Saturday, August 30, 2014

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship -12

12
குல தெய்வ வழிபாடு என்பது எத்தனை முக்கியமானது என்பதை வலியுறுத்தும் இன்னொரு முக்கியமான கதையையும் சமாதியாகி விட்ட காஞ்சி மகாபெரியவா வாழ்க்கை சரித்திரத்தில் இருந்து அறிய முடிகிறது............. ''பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, ''சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.

சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”

ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”

அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”

ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”

காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?” - பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது. இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.

ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.

(நன்றி :http://rightmantra.com/?p=4396 )


இவை அனைத்தையும் படிக்கையில் எந்த உண்மை புலப்படுகிறது? காலம் காலமாக பல்வேறு நிலைகளில் வளர்ந்து  வந்துள்ள குல தெய்வ வழிபாட்டுக்குப் பிறகுதான் வேறெந்த தெய்வ வழிபாடும் இருக்க முடியும் என்பதும், குல தெய்வ வழிபாட்டை உதாசீனப்படுத்துவது குடும்பத்தில் அமைதி இன்மை மற்றும் துன்பங்களை கொண்டு சேர்க்கும் என்பதே.

முற்றும் 

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 11

11
குலதெய்வத்தைக் குறித்த சந்தேகத்துக்கான விடையை திரேதா யுகத்தில் ஏகலவ்யனகரா என்ற ராஜ்யத்தை ஆண்டு வந்த ஸ்ருதாதாரா என்ற கந்தர்வ புருஷனுக்கு சிவபெருமானே கூறியதான கதை உண்டு.

திரேதா யுகத்தில் ஏகலவ்யனகரா என்ற ராஜ்யத்தை ஸ்ருதாதாரா என்ற கந்தர்வ புருஷன் ஆண்டு வந்தான். அவன் பரம்பரையினர் சிவபெருமானின் பக்தர்கள். வம்சவம்சமாக சிவபெருமானை வழிபட்டு வந்தார்கள். பெரும் கொடையாளிகளாகவும் இருந்தார்கள். பூமியை ஆண்டாலும் அவர்களால் கந்தர்வ லோகத்திலும் இருக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் அவனுடைய பாட்டனார் காலத்தில் அவர்கள் சிவ வழிபாட்டை மறந்து தாமே கந்தர்வ புருஷர்கள், இனி அவர்கள் யாரையும் வழிபடத் தேவை இல்லை, தாங்கள் செய்யும் தர்மமும், தானமும் தங்களைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் பல காலம் சிவபெருமானின் நினைவே இல்லாமல் இருந்து விட்டார்கள். அவருக்கு செய்ய வேண்டிய பாராம்பரிய வழிபாடுகளை மறந்தனர். 

இப்படியாக இருந்த பரம்பரையில் அவர்களின் பின் வழியில் வந்த வம்சத்தை சேர்ந்தவனே ஏகலவ்யனகரா ராஜ்யத்தை ஆண்டு வந்த ஸ்ருதாதாரா எனும் இன்னொரு கந்தர்வ புருஷன். அவனுக்கு சத்யதாரா மற்றும் சீலாதாரா என்ற இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஸ்ருதாதாரா மரணம் அடைந்த பின்னர் அவரது மகனான சீலாதாராவை இன்னொரு மகனான சத்யதாரா விரட்டி அடித்து விட்டு ஆட்சியைக் கைபற்றிக் கொண்டான். தந்தையின் மரணத்துக்குப் பின் சத்யதாரா மற்றும் சீலாதாரா என்ற இருவரும் கந்தர்வ புருஷ நிலையில் இருந்து சாதாரண மானிடர் நிலைக்கு வந்திருந்தார்கள்.

சீலாதாராவுக்கு சிவபெருமானை
வேண்டி தவம் செய்யுமாறு
முனிவர் அறிவுரை தந்தார்

சீலாதாரா தனது சகோதரனிடம் இருந்து தப்பி ஓடி காட்டிற்கு சென்று அங்குமிங்கும் சுற்றி அலைந்தபடி என்ன செய்வது என்ற வழி தெரியாமல் அலைந்து கொண்டு இருந்தான். அப்போது அவன் அசிதேவ மகரிஷி என்ற முனிவரை சந்தித்தான் (புராணங்களில் இம்முனிவர் பெயர் வேறு சில இடங்களில் காணப்படுகின்றது. அவரே அகஸ்திய முனிவரின் முன் பிறவி என்றும் சிலர் கூறுகிறார்கள்). அவரிடம் சீலாதாரா தனது நிலையைக் கூறி அழுததும் அவர் கொடுத்த அறிவுரைப்படி அந்த வனத்தில் பல காலம் இருந்தபடி சிவபெருமானை வழிபாட்டு வர அவன் தவத்தினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அவன் முன் தோன்றினார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை அவன் சிவபெருமானிடம் கூறி அழுதபோது அவர் கூறினார் 'மகனே உனக்கு வந்துள்ள கஷ்டம் எல்லாம் உன்னுடைய பரம்பரையினர் செய்த தவறினால் வந்தவைதான். உன் முந்தைய பரம்பரையினர் காலம் காலமாக என்னை வழிபட்டு வந்திருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் உன்னுடைய தந்தை வழி பாட்டனார் என்னை அவமதிப்பது போல என்னை முற்றிலும் உதாசீனப்படுத்தி விட்டு தன் இச்சையாக வாழ்ந்து வந்தார். எவன் ஒருவன் இப்படி தான் வணங்கி வந்த தெய்வத்தை உதாசீனப்படுத்துவார்களோ அவர்கள் தனது பெற்ற தாயாரையே உதாசீனப்படுத்தியது போலாகும். ஆகவே அவர்களுடைய அடுத்த ஏழு சந்ததியினருக்கும் நல்ல வாழ்க்கை அமையாது.

நான் உன்னுடைய முந்தைய பரம்பரையை காத்து வந்தவன் என்றாலும் அவர்களில் சிலர் என்னை அவமானப்படுத்துவது போல உதாசீனப்படுத்தினார்கள். ஆகவேதான் உங்கள் குடும்பத்தின் இந்த நிலைமையும். ஆனால் நீ அந்த தவறை உணர்ந்து என்னை வேண்டி தவம் இருந்துள்ளாய். ஆகவே உன்னுடைய மூதையோரில் சிலர் என்னை உதாசீனப்படுத்தியதினால்தான் நீங்கள் இந்த துயரங்களை அனுபவிக்கிறீர்கள் என்றாலும் என்னை வேண்டி நீ மனதார பிரார்த்தனை செய்ததினால் உனது வம்சத்தினர் அனுபவிக்கும் துயரங்கள் உன் இந்த பிறவியுடன் முடிவடையும் என அருள் புரிகிறேன். நீயும் அடுத்த ஜென்மத்தில் ஒரு அரசனாக பிறப்பாய். உன்னை நாட்டை விட்டு துரத்திய உன் சகோதரனும் உன்னுடன் பிறப்பான். அந்த ஜென்மத்தில் நீ அவனை வஞ்சம் தீர்ப்பாய். அதோடு உங்களுடைய வம்சத்துக்கு ஏற்பட்ட சாபமும் தீரும். நீயும் கந்தர்வ புருஷனாகி விடுவாய்' என்று ஆசிர்வதித்தப் பின் மறைந்து விட்டார். அடுத்தகணம் சீலாதாரா மரணம் அடைந்தான். அதே நேரத்தில் ராஜ்யத்தில் ஆண்டு வந்திருந்த அவனது சகோதரன் சத்யதாராவும் ஒரு கயவனால் கத்திக் குத்தப்பட்டு மரணம் அடைந்தான்.

 
அடுத்த பிறவியில் சீலாதாராவும், சத்யதாராவும் மீண்டும் பூமியில் இரண்டு ராஜ்யத்தில் அரசர்களாகப் பிறந்தார்கள். சீலாதாரா ஒரு ராஜ்யத்தில் பீமபாதா என்ற பெயரில் ராஜ்யத்தை ஆள, சத்யதாராவும் சாமரபத்ரா எனும் பெயரில் அரசன் ஆயினான். அடுத்த சில காலத்திலேயே அவர்களுக்கு இடையே மூண்ட யுத்தத்தில் இருவருமே காட்டுப் பகுதியில் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு போய் சண்டை இட்டபோது பீமபாதா அவனை துரத்தி வந்த சகோதரனான சாமரபத்ராவைக் கொன்றான். அவன் மடிந்து விழுந்ததும் பீமபத்திரா ஒரு யானையாக மாறி விட்டான். அப்படி அவன் யானையாக மாறியதும் அவன் முன் சிவபெருமான் தோன்றிக் கூறினார் 'பீமபத்ரா நீ முன் பிறவியில் சீலாதார என்பவனாக இருந்தாய். உன் பூர்வ ஜென்ம பரம்பரையினர் என்னை உதாசீனப்படுத்தியதினால் ஏற்பட்ட கர்ம வினைகள் அனைத்தும் உனக்கு இதோடு மறைந்து விட்டது. இனி நீ மீண்டும் கந்தர்வ புருஷனாக மாறி இன்னொரு பிறப்பு எடுத்து ஒரு ராஜ்யத்தின் மன்னனாவாய். அப்போது நீ மீண்டும் உனது குலத்தினர் வணங்கி வந்திருந்த தெய்வமான என்னை மீண்டும் வழிபடத் துவங்குவாய். மீண்டும் நானும் உனது குலத்தைக் காத்து வந்திருந்தபடி வாழ்வில் மகிழ்ச்சியை கொடுப்பேன்' என ஆசிர்வதித்து விட்டு சென்று விட்டார். இது எடுத்துக் காட்டுவது என்ன என்றால் ஒரு பரம்பரையினர் தொடர்ந்து வழிபட்டு வரும் தெய்வமே ஒருவரது பரம்பரை தெய்வமாகி விடுகிறது. அதுவே அவர்களது குல தெய்வம் என்பதாகி விடுகிறது. அதை உதாசீனப்படுத்தினால் அவர்கள் வம்சத்தினர் துயரங்களை அனுபவிப்பார்கள் என்பதையே.
.............தொடரும்

Friday, August 29, 2014

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 10

10
அப்படி என்றால் பிற ஆலயங்களில் சென்று வழிபடும் பக்தர்களுடைய பாபங்கள் அகலுவதில்லையா?
 
