (தான் என்று  கூறாமல் இப்படி மறைமுகமாகக் கூறினார்). ஆனால் ஒன்றை மனதில் நியாபகம் வைத்துக் கொள்.  பிறக்கும் மகன் வயதானதும் அவன் கூறும் எதையும் தட்டாதே, தடுக்காதே. அவன் கூறுவதை அப்படியே செய்யும் மனநிலையில் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஏன் எனில் உனக்குப் பிறக்க உள்ள மகனோ பெரிய மகானாகி பலருக்கும் தீட்ஷை தருபவனாக இருப்பான்.  தன்னிடம் வந்து சரண் அடைந்தவர்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் சக்தியையும் பெற்று இருப்பான்.  ஆகவே நீ மன நிம்மதியோடு சென்று பித்ரு காரியங்களை நடத்தி முடிக்க உன் கணவருக்கு துணை இரு' என்று கூறிய பின் அப்படியே மறைந்து விட்டார்.  அதுவே துவாபர யுகம் முடிந்து கலியும் பிறந்த நேரம்  ஆகும்.
........தொடரும்

Monday, January 27, 2014

Guru Charithram - 8

 

அத்தியாயம் - 4
சித்த முனிவர் கூறத் துவங்கினார் '' மகனே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட விதமே சுவையானது. அது படைக்கப்பட்டபோது உலகமே பிரளயத்தில் மூழ்கி  இருந்தது.  அப்போது கடலில் ஆதிசேஷன் மீது விஷ்ணு பகவான் படுத்திருந்தார். அவருடையத் தொப்பிள் கொடியில் இருந்து வெளிவந்த பிரும்ம நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்தபோது அவருக்கு நான்கு முகங்கள் பிறந்தன. அதன் பின் அவர் வேதங்களைப் படைக்க, யுகங்களும் படைக்கப்பட்டன.  அடுத்தடுத்து  காலங்கள், திசைகள்,  பதினான்கு லோகங்கள், பாதாளம், தேவலோகம் என அனைத்தையும் படைத்து விட்டு  சனகா, சனாதனா, சனத்குமரா மற்றும் சனத் சுஜாதா போன்றவர்களையும்   ஏழு முனிவர்களையும் படைத்தார்.  

அதன் பின்னர் தன்னையே இரண்டாகப் பிளந்து   கொண்டு வலப் புறத்தில் இருந்து  மனுவையும், இடப்புறத்தில் இருந்து ஷடரூபா என்பவர்களையும் படைக்க அந்த இருவருக்கும் தேவஹுதி என்ற ஒரு பெண் பிறந்தாள். தேவஹுதி என்பவள் மனித குலத்திற்கு  அதிபதியான கர்தபிரஜாபதி எனும் முனிவரை மணந்து கொண்டாள். அவர்களுக்கு ஒன்பதுப் பெண்கள் பிறந்தனர். பிரும்மாவின் கண்களில் இருந்து அத்ரி முனிவர் பிறந்தார். காலத்தின் சில செயல்பாட்டினால் அத்ரி முனிவரை பதி விரதையான அனுசூயா என்பவர் மணந்து கொண்டாள். அனுசூயாவுக்கு இணையான பதி விரதை இந்த பிரபஞ்சத்திலேயே இருக்க முடியாது என்ற அளவு அவள் புகழ் எங்கெங்கும் பரவியது.  அவளைப் பொருத்தவரை அவள் கனவிலும், நினைவிலும், மனதிலும், உள்ளத்திலும் சேவைகளிலும், ஏன் அவள் பார்வை செல்லும் அனைத்து இடங்களிலும் அவளுக்கு அத்ரி முனிவரை தவிர வேறு எதுவுமே தெரியவில்லை எனும் அளவில் பதிவிரதையாக இருந்தாள். அதனால் அவளை அனைவருமே உலக நாயகி ஜெகதாம்பா என்றே அனைவரும் அழைத்தனர்.
 
அனுசூயா கணவனுக்கு அனுசரணையாக இருந்து கொண்டு அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்து வந்தாள். அவரது பூஜைக்கான பழங்கள், பூக்கள் என அனைத்தையும் தானே கொண்டு வந்து கொடுத்தும், வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை கணவர் இல்லாத நேரங்களில் அவர் சார்ப்பாக உபஜரித்தும் அவர்களுக்கு தேவையானதை கணவர் மூலம் செய்தும்  வந்தாள்.  இப்படியாக அத்ரி  முனிவர் மற்றும் அனுசூயாவின் வாழ்கை ஆனந்தமாக சென்று கொண்டு இருந்தபோது இந்திரனும் பிற தேவர்களும் அவள் பெற்று இருந்த சக்தியைக் கண்டு பொறாமைக் கொண்டு அஞ்சலாயினர்.  ஏன் எனில் மகா  பதிவிரதையாக  உள்ளவர்கள் அபார சக்தியைப் பெற்று தேவேந்திரனை விட வலிமையான சக்தி  பெற்றவர்கள் ஆகி விடுவார்கள் என்ற நியதி இருந்ததே அதன் காரணம். அவளது பதிவிரத  சக்தியைக் கண்டு திருமூர்த்திகளின் மனைவிகள் கூட பொறாமைப்படும் அளவுக்கு அவள் புகழ் பெற்று இருந்தாள்.
 
அதனால் அவளுடைய பதிவிரதா  சக்தி எந்த அளவிற்கு பலம் வாய்ந்தது என சோதனை  செய்து பார்க்குமாறு  இல்லாததையும், பொல்லாததையும் கூறி திருமூர்த்திகளின் மனைவிகள் தமது கணவன்மார்களை தூண்டி விட திடீரென ஒரு நாள் மதியம் திருமூர்த்திகள் மூவரும் பிராமணர்கள் போலச் சென்று அனுசூயாவின்  குடில் முன் நின்று கொண்டு ''அம்மா, தாயே, நாங்கள் பிராமணர்கள். எங்களுக்கு உணவு தர முடியுமா?'' என்று கேட்டார்கள். அவளும் அவர்களை ஸ்நானம் செய்துவிட்டு வருமாறும், அதற்குள் தனது கணவரும் வந்து விடுவார் என்றும், அதற்குள் அவர்களுக்கான உணவையும்  தயார் செய்து வைப்பதாகவும் கூறினாள்.

அவர்களும் குளித்து விட்டு வந்தப் பின் உணவருந்த அமர்ந்தார்கள். ஆனால் அத்ரி முனிவர் வந்தபாடில்லை. அவர்கள் தாம் விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும் எனக் கூறியதால், அத்ரி முனிவர் வராவிடிலும் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை உணவருந்தாமல் அனுப்பக் கூடாது என்று எண்ணிய அனுசூயாவும், வந்தவர்களுக்கு அர்க்கியம் தந்து, இலைப் போட்டு சாப்பிட உட்காருமாறு கூறினாள்.  வந்தவர்களோ அனுசூயா திடுக்கிடுவது போல ஒரு நிபந்தனையை வைத்தார்கள். அவர்கள் கூறினார்கள் ''அம்மணி, இதுவரை நாங்கள் எங்கு சென்று உணவு அருந்தினாலும் எங்களுக்கு  உணவு பரிமாறுபவர்கள் தம் உடலில் ஒரு பொட்டுத் துணியும் இருக்காமல் அவர்கள் மனது களங்கம் இல்லாமல் நிர்வாண நிலையில் உள்ளது என்ற சத்தியத்தை வெளிப்படுத்தும் விதமாக நிர்வாணமான உடம்புடன் இருந்து, பறிமாறினால்தான் உணவு அருந்துவோம் என்ற விரதம் பூண்டு உள்ளோம். எவர் ஒருவர் பரிபூரணமான நிர்வாண நிலையில் மனதை வைத்திருப்பாரோ அவரே பரிபூரண பதிவிரதையாக இருக்க முடியும்  என்பதால் நீயும் அப்படிப்பட்ட நிலையில் பறிமாறினால்தான் உணவை உண்போம்'' என்றார்கள்.
 
அடுத்தகணமே வந்தவர்கள் யார் என்பதை தனது பதிவிரதா சக்தி மூலம் அனுசூயா உணர்ந்து கொண்டு விட்டாள். சமையல் அறையினுள் சென்று மானசீகமாக தன் கணவரை வணங்கினாள். வந்திருப்பது பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவன் என்றும் தன் கற்பை சோதனை செய்யவே அவர்கள் வந்து இருக்கிறார்கள் என்பதினால் மூவரும் என் குழந்தைகளாக மாற வேண்டும் என அவரை வேண்டினாள். அவ்வளவுதான் அடுத்தகணம் திருமூர்த்திகள் மூவரும் சிறு குழந்தைகளாக மாறி தரையில் உருளத் துவங்க அவர்களை எடுத்து  தனது மடியில் வைத்துக் கொள்ள அவள் மார்பில் இருந்து வழிந்த பாலை அந்த மூவரும் குடித்தார்கள். அதன் பின் உறங்கி விட்டார்கள்.

தனது கடமைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த அத்ரி முனிவர் தனது ஞான திருஷ்டியினால் நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். அதே சமயம் திருமூர்த்திகளின் மனைவிகளும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அனுசூயாவும் நடந்ததை அவர்களுக்கு  கூற அங்கு   நடந்ததைக் கேள்விப்பட்டவர்கள்  அவள் மகா பதிவிரதை என்பதை புரிந்து கொண்டு அவள் கால்களில் விழுந்து மன்றாடி தத்தம் கணவன்மார்களை மீண்டும் தம்மிடம் பழைய உருவிலேயே திருப்பித் தருமாறு கேட்டார்கள். அத்ரி முனிவரும் அனுசூயாவும் அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு திருமூர்த்திகளுக்கு பழைய உருவை திருப்பிக் கொடுக்க அவர்கள் முன் பிரசன்னமான திருமூர்த்திகள் மூவரும் ஒன்றிணைந்த உருவமாகி தத்தாத்திரேயர்  எனும் அவதாரத்தை காட்டினார்கள் ''. (தத்தாத்திரேய அவதாரம் தோன்றக் காரணமாக இந்த நாடகம் திருமூர்த்திகளினால்  நடத்தப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.  ஏன் எனில் அந்த அவதாரத்தின் மூலமே மும்மூர்த்திகளின் சார்ப்பாக ஒரு குரு பரம்பரையை தோற்றுவிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அவர் கலிகாலத்தில் பதினாறு அவதாரங்களை எடுத்து மனித குளத்தை ரட்ஷிக்க உள்ளார் என்கிறார்கள் )

இதைக் கூறிய சித்த முனிவர் நாமத்ஹரகாவிடம் மேலும் கூறினார் ''மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் பல மனித ரூபங்களை எடுத்து மனித உலகில் உலவ உள்ளார். அவர்களது மேம்பாட்டிற்காக தான் யார் என்பதை வெளிக் காட்டாமல் பல்வேறு ரூபங்களை எடுத்தும், எடுக்கவும் உள்ளார். அவரது மகிமைகள் ஏராளம் உண்டு. இப்போதும் அவர் உலகில் அவதாரம் எடுத்து வந்துள்ளார்''.