 நான் அப்படிக் கூறவில்லை. எந்த ஒரு ஆலயத்திலும் சென்று வழிபட வேண்டியதில்லை என்பது அர்த்தம் அல்ல.  மானிடர்களாகப்  பிறந்த அனைவருக்கும் குல தெய்வம் உள்ளது என்பதும் அர்த்தம் அல்ல. பல பரம்பரைகள் குல தெய்வங்கள் இல்லாதவை. அவர்கள் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் அல்லது எந்த ஆலயத்திலும் சென்று வழிபடலாம். அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்கு அந்தந்த தெய்வங்கள் நிவர்த்தி செய்யலாம். ஆனால் அவற்றையும் அந்த தெய்வங்களினால் முழுமையாக நிவர்த்தி செய்ய இயலாது என்பதின் காரணம் அவரவர் செய்துள்ள பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களுக்கேற்ப அவற்றின் பலனை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும் என்பது நியதி.
 
அந்த காலத்தில் எந்த ஒரு பரம்பரையிலும் முதல் ஐந்து  பரம்பரையினர்  எந்த தெய்வத்தை வழிபட்டு வந்துள்ளார்களோ அந்த தெய்வமே அந்த பரம்பரையின் குல தெய்வம் ஆகும் என்பதை ஏற்றுக் கொண்டு இருந்தார்கள். ஐந்து என்பதின் காரணம் ஐந்து விரல்களைக் கொண்டதே ஒரு முழுமையான கை ஆகும். அருள் பொழியும் அந்தக் கையின் சைகை மூலமே தெய்வங்களின் ஆசி கிடைப்பதினால் முதல் ஐந்து பரம்பரையினர் என்ற நியதி வந்திருந்தது. சாதாரணமாக எந்த ஒரு பரம்பரையினருமே 13 வம்சங்களுக்கு மேல் வம்சாவளியினரைக் கொண்டிராது என்பது ஒரு நடைமுறை உண்மையாக உள்ளது. யாருக்கு குல தெய்வம் இருக்கும், யாருக்கு குல தெய்வம் இருக்காது என்பது கீழே உள்ள அட்டவணைப் பார்த்தால் புரியும்.ஆனால் குல தெய்வம் என ஒரு தெய்வத்தை ஏற்றுக் கொண்டுள்ள பரம்பரையினர் அவரவர் குல தெய்வங்களை உதாசீனப்படுதும்போது குல தெய்வத்தின் அனுமதி இல்லாமல் பிற தெய்வங்களினால் அந்த பரம்பரையினருக்கு  நேரும் கஷ்டங்களில் எந்த ஒரு முழுமையான நிவர்தியையும் தர இயலாது.

ஒவ்வொருவருக்கும் இரண்டு விதங்களிலான பூர்வ ஜென்ம கர்மாக்கள் அமைத்துள்ளன அவை:
  • மூதையோர் செய்திருந்த பாப புண்ணியங்களின்  விளைவினால் எழும் நன்மை தீமைகள்.
  • அவரவர் வாழ்கையில் செய்திருந்த பாவ புண்ணியங்களின் விளைவினால் ஏற்படும் நன்மை தீமைகள்.
மூதையோர் செய்திருந்த பாப புண்ணியங்களுக்கு  பின் வழி சந்ததியினர் எப்படி பொறுப்பாக முடியும்? மூதையோர் செய்திருந்த பாப புண்ணியங்களுக்கு பின் வழி சந்ததியினர்களுக்கு ஏன் தண்டனை தர வேண்டும் ?  அதற்கான காரணத்தை தத்தாத்திரேயர் தன்னை நாடி வந்த யதுகுல மன்னன் ஒருவனுக்கு கொடுத்த விளக்கத்தில் காண முடியும்.

கிருஷ்ண பரமாத்மாவின் முந்தைய காலத்திலேயே  தெய்வ வழிபாடுகள் இருந்துள்ளன என்பதற்கு  தத்தாத்திரேயர் அவதாரம் ஒரு உதாரணம்.  அவர் யோக புருஷராக வாழ்ந்திருந்து பலராமர் முதல் பலருக்கும் அருள் பாலித்து இருக்கிறார் என்பது அவர் வாழ்க்கை சரித்திரத்தைப் படித்தால் தெரியும்.  அவர் கிருஷ்ணருக்கும் முற்பட்ட காலத்தை சார்ந்தவர்.  ஒருமுறை அவர் தனது பக்தரின் வீட்டில் நடைபெற்ற வருடாந்தர திவசத்தில் ஒரு புரோகிதராக சென்று போஜனம் செய்து அந்த அந்தணரின்  முன்னோர்களின் ஆத்மா  சாந்தி அடைய அருள் புரிந்தவர் . 

அவர் அவதரித்து இருந்த  காலத்தில் யதுகுல மன்னன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் ஆழ்ந்த ஆன்மீக ஞானம் கொண்டவன். சில காலம் ஆட்சியில் இருந்தவனுக்கு காரணம் இன்றி  மனதில் அமைதி இல்லை. அவன் குடும்பத்திலும் அமைதி இல்லை. அவன் ஆண்ட ராஜ்யத்திலும் குழப்பம். யாராவது ஒருவர் எனக்குள்ள சங்கடங்களுக்கான காரணத்தைக்  எடுத்துரைக்க மாட்டார்களா என யோகிகளை தேடி அலைந்தான். அவனை குரு தத்தாத்திரேயரை தேடி அலைந்து அவரிடம் சரணடைந்து அவன் படும் வேதனைகளுக்கான காரணத்தை தெரிந்து கொள்ளுமாறு அவனது ராஜ குருக்கள் கூற அவன் தத்தரை தேடி பல காலம் இடம் இடமாக அலைந்தான். பார்வதியின் அவதாரமான ரேணுகா தேவி என்பவளே அவனது மூத்தோர்கள் வணங்கி வந்திருந்த தெய்வம்.  அவளே லோக மாதா. ஸ்தூலம், நிராகாரம் மற்றும் ஜேஷ்ட எனும்  மூன்று சரீரங்களைக்  கொண்டவள்.  அவளை தத்தத்திரேயரை படைத்தவளுமான சக்தி தேவி. முடிவாக பெரும் சோதனைக்குப் பிறகு தத்தாத்திரேயரை கண்டுபிடித்து அவரிடம் முழுமையாக சரண் அடைந்து தனது மன அமைதிக்கு வழி கேட்டான்.


தத்தர் கூறலானார் ' யதுகுல மன்னனே, நீ யார் என்பதை   முதலில் புரிந்து கொள். உன்னுடைய  மன அமைதிக்குக் காரணம்   என்ன?  உள்ளுக்குள்ளே உள்ள அந்தராத்மாவும், அதை இயக்கும் சக்தியான எண்ணங்களையும் தவிற மற்ற அனைத்தும்  தசைகளுடன் கூடிய ஒரு  உடலே.  அந்த  தசைப் பிணமோ  மேலும் மேலும் பல உடல்களை தேடி ஓடிக் கொண்ட வண்ணம் உள்ளது.  இன்னமும் வேண்டும், இன்னமும் வேண்டும்  என  ஜடப்  பொருட்கள் மீது வைத்து  விட்ட அளவற்ற பற்று, அளவற்ற ஆசை அதன் கடமையை மறக்க வைத்து விட்டது.  இதுவே உனக்குள்ளும் உள்ளது, உன் மூதையோர்களிடமும் இருந்தது. ஒவ்வொரு வம்சத்துக்கும்  ஒவ்வொரு தெய்வக் கடமை உள்ளது. உலகப் பற்று அதைக் கூட மறக்கடித்து விடுவதினால்தான் அந்த தெய்வங்களின் சாபத்தினால் அவர்கள் பிற்கால சந்ததியினர் மகிழ்ச்சியற்ற வாழ்கையை மேற்கொள்ள வேண்டி உள்ளது.

முதியோர் பாவ புண்ணியங்கள் செய்திருந்தாலும் அவரவர் வம்சாவளியாக வழிபட்டு வந்திருந்த தெய்வங்களை வழிபடாமல் அவர்களை  அவமதிப்பது போல உதாசீனப்படுத்தினால் அந்த தெய்வங்களின் சாபத்துக்கு ஆளாகும் அவர்களின் மரணத்துக்குப் பிறகு அவர்களது சந்ததியினர் தண்டிக்கப்படுவார்கள். அதற்கு  தண்டனையாக அந்த தெய்வங்கள் தருவது என்ன தெரியுமா? அவர்களது சந்ததியினரின் வாழ்க்கையில்  முன்னோர்களின் தெய்வ அவமதிப்பிற்கான பாவச் சுமையை அது ஏற்றும்.

உன் மன அமைதிக்கு  காரணமும்  உன்னுடைய மூதையோர்களான யதுகுல மன்னர்கள் என் அன்னையான ரேணுகா தேவியை வணங்க மறுத்து  அவமதித்ததுதான். உதுகுல மன்னனே, உன்னுடைய நல்ல கர்ம வினையினால் நீ என்னை நாடி வந்துள்ளாய். நான் யார் என்பது உனக்கு தெரிய வேண்டுமா....இப்போது கூறுகிறேன் கேள்....' என்று கூறியபடி அவர் தன்னை பற்றிக் கூறத் துவங்கினார்.

அவர் காலடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறக் கூற அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தவன் தன்னை மறந்தான், தன மூத்கையோர் செய்திருந்த பிழைகளை உணர்ந்தான். தனது அமைதியின்மைக்கான காரணமும் புரிந்தது.  இனி அதை தன்னால் நிவர்த்திக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.  மனதில் மெல்ல மெல்ல அமைதி தோன்றியது.

இது எடுத்துக் காட்டுவது என்னவென்றால் ஒவ்வொரு சந்ததியினரும் அடையும்  மன வேதனை, வாழ்க்கைத் துயர் மற்றும் எண்ணற்ற சோதனை மற்றும் வேதனைகளின் பாதி காரணம்   அவர்களது முன்னோர்கள் செய்த தெய்வப் பிழையினால் வந்தவைதான்.  தம் குடும்பத்தினர் அவதிப்படும்போது எப்படி தாய் மற்றும் தந்தையினால் அந்த கொடுமையை பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? அதனால்தான் மரணம் அடைந்து விட்டவர்களின் ஆத்மாக்கள் தாம் செய்த தெய்வ அவமதிப்புக் குற்றத்தினால் தம் சந்ததியினர் அனுபவிக்கும் வேதனைகளைக் கண்டு, அவர்களது குடும்ப மகிழ்ச்சிக்காக தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என  யமலோகத்தில் நரக வேதனையில் மனம்  புழுகியபடி  கிடப்பார்கள்.

அவரவர் செய்த பாவ புண்ணிய  பலன்களோடு
முதையோர்  மூலம் வந்த கர்ம வினைகளையும் 
சுமந்து  செல்பவர்கள் எண்ணற்ற 
துன்பங்களை அனுபவிக்க  நேரிடுகிறது

சோதனையிலும் வேதனையிலும் உழலும் மரணம் அடைந்து விட்ட ஆத்மாக்களின்  சந்ததியினர் வாழ்க்கையில் வெறுப்புற்று தமது முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடைந்து நல்ல கதி அடைய வேண்டும் என்ற நினைப்பை தன்னுள் வளர்த்துக் கொள்வது இல்லை, அவர்களது வேதனையில் முதியோர் நினைவு கூட அவர்கள் உள்ளத்தில் இருந்து மறையத் துவங்கும்.  அவரவர் தமது வாழ்க்கைப் போராட்டத்திலேயே இருந்து வருவார்கள். வருடாந்திர திதிகளைக் கூட எதோ ஒரு தீராத கடமை போல செய்வதினால், அந்த திதியின் பயன் கூட அந்த ஆத்மாக்களின் நற்கணக்கில் போய்  சேருவதில்லை என்பதினால் யமதேவன்  அந்த ஆத்மாக்களை நல்ல விதமாக நடத்துவதில்லை. 

இதனால் மரணம் அடைந்து மறு பிறப்பு எடுக்கும்வரை அல்லது தேவகணமாகும்வரை   அந்தரத்தில் ஆத்மாக்களாக  சுற்றி அலைந்து கொண்டிருப்பவை  தமது சந்ததியினர் மன வேதனையுடன் வாழ்வில் வசந்தம் இன்றி துடிக்கும்போது அவர்கள் படும் வேதனையை  துடைக்க தம்மால் உதவிட முடியவில்லையே, அதனால் தமக்கும் அவர்களால் உதவி கிட்டவில்லையே  என அலறித் துடிக்கும்.

 தமது சந்ததியினர் படும் வேதனையை 
துடைக்க  முடியவில்லையே  என 
மேல் உலகில் சுற்றித் திரியும்  மூதையோர் 
ஆத்மாக்கள் துடிதுடிக்கும் 

அகவே யமவதை தாங்க முடியாமல் துடிக்கும் ஆத்மாக்கள்   தாம் உயிருடன் இருந்தபோது உதாசீனப்படுத்திய தெய்வத்திடமே தமது பிழையை மன்னித்து அருளுமாறு வேண்டிக் கொள்ளும். தாம் உதாசீனப்படுத்திய அந்த தெய்வங்களை  தமது சார்ப்பில் தமது சந்ததியினர் வழிபட்டு தாம் செய்த பாபங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய அவர்களுக்கு  அருள் புரிய வேண்டும் என  வேண்டி நிற்கும்.

தொடர்ந்து அந்த ஆத்மாக்கள் வேண்டிக் கொண்டே இருக்கும்போது அதைக் கண்டு அந்த தெய்வங்களும்  மனம் இறங்கி அவர்களுக்கு கருணைக் காட்டும் விதத்தில் துடிதுடித்து அலையும் ஆத்மாக்களின் சந்ததியினருக்கு சில சமிக்கைகளை அனுப்பி அவர்களுக்கு நல் வழிப்பாதையை காட்டி தம்மை சரணடையுமாறு கூறும். அதைப் புரிந்து கொண்டு  அந்த  சந்ததியினர் தம் முன்னோர்கள் உதாசீனப்படுத்தி வந்திருந்த அவர்களது   வம்ச தெய்வத்தை மீண்டும் வணங்கத் துவங்கி ஆராதிக்கும்போது  அந்த வம்சத்து தெய்வமும் மனம் இறங்கி வந்து அவர்கள் சுமக்கும் முன்னோர்களின் கர்ம வினையை அவர்கள் வாழ்வில் இருந்து அகற்றும். அதன் மூலம் அந்தந்த சந்ததியினருக்கு முன்னோர்களினால் ஏற்பட்ட   பாவ பளுக்கள் குறையும்.

முன்னோர்கள் பெற்றிருந்த தெய்வ சாபங்களினாலும், அவர்களது கர்மாக்களினாலும் ஏற்படும் பாவச் சுமைகள் ஒருவர் வாழ்வில் குறைந்தாலே வாழ்க்கையில் ஏற்படும் பாதி துன்பங்களும் துயரங்களும் குறைந்து விடும். மீதி பாதி வாழ்வு  நிம்மதியில் அமைந்திருக்கும்.

அதே நேரத்தில் அந்தந்த ஆத்மாக்களின் சந்ததியினர் செய்யும் குல தெய்வ பிரார்த்தனை அவர்களது முன்னோர்களின் ஆத்மாவுக்கும் யமதேவனால் தரப்படும் வேதனைகளை குறைக்க வைக்கும்.  அந்தந்த ஆத்மாக்களின் குல தெய்வங்களின் கட்டளையை மீற முடியாத யமதேவரும் அந்த ஆத்மாக்களை அவர்களுக்குள்ள விதிப்படி  மீண்டும் மறுபிறவி எடுக்கச் செல்ல அனுமதிப்பார், அல்லது அவை தேவகணமாகி அவர்களது வம்ச தெய்வங்களின்   சேவையில் ஈடுபடச் செல்ல அனுப்பி வைப்பார்.

அதனால்தான்  மேலுலகில் திரியும் மூதையோரின் சந்ததியினர் அவர்களது வம்ச குல தெய்வங்களை அந்தந்த ஆலயங்களில் சென்று வணங்கித் துதிக்கும்போது அங்கு சுற்றித் திரியும்  முன்னோர்களது ஆத்மாக்கள் அவர்களை  சூழ்ந்து கொண்டு அவர்களுடைய தீய கர்மாவெனும் அணுக்களை கிரகித்துக் கொண்டு, தம்மிடம் உள்ள நல்ல அணுக்களை அவர்களுக்குள்  செலுத்த அந்த ஆத்மாவின் சந்ததியினர் வாழ்வில் ஆனந்தம் அடையத் துவங்குவார்கள்'.   
மூதையோர் மூலம் ஏற்பட்டிருந்த பாவ மூட்டைகளை 
குல தெய்வம் முழுமையாக  அகற்றி விடுகிறது.  அதன்  பின் 
அவரவர்  செய்திருந்த பாபா புண்ணியங்களுக்கு ஏற்பவே 
வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் நேரிடும் 

குல தெய்வத்திடம் சென்று பிரார்த்தனை செய்து கொண்டால் அத்தனை பாப அணுக்களும் ஒரேடியாக அழிந்து விடும் என்பது நிச்சயமானதா? அப்படி என்றால் குல தெய்வ ஆலயம் சென்று வழிபடுபவர்களுக்கும் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுகிறதே, அது ஏன்?