அதை எல்லாம் கேட்ட நமத்ஹரகா சித்த முனிவரிடம் ஆவலுடன் கேட்டார். ''கடவுளைப் போல என்முன் வந்து என்னுடைய அஞ்சாமைகளை விலக்கிக்  கொண்டு இருக்கும் மகா முனிவப் பெருமானே, தத்தாத்திரேயர் மனித உலகில் ஒரு அவதாரம் எடுத்து வந்து  உள்ளார் என்று கூறினீர்களே, அந்த அவதாரம் என்ன, அவர் இப்போது எங்கு இருக்கிறார் போன்ற விவரங்களை தயவு செய்து எனக்கு எடுத்துரைப்பீர்களா'' எனப் பணிவுடன் கேட்க சித்த முனிவரும் அந்தக் கதையையும் கூறத் துவங்கினார்  (இத்துடன் அத்தியாயம் - 4 முடிந்தது).

..........தொடரும்

Guru Charithram - 7

 

.............அத்தியாயம் -3 (i)

மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொள்ள நதிக்கரைக்கு  சென்ற  துர்வாச முனிவர் துவாதசி கால நேரம் முடிந்து விடும் என்பதை தெரிந்து கொண்டும் அம்பாரிஸாவை சோதிக்க எண்ணியவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லாமல் தாமதப்படுத்திக் கொண்டு இருக்க அரண்மனையிலோ இன்னும் ஏன்  முனிவரும் வரவில்லை என்பதைக் கண்ட அரசன் தவிக்கலானான்.

தன்னுடைய வாழ்க்கையில் அத்தனைக் காலமும் துவாதசி கால நேரம் முடிவதற்கு முன்னரே தவறாமல் தன் விரதத்தை முடித்துக் கொண்டு வந்திருந்த மன்னன் சோதனையாக அன்று மாமுனிவர் வரவில்லை என்பதால் விரதத்தை எப்படி முடிப்பது என்பது தெரியாமல் குழம்பினான். வீட்டுக்கு வந்த விருந்தாளி அதுவும் ஒரு மாமுனிவர்  சாப்பிட வந்தால்  அவர் வருவதற்கு முன் தான் உண்டு விட்டு அமர்ந்திருப்பது தவறு என்பதால் மன்னன் தவித்தான். அதே சமயத்தில் விரதத்தையும் துவாதசி கால நேரம் கடக்கும் முன் முடிக்க வேண்டும். மாமுனிவரையும் அவமானப்படுத்துவது போல அவர் வருவதற்கு முன்னர் உணவு உண்ணக் கூடாது.  என்ன செய்வது என யோசித்தவன் தண்ணீர் அருந்துவது உணவு உண்பதற்கு சமம் அல்ல என்பதினால் சிறிது தண்ணீரை அருந்திவிட்டு தனது விரதத்தை முடித்துக் கொண்டான். வேறு வழி இல்லை.... தண்ணீர் கூட அருந்தாமல் இருந்தால் விரதம் முடிந்து போனதாக கருத முடியாது என்பதினால் அதை செய்த பின் முனிவர் வரும்வரை காத்திருந்தான்.

தனது தினக் கடமைகளை முடித்துக் கொண்ட துர்வாச முனிவர்  அரண்மனைக்கு வந்தார். வந்தவர் நேரமாகி விட்டதினால் மன்னன் தனது விரதத்தை முடித்துக் கொண்டு விட்டதை தெரிந்து கொண்டார்.  தன்னுடைய சக்தியினால் நடந்து முடிந்திருந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். துவாதசி கால நேரம் முடியும் முன் தண்ணீர் அருந்தி விரதத்தை முடித்துக் கொண்டது  உணவு உண்பதற்கு  சமமாகாது என்ற தர்ம சாஸ்திரம் அவருக்கு தெரியும். ஆனாலும் அவருடைய முன் கோபம் அவரை மீறி வெளி வந்தது.

அம்பாரிஸாவை பார்த்துக் கோபமாக  கத்தினார் ''நான் வருவதற்கு  முன்னரே  நீ உண்டுவிட்டு என்னை அவமானப்படுத்தி விட்டாய். நீ செய்யக் கூடாத பாவத்தை செய்து விட்டாய். இதோ பிடி சாபம்'' என கத்தியவாறே அந்த அரசனுக்கு சாபம் கொடுக்க கையை உயர்த்தினார். மன்னன் பார்த்தான். அந்த சாபத்தினால் ஏற்பட இருக்கும் அழிவை விஷ்ணுவினால் மட்டுமே தடுக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தவன்  முனிவர் சாபம் தரத் துவங்கும் முன்பே மனதில் விஷ்ணுவை வேண்டிக் கொண்டு  தியானம் செய்யத் துவங்கினார்.  துர்வாசம் துவாதசி தினத்தன்று அங்கு செல்லும்போதே அவர் எதோ தீய எண்ணத்துடன் செல்கிறார் என்பதை அறிந்து கொண்டிருந்த விஷ்ணு பகவானும் மேலிருந்தவாறு அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தார். அதனால்தான் மன்னன் தியானம் செய்யத் துவங்கியதுமே முனிவருக்கும் மன்னனுக்கும் இடையில் வந்து தானே நின்று கொண்டு விட்டார்.

துர்வாச முனிவர் சாபம் தரும் முன் தன்னை காப்பாற்றுமாறு விஷ்ணுவின் கால்களைப் பிடித்துக் கொண்டு அம்பாரிஸா விஷ்ணுவை கெஞ்சத் துவங்க துர்வாச முனிவரை நோக்கி விஷ்ணு பகவான் கூறினார் ‘மகரிஷியே இந்த அம்பாரிஸா  என்னுடைய தூய பக்தன். அவனை நீங்கள் வேண்டும் என்றே அவமானப்படுத்த நினைத்ததினால் நீங்கள் கொடுக்கும் எந்த சாபமும் அவனிடம் போய் சேராது. அது என்னையே அது வந்தடையும்.  என்னிடம் தஞ்சம் அடைந்த என் பக்தர்களை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. அவர்களைக் காப்பது என் கடமை. ஆகவே நீங்கள் நீங்கள் இந்த மன்னனுக்கு என்ன சாபம் தந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்''.

அதைக் கேட்ட துர்வாச முனிவருக்கு தான் செய்த தவறும் புரிந்தது. உலகத்தின் நன்மையைக் கருதித்தான் இப்படி ஒரு நிலைமை தன் மூலம் வந்திருக்கின்றது என்பதும் புரிந்தது. ஒரு காரணத்திற்காக நாடகம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்ட முனிவர் மனித குலத்தின் நலனை மனதில்  கொண்டு விஷ்ணு பகவானுக்கு தான் கொடுக்க உள்ள சாபமும் நன்மைக்காகவே அமைவதாக இருக்கட்டும் என எண்ணி தான் உயர்த்திய கையினால் '' இப்படி என்னை சங்கடத்தில் ஆழ்த்தி என்னை மற்றவர்கள் முன்  தலைகுனிய வைத்ததினால் நீங்கள் பூமியில் பல பிறவிகள் எடுக்க வேண்டும்'' என்று வேண்டும் என்றே கூறி விஷ்ணுவிற்கு சாபம் கொடுத்தார்.  அப்படி பொது நன்மையை மனதில் கொண்ட வண்ணம் துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தின் விளைவாகவே விஷ்ணு பூமியில் பல அவதாரங்களை எடுக்க வேண்டி இருந்தது.

பொது நன்மையை மனதில் கொண்டு துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தின் விளைவாக விஷ்ணுவும் பூமியில் பல அவதாரங்கள்  எடுத்து புவியைக் காக்க நேரிட்டது. அவர் மொத்தம்  பத்து அவதாரங்களை எடுத்தார். அவை அனைத்தும் புராணங்களில் விவரமாக கூறப்பட்டு உள்ளன. அந்த பத்து அவதாரங்களை தவிர விஷ்ணு பகவான் எடுத்த மற்ற அவதாரங்களை குறித்து பிரும்ம வித்யாவை கற்று அறிந்திருந்த பண்டிதர்களுக்கு மட்டுமே தெரியும். அந்த வித்தையை கற்றுக் கொள்ளும் பண்டிதர்கள் மகா புருஷர்களாக இருப்பார்கள். அதை எளிதில் கற்கவும் முடியாது என்பது மட்டும் அல்ல  அனைவரும் கூற கற்றுக் கொள்ள முடியாத பிரும்ம வித்தை அது.  அதில் உள்ள ஒரு கதையை உனக்குக் கூறுகிறேன். கேள் என்று நமத்ஹரகாவிடம் அந்த சித்த முனிவர் கூறினார் (இத்துடன் அத்தியாயம்-3 முடிந்தது).
..........தொடரும்

Sunday, January 26, 2014

Guru Charithiram - 6

 

அத்தியாயம் -3 
 

அவர் கூறியதைக் கேட்டு மனம் மகிழ்ந்து நின்ற நமத்ஹரா அவரிடம் கேட்டார் ''மகாத்மாவே, மாமுனிவரே, உங்களை சந்தித்து இத்தனை விவரங்களை அறிந்து கொண்டதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கே தெரியாத என் குருநாதரை தேடிக் கொண்டு, எங்கு செல்கிறேன் என்பதையும் புரிந்து கொள்ளாமல் சென்று கொண்டு இருக்கும் எனக்கு வழியிலே உங்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததும் நான் செய்த பெரும் புண்ணியமாகவே இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். என் மனதில் உங்களைக் குறித்து ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. ஸ்வாமி, நீங்கள் உண்மையிலேயே யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் பயணத்தின் நோக்கம் என்ன என்பதையெல்லாம் இந்த அபலைக்கு கூற வேண்டும். என்னை உங்களுடைய சீடனாக ஏற்றுக் கொண்டு எனக்கு கருணை புரிய வேண்டும்'' என்று அவரிடம் கேட்டார்.