குல தெய்வ ஆராதனை செய்கையில் முன்னோர்களினால் ஏற்பட்டிருந்த பாவச் சுமைகள் முற்றிலும் அழியும். ஆனால் அதை பிற தெய்வங்களினால் செய்ய முடியாது என்பது தெய்வ நியதியாகும்.  பிற தெய்வங்களை சென்று ஆராதிக்கையில் அவரவர்  துன்பங்கள்  குறைவது  போல உணரலாம்.  மனதில் அமைதி கிடைக்கலாம். சில கர்மாக்கள் விலகலாம்.   ஆனால் அவை அனைத்துமே  தற்காலிகமான நிலையே. ஆனாலும்   மீண்டும் மூதையோர்களின் தெய்வ அவமதிப்பினால் ஏற்பட்ட  பாவச் சுமை அவர்களது  வாழ்க்கையில் அவர்களை துரத்திக் கொண்டே இருக்கும். முன்னோர்களினால் ஏற்பட்டிருந்த பாவச் சுமைகளை குலதெய்வ வழிபாட்டினால் மட்டுமே அகற்ற முடியும்.  அதே நேரத்தில் குல தெய்வ ஆராதனை செய்தாலும் அவரவர் செய்திருந்த பூர்வ ஜென்ம கர்மாக்களின் பலனை இந்த ஜென்மாக்களில் அவரவர்  அனுபவித்தே ஆக வேண்டும்.

அவரவர் செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கேற்ப நேரிடும் துன்பங்களைக் குறைத்து குடும்ப அமைதி நிலவுவதற்கு குல தெய்வத்திடம் சென்று முறையிடும்போது அவை அந்த கர்மாக்களின் விளைவாக ஏற்படும் துன்பங்களை குறைக்கும், அவற்றை எளிதாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை தரும். அந்த கர்மாவின் விளைவினால் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடல் ரோகமுற்றால் அவற்றின் அவதி காலத்தை தன் சக்தியைக் கொண்டு குறைத்திடும். அதற்கான விதி முறைகள் என்னென்ன, அவை எப்படி ஏற்படுகின்றன என்பதெல்லாம் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பதினால் அதன் விளக்கத்தை   இதோடு முடித்துக் கொள்கிறேன். 
.............தொடரும்

Thursday, August 28, 2014

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 9

9
குலதெய்வங்கள் நகர மற்றும் கிராமப்புறங்களில் ஆலயங்கள் பல்வேறு பெயர்களில் அதாவது கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், சிறு ஆலயங்கள் போன்றவை மரத்தின் அடிகளில், நதி மற்றும் ஆற்றுப் பகுதி போன்ற இடங்களில் இருந்தன என்றாலும் அந்த தெய்வங்களும், தேவதைகளும் ஒரே தெய்வத்தில் இருந்து அனுப்பப்பட்டவையே. அவை சில குறிப்பிட்ட காரணங்களுக்காக சில இடங்களுக்கு அனுப்பப்பட்டவை. அவை அனைத்தும் ஒரே அளவிலான சக்திகளைக் கொண்டவை. அவை அனைத்துமே தம்மை ஆராதிக்கும் பக்தர்களின் வேண்டுகோட்களை மூல இடத்துக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து அவர்களுக்கு அருள் கிடைக்க வழி செய்பவை என்பதையெல்லாம் முன் பாகங்களில் விளக்கி உள்ளேன்.

ஒரு விதத்தில் பார்த்தால் அவை அனைத்துமே குறிப்பிட்ட தெய்வங்களின் நாடி நரம்புகள் என்று கூடக் கூறலாம். எப்படி ஒரு மனித உடம்பில் நரம்புகள் ஒன்றுடன் ஒன்று கலந்து ரத்தத்தை செலுத்தி உயிர் தருகிறதோ, எப்படி மனித உடலில் உள்ள எலும்புகள் இணைந்து செயல் திறனை தருகின்றனவோ அப்படித்தான் தெய்வங்களின் பல்வேறு அவதாரங்களும், கணங்களும் ஒன்று சேர்ந்து உள்ள அமைப்பே தெய்வ அமைப்பாகும்.


அது போலவேதான் மூலக் கடவுள் தன்னுடைய சக்தியை கோடிக்கணக்கான அணுக்களாக மாற்றி பல்வேறு காரணங்களுக்காக பல இடங்களிலும் அனுப்பி இருக்கிறார்கள். அவை அனைத்தும் கலந்ததே ஒரு தெய்வம் ஆகும். ஆகவே தெய்வங்களில்  மூல தெய்வம், அவதார தெய்வம், கிராம தெய்வம் என்ற வேறுபாட்டைக் காண்பது தவறாகும். தன்னுடைய இந்த அணுக்களைக் கொண்ட தெய்வம் இன்னின்னவற்றைக் காத்து வரவேண்டும், அதில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்பதான கட்டளையுடன் அவை அனுப்பப்படுவதினால் அவற்றை வழிபட்டு வந்திருந்த சந்ததியினர் அவற்றை விட்டு விலகினால், உதாசீனப்படுத்தினால் சொல்லொண்ணாத் துயரங்கள் ஏற்படுகிறது.  இதுவே குல தெய்வ வழிபாட்டின் தத்துவம் ஆகும்.

ஒவ்வொரு குல தெய்வமும் குடியிருக்கும் ஆலயத்தையும், வழிபாட்டுத் தலங்களையும் சுற்றி மறைந்து விட்ட பல சித்தர்களும் முனிவர்களும் தேவகணங்களாக மாறியிருந்து மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அது போல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த இடத்தில் சில ரிஷி முனிவர்கள் தவம் செய்து கொண்டு இருப்பார்கள். அவர்களது உடல் அழிந்திருந்தாலும், அவை அங்கு தவத்தில் இருக்கும். அவர்களுடன் முன்னோர்களில் தெய்வ கணங்களாகி விட்டவர்களும் அங்கிருப்பார்கள். அவர்களும் மற்றவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் அனைவரும் அங்குள்ள தெய்வத்துக்கும், தேவதைகளுக்கும் பரிவார கணங்களாக இருக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளவர்கள். இப்படியாக அந்த இடத்தை சுற்றிக் கொண்டே இருக்கும் அவர்கள் அந்த தெய்வத்தை ஏற்றுக் கொண்டு அங்கு வழிபட வந்துள்ள பக்தர்களுக்கு  ஆசிகளை அளித்தபடி இருக்க பக்தர்களின் கர்ம வினைகள் விலகத் துவங்கும்.

கர்ம வினைகள் என்பதற்கு உருவம் உண்டா? அவை எப்படி மனிதர்களைத் தொடர்கின்றன? அவற்றுக்கு அளவு கோல் உள்ளதா?

ஒவ்வொரு மனிதரும் தத்தம் வாழ்க்கையில் பல விதங்களில் பாவங்களை செய்தவாறு  இருக்கும்போது அவர்களுக்கு ஏற்ப்படும் ஒவ்வொரு பாவமும் கர்மாவும் சிறிய சிறிய அணுக்களாகி அவரவர் உடலுக்குள் அமர்ந்து கொள்வதினால் லட்ஷக்கணக்கில் அவரவர் உடலில் கர்மாக்களின் அணுக்கள் அமர்ந்துவிடும். அவை வெளியேறும்வரை வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் தடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.

மனிதர்களுக்குள்ளே  தீய மற்றும்
 நல்ல அணுக்களிடையே நிகழும் போர்

அது போலவே அவரவர் செய்யும் புண்ணிய காரியங்களும் சிறு சிறு அணுக்களாகி உடலில் அமர்ந்து விடும். புண்ணிய காரியங்களை செய்ததினால் தோன்றும் புண்ணிய அணுக்கள் பாவங்களினால் ஏற்பட்ட அணுக்களை விரட்டியடித்துக் கொண்டே இருக்கும். ஆனால் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் உடலில் இத்தனை அணுக்கள்தான் வாழ முடியும் என்பது நியதியாக உள்ளது. அது ஒவ்வொருவருக்கும் இடையே அவரவர் படைப்பைப் பொறுத்து மாறுபடும். ஆகவே மொத்தம் இருக்க முடிந்த அணுக்களில் புண்ணியத்தினால் ஏற்படும் அணுக்கள் தீய அணுக்களை விரட்டி அடித்தவாறு இருப்பதினால் வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும், தர்மமும் நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதன் காரணம் மேலே கூறப்பட்ட அணுக்களின் செயலினால்தான்.

அணுக்கள் என்பதை இறைஜீவன்கள் என்பார்கள். அந்த இரண்டு வித அணுக்களும் மனித எண்ணங்களில் கலந்து விடுவதினால் பாவ அணுக்களை சுமப்பவர்களினால் நல்ல எண்ணங்களை நினைக்க முடியாமல்  தீய அணுக்கள் தடை போடுகின்றன. அது அவர்களை மேலும் மேலும் பாபங்களை செய்யத் தூண்டும். அதனால்தான் அந்த தீய எண்ணங்கள் கொண்ட அணுக்களை அகற்றி நல்ல எண்ணங்களைக் கொண்ட அணுக்களை சுமக்க வைக்க ஒவ்வொருவருக்கும் பக்தி, தியானம், யோகா மற்றும் ஆலய வழிபாடு போன்றவற்றை நிர்ணயித்து உள்ளார்கள்.

தர்ம காரியங்களை செய்யாதவர்களின் பாபங்கள் எப்படி விலகுகின்றன? பாவ அணுக்களை சுமந்து கொண்டு செல்லும் பக்தர்கள் பொதுவாக ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை மனதார வழிபடும்போது அங்குள்ள தெய்வங்கள் தமது சக்தியினால் பக்தர்களிடம் உள்ள தீய அணுக்களில் ஓரளவு பாவ அணுக்களை வதம் செய்கின்றன. அதனால் தற்காலிகமாக சென்று வழிபடுபவர்களின் மனம் அமைதி அடைகிறது.  ஆனால் பூரண அமைதி கிட்டுவதில்லை. அதே சமயத்தில் அந்த வழிபாட்டு தலங்களில்  உள்ள தெய்வங்களினால் அவரவருக்கு  பூர்வ வினையினால் ஏற்ப்பட்டிருந்த  தீய அணுக்களை அழிக்க முடியாது. அதற்காக உள்ளவை  அவர்களின் குல தெய்வங்கள். அவற்றை குல தெய்வங்களினால் மட்டுமே செய்ய இயலும்.

மேலே கூறியுள்ளபடி அவரவர் குல தெய்வ ஆலயத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்யும்போது அங்கு கண்களுக்குத் தெரியாமல் உலவிக் கொண்டு இருக்கும் அந்த குல தெய்வத்தின் பரிவார தேவதைகள் மற்றும் சித்தர்களும், அந்தந்த பரம்பரையினரின் இறந்து போன, பாபங்கள் அகன்று தேவ கணமாகிவிட்டிருந்த முன்னோர்களும் அந்த பக்தர்களின் பாவ அணுக்களை தம்மிடம் கிரகித்துக் கொண்டு அவர்களுக்கு நிகழும் தீமைகளைக் குறைக்கும் விதத்தில் தம்மிடம் உள்ள நல்ல அணுக்களை அவர்களுக்குள் செலுத்துகின்றன. அந்த பரிவார கணங்களுக்கும் சித்தர்களுக்கும் ஒவ்வொரு நாளும் இத்தனை இத்தனை பாவ அணுக்களை தம்முள் கிரகித்துக் கொண்டு அவற்றை மீண்டும் நல்ல அணுக்களாக்க மாற்ற இயலும் என்ற சக்தி இருக்கும். அது அவர்களுக்கு தெய்வம் கொடுத்துள்ள வரம்.


ஆகவேதான் ஒருவர் எத்தனை முறை குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபடுவார்களோ அத்தனைமுறையும் அங்கு கண்களுக்குத் தெரியாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் அந்தந்த பரம்பரையின் தெய்வ ஆத்மாக்களும், சித்தர்களும் அவர்களிடம் உள்ள பாவ அணுக்களை கிரகித்துக் கொண்டு தம்மிடம் உள்ள நன்மை தரும் அணுக்களை அவர்களுக்குள் அனுப்பி வைப்பதினால், பாவ அணுக்கள் அவர்களிடம் இருந்து குறையத் துவங்கி, நன்மை தரும் அணுக்கள் அவர்கள் உடலில் புகுந்து கொள்ள அவர்களது வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வாழ்வில் வளமும் அதிகமாகும். அதனால்தான் குல தெய்வ வழிபாடு முக்கியம் என்பார்கள்.

அப்படி என்றால் மற்ற ஆலயங்களில் சென்று வழிபடும் பக்தர்களுடைய பாபங்கள் அகலுவதில்லையா என்பது அடுத்த கேள்வியாகும். ஒவ்வொருவருக்கும் இரண்டு விதங்களிலான பாபங்கள் உள்ளன. முதலாவது  சுமந்து வந்த பாபங்கள்,  இரண்டாவது உடன் வரும் பாபம் என்பது. சுமந்து வந்த பாபம் என்பது பூர்வஜென்ம வினைப்பயனால் ஏற்படும் நிலை. இரண்டாவது வாழும்போது அவரவர் செய்யும் நன்மை மற்றும் தீமையினால் ஏற்படுபவை. முதல் வகையிலான பாபங்களை அதை அகற்றும் சக்தியுடன் அனுப்பப்பட்டுள்ள குல தெய்வங்களினால்  மட்டுமே அகற்ற முடியும் என்பது தெய்வ நியதி. ஆகவே  மற்ற ஆலயங்களில் உள்ள எத்தனை சக்தி  தெய்வத்தினாலும் அவற்றை நிவர்த்தி செய்ய இயலாது.  இப்படிப்பட்ட தெய்வ நியதியினால் உடன் வரும் பாபம், அதாவது அவ்வபோது தாம் செய்யும் தீய காரியங்களினால் தம்மிடம் அமர்ந்துள்ள பாவ அணுக்களை மட்டுமே வழிபடப்படும் பிற தெய்வங்களினால் அகற்ற முடியும். அவர்களினாலும் அவற்றை முற்றிலுமாக அகற்றிக் கொள்ள முடியாது. ஓரளவு மட்டுமே தற்காலிகமாக  நிவர்த்தி செய்து  கொள்ள முடியும். அவற்றை முற்றிலுமாக விலக்க  வேண்டும் எனில்,  இன்னென்ன பாவ அணுக்களை துரத்த இத்தனைக் காலம் தேவை என்ற கணக்கு இருப்பதினால் வேண்டுதல் செய்ய ஆலயத்துக்கு செல்பவர்களை குறிப்பிட்ட கால வகையிலான விரதங்கள், பூஜைகளை செய்யுமாறு கூறுவார்கள். அதே சமயத்தில் அந்த பாபங்களின் விளைவுகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள குல தெய்வத்தையே நாட வேண்டும்.

அப்படி என்றால் பிற ஆலயங்களில் சென்று வழிபடும் பக்தர்களுடைய பாபங்கள் அகலுவதில்லையா? குல தெய்வத்திடம் சென்று பிரார்த்தனை செய்து கொண்டால் அத்தனை பாப அணுக்களும் ஒரேடியாக அழிந்து விடும் என்பது நிச்சயமானதா? அப்படி என்றால் குல தெய்வ ஆலயம் சென்று வழிபடுபவர்களுக்கும் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுகிறதே , அது ஏன்? பிறந்த அனைவருக்குமே குல தெய்வம் உண்டா?  அப்படி குல தெய்வம் இல்லாதவர்களின் கர்ம வினைகளை அகற்றுவது யார் ?  ஒரு குல தெய்வத்தை எத்தனை குலங்களோ அல்லது பரம்பரையினரோ வழிபட முடியும்? அதற்கு கட்டுப்பாடு உள்ளதா? குல தெய்வம் இல்லாதவர்கள் உண்டா? அவர்கள் யாரை வழிபடுகிறார்கள்? இதை அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.
 
ஒருமுறை கிருஷ்ண பகவான் உத்தவ முனிவருக்கு கூறினார் 'முனிவரே அவரவர் செய்த கர்ம வினையினால் ஏற்படும் பாபங்களை சுமந்து கொண்டு செல்லும் மனிதர்களுடைய கர்ம வினையை அகற்றும் பொறுப்பு அவரவர் சார்ந்த தெய்வங்களுக்கே தரப்பட்டு உள்ளது. அதில் தலையிட மற்ற தெய்வங்களுக்கு அதிகாரம் கிடையாது என்பதினால், மற்ற தெய்வங்கள் அந்த மனிதர்களுடைய வாழ்க்கையில் வெறும் சாட்சி பூதமாக மட்டுமே  நின்று கொண்டு இருக்கும்'.  அப்படி என்றால் சாட்சி பூதம் என்ற நிலை என்ன?

....தொடரும் 

Wednesday, August 27, 2014

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 8

8
குலதெய்வ வழிபாடு  என்பது இன்று நேற்றல்ல, மகாபாரத  மற்றும் இராமாயண  காலங்களில் இருந்தே நடைமுறையில்  இருந்துள்ளது என்பதும்,  தெய்வங்கள் எப்படி தம்மை தானாகவே வெளிப்படுத்திக்  கொள்ளும் என்பதற்கும் பல புராணக் கதைகள் உள்ளன.