கால்களில் விழுந்து வணங்கிய நமத்ஹராவை தூக்கி நிறுத்தினார் அந்த சித்த புருஷர். அவரிடம் கூறினார் ''மகனே, உன்னை சுற்றி இன்னும் பல அற்புதங்கள் நிகழ்வதை நீ இனிக் காணலாம். அதற்குக் காரணம் என்னுடைய குருநாதரே. அவர் அமிர்தம் போன்றவர். மும்மூர்த்திகளின் அவதாரமான காமதேவனை போன்ற அவரை நினைக்க நினைக்க மனதில் நம்மை அறியாமலேயே அமைதியும், மகிழ்ச்சியும் பொங்குவதை  உணர முடியும். இதோ என் கையில் நீ பார்க்கிறாயே, இதுவே என் குருநாதரின் அற்புத சரித்திரம்.  நான் தினமும் பல முறை இந்த சரித்திரத்தை பல முறை படிப்பதினால்தான்  என் மனம் சஞ்சலம் அடையாமல் உள்ளது.  நான் மட்டும் அல்ல இதை படிப்பவர் எவர் ஆயினும் அவர்களுக்கும் அதே இன்பம் கிடைக்கும். இதைப் படித்தால் அனைத்து புண்ணியங்களும் கிட்டி  வாழ்வில் நம்மை சூழ்ந்து வரும் தீமைகள் விலகும்.  நாம் வேண்டியது நமக்குக் கிடைக்கும். பாவங்கள் விலகும். இத்தனை ஏன், ஒரு பிராமணனைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷம் கூட இந்த புத்தகத்தில் எழுதப்பட்டு உள்ள சூரியனைப் போல ஜொலிக்கும்  எனது குருநாதரின் சரித்திரத்தை படிப்பதினால் விலகிவிடும் எனும்போது இதன் மகிமை எப்படிப்பட்டது என்பதை உன்னால் உணர்ந்து கொள்ள முடியும்''.

நமத்ஹரா அவரிடம் ஆர்வத்துடன் கேட்டார் ''ஸ்வாமி, நீங்கள் இவற்றை எல்லாம் கூறும்போதே அதைக் கேட்டு என் உடல் புல்லரிக்கிறது. நான் முற்றிலும் உலக பந்தத்தில் இருப்பவன். காமம், க்ரோதம், ஆசாபாசங்கள் அனைத்தையும் கொண்டவன். எனக்கு இந்த நிலையில்  இருந்து முக்தி கிடைக்க வேண்டும் என்பதினால்தான் என் கண்களுக்கு புலப்படாத என் குருவை தேடிக் கொண்டு செல்கிறேன்.  நீங்கள் கூறுவதில் இருந்து உங்கள் கையில் உள்ள குருநாதரின் புத்தகத்தைப் படித்தாலே நான் வேண்டும் அனைத்தும் கிடைக்கும் என்பது புரிகிறது. ஸ்வாமி ஆகவே தயவு செய்து அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு உள்ள  சூரியனைப் போல ஜொலிக்கும் அவருடைய வாழ்கை வரலாற்றை எனக்கு விவரமாக எடுத்துரைப்பீர்களா?''.

அதைக் கேட்ட சித்த முனிவர்  கூறினார் '' மகனே உனது ஆர்வம் எனக்குப் புரிகிறது. வா, அதோ தெரிகிறதே ஒரு நெல்லி மரம். அதன் அடியில் அமர்ந்து கொண்டு உனக்கு என் குருநாதரைப் பற்றிய அனைத்து சரித்திரத்தையும் கூறுகிறேன். . வா...அங்கு செல்வோம் ..வா''. அதைக் கேட்ட நமத்ஹரா   சித்த முனிவரிடம் கேட்டார் ''குருநாதா, அதென்ன நெல்லி மரத்தடியில் அமர வேண்டும் என்கிறீர்கள்? நெல்லி மரத்துக்கு என்ன அத்தனை விஷேசம்??'' என்று கேட்க சித்த  முனிவர் கூறத் துவங்கினார் ''மகனே, நெல்லி மரம் சாதாரண மரம் அல்ல .... அது தத்தாத்திரேயருக்கு மிகவும் பிடித்த மரமாகும்.  அதனால்தான்  எனது சத்குருனாதரும் நெல்லி மரத்தடியில் அமர்வதை விரும்புவார் என்பதினால் நானும் என் குருநாதரை என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ள எங்கெல்லாம் நெல்லி மரம் தென்படுமோ  அங்கெல்லாம் சென்று அதன் நிழலில் தவறாது அமர்வேன்''   என நமத்ஹரகாவை அந்த நெல்லி மரத்தடிக்கு அழைத்துச் சென்று, அதனடியில் அமர்ந்து கொண்டு   தனது குருவின் வாழ்கை சரித்திரத்தை கூறத் துவங்கினார்.

''முன்பு ஒரு முறை சூரிய வம்சத்தைச் சார்ந்த அம்பாரிஸா  என்ற மன்னன் பூமியிலே ஆட்சியில் இருந்தான். அவன்  விஷ்ணு பகவானின் பரம   பக்தன். ஒவ்வொரு பௌர்ணமியின் பதினோறாவது தினங்களிலும் கடுமையான ஏகாதசி விரதம் அனுஷ்டித்து  அந்த விரதத்தை துவாதசி அன்று முடித்துக் கொள்வார். ஏகாதசி முழுதும்  விஷ்ணு பகவானின் நாம ஜெபம் செய்தபடியும், அவர் மீது தோத்திரங்களை பாடியும், பஜனைகள் செய்தும் விஷ்ணு பெருமானை தன்  இருப்பிடத்துக்கு வருமாறு அழைப்பார்.   அந்த கடுமையான விரதத்தை எக்காரணம்  கொண்டும் அவர்  அனுஷ்டிக்காமல் இருந்ததே இல்லை.  இப்படியாக பல காலம் கழிந்தது. அந்த மன்னனின் நேர்மையினால் அவர் புகழ் எங்கெங்கும் பரவி இருந்தது. அதைக் கேள்விப்பட்ட துர்வாச முனிவர் அந்த மன்னனின் வைராக்கியத்தை சோதனை செய்ய முடிவு செய்து வேண்டும் என்று வேண்டும் என்றே ஒரு துவாதசி தினத்தன்று அம்பாரிஸாவின் அரண்மனைக்கு சென்றார்.  துர்வாச முனிவர்  முன் கோபக்காரர் என்பதை அனைவருமே அறிவார்கள்.  அவர் சென்றபோது  மன்னன் ஏகாதசி விரதத்தில் இருந்தான். ஆனாலும்  விரதம் முடிய உள்ள துவாதசி தினத்தில் வீட்டுக்கு வந்த துர்வாச முனிவரை கண்டவன் பெரும் மகிழ்ச்சி  அடைந்து அவரை அன்புடன் வரவேற்று முறையாக அர்கிய பாத்யம் கொடுத்து அவரை உபசரித்தான். அர்கிய பாத்யம் என்பது வந்தவருக்கு  கை கால்களை அலம்பிக் கொள்ள ஒரு செம்பில் தண்ணீர் தருவது ஆகும். தன் அரண்மனைக்கு வந்த முனிவரிடம் தான் ஏகாதசி விரதத்தை  துவக்கி விட்டதாகவும் அதை துவாதசி முடியும் முன்னர் முடிக்க வேண்டும் என்பதினால் துவாதசி  முடியும் முன்னர் விரைவாக அவருடைய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வந்து உணவு அருந்துமாறு  அவரிடம் மிகவும் பணிவாக வேண்டிக் கொண்டான். அதற்குக் காரணம் அந்த முனிவர் வந்தபோது துவாதசி முடிய  ஒரு மணி நேரமே மீதம் இருந்தது.  அந்த மன்னன் கூறிய காரணத்தைக் கேட்ட முனிவரும்  அவன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு விரைவில் நதிக் கரைக்கு சென்று  குளித்து விட்டு தன்னுடைய ஆசார அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வேண்டும் என்றே  அவர் திரும்பி வருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.
.........தொடரும் 

Saturday, January 25, 2014

Guru Charithiram - 5

 

 ............அத்தியாயம் -2 (iv)

தீபிகா எப்படித்தான் சமைத்துப் போட்டாலும் அதில் குறைக் கூறி அதை அவன் மீதே துப்புவார். தீபிகா சாப்பிட அமர்ந்தால் அவர் தட்டின் மீதே காரி உமிழ்வார். ஆனாலும் தீபிகா முகம் சுளிக்காமல் அந்தக் கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டே அவருக்கு பணிவிடைகளை செய்து வந்தார். சீழ்பிடித்துப் போன கொப்புளங்களில் இருந்து ரத்தம் வடியலாயிற்று. அவற்றையும் தீபிகாவே துடைத்து விட வேண்டியதாயிற்று. இரவெல்லாம் தீபிகா தூங்க முடியாமல் இருக்கும். அதன் காரணம் வலியினால்  அவருடைய குருநாதர் கத்துவதே. இவ்வளவு கஷ்டத்திலும் சேவை செய்து வந்தாலும்  குருநாதருக்கு தீபிகாவின் மீது குறை இருந்து கொண்டே இருந்தது.  அவரைக் வேண்டும் என்றே திட்டித் தீர்ப்பார்.  ஆனாலும் குருவிற்கு செய்து வந்த பணிவிடைகளை தீபிகா எந்த விதத்திலும் குறை வைக்காமல் செய்து வந்தார். காலப்போக்கில் குருநாதரின் கண் பார்வையும் மறைந்தது. முற்றிலும் குருடராகி விட்டார். 

இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கையில் காசியில் அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த காசி விஸ்வநாதர் (சிவபெருமான்) தீபிகா தனது குருவுக்கு செய்யும் பணிவிடைகளைக் கண்டு அவர் மீது இறக்கம் கொண்டார்.  ஆகவே  ஒருநாள்  வேத சர்மா உறங்குகையில் காசி விஸ்வநாதர் தீபிகாவுக்கு முன்  தோன்றி 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார்.  குருநாதரைக் கேட்டு விட்டு கூறவும், சிவபெருமான் 'உடனடியாக உன் குருநாதரிடம் கேட்டுவிட்டு என் சன்னதிக்கு வந்து கூறு' என்று ஆணையிட்டு விட்டு சென்றார். தீபிகாவும் உடனடியாக உள்ளே சென்று தனது குருவை எழுப்பி  தன்  முன் தோன்றிய சிவபெருமான் ''உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்பதினால் 'குருநாதருக்கு உடல் நலத்தைக் கொடு' என்று வேண்டவா''  என்று  குருவிடம் வினவ, குருநாதர் அவர் மீது எரிந்து விழுந்தார்.

''உனக்கு என்னிடம் சேவகம் செய்ய பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் இப்படிக் கேட்கிறாய். நான் இந்த ஜென்மத்திலேயே  என் பாபங்களைத் தொலைத்து விட நினைத்தால், நீயோ அதை அடுத்த ஜென்மத்திலும் அனுபவிக்க ஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்கிறாயே. அதை விட என்னை இந்த கங்கையிலேயே  தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடுவதுதானே'' என்று தாறுமாறாகக் கத்தினார். அதைக் கேட்டும்  தீபிகா வருத்தம் சற்றும் அடையாமல், குருவிற்கு வந்துள்ள வியாதியின் உபாதையினால் அப்படி எரிந்து விழுகிறார் என்று மனதில் எண்ணியவாறு உடனடியாக காசி விஸ்வநாதரிடம் சென்று தனக்கு எந்த வரமும் வேண்டாம் என்று கூறி விட்டு வந்து விட்டார்.  குருநாதருக்கு அவருடைய சேவகம் தொடர்ந்தது.

தேவலோகத்துக்கு திரும்பிச் சென்ற சிவபெருமானும் நடந்த விவரங்கள் அனைத்தையும் - தீபிகா செய்யும் சேவைகள் முதல் அவருக்கு தான் வரம் கொடுக்க முன்வந்த நிகழ்ச்சிவரை-   விஷ்ணுவிடம் கூற அவற்றைக் கேட்ட  விஷ்ணு  'இப்படியும் ஒரு சிஷ்யன் குருவுக்கு பணிவிடை செய்வாரா?' என ஆச்சர்யம் அடைந்து அந்த சிஷ்யரை தானும்  சந்தித்து அவருக்கு வரம் ஏதும் தர முயற்சி செய்யலாம் என முடிவு செய்தபின் பூலோகம் சென்றார்.  அங்கு சென்று தீபிகாவுக்கு  காட்சி தந்தவர்  ''குழந்தாய், உன் குரு பக்தியைக் குறித்து சிவபெருமான்  என்னிடம் மிக மனை நிறைவோடு கூறினார்.  உன்னைப் போல இந்த பூமியிலே  ஒரு சிஷ்யன் இருக்க முடியாது எனும் வகையில் சிறப்பாக குரு வந்தனம் செய்கிறாய். ஆகவேதான் நானும் உன்னிடம் வந்தேன். சரி, உன் குருவிற்கு எந்த வரமும் வேண்டாம். உனக்கும் இப்போது எந்த வரமும் வேண்டாம். ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள். அதை தந்துவிட்டுச் செல்கிறேன்''' என்று   கூற  தீபிகா  எத்தனை கூறியும் விஷ்ணுவும் அவரை விடாமல் நச்சரித்து 'என்ன வரம் வேண்டும் என்று கூறியே ஆகவேண்டும்' என்று கட்டாயப்படுத்த   முடிவாக தீபிகா அவரிடம் கூறலானார்.

''தெய்வமே, உங்களது தரிசனத்தைப் பெற்று  பல வரங்களை பெற நினைக்கும்  பல்லாயிரக்கணக்கானோர் தவித்துக்  கொண்டு உள்ளபோது என்னிடம் வந்து ஏன் வரம் என்ன வேண்டும் என்று  கேட்கிறீர்கள்? குருவிற்கு சேவை செய்வதை விட ஒருவனது வாழ்க்கையில் பெரிய பாக்கியம் வேறு  என்ன   இருக்க முடியும்? அதை விட வேறு என்ன வேண்டும்?? குரு என்ற இரண்டு எழுத்து மந்திரம் மும்மூர்த்தி எனும் மூவரையும் விட வலிமையானது என்பதாக நான்  அறிந்திருக்கிறேன். என் குருவின் உண்மையான உருவத்தைக் கண்டு களித்திடவும், அவருக்கு அனைத்து விதத்திலும்  சிறப்பாக பணிவிடை செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதையும்  என் மனதிலே பதிய வைத்தால் அதுவே போதுமானது''.  இப்படிக் கூறிய பின் அவரை விழுந்து வணங்கியவன் தான் இப்பொழுது கேட்ட வரங்களைத்  தவிற தனக்கு வேறு எந்த விதமான வரமும் தனக்குத் தேவை இல்லை என்று கூறினார். 

ஆனால் விஷ்ணுவோ அவருக்கு வரம் தராமல் செல்வதில்லை என்ற முடிவோடு இருந்ததினால் தீபிகா கூறினார் '' பிரபோ, ஆகவே அப்படி ஏதாவது வரம் கொடுத்து விட்டுதான் செல்வேன் என நீங்கள் கூறினால் என் குருநாதருக்கு இன்னும் சிறப்பாக பணிவிடை செய்யும் மனதை எனக்கு கொடுத்து விட்டுச் செல்லுங்கள்'' என்று பணிவுடன் கேட்க அதைக் கேட்ட மகாவிஷ்ணு பரமானந்தம் அடைந்துக் கூறினார் ''குழந்தாய் நீ உன் குருவிற்கு செய்யும்  மகத்தான சேவையையும், உன் குரு பக்தியையும் கண்டு வியக்கிறேன்.   குருவுக்கு அவருடைய சிஷ்யர் செய்யும் சேவையும் எனக்கு செய்யும் சேவையும் ஒன்றே ஆகும். அந்த நிலையில் உள்ள சிஷ்யர் யாராக இருந்தாலும், அவன் கேட்காமலேயே அவனை நான் என் என்னுடைய பக்தனாகவே ஏற்றுக் கொள்வேன். நானும் குருவும் வெவ்வேறானவர்கள்  அல்ல. நீ  உன் குருவிற்கு செய்து வரும் சேவையை எனக்கு செய்துவரும்  சேவையாகக் கருதியே உனக்கு அருள் புரிய இங்கு வந்தேன். நீ கேட்ட அனைத்தையும் நீ அடைவாய்'' என்று அவருக்கு அருள் புரிந்துவிட்டு விஷ்ணு மறைந்து போனார். 

அவர் சென்றதும் தீபிகா உள்ளே சென்று குருவின் முன்னால் நிற்க தீபிகா கூறும் முன்னரே அனைத்தையும் ஞானதிருஷ்டியினால் அறிந்து கொண்ட குரு அவரிடம்  ''விஷ்ணுவிடம் இருந்து நீ என்ன வரம் பெற்றாய்?' என்று கேட்டார். நடந்த விவரங்கள் அனைத்தையும் சற்றும் மாற்றாமல்  ''குருவே,  நான் யாரையும் எனக்கு தரிசனம் தருமாறு கேட்காமல் இருந்தாலும் சிவபெருமானும், விஷ்ணு பகவானும் என்னிடம் அவர்களாகவே வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டதினால் அவற்றை மீற முடியாமல் போய் எனக்கு எப்பொழுதும் என் குருவிற்கு பணி செய்யும் பாக்கியத்தைத் தருமாறு அவர்களிடம் கேட்கும்படி ஆகிவிட்டது'' என்று தீபிகா தனது  குருவிடம் கூறினார்.

அடுத்தகணமே தீபிகா முன்னால்   பளபளக்கும் சரீரத்துடன் எந்த வியாதியும் இல்லாத நிலையில்  காட்சி தந்த வேத சர்மா தீபிகாவை   ஆசிர்வதித்தார் ''தீபிகா, உன்னுடைய குரு பக்தியை சோதிக்கவே நான் இந்த நாடகத்தை நடத்தினேன்.   நீயே ஒரு குருவின் உண்மையான சிஷ்யன்.  இனி உன் வாழ்வில் எந்த விதமான துயரத்தையும் நீ பெற மாட்டாய். நீ இனிமேல் இங்கு தங்கி இருக்க வேண்டும். உனக்கு மேன்மைக் கிட்டிடும். சித்திகள் கைகூடும் மற்றும் ஆத்ம சக்தியும் பெருகிடும். பல சித்தர்களும் யோகிகளும் உன்னிடம்  வந்து உன்னை போற்றி   வணங்குவார்கள்.  குபேரனின் அனைத்து அருளும் உனக்குக் கிடைக்கும். இந்த உலகில் உனக்கு கிடைக்காத  தெய்வீக அருள் வேறு எதுவுமே இல்லை எனும்படி அனைத்து தெய்வீக அருளையும் நீ  பெறுவாய். மும்மூர்த்திகளில் சிவபெருமானும், விஷ்ணுவும் உனக்கு ஆசி தந்துள்ளதினால் உன்னைக் கண்டமட்டிலேயே அனைவரது வியாதிகளும் விலகி ஓடும். நீ  நீடூழி வாழ வேண்டும் என்பதே என் ஆசிகள்'' என்று கூறிய பின்னர்  அப்படியே ஆகாயத்தில் பறந்து சென்று மறைந்து விட்டார்.  அதற்குப் பிறகே  அனைவருக்கும் தெரிந்தது  தீபிகா மூலம்  குருவின் மகிமையை  உலகிற்கு உணர்த்த சிவபெருமானும், விஷ்ணுவும் சேர்ந்து நடத்திய நாடகம் அது என்பது.  மேலும் பூர்வ ஜென்ம பாபங்களைத் தொலைக்கும் இடமாக உள்ள காசியின் மகிமையை   எடுத்துக் காட்ட அவர்கள் நினைத்தது அதற்கு இன்னொரு காரணம். அதைக் கேட்ட கலியுகமும் பிரும்மாவை வணங்கி துதித்துவிட்டு தன் கடமையை செய்ய பூலோகத்துக்கு கிளம்பிச் சென்றது''

இப்படியாக நமத்ஹராவுக்கு சித்த  முனிவர் கூறியதும் தன்னை மறந்து அவற்றைக்  கேட்டுக் கொண்டிருந்த நமத்ஹரகா பக்தி பூர்வமாக அப்படியே அவர் கால்களில் மீண்டும் வீழ்ந்து வணங்கி  எழுந்தார்  (இத்துடன் அத்தியாயம்-2 முடிந்தது). 
.........தொடரும்

Friday, January 24, 2014

Guru Charithiram - 4

 

 ............அத்தியாயம் -2 (iii)

குருவின் மகிமை எப்படிப்பட்டது என்பதை இந்தக் கதையின் மூலம் அறிந்து கொள் என்று கூறிய பிரும்மா, கலிக்கு அந்தக் கதையை கூறத் துவங்கினார்.