மகாபாரத யுத்தம் முடிந்து தர்மர் ஆட்சியில் அமர்ந்தார்.  அவர் சுமார் 36 ஆண்டுகள் நாட்டை  ஆண்டு வந்தார். அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர் துவாரகைக்கு சென்று விட்டார். அப்படி இருக்கையில் ஒருநாள் தர்மர் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு தன்னை நீக்கிக் கொண்டார் என்ற செய்தியைக் கேட்டு துயர் அடைந்தார்கள். கிருஷ்ணர் இன்றி  இனி தமக்கும் இந்த உலகில் வாழ அருகதி இல்லை என துயரம் கொண்டவர்கள் அவர்களது ராஜ்யத்தை அர்ஜுனனின் பேரனான பரிஷித்திடம் ஒப்படைத்து விட்டு தாங்களும் சிவபெருமானின் பாதங்களுடன் கலந்து சிவலோகப் பிராப்தி அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு தமது வாழ்க்கையை முடித்துக் கொள்ள இமயமலையை நோக்கி பயணம் செல்லத் துவங்கினார்கள். அவர்கள் அனைவருமே  ஆராதித்து வழிபாட்டு வந்திருந்தது சிவபெருமானே என்பதினால் சிவபெருமான் அவர்களுடைய வம்சத்துக்கு குல தெய்வமாகவே   இருந்தார்.


அவர்கள் இமயமலையை அடைந்தபோது அடர்ந்த காடுகளைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது.  அவர்கள் சென்று கொண்டிருந்த பாதை  அடர்ந்த காடு என்பதினால் தடம் மாறிச் சென்று மிருகங்களிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது என்ற கவலை அடைந்த சிவபெருமான்  அவர்கள் எப்போதெல்லாம் தவறான வழியில் நுழைய இருந்தார்களோ அப்போதெல்லாம் அந்த  தவறான பாதையை அடைப்பது போல மலையில் இருந்து உருண்டு விழும் பெரிய பாறைக் கல்லைப் போல விழுந்து அந்த பாதையை அடைந்துக் கொண்டு நின்றவாறு  அவர்கள்  மாற்று வழியில் செல்ல வழி வகுத்துக் கொண்டே இருந்தார்.

நடப்பது என்னவென்பதை அறியாமல்  'இதென்னடா மலை மீது இருந்து மீண்டும் மீண்டும் பாறை உருண்டு விழுந்து கொண்டிருந்தவாறு பாதையை மறைக்கிறதே' என தவறாக எண்ணிய பாண்டவ சகோதரர்கள் அந்த கற்பாறையை  தவிர்த்து விட்டு வேறு வழியில் நுழைந்து நடந்து   கொண்டே இருந்தார்கள். அப்படியாக நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர்கள் நுழைய இருந்த தவறான பாதையை தடுக்க வேண்டும் என்ற நினைப்பில் மீண்டும்  சிவபெருமான் தன்னை மீண்டும் ஒரு பெரிய கல்லாக மாற்றிக் கொண்டு மேலிருந்து உருண்டு விழுந்து அவர்கள் சென்று கொண்டு  இருந்த பாதையை மறைந்து நின்றார்.

சிவபெருமானே உருண்டு விழுந்த 
பாறைகளாகி  பாதையை மறைத்தவாறு நின்றார் 

தனது சகோதரர்கள் மற்றும் திரௌபதியுடன் நடந்து கொண்டிருந்த பீமன் மேலிருந்து விழுந்த பாறைக் கண்டு கோபமுற்றார்.  தன்னை மறந்து கோபத்தில் அந்த பாறையை பிளக்க தனது கதையை ஓங்கியபோது அவர்கள் முன் சிவபெருமான் பிரசன்னமானார்.  தமது தவறை உணர்ந்த பீமனும் அவரது சகோதரர்களும் அப்படியே கீழே விழுந்து சிவபெருமானை நமஸ்கரித்து அவரிடம் மன்னிப்புக்  கேட்டார்கள். தமக்கு முக்தி தருமாறு அவரிடம் வேண்டினார்கள். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான் அவர்களுக்கு முக்தி தந்தப் பின் அங்கேயே சிவலிங்க உருவமாக மாறினார். அப்போது  பூர்வ ஜென்மத்தில் சாபம் பெற்று பூமியில் பிறந்து இருந்த திரௌபதி  சிவபெருமானைக் தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று அப்படியே மறைந்து போக பாண்டவ சகோதரர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். அவர்களை தேற்றிய சிவபெருமானும் அவர்களுக்கும்  சிவலோக பிராப்தி தந்தார். அடைந்து அது மட்டும் அல்ல இனி பாண்டவர்கள் வம்சத்தை சேர்ந்த பின் வழி வம்சத்தினர் திரௌபதியை அவர்களது  குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வாழ்வார்கள் என்ற அருளும் புரிந்தார்.  இப்படியாக அவர் அவர்களுக்கு காட்சி தந்த இடமே கேதார்நாத் ஆலயமாகும்.  அது மட்டும் அல்லாமல் அவர்களை சென்ற வழியை  மறைத்துத் கொண்டு தடுக்க அவர் எடுத்த உருவமான கற்கள் எல்லாம் அங்காங்கே சிவலிங்கம் ஆயின. அங்கெல்லாம் சிறிய ஆலயங்களும்  எழுந்தன.  இன்னும் சில கதையின்படி சிவபெருமானை தேடி அலைந்த பாண்டவர்களுக்கு சிவபெருமான் மாடாக காட்சி தர அவரை அடையாளம் கண்டு கொண்ட பீமன் அந்த மாட்டைப் பிடித்து அப்படியே பூமியில் அழுத்த அவனிடம் இருந்து தப்பிய மாட்டு உருவில் இருந்த சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமானார். அதுவே கேதார்நாத் சிவலிங்கம் என்றும் கூறுகிறார்கள்.

இப்படியாகவே தெய்வங்கள் தாம் எங்கெங்கு  தெய்வமாக அமர்ந்திருக்க வேண்டும் என நினைத்தனவோ அங்கெல்லாம்  தமக்கு  ஒரு ரூபத்தை எடுத்தன. அந்தந்த இடங்களில் அவர்களை ஆராதித்த வம்சங்களின் குல தெய்வம் ஆயின.

நிற்க பாண்டவர்கள் மறைந்தப் பின் அவர்களுக்கு இலங்கையில் மட்டக்கிளப்பு அருகில் உள்ள பாண்டி இருப்பு எனும் கிராமத்தில் ஒரு வழிபாட்டுத் தலமும்  அமைந்தது. அதை தாதன் கோவில் என்கிறார்கள்.  அந்த ஆலயம் எழும்பும் முன்னர் ஒரு காலத்தில் ஐந்து  சன்யாசிகள் ஒன்று சேர்ந்து கதிர்காமன் ஆலய தரிசனத்துக்காக இலங்கைக்கு சென்று கதிர்காமனில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது ஒவ்வொருவரும் வழியில் இருந்த ஒவ்வொரு கிராமத்தில் தங்கி விட்டார்கள். அப்படி தங்கிய ஐந்து கிராமங்களில் அவர்கள் தமது குல தெய்வ வழிபாட்டிற்காக  சிறு கோவிலைப் போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அந்த கிராமத்தில் இருந்தவர்களுக்கு குல தெய்வ வழிபாட்டின் மேன்மையை விளக்கிக் கூறி குல தெய்வ வழிபாட்டை ஏற்க வைத்தார்கள்.  இப்படியாக ஒவ்வொரு இடத்திலும் ஐந்து ஆலயங்களை நிறுவிய ஐவரில் ஒரு சன்யாசி பாண்டி இருப்பிலும் திரௌபதியின் ஆலயத்தை நிறுவ அங்கிருந்த கிராம மக்களினால் திரௌபதியே குல தெய்வமாக ஏற்கப்பட்டாள். அவர் பாண்டவ வம்சத்தை சேர்ந்தவராம். இப்படியாக திரௌபதியை தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் எழுப்பிய ஆலயங்கள் பிற இடங்களிலும் தொடர்ந்தது. பின் வழி பாண்டவர்களின் பரம்பரையினர் தமிழ்நாடு, பெங்களுர் போன்ற பல இடங்களிலும் திரௌபதியின் ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள். அவளை குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

இதை கூறியதின் காரணம் பண்டைக் காலம் முதலேயே குல தெய்வங்கள் எப்படி ஏற்பட்டன மற்றும் தெய்வ உருவங்கள் எப்படி ஸ்வயமாக எழுந்துள்ளன என்பதை எடுத்துக் காட்டவே.