'' ஒரு காலத்தில் கோதாவரி நதிக் கரையில் வேத சர்மா என்ற ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவரை குருவாக ஏற்றுக்கொண்ட   பல சீடர்கள்  அவருக்கு இருந்தார்கள். அவர் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். அப்போதிருந்த மாமுனிவர்களில் மேன்மையானவர். அவருடைய சீடர்களில் தீபிகா என்ற சீடன் குருவிடம் அபார பக்தி கொண்டவராக இருந்தார். குருவுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் செய்தவண்ணம் இருந்தார். இப்படியாக பல காலம் ஓடியது.

ஒருநாள் வேத சர்மா தனது அனைத்து சீடர்களையும் அழைத்து அவர்களிடம் கூறினார் ''பிள்ளைகளே, நீங்கள் அனைவரும் எனக்கு பக்தி பூர்வமாக பணிவிடை செய்வதைக் கண்டு ஆனந்தம் அடைகிறேன்.  நான் மரணம் அடைவதற்கு முன்னால் உங்களுக்கு இந்த சம்சார பந்தத்தில் இருந்து விடுதலை கொடுத்து முக்தி தர விரும்புகிறேன். ஆனால் ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னால் ஒரு பிறவியில் நான் செய்திருந்த பாவங்கள் என்னை இந்த ஜென்மத்தில் தண்டிக்க உள்ளன. நான் இத்தனை தவம் செய்தும், புண்ணிய நதிகளில் நீராடியும், புனித  ஆலயங்களுக்கு சென்றும் சாப விமோசனம் எனக்குக் கிடைக்கவில்லை. நான் மோட்ஷம் பெற உள்ள வழியில் அந்த பாவங்களின் பிரதிபலிப்பு என் பயணத்தை தடுக்கலாம் என்று உணரத் துவங்குகிறேன். அப்படி அவற்றின் தாக்கம் ஏற்பட்டால் என் இலட்சியம்  நிறைவேற இன்னும் பல காலம் பிடிக்கும். ஆனால் நானோ விரைவில் மோட்ஷத்தை அடைய ஆசைக் கொண்டுள்ளேன்.  ஆகவே பூர்வ ஜென்ம பாவங்களினால் கிடைக்க உள்ள தண்டனைக் காலம் வருவதற்கு முன்பாக நானே மனதார அவற்றை அவை  வரும் முன்னரே ஏற்றுக் கொண்டு பிராயசித்தம் செய்ய விரும்புகிறேன். அப்படி செய்தால் அடுத்த ஜென்மத்தில் எனக்கு அந்த பாவங்களினால் எந்த கெடுதலும் ஏற்படாது. ஆகவே நான் காசிக்குச் சென்று தவம் செய்து அந்த பாவங்களை தொலைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். அங்கேயே உங்களது நன்மைக்காகவும் பிரார்த்தனை  செய்வேன்.

காசியை அவிமுக்த ஷேத்திரம் என்பார்கள். அத்தனை புண்ணியமான ஷேத்திரம் அந்த பூமி. அங்கு சென்று தவம் இருந்து பிராயசித்தம் செய்தால் உலக பந்த ஆசைகள் அனைத்தும் அழிந்து போய் அந்த நிலையில் அனைத்து பாபங்களும் விலகி விடும்.  ஆகவே அங்கு செல்ல உள்ள என்னோடு யாரேனும் துணைக்கு வந்து நான் செய்ய உள்ள பிராயசித்ததின்போது எனக்கு உதவியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்'' என்று கூறிவிட்டு சற்று நேரம் மெளனமாக இருந்தார்.
 
அவர் கூறியதைக்  கேட்ட  அனைத்து சீடர்களின் முகங்களிலும் வருத்தம் கலந்த ரேகை நிறம்பியது. அப்போது தீபிகா எனும் சீடன் கூறினார் ''குருவே உங்களுடைய இந்த திடீர் முடிவு எங்கள் மனதை வாட்டி வதைக்கிறது.  ஒருவனுடைய வாழ்க்கையில் அவன் பெற்றிடும் பெரிய பாக்கியமே குரு சேவை செய்வதுதான். அதை விட வேறு எந்த சேவை செய்தாலும் அவை தெய்வ சேவை ஆகாது. ஆகவே உங்களுடன் நான் வர பரிபூரணமாக சம்மதிக்கிறேன். அங்கு வந்து உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.  என்னை உம்முடன்  செல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியதும் வேத சர்மா   மீண்டும் தொடர்ந்தார்.
 
 ''பிள்ளாய், உன் குரு பக்தியை கண்டு நான் மனம் மகிழ்கிறேன். ஆனால் ஒன்றை நீ தெரிந்து கொள்ள வேண்டும். எனக்குள்ள பாவம் சாதாரணமானது அல்ல. அது தர உள்ள தண்டனை காலதீபிகா எனும் கடுமையான வெண்குஷ்ட வியாதி ஆகும்.  அந்த வியாதி என்னை இருபத்தி ஒரு வருடங்கள் ஆட்டிப் படைக்க உள்ளது. அப்படிப்பட்ட வியாதிஸ்தனின் அருகில் செல்லவே முகம் சுளிக்கும் அளவுக்கு அதன் ரணமும், ஒழுகிக் கொண்டு இருக்கும் ரத்தத்தின் சகிக்க முடியாத நாற்றமும் இருக்கும். அது மட்டும் அல்ல அப்படிப்பட்ட வியாதியை சுமக்க உள்ள என்னை தோளில் சுமந்து  கொண்டு என்னை அங்கும் இங்கும் அழைத்துச் செல்ல வேண்டி வரும். ஆகவே இவற்றை மனதில் கொண்டு உங்களில் யாராவது மனமுவந்து வந்தால் மட்டுமே எனக்கு சேவை செய்ய இயலும். நானும் வருகிறேன் என்பது பெரியதல்ல. இப்படிப்பட்ட வியாதிஸ்தனுக்கு சேவை செய்ய இயலுமா என்பதை நன்கு  ஆலோசித்தப் பின்னரே  என்னுடன் வர சம்மதிக்க வேண்டும் என்பதினால்தான் இவற்றை நான் தெள்ளத் தெளிவாக கூறுகிறேன்''.

கேட்ட தீபிகா அசரவில்லை. அவர் கூறினார் ''குருநாதா , உங்களுக்கு என்ன வந்தாலும் உங்களை விட்டு பிரியாமல் இருந்து சேவகம் செய்வேன் என்பதை சத்திய வார்த்தையாகவே கூறுகிறேன். நீங்கள் தயங்காமல் என்னை அழைத்துக் கொண்டு போகலாம். ஒருவன் தன் வாழ்க்கையில் செய்யும் தெய்வீக சேவையில் பெருமைத் தரும் தெய்வீக சேவையே குருவிற்கு சேவை செய்வதுதான் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். வருமுன் காப்போன் என்ற பழமொழி  போல  பிற்காலத்தில்  வியாதிகள் வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் அவற்றை முற்காலத்திலேயே வேண்டிப் பெற்றுக் கொள்ளலாம் என்று சாஸ்திரங்கள் கூறுவதால், நீங்கள் தயங்காமல் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்ல ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். உங்களுடன் அங்கு  செல்ல இந்த சீடனுக்கு உத்தரவும்  தாருங்கள்''.

 தீபிகா கூறியதைக் கேட்ட குருநாதர் மனம் மகிழ்ந்தார். ''சரி நீ என்னுடன் காசிக்கு புறப்பட்டு வா. அங்கு சென்று என் பாவத்தை  ஏற்றுக் கொள்கிறேன்.'' என்று கூறிவிட்டு காசிக்குப் புறப்பட்டுச் சென்றார். காசிக்கு சென்று மணிக்கங்கை எனும் நதியின் வடக்குப்புறத்தில் இருந்த கம்பலீஷ்வாரர் எனும் இடத்தில் ஒரு குடிசைக் கட்டிக் கொண்டு அங்கு தங்கினார்கள்.  மறுநாள் அதிகாலை இருவரும் எழுந்து  மணிக்கங்கையில் குளித்து விட்டு கரையில்  வந்ததும் வேத சர்மாவுக்கு தேகம் முழுவதும் குஷ்ட நோய்களிலேயே மிகக் கொடுமையான காலதீபிகா என்ற தொழு நோய் பற்றிக் கொண்டது. இருவரும்  அருகில் இருந்த ஆலயத்துக்கு சென்று வழிபட்டு விட்டு வந்தப் பின்  மறுநாள் முதல் அந்த நோயின் கடுமை அதி வேகமாக அவரை தாக்கத்  துவங்க குருநாதர் நடக்கவே சிரமப்படும் அளவு நிலைமை மோசம் ஆயிற்று.  தீபிகாவே அனைத்து  வேலைகளையும் செய்ய வேண்டி இருந்தது. குருவை தனது தோளிலேயே  சுமந்து கொண்டு நதியில் நீராடி வைக்கவிட்டு வர வேண்டி இருந்தது.  நாள் செல்லச் செல்ல நோயின் கடுமையினால் தீபிகா மீது தேவை இல்லாமல் குருநாதர் கோபமடைய ஆரம்பித்தார்.
.......தொடரும் 

Thursday, January 23, 2014

Guru Charithram -3

 

 ............அத்தியாயம் -2(ii)

குரு தத்துவத்தின் விளக்கத்தை தமக்குக் கூறுமாறு கேட்ட நமத்ஹரகாவுக்கு சித்த புருஷர் கூறலானார் ''மகனே, நான் கூறுவதை காது கொடுத்து நன்றாக கேட்டுக் கொள். உன் அனைத்து சந்தேகங்களும் விலகும்''. இப்படியாக கூறி விட்டு கதையை தொடர்ந்தார் ''பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது. அப்போது விஷ்ணுவையும், பிரும்மாவையும் பரமாத்மன் படைத்தார். விஷ்ணு ஒரு கடலில் பெரிய இலையில் படுத்துக் கொண்டு இருந்தபோது (அந்த நிலையில்தான் விஷ்ணு படைக்கப்பட்டாராம்) அவர் வயிற்றில் இருந்து ஒரு தொப்பிள் கொடி மேலெழுந்து வந்து நின்றது. அதில் பிரும்மா அமர்ந்திருந்தார் (பிரும்மா இப்படித்தான் படைக்கப்பட்டாராம்). 'இனி வராஹ கல்பா எனும் புதிய உலகைப் படைப்பாய்' என பிரும்மாவுக்கு பரபிரும்மன் ஆணை பிறப்பிக்க, பிரும்மாவும் முதலில் நான்கு பக்கங்களிலும் என்னென்ன உள்ளது திரும்பிப் பார்க்க அவருக்கு நான்கு முகங்கள் முளைத்தன. அவற்றில் இருந்து நான்கு வேதங்கள் வெளி வந்தன. அவை வெளி வந்தவுடன் பிரும்மாவுக்கு தலை கனம் ஏற்பட்டது. என்னால் அல்லவா நான்கு பக்கங்களிலும் நான்கு வேதங்கள் வந்துள்ளது என பெருமையுடன் அமர்ந்து இருந்து பூமியைப் படைக்க ஒரு ஷணம் மறந்தார். அதைப் பார்த்த விஷ்ணுவும், பிரும்மாவை நோக்கி, 'பிரும்மனே கீழே படுத்துள்ள என்னையும் பாரும்'' என்றார். அப்போதுதான் தன் சுய நினைவுக்கு வந்த பிரும்மாவும் கீழே நோக்கி விஷ்ணுவைப் பார்க்க பூமியும் பிறந்தது. பலவிதமான ஜீவராசிகளும் படைப்பை பெற்றன. மூன்றாவதாக மனித இனங்கள் வெளிவர, நான்காவதாக செடி கொடிகள் வெளி வந்தன. பிரும்மாவின் படைப்பைக் குறித்து பிரும்மவைவார்த்த புராணத்தில் விரிவாக கூறப்பட்டு உள்ளது'' .

சித்த முனி மேலும் தொடர்ந்து கூறலானார் ''அடுத்த கட்டம் அந்த படைப்புக்களை யாரிடம் கொடுத்து வைப்பது? விஷ்ணு கூறியவாறு பிரும்மாவும் நான்கு யுகங்களைப் படைத்தார். அவற்றை நான்கு திசைகளிலும் வைத்து தாம் படைத்தவற்றைக் காக்க நினைத்தார். ஆனால் யாரிடம் யாரை ஒப்படைப்பது ? ஆகவே தாம் படைத்த நான்கு யுகங்களை பிரும்மா அழைத்து அவர்களிடமே யோசனைக் கேட்டார். அவர்களது கருத்தைக் கெட்டப் பின் அந்த நான்கு யுகங்களில் முதலில் வெளி வந்த கிரேதா யுகம் உலகைக் காக்கட்டும் என அதை முதலில் அனுப்பினார்.

சில காலம் கழிந்ததும் கிரேதா யுகத்தை அழைத்து 'படைப்புக்களின் நிலை என்ன?' என்று கேட்டபோது தலையைக் குனிந்து கொண்ட கிரேதா யுகம் வருத்தத்துடன் கூறியது ''பிரும்மனே, நான் இனியும் சொல்ல என்ன உள்ளது? களைத்துப் போய் வந்துள்ளேன். பூமியிலே உள்ளவர்கள் தீய சொற்களை பயன்படுத்தி, அடுத்தவரை நிந்தனை செய்து, ஏன் பிறந்தோம் எனும் அளவுக்கு தாறு மாறாக நடக்கிறார்கள். நானும் எத்தனையோ முயற்சி செய்தும் அவர்களை திருத்த முடியாமல் களைப்படைந்து விட்டேன் '' என்றது. அதைக் கேட்ட பிரும்மாவும் வருத்தம் அடைந்து கூறினார் ''கிரேதா யுகமே, உன் அவஸ்தையை நானும் மனப்பூர்வமாக உணர்கிறேன். நீயும் 17,280,000 வருடங்கள் இந்த உலகைக் கட்டிக் காத்து வந்துள்ளாய். ஆகவே நீ போய் ஒய்வு எடுத்துக் கொள். அந்த நிலையை நிவர்த்தி செய்ய அடுத்த யுகத்தை நான் அனுப்புகிறேன்'' என்று கூறிவிட்டு, இரண்டாவதாக வெளி வந்த த்ரேதா யுகத்தை அனுப்பினார். 12,960,000 ஆயிரம் வருடங்கள் கழிந்ததும் அந்த யுகமும் பிரும்மாவிடம் வந்து உலகில் நீதி நேர்மை அழியத் துவங்கி அக்ரமங்கள் பெருகி உள்ளன, அவற்றை தம்மால் கட்டுப்படுத்த இயலவில்லை எனக் குறைப்பட்டுக் கொள்ள அதையும் ஒய்வு எடுக்குமாறு கூறிவிட்டு அதற்கு பதிலாக மூன்றாவதாக வெளி வந்திருந்த துவாபர யுகத்தை பூமிக்கு அனுப்பினார்.

அதுவும் 864,000 வருடங்கள் பூமியில் வாழ்ந்த பின் பிரும்மாவிடம் வந்து பூமியில் உள்ளவர்கள் அளவுக்கு மீறிய முறை கேடுகளில் வாழ்ந்து கொண்டும் , அக்ரமங்கள செய்து கொண்டும் , பித்தலாட்டங்களை அதிகரித்துக் கொண்டும், உண்மையையே விலை பேசும் அளவுக்கு தர்மத்தை அழித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்றும் எத்தனையோ முயன்றும் தம்மால் அந்த அக்கிரமங்களை தடுக்க முடியவில்லை என்றும் குறைப்பட்டுக் கொள்ள, பிரும்மா யோசனையில் ஆழ்ந்தார். இனி தாம் படைத்த உலகை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டுமானால் இப்போது அங்குள்ளவர்களுக்கு தக்க தண்டனைக் கொடுத்து அவர்களே தம் தவறுகளை உணரும் வகையில் நிலைமையை மாற்றி அமைத்து கடவுள் இருக்கிறார் என்ற பயத்தை பெற வேண்டும். அப்போதுதான் அவர்கள் பக்தி மார்கத்தில் செல்லத் துவங்குவார்கள். தான் படைத்த பிரபஞ்ச தத்துவமும் முழுமைப் பெறும். தான் படைத்த படைப்புக்களை பக்தி மார்கத்தில் அழைத்துச் செல்ல ஒரு நல்ல வழி வகுக்க வேண்டும். அதன் பின் மீண்டும் புதுப்பிறவிகளை சிருஷ்டி செய்து நல் வழியில் நடக்கும் மனித இனங்களைப் படைக்க முடியும் என்பதே ஒரே வழி என்பதை உணர்ந்தார்.

அதை திறமையுடன் செய்ய நினைத்தவர் நான்காவதாக வெளி வந்திருந்த  கலியுகத்தை அழைத்து அதன் கருத்தைக் கேட்க கலியுகம்  கூறியது ''பிரும்மனே, இதென்ன கஷ்டம்? அதை நான் செய்கிறேன். பூமியிலே உள்ளவர்களை மேலும் மேலும் தவறுகளை செய்யத் தூண்டி, அதன் பயனாக அவர்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வேன். நான் படைக்கும் மாயா எனும் மாய வலையில் வீழ்ந்து மேல் மேலும் கஷ்டங்களையும், கொடுமைகளையும் அதிகரிக்க வைப்பேன். மக்களை துயரத்தில் ஆழ வைப்பேன். அப்போது அவற்றைத் தாங்க முடியாமல் போகும் மனிதக்குலம் நமக்கு மேலும் ஒருவன் உள்ளான் என்ற பயத்தைப் பெற்றிடும். மன அமைதி கிடைக்க அவரவர்களுக்கு தெரிந்த தெய்வங்களை நாடத் துவங்குவார்கள். ஆலயங்கள் பெருகும், மகான்களும் பிறந்திடுவார்கள். இந்தப் பிறவி போதும் என்ற மனப்பக்குவத்தை மனித குலம்  பெற்றிடும். இப்படியாக பக்தியும் பெருகும், மாயாவினால் உந்தப்பட்டு தீமைகளை அதிகரிக்க வைக்கும் மற்றவர்களினால் உலகமும் விரைவில் அழியத் துவங்கும்.'' என்றது.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த பிரும்மா கூறினார் ''நல்லது கலியுகமே, நீ செய்ய உள்ள காரியம் நிறைவானதே. ஆனால் அதில் நீ சற்று கவனமாக இருக்க வேண்டும். அனைவரையும் நீ ஒன்று போல எடைப் போடக் கூடாது. நீ செல்லும் அந்த உலகில் கற்றறிந்த பண்டிதர்கள், பக்திமான்கள், குருமார்கள், யோகிகள், தர்ம வழி நடப்பவர்கள், போன்றவர்கள் இருப்பார்கள் அல்லவா? கடவுள் நினைவாகவே இருக்கும் அவர்களுக்கெல்லாம் உன்னால் நிறைய சங்கடங்கள் ஏற்பட்டு விடக்கூடாது. அல்லவா. அவர்களும் உன் மாயையில் வீழ்ந்து வேதனைகளை அனுபவித்தால் பக்தி மார்கத்தை பரப்புவது யார்? ஆகவே நீ அவற்றை இல்லாம் சீர்தூக்கிப் பார்த்தே உன் காரியத்தை செய்ய வேண்டும்'' என்று கூறினார்.