 திரௌபதி அம்மன் ஆலயம் 

திரௌபதி அம்மன்

குல தெய்வ வழிபாட்டை மனித உருவில் இருந்த தெய்வங்கள் கூட கடை பிடித்து வந்துள்ளன என்பதை வால்மீகி ராமாயணத்தில் காணலாம். ராவணனைக் கொன்ற பின் அயோத்தியாவுக்கு திரும்பிய ராமபிரான் விபீஷணனை இலங்கையின் அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டளை இட்ட பின்னர் இப்படியாகக் கூறினாராம் "விபீஷணா, ராவணனது ராஜ்யத்தில் கடைசி பிரஜைகள் உள்ள வரை நீயும் அதே இலங்கையில் இருப்பாய். இந்த பிரபஞ்சத்தில் சந்திர, சூரியன் உள்ளவரை, என் புராணம் உலகில் நிலவும் வரை, நீயும் உன்னுடைய ராஜ்யத்தில் ஸ்திரமாக இருந்தவாறு கடைசிவரை ராஜ்ஜியத்தையும் நல்லமுறையில் ஆண்டு கொண்டு இருப்பாய். இந்த கட்டளையை தட்டாமல் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரஜைகளை நெறி தவறாது நீதி பாலனம் செய். ராக்ஷஸ ராஜனே, நீ இக்ஷ்வாகு குல தெய்வமான ஜகந்நாதனை மறந்திடாமல் எப்பொழுதும் ஆராதனை செய்து வர வேண்டும். அவரே எங்கள் குல தெய்வமும் ஆகும்.''
.........தொடரும்

Monday, August 25, 2014

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 7

7
குலதெய்வ வழிபாட்டில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன. அவற்றில் ஆண்  மற்றும் பெண் தெய்வங்கள் என்று பார்த்தால் ஆண்களை விட பெண் தெய்வங்களே  அதிகம் உண்டு.  ஆண்களை விட பெண் தெய்வங்களில் அதிக அவதார தெய்வங்கள்  உண்டு. அதன் காரணமும் புராணங்களில் இருந்து அறிந்திடலாம். எந்த ஒரு யுத்தத்திலும் ஆண் தெய்வத்தை விட அதிகமாக யுத்தங்களில் பங்கேற்றவை பெண் தெய்வங்கள் ஆகும். தேவலோகத்தை துன்புறுத்தி வந்த, ரிஷி முனிவர்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்திருந்த பல அரக்கர்களையும் அசுரர்களையும் அழித்தது பெண் தெய்வங்களே. அவை பல ரூபங்களை எடுத்து யுத்தம் செய்துள்ளன. அதன் காரணம் ஆண்  தெய்வங்களை விட பெண் தெய்வங்கள் அதிக சக்தி வாய்ந்தவை என்பதாகும். யோக சக்தி நிறைந்தவை. மாந்த்ரீக சக்தி கொண்டவை. இதன் காரணம் பரப்பிரும்மனின் மூல சக்தியே பெண் சக்தியாகும். அதுவே ஒரு தாயாரைப் போல படைப்பைக் கொடுக்க வல்லது என்பது பரப்பிரும்ம  தத்துவம்.

இதற்கான உதாரணங்கள் காளி தேவி, மஹிஷாசுர மர்தினி,  தசவித்தியாவின் பத்து தேவிகள், சப்த கன்னிகைகள்,  அஸ்வாரூடா தேவி,  துர்க்கை, ஜ்வாலமுகி, சின்னமஸ்தா, சாமுண்டா, வைஷ்ணவி போன்றவை. அறுபத்தி நான்கு யோகினிகள் என்ற தந்திர மந்திர சக்தி படைத்த தெய்வங்களும் யுத்தங்களில் பங்கேற்றுள்ளர்கள். அவர்கள் ஆலயம் ஒரிஸ்ஸா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ளது. அதனால்தான் குல தெய்வங்களிலும், கிராம தெய்வங்களிலும் அதிக பெண் தெய்வங்கள் உள்ளதைப் பார்க்கலாம்.
 

சிவன் என்று பார்த்தால், அவருக்கு நூற்றுக்கணக்கான பெயர்கள் மற்றும் அவதாரங்கள் இருந்தாலும் கூட உருவம் எனும்போது சிவலிங்கம், தத்தாத்திரேயர், ருத்திரன், பைரவர், தக்ஷிணாமூர்த்தி  போன்ற மிகக் குறைந்த அளவிலான உருவங்கள் மட்டுமே உண்டு. ஸ்வேடஸ்வதார உபநிஷத் என்பதில் சிவபெருமானுக்கு நான்கு அவதாரங்கள் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டு உள்ளது  என்றாலும் அவருக்கு பத்தன்பொது (19)  அவதாரங்கள் உள்ளன என்று பிற நூல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவருக்கு உருவம் எனும்போது மேல் கூறப்பட்ட ஐந்து ரூபங்களே பூஜிக்கப்படும் உருவில் உள்ளன.   அது போல விஷ்ணுவின் ரூபமும் தசாவதார  உருவங்களைத்  தவிர  ராமர், கிருஷ்ணர், வெங்கடசலபதி, நரசிம்மர் போன்றவர்களே மனதில் வருவார்கள்.

 ஆனால்  பெண் தெய்வங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பார்வதியின் அவதாரமே லஷ்மி மற்றும் சரஸ்வதி என்று கூறப்பட்டாலும் பார்வதியின் பல உருவங்களும், ரூபங்களும், அவர் உடலில் இருந்து வெளிவந்த சக்தி தேவிகளும்   அங்காள  பரமேஸ்வரி, மாரியம்மன்கள், தச வித்யாவில் காணப்படும் பல ரூபங்களைக் கொண்ட தேவிகள், காளி  தேவி, துர்க்கை, மஹிசாசுரமர்தினி, சாமுண்டா, கோலவிழி அம்மன், முண்டைகண்ணி அம்மன், சயயபுரம் அம்மன், அகிலாண்டேஸ்வரி, பச்சையம்மன், பச்சைவாழியம்மன், லலிதாம்பிகை என நூற்றுக்கணக்கான உருவங்களைக் கூறலாம்.  எந்த ஒரு பெண் தெய்வத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் பெரும்பாலும் பார்வதியின் அவதாரங்களாகவே இருக்கிறார்கள். 

பார்வதி தேவியின் பல்வேறு அவதாரங்கள் , கணங்கள்

விஷ்ணு  புராணம் மற்றும் தேவி பாகவதம் போன்றவை மனுவின் வாழ்வும் அவருடன் படைப்பெடுத்த அனைத்து தேவ கணங்களும் மடிந்து புதிய பிறப்பு எடுப்பார்கள் என்பதாகக் கூறுகின்றன. அதன்படி பிரும்மாவே பிறந்து, அழிந்து, மீண்டும் பிறப்பு எடுப்பவராம். நான்கு யுகங்களே ஒரு சதுர யுகம் என்பதாகும். அப்படியாக 71 சதுர்யுகம் முடிந்ததும் ஏற்படும் பிரளய காலத்தில் பிரும்மாவும், அவருடன் படைப்பு பெற்ற அனைத்து தேவ கணங்களும், அதில் உள்ள தேவலோக அதிபதியான பன்னிரண்டு பிறவிகள் எடுத்திருந்த இந்திரன்  உட்பட அனைவரும் அழிவார்கள், மறு பிறப்பு எடுப்பார்கள் என்கிறது. இது எடுத்துக் காட்டுவது என்ன புரிகிறதா?


மீண்டும் மீண்டும் பரப்பிரும்மம் படைப்பை எடுப்பதில்லை, அவரால் பிறப்பிக்கப்பட்ட பிரும்மா மட்டுமே மரணத்தை அடைகிறார்.  பிரும்மாவினால் படைக்கப்பட்ட கடல்  பிரளயத்தை ஏற்படுத்தும். அந்தப் பிரளயம்தான் அவருக்கு மரணத்தை சம்பவிக்கின்றது என்பதினால் பிரளயத்தைத் தரும் கடலும் அழியவில்லை, பூமியும் அழியவில்லை.  அனைத்து தேவலோகப் படைப்புக்கள்  மட்டுமே அழியும் என்பதில் இருந்து அந்த பிறப்புக்கள் எதோ ஒரு உருவில் இருந்து அழிந்துள்ளன என்பது புரியும்.  அவை யுக யுகமாக கல்லாகிப் போய் புதைந்து கிடக்க,  பின்னர் வந்த யுகத்தில் அவை கண்டெடுக்கப்படுகின்றன, வழிபடப்படுகின்றன. அவையே தெய்வங்களுக்கு பல்வேறு யுகங்களில் இருந்த உருவங்களைக் காட்டின. மீண்டும் யுக முடிவில் மறைகின்றன.  இது வண்டிச் சக்கரம் போலத் தொடர்கின்றன.

அவை எப்படி வெளித் தெரியலாயின? ஒன்று தாமாகவே பூமியில் இருந்து வெளி வந்து அமர்ந்தன. இல்லை யாராவது ஒருவர் கனவில் வந்தோ, நேரில் தோன்றியோ தான் இன்னென்ன இடத்தில் உள்ளதாக தெரிவித்து அவர்கள் மூலம் கண்டெடுக்கப்பட்டன? இல்லை ரிஷி முனிவர்கள் மூலம் தெரிய வந்தன.   இதைக் குறித்து  ரஹஸ்யஸ்துதி என்ற நூலில்  பிரும்ம ரிஷி நாரதருக்கு  ஸ்ரீமான் நாராயணன் கூறியதான கதை உள்ளது என்று சில பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

பல செய்திகளும் பரம்பரை பரம்பரையாக கூறப்பட்டு வந்துள்ள வாய்வழி செய்திகளாகவே கதைகள் மூலம் கூறப்பட்டு வருகின்றன. அதன் காரணம் அந்த காலத்தில் எழுதுகோல் மற்றும் சாதனங்கள் இருந்திடவில்லை. சில வாய் மொழி செய்திகள் மன்னர்கள் ஆண்ட காலத்தில் கல்வெட்டில் செதுக்கப்பட்டு உள்ளன. அவற்றைத் தவிர ஓலைகளில் எழுதப்பட்டிருந்த பல செய்திகளும் பல நூல்களும் அழிந்து விட்டதும் அவற்றின் இன்னொரு காரணமாக இருக்கலாம். இப்படியாக புராணக் கதைகளைக் கொண்ட பல அற்புதமான படைப்புக்கள் மற்றும் செய்திகள் அதிசயமாக இலங்கையில் இருந்துள்ளன. அதன் காரணம் தெரியவில்லை.  முக்கியமாக சிவன் மற்றும் முருகனைக் குறித்த புராணங்கள் அதிகமாக இலங்கையில் காணப்படுகின்றன.  ஆனால் அவற்றில் பல நூல்கள் நூலகங்களில் கூட கிடைப்பது  இல்லை.
 