அவர் கூறியதைக் கேட்ட கலியுகமோ பயம் அடைந்து பிரும்மாவைக் கேட்டது ''பிரும்மனே இப்படி ஒரு காரியத்தை எப்படி என்னால் செய்ய இயலும்? என்னால் எப்படி நல்லவர்களையும் தீயவர்களையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஆகவே ஏதாவது ஒரு உக்தியைக் கூறினால் அதன்படி நான் அதர்மத்தைப் பரப்பி யுகத்தை முடிக்க ஏற்பாடு செய்யலாம் அல்லவா'' என்று கேட்டதும் பிரும்மா கூறினார் '' சரி அப்படி என்றால் நீ ஒன்றை மனதில் வைத்துக் கொள். ஹரி மற்றும் ஹரனை வணங்கித் துதிக்கும் இடங்கள், எங்கெல்லாம் மக்கள் ஒற்றுமையுடன் வசிப்பார்களோ அங்கெல்லாம் மற்றும் காசி, ராமேஸ்வரம் போன்ற புனித இடங்களில் உள்ளவர்கள், பசுக்களை ரட்ஷிப்பவர்கள், சாஸ்திரோத்தமாக நடப்பவர்கள், உலக சுகபோகங்களை துறந்து தெய்வீக சேவை செய்பவர்கள், முக்கியமாக எங்கெல்லாம் உலக சுகபோகங்களை துறந்து தெய்வீக இடங்கள் மட்டுமே தான் செல்லும் இடம் என்றபடி வாழ்ந்து காட்டும் உண்மையான ஒரு குருவை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை வணங்கித் துதிப்பார்களோ அங்கெல்லாம் நீ செல்லக் கூடாது.  இப்படி செய்தால் உன் காரியத்தை நீ முழுமையாக செய்ய முடியும்'' என்றார்.

அதைக் கேட்ட கலி மீண்டும் பிரும்மாவைக் கேட்டது '' பிரும்ம தேவரே குரு, குரு என்று என்னிடம் கூறுகிறீர்களே அந்த குரு என்பவர் யார், அவரது மகிமை எப்படிப்பட்டது என்பதையும் எனக்கு எடுத்துரைத்தால் நான் செய்ய உள்ள காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்'' என்றது. அதன் வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட பிரும்மாவும்  கலியுகத்துக்கு குருவின் மகிமையை எடுத்துரைக்கும் ஒரு கதையைக் கூறலானார். 
...........தொடரும்

Guru Charithram -2
அத்தியாயம் - 2

அற்புதமான கனவில் மிதந்து கொண்டு இருந்த நமத்ஹரகா சடாலென விழித்து எழுந்தார்.  தான் கண்டது உண்மையிலேயே கனவா அல்லது நனவா என்பதை அவரால் அறிந்து கொள்ளமுடியாத அளவுக்கு அவர் மனதில் மகிழ்ச்சி நிலவி இருந்தது. இனி நிச்சயமாக  தனது குருநாதரை விரைவில் சந்திப்போம் என்ற மன உறுதி அவர் மனதில் விழுந்தது. ஆகவே முழித்து எழுந்தவர் அருகில் இருந்த கிணற்றில் இருந்து நீரை எடுத்து, முகம் மற்றும் கை கால்களை அலம்பிக் கொண்டப் பின் அங்கிருந்து மீண்டும் நடையை தொடர்ந்தார்.

அப்படி சென்று கொண்டு இருந்தவர் திடீர் என சற்று தூரத்தில் ஒரு மகான் போன்ற ஒருவர் சென்று கொண்டு இருப்பதைக் கண்டார்.   பின்னால் இருந்து பார்த்தபோது அந்த மனிதர் தன கனவிலே வந்த குருவின் சாயலில் இருப்பதைக் கண்டார். ஒருவேளை அவர்தான் தான் தூங்கிக் கொண்டு இருந்தபோது தன்னுடன் பேசியவரோ என நினைத்தவர் தூரத்தில் சென்று கொண்டு இருந்த  அவரைக் கண்டதும் மனதில் மகிழ்ச்சிப் பொங்க ஓடோடி அந்த மனிதருக்கு அருகில் சென்று பார்த்தால், அமைதியான முகமும் ஆறுதல் அளிக்கும்  கண்களையும்  கொண்ட அந்த முனிவர் தன்  கனவில் வந்தவர் போல இருப்பதையும், ஆனால் அதே சமயம் சற்று வேறு முகமாக இருந்ததையும்  கண்டு சற்றே குழம்பினாலும் தன்னை சுதாகரித்துக் கொண்டார். ஆனால் அவரே தனக்கு உதவ வந்துள்ளவர் போல மனதில் எண்ணம் தோன்றியது. அப்படியே தடாலென அவர் பாதத்தில் விழுந்து வணங்கி அவர் கால்களைப் பற்றிக் கொண்டவர் அவரிடம் கேட்டார் ''ஸ்வாமி, என்னை தவறாக நினைக்க வேண்டாம். நான் உங்கள் பயணத்தை தடுப்பதாகக் கருதாதீர்கள். நான் எனது குருவை தேடிச் சென்று கொண்டு இருக்கிறேன். களைப்படைந்து நேற்று நான் உறங்குகையில் என் கனவில் நீங்கள் வந்து  நான் தேடிக் கொண்டு இருக்கும்  என் குருநாதர் என  உங்களை அடையாளம் காட்டிக் கொண்டீர்கள். கருணைக் கடலே இந்த அபலையை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு  தயை  புரிவீர்களா? நீங்களே என் கனவில் வந்த என் குரு என்பதும் சத்தியமா '' என்று  நமத்ஹரகா  கேட்டார்.

அது மட்டுமல்லாமல் அந்த குருவை பிரும்மா, விஷ்ணு, சிவன் மற்றும் பிற சக்தி வாய்ந்த தெய்வங்கள் எனப் போற்றி தோத்திரம் செய்தபடி அவர் கால்களை விடாமல் பற்றிக் கொண்டு அவரை நோக்கி நமத்ஹரகா ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கையில் மெளனமாக அவரை நோக்கிய அந்த மகான்  அவர் பேசுவதை நிறுத்துமாறு சைகையைக் காட்டிய பின் நமத்ஹரகாவிடம் கூறினார் ''மகனே, நீ யார் என்பதைக் குறித்து நான் சிந்திக்கவில்லை.  ஆனால் உன் மனதில் ஓடும் எண்ணத்தை  நான்  முற்றிலும் அறிகிறேன்.  ஆனால் உனக்கு ஒன்று கூறுகிறேன். கவனமாகக் கேள்.    நீ தேடிக்கொண்டு செல்லும் குருநாதர் நான் அல்ல. எனது குருநாதரான ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளை சந்திக்கச் சென்று கொண்டு இருக்கும் நான் ஒரு சித்த புருஷன். அவ்வளவே. அவரை சந்திக்கச் செல்லும் வழியில் உள்ள அனைத்து பல புண்ணிய தீர்த்தங்களுக்கும் சென்று அவற்றில் குளித்தப் பின் அவரை வேண்டிக் கொண்டு நடைப் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். அவர் தற்போது தென் பகுதியில் உள்ளல பீமா மற்றும் அமரஜா எனும் நதிகள் சங்கமிக்கும் இடமான கனகபுரா எனும் ஊரில் இருக்கிறார். அவர் தத்தாத்திரேயரின் அவதாரம் ஆவார். அவர் ஒரு தெய்வப் பிறவி. கருணாமூர்த்தியான அவர் தம்மை நாடி வரும் பக்தர்களை சம்சார சாகரத்தில் இருந்து  விடுவிப்பவர். அவரைக் கண்டாலேயே அனைத்து பாபங்களும் விலகி ஓடும். அவரைக் காணச் சென்று கொண்டு இருக்கும் என்னைப் போய்  உன்னுடைய குரு என்கிறாயே. உன்னுடைய குருவும் நான் காணச் சென்று கொண்டு இருக்கும் அதே கருணாமூர்த்தியான ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்  ஆவார்'' .

அவர் எப்படியாக குருவைக் குறித்துக் கூறியதைஅவர் கால்களைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த நமத்ஹரகா கேட்டதும், திக்குற்ற நமத்ஹரகா எழுந்து நின்று அவரைக் கேட்டார் ''ஸ்வாமி, என் மனதில் இப்படித்தான் நினைக்கிறேன். நீங்கள்தான் என் குருநாதரை அடையாளம் காட்டுவதற்காக வந்துள்ள மகான். தயவு செய்து நீங்கள்தான் நான் அவரை சந்திக்க எனக்கு உதவிட வேண்டும். அவரை எனக்கு நீங்கள்தான் அடையாளம் காட்ட வேண்டும்.  நான் என்ன பாபம் செய்தேன் என்பது புரியவில்லை. இதுவரை என் குருநாதர் எனக்கு ஏன் காட்சி தர மறுக்கிறார் என்பதும் புரியவில்லை. ஆகவே அதற்கான காரணத்தை நீங்கள்தான் எனக்குக் கூற வேண்டும்''.

அதைக் கேட்ட குரு கூறினார் ''மகனே, நீ வீணாக மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே. எந்த ஒரு குருவும் தன்னை வணங்குபவனை கை விட்டது இல்லை.  உன் இந்த நிலைக்குக் காரணம் ஒரு வேளை  நீ உன் குருவை நீ மனதார நம்பவில்லையோ  என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு குருவானவர் பரிபூரணத்துவத்தின் அடையாளம்.  மும்மூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு  மற்றும் சிவபெருமான் போன்றவர்கள் ஒரு பக்தன் மீது கோபம் அடைந்தாலும் கூட அந்த கோபத்தின் தாக்கம்  தன்னுடைய சீடனின் மீது  விழாமல் ஒரு உண்மையான குருவினால் தடுக்க முடியும். ஆனால் ஒரு உண்மையான குருவானவர் கோபமுற்றால் அவரது கோபத்தின் தாக்கத்தை அந்த மும்மூர்த்திகளினால் கூட தடுக்க முடியாது என்பதே பிரகிர்தியின் நியதி ஆகும்.   உண்மையான குருவின் கோபத்தின் தாக்கம் அந்த  குருவினால் மட்டுமே குறைக்க முடியும் என்று இருக்கையில் நீ ஏன் அனாவசியமாக மனத்தைக் குழப்பிக் கொள்கிறாய்?'' என்று கூறியதும்,  அதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த   நமத்ஹரகா கேட்டார் ''சித்த குருவே, நீங்கள் கூறுவதைக் கேட்டு மிக்க ஆச்சர்யம் அடைகிறேன். இந்த  உலகிலேயே பிரும்மா, விஷ்ணு  மற்றும்  சிவபெருமான் எனும் மும்மூர்த்திகளே சக்தி மிக்கவர்கள் என்று கூறப்படும்போது, ஒரு குரு என்பவர் அவர்களை விட சக்தி வாய்ந்தவராக இருப்பார் என்று கேட்கும்போது என்னால் நம்பவே முடியவில்லையே ! அது எப்படி சாத்தியம் ஆகும்?'' என்று கேட்டார்.

அதைக் கேட்டு நகைத்த சித்த முனிவர் கூறினார் ''இதை உன்னால் நம்ப முடியாததுதான். நான் கூறியபோது ஒரு உண்மையான குரு என்று நான் கூறியதை  நீ கவனித்தாயா? உண்மை என்றால் சத்தியத்தின் பிரதிபலிப்பு. உண்மையான குரு யார் தெரியுமா? அந்த மும்மூர்த்திகளின் மூன்று சக்திகளையும் உள்ளடக்கியவர். அவர் அந்த மும்மூர்த்திகளின் பிம்பம். அனைத்து குருமார்களும் அந்த நிலைப் பெறுவதில்லை. ஒரு சிலருக்கே அந்த பாக்கியம் கிட்டும்.  எந்த ஒரு குருவானவர் அந்த மும்மூர்த்திகளின் சக்தியை அவர்களிடமே இருந்து பெற்று இருப்பாரோ அவர்களே உண்மையான, சத்தியமான குரு ஆவார்'' என்று கூறியதும், ''சித்தபெருமானே, இந்த அற்பனுக்கு இந்த குரு தத்துவத்தின் விளக்கத்தை முழுமையாக கூறுவீர்களா?'' என்று கேட்க சித்த முனி மேலும் கூறலானார்.

அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள். அங்காங்கே மர நிழல்களில் இளைப்பாறினார்கள்.  நதி இருந்த இடங்களில் குளித்தார்கள். பயணம் தொடரத் தொடர சித்த முனிவரின் போதனையும் தொடர்ந்தது.   நமத்ஹரகா அதி அதிசயமான விஷயங்களை கேட்டவாறு மனம் குளிந்தபடி பேச்சு மூச்சில்லாதது  போல அவரைத் தொடர்ந்து சென்றார்.
 .......தொடரும் 

Wednesday, January 22, 2014

Guru Charithram -1


தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் அவதரித்து உள்ளார்கள். மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்  இந்த பூமியில் ஒரு அவதூதராக அவதரித்தார். அவர் அதி சக்தி பெற்றவர். அவரைப் பற்றி விவரங்கள் மற்றும் அவரை ஆராதிப்பது போன்றவை மராட்டிய மற்றும் கர்நாடக மானிலங்களில் மட்டுமே மிக அதிகமாக உள்ளது. அதற்குக் காரணமும் இந்த இரண்டு மானிலங்களில் மட்டுமே தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் இருந்துள்ளார்கள் என்பதே. எங்கெல்லாம் மராட்டிய மக்கள் அதிகம் வசிப்பார்களோ அங்கெல்லாம் தத்தர் வழிபாடு அதிகம் உள்ளன. கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல தத்தர் வழிபாடும், அவருடைய சக்தியும் பிற மானிலங்களிலும் பரவலாயிற்று.  'தத்த பரம்பரா' என்பதில் ஸ்ரீபாதவல்லபா மற்றும் ஸ்ரீ ந்ருசிம்ம சரஸ்வதி ஆகிய இரு சத்புருஷர்களும் மிக முக்கியமாக மற்றும் மேன்மையானவர்களாக கருதப்படுபவர்கள். ஏன் ஷீரடி சாயி பாபா கூட தத்தரின் அவதாரமே என்கிறார்கள்.  இந்த நிலையில் மக்கள் மிக அதிகமாக போற்றிப் படிக்கும்  குரு போதனைகள் அதாவது 'குருசரிதம்' என்ற புத்தகம் தத்தரின் பக்தர்களினால் வேத புத்தகமாகவே படிக்கப்பட்டு வருகிறது.  அதைப் பாராயணம் செய்வதினால் தத்தாத்திரேயர் அருள் கிடைத்து புத்திர பாக்கியம், செல்வம், வளமான வாழ்க்கை என அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பரவலான நம்பிக்கை.  குரு சரித்திரம் என்பது சுமார் 600 அல்லது 700  ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த மூல புத்தகம் சமஸ்கிருதம் மற்றும் மராட்டிய மொழிகளில் இரு மொழிகளைக் கலந்து எழுதப்பட்டு உள்ளதாக  கூறுவார்கள்.   இந்த புத்தகம் பல பாகங்களாக எழுதப்பட்டு உள்ளது.  ஞான காண்டம், கர்ம காண்டம் மற்றும் பக்தி காண்டம் என மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டு உள்ள  இந்த புத்தகம்   ஸ்ரீ நரசிம்ஹ சரஸ்வதி ஸ்வாமிகளின் சீடரான ஒரு சித்தர் ஸ்ரீ நரசிம்ஹ சரஸ்வதி ஸ்வாமிகளின் பெருமைகளை அவருடைய ஒரு பக்தரான நமத்ஹரகா என்பவருக்கு விளக்கிக் கூறியதான கதையை உள்ளடக்கி எழுதப்பட்டு உள்ளது .
இனி குரு சரிதாவை படிப்போம்: 

அத்தியாயம் - 1

நமத்ஹரகா எனும் அந்தணர் ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றிக் கேட்டறிந்திருந்தார். அவர் அந்தணர் அல்ல, துவஜகுலா எனும் குலத்தில் பிறந்தவர் என்றும் ஒரு கதை உண்டு. அவர்களும் பிராமணர்களைப் போல பூணூல் தரிப்பவர்களே ஆவார்கள். ஆகவே தமது சமய முறைக்கு ஏற்ப எட்டு வயதிலேயே பூணூல் அணிந்து கொண்டவர். ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றிக் கேட்டறிந்திருந்த அவர் தானும் அவருடைய சீடராக வேண்டும் என்ற எண்ணத்துடன் குருவைத் தேடி அலையத் துவங்கினார். அவருக்கு தம்முடைய குரு எங்கிருப்பார் என்பது தெரியவில்லை. அப்போது ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகள் கர்நாடகத்தில் இருந்த கனகபுரா எனும் ஊரில் இருந்தார். அதைக் கேள்விப்பட்டவர் உடனடியாக தனது குருவை தேடியவாறு தலையில் சிறு மூட்டையில் தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு எங்கு போகின்றோம் என்பது கூடத் தெரியாமல் நெடிய பயணத்தைத் துவக்கினார்.

நடந்து கொண்டே சென்றவர் வழி நெடுக தனது குருநாதரை அடையாளம் காட்டுமாறு தன் மனதில் தோன்றிய தெய்வங்களை வேண்டிக் கொண்டே சென்று கொண்டு இருந்தார். ' தெய்வமே, மும்மூர்த்திகளின் அவதாரமே, அனைவருக்கும் கருணைக் காட்டுபவரே, உமது பாதங்களை தரிசித்தமட்டிலேயே அனைத்து பாபங்களும் விலகும் என்கிறார்களே, நான் ஒரு அனாதை. எனக்கு வேறு யாருமே இல்லை. பசியால் அழும் குழந்தை அழுது கொண்டே இருக்கட்டும் என்று எந்த தாயாவது மெளனமாக அதைப் பார்த்துக் கொண்டு இருப்பாளா? அது போலத்தான், எனக்கு அன்னை, பிதா, தெய்வம், உற்றார், உறவினர் என இந்த அனாதைக்கு அனைவருமாக உள்ள நீங்களே இத்தனை நாளாகியும் இந்த ஆதரவற்ற அனாதைக்கு காட்சி தராமல் ஏன் ஏமாற்றுகிறீர்கள்? நான் செய்த பிழைதான் என்ன? நான் என்னை அறியாமலேயே தவறு ஏதும் செய்திருந்தால் என்னை மன்னித்து விட்டு, எனக்கு காட்சி தர வேண்டும் என மனப்பூர்வமாக உம்மை வேண்டுகிறேன்.  உம்மை தரிசிக்காவிடில் நான்  இல்லாமல் போய்விடுமே, உம்மைக் காண, உங்கள் எண்ணங்களோடு உம்மைக் தேடிக் கொண்டு நடக்கும் என் மனக் குறையை விரைவில் தீர்த்து வையுமையா'' என கண்களில் நீர் ஓட குருநாதரை நினைத்து அழுதபடி மனம் ஒடுங்கிப் போனவர் ஒருநாள் களைப்படைந்து வழியில் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருந்தபோது அப்படியே உறங்கி விட்டார். அப்படி ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்தவர் கனவில் ஒரு மகான் அவருக்குக் காட்சி தந்தார்.  அவரைக் கனவிலே கண்டவர் கனவிலேயே அவரை பூஜித்து, அவர் கால்களில் விழுந்து, விழுந்து வணங்கினார். அந்த மஹான் வேறு யாரும் அல்ல, அவர் தேடிப்போய் கொண்டு இருந்த அதே ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகள்தான்! நமத்ஹரகாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!!
....தொடரும்