நாரத முனிவருக்கு விஷ்ணு 
பகவான் அருளுரை

அந்த காலத்தில் எல்லாம் ஆலயம் என்பது தற்கால ஆலயங்களைப் போல பெரிய கோபுர மற்றும் கட்டிட அமைப்பில் அமைந்திருக்கவில்லை. தெய்வங்கள் மரங்களின் அடியில் திறந்த வெளியில் சிலை வடிவிலோ அல்லது ஏதாவது உருவ அமைப்பிலோ இருந்துள்ளது. அவற்றை இன்ன தெய்வம் என கற்பனை செய்து கொண்டு (சிலருக்கு சாமி ஆடுவதில் இப்படியான எண்ணம் வந்துள்ளது) வழிபட்டு வந்துள்ளார்கள். இல்லை என்றால் யார் மூலமாவது இன்ன, இன்ன தெய்வம் இங்கு குடி உள்ளது என்ற செய்தி பரவி அந்த சிலை வடிவே அந்த தெய்வத்தின் வடிவு என்றும் நம்பப்பட்டு அதுவே குல தெய்வத்தின் வழிபாட்டுக்குரிய இடம் எனவும் ஆயிற்று. அப்படி அவர்கள் வழிபட்ட இடங்கள் பின்னர் சிறு வழிபாட்டுத் தலங்களாக உருவெடுத்தன.

உதாரணத்துக்காக  கூற வேண்டும் என்றால் இதே பின்னணியில்தான் எங்கள் குல தெய்வமான சித்தாடி காத்தாயி அம்மனின் கதையும் உள்ளது.   நன்னிலம் எனும் கிராமத்தின் அருகில் உள்ள சித்தாடி எனும் கிராமத்தில் ஓடிய முடிகொண்டான் எனும் நதியில் மிதந்து வந்த வள்ளி தேவியான காத்தாயியின் சிலை ஒரு முனிவருக்குக் கிடைக்க அவர் எழுப்பிய மரத்தடியில் இருந்த வழிபாட்டு இடம் இன்று பெரிய ஆலயமாகிவிட அந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கிறாள் வள்ளி தேவி. அவளே சித்தாடி கிராம மக்களுக்கு குல தெய்வமானாள். ஒரு காலத்தில் அந்த கிராமத்தில் மற்றும் அதை சுற்றி இருந்த இடங்களில் குடியிருந்தவர்கள் அந்த காத்தாயி அம்மனை குல தெய்வமாக வைத்துக் கொண்டு வழிபாட்டு வந்துள்ளார்கள். அது பரம்பரைப் பரம்பரையாக தொடர்கிறது.

சித்தாடி கிராமத்திலும்  மற்றும் அதன் அக்கம்பக்கத்திலும்  பண்டைய காலத்தை சேர்ந்த சில  காத்தாயி அம்மன் ஆலயங்கள் உள்ளன. இது  எடுத்துக் காட்டுவது என்ன என்றால் விஷ்ணு பகவானின் புதல்வியான  சுந்தரவல்லி எனும் வள்ளி தேவியானவள் முருகனை மணக்க வேண்டும் என்பதற்காக அந்த இடத்து பூமியில் வந்து தவமிருந்து  சாப விமோசனம் பெற்று இருக்கிறாள்.  அதனால்தான் அவள் கல்லாகிக் கிடந்த சிலை, நதியில் மூழ்கிக் கிடந்துள்ள சிலை பின்னர் அங்கேயே கிடைத்து, எங்கே அவள் தவம்  இருந்திருந்தாளோ  அதே இடத்தில்  அமைந்த ஆலயத்தில் சிலையாகி நிற்கிறாள்.
 
வள்ளி தேவி மற்றும் 
காத்தாயி அம்மன்

இதில் ஒரு வேதனை என்ன என்றால் அந்த காலத்தில் வள்ளி தேவி மற்றும் அவளை மணந்து கொண்ட முருகப் பெருமான் குறவர்கள் இனத்துடன் தொடர்ப்பு கொண்டு இருந்ததினால் அந்தப் பழக்குடி மக்களில் வாழ்ந்திருந்த முருகனையோ அல்லது வள்ளியையோ மனதார குல தெய்வமாக ஏற்க  சிலருக்கு தயக்கம் இருந்தது. அவர்களை ஆகம வழியில் பூஜிக்கப்படாத தெய்வங்கள் என நினைத்தார்கள். ஆனால் அதே முருகனை சமிஸ்கிருத மொழியில் ஸ்கந்தன் என்றால் அதை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டார்கள்.  இந்த நிலை அந்தணர் மற்றும் அந்தணர் அல்லாதவர்கள் இடையே நிலவிய பேதத்தினால்  இன்னும் அதிகமாகியது.

கார்த்திகேயர்

வடநாட்டு ஸ்கந்த முருகன்   
  
Valli Teyvanai Samedha Sri Murugan

தமிழ் முருகன்   வள்ளி-தெய்வானையுடன்
                                                                                                                       
இந்த பூமியிலே நடைபெறும் தெய்வ சம்மந்தப்பட்ட அனைத்து  நிகழ்வுகளுமே  குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டவை.  மனிதர்களைப் படைத்ததும், அதே தெய்வங்களைப் படைத்ததும்  ஒரே பரப்பிரும்மனே என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே  எடுத்துக் காட்டி உள்ளதைப் போல ஒவ்வொரு வம்சத்துக்கும் பிரும்மனால் ஒவ்வொரு தெய்வ வழிபாடு தரப்பட்டு உள்ளது. அதை மனதார ஏற்றுக் கொள்வதே அவசியம். அவர்கள் வழி மூலமே வாழ்வுக்கு தேவையான அருள் கிடைக்கும் என்பது விதியாக இருக்கும்போது அலை பாயும் மனதுடன் இருப்பது ஏன்? இதை புரிந்து கொண்டால் மனம் தெளிவடைந்து விடும். 

 அந்த காலங்களில் வழிபடப்பட்ட தெய்வத்தின் சிலைகள் சில ஸ்வயம்புவாக தோன்றியவை, யாராவது ஒருவரால் எங்காவது கண்டு பிடிக்கப்பட்டு எடுத்து வந்தவை. இன்னும் சில மரங்களில் அடியில் வெறும் கற்களாக இருந்தவை. அதன் மீது ஒரு உருவம் வரையப்பட்டு இன்ன இன்ன தெய்வம் என்று கூறப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தவை என்பதெல்லாம் பிரும்ம நியதியினால் நிகழ்ந்தவையே ஆகும் .வெகு காலத்துக்குப் பிறகு தெய்வத்தின் வடிவமைப்பு தோன்றத் துவங்க, அந்த உருவங்கள் ஆராதிக்கப்பட்டு, அதே உருவிலான தெய்வ சிலைகள் பல ஆலயங்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணம் தெய்வங்களின் உருவ அமைப்பு ரிஷிகள் மூலம் மற்றும் முனிவர்கள் மூலமே வாய் மொழியாக கூறப்பட்டு அவர்கள் கூறிய வடிவமைப்பில் வெகு காலத்துக்குப் பிறகே சிற்ப சாஸ்திர முறையில் அமைக்கப்பட்டு இருந்ததுதான்.

ஸ்வயம்புவாக தோன்றிய தெய்வங்களின் சிலைகள் சிலவற்றில் உருவங்கள் இருந்தன. ஆனால் பலவற்றிலும் அவை யாரால் சிலை வடிவாக்கப்பட்டது என்ற விவரமே தெரியவில்லை. உதாரணமாக அங்கொன்றும், இங்கொன்றுமாக பூமிக்கு அடியில் புதைந்து கிடந்தவை கண்டு பிடிக்கப்பட்டபோது அவை எந்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை கூறினார்களே தவிர யாரால் வடிவமைக்கப்பட்டது என்பது விளக்கப்படாமல் உள்ளது. இதை எந்த ஆராய்ச்சியாளரும் விளக்க முடியவில்லை. வேத காலத்தில் கூட அதாவது கி.மு 1500 ஆண்டுகளில் சிலை அமைப்பு வடிவங்களில் தெய்வச் சிலைகள் இருந்ததாக தெரியவில்லை. யாகங்கள் மற்றும் பூஜைகள் மட்டுமே செய்யப்பட்டு வந்துள்ளன. உருவ அமைப்புக்கள் வெகு காலம் பொறுத்தே வந்துள்ளன.
........தொடரும